உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lv அதி. 2 பக். 16-27
  • நல்ல மனசாட்சியோடு வாழ...

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நல்ல மனசாட்சியோடு வாழ...
  • ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மனசாட்சி என்றால் என்ன, அது எப்படிச் செயல்படுகிறது?
  • மனசாட்சியை எப்படிப் பயிற்றுவிப்பது?
  • மற்றவர்களுடைய மனசாட்சியை ஏன் மதிக்க வேண்டும்?
  • நல்ல மனசாட்சியால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
  • கடவுளுக்கு முன் நல்ல மனசாட்சியோடு இருங்கள்
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
  • உங்கள் மனசாட்சி நன்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • உங்கள் மனசாட்சி உங்களை சரியாக வழிநடத்துகிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • உள்மனதின் குரலுக்குச் செவிகொடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
lv அதி. 2 பக். 16-27
திசைமானியும் வரைபடமும்

அதிகாரம் 2

நல்ல மனசாட்சியோடு வாழ...

“நல்ல மனசாட்சியோடு இருங்கள்.” —1 பேதுரு 3:16.

1, 2. திசைமானி ஏன் மிக அவசியம், மனசாட்சி எந்த விதத்தில் திசைமானியைப் போல் இருக்கிறது?

பொங்கியெழும் கடலில் கப்பலைச் செலுத்துகிறார் ஒரு மாலுமி. ஆள் நடமாட்டமில்லாத பாலைவனத்தைக் கடந்து செல்கிறார் ஒரு பயணி. மேகக்கூட்டங்களுக்கு மேலே விமானத்தை ஓட்டிச் செல்கிறார் ஒரு விமானி. இந்த மூன்று பேருக்கும் இடையே ஓர் ஒற்றுமை இருக்கிறது. அது என்ன? ஆம், இவர்களிடம் திசைமானி இருக்கிறது. திசைகாட்டும் வேறெந்த நவீனக் கருவிகளும் இல்லாத பட்சத்தில் திசைமானியாவது இருக்க வேண்டும், இல்லையென்றால் இவர்களுடைய பாடு திண்டாட்டம்தான்.

2 திசைமானி என்பது வட திசையையே காட்டும் காந்த முள்ளை உடைய ஒரு கருவி. சரியாகத் திசைகாட்டும் திசைமானியை தெளிவான வரைபடத்துடன் பயன்படுத்தும்போது அது நம் உயிரையே காக்கும். யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற அற்புதப் பரிசாகிய மனசாட்சியும் சில விதங்களில் திசைமானியைப் போல்தான் இருக்கிறது. (யாக்கோபு 1:17) மனசாட்சி இல்லையென்றால், நாம் திக்குத்தெரியாமல் அலைந்து கொண்டிருப்போம். நாம் அதைச் சரியாகப் பயன்படுத்தினால், வாழ்க்கையில் சரியான பாதையைக் கண்டுபிடித்து அதில் பயணம் செய்வோம். மனசாட்சி என்றால் என்ன, அது எப்படிச் செயல்படுகிறது என்பதை நாம் இப்போது பார்க்கலாம். பின்பு இந்த மூன்று கேள்விகளையும் சிந்திக்கலாம்: (1) மனசாட்சியை நாம் எப்படிப் பயிற்றுவிக்கலாம்? (2) மற்றவர்களுடைய மனசாட்சியை நாம் ஏன் மதிக்க வேண்டும்? (3) நல்ல மனசாட்சியோடு வாழ்வதால் என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

மனசாட்சி என்றால் என்ன, அது எப்படிச் செயல்படுகிறது?

3. “மனசாட்சி” என்பதற்குரிய கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம் என்ன, மனிதனுக்கு மட்டுமே என்ன திறமை இருப்பதாக அது காட்டுகிறது?

3 பைபிளில், “மனசாட்சி” என்பதற்குரிய கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம் “நமக்குள் இருக்கும் அறிவு.” மனிதனுக்கு மட்டும்தான் தன்னையே அறிந்துகொள்ளும் திறமையைக் கடவுள் கொடுத்திருக்கிறார், வேறெந்த உயிரினங்களுக்கும் அதைக் கொடுக்கவில்லை. நாம் எப்படிப்பட்டவர்கள் என நம்மையே எடைபோட்டுப் பார்க்கும் திறன் நமக்கு இருக்கிறது. மனசாட்சி நமக்கு ஒரு நீதிபதியாக இருந்து, நம் செயல்களையும் சிந்தைகளையும் விருப்பங்களையும் நியாயந்தீர்க்கிறது. நம் மனசாட்சி நல்ல தீர்மானம் எடுக்க நமக்கு வழிகாட்டலாம், அதேசமயம் கெட்ட தீர்மானம் எடுப்பதற்கு முன்பு நம்மை எச்சரிக்கலாம். நல்ல தீர்மானம் எடுத்திருந்தால் அது நம்மைத் தட்டிக்கொடுக்கலாம். தவறான தீர்மானம் எடுத்திருந்தால் நம்மைத் தட்டிக்கேட்கலாம்.

