உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 36 பக். 209-பக். 211 பாரா. 1
  • மையப்பொருளை விரிவாக்குதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மையப்பொருளை விரிவாக்குதல்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • தலைப்பையும் பிரதான குறிப்புகளையும் உயர்த்திக்காண்பித்தல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • குறிப்புத்தாளை தயாரித்தல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • முக்கியக் குறிப்புகளைத் தெளிவாகக் காட்டுவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • ஒரு குறிப்புத்தாளை உண்டுபண்ணுதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 36 பக். 209-பக். 211 பாரா. 1

படிப்பு 36

மையப்பொருளை விரிவாக்குதல்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

உங்களுடைய மையப்பொருளை குறிப்பிட்டு, அதை உங்களுடைய பேச்சு முழுவதும் பல்வேறு வழிகளில் விரிவாக்குங்கள்.

ஏன் முக்கியம்?

அது உங்களுடைய பேச்சை ஒருங்கிணைக்கிறது, மேலும் நீங்கள் சொல்வதை சபையார் புரிந்து கொள்வதற்கும் ஞாபகத்தில் வைப்பதற்கும் உதவுகிறது.

மையப்பொருளை வைத்திருப்பதன் மதிப்பை அனுபவமிக்க பேச்சாளர்கள் அறிந்திருக்கிறார்கள். ஒரு பேச்சை தயாரிக்கும்போது, குறிப்பிட்ட தகவல் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தவும் அதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கவும் அது அவர்களுக்கு துணைபுரிகிறது. இதனால் மேலோட்டமாக பல குறிப்புகளை சொல்லிக்கொண்டு போவதற்குப் பதிலாக, சபையாருக்கு மிகவும் பயன்தரும் விதத்தில் தகவலை படிப்படியாக விளக்க முடிகிறது. முக்கிய குறிப்புகள் ஒவ்வொன்றும் மையப்பொருளோடு நேரடித் தொடர்புடையதாகவும் அதை விளக்குவதற்கு உதவியாகவும் இருக்கும்போது, சபையாரும் அந்தக் குறிப்புகளை ஞாபகத்தில் வைத்து அதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள முடிகிறது.

மையப்பொருள் (theme) என்பது நீங்கள் பேசும் பொருள் (subject) என்று சொல்வது சரிதான்; என்றாலும், அந்தப் பொருளை எந்தக் கோணத்தில் விரிவாக்குகிறீர்களோ அதையே மையப்பொருளாக பாவிக்கும்போது உங்களுடைய பேச்சின் தரம் உயருவதை காண்பீர்கள். ராஜ்யம், பைபிள், உயிர்த்தெழுதல் ஆகியவை பொதுவான பொருள்கள். இந்தப் பொருள்களை அடிப்படையாக கொண்டு பல்வகை மையப்பொருள்களை விரிவாக்கலாம். இதோ சில எடுத்துக்காட்டுகள்: “ராஜ்யம் மெய்யான ஓர் அரசாங்கம்,” “கடவுளுடைய ராஜ்யம் பூமியை பரதீஸாக்கும்,” “பைபிள் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டது,” “பைபிள் நம்முடைய நாளுக்கு நடைமுறை வழிகாட்டி,” “உயிர்த்தெழுதல் அன்பானவர்களை இழந்தவர்களுக்கு நம்பிக்கை தருகிறது,” “உயிர்த்தெழுதல் நம்பிக்கை துன்புறுத்துதலில் உறுதியாக நிலைத்திருக்க உதவுகிறது.” இந்த மையப்பொருள்கள் அனைத்தையும் வெவ்வேறு கோணங்களில் விரிவாக்க வேண்டும்.

