உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 17 பக். 139-பக். 142 பாரா. 1
  • மைக்கை பயன்படுத்துதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மைக்கை பயன்படுத்துதல்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • குரல் முன்னேற்றமும் ஒலிவாங்கிகளின் உபயோகமும்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • போதிய சத்தம்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • 2020 “எப்போதும் சந்தோஷமாக இருங்கள்”! மண்டல மாநாட்டு நிகழ்ச்சிகளின் மொழிபெயர்ப்பு
    உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?
  • ஊழியக் கூட்டம் எந்த நற்கிரியையும் செய்ய நம்மைத் தகுதியுள்ளோராக்குகிறது
    நம் ராஜ்ய ஊழியம்—1994
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 17 பக். 139-பக். 142 பாரா. 1

படிப்பு 17

மைக்கை பயன்படுத்துதல்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

கூட்டங்களில் பேச்சுக்களின் சத்தத்தை அதிகரிப்பதற்கு மைக் பயன்படுத்தப்பட்டால், அதை தகுந்த முறையில் உபயோகியுங்கள்.

ஏன் முக்கியம்?

சொல்வது தெளிவாக கேட்டால்தான் மற்றவர்கள் பயனடைய முடியும்.

சபை கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் அதிக நேரமும் முயற்சியும் எடுக்கிறார்கள். ஆகவே, சொல்லப்படும் விஷயங்கள் தெளிவாக காதில் விழுந்தால்தான் அவர்கள் பயனடைய முடியும்.

பூர்வ இஸ்ரவேலருடைய காலத்தில், ஒலிபெருக்கி சாதனங்கள் எதுவும் கிடையாது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கு முன்பு மோவாபின் சமவெளிகளில் இஸ்ரவேல் தேசத்தாரிடம் மோசே பேசியபோது, லட்சக்கணக்கில் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தார் அனைவராலும் எப்படி கேட்க முடிந்தது? பாளயத்தில் ஆங்காங்கே மனிதர்களை நிறுத்தி வைத்து, செய்தியை ஒருவர் மாறி ஒருவர் கடத்தும்படி மோசே ஏற்பாடு செய்திருக்கலாம். (உபா. 1:2; 31:1) யோர்தான் நதியின் மேற்கே இருந்த நிலப்பகுதியை இஸ்ரவேலர் கைப்பற்ற ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலே, கெரிசீம் மலைக்கும் ஏபால் மலைக்கும் முன்பு அவர்களை யோசுவா கூட்டிச் சேர்த்தார்; அவர்களுக்கு மத்தியிலிருந்த பள்ளத்தாக்கில் லேவியர்கள் இருந்தார்கள். அங்கிருந்த மக்கள் அனைவரும் தங்களுக்கு முன்வைக்கப்பட்ட தெய்வீக ஆசீர்வாதங்களையும் சாபங்களையும் கேட்டு அதற்கு மறுமொழி கூறினார்கள். (யோசு. 8:33-35) இந்தச் சந்தர்ப்பத்திலும், மனிதர்களே செய்தியை கடத்தியிருக்கலாம். அதேசமயத்தில், ஒலியை கடத்துவதற்கு அந்தப் பகுதி மிகச் சிறந்த இடமாக விளங்கியது என்பதிலும் சந்தேகமில்லை.

சுமார் 1,500 ஆண்டுகளுக்குப் பின்பு, இயேசு பேசுவதைக் கேட்பதற்கு கலிலேயா கடலருகில் ‘திரளான ஜனங்கள் கூடிவந்தபோது,’ அவர் ஒரு படகில் ஏறி அமர்ந்து, கரையைவிட்டு சற்று தள்ளிச் சென்று, பின் அங்கிருந்து கூட்டத்தாரிடம் பேசினார். (மாற். 4:1, 2) இயேசு ஏன் ஒரு படகிலிருந்து பேசினார்? ஏனென்றால் சமதளமான நீர்ப்பரப்பினூடே மனிதனுடைய குரல் மிகத் தெளிவாக கடத்தப்படும் என்பதை அத்தாட்சி காட்டுகிறது.