4, 5. (அ) ஆதாம் ஏவாளுக்கு மனசாட்சி இருந்ததென்று நமக்கு எப்படித் தெரியும், கடவுளுடைய சட்டத்தை மீறியதால் அவர்களுக்கு என்ன நடந்தது? (ஆ) கிறிஸ்துவுக்குமுன் வாழ்ந்த விசுவாசமுள்ள மனிதர்களின் மனசாட்சி செயல்பட்டது என்பதற்கு உதாரணங்கள் தருக.

4 ஆணையும் பெண்ணையும் கடவுள் படைத்தபோதே அவர்களுக்கு இந்தத் திறமை இருந்தது. ஆம், ஆதாம் ஏவாள் பாவம் செய்ததும் அவர்கள் அவமானத்தால் கூனிக்குறுகியதை வைத்து இருவருக்கும் மனசாட்சி இருந்ததை நாம் தெரிந்துகொள்கிறோம். (ஆதியாகமம் 3:7, 8) ஆனால், அந்தச் சமயத்தில் அவர்களுடைய மனசாட்சி உறுத்தி என்ன பிரயோஜனம்! கடவுளுடைய சட்டத்தை அவர்கள் வேண்டுமென்றே மீறியிருந்தார்கள். தெரிந்தே யெகோவாவின் பேச்சை மீறியதால் கடைசியில் அவருடைய எதிரிகளானார்கள். அவர்கள் இருவரும் பரிபூரணர் என்பதால் தெரியாமல் பாவம் செய்துவிட்டார்களெனச் சொல்ல முடியாது. அதனால் கடவுளிடம் இழந்த பந்தத்தை அவர்களால் மீண்டும் பெற முடியவில்லை.

5 பாவ இயல்புள்ளவர்களாகிய மனிதர்கள் பலர் ஆதாம் ஏவாளைப் போல் இருக்கவில்லை; அவர்கள் தங்களுடைய மனசாட்சியின் குரலுக்குச் செவிகொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக, விசுவாசமுள்ள மனிதனாகிய யோபு, “நான் எப்போதும் நீதியாக நடந்துகொள்வேன், ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டேன். உயிரோடு இருக்கும்வரை என் உள்ளம் என்னை உறுத்தாது” என்று சொன்னார்.a (யோபு 27:6) யோபு உண்மையிலேயே மனசாட்சியின்படி வாழ்ந்தார். அவர் எப்போதும் தன் மனசாட்சி சொன்னதைக் கேட்டார்; அதன்படியே தீர்மானங்கள் எடுத்தார், செயல்பட்டார். அதனால்தான், மனசாட்சி தன்னை உறுத்தவில்லை என்று அவரால் உறுதியாகச் சொல்ல முடிந்தது. ஆம், அவர் அவமானத்தாலோ குற்றவுணர்ச்சியாலோ தவிக்கவில்லை. ஆனால், தாவீதின் மனசாட்சி எப்படி வேலை செய்தது? யெகோவா தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுல் ராஜாவிடம் ஒருசமயம் தாவீது மரியாதை குறைவாக நடந்துகொண்டார்; ஆனால், “அதற்குப் பின்பு தாவீதின் நெஞ்சம் அடித்துக்கொண்டே இருந்தது.” (1 சாமுவேல் 24:5) அவருடைய மனசாட்சி உறுத்தியதால் அவர் உண்மையிலேயே பயனடைந்தார்; இனிமேல் மரியாதை குறைவாக நடக்கக்கூடாது என்பதைக் கற்றுக்கொண்டார்.

6. மனசாட்சி என்பது எல்லாருக்குமே கொடுக்கப்பட்ட பரிசு என்று எப்படிச் சொல்லலாம்?

