உங்கள் மனசாட்சி நன்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறதா?
“அது சரியில்லன்னு என் மனசுக்குத் தெரியும்,” அல்லது “நீங்க சொல்றதை என்னால் செய்ய முடியாது. அது தப்புன்னு ஏதோவொன்னு எனக்குள் சொல்லிக்கிட்டே இருக்குது” என்று நீங்கள் எப்போதாவது கூறியிருக்கிறீர்களா? அதுதான் உங்கள் மனசாட்சியின் “குரல்;” இது சரி அது தவறு என்று உங்களுக்குள் சொல்லுகிற, உங்களை ஆதரிக்கிற அல்லது உங்களை குற்றப்படுத்துகிற ஓர் உணர்வு. ஆம், மனசாட்சி என்பது நமக்குள் இயல்பாகவே இருக்கிறது.
கடவுளிடமிருந்து விலகிவிட்ட நிலையிலும்கூட, எது சரி எது தவறு என்பதைப் பகுத்துணரும் பொதுவான திறமை இன்னும் மனிதனுக்கு இருக்கிறது. ஏனென்றால் மனிதன் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிறான், அதனால் ஞானம், நீதி போன்ற தெய்வீக பண்புகளை ஓரளவுக்கு பிரதிபலிக்கிறான். (ஆதியாகமம் 1:26, 27) இதைக் குறித்து ஏவுதலால் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.’a—ரோமர் 2:14, 15.
முதல் மனிதன் ஆதாமிடமிருந்து சுதந்தரித்த இந்தத் தார்மீக பண்பு ஒரு ‘சட்டத்தைப்’ போல், அதாவது நடத்தை சம்பந்தமான ஒரு விதியைப் போல், எல்லா இனத்தவர்களிலும் தேசத்தவர்களிலும் செயல்படுகிறது. இது, நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து, நமக்கு நாமே நியாயத்தீர்ப்பு வழங்கும் திறமையாகும். (ரோமர் 9:2) கடவுளுடைய சட்டத்தை மீறியவுடனே ஆதாமும் ஏவாளும் இந்தத் திறமையை வெளிப்படுத்தினார்கள், அதாவது அவர்கள் ஒளிந்து கொண்டார்கள். (ஆதியாகமம் 3:7, 8) இந்த மனசாட்சி எப்படி செயல்படுகிறது என்பதற்கு மற்றொரு உதாரணம், ஜனத்தொகை பார்ப்பதன் மூலம் பாவம் செய்ததை உணர்ந்தபோது ராஜாவான தாவீது பிரதிபலித்த விதமாகும். “ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது” என பைபிள் சொல்கிறது.—2 சாமுவேல் 24:1-10.
ஒருவர் தனது கடந்த காலத்தைக் கண்ணோக்கிப் பார்த்து தார்மீக ரீதியில் தனது நடத்தையை நியாயந்தீர்க்கும் திறமை கடவுளுக்கு ஏற்ற மனந்திரும்புதலை காட்டுவதில் மிக முக்கியமான பாதிப்பை உண்டுபண்ணலாம். தாவீது இவ்வாறு எழுதினார்: “நான் அடக்கி வைத்த மட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.” (சங்கீதம் 32:3, 5) ஆகவே, மனசாட்சி செயல்பட்டு வந்தால் அது பாவியை கடவுளிடம் திருப்பலாம்; கடவுளுடைய மன்னிப்பைப் பெற்று அவருடைய வழிகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை உணர்ந்துகொள்ள உதவலாம்.—சங்கீதம் 51:1-4, 9, 13-15.
நாம் தெரிவு செய்ய வேண்டிய அல்லது ஒழுக்க ரீதியில் தீர்மானம் எடுக்க வேண்டிய சமயத்தில், மனசாட்சி நமக்கு எச்சரிக்கைகளையும் வழிநடத்துதலையும் தருகிறது. விபச்சாரத்தில் ஈடுபடுவது தவறு, தீய செயல், கடவுளுக்கு விரோதமான பாவம் என்பதை முன்னதாகவே உணர்ந்துகொள்ள மனசாட்சியின் இந்த அம்சமே யோசேப்புக்கு உதவி செய்திருக்கலாம். பிற்பாடு இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட பத்துக் கட்டளைகளில் விபச்சாரத்தைக் கண்டனம் செய்யும் நேரடியான சட்டமும் சேர்க்கப்பட்டிருந்தது. (ஆதியாகமம் 39:1-9; யாத்திராகமம் 20:14) வெறுமனே நியாயந்தீர்ப்பதற்கு அல்லாமல் நம்மை வழிநடத்துவதற்கு நம் மனசாட்சியைப் பயிற்றுவிக்கும்போது நாம் பயனடைவோம் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய முறையில் உங்களுடைய மனசாட்சி செயல்படுகிறதா?
