உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 38 பக். 215-பக். 219 பாரா. 3
  • ஆர்வத்தைத் தூண்டும் முன்னுரை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆர்வத்தைத் தூண்டும் முன்னுரை
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • பலன்தரத்தக்க முன்னுரைகள்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • பொருத்தமான முன்னுரை
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • ஏசாயா புத்தகத்துக்கு அறிமுகம்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • அறிவை வளர்க்கும் பொருள், தெளிவாக அளிக்கப்படுதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 38 பக். 215-பக். 219 பாரா. 3

படிப்பு 38

ஆர்வத்தைத் தூண்டும் முன்னுரை

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

கேட்போரின் கவனத்தைக் கவருகிற, உங்களுடைய குறிக்கோளை அடைய நேரடியாக உதவுகிற பொருத்தமான ஒன்றை முதல் வரிகளில் சொல்லுங்கள்.

ஏன் முக்கியம்?

சிலர் செவிகொடுத்துக் கேட்பார்களா என்பதையும், எந்தளவுக்கு கூர்ந்து கவனிப்பார்கள் என்பதையும் உங்களுடைய முன்னுரை தீர்மானிக்கலாம்.

எந்தவொரு பேச்சிலும் முன்னுரை முக்கிய பாகம் வகிக்கிறது. கேட்போரின் ஆர்வத்தைத் தூண்டினால், அடுத்து சொல்வதை கூர்ந்து கவனிப்பதற்கு மனம்சாய்வார்கள். வெளி ஊழியத்தில், உங்களுடைய முன்னுரை ஆர்வத்தைத் தூண்ட தவறினால், நீங்கள் ஒருவேளை தொடர்ந்து பேச முடியாமல் போகலாம். நீங்கள் ராஜ்ய மன்றத்தில் பேச்சு கொடுக்கும்போது சபையாருடைய ஆர்வத்தை ஈர்க்கவில்லையென்றால், அவர்கள் வெளிநடப்பு செய்ய மாட்டார்கள், ஆனால் வேறு காரியங்களை சிந்திக்க ஆரம்பித்து விடலாம்.

முன்னுரையை தயாரிக்கையில் பின்வரும் குறிக்கோள்களை மனதில் கொள்ளுங்கள்: (1) கேட்போரின் கவனத்தைக் கவருதல், (2) பொருளைத் தெளிவாக குறிப்பிடுதல் (3) கேட்போருக்கு இந்தப் பொருள் ஏன் முக்கியம் என்பதைக் காட்டுதல். சில சந்தர்ப்பங்களில், இந்த மூன்று குறிக்கோள்களையும் ஒரே சமயத்தில் அடையலாம். இருந்தாலும், சில சமயங்களில் இந்தக் குறிக்கோள்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே கவனம் செலுத்தலாம், வரிசைக் கிரமமும் மாறுபடலாம்.

கேட்போரின் கவனத்தைக் கவருவது எப்படி. பேச்சைக் கேட்பதற்கு ஜனங்கள் வந்திருப்பதால் பேசப்படும் விஷயத்தை கவனம் சிதறாமல் கூர்ந்து கவனிப்பார்கள் என சொல்லிவிட முடியாது. ஏன்? வாழ்க்கையிலுள்ள அநேக காரியங்கள் அவர்களுடைய கவனத்தைச் சிதறடிக்கலாம். வீட்டுப் பிரச்சினையைப் பற்றியோ வேறெதாவது கவலையைப் பற்றியோ அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். கேட்போரின் கவனத்தைக் கவர்ந்து அதை கடைசி வரை தக்க வைப்பதே ஒரு பேச்சாளராக நீங்கள் எதிர்ப்படும் சவால். இதை சமாளிப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன.