6 மனசாட்சி என்ற பரிசை யெகோவா தன்னுடைய ஊழியர்களுக்கு மட்டும்தான் கொடுத்திருக்கிறாரா? கடவுளுடைய சக்தியின் உதவியால் அப்போஸ்தலன் பவுல் எழுதியதைக் கவனியுங்கள்: “திருச்சட்டம் இல்லாத மற்ற தேசத்து மக்கள் இயல்பாகவே திருச்சட்டத்தின்படி நடக்கும்போதெல்லாம், அவர்களுக்குத் திருச்சட்டம் இல்லாதபோதிலும், தங்களுக்குத் தாங்களே திருச்சட்டமாக இருக்கிறார்கள். திருச்சட்டத்திலுள்ள விஷயங்கள் தங்களுடைய இதயத்தில் எழுதப்பட்டிருப்பதைச் செயலில் காட்டுகிறார்கள். தங்களுடைய மனசாட்சி சொல்கிற சாட்சியை யோசித்துப் பார்த்து, தாங்கள் குற்றமுள்ளவர்களா குற்றமில்லாதவர்களா என்பதைத் தாங்களே தீர்மானித்துக்கொள்கிறார்கள்.” (ரோமர் 2:14, 15) யெகோவாவின் சட்டங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களும்கூட சில சமயங்களில் தங்கள் மனசாட்சி சொல்வதைக் கேட்டு தெய்வீக நியமங்களுக்கு இசைவாக நடக்கலாம்.

7. சில சமயங்களில் மனசாட்சி ஏன் தவறான பாதையில் வழிநடத்தலாம்?

7 இருந்தாலும், சில சமயங்களில் மனசாட்சி நம்மைத் தவறான பாதையில் வழிநடத்தலாம். ஏன்? திசைமானியை ஒரு காந்தத்தின் பக்கத்தில் வைத்தால் அது வட திசையைக் காட்டாமல் வேறு திசையைக் காட்டலாம். அதோடு, ஒரு தெளிவான வரைபடம் இல்லையென்றால் திசைமானி இருந்தும் பயனில்லை. அதைப்போலவே தன்னல ஆசைகள் நம் மனதை ஆட்டிப்படைத்தால் மனசாட்சி நம்மைத் தவறான திசையில் வழிநடத்தலாம். அதோடு, நம் மனசாட்சிக்கு பைபிளின் தெளிவான வழிகாட்டுதல் இல்லையென்றால், முக்கியமான விஷயங்களில் எது சரி எது தவறு என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியாது. நம்முடைய மனசாட்சி ஒழுங்காக வேலை செய்ய வேண்டுமென்றால் யெகோவாவுடைய சக்தியின் வழிநடத்துதல் நமக்குத் தேவை. “கடவுளுடைய சக்தியினால் வழிநடத்தப்படுகிற என் மனசாட்சி என்னோடுகூட சாட்சி சொல்கிறது” என்று பவுல் எழுதினார். (ரோமர் 9:1) அப்படியானால், நம்முடைய மனசாட்சி யெகோவாவுடைய சக்தியினால் வழிநடத்தப்படுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அதை நாம் பயிற்றுவிக்க வேண்டும்.

மனசாட்சியை எப்படிப் பயிற்றுவிப்பது?

8. (அ) இதயம் எப்படி மனசாட்சியைப் பாதித்துவிடலாம், தீர்மானம் எடுக்கையில் எதற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? (ஆ) ஒரு கிறிஸ்தவருடைய மனசாட்சி அவர் பார்வையில் சுத்தமாக இருந்தால் மட்டும் ஏன் போதாது? (அடிக்குறிப்பைக் காண்க.)

8 மனசாட்சியின்படி நீங்கள் எப்படித் தீர்மானம் எடுப்பீர்கள்? சிலர் தங்களுடைய மனதுக்குத் தோன்றுகிறபடி தீர்மானம் எடுப்பதாகத் தெரிகிறது. அப்படித் தீர்மானம் எடுத்தபின், “அது என் மனசாட்சிக்குத் தவறாகப் படவில்லை” என்று அவர்கள் சொல்லலாம். நம் இதயத்தின் ஆசைகள் தீவிரமாய் இருக்கும்போது அவை நம் மனசாட்சியைப் பாதித்துவிடலாம். “எல்லாவற்றையும்விட மனுஷனுடைய இதயமே நயவஞ்சகமானது; அது எதையும் செய்யத் துணியும். அதை யாரால் புரிந்துகொள்ள முடியும்?” என்று பைபிள் சொல்கிறது. (எரேமியா 17:9) எனவே, நம் இதயத்தின் ஆசைகளுக்கு அளவுக்கதிகமாக முக்கியத்துவம் கொடுத்துவிடக் கூடாது. மாறாக, யெகோவாவுக்கு எது பிரியமானது என முதலில் யோசித்துப் பார்க்க வேண்டும்.b

9. தேவபயம் என்றால் என்ன, அது நம் மனசாட்சியை எப்படிப் பாதிக்கும்?