20-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை, பேச்சை எவ்வளவு பேரால் கேட்க முடிந்தது என்பது பேச்சாளர் எந்தளவு சத்தமாகவும் தெளிவாகவும் பேசினார் என்பதையே பெரும்பாலும் சார்ந்திருந்தது. ஆனால் 1920-கள் முதல், யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய மாநாடுகளில் ஒலிபெருக்கி சாதனங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

ஒலிபெருக்கி சாதனம். இச்சாதனம் பேச்சாளருடைய குரலொலியை பன்மடங்கு பெருக்க முடியும், அதேசமயத்தில் அவருடைய குரல் நயத்தையும் தொனியையும் போதுமான அளவு காத்துக்கொள்ளவும் முடியும். பேச்சாளர் தொண்டை கிழிய கத்திப் பேச வேண்டியதில்லை. சொல்லப்படுவதை கேட்பதற்கும் கூட்டத்தார் சிரமப்பட வேண்டியதில்லை. மாறாக, அவர்கள் அந்தச் செய்தியின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்த முடியும்.

யெகோவாவின் சாட்சிகளுடைய எல்லா மாநாடுகளிலும் சிறந்த ஒலிபெருக்கி சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு பெரும் முயற்சி செய்யப்பட்டுள்ளது. அதோடு, பொதுப் பேச்சுக்கள் கொடுப்பவர்களுடைய, கூட்டங்கள் நடத்துகிறவர்களுடைய, அல்லது மேடையிலிருந்து வாசிப்பவர்களுடைய சத்தத்தை உயர்த்துவதற்கு அநேக ராஜ்ய மன்றங்களும் ஒலிபெருக்கி சாதனங்களைப் பயன்படுத்துகின்றன. கூட்டங்களில் சபையார் குறிப்புகள் சொல்லும்போது பயன்படுத்துவதற்காகவும் சில சபைகள் மைக்குகள் வைத்திருக்கின்றன. உங்களுடைய சபையில் இப்படிப்பட்ட சாதனங்கள் இருந்தால், அவற்றை நன்கு பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.

சில அடிப்படை வழிகாட்டிகள். இந்தச் சாதனங்களை சரியாக பயன்படுத்துவதற்கு, பின்வரும் குறிப்புகளை மனதிற்கொள்ளுங்கள்: (1) பொதுவாக, உங்களுடைய வாயிலிருந்து சுமார் நான்கு முதல் ஆறு அங்குல தூரத்தில் மைக் இருக்க வேண்டும். வாய்க்கு மிக அருகில் மைக் இருந்தால், உங்களுடைய வார்த்தைகள் உருக்குலைந்து போகலாம். மிகத் தொலைவில் இருந்தால் உங்களுடைய சத்தம் தெளிவாக இருக்காது. (2) மைக் உங்களுக்கு முன்னால் இருக்க வேண்டும், ஒரு பக்கமாக அல்ல. உங்களுடைய தலையை வலதுபுறமோ இடதுபுறமோ திருப்பினால், உங்களுடைய முகம் மைக்கை நோக்கியவாறு இருக்கும்போது மட்டுமே பேச வேண்டும். (3) சாதாரணமாக பேசுவதைவிட சற்று அதிக சத்தமாகவும் வலிமையாகவும் பேசுங்கள். ஆனால் கத்திப் பேச வேண்டியதில்லை. சபையில் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் உங்களுடைய சத்தத்தை ஒலிபெருக்கி சாதனம் சுலபமாக எடுத்துச் செல்லும். (4) உங்களுடைய தொண்டையை சரிசெய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அல்லது இருமலோ தும்மலோ வருவதாக இருந்தால், உங்களுடைய தலையை மைக்கிற்கு அப்பால் திருப்பிக் கொள்ளுங்கள்.

