உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 35 பக். 206-பக். 208 பாரா. 4
  • வலியுறுத்துவதற்குத் திரும்பத் திரும்ப சொல்லுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வலியுறுத்துவதற்குத் திரும்பத் திரும்ப சொல்லுதல்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • திரும்பத் திரும்பச் சொல்வதன் உபயோகமும் சைகைகளும்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • முக்கிய குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • முக்கியக் குறிப்புகளைத் தெளிவாகக் காட்டுவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • தலைப்பையும் பிரதான குறிப்புகளையும் உயர்த்திக்காண்பித்தல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 35 பக். 206-பக். 208 பாரா. 4

படிப்பு 35

வலியுறுத்துவதற்குத் திரும்பத் திரும்ப சொல்லுதல்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

சபையார் நினைவில் வைத்திருக்க வேண்டுமென நீங்கள் விரும்பும் முக்கிய குறிப்புகளை ஒரு தடவைக்கு மேல் சொல்லுங்கள்.

ஏன் முக்கியம்?

நினைவில் வைப்பதற்கு உதவுகிறது; முக்கிய கருத்துக்களை சிறப்பித்துக் காட்டவும் அவற்றை சபையார் தெளிவாக புரிந்துகொள்ளவும் திறம்பட்ட விதத்தில் திரும்பத் திரும்ப சொல்லலாம்.

திறம்பட கற்பிப்பது திரும்பத் திரும்ப சொல்வதையும் உட்படுத்துகிறது. முக்கியமான குறிப்பை ஒரு தடவைக்கு மேல் சொல்லும்போது, கூட்டத்தார் அதை ஞாபகத்தில் வைத்திருக்க முடியும். அந்தக் கருத்தை மீண்டும் சற்று வித்தியாசமான முறையில் சொன்னால், அதை அவர்களால் மிகத் தெளிவாக புரிந்துகொள்ளவும் முடியும்.

நீங்கள் சொல்வதை சபையாரால் ஞாபகப்படுத்திப் பார்க்க முடியவில்லையென்றால், அவர்களுடைய நம்பிக்கையையோ வாழ்க்கை முறையையோ உங்களுடைய வார்த்தைகள் செல்வாக்கு செலுத்தாது. நீங்கள் அதிக அழுத்தம் கொடுக்கும் குறிப்புகளைப் பற்றியே அவர்கள் ஒருவேளை நினைத்துக் கொண்டிருக்கலாம்.

நம்முடைய மகத்தான போதகராகிய யெகோவா, திரும்பத் திரும்ப சொல்லும் விஷயத்தில் சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார். இஸ்ரவேல் தேசத்தாருக்கு பத்து கட்டளைகளைக் கொடுத்தார். சீனாய் மலையில் ஒரு தேவதூதனின் வாயிலாக அந்தக் கட்டளைகளை அவர்கள் கேட்கும்படி செய்தார். பிற்பாடு மோசேயிடம் அவற்றை எழுத்து வடிவில் கொடுத்தார். (யாத். 20:1-17; 31:18; உபா. 5:22) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கு முன்பு யெகோவாவின் வழிநடத்துதலால் மோசே மீண்டும் அந்தக் கட்டளைகளை அவர்களுக்கு கூறினார். மேலும், பரிசுத்த ஆவியால் அதை பதிவும் செய்து வைத்தார், இது உபாகமம் 5:6-21-⁠ல் காணப்படுகிறது. முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் பலத்தோடும் யெகோவாவில் அன்புகூர்ந்து அவரை சேவிக்க வேண்டும் என்பதும் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளில் இருந்தது. இதுவும் மீண்டும் மீண்டும் உரைக்கப்பட்டது. (உபா. 6:5; 10:12; 11:13; 30:6) ஏன்? ஏனென்றால், இயேசு கூறியபடி, “இது முதலாம் பிரதான கற்பனை.” (மத். 22:34-38) தாம் கட்டளையிட்ட அனைத்திற்கும் கீழ்ப்படிவதன் முக்கியத்துவத்தைப் பற்றி 20 தடவைக்கும் மேல் எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் யூதா ஜனங்களுக்கு யெகோவா நினைப்பூட்டினார். (எரே. 7:23; 11:4; 12:17; 19:15; NW) தேசங்கள் “நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்” என 60 தடவைக்கும் மேல் எசேக்கியேல் மூலம் கடவுள் சொன்னார்.​—⁠எசே. 6:10; 38:23; NW.