பைபிளின் பிரதான மையப்பொருளுக்கு இசைவாக, இயேசு தம்முடைய பூமிக்குரிய ஊழிய காலத்தில் செய்த பிரசங்க வேலையும் “பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்ற மையப்பொருளை சிறப்பித்துக் காட்டியது. (மத். 4:17) அந்த மையப்பொருள் எவ்வாறு விரிவாக்கப்பட்டது? நான்கு சுவிசேஷங்களில் 110 தடவைக்கும் மேல் அந்த ராஜ்யத்தைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஆனால் “ராஜ்யம்” என்ற பதத்தை திரும்பத் திரும்ப சொல்வதோடு இயேசு நிறுத்திக் கொள்ளவில்லை. தாம் கற்பித்தவற்றின் மூலமும் நடப்பித்த அற்புதங்களின் மூலமும் தாமே கடவுளுடைய குமாரன், யெகோவாவிடமிருந்து ராஜ்யத்தை பெறப்போகும் மேசியா என்பதை தெளிவுபடுத்தினார். மற்றவர்கள் அந்த ராஜ்யத்தில் ஒரு பாகம் வகிப்பதற்கு தம் மூலமாகவே வழி திறக்கப்படுகிறது என்பதையும் இயேசு காண்பித்தார். அந்த சிலாக்கியத்தை பெறுகிறவர்கள் காண்பிக்க வேண்டிய பண்புகளையும் தெரியப்படுத்தினார். தம்முடைய போதனைகள் மற்றும் வல்லமைமிக்க செயல்கள் வாயிலாக, கடவுளுடைய ராஜ்யம் மக்களுடைய வாழ்க்கைக்கு எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை தெளிவாக்கினார்; கடவுளுடைய ஆவியால் பேய்களை விரட்டியதன் மூலம் தமக்கு செவிகொடுத்தவர்கள் மத்தியில் ‘தேவனுடைய ராஜ்யம் வந்திருக்கிறது’ என்பதை சுட்டிக்காட்டினார். (லூக். 11:20) அந்த ராஜ்யத்தைக் குறித்தே சாட்சி பகரும்படி இயேசு தம்மை பின்பற்றியவர்களுக்குப் பொறுப்பளித்தார்.​—⁠மத். 10:7; 24:14.

பொருத்தமான மையப்பொருளை பயன்படுத்துதல். பைபிள் விரிவாக்குகிற அளவுக்கு ஒரு மையப்பொருளை நீங்கள் விரிவாக்க வேண்டியதில்லை, ஆனால் பொருத்தமான மையப்பொருளை வைத்திருப்பது எவ்விதத்திலும் முக்கியத்துவம் குறைந்தது அல்ல.

மையப்பொருளை நீங்களே தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருந்தால், உங்களுடைய பேச்சின் குறிக்கோளைப் பற்றி முதலில் சிந்தித்துப் பாருங்கள். அதன் பிறகு உங்களுடைய குறிப்புத்தாளில் எழுதிக்கொள்வதற்கு முக்கிய குறிப்புகளை தேர்ந்தெடுக்கையில், நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் மையப்பொருளுக்கு அவை உண்மையிலேயே ஆதரவாக இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மையப்பொருள் கொடுக்கப்பட்டால், உங்களுடைய தகவலை விரிவாக்க வேண்டிய விதத்தைக் குறித்து அது எதை சுட்டிக்காட்டுகிறது என்பதை கவனமாக ஆராயுங்கள். இப்படிப்பட்ட மையப்பொருளின் மதிப்பையும் வலிமையையும் தெரிந்துகொள்வதற்கு கொஞ்சம் முயற்சி தேவைப்படலாம். மையப்பொருளை விரிவாக்குவதற்கு நீங்கள் தகவல்களை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தால், மையப்பொருளை தெளிவாக காட்டும் தகவல்களையே கவனமாக தேர்ந்தெடுங்கள். மறுபட்சத்தில், உங்களுக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டாலும், அவற்றை மையப்பொருளுக்கு இசைவாக எப்படி பயன்படுத்துவது என்பதை ஆராய வேண்டும். அந்தத் தகவல்கள் உங்களுடைய சபையாருக்கு ஏன் முக்கியம், அதை வழங்குவதில் உங்களுடைய குறிக்கோள் என்ன என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது, உங்களுடைய பேச்சில் எதை வலியுறுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்க உதவும்.