பேச்சு கொடுக்கும்போது. நீங்கள் பீடத்தின் அருகில் சென்று நின்றவுடன், பொதுவாக ஒரு சகோதரர் வந்து உங்களுக்கு ஏற்றவாறு மைக்கை சரிசெய்வார்; அப்பொழுது நீங்கள் சபையாரை பார்த்தவாறு இயல்பாக நில்லுங்கள். உங்களுடைய குறிப்புத்தாளை பீடத்தில் வையுங்கள், அதை மைக் மறைக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் பேச ஆரம்பிக்கும்போது, ஒலிபெருக்கி வழியாக உங்களுடைய சத்தம் எப்படி தொனிக்கிறது என்பதை செவிகொடுத்துக் கேளுங்கள். சத்தம் மிக அதிகமாக இருக்கிறதா, அல்லது சில வார்த்தைகள் வெடியோசை போல கேட்கின்றனவா? அப்படியென்றால், நீங்கள் ஓரிரண்டு அங்குலம் பின்புறம் நகர வேண்டியதாக இருக்கலாம். குறிப்புத்தாளை நோட்டமிடுகையில், உங்களுடைய முகம் மைக்கிற்கு கீழ்நோக்கி இருக்கும்போது அல்ல ஆனால் அதற்கு நேராக அல்லது சற்று மேலாக இருக்கும்போது மட்டுமே வாசிக்கவோ பேசவோ வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேடையிலிருந்து வாசிக்கையில். உங்களுடைய முகம் சபையாரை நோக்கியவாறு இருப்பதற்காக பைபிளை அல்லது மற்ற பிரசுரங்களை தூக்கிப்பிடித்துக் கொள்வதே மிகவும் நல்லது. மைக் உங்கள் முகத்திற்கு நேராக இருப்பதால், வாசிக்கும் தகவலை சற்று ஒருபுறமாக பிடித்துக்கொள்ள வேண்டியதாயிருக்கலாம். அப்படியென்றால், உங்களுடைய தலை மைக்கிற்கு சற்று மறுபுறம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் வாசிக்கும்போது உங்களுடைய சத்தம் மைக்கிற்கு நேராக செல்லும்.

காவற்கோபுரம் படிப்பு கட்டுரையை வாசிக்கும்போது பெரும்பாலான சகோதரர்கள் நின்றுகொண்டு, நேராக நிறுத்தப்பட்டுள்ள மைக் முன்பு வாசிக்கிறார்கள். இதனால் அவர்கள் நன்றாக சுவாசிக்க முடிகிறது, அதிக உணர்ச்சியோடும் வாசிக்க முடிகிறது. பாராக்களை வாசிப்பது கூட்டத்தில் முக்கிய பாகம் வகிக்கிறது என்பதை மனதிற்கொள்ளுங்கள். சபையார் எந்தளவுக்கு பயனடைகிறார்கள் என்பது வாசிக்கப்படும் தகவலை எந்தளவுக்கு கேட்கிறார்கள் என்பதன் பேரிலேயே பெருமளவு சார்ந்திருக்கிறது.

கூட்டங்களில் பதில் சொல்கையில். உங்கள் சபையில் பதில் சொல்வதற்கும் மைக் பயன்படுத்தப்பட்டால், தெளிவாகவும் போதிய சத்தத்துடனும் பேச வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். பதில் சொல்லும்போது உங்களுடைய பிரசுரத்தை அல்லது பைபிளை கையில் பிடித்திருக்க முயலுங்கள். இது, மைக்கில் பேசிக் கொண்டிருக்கும்போது பிரசுரத்தை தெளிவாக பார்ப்பதற்கு உதவும்.

பதில் சொல்லப்போகும் நபர்களிடம் மைக்கை கொண்டு செல்வதற்கு சில சபைகளில் சகோதரர்கள் நியமிக்கப்படுகிறார்கள். உங்களுடைய சபையிலும் இது போலவே செய்யப்பட்டால், உங்களிடம் பதில் கேட்கப்படும்பொழுது கைகளை உயர்த்தியே பிடித்திருங்கள், அப்பொழுதுதான் மைக்கை கையாளும் சகோதரர்கள் நீங்கள் எங்கே அமர்ந்திருக்கிறீர்கள் என்பதை கண்டுபிடித்து விரைவாக உங்களிடம் மைக்கை தர முடியும். கை-மைக்காக இருந்தால், அதை வாங்குவதற்குத் தயாராக இருங்கள். முதலில் மைக்கை சரியாக பிடித்துக்கொண்டு பிறகு பதில் சொல்ல ஆரம்பியுங்கள். நீங்கள் பதில் சொன்ன பிறகு, மைக்கை உடனடியாக அந்தச் சகோதரரிடம் கொடுத்துவிடுங்கள்.