9 பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின்படி நாம் தீர்மானம் எடுக்கும்போது, கடவுளுக்குப் பயந்து நடக்கிறோம் என்றும், சொந்த இஷ்டத்தின்படி நடக்கவில்லை என்றும் காட்டுகிறோம். இதற்கு ஓர் உதாரணத்தைக் கவனிக்கலாம். எருசலேம் மக்களிடம் சில கட்டணங்களையும் வரிகளையும் வசூலிக்க நேர்மையுள்ள ஆளுநரான நெகேமியாவுக்கு உரிமை இருந்தது. ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. ஏன்? கடவுளுடைய மக்களை அடக்கி ஒடுக்குவது அவருக்குப் பிடிக்காது என நெகேமியா அறிந்திருந்தார். அதனால் அப்படிப்பட்ட எண்ணத்திற்கே அவர் இடங்கொடுக்கவில்லை. “கடவுளுக்குப் பயந்து நடந்ததால் அப்படிச் செய்யவில்லை” என்று அவர் சொன்னார். (நெகேமியா 5:15) பாசாங்கற்ற தேவபயம், அதாவது நம் பரலோகத் தகப்பனுக்குப் பிடிக்காததைச் செய்துவிடுவோமோ என்ற பயம், நமக்கு அவசியம். அப்படிப்பட்ட தேவபயம் நமக்கு இருந்தால், தீர்மானம் எடுக்கும்போது கடவுளுடைய வார்த்தையை ஆராய்ந்து பார்ப்போம்.

10, 11. மது அருந்தும் விஷயத்தில் என்ன பைபிள் நியமங்களை நாம் மனதில் வைக்க வேண்டும், அவற்றைக் கடைப்பிடிப்பதற்கு கடவுளின் உதவியை நாம் எப்படிப் பெறலாம்?

10 உதாரணமாக, மது அருந்தும் பழக்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பார்ட்டிகளில் கலந்துகொள்ளும்போது குடிப்பதா, வேண்டாமா என்ற தீர்மானத்தை நம்மில் பலர் எடுக்க வேண்டியிருக்கிறது. முதலாவதாக, மது அருந்துவதைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்பதை நாம் அறிந்திருப்பது அவசியம். இது சம்பந்தமாக பைபிளில் என்ன நியமங்கள் உள்ளன? அளவாகக் குடிப்பதை பைபிள் கண்டனம் செய்வதில்லை. சொல்லப்போனால், நம் சந்தோஷத்திற்காகத் திராட்சமதுவைத் தந்த யெகோவாவை அது புகழ்கிறது. (சங்கீதம் 104:14, 15) ஆனால், அளவுக்குமீறி குடிப்பதையும் குடித்துக் கும்மாளம் போடுவதையும் பைபிள் கண்டனம் செய்கிறது. (லூக்கா 21:34; ரோமர் 13:13) அதுமட்டுமல்லாமல், பாலியல் முறைகேடு போன்ற படுமோசமான பாவங்களின் பட்டியலில் குடிவெறியையும் குறிப்பிடுகிறது.c—1 கொரிந்தியர் 6:9, 10.

11 இந்த நியமங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு கிறிஸ்தவர் தனது மனசாட்சியைப் பயிற்றுவிக்கிறார்; அப்படிச் செய்யும்போது, எது சரி எது தவறென அவருடைய மனசாட்சி உடனடியாகச் சுட்டிக்காட்டும். எனவே, பார்ட்டியில் குடிப்பதா வேண்டாமா எனத் தீர்மானிப்பதற்குமுன் பின்வரும் கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘இது என்ன மாதிரியான பார்ட்டி? குடித்துக் கும்மாளம் போடுகிற அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடுமா? குடிக்கிற விஷயத்தில் நான் எப்படி? குடிப்பதற்காக நான் ஏங்குகிறேனா, என்னால் குடிக்காமல் இருக்க முடியாது என நினைக்கிறேனா, கவலையை மறப்பதற்கு குடிக்க வேண்டுமென நினைக்கிறேனா? அளவுக்குமீறி குடிக்காமல் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியுமா?’ பைபிள் நியமங்களையும் அது சம்பந்தமாக நம் மனதுக்குள் வருகிற கேள்விகளையும் நாம் சிந்தித்துப் பார்க்கும்போது யெகோவாவுடைய சக்தியின் வழிநடத்துதலுக்காக ஜெபம் செய்ய வேண்டும். (சங்கீதம் 139:23, 24-ஐ வாசியுங்கள்.) இப்படிச் செய்யும்போது, யெகோவாவின் உதவியைப் பெறுவோம்; அதோடு, அவருடைய நியமங்களுக்கு இசைவாக நம் மனசாட்சியைப் பயிற்றுவிப்போம். இருந்தாலும், தீர்மானங்கள் எடுக்கையில் நாம் கவனத்தில் வைக்க வேண்டிய மற்றொரு அம்சமும் உள்ளது.

மற்றவர்களுடைய மனசாட்சியை ஏன் மதிக்க வேண்டும்?