திரும்பத் திரும்ப சொல்லும் முறையை இயேசுவின் ஊழியத்தைப் பற்றிய பதிவிலும் கவனிக்கிறோம். உதாரணமாக, நான்கு சுவிசேஷங்கள் இருக்கின்றன; அவை ஒவ்வொன்றும் முக்கிய சம்பவங்களை சற்று மாறுபட்ட கோணங்களில் கூறுகின்றன; ஒரு சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடவை மற்ற சுவிசேஷங்களில் சொல்லப்பட்டுள்ளன. ஒரே அடிப்படை குறிப்பை ஒரு தடவைக்கும் மேல், ஆனால் வித்தியாசமான விதங்களில் இயேசு போதித்தார். (மாற். 9:34-37; 10:35-45; யோவா. 13:2-17) இயேசு தமது மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஒலிவ மலையில் இருந்தபோது, “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்” என்ற இன்றியமையாத அறிவுரையை வலியுறுத்த அதைத் திரும்பத் திரும்ப சொன்னார்.​—⁠மத். 24:42; 25:13.

வெளி ஊழியத்தில். மக்களுக்கு சாட்சி கொடுக்கும்போது, நீங்கள் சொல்வதை அவர்கள் ஞாபகத்தில் வைத்திருக்கும்படி விரும்புகிறீர்கள். இந்த இலக்கை அடைய திறம்பட்ட முறையில் திரும்பத் திரும்ப உரைப்பது உதவும்.

பெரும்பாலும், ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப உரைப்பது ஒருவருடைய மனதில் அதை பதிய வைப்பதற்கு உதவும். ஆகவே, ஒரு வசனத்தை வாசித்தப் பிறகு, அதிலுள்ள முக்கிய பகுதியை சுட்டிக்காட்டி, “இதில் எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் கவனித்தீர்களா?” என கேட்பதன் மூலம் அதை வலியுறுத்திக் காட்டலாம்.

ஒரு சம்பாஷணையில் கடைசி வரிகளையும் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்தலாம். உதாரணமாக, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “நாம் இதுவரை பேசிய குறிப்புகளில் முக்கியமாக ஒன்றை நீங்கள் ஞாபகத்தில் வைப்பீர்கள் என நம்புகிறேன், அது . . .” அதற்குப் பிறகு, எளிய வார்த்தையில் அக்குறிப்பை மீண்டும் சொல்லுங்கள். அது ஒருவேளை இவ்வாறு இருக்கலாம்: “இந்தப் பூமியை பரதீஸாக மாற்றுவதே கடவுளுடைய நோக்கம். அந்த நோக்கம் நிச்சயம் நிறைவேறும்.” அல்லது இவ்வாறு இருக்கலாம்: “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என பைபிள் தெளிவாக காட்டுகிறது. நாம் அதன் முடிவை தப்பிப்பிழைக்க வேண்டுமானால், கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கும் காரியங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.” அல்லது இப்படி இருக்கலாம்: “நாம் பார்த்தபடி, குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கலாம் என்பதைக் குறித்து பைபிள் நடைமுறையான அறிவுரைகளை தருகிறது.” சில சந்தர்ப்பங்களில், ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய குறிப்புக்காக நீங்கள் வெறுமனே பைபிளிலுள்ள ஒரு மேற்கோளை மீண்டும் சொன்னால் போதும். ஆனால் இதைத் திறம்பட செய்வதற்கு முன்யோசனை தேவை.

மறுசந்திப்புகளிலும் பைபிள் படிப்புகளிலும் திரும்பத் திரும்ப உரைப்பதற்கு மறுபார்வை கேள்விகளையும் பயன்படுத்தலாம்.

பைபிள் அறிவுரையை புரிந்துகொள்வதற்கோ அதை பொருத்துவதற்கோ ஒருவருக்கு கஷ்டமாக இருந்தால், அதை பல சந்தர்ப்பங்களில் திரும்பச் சொல்வது அவசியமாக இருக்கலாம். பல்வேறு கோணங்களில் அதை எடுத்துச் சொல்லுங்கள். விலாவாரியாக விளக்க வேண்டியதில்லை, ஆனால் அந்த விஷயத்தைப் பற்றி மாணாக்கர் தொடர்ந்து சிந்திப்பதற்குத் தூண்ட வேண்டும். முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையை தமது சீஷர்கள் ஒழிப்பதற்கு திரும்பத் திரும்ப உரைக்கும் இந்த உத்தியைத்தான் இயேசு பயன்படுத்தினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.​—⁠மத். 18:1-6; 20:20-28; லூக். 22:24-27.

பேச்சுக்கள் கொடுக்கையில். மேடையிலிருந்து பேச்சுக்களை கொடுக்கும்போது வெறுமனே தகவல்களை அளிப்பது உங்கள் குறிக்கோள் அல்ல. ஆனால் கேட்போர் அதை புரிந்துகொள்ளவும் நினைவில் வைத்திருக்கவும் வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் வேண்டும் என்பதே உங்கள் விருப்பம். இதற்காக திறம்பட்ட விதத்தில் திரும்பத் திரும்ப வலியுறுத்துங்கள்.

