படிப்பு 14
இயல்பு
நீங்கள் இயல்பாக பேசுவது மற்றவர்களுடைய நம்பிக்கையை சம்பாதிக்க உதவும். ஒருவர் முகமூடி அணிந்துகொண்டு பேசுகையில் அவர் சொல்லும் வார்த்தையில் நீங்கள் நம்பிக்கை வைப்பீர்களா? பேசுபவருடைய முகத்தைவிட முகமூடி மிக அழகாக இருந்தால் அது உங்களுக்கு அதிக நம்பிக்கையைக் கொடுக்குமா? இல்லை. ஆகவே, பொய்த் தோற்றமளிப்பதற்குப் பதிலாக நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
இயல்பாக பேசுவது என்றால் அலட்சியமாக பேசுவது என நினைத்துக்கொள்ளக் கூடாது. இலக்கண பிழை, தவறான உச்சரிப்பு, வாய்க்குள்ளாகவே முனகுதல் ஆகியவை பொருத்தமற்றவை. கொச்சை வார்த்தைகளையும் தவிர்க்க வேண்டும். நம்முடைய பேச்சிலும் தோரணையிலும் எப்பொழுதும் தகுந்த கண்ணியத்தை காண்பிக்க விரும்புகிறோம். இவ்விதத்தில் இயல்பான தன்மையை காட்டுகிறவர் மிதமீறிய வகையில் முறைப்படி பேசுகிறவராக (overly formal) இருக்க மாட்டார், மற்றவர்களுடைய மனதைக் கவருவதிலேயே குறியாக இருக்கவும் மாட்டார்.
வெளி ஊழியத்தில். சாட்சி கொடுப்பதற்காக ஒரு வீட்டில் அடியெடுத்து வைக்கும்போது அல்லது பொது இடங்களில் ஒருவரை அணுகும்போது நீங்கள் பயப்படுகிறீர்களா? நம்மில் பெரும்பாலோர் பயப்படுகிறோம், ஆனால் சிலரை இந்தப் பயவுணர்ச்சி சதா பீடித்துக் கொண்டிருக்கிறது. டென்ஷனால் குரல் தடுமாறலாம் அல்லது செயற்கையாக தொனிக்கலாம்; பயத்தில் கைகளையோ தலையையோ அசைப்பதுகூட அலங்கோலமாக ஆகிவிடலாம்.
ஒரு பிரஸ்தாபிக்கு இந்தப் பிரச்சினை பல காரணங்களால் வரலாம். கேட்போருக்கு தன்மீது எப்படிப்பட்ட அபிப்பிராயம் ஏற்படுமோ என நினைத்து அவர் கவலைப்படலாம் அல்லது தன் பேச்சு வெற்றிகரமாக அமையுமோ என நினைத்து கலங்கலாம். இதெல்லாம் சகஜம்தான், ஆனால் இப்படிப்பட்ட விஷயங்களுக்கு மிதமீறிய கவனம் செலுத்துவதாலேயே பிரச்சினை உருவாகிறது. ஊழியத்திற்குச் செல்ல உங்களுக்கு பயமாக இருந்தால் என்ன செய்யலாம்? கவனமாக தயாரிப்பதும் யெகோவாவிடம் ஊக்கமாக ஜெபிப்பதும் உதவும். (அப். 4:29, 30) பரதீஸில் மக்கள் பூரண சுகத்தோடு என்றும் வாழ்வதற்கு யெகோவா மிகுந்த இரக்கத்தோடு அழைப்பதைப் பற்றி சற்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் யாருக்கு உதவ கடினமாக முயற்சி செய்கிறீர்களோ அவர்களைப் பற்றியும் அவர்கள் நற்செய்தியை கேட்பதன் அவசியத்தைப் பற்றியும் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
மக்களுக்கு சுயாதீனம் இருக்கிறது, ஆகவே அந்தச் செய்தியை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது புறக்கணிக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். பூர்வ இஸ்ரவேலில் இயேசு சாட்சி கொடுத்த சமயத்திலும் இதுவே உண்மையாக இருந்தது. உங்களுடைய வேலை பிரசங்கிப்பது மட்டுமே. (மத். 24:14) பேசுவதற்கு மக்கள் உங்களை அனுமதிக்காவிட்டாலும், நீங்கள் அங்கு சென்றிருப்பதே சாட்சியாக அமையும். யெகோவா தமது சித்தத்தை நிறைவேற்றுவதற்கு உங்களைப் பயன்படுத்த நீங்கள் அனுமதிப்பதால் வெற்றி பெற்றிருப்பீர்கள். ஆனால் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பங்களில், எது உங்களுடைய பேச்சை சிறப்பானதாக்கும்? பிறருடைய தேவைகள் மீது உங்களுடைய எண்ணங்களை ஒருமுகப்படுத்த கற்றுக்கொண்டால், உங்களுடைய பேச்சு இனிமையாகவும் இயல்பாகவும் இருக்கும்.