இதுவரை கொடுக்கப்பட்ட பிரசங்கங்களில் மிகவும் புகழ்வாய்ந்த ஒன்று மலைப் பிரசங்கம். இயேசு அதை எப்படி ஆரம்பித்தார்? லூக்காவின் பதிவு காட்டுகிறபடி, “தரித்திரராகிய நீங்கள் சந்தோஷமுள்ளவர்கள்; . . . இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் சந்தோஷமுள்ளவர்கள்; . . . இப்பொழுது அழுகிற நீங்கள் சந்தோஷமுள்ளவர்கள்; . . . ஜனங்கள் உங்களைப் பகை[க்கும்போது] . . . சந்தோஷமுள்ளவர்களாய் இருப்பீர்கள்” என அவர் கூறினார். (லூக். 6:20-22, NW) அது ஏன் ஆர்வத்தைத் தூண்டியது? தம்முடைய பிரசங்கத்தை செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எதிர்ப்படும் முக்கியமான பிரச்சினைகள் சிலவற்றை இயேசு சில வார்த்தைகளில் குறிப்பிட்டார். பிற்பாடு அந்தப் பிரச்சினைகளைப் பற்றியே சொல்லிக்கொண்டு போகாமல், அவற்றின் மத்தியிலும் சந்தோஷத்தோடு இருக்கலாம் என்பதை காட்டினார்; கூட்டத்தார் தொடர்ந்து கேட்க விரும்பும் விதத்தில் பேசினார்.

ஆர்வத்தைத் தூண்டுவதற்குக் கேள்விகளைத் திறம்பட பயன்படுத்தலாம், ஆனால் அவை பொருத்தமானவையாக இருக்க வேண்டும். சபையார் இதற்கு முன்பு கேட்ட விஷயங்களையே பேசப் போகிறீர்கள் என்பதை உங்களுடைய கேள்விகள் சுட்டிக்காட்டினால், கேட்போருடைய ஆர்வம் சீக்கிரத்தில் தணிந்துவிடலாம். கேட்போருக்கு தர்மசங்கடத்தை உண்டாக்குகிற, அல்லது அவர்களுடைய மனதைப் புண்படுத்துகிற கேள்விகளைக் கேட்காதீர்கள். மாறாக, அவர்களுடைய சிந்தையைத் தூண்டுகிற கேள்விகளைக் கேளுங்கள். ஒவ்வொரு கேள்வியின் முடிவிலும் சற்று நிறுத்துங்கள், அப்போதுதான் அதற்குரிய பதிலை மனதில் சொல்லிக்கொள்ள அவர்களுக்கு நேரம் இருக்கும். உங்களோடு மனதில் உரையாடுவது போல் அவர்கள் உணர்ந்தால், அவர்களுடைய கவனத்தை நீங்கள் ஈர்த்துப் பிடித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

கவனத்தை ஈர்ப்பதற்கு மற்றொரு சிறந்த வழி நிஜ வாழ்க்கை அனுபவத்தை பயன்படுத்துவதாகும். ஆனால் அந்த அனுபவம் சபையாரில் எவரையாவது தர்மசங்கடப்பட வைத்தால் அது உங்களுடைய பேச்சின் நோக்கத்தைக் குலைத்துவிடலாம். சபையார் நீங்கள் சொல்லும் அனுபவத்தை மட்டும் ஞாபகத்தில் வைத்து அது புகட்டும் பாடத்தை மறந்துவிட்டால் உங்களுடைய இலக்கை நீங்கள் அடையவில்லை என்றுதான் அர்த்தம். முன்னுரையில் ஓர் அனுபவத்தைக் குறிப்பிடும்போது, பேச்சின் பொருளுரையில் நீங்கள் சொல்லும் சில முக்கிய அம்சங்களுக்கு அது அஸ்திவாரமாக அமைய வேண்டும். அனுபவத்தை தத்ரூபமாக விளக்குவதற்கு சில தகவல்கள் தேவைப்படுகிற போதிலும், அனுபவத்தை தேவையில்லாமல் இழுத்துக்கொண்டே போகாமலிருப்பதற்கு கவனமாயிருங்கள்.

