ஊழிய கூட்டத்திலிருந்து முழுமையாக பயனடையுங்கள்
1 ஒவ்வொரு ஊழியக்காரனுடைய இருதயப்பூர்வமான வார்த்தைகளும் பின்வருமாறு இருக்க வேண்டும்: “கர்த்தாவே [யெகோவாவே, NW] உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.” (சங். 86:11) யெகோவாவின் ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிக்கும் யெகோவாவின் வேலையை நிறைவேற்றுவதற்கு நமக்கு உதவி செய்ய ஊழிய கூட்டம் திட்டவட்டமான போதனைகளைக் கொடுக்கிறது. கொடுக்கப்படும் அறிவுரைகளைக் கிரகித்துக் கொள்வதன் மூலம் நீங்கள் உண்மையில் பயனடைகிறீர்களா?
நல்ல தயாரிப்பின் பயன்கள்
2 ஊழியக்கூட்டத்தில் கொடுக்கப்படும் போதனைகளிலிருந்து மிகுதியான அளவில் பயனடைவதற்கு முன் கூட்டியே தயாரிப்பது அவசியம். ஏன்? முழுமையான தயாரிப்பு மனதையும் இருதயத்தையும் போதனைகளைப் பெற்றுக் கொள்ளுவதற்கு ஏற்ற சூழ்நிலையில் வைக்கிறது. கலந்தாலோசிக்கப்படவிருக்கும் அந்தத் தகவலை முன்கூட்டியே படிப்பதன் மூலமும் அதை தியானிப்பதன் மூலமும், பயன்படுத்தப்பட்டிருக்கும் வேதவசனங்களைச் சிந்தித்துப்பார்ப்பதன் மூலமும் கொடுக்கப்படும் ஆவிக்குரிய உணவை கிரகித்துக் கொள்ளக்கூடிய மற்றும் நினைவில் வைக்கக்கூடிய மேம்பட்டதோர் நிலையில் நீங்கள் இருப்பீர்கள். பதில் சொல்லுவதில், நடிப்புகளில் பங்குபெறுவதில், அல்லது பேச்சுகளைக் கொடுப்பதில் உங்களுடைய சொந்த பாகம் அதிக அர்த்தமுள்ள ஒன்றாக இருக்கும். உங்களுடைய இருதயம் திருப்தியினால் நிறைந்திருக்கும். ஏனெனில் உங்களால் இயன்ற மிகச் சிறந்தவற்றை நீங்கள் கொடுத்தீர்கள்.—யாத். 23:19a; நீதி. 16:23.
3 தயாரிக்கும்போது, பயன்படுத்தப்படும் பிரசுரங்களின் பிரதி ஒன்றை ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் கொண்டிருப்பது உதவியாயிருக்கும். ஊழியக்கூட்டத்தின் நிகழ்ச்சிநிரல் பாகங்களைக் கையாளுவதற்கு, நியமிக்கப்பட்டிருப்பவர்களுக்குத் தயாரிப்பு மிகவும் முக்கியமானது. அதில் பங்கு பெறுபவர்கள் தயாரிப்பதற்காக போதிய நேரத்தை அனுமதிப்பதற்கு நியமிப்புகள் முன்னதாகவே செய்யப்பட வேண்டும்.
பங்குபெறுவதிலிருந்தும் பொருத்துவதிலிருந்தும் கிடைக்கும் பயன்கள்
4 கூட்டங்களில் பங்குபெறுவது, அவற்றிலிருந்து நீங்கள் வெகுவான மகிழ்ச்சியை அடைவதற்கு ஏதுவாயிருக்கிறது என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஜூலை 1, 1972 ஆங்கில காவற்கோபுரம் பக்கம் 411-ல் விவரித்தபடி: “யெகோவாவின் பேரிலுள்ள தன்னுடைய சொந்த விசுவாசத்தை ஒருவர் தன்னுடைய கிறிஸ்தவ சகோதரர்கள் மத்தியில் வெளிப்படையாக காட்டும்போது தானே மெய்யான மகிழ்ச்சி உண்டாகிறது. இது பதில் சொல்ல வேண்டுமே என்ற கட்டாயத்தை உணருவது பின்பு அமைதியாகிவிடுவது, கூட்டத்தின் மிச்ச நேரத்தில் மற்றவர்கள் பதில் சொல்லுவதற்கு விட்டுவிடுவது போன்ற காரியமல்ல . . . யெகோவாவின் பேரிலுள்ள நமது அன்பே நம்மை நிரப்புகிறது. பின்பு அது பொங்கி வழிகிறது. இதனால் நாம் யெகோவாவை துதிக்கவும் அவர் மீதுள்ள நமது அன்பை வெளிப்படுத்திக் காட்டவும் விரும்புகிறோம்.”
5 யெகோவாவிடமிருந்து நாம் நற்செய்தியை பிரசங்கிக்கும் பொறுப்பை பெற்றிருக்கிறோம். அவர் அன்பார்ந்த விதத்தில் ஊழியக்கூட்டத்தின் மூலம் மிகுதியான போதனைகளை அருளுகிறார். இதனால் நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற மிகச் சிறந்த ராஜ்ய சாட்சியை கொடுக்கக்கூடிய நிலையிருக்கிறோம். மாபெரும் போதகராக, யெகோவா, தம்முடைய ஜனங்களுக்குத் தாம் அருளும் போதனைகளிலிருந்து பயன்களை எதிர்பார்க்கிறார். (உபா. 17:10-ஐ பார்க்கவும்.) நீங்கள் கற்றுக் கொண்டவற்றை கடைபிடிப்பதும் பொருத்திப்பிரயோகிப்பதும் உங்களுக்குப் பலன்களைக் கொண்டுவரும். அப்பொழுது நீங்கள் பின்வருமாறு சொல்லக்கூடும்: “நீர் எனக்கு கட்டளையிட்டபடியே செய்தேன்.”—எசே. 9:11.
6 நீங்கள் உங்களையும் உங்களுக்குச் செவி கொடுப்பவர்களையும் இரட்சித்துக் கொள்ளும் மகிழ்ச்சியையும் கொண்டிருப்பீர்கள். (1 தீமோ. 4:16) ஊழியக்கூட்டத்திலிருந்து கிடைக்கும் ஆவிக்குரிய பலன்கள் அநேகம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. நீங்களும் உங்கள் குடும்பமும் அவற்றை முழுமையாக அனுகூலப்படுத்திக் கொள்ள தீர்மானமாயிருங்கள்!