படிப்பு 29
குரல் நயம்
என்ன சொல்லப்படுகிறது என்பது மட்டுமல்ல, எப்படி சொல்லப்படுகிறது என்பதும் மக்களை பெரிதும் பாதிக்கிறது. இனிமையான, கனிவான, நட்பான, தயவான குரலில் ஒருவர் பேசுகையில் உடனடியாக செவிகொடுத்துக் கேட்பீர்கள் அல்லவா? அதே நபர் கடுமையான அல்லது முரட்டுத்தனமான குரலில் பேசினால் அந்தளவுக்கு விரும்பிக் கேட்பீர்களா?
இனிய குரல் நயத்தை வளர்ப்பது முழுக்க முழுக்க குரலின் இயக்கம் (voice mechanics) சார்ந்த விஷயமல்ல. அது ஒருவருடைய குணங்களையும் உட்படுத்தலாம். பைபிள் சத்தியத்தைப் பற்றி ஒருவர் அதிகமதிகமாக தெரிந்துகொண்டு அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்போது அவர் பேசும் விதம் மாறுகிறது. தேவபக்திக்குரிய குணங்களாகிய அன்பு, சந்தோஷம், தயவு ஆகியவை அவருடைய குரலில் ததும்புகிறது. (கலா. 5:22, 23) பிறர்மீது உள்ளப்பூர்வமான அக்கறை காட்டுகையில், அவருடைய குரலே அதை தெரியப்படுத்திவிடுகிறது. சதா குறைகூறிக்கொண்டே இருக்கும் மனப்பான்மை நீங்கி நன்றியுணர்வு ஏற்படுகையில், சொல்லப்படும் வார்த்தைகளிலும் குரல் தொனியிலும் அது வெளிப்படுகிறது. (புல. 3:39-42; 1 தீ. 1:12; யூ. 16) ஒருவர் பேசும் மொழி உங்களுக்கு புரியாவிட்டாலும், அவர் ஆணவமாக, எரிச்சலாக, குறை காண்பவராக, மூர்க்கமாக பேசுகிறாரா அல்லது தாழ்மையாக, பொறுமையாக, தயவாக, அன்பாக பேசுகிறாரா என்பதை உங்களால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.
சிலசமயங்களில் வியாதியின் காரணமாகவோ பரம்பரை காரணிகளாலோ ஒருவருடைய தொண்டை (larynx) பாதிக்கப்பட்டு குரல் மோசமாகியிருக்கலாம். இந்த உலகில் முழுமையாக குணப்படுத்த முடியாத அளவுக்கு அது நிரந்தர ஊனமாகவே இருக்கலாம். ஆனால் பொதுவாக, பேச்சு உறுப்புகளை தகுந்த முறையில் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் அப்படிப்பட்ட குரலையும் மேம்படுத்த முடியும்.
குரலின் தன்மை ஆளுக்கு ஆள் மாறுபடுவதை முதலில் புரிந்துகொள்வது முக்கியம். வேறொருவருடைய குரலில் பேச கற்றுக்கொள்வது உங்களுடைய இலக்காக இருக்கக் கூடாது. மாறாக, உங்களுடைய குரலுக்கே உரிய தனிச்சிறப்பு பண்புகளோடு அதை வளப்படுத்துங்கள். இதைச் செய்ய எது உதவும்? இரண்டு முக்கிய அம்சங்கள் இருக்கின்றன.
தகுந்த முறையில் சுவாசித்தல். உங்களுடைய குரலை பயன்படுத்துவதில் சிறந்த பலன்களைப் பெற, சுவாசத்தை தகுந்த முறையில் கட்டுப்படுத்துவதோடு, போதுமான அளவு காற்றை உள்ளிழுப்பதும் அவசியம். இப்படி செய்யவில்லையென்றால், உங்களுடைய குரல் பலவீனமாக தொனிக்கலாம், உங்களுடைய பேச்சு சீரற்று இருக்கலாம்.
நுரையீரல்களின் பெரும்பகுதி அமைந்திருப்பது மார்பின் மேற்புறத்தில் அல்ல; இந்தப் பகுதி தோள் பட்டைகளின் காரணமாகவே பெரிதாக தெரிகிறது. ஆனால் உதரவிதானத்திற்கு (diaphragm) மேற்பகுதியில்தான் நுரையீரல்கள் மிகவும் பரந்து காணப்படுகின்றன. கீழ் விலா எலும்புகளோடு இணைக்கப்பட்ட உதரவிதானம் வயிற்றறை மார்பை (abdominal cavity) பிரிக்கிறது.