என்றாலும், முக்கிய குறிப்புகளை வரிக்கு வரி மீண்டும் மீண்டும் சொன்னால், கேட்போரின் கவனத்தை உங்களால் கவர முடியாது. அதிக அழுத்தம் கொடுக்க வேண்டிய குறிப்புகளை கவனமாக தேர்ந்தெடுங்கள். பொதுவாக இவையே முக்கிய குறிப்புகள், இவற்றை வைத்தே உங்களுடைய பேச்சு விரிவாக்கப்படுகிறது; ஆனால் கேட்போருக்கு அதிக மதிப்பு வாய்ந்த மற்ற கருத்துக்களும் அவற்றில் உட்பட்டிருக்கலாம்.

திரும்பத் திரும்ப வலியுறுத்துவதற்கு, முதலில் முக்கிய குறிப்புகளை முன்னுரையில் சுருக்கமாக குறிப்பிடலாம். நீங்கள் விளக்கப்போகும் விஷயத்தின் சாராம்சத்தை சிறு சிறு கூற்றுகளாக குறிப்பிடலாம்; கேள்விகளாகவோ பிரச்சினைகளுக்கு பரிகாரம் அளிக்கும் சுருக்கமான உதாரணங்களாகவோ குறிப்பிடலாம். எத்தனை முக்கிய குறிப்புகள் இருக்கின்றன என்பதை குறிப்பிட்டு அவை ஒவ்வொன்றையும் இலக்கமிட்டு வரிசையாக கூறலாம். பிறகு பொருளுரையில் அந்த முக்கிய குறிப்புகளை ஒவ்வொன்றாக விளக்குங்கள். அடுத்த குறிப்பிற்குச் செல்வதற்கு முன் ஒவ்வொரு முக்கிய குறிப்பையும் மறுபடியும் சொல்லி பொருளுரையில் அவற்றை மீண்டும் வலியுறுத்தலாம். அல்லது முக்கிய குறிப்பை கடைப்பிடிப்பதோடு தொடர்புடைய ஓர் உதாரணத்தை பயன்படுத்துவதன் மூலமும் இதை செய்யலாம். முக்கிய குறிப்புகளை முடிவுரையில் மீண்டும் எடுத்துரைப்பதன் மூலம் அவற்றை மேலும் வலியுறுத்திக் காட்டலாம். வேறுபாடுகளை பயன்படுத்தி சிறப்பித்துக் காட்டுவதன் மூலம், எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம், அல்லது எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை சுருக்கமாக எடுத்துரைப்பதன் மூலம் இதைச் செய்யலாம்.

மேலே கூறப்பட்டவற்றை செய்வதோடுகூட, அனுபவமுள்ள பேச்சாளர் சபையார் ஒவ்வொருவரையும் கூர்ந்து கவனிக்கிறார். அவர்களில் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட கருத்து புரிந்துகொள்வதற்கு கடினமாக இருந்தால் அதை அவர் உணர்ந்து கொள்கிறார். அந்தக் குறிப்பு முக்கியமானதாக இருந்தால், அதை மறுபடியும் விளக்குகிறார். என்றபோதிலும், சொன்ன வார்த்தைகளையே திரும்பத் திரும்ப சொல்வது அதன் நோக்கத்தை நிறைவேற்றாது. போதிப்பதில் நிறைய விஷயங்கள் உட்பட்டுள்ளன. சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேச்சை மாற்றியமைப்பது அவசியம். திட்டமிட்டு தயாரிக்காத குறிப்புகளையும் பேச்சில் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். சபையாரின் தேவைகளுக்கேற்ப பேச்சு கொடுப்பது நீங்கள் எவ்வளவு திறம்பட்ட போதகர் என்பதை தீர்மானிக்கும்.

எப்போது சொல்வது

  • முக்கிய குறிப்பை சொன்னவுடன் அல்லது முக்கிய கருத்தை முழுமையாக விளக்கிய பின்பு.

  • உங்களுடைய உரையாடலின் அல்லது பேச்சின் முடிவில்.

  • சில முக்கிய குறிப்புகள் கேட்போருக்கு புரிந்துகொள்ள கடினமாக இருக்கும்போது.

  • மறுசந்திப்புகள் மற்றும் பைபிள் படிப்புகளின்போது பல சந்தர்ப்பங்களில், ஒருவேளை சில நாட்களுக்கு அல்லது வாரங்களுக்குப் பிறகு.

பயிற்சிகள்: (1) வெளி ஊழியத்தில் ஒருவரிடம் முதல் தடவையாக பேசிய பின்பு, நீங்கள் கலந்தாலோசித்த குறிப்புகளில் அவர் நினைவில் வைத்திருக்க வேண்டுமென நீங்கள் விரும்புகிற ஒரேவொரு முக்கியமான குறிப்பை மட்டும் மீண்டும் குறிப்பிடுங்கள். (2) மறுசந்திப்பின் முடிவில், ஆர்வம் காட்டிய அந்த நபர் நினைவில் வைத்திருப்பதற்கு ஓரிரு முக்கிய குறிப்புகளை மறுபடியும் சொல்லுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்