குடிப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி உங்களுக்கு உதவும்

மதுபானங்களைக் குடிப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி உங்களுக்கு உதவும்

12, 13. கிறிஸ்தவர்களுடைய மனசாட்சி வேறுபட்டிருப்பதற்குச் சில காரணங்கள் யாவை, எனவே, நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

12 சில சமயங்களில், கிறிஸ்தவருக்கு கிறிஸ்தவர் மனசாட்சி வேறுபடுவதைப் பார்க்கும்போது உங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கலாம். ஏதோவொரு பழக்கம் ஒருவருக்குத் தவறாக இருக்கலாம், ஆனால் இன்னொருவருக்குச் சரியாகப் படலாம். உதாரணமாக, பார்ட்டிகளில் மது அருந்தும் விஷயத்தையே எடுத்துக்கொள்ளலாம்; நண்பர்களுடன் சேர்ந்து எப்போதாவது கொஞ்சம் குடிப்பதில் எந்தத் தவறுமில்லை என ஒருவர் நினைக்கலாம்; ஆனால் அது இன்னொருவருக்குத் தவறாகப் படலாம். ஏன் இந்த வித்தியாசம்? பொதுவாக நாம் தீர்மானம் எடுக்கும்போது இதை ஏன் மனதில் வைக்க வேண்டும்?

13 மக்களுடைய சிந்தனைகளும் சுபாவங்களும் வேறுபடலாம்; அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொருவரும் வித்தியாசமான சூழலில் வளர்ந்திருக்கலாம். உதாரணமாக, சிலர் கடந்த காலத்தில் தங்களுடைய பலவீனத்தை எதிர்த்து போராடி சில சமயங்களில் அதில் தோல்வியடைந்திருக்கலாம்; இது அவர்களுடைய மனதில் ஆழமாய்ப் பதிந்திருக்கலாம். (1 ராஜாக்கள் 8:38-40) மது அருந்தும் விஷயத்தில், இப்படிப்பட்டவர்களுடைய மனசாட்சி மிகவும் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லலாம். இப்படிப்பட்ட ஒருவர் உங்கள் வீட்டுக்கு வரும்போது நீங்கள் மதுபானம் கொடுத்தால் தன் மனசாட்சிக்குச் செவிகொடுத்து அதை அவர் மறுக்கலாம். அப்படி அவர் மறுத்தால் நீங்கள் புண்பட்டுவிடுவீர்களா? அவரை வற்புறுத்துவீர்களா? மாட்டீர்கள்! அவர் ஏன் அதை மறுக்கிறார் என்பதற்கான காரணம் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், தெரியாமலும் இருக்கலாம். அப்படி மறுப்பதற்கான காரணத்தை அந்தச் சந்தர்ப்பத்தில் சொல்ல அவர் விரும்பாமல் இருக்கலாம். எப்படியிருந்தாலும்சரி, சகோதர அன்பு இருந்தால் நீங்கள் அவரை வற்புறுத்த மாட்டீர்கள்.

14, 15. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் மனசாட்சி எந்த விஷயத்தில் வேறுபட்டிருந்தது, அதற்கு பவுல் கொடுத்த அறிவுரை என்ன?

14 முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுடைய மனசாட்சி பெரும்பாலும் வேறுபட்டிருந்ததை அப்போஸ்தலன் பவுல் கவனித்தார். சிலைகளுக்குப் படைக்கப்பட்டு பின்பு கடைகளில் விற்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட சிலருடைய மனசாட்சி அவர்களை அனுமதிக்கவில்லை. (1 கொரிந்தியர் 10:25) ஆனால், பவுலின் மனசாட்சி அதைத் தவறெனச் சொல்லவில்லை. அவரைப் பொறுத்தவரை, சிலைகள் உயிரற்றவை; யெகோவா உண்டாக்கிய உணவு அவருக்கே சொந்தம், சிலைகளுக்கு அல்ல. ஆனால் எல்லாரும் தன்னைப் போலவே நினைக்கவில்லை என்பதை பவுல் அறிந்திருந்தார். சிலர் கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு முன்பு சிலை வழிபாட்டில் ஊறிப்போயிருந்திருக்கலாம். எனவே, ஏதோவொரு வகையில் சிலை வழிபாட்டுடன் சம்பந்தப்பட்ட உணவைச் சாப்பிடுவதையும்கூட அவர்கள் தவறெனக் கருதினார்கள். இந்தப் பிரச்சினையை பவுல் எவ்வாறு சரிசெய்தார்?