பேச்சாளர் சிலர் தங்கள் பேச்சை சமீபத்திய செய்தியோடு, உள்ளூர் செய்தித்தாள் குறிப்போடு அல்லது அங்கீகாரம் பெற்ற ஒரு நபரின் அறிக்கையோடு ஆரம்பிக்கின்றனர். பொருளுக்கு ஏற்றதாகவும் கேட்போருக்குப் பொருத்தமாகவும் இருந்தால் இவையும் பயனுள்ளவையாக இருக்கும்.

உங்கள் பேச்சு தொடர்பேச்சின் பாகமாகவோ ஊழியக்கூட்டத்தின் பாகமாகவோ இருந்தால், பொதுவாக உங்களுடைய முன்னுரையை சுருக்கமாகவும் நேரடியாகவும் அமைப்பது நல்லது. நீங்கள் பொதுப் பேச்சு கொடுப்பதாக இருந்தால் முன்னுரைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை மிஞ்சிவிடாதவாறு கவனமாயிருங்கள். ஏனென்றால் கேட்போருக்கு மிகவும் பிரயோஜனமான தகவல்கள் பேச்சின் பொருளுரையில் பொதிந்திருக்கின்றன.

சில சந்தர்ப்பங்களில், சந்தேகவாதிகளிடமோ பகைமையுணர்வு கொண்டவர்களிடமோ நீங்கள் பேசலாம். அவர்களுடைய கவனத்தை எவ்வாறு கவரலாம்? ‘பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்தவர்’ என வர்ணிக்கப்படும் ஆரம்ப கால கிறிஸ்தவராகிய ஸ்தேவான் யூத நியாய சங்கத்திற்கு பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டார். அங்கே கிறிஸ்தவத்திற்கு ஆதரவாக நாவன்மையுடன் பேசினார். அவர் எப்படி பேச்சை ஆரம்பித்தார்? இரு சாராருக்கும் பொதுவான ஒன்றை மேற்கோள் காண்பித்து கண்ணியமாக பேசினார். ‘சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு மகிமையின் தேவன் தரிசனமானார்’ என்றார். (அப். 6:3; 7:2) அத்தேனேயிலுள்ள மார்ஸ் மேடையில், மிகவும் வித்தியாசமான கூட்டத்தாருக்கு முன்பு பேசுகையில் அப்போஸ்தலன் பவுல் அதற்கேற்ப தனது முன்னுரையை அமைத்துக்கொண்டார். “அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதா பக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்” என கூறினார். (அப். 17:22) திறம்பட்ட முன்னுரைகள் பயன்படுத்தப்பட்டதால், மேற்கூறப்பட்ட இருதரப்பினரும் இன்னுமதிகம் கேட்பதற்கு ஆர்வமுள்ளவர்களாய் இருந்தார்கள்.

நீங்களும் வெளி ஊழியத்தில் ஈடுபடுகையில் இவ்வாறு ஜனங்களின் கவனத்தை ஈர்ப்பது அவசியம். முன்னேற்பாடு இல்லாமல் திடீரென வீட்டுக்காரரை சந்தித்தால், அவர் மற்ற காரியங்களில் அதிக வேலையாக இருக்கலாம். உலகின் சில பகுதிகளில், முன்பின் தெரியாதவர்கள் வீட்டிற்கு வந்து பேசும்போது நேரடியாக விஷயத்திற்கு வரும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஆனால் வேறுசில இடங்களிலோ நீங்கள் சந்திப்பதற்குரிய காரணத்தை அறிவிப்பதற்கு முன் சில பாரம்பரிய முறைகளைப் பின்பற்ற வேண்டும்.​—⁠லூக். 10:5.