மையப்பொருளை எப்படி வலியுறுத்துவது. மையப்பொருளை தகுந்த விதத்தில் வலியுறுத்துவதற்கு, தகவல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒழுங்கமைக்கையில் அஸ்திவாரம் போட வேண்டும். மையப்பொருளுக்குப் பொருத்தமானவற்றையே பயன்படுத்தி குறிப்புத்தாளை சிறந்த முறையில் தயாரிக்கும் முறைகளைப் பின்பற்றினால், கிட்டத்தட்ட எந்த முயற்சியுமின்றி தானாகவே அந்த மையப்பொருளை வலியுறுத்துவீர்கள்.

மையப்பொருளை வலியுறுத்துவதற்கு திரும்பத் திரும்ப சொல்வது உதவலாம். உதாரணத்திற்கு காதல் பாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் பாடல் முழுவதும் பாடகர் மையப்பொருளை இழையோட விடுகிறார், அதாவது தான் விரும்பும் நபர் மீது கொண்டுள்ள காதலை தெரிவிக்கிறார். அந்த மையப்பொருளை அவர் பல்வேறு விதங்களில் திரும்பத் திரும்ப சொல்கிறார். “காதல்” என்ற வார்த்தைக்கு பதிலாக, அதே அர்த்தமுள்ள மற்ற வார்த்தைகளையோ உருவகங்களையோ கவிதை நடைகளையோ வேறு சில உதாரணங்களையோ அவர் பயன்படுத்தலாம். இருந்தாலும், ஒரு மையப்பொருளின் அடிப்படையிலேயே அந்தப் பாடல் அமைகிறது. இது போலவேதான் ஒரு பேச்சின் மையப்பொருளும் இருக்க வேண்டும். அந்தப் பாடல் முழுவதிலும் காதல் என்ற கருத்து மீண்டும் மீண்டும் வருவதைப் போலவே, பேச்சு முழுவதிலும் மையப்பொருளின் முக்கிய வார்த்தைகளை நீங்கள் திரும்பத் திரும்ப சொல்லலாம். அந்த முக்கிய வார்த்தைகளுக்கு பதிலாக, அதே அர்த்தமுள்ள வேறு பதங்களையோ சொற்றொடர்களையோ நீங்கள் பயன்படுத்தலாம். இப்படிப்பட்ட முறைகளைப் பயன்படுத்துவது அந்த மையப்பொருளை முக்கிய கருத்தாக சபையார் தங்களுடைய மனதில் வைப்பதற்கு உதவும்.

இந்த நியமங்கள் மேடைப் பேச்சுக்களுக்கு மட்டுமல்ல, வெளி ஊழியத்திற்கும் பொருந்தும். மையப்பொருள் மேலோங்கி இருந்தால், ஓரளவு சுருக்கமான உரையாடல் நன்கு நினைவில் நிற்கும். பைபிள் படிப்பில் மையப்பொருளை வலியுறுத்திக் காட்டினால், கொடுக்கப்படும் போதனை உடனடியாக மனதிற்கு வரும். பொருத்தமான மையப்பொருளை தேர்ந்தெடுப்பதற்கும் விரிவாக்குவதற்கும் நீங்கள் எடுக்கும் முயற்சி, ஒரு பேச்சாளராகவும் கடவுளுடைய வார்த்தையை கற்பிப்பவராகவும் உங்களுடைய திறமையை நன்கு மெருகூட்டும்.

முக்கிய நூலின் பிரதான மையப்பொருள்

நாம் எவ்வாறு மையப்பொருளை பயன்படுத்தலாமென புரிந்துகொள்வதற்கு, யெகோவா தேவன் பைபிளை எழுதுவதற்கு மனித எழுத்தாளர்களை உபயோகித்தபோதும் எவ்வாறு அதன் 66 புத்தகங்களிலும் பிரதான மையப்பொருளை இழையோட செய்தார் என்பதை ஆராய்வது உதவியாக இருக்கும். மனிதரை ஆட்சிசெய்ய யெகோவாவுக்கு இருக்கும் உரிமை நிரூபிக்கப்படுவதும், அவருடைய ராஜ்யத்தின் மூலம் அவருடைய அன்பான நோக்கம் நிறைவேற்றப்படுவதுமே அந்த மையப்பொருள்.

ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்கள் இந்த மையப்பொருளை வெளிப்படுத்துகின்றன, பிறகு அதன் அம்சங்கள் முழு பைபிளிலும் விரிவாக்கப்படுகின்றன. 7,000 தடவைக்கும் மேல் மீண்டும் மீண்டும் கடவுளுடைய பெயரின் மீது கவனம் ஈர்க்கப்படுகிறது. ஆட்சி செலுத்த யெகோவாவுக்கு இருக்கும் உரிமையை படைப்பின் பதிவு வெளிப்படுத்துகிறது. கீழ்ப்படியாமையின் பயங்கர விளைவுகளோடுகூட, கடவுளுடைய ஆட்சியுரிமை பற்றி எழுப்பப்பட்ட சவாலையும் அறிவிக்கிறது. யெகோவாவின் உன்னத பண்புகளாகிய அன்பு, ஞானம், நீதி, சர்வ வல்லமை ஆகியவை சிருஷ்டிகளோடு அவர் கொண்ட செயல் தொடர்புகளில் காட்டப்படுகின்றன. கடவுளுக்கு கீழ்ப்படிவதால் வரும் நன்மைகளும் கீழ்ப்படியாததால் வரும் தீமைகளும் எண்ணற்ற உதாரணங்களின் வாயிலாக காட்டப்பட்டுள்ளன. பாவத்தையும் மரணத்தையும் நீக்குவதற்கு இயேசு கிறிஸ்துவின் மூலம் யெகோவா செய்துள்ள ஏற்பாடு விளக்கப்பட்டுள்ளது, மெய்ப்பித்தும் காட்டப்பட்டுள்ளது. படைப்பின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு யெகோவாவுக்கு இருக்கும் உரிமையை ஏற்க மறுக்கும் பொல்லாத ஆவிகளையும் மனிதர்களையும் அழிக்கப்போகும் பரலோக அரசாங்கத்தைப் பற்றிய விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரே மெய்க் கடவுளையே நேசித்து வணங்குகிற, ஒருவருக்கொருவர் அன்பு காட்டுகிற மக்களால் நிரம்பிய பரதீஸாக இந்தப் பூமி மாற வேண்டும் என்ற யெகோவாவின் நோக்கத்தை அந்த ராஜ்யம் நிறைவேற்றி முடிக்கும் என்பது தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது.

எப்படி செய்வது

  • பேச்சை தயாரிக்கும்போது, மையப்பொருளை விரிவாக்குவதற்கு உண்மையிலேயே உதவும் முக்கிய குறிப்புகளையும் உப குறிப்புகளையும் தேர்ந்தெடுங்கள்.

  • உங்களுடைய பேச்சை பேசிப் பழகும்போது, எங்கே, எப்படி மையப்பொருளை வலியுறுத்துவீர்கள் என்பதை சிந்தியுங்கள். இதை நீங்கள் குறிப்புத்தாளிலும் குறித்துக்கொள்ளலாம்.

  • பேச்சு கொடுக்கும்போது, மையப்பொருளிலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வார்த்தைகளை அல்லது கருத்துக்களை அவ்வப்பொழுது திரும்பத் திரும்ப சொல்லுங்கள்.

பயிற்சி: வெளி ஊழியத்திற்காக, சமீபத்தில் வெளிவந்த காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகையில் உள்ள குறிப்பிட்ட ஒரு கட்டுரைக்கு இசைவாக ஒரு மையப்பொருளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய அறிமுகத்தில் அதன்மீது ஆர்வத்தைத் தூண்டி, உரையாடலின் போது ஓரிரண்டு குறிப்புகளோடு அதை விரிவாக்குங்கள், பின்பு முடிவுரையில் அதன் மதிப்பை சிறப்பித்துக் காட்டுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்