நீங்கள் சாட்சி கொடுக்கும்போது எப்போதும்போல் சாதாரணமாக பேசினால், கேட்போருக்கு எந்தவித கலக்கமும் ஏற்படாது. நீங்கள் பகிர்ந்துகொள்ளும் வேதப்பூர்வமான கருத்துக்களை ஏற்பதற்கும் அதிக மனமுள்ளவர்களாக இருப்பார்கள். ஏதோ சம்பிரதாயமாக உரையாற்றுவதற்குப் பதிலாக, அவர்களிடம் கலந்துரையாடுங்கள். சிநேகப்பான்மையோடு இருங்கள். அவர்கள் மீது அக்கறை காட்டுங்கள், அவர்களுடைய குறிப்புகளையும் கேளுங்கள். மொழியின்படி அல்லது கலாச்சாரத்தின்படி, அந்நியர்களுக்கு மரியாதை காண்பிக்க குறிப்பிட்ட விதத்தில் பேச வேண்டியதாக இருந்தால் அவ்வாறே பேசுங்கள். ஆனால் எப்பொழுதும் புன்னகைக்க தயாராக இருங்கள்.
மேடையில். நீங்கள் சிறு தொகுதியினரிடம் பேசும்போது பொதுவாக உரையாடல் பாணியில் இயல்பாக பேசுவதே சிறந்தது. ஆனால் பெரும் கூட்டமாக இருக்கும்போது எல்லாரும் நன்கு கேட்பதற்கு வசதியாக நீங்கள் அதிக சத்தமாக பேச வேண்டும். உங்களுடைய பேச்சை மனப்பாடம் செய்ய முயன்றால் அல்லது பேசப்போகும் குறிப்புகளை வார்த்தைக்கு வார்த்தை நுணுக்கமாக எழுதி வைத்திருந்தால், நீங்கள் ஒருவேளை விஷயங்களை துல்லியமாக அழகிய வார்த்தைகளில் சொல்வதற்கே மிதமீறிய கவனம் செலுத்துவீர்கள். பொருத்தமான வார்த்தைகள் முக்கியம்தான், ஆனால் அதற்கு அதிக கவனம் செலுத்தும்போது பேச்சு விறைப்பாகவும் சம்பிரதாயமாகவும் இருக்கும். இயல்பான தன்மை இருக்காது. உங்களுடைய கருத்துக்களை முன்னதாகவே கவனமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும், ஆனால் பெரும்பாலும் கருத்துக்களுக்கே கவனம் செலுத்துங்கள், ஒவ்வொரு வார்த்தைக்கும் அல்ல.
ஒரு கூட்டத்தில் நீங்கள் பேட்டி அளிக்கும் சமயத்திலும் இதுவே உண்மை. நன்கு தயாரியுங்கள், ஆனால் உங்களுடைய பதில்களை எழுதி வைத்து வாசிக்கவோ மனப்பாடம் செய்யவோ முயலாதீர்கள். ஏற்ற இறக்கங்களோடு இயல்பாக பேசுங்கள், அப்பொழுதுதான் உங்களுடைய பதில்கள் இருதயத்திலிருந்து வந்ததைப் போல கவர்ந்திழுக்கும்.
சிறந்த பேச்சு பண்புகளையும் மிகைப்படுத்தி காட்டும்போது சபையாருக்கு செயற்கையாக தோன்றலாம். உதாரணமாக, நீங்கள் தெளிவாக பேச வேண்டும், சரியாக உச்சரிக்க வேண்டும், ஆனால் உங்களுடைய பேச்சு டாம்பீகமாகவோ செயற்கையாகவோ தொனிக்கக் கூடாது. வலியுறுத்தும் அல்லது விவரிக்கும் சைகைகளை நன்றாக செய்யும்போது, அவை உங்களுடைய பேச்சிற்கு உயிரூட்டும், ஆனால் அவை விறைப்பாகவோ பகட்டாகவோ இருந்தால் கேட்போரின் கவனம் திசை திரும்பிவிடும். போதிய சத்தத்துடன் பேசுங்கள், ஆனால் கத்தி பேசாதீர்கள். அவ்வப்பொழுது விறுவிறுப்புடன் பேசுவது நல்லது, ஆனால் பகட்டாக பேசுவதை தவிருங்கள். சபையாரின் கவனம் உங்கள் பக்கமாக திசை திரும்பாதவாறு அல்லது அவர்கள் அசெளகரியமாக உணராதவாறு குரலை மாற்றியமைத்தும், உற்சாகத்துடனும், உணர்ச்சியுடனும் பேச வேண்டும்.
