ஊழியக் கூட்டத்தை நடத்துவோருக்கு...
நம் ராஜ்ய ஊழியத்தில் இந்த மாத இதழிலிருந்து ஊழியக் கூட்ட அட்டவணையில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. மே 2009 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழியத்தில், “ஊழியக் கூட்டத்திற்குத் தயாரிக்கும் முறை” என்ற கட்டுரையில் கொடுக்கப்பட்ட தகவல்களில் சில விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
◼ பேச்சு: சபையாருடன் கலந்தாலோசிக்காமல், நியமிக்கப்பட்ட பகுதியைப் பேச்சாகக் கொடுப்பதை இது குறிக்கிறது. சபையாருக்கு மிகவும் பயனுள்ள விஷயங்களின் பேரில் பேச்சாளர் கவனம் செலுத்த வேண்டும்.
◼ கேள்வி-பதில்: காவற்கோபுர படிப்பில் செய்வது போலவே சுருக்கமான முன்னுரை-முடிவுரையோடு இந்தப் பகுதியைக் கையாள வேண்டும்; எல்லாப் பாராக்களிலிருந்தும் கேள்விகள் கேட்க வேண்டும். இதை நடத்துபவர் அதிகமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். நேரம் இருப்பதைப் பொறுத்து முக்கியமான வசனங்களை வாசிக்கச் சொல்லலாம். பாராக்களை வாசிக்கும்படி குறிப்பிடப்படவில்லை என்றால் அவற்றை வாசிக்கத் தேவையில்லை.
◼ கலந்தாலோசிப்பு: இதுவும் ஒரு பேச்சுதான்; ஆனால், இதில் ஓரளவு சபையார் கலந்தாலோசிப்பும் இருக்கும். சொல்லப்போனால், இது முழுக்க முழுக்க பேச்சும் அல்ல, கேள்வி-பதில் கலந்தாலோசிப்பும் அல்ல.
◼ நடிப்புகளும் பேட்டிகளும்: நடித்துக் காட்டுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தப் பகுதியைக் கையாளும் சகோதரர் ஒரு நடிப்பிற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமே தவிர அவர்தான் நடித்துக்காட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த நடிப்புக்காக அவர் தேர்ந்தெடுக்கும் நபர், நன்கு நடித்துக்காட்டுபவராகவும் முன்மாதிரியானவராகவும் இருக்க வேண்டும்; இதற்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும். புதியவர்களுக்கும் அனுபவமற்ற பிரஸ்தாபிகளுக்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை; என்றாலும், அவர்களை வீட்டுக்காரர்களாகப் பயன்படுத்தலாம். நடித்துக் காட்டுகிற பிரஸ்தாபிகள் சபையாரைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். பேட்டி அளிக்கும் பிரஸ்தாபிகள் இருக்கையிலிருந்து தங்களுடைய குறிப்புகளைச் சொல்லாமல் மேடைக்குச் சென்று அவற்றைச் சொல்ல வேண்டும். நடிப்புகளும் பேட்டிகளும் முன்கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்டிருக்க வேண்டும். கூட்ட நேரம் அதிகமாகிவிட்டதன் காரணமாக ஒரு சகோதரர் தான் கையாளும் பகுதியைச் சுருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், நடிப்புகளையோ பேட்டிகளையோ அவர் ரத்து செய்துவிடக் கூடாது. உதவி ஊழியர்கள், நடிப்பு அல்லது பேட்டிக்காகப் பிரஸ்தாபிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளரிடம் அல்லது வேறொரு மூப்பரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.
குறிப்பிட்ட ஒரு பகுதியில் விசேஷமான ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கையில், அவற்றைக் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஊழியக் கூட்டப் பகுதிகளை நடத்தும் சகோதரர்கள் மேற்சொன்ன விதத்தில் அவற்றைக் கையாளும்போது, கூட்டங்கள் “கண்ணியமாகவும் ஒழுங்காகவும்” நடைபெறும்.—1 கொ. 14:40.