நடிப்புகளில் பங்கு பெறுகையில். நடிப்புகளில் பங்கு பெறும்போது மைக்கை பயன்படுத்துவதற்கு நல்ல முன்யோசனை தேவை. ஸ்டான்டில் மைக் பொருத்தப்பட்டிருந்தால், பைபிளையும் குறிப்புத்தாளையும் பிடித்துக்கொள்வதற்கு உங்களுடைய இரு கைகளையும் பயன்படுத்த முடியும். கை-மைக்காக இருந்தால் நீங்கள் நன்கு அசைவதற்கு வசதியாக இருக்கும், ஆனால் மைக்கை உங்களுடைய பார்ட்னர் பிடித்துக்கொள்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியதாக இருக்கலாம். இப்படி செய்தால் உங்களுடைய பைபிளை எடுத்துப் பார்ப்பதற்கு கைகளை தாராளமாக பயன்படுத்த முடியும். நீங்களும் உங்களுடைய பார்ட்னரும் இதை பழகிப்பார்க்க வேண்டும், அப்பொழுதுதான் அதை எப்படி சரியாக பிடிப்பது என்பது உங்களுடைய பார்ட்னருக்குத் தெரியும். மேடையில் இருக்கும்பொழுது, முக்கியமாக நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்பொழுது, சபையாருக்கு முதுகை காட்டாதவாறு இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஊழியக் கூட்ட நடிப்புகளில், பங்கேற்போர் அநேகர் இருக்கலாம், அவர்கள் மேடையில் அங்குமிங்கும் நகரலாம். இதனால் பல மைக்குகள் தேவைப்படலாம். இவற்றை முன்னதாகவே அங்கு வைத்திருக்க வேண்டும், அல்லது பங்கேற்போர் மேடைக்கு செல்லும்போது கொடுக்க வேண்டும். மைக்குகள் சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முன்னதாகவே திட்டமிடுவது அவசியம். மேடையில் நடிப்புகளை முன்பே ஒத்திகை பார்த்தால் பங்கேற்போர் மைக்கை திறம்பட பயன்படுத்துவதற்கு சொல்லிக் கொடுக்க வாய்ப்பிருக்கும். மேடையில் ஒத்திகை பார்க்க முடியாதபோது, பங்கேற்போர் மைக்கை சரியாக பிடிக்க பழகிக்கொள்வதற்காக மைக் மாதிரி ஏதாவது சிறிய பொருளை கையில் பிடித்துக்கொள்வது நல்லது. நடிப்பு முடிந்தபின், கை-மைக்கை கீழே மெதுவாக வைக்க வேண்டும். மேலும், மேடையிலிருந்து கீழே இறங்கிச் செல்லும்போது மற்ற மைக் வயர்களில் தடுக்கி விழாதவாறு கவனமாயிருக்க வேண்டும்.

மைக்கை பயன்படுத்துவதற்கு நாம் கவனம் செலுத்துவது கூட்டங்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்றோடு நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது; கடவுளுடைய வார்த்தையை கலந்தாலோசிப்பதன் மூலம் ஒருவருக்கொருவர் பயன்பெறுவதே அந்த நோக்கம். (எபி. 10:24, 25) மைக்கை திறம்பட பயன்படுத்துவதற்குக் கற்றுக்கொள்வதன் மூலம் இந்த முக்கிய நோக்கம் நிறைவேற நாம் தனிப்பட்ட முறையில் பங்களிக்க முடியும்.

எப்படி செய்வது

  • மைக்கை வாயிலிருந்து நான்கு முதல் ஆறு அங்குல தொலைவில் வையுங்கள்.

  • உங்களுடைய வாய், மைக்கிற்கு நேராக இருக்கும்போது மட்டும் பேசுங்கள்.

  • சாதாரணமாக பேசுவதைவிட சற்று அதிக சத்தமாகவும் வலிமையாகவும் பேசுங்கள்.

  • தொண்டையை சரிசெய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தலையை மைக்கிற்கு அப்பால் திருப்பிக் கொள்ளுங்கள்.

பயிற்சி: உங்கள் ராஜ்ய மன்றத்தில் மைக்குகள் பயன்படுத்தப்பட்டால், ஸ்டான்டு மைக்கையும் கை-மைக்கையும் அனுபவமிக்க பேச்சாளர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். நீங்கள் பயன்படுத்த அல்லது தவிர்க்க விரும்பும் வழிகளை அதற்கான காரணங்களோடு அறிந்துகொள்ளுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்