ஊழியக் கூட்டம் எந்த நற்கிரியையும் செய்ய நம்மைத் தகுதியுள்ளோராக்குகிறது
1 ஊழியக் கூட்டத்தின் நோக்கமானது, பிரசங்க மற்றும் சீஷராக்கும் ஊழியத்தில் மேலுமதிக முழுமையாய்ப் பங்குகொள்ளும்படி நமக்கு தூண்டுதலளித்து தகுதியுள்ளோராக்குவதாகும். (2 தீ. 3:16) எனினும், கூட்டத்துக்காகத் தகுந்த முறையில் நாம் தயாரிப்பு செய்யாவிடில் அல்லது நாம் கற்பவற்றைப் பொருத்திப் பயன்படுத்தத் தவறினால், அதன் பயன்கள் சொற்பமாகவே இருக்கும்.
2 முன்னதாக தயாரிப்பு செய்வது அந்தப் போதனையை மேலும் முழுமையாக உட்கிரகித்துக்கொள்ளும்படி உங்களுக்கு உதவிசெய்யும். பயன்படுத்தவிருக்கும் பிரசுரங்களைத் திரும்பக் கவனித்துப் படித்து, அவற்றைப் பேச்சாளர் கையாளுகையில் கவனித்து, குறிப்புகள் சொல்வதில் பங்குகொள்ளக்கூடும்படி உங்களுடன் அவற்றைக் கூட்டத்துக்குக் கொண்டுவாருங்கள். கவனமாகச் செவிகொடுத்துக் கேட்பவராக இருந்து, பின்னால் பயன்படுத்துவதற்காகக் குறிப்புகளை எழுதிக்கொள்ளுங்கள்.
3 நடத்தும் கண்காணி, கூட்டத்துக்குரிய திட்டமிடப்பட்ட பாகங்களைக் கவனமாய்த் திரும்பப் பார்வையிடுகிறார். திறமையுள்ள, தகுதிபெற்ற மூப்பர்களும் உதவி ஊழியர்களும் அவற்றை தயாரிப்பு செய்யும்படி நியமிக்கப்படுகின்றனர். (om பக். 70) குறைந்த எண்ணிக்கையான மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் உடைய சபைகள், தகுதிபெற்ற மற்ற சகோதரர்களை அவர்களுக்கு உதவி செய்யும்படி நியமிக்கலாம். (km 11/76, கேள்விப் பெட்டி) பேச்சாளர் ஒவ்வொருவரும் முழுமையாக, நன்றாய் தயாரிப்பு செய்ய வேண்டும், அளிக்கப்பட்டுள்ள வழிநடத்துதலைக் கவனமாய்க் கடைப்பிடிக்க வேண்டும், மற்றும் குறிக்கப்பட்ட நேரத்துக்கு மேலாகச் செல்லாதபடி நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.
4 இந்தக் கூட்டம் அறிவிப்புகளுடன் பொதுவாகத் தொடங்குகிறது. அறிவிப்புகளைக் கையாள நியமிக்கப்பட்ட சகோதரன், என்ன காரியங்களை அறிவிக்க வேண்டுமென்பதை அறிந்துகொள்ளும்படி நடத்தும் கண்காணியை முன்னதாகவே காணவேண்டும். சங்கத்திலிருந்து வந்துள்ள கடிதங்கள் அல்லது ஊழிய ஏற்பாடுகள் அல்லது மாதாந்தர அறிக்கைகள் பற்றிய நினைப்பூட்டுதல்கள் இவற்றில் உட்பட்டிருக்கலாம். சந்திக்கத் தேவைப்படுவோராக நோயுற்றிருப்போரைப்பற்றி நாம் தெரிந்துகொள்வோம் அல்லது எதிர்காலத்துக்காகத் திட்டமிடப்பட்ட சபை நடவடிக்கைகளைப்பற்றிய நுட்பவிவரங்கள் அறிவிக்கப்படுவதைக் கேட்போம். நீங்கள் தகவல் அறிந்துகொண்டு உங்கள் பங்கைச் செய்வதற்கு தயாராகும்படி கவனமாகச் செவிகொடுத்துக் கேளுங்கள்.