நீங்கள் சுவாசிக்கும்போது நுரையீரல்களின் மேற்பகுதியை மட்டுமே நிரப்பினால், உங்களுக்கு சீக்கிரத்தில் மூச்சுத் திணறும். உங்களுடைய குரல் வலுவிழந்து தொனிக்கும், நீங்கள் எளிதில் களைப்படைந்து விடுவீர்கள். தகுந்த விதத்தில் சுவாசிப்பதற்கு, நீங்கள் உட்கார்ந்துகொண்டு அல்லது நேராக நின்றுகொண்டு உங்களுடைய தோள்களை பின்புறமாக வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் பேசுவதற்கு மூச்சிழுக்கும்போது உங்களுடைய மார்பின் மேற்பகுதியை மட்டுமே விரிவாக்குவதை தவிருங்கள். முதலில் நுரையீரல்களின் அடிப்பகுதியை நிரப்புங்கள். இந்தப் பாகம் நிரம்பும்போது, உங்களுடைய விலா எலும்புக் கூட்டின் அடிப்பகுதி பக்கவாட்டில் விரிவடையும். அதேசமயத்தில், உதரவிதானம் கீழிறங்கும், இது வயிற்றையும் குடல்களையும் மெதுவாக தள்ளுகிறது. அதனால்தான் உங்களுடைய பெல்ட் அல்லது மற்ற ஆடை உங்கள் அடிவயிற்றை அழுத்துவதை உணருகிறீர்கள். ஆனால் நுரையீரல்கள் உங்களுடைய அடிவயிற்றில் இல்லை; அவை விலா எலும்புக் கூட்டிற்குள்ளேயே இருக்கின்றன. இதை நீங்களே பரிசோதித்துப் பார்ப்பதற்கு, உங்களுடைய விலா எலும்புக் கூட்டின் கீழ்ப்புறத்தில் இருபக்கங்களிலும் உங்களுடைய கைகளை வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது நன்கு மூச்செடுங்கள். நீங்கள் தகுந்த விதத்தில் சுவாசித்தால், உங்களுடைய வயிற்றை உள்ளிழுத்து தோள்களை உயர்த்த மாட்டீர்கள். மாறாக, உங்களுடைய விலா எலும்புகள் மேலேயும் வெளியேயும் லேசாக போய்வருவதை உணருவீர்கள்.
அடுத்து, காற்றை வெளிவிடுவதற்கு கவனம் செலுத்துங்கள். அதை வேகமாக வெளிவிட்டு வீணாக்காதீர்கள். மெதுவாக வெளிவிடுங்கள். உங்களுடைய தொண்டையை விறைப்பாக்குவதன் மூலம் அதை கட்டுப்படுத்த முயலாதீர்கள். அப்படி செய்தால் உங்களுடைய குரல் செயற்கையாக அல்லது இயல்புக்கு மாறாக உச்சஸ்தாயியில் தொனிக்கும். அடிவயிற்று தசைகளிலிருந்தும் விலாவிடை தசைகளிலிருந்தும் (intercostal muscles) ஏற்படும் அழுத்தம் காற்றை வெளியேற்றுகிறது; ஆனால் உதரவிதானமோ காற்று வெளியேற்றப்படும் வேகத்தை கட்டுப்படுத்துகிறது.
ஓட்டப்பந்தயக்காரர் பந்தயத்திற்காக பயிற்சி செய்வது போலவே, ஒரு பேச்சாளரும் பயிற்சியின் வாயிலாக தகுந்த விதத்தில் சுவாசத்தைக் கட்டுப்படுத்த பழகிக்கொள்ளலாம். உங்களுடைய தோள்களை பின்புறமாக வைத்துக்கொண்டு நேராக நில்லுங்கள், உங்களுடைய நுரையீரல்களின் அடிப்பாகம் நிரம்புமாறு சுவாசியுங்கள், பின்பு ஒரே மூச்சில் எத்தனை எண்களை எண்ண முடியுமோ அத்தனை எண்களை எண்ணிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக காற்றை வெளிவிடுங்கள். பின்பு, இந்த முறையில் சுவாசித்துக்கொண்டே சத்தமாக வாசித்துப் பழகுங்கள்.
விறைப்பான தசைகளை தளர்த்துங்கள். ரிலாக்ஸ்! இதுவே நல்ல குரல் நயத்திற்கு மற்றொரு முக்கிய அம்சம். பேசும்போது ரிலாக்ஸாக இருப்பதற்கு கற்றுக்கொண்டால் உங்களுடைய முன்னேற்றம் மலைக்க வைப்பதாக இருக்கும். உடலோடு மனதையும் ரிலாக்ஸ் செய்ய வேண்டும், ஏனென்றால் மனோ ரீதியில் டென்ஷனாக இருப்பது தசையையும் டென்ஷனாக்குகிறது.