15 ‘விசுவாசத்தில் பலமாக இருக்கிற நாம் பலவீனமாக இருக்கிறவர்களுடைய பலவீனங்களைத் தாங்கிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். நமக்குப் பிரியமாக நாம் நடந்துகொள்ளக் கூடாது. கிறிஸ்துவும் தனக்குப் பிரியமாக நடந்துகொள்ளவில்லை’ என்று பவுல் சொன்னார். (ரோமர் 15:1, 3) கிறிஸ்துவைப் போல் நாமும் நமக்குப் பிரியமாய் நடக்காமல் நம் சகோதரர்களுக்குப் பிரியமாய் நடக்க வேண்டுமென பவுல் அறிவுறுத்தினார். கிறிஸ்து தன் உயிரையே கொடுத்து மீட்டுக்கொண்ட ஒருவருக்கு தடைக்கல்லாக இருப்பதைவிட ஒருபோதும் இறைச்சி சாப்பிடாதிருக்கவே பவுல் விரும்பினார்.—1 கொரிந்தியர் 8:13; 10:23, 24, 31-33-ஐ வாசியுங்கள்.

16. சில காரியங்களைச் செய்வதற்குச் சிலருடைய மனசாட்சி இடங்கொடுக்காவிட்டால் அவர்கள் ஏன் மற்றவர்களைக் குறைசொல்லக் கூடாது?

16 சில காரியங்களைச் செய்வதற்குச் சிலருடைய மனசாட்சி இடங்கொடுக்காவிட்டால், அப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்களை இவர்கள் குறைசொல்லக் கூடாது. மனசாட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எல்லாரும் தங்களைப் போலவே நினைக்க வேண்டுமென அவர்கள் வற்புறுத்தக் கூடாது. (ரோமர் 14:10-ஐ வாசியுங்கள்.) ஆம், மனசாட்சி என்பது நம்மை நியாயந்தீர்க்கும் நீதிபதியாக இருக்க வேண்டுமே தவிர மற்றவர்களை நியாயந்தீர்க்கும் நீதிபதியாக இருக்கக் கூடாது. “மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள், அப்போதுதான் நீங்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள்” என்று இயேசு சொன்னதை நினைவில்கொள்ளுங்கள். (மத்தேயு 7:1) மனசாட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சபையில் உள்ளவர்கள் யாரும் பெரிய பிரச்சினையாக்கிவிடக் கூடாது. மாறாக, அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்க வழிதேட வேண்டும், ஒருவரையொருவர் பலப்படுத்த வேண்டும், உற்சாகமிழக்கச் செய்துவிடக் கூடாது.—ரோமர் 14:19.

நல்ல மனசாட்சியால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்

ஒரு அமைதியான சூழலில் அழகான புல்வெளியில் ஒரு பெண் நடந்து போகிறாள்

நல்ல மனசாட்சி வாழ்க்கைப் பயணத்தில் வழிகாட்டியாக இருந்து, உங்களுக்கு மனமகிழ்ச்சியையும் மனசமாதானத்தையும் தரும்

17. இன்று அநேகரின் மனசாட்சி எப்படி இருக்கிறது?

17 “நல்ல மனசாட்சியோடு இருங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு அறிவுரை கூறினார். (1 பேதுரு 3:16) யெகோவா தேவனுடைய பார்வையில் சுத்தமான மனசாட்சியுடன் இருப்பது மாபெரும் ஆசீர்வாதம். ஆனால், இப்படிப்பட்ட மனசாட்சி இன்று அநேகரிடம் இல்லை. “காய்ச்சிய கம்பியால் தழும்புண்டான” மனசாட்சி உள்ளவர்களைப் பற்றி பவுல் குறிப்பிட்டார். (1 தீமோத்தேயு 4:2, அடிக்குறிப்பு) காய்ச்சிய கம்பி உடலில் பட்டால் அந்த இடம் அப்படியே வெந்துவிடும். பின்பு அங்கு தழும்பு ஏற்பட்டு, அது மரத்தே போய்விடும். ஒரு விதத்தில், நிறைய பேருடைய மனசாட்சியும் இப்படித்தான் இருக்கிறது. அவர்கள் எந்தத் தவறு செய்தாலும் அது அவர்களை எச்சரிப்பதோ எதிர்ப்பதோ கிடையாது. அவர்களுக்கு வெட்க உணர்வோ குற்ற உணர்வோ ஏற்படுவது கிடையாது. இப்படி எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாததால் ‘தொல்லை விட்டது’ என அவர்கள் நினைக்கிறார்கள்.

18, 19. (அ) குற்றவுணர்ச்சியும் அவமானமும் ஏற்படுவதால் ஒருவருக்கு என்ன பயன்? (ஆ) நாம் மனம் திருந்திய பிறகும் நம் மனசாட்சி நம்மை உறுத்திக்கொண்டே இருந்தால் என்ன செய்வது?