இந்த இரு விஷயத்திலும், உள்ளப்பூர்வமான சிநேகப்பான்மையை காண்பிப்பது உரையாடலுக்கு ஏற்ற ஒரு சூழலை உருவாக்கலாம். ஒரு நபருடைய மனதிலுள்ள விஷயத்தோடு நேரடியாக தொடர்புடைய ஒன்றை சொல்லி பேச்சை ஆரம்பிப்பது பெரும்பாலும் பிரயோஜனமுள்ளது. சரி, எதைப் பயன்படுத்துவது என்பதை எப்படி தீர்மானிப்பது? நீங்கள் ஒருவரை சந்திக்க சென்றபோது, அவர் ஏதாவது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாரா? ஒருவேளை அவர் பண்ணை வேலையிலோ வீட்டிலுள்ள தோட்டத்தை பராமரிப்பதிலோ வாகனத்தைப் பழுதுபார்ப்பதிலோ சமையல் செய்வதிலோ சலவை செய்வதிலோ அல்லது பிள்ளைகளை கவனிப்பதிலோ ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம். அவர் செய்தித்தாளிலோ தெருவிலோ ஏதாவது ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறாரா? மீன்பிடித்தல், விளையாட்டுகள், இசை, பயணம், கம்ப்யூட்டர்கள் அல்லது வேறு ஏதாவது காரியங்களில் அதிக ஆர்வமுள்ளவர் என்பதை அவருடைய சுற்றுப்புற சூழ்நிலைகள் காட்டுகின்றனவா? சமீபத்தில் ரேடியோவில் கேட்ட அல்லது டிவி-யில் பார்த்த விஷயங்களில் பொதுவாக மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த விஷயங்களில் ஏதாவதொரு கேள்வி கேட்பது அல்லது சுருக்கமான குறிப்பு சொல்வது சிநேகப்பான்மையான உரையாடலுக்கு வழிவகுக்கலாம்.

சீகாரிலுள்ள கிணற்றருகே ஒரு சமாரிய பெண்ணிடம் இயேசு பேசியது, சாட்சி கொடுக்க உரையாடலை துவங்குவது எப்படி என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.​—⁠யோவா. 4:5-26.

உங்களுடைய முன்னுரையை கவனமாக தயாரிப்பது அவசியம், முக்கியமாக உங்களுடைய சபை அடிக்கடி ஊழியம் செய்யும் பிராந்தியமாக இருந்தால் அவ்வாறு செய்வது அவசியம். இல்லாவிட்டால் உங்களால் சாட்சி கொடுக்க முடியாமல் போய்விடலாம்.

பேசும் பொருளை குறிப்பிடுங்கள். கிறிஸ்தவ சபையில், பொதுவாக சேர்மன் அல்லது முந்தைய பேச்சைக் கொடுப்பவர் உங்களுடைய பேச்சின் தலைப்பை அறிவித்து உங்களை அறிமுகப்படுத்துவார். இருந்தாலும், முன்னுரையில் உங்களுடைய பேச்சின் பொருளை சபையாருக்கு நினைப்பூட்டுவது பயனுள்ளதாக இருக்கலாம். பேச்சின் மையப்பொருளை அப்படியே சொல்லலாம் அல்லது சற்று மாற்றியும் சொல்லலாம். எப்படி செய்தாலும், உங்களுடைய பேச்சில் மையப்பொருளை படிப்படியாக தெளிவாக்க வேண்டும். முன்னுரையில் ஏதாவதொரு முறையில் உங்களுடைய பொருளின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும்.