5 கூட்ட நிகழ்ச்சிநிரலின் ஒரு பாகம் சபை பங்குகொள்ளும்படி தேவைப்படுத்தினால், அந்த விஷயத்தை முழுவதுமாக வாசித்து வேதவசனங்களை எடுத்துப் பார்த்து தயாரிப்பு செய்யுங்கள். அந்த ஆலோசனைகளை நீங்கள் எவ்வாறு பொருத்திப் பயன்படுத்தத் திட்டமிடுகிறீர்கள் என்பதையும் மற்றவர்களை ஊக்குவிக்க என்ன வகையான குறிப்புகளை நீங்கள் சொல்லலாமென்பதையும் பற்றிச் சிந்தியுங்கள். ஒரு சுருக்கமான அனுபவத்தைக் கூறி இந்தப் போதகத்தின் நடைமுறையான பயனை நீங்கள் விளக்கலாம்.
6 ஒரு நடிப்பு இருக்கிறபோது, அதைப்போன்ற சூழ்நிலைமைகளில் உங்களை வைத்துக் காண முயற்சி செய்யுங்கள், நீங்கள் சொல்லப்போவதைப்பற்றிச் சிந்தியுங்கள். பயன்படுத்தப்படும் விவாதங்களையும் பகுத்தறிவுக்கேற்ற படிப்படியான சிந்திப்பையும் கவனியுங்கள். இந்த வகையான சந்தர்ப்ப நிலையில் கடைசியாக இருந்த சமயத்தில் நீங்கள் சொன்னதை நினைவுபடுத்திப் பார்க்க முயற்சி செய்து, நடிப்பித்துக் காட்டப்படும் அந்தக் குறிப்புகள் எதிர்காலத்தில் மேம்பட்ட பலன்களை அடைய உங்களுக்கு எவ்வாறு உதவிசெய்யலாமென்பதை ஆழ்ந்து சிந்தியுங்கள்.
7 நடிப்புகளிலும் பேட்டிகளிலும் பங்குகொள்வோர் தங்கள் பாகங்களை முன்னதாக ஒத்திகைபார்த்து நன்றாய்ப் பழக்கிக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் மேடையில் அவரவர் சொல்லப்போவதையும் செய்ய எதிர்பார்க்கப்படுவதையும் அறிந்திருக்க வேண்டும். முன்னதாக ஒத்திகைபார்த்து பழக்கிக் கொள்ளாத பாகங்கள் சபையோருக்கு உள்ளத்தூண்டுதலையோ ஊக்கமூட்டுதலையோ அளிப்பது அரிதே. காவற்கோபுர படிப்பு முடிந்த பின்பு தங்கள் பாகத்தை ஒத்திகைபார்ப்பதற்கு தயாராகச் சிலர் வருகின்றனர், இவ்வாறு மேடையில் செய்து தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்கின்றனர் மற்றும் ஒலிவாங்கிகளைக் கையாளும் சகோதரர் செய்யத் தேவைப்படுவதை அவர்கள் அறிந்துகொள்ளும்படி செய்கின்றனர்.
8 இந்த நிகழ்ச்சிநிரல் சிலசமயங்களில் சபைக்கு வேண்டிய தனிப்பட்ட ஒரு தேவையைக் கையாளும் ஒரு பேச்சு அல்லது சமயத்துக்குத் தக்கதாயுள்ள காவற்கோபுர பத்திரிகையின் ஒரு கட்டுரை அடங்கியதாக இருக்கலாம். கவனமாகச் செவிகொடுத்துக் கேளுங்கள், அந்த அறிவுரையை இருதயத்துக்குள் ஏற்று, அதைப் பொருத்திப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.
9 நாம் ‘எந்த நற்கிரியைக்கும் தயாராக’ இருக்கும்படி விரும்புகிறோம். (2 தீ. 2:21) அதைச் செய்ய நமக்கு உதவிசெய்வதற்கு யெகோவா செய்துள்ள ஏற்பாடுகளில் ஒன்று ஊழியக் கூட்டம் ஆகும். உண்மையுடன் கூட்டத்துக்கு வருவதும் நாம் கற்பதைப் பயன்படுத்துவதற்கு எடுக்கும் உள்ளப்பூர்வமான முயற்சியும் நமக்கு நிச்சயமாகவே உதவிசெய்யும், இவ்வாறு நாம் ‘[நம்] ஊழியத்தை முழுமையாக நிறைவேற்ற’ முடியும்.—2 தீ. 4:5, NW.