செவிசாய்ப்போரை பற்றிய சரியான மனநிலையை கொண்டிருப்பதன் மூலம் மனோ ரீதியில் உண்டாகும் டென்ஷனை நீக்குங்கள். வெளி ஊழியத்தில் சந்திக்கும் ஆட்களிடம் நீங்கள் பேச வேண்டியதாயிருந்தால், நீங்கள் சில மாதங்களே பைபிள் படித்திருந்தாலும், அவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கு யெகோவாவின் நோக்கத்தைப் பற்றிய மதிப்புமிக்க விஷயங்களை அறிந்திருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். மேலும் அவர்களுக்கு உதவி தேவைப்படுவதாலேயே நீங்கள் அவர்களை சந்திக்கிறீர்கள்—அவர்கள் அதை உணர்ந்தாலும்சரி உணராவிட்டாலும்சரி. மறுபட்சத்தில், நீங்கள் ராஜ்ய மன்றத்தில் பேசிக்கொண்டிருந்தால், உங்களுடைய சபையாரில் பெரும்பாலானவர்கள் யெகோவாவின் ஜனங்கள் என்பதை நினைவில் வையுங்கள். அவர்கள் உங்களுடைய நண்பர்கள், நீங்கள் வெற்றி பெற வேண்டுமென விரும்புகிறவர்கள். இப்படிப்பட்ட நட்புக்குரிய, அன்புள்ளம் கொண்டவர்களிடம் பேசும் வாய்ப்பு நம்மைப் போல இந்த உலகில் வேறெந்த பேச்சாளருக்கும் கிடைப்பதில்லை.
தொண்டை தசைகளுக்கு கவனம் செலுத்தி அவற்றின் விறைப்பை தளர்த்துங்கள். உங்களுடைய குரல் நாண்களின் வழியாக காற்று செல்கையில் அவை அதிர்வுறுகின்றன என்பதை நினைவில் வைத்திருங்கள். கிட்டார் அல்லது வயலின் நரம்புகளை ‘டைட்’ செய்யும்போது அல்லது ‘லூஸ்’ பண்ணும்போது அதன் ஒலி மாறுபடுவதைப் போல, தொண்டை தசைகள் விறைப்பாக இருக்கிறதா ரிலாக்ஸாக இருக்கிறதா என்பதைப் பொறுத்து உங்களுடைய குரலின் தன்மையும் மாறுபடுகிறது. உங்களுடைய குரல் நாண்களை தளர்த்தும்போது ஒலி குறைகிறது. தொண்டை தசைகளை தளர்த்துவது மூக்குத் துவாரங்களை திறந்தவாறு வைத்திருப்பதற்கும் உதவுகிறது. இது நிச்சயமாகவே உங்களுடைய குரல் நயத்திற்கு துணைபுரியும்.
உங்களுடைய முழு உடலையும்—முழங்கால்கள், கைகள், தோள்கள், கழுத்து ஆகியவற்றை—தளர்த்துங்கள். இது, உங்களுடைய குரலை நன்கு கடத்துவதற்கு தேவைப்படும் ஒலியதிர்வை (resonance) உண்டாக்க உதவுகிறது. முழு உடலும் ‘சவுண்டிங் போர்டு’ போல செயல்படும்போது இந்த ஒலியதிர்வு உண்டாகிறது, ஆனால் நீங்கள் விறைப்பாக இருந்தால் இது தடைப்படுகிறது. தொண்டையில் உருவாகும் ஒலி மூக்குத் துவாரங்களில் மட்டுமல்ல, மார்பு எலும்புகள், பற்கள், அண்ணம், எலும்பு உட்புழைகள் ஆகியவற்றின் மீதும் பட்டு எதிரொலிக்கின்றன. இவையனைத்தும் ஒலியதிர்வுக்கு பங்களிக்கலாம். கிட்டாரின் ‘சவுண்ட் போர்டு’ மீது ஏதாவது கனமான ஒரு பொருளை வைத்தால், சத்தம் நின்றுவிடும்; அது தகுந்த விதத்தில் ஒலியதிர்வை ஏற்படுத்த வேண்டுமாகில், அது அதிர்வுறுவதற்கு எந்த தடையுமின்றி இருக்க வேண்டும். இதுவே நமது உடலின் எலும்பமைப்புகள் விஷயத்திலும் உண்மையாக இருக்கிறது, இவற்றை தசைகள் உறுதியாக பிடித்திருக்கின்றன. ஒலியதிர்வைக் கொண்டு நீங்கள் தகுந்த விதத்தில் ஏற்றத்தாழ்வோடு பேச முடியும், பல்வகை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த முடியும். உங்களுடைய குரலை வருத்தாமல் பெரும் கூட்டத்தார் கேட்கும் விதத்தில் பேச முடியும்.