பிரசங்கிப்பதற்காக சீஷர்களை அனுப்பியபோது, அவர்கள் அறிவிக்க வேண்டிய செய்தியை இயேசு தெளிவாக குறிப்பிட்டார். “போகையில், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்” என்றார். (மத். 10:7) நம்முடைய காலத்தைக் குறித்து இயேசு இவ்வாறு கூறினார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் . . . பிரசங்கிக்கப்படும்.” (மத். 24:14) ‘திருவசனத்தை பிரசங்கம் பண்ணும்படி,’ அதாவது சாட்சி கொடுக்கையில் பைபிளை ஆதாரமாக வைத்துப் பேசும்படி நாம் உந்துவிக்கப்படுகிறோம். (2 தீ. 4:2) என்றாலும், பைபிளைத் திறப்பதற்கு முன்னர் அல்லது ராஜ்யத்தின் மீது கவனத்தைத் திருப்புவதற்கு முன்னர் நடப்பு விஷயங்களைப் பற்றி ஏதாவது சொல்வது பெரும்பாலும் அவசியம். குற்றச்செயல், வேலையில்லா திண்டாட்டம், அநீதி, போர், இளைஞருக்கு எவ்வாறு உதவி செய்வது, நோய் அல்லது மரணம் போன்றவற்றில் எவற்றை பற்றியாவது குறிப்பிடலாம். ஆனால் எதிர்மறையான விஷயங்களைப் பற்றியே நெடுநேரம் பேசிக் கொண்டிருக்காதீர்கள்; உங்களுடைய செய்தி நம்பிக்கையூட்டும் செய்தி. உரையாடலை கடவுளுடைய வார்த்தையின் மீதும் ராஜ்ய நம்பிக்கையின் மீதும் திருப்புவதற்கு முயலுங்கள்.

கேட்போருக்கு இந்தப் பொருள் ஏன் முக்கியம் என்பதை காண்பியுங்கள். நீங்கள் சபையில் பேசினால், பொதுவாக சபையார் ஆர்வத்தோடு கேட்பார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஓரளவு இருக்கலாம். ஆனால் ஒருவர் தனக்கு மிகவும் வேண்டிய விஷயத்திற்கு எந்தளவு கூர்ந்து செவிசாய்ப்பாரோ அந்தளவுக்கு அவர்கள் செவிசாய்ப்பார்களா? தாங்கள் கேட்பது தங்களுடைய வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்கிறது என அவர்கள் நினைப்பதாலும் அதற்காக ஏதாவது நடவடிக்கை எடுக்கும்படி அவர்களுடைய ஆர்வத்தை நீங்கள் தூண்டுவதாலும் கவனம் செலுத்துவார்களா? கேட்போரின் சூழ்நிலைகள், அக்கறைகள், மனப்பான்மைகள் ஆகியவற்றை கவனமாக மனதில் வைத்து உங்களுடைய பேச்சை தயாரித்திருந்தால் மட்டுமே செவிசாய்ப்பார்கள். நீங்கள் அப்படி செய்தால், அதை சுட்டிக்காட்டும் ஒன்றை முன்னுரையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் மேடையில் பேசினாலும்சரி ஒரு நபரிடத்தில் சாட்சி கொடுத்தாலும்சரி, பொருளின் மீது ஆர்வத்தைத் தூண்டுவதற்கு மிகச் சிறந்த வழிகளில் ஒன்று கேட்போரையும் உட்படுத்துவதாகும். அவர்களுடைய பிரச்சினைகள், தேவைகள் அல்லது மனதிலுள்ள கேள்விகள் எவ்வாறு நீங்கள் பேசும் பொருளோடு சம்பந்தப்பட்டுள்ளன என்பதைக் காட்டுங்கள். ஒரு பொருளைப் பற்றிய பொதுவான அம்சங்களை மட்டுமல்ல அந்த விஷயத்தின் திட்டவட்டமான அம்சங்களையும் நீங்கள் பேசப் போகிறீர்கள் என்பதை தெளிவுபடுத்தினால், அவர்கள் அதிக உன்னிப்பாக கேட்பார்கள். இதற்கு நீங்கள் நன்கு தயாரிக்க வேண்டும்.

கொடுக்கும் விதம். முன்னுரையில் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம், ஆனால் அதை எப்படி சொல்கிறீர்கள் என்பதும் ஆர்வத்தைத் தூண்டலாம். ஆகவே, ஒரு பேச்சை தயாரிக்கும்போது என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதற்கு மட்டுமல்ல, எப்படி சொல்லப்போகிறீர்கள் என்பதற்கும் கவனம் செலுத்த வேண்டும்.