18 ஆனால், ஒருவர் தவறு செய்துவிட்டார் என்பதற்கு மனசாட்சி தரும் அறிகுறிதான் குற்றவுணர்ச்சி. அந்தக் குற்றவுணர்ச்சி அவரை மனம் திருந்தத் தூண்டினால், அவர் செய்த படுமோசமான பாவங்கள்கூட மன்னிக்கப்படலாம். உதாரணமாக, தாவீது ராஜா பயங்கரமான பாவம் செய்தபோதிலும் உள்ளப்பூர்வமாக மனம் திருந்தினார், அதனால்தான் மன்னிக்கப்பட்டார். தான் செய்த தவறை அவர் வெறுத்ததோடு, இனி யெகோவாவின் சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதிகொண்டார். அதனால், யெகோவா “நல்லவர், மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்” என்பதைத் தன் அனுபவத்தில் தெரிந்துகொண்டார். (சங்கீதம் 51:1-19; 86:5) சரி, நாம் மனம் திருந்தி மன்னிப்பைப் பெற்ற பிறகும்கூட குற்றவுணர்ச்சியும் அவமானமும் நம்மைச் சதா அலைக்கழித்தால் என்ன செய்வது?

19 சில சமயங்களில், மனசாட்சி நம்மை அளவுக்குமீறி கண்டனம் செய்யலாம்; மனம் திருந்திய பிறகும் குற்றவுணர்ச்சி பாடாய்ப்படுத்தலாம். இப்படி நம் இதயம் நம்மைக் கண்டனம் செய்யும்போது, கடவுள் நம்மைக் கண்டனம் செய்வதில்லை என்று நம் இதயத்திற்கு உறுதியளித்துக்கொள்ளலாம்; ஏனென்றால், கடவுள் நம் இதயத்தைவிட உயர்ந்தவராக இருக்கிறார். கடவுளுடைய அன்பிலும் அவருடைய மன்னிக்கும் குணத்திலும் நம்பிக்கை வைத்து அவற்றிலிருந்து பயனடையும்படி மற்றவர்களை நாம் ஊக்கப்படுத்துவது போல் நம்மையே நாம் ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். (1 யோவான் 3:19, 20-ஐ வாசியுங்கள்.) ஆனால், சுத்தமான மனசாட்சியினால் மன சமாதானமும் மன அமைதியும் கிடைக்கிறது; நிறைவான சந்தோஷமும் கிடைக்கிறது, இது இன்று உலகில் அபூர்வமாகவே காணப்படுகிறது. ஒருகாலத்தில் பெரும் பாவங்களைச் செய்தவர்கள் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள்; இப்போது யெகோவா தேவனுக்குச் சேவை செய்யும் இவர்கள் நல்ல மனசாட்சியோடு இருக்கிறார்கள்.—1 கொரிந்தியர் 6:11.

20, 21. (அ) எதைப் பெற இப்புத்தகம் உங்களுக்கு உதவும்? (அ) கிறிஸ்தவர்களாகிய நமக்கு எப்படிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது, ஆனால் அதை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

20 சாத்தானுடைய உலகத்தின் இறுதிக்கட்டத்தில் வாழ்கிற நீங்கள் நிறைவான சந்தோஷத்தையும் நல்ல மனசாட்சியையும் பெற இப்புத்தகம் உங்களுக்கு உதவும். ஆனால், அன்றாட வாழ்வில் நீங்கள் எதிர்ப்படுகிற எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்ற பைபிள் சட்டங்களையோ நியமங்களையோ இப்புத்தகம் கொடுப்பதில்லை. மனசாட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பொறுத்தவரை, நேரடியான, திட்டவட்டமான சட்டங்களை எதிர்பார்க்காதீர்கள். கடவுளுடைய வார்த்தையைப் படித்து அன்றாட வாழ்வில் அதை நீங்கள் கடைப்பிடிக்க உங்களுக்கு உதவுவதே இப்புத்தகத்தின் நோக்கம். இப்படிச் செய்கையில், உங்கள் மனசாட்சி பயிற்றுவிக்கப்பட்டு, எது சரி எது தவறென உங்களுக்கு உடனடியாகச் சுட்டிக்காட்டும். அன்று, திருச்சட்டத்தின்கீழ் இருந்தவர்கள் திட்டவட்டமான சட்டங்களின்படி வாழ வேண்டியிருந்தது. ஆனால், இன்று ‘கிறிஸ்துவின் சட்டத்தின்கீழ்’ இருப்பவர்கள் மனசாட்சியின்படியும் நியமங்களின்படியும் வாழ வேண்டியிருக்கிறது. (கலாத்தியர் 6:2) சொல்லப்போனால், கிறிஸ்தவர்களுக்கு யெகோவா அதிக சுதந்திரத்தை அளித்திருக்கிறார். என்றாலும், அந்தச் “சுதந்திரத்தைக் கெட்ட செயல்களை மறைக்கும் போர்வையாக” பயன்படுத்தக் கூடாது என பைபிள் நமக்கு நினைப்பூட்டுகிறது. (1 பேதுரு 2:16) மாறாக, யெகோவாமீது நமக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்த அந்தச் சுதந்திரம் நமக்கு அருமையான வாய்ப்பளிக்கிறது.

