படிப்பு 28
உரையாடல் முறையில் பேசுதல்
பொதுவாக நண்பர்களோடு உரையாடுகையில் அனைவரும் பதற்றமே இல்லாமல் இயல்பாக பேசுகிறோம். வார்த்தைகள் எவ்வித தங்குதடையுமின்றி தெள்ளிய நீரோடை போல ஓடிவருகின்றன. சிலர் உயிர்த்துடிப்புடன் பேசுகிறார்கள்; வேறு சிலரோ அதிக கூச்ச சுபாவத்துடன் இருக்கிறார்கள். என்றபோதிலும், அவர்களது இயல்பான பேச்சு மனதை கவருகிறது.
ஆனால் அந்நியரை சந்திக்கும்போது அளவுக்கு மீறி அன்னியோன்யமாகவோ இயல்பாகவோ பேசுவது சரியாக இருக்காது. சொல்லப்போனால், சில கலாச்சாரங்களில், அந்நியர்களோடு நடைபெறும் எல்லா உரையாடல்களும் மிகவும் சம்பிரதாய முறையிலேயே துவங்குகின்றன. எனவே, தகுந்த மரியாதை காண்பித்த பிறகு, சம்பிரதாய வார்த்தைகளை குறைத்துக்கொண்டு உரையாடல் முறையில் பகுத்துணர்வோடு பேசுவது விரும்பத்தக்கதாக இருக்கலாம்.
நீங்கள் மேடையிலிருந்து பேசும்போதும் கவனமாக பேச வேண்டும். மிதமிஞ்சி இயல்பான முறையில் பேசுவது கிறிஸ்தவ கூட்டங்களுக்குரிய கண்ணியத்தையும் சொல்லப்படும் விஷயத்தின் முக்கியத்துவத்தையும் குலைத்துவிடும். சில மொழிகளில், முதியோரிடமோ ஆசிரியரிடமோ அதிகாரியிடமோ அல்லது பெற்றோரிடமோ பேசும்போது குறிப்பிட்ட சில பதங்களைப் பயன்படுத்துவது அவசியம். (அப்போஸ்தலர் 7:2 மற்றும் 13:16-ல் பயன்படுத்தப்பட்டுள்ள பதங்களை கவனியுங்கள்.) மணத் துணையிடம் அல்லது நெருங்கிய நண்பரிடம் பேசும்போது வேறு பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேடையில் நாம் பேசுகிற விதம் மிகவும் சம்பிரதாயப்படி இருக்க வேண்டியதில்லை என்றாலும், அது மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும்.
ஆனால், தேவையில்லாத அளவுக்கு விறைப்பாகவோ சம்பிரதாயமாகவோ பேச்சை தொனிக்க வைக்கும் அம்சங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று வாக்கிய அமைப்பு அல்லது சொற்றொடர் அமைப்பு. அச்சில் வடிக்கப்பட்டிருப்பதை அப்படியே பிசிரின்றி பேசுவதற்கு பேச்சாளர் முயலும்போது பிரச்சினை உருவாகிறது. பேச்சு வழக்கில் புழங்கப்படும் வார்த்தைக்கும் எழுத்தில் வடிக்கப்படும் வார்த்தைக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. பொதுவாக, பேச்சு தயாரிப்பதற்கு பிரசுரிக்கப்பட்ட புத்தகங்களை வைத்து ஆராய்ச்சி செய்கிறோம் என்பது உண்மைதான். ஒருவேளை அச்சிடப்பட்ட குறிப்புத்தாள் பேச்சிற்கு அடிப்படையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் பேசும்போது அச்சில் வடிக்கப்பட்டிருப்பதை அப்படியே சொன்னால் அல்லது பிரசுரிக்கப்பட்ட குறிப்புத்தாளிலிருந்து அப்படியே வாசித்தால், உங்களுடைய பேச்சு உரையாடல் பாணியில் தொனிக்காது. உரையாடல் பாணியை காத்துக்கொள்வதற்கு, கருத்துக்களை உங்களுடைய சொந்த வார்த்தைகளில் வெளிப்படுத்துங்கள், சிக்கலான வாக்கிய அமைப்பையும் தவிருங்கள்.
மற்றொரு அம்சம் பேசும் வேகத்தில் மாற்றம். ஒரே வேகத்தில் ஒரே விதமான நிறுத்தங்களோடு பேசப்படும் பேச்சு விறைப்பாகவும் சம்பிரதாயமாகவும் தொனிக்கும். வழக்கமாக உரையாடுகையில் வேகத்தில் மாற்றங்கள் இருக்கும், நிறுத்தங்களும் பல்வேறு அளவுகளில் அடிக்கடி பயன்படுத்தப்படும்.
நீங்கள் பெரும் கூட்டத்தினருக்கு முன்பு பேசும்போது, அவர்களுடைய கவனத்தை நழுவவிடாதிருக்க கூடுதலான சத்தத்தோடும் வலிமையோடும் ஆர்வத்தோடும் உரையாடல் பாணியில் பேச வேண்டும்.
ஊழியத்திற்குப் பொருத்தமாயிருக்கும் உரையாடல் முறையை பயன்படுத்துவதற்கு, அன்றாட வாழ்க்கையில் நன்றாக பேசுவதை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அதற்காக மெத்தப் படித்த மேதாவிகளாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் சொல்வதை பிறர் மதிப்போடும் மரியாதையோடும் செவிகொடுத்துக் கேட்பதற்குத் தூண்டும் பேச்சுப் பழக்கங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. இதை மனதிற்கொண்டு, அன்றாட உரையாடலில் பின்வரும் குறிப்புகளில் நீங்கள் முன்னேற வேண்டுமா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
இலக்கண விதிகளோடு முற்றிலும் முரண்படும் பதங்களையும் கடவுளுடைய தராதரங்களை மதிக்காத ஆட்களுக்கே உரிய பாஷையையும் தவிருங்கள். கொலோசெயர் 3:8-ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைக்கு இசைவாக, மோசமான அல்லது கொச்சையான பாஷையை விட்டொழியுங்கள். ஆனால் பேச்சு வழக்கை பயன்படுத்துவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. பேச்சு வழக்கு, அதாவது அன்றாட பேச்சில் புழங்கும் வார்த்தைகள் சம்பிரதாயப்படி இல்லாவிட்டாலும், ஏற்றுக்கொள்ளப்படும் பேச்சு தராதரங்களோடு ஒத்துப்போகின்றன.
வித்தியாசப்பட்ட ஒவ்வொரு கருத்தையும் தெரிவிப்பதற்கு அதே வார்த்தைகளை அல்லது சொற்றொடர்களை திரும்பத் திரும்ப சொல்வதை தவிருங்கள். நீங்கள் எதை அர்த்தப்படுத்துகிறீர்களோ அதை தெளிவாக வெளிப்படுத்துகிற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.
சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதைத் தவிருங்கள்; இதற்காக, சொல்ல விரும்புவதை தெளிவாக மனதில் பதித்துவிட்டு, பிறகு பேச ஆரம்பியுங்கள்.
நிறைய வார்த்தைகளை வாரியிறைத்து நல்ல கருத்துக்களை குழிதோண்டி புதைத்துவிடுவதைத் தவிருங்கள். ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய குறிப்பை எளிய வாக்கியத்தில் தெளிவாக சொல்ல பழகுங்கள்.
பிறருக்கு மரியாதை காட்டும் விதத்தில் பேசுங்கள்.