உங்களுடைய குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு தகுந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் முக்கியம்; ஆகவே முதல் இரண்டொரு வாக்கியங்களை கவனமாக தயாரிப்பது உதவியாக இருக்கும். பொதுவாக, சுருக்கமான, எளிய வாக்கியங்களே சாலச் சிறந்தவை. சபையில் கொடுக்கும் பேச்சிற்கு, நீங்கள் அவற்றை குறிப்புத்தாளில் எழுதி வைத்துக்கொள்ளலாம் அல்லது மனப்பாடம் செய்து கொள்ளலாம்; அப்போதுதான் ஆரம்ப வார்த்தைகளிலேயே சபையாருடைய மனதைக் கவர முடியும். அவசரப்படாமல் திறம்பட்ட முன்னுரையை வழங்குவது முடிவுவரை பதட்டமின்றி நிதானமாக பேச்சு கொடுப்பதற்கு உதவும்.

எப்போது தயாரிப்பது. இந்த விஷயத்தின் பேரில் கருத்துக்கள் மாறுபடுகின்றன. முன்னுரையிலிருந்து பேச்சை தயாரிக்க வேண்டும் என அனுபவமிக்க பேச்சாளர்கள் சிலர் கருதுகிறார்கள். பொதுப் பேச்சு பற்றி ஆய்வு செய்திருக்கும் வேறு சிலரோ பேச்சின் பொருளுரையை தயாரித்த பிறகு முன்னுரையை தயாரிக்க வேண்டும் என அபிப்பிராயம் தெரிவிக்கிறார்கள்.

பொருத்தமான முன்னுரையை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, உங்களுடைய பேச்சின் பொருள் என்ன, என்ன முக்கிய குறிப்புகளை விளக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்பதையெல்லாம் நீங்கள் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். ஆனால் பிரசுரிக்கப்பட்ட குறிப்புத்தாளை உபயோகித்து பேச்சை தயாரிக்கிறீர்கள் என்றால் அப்போது என்ன செய்வீர்கள்? குறிப்புத்தாளை வாசித்தப் பிறகு, முன்னுரைக்கு ஏதாவதொரு ஐடியா உங்களுடைய மனதில் உதித்தால் அதை உடனே எழுதி வைத்துக்கொள்வதில் எந்தத் தவறுமில்லை. உங்களுடைய முன்னுரை திறம்பட்டதாக இருப்பதற்கு கேட்போரையும் குறிப்புத்தாளிலுள்ள தகவலையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

எப்படி செய்வது

  • கேட்போரின் சூழ்நிலைகள், அக்கறைகள், மனப்பான்மைகள் போன்றவற்றையும் நீங்கள் பேசப்போகும் விஷயத்தைக் குறித்து அவர்கள் என்ன அறிந்திருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

  • அந்தப் பொருள் அவர்களுக்கு எவ்விதத்தில் ஆர்வமூட்டுவதாயும் முக்கியத்துவமுள்ளதாயும் இருக்கும் என்பதை தீர்மானியுங்கள்.

பயிற்சிகள்: (1) வீட்டுக்கு வீடு ஊழியத்திற்குச் செல்லும்முன், நீங்கள் சொல்லப்போகும் செய்திக்கும் உங்கள் பிராந்தியத்தில் சமீபத்தில் நடந்த சம்பவத்திற்கும் பொருத்தமான முன்னுரையை தயாரியுங்கள். (2) காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளிலுள்ள ஐந்து அல்லது ஆறு கட்டுரைகளின் ஆரம்ப பாராவை மறுபார்வை செய்யுங்கள். ஒவ்வொரு முன்னுரையும் எவ்விதத்தில் திறம்பட்டதாக இருக்கிறது என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்