பேச்சு கொடுக்காத சமயத்திலும்கூட, மனதிலுள்ளதை துல்லியமாக வெளிப்படுத்தும் திறமை சிலருக்கு இயல்பாகவே இருக்கிறது. மற்றவர்களோ பேச்சு வழக்கை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அன்றாட வாழ்க்கையில் நன்றாக பேசுவதும் கிறிஸ்தவ கண்ணியத்தோடு நடந்துகொள்வதும் முக்கியம். அப்பொழுது, மேடையில் பேசும்போதும் மனங்கவரும் விதமாக இயல்பான தோரணையில் பேசவரும்.
மற்றவர்கள் முன் வாசிக்கையில். மற்றவர்கள் முன் இயல்பாக வாசிப்பதற்கு முயற்சி தேவை. அதை சிறப்பாக செய்வதற்கு, நீங்கள் வாசிக்கப்போகும் தகவலில் அடங்கியுள்ள முக்கிய கருத்துக்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள், பின்பு அவை எப்படி படிப்படியாக விரிவாக்கப்படுகின்றன என்பதை கவனியுங்கள். இவற்றை மனதில் தெளிவாக வைத்திருங்கள்; இல்லையேல் நீங்கள் வெறுமனே வார்த்தைகளையே வாசித்துக் கொண்டிருப்பீர்கள். பழக்கப்படாத வார்த்தைகளின் உச்சரிப்பை எடுத்துப்பாருங்கள். குரலில் ஏற்றத்தாழ்வை உண்டாக்குவதற்கும் கருத்துக்களை தெளிவாக தெரியப்படுத்தும் வார்த்தைகளை சரியாக ஒன்றுசேர்த்து வாசிப்பதற்கும் சத்தமாக வாசித்துப் பழகுங்கள். உங்களுடைய வாசிப்பு சரளமாக வரும்வரை மீண்டும் மீண்டும் வாசித்துப் பாருங்கள். தகவலை நன்கு அறிந்திருங்கள்; அப்போதுதான் நீங்கள் சத்தமாக வாசிக்கையில் அது உயிர்த்துடிப்புமிக்க உரையாடலைப் போல தொனிக்கும். இதுவே இயல்பு.
சொல்லப்போனால், நாம் பெரும்பாலும் பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களிலிருந்தே வாசித்துக் காட்டுகிறோம். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாசிப்பு நியமிப்புகளை கையாளும்போது மட்டுமல்ல, வெளி ஊழியத்திலும் மேடைப் பேச்சு கொடுக்கையிலும்கூட வேதவசனங்களை வாசிக்கிறோம். காவற்கோபுர படிப்பிலும் சபை புத்தகப் படிப்பிலும் கலந்தாலோசிக்கப்படும் பகுதியை வாசிப்பதற்கு சகோதரர்கள் நியமிக்கப்படுகின்றனர். மாநாட்டில் மான்யுஸ்க்ரிப்டிலிருந்து வாசிப்பதற்கு தகுதிவாய்ந்த சகோதரர்கள் சிலருக்கு நியமிப்பு கொடுக்கப்படுகிறது. நீங்கள் பைபிளை வாசித்தாலும் வேறுசில தகவல்களை வாசித்தாலும், நேர்க்கூற்று வரும் பகுதிகளை உயிரூட்டத்துடன் வாசியுங்கள். அநேக கதாபாத்திரங்கள் இருந்தால், ஒவ்வொன்றிற்கும் உங்களுடைய குரலை சற்று மாற்றிக்கொள்ளுங்கள். ஓர் எச்சரிக்கை: அளவுக்குமீறி நாடகபாணியில் வாசிக்காதீர்கள், ஆனால் இயல்பான முறையில் அதற்கு உயிரூட்டுங்கள்.
இயல்பாக வாசிப்பது உரையாடல் போல் ஒலிக்கும். அது செயற்கையாக தொனிக்காமல் உறுதியான நம்பிக்கையை தெரிவிக்கும்.