21 பைபிள் நியமங்களை வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிப்பது எனச் சிந்தித்துப் பாருங்கள், அதைக் குறித்து கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள்; பின்பு நீங்கள் எடுக்கும் தீர்மானங்களைச் செயல்படுத்துங்கள். அப்போதுதான், யெகோவாவைப் பற்றி நீங்கள் கற்றுக்கொண்டபோது செய்யத் தொடங்கியதை தொடர்ந்து செய்வீர்கள்; உங்கள் “பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்தி” அதைத் தொடர்ந்து பயிற்றுவிப்பீர்கள். (எபிரெயர் 5:14) பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி அனுதினமும் உங்கள் வாழ்வுக்கு வளம் சேர்க்கும். திசைமானி ஒரு பயணிக்கு வழிகாட்டுவது போல், பரலோகத் தகப்பனின் மனதைக் குளிர்விக்கும் தீர்மானங்களை எடுக்க மனசாட்சி உங்களுக்கு வழிகாட்டும். இதுவே கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாய் இருப்பதற்குச் சிறந்த வழி.

a எபிரெய வேதாகமத்தில் “மனசாட்சி” என்பதற்கு ஒரு குறிப்பிட்ட வார்த்தை இல்லை. ஆனால், அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு மனசாட்சி இருந்தது என்பதற்கு யோபுவின் உதாரணம் அத்தாட்சி அளிக்கிறது. பொதுவாக, “இதயம்” என்ற வார்த்தை உள்ளுக்குள் ஒருவர் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதைக் குறிக்கிறது. ஆனால், யோபுவின் விஷயத்தில் இந்த வார்த்தை அவருடைய மனசாட்சியைக் குறிக்கிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் “மனசாட்சி” என்பதற்குரிய கிரேக்க வார்த்தை சுமார் 30 தடவை வருகிறது.

b ஒருவருடைய மனசாட்சி அவர் பார்வையில் சுத்தமாக இருந்தால் மட்டும் போதாது என்று பைபிள் சொல்கிறது. உதாரணமாக, பவுல் சொன்னார்: “என்னிடம் எந்தக் குற்றமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை; அதற்காக நான் குற்றமற்றவனாக ஆகிவிட மாட்டேன்; என்னை நியாயந்தீர்ப்பவர் யெகோவாதான்.” (1 கொரிந்தியர் 4:4) ஒருகாலத்தில் கிறிஸ்தவர்களை பவுல் துன்புறுத்தியபோது அவருடைய மனசாட்சி அவர் பார்வையில் சுத்தமாக இருந்தது. அதுபோலவே இன்றும் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துகிறவர்களின் மனசாட்சி அவர்கள் பார்வையில் சுத்தமாக இருக்கலாம்; ஏனென்றால், தாங்கள் செய்வதைக் கடவுள் ஆமோதிக்கிறார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே, நம்முடைய மனசாட்சி நம் பார்வையில் மட்டுமல்ல, யெகோவாவின் பார்வையிலும் சுத்தமாய் இருப்பது முக்கியம்.—அப்போஸ்தலர் 23:1; 2 தீமோத்தேயு 1:3.

c குடிக்கு அடிமையானவர்களைப் பொறுத்தவரை, அளவாகக் குடிப்பது என்பது முடியாத காரியமென மருத்துவர்கள் பலர் தெரிவிக்கிறார்கள் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்; அப்படிப்பட்டவர்களுக்கு “அளவாகக் குடிப்பது” என்றால் குடிக்கவே கூடாது என்று அர்த்தம்.

உங்கள் பதில்?

  • யெகோவா நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது நம் மனசாட்சியை எப்படிப் பாதிக்க வேண்டும்?—எபிரெயர் 4:13.

  • தவறு செய்யாதிருக்க யோசேப்பின் மனசாட்சி அவருக்கு எப்படி உதவியது?—ஆதியாகமம் 39:1, 2, 7-12.

  • யெகோவாவிடம் ஜெபம் செய்வதற்குச் சுத்தமான மனசாட்சி நமக்கு ஏன் அவசியம்?—எபிரெயர் 10:22.

  • கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களின் மனசாட்சியையும் நாம் ஏன் மதிக்க வேண்டும்?—2 கொரிந்தியர் 4:1, 2, அடிக்குறிப்பு.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்