சரியான தீர்மானம் எடுப்பதற்கு மனசாட்சியைப் பயிற்றுவித்தல்
மனசாட்சி எனும் திறமையை நாம் பெற்றிருக்கிறபோதிலும், எதிர்பாராத விதமாக இந்த வரப்பிரசாதம் குறைபாடுள்ள ஒன்றாக ஆகிவிடுகிறது. மனிதகுலத்தின் தொடக்கம் பரிபூரணமாக இருந்தபோதிலும், ‘எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானார்கள்.’ (ரோமர் 3:23) பாவம், அபூரணம் எனும் கறைகள் நம்முடைய மனசாட்சியை சிதைத்திருப்பதால், ஆதியில் கடவுள் படைத்த விதத்தில் இனிமேலும் அது முழுமையாக செயல்படாமல் இருக்கலாம். (ரோமர் 7:18-23) அதோடு, பிற சூழ்நிலைகளும் நம் மனசாட்சியைப் பாதிக்கலாம். வளர்ப்பு அல்லது உள்ளூர் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சுற்றுச்சூழல்கள் ஆகியவற்றால் அது பாதிக்கப்படலாம். நிச்சயமாகவே, இவ்வுலகின் தரங்கெட்ட நெறிமுறைகளும் சீரழிந்த தராதரங்களும் நல்மனசாட்சிக்கு ஏற்ற தராதரமாக இருக்க முடியாது.
ஆகவே, ஒருபோதும் மாறாத நீதியான தராதரங்களைக் கொண்ட கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் உதவியையும் ஒரு கிறிஸ்தவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தத் தராதரங்கள், காரியங்களை சரியாக சீர்தூக்கிப் பார்ப்பதற்கும் அவற்றை சீர்திருத்துவதற்கும் நம்முடைய மனசாட்சியை வழிநடத்தும். (2 தீமோத்தேயு 3:17) நம் மனசாட்சியை கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாக பயிற்றுவிக்கும்போது, தார்மீக ரீதியில் நம்மை பாதுகாக்கும் ஒரு சிறந்த கருவியாக அது செயல்படும். ‘நன்மை தீமையின்னதென்று பகுத்தறிய’ நமக்கு உதவும். (எபிரெயர் 5:14) கடவுளுடைய தராதரங்கள் இல்லையென்றால், நாம் தவறான பாதையில் வழிவிலகிச் செல்லும்போது நம்முடைய மனசாட்சி நமக்கு எவ்வித எச்சரிப்பையும் கொடுக்காமல் போகலாம். “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” என பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 16:25; 17:20.
வாழ்க்கையின் சில அம்சங்களில், கடவுளுடைய வார்த்தை நேரடியான வழிநடத்துதல்களையும் அறிவுரைகளையும் வழங்குகிறது, அவற்றைப் பின்பற்றும்போது நாம் பயனடைகிறோம். மறுபட்சத்தில், பைபிளில் நேரடியான அறிவுரைகள் ஏதும் இல்லாத பல்வேறு சூழ்நிலைகள் இருக்கின்றன. இவை ஒருவேளை ஆரோக்கியம், பொழுதுபோக்கு, வேலை, உடை, தோற்றம் ஆகியவற்றிலும் வேறு சில விஷயங்களிலும் தெரிவு செய்ய வேண்டிய சூழ்நிலைகளாக இருக்கலாம். ஒவ்வொரு விஷயத்திலும் என்ன செய்வது என்பதைத் தெரிந்துகொள்வதும் சரியான தீர்மானம் எடுப்பதும் எளிதல்ல. ஆகவே நமக்கு தாவீதின் மனப்பான்மை வேண்டும், அவர் இவ்வாறு ஜெபித்தார்: “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன்.” (சங்கீதம் 25:4, 5) கடவுளுடைய நோக்குநிலைகளையும் வழிகளையும் நாம் எந்தளவு நன்கு அறிந்துகொள்கிறோமோ அந்தளவு நம்முடைய சூழ்நிலைகளைத் துல்லியமாக மதிப்பிடவும் சுத்தமான மனசாட்சியுடன் தீர்மானங்கள் எடுக்கவும் முடியும்.
ஆகவே, ஏதாவது சந்தேகம் வரும்போதோ தீர்மானம் எடுக்கும்போதோ, அதற்குப் பொருத்தமான பைபிள் நியமங்களை நாம் முதலாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவற்றில் சில: தலைமை ஸ்தானத்தை மதித்தல் (கொலோசெயர் 3:18, 20); எல்லா காரியங்களிலும் நேர்மை (எபிரெயர் 13:18); தீமையை வெறுத்தல் (சங்கீதம் 97:10); சமாதானத்தை நாடுதல் (ரோமர் 14:19); ஸ்தாபிக்கப்பட்ட அதிகாரத்திற்குக் கீழ்ப்படிதல் (மத்தேயு 22:21; ரோமர் 13:1-7); கடவுளுக்குத் தனிப்பட்ட பக்தி (மத்தேயு 4:10); உலகத்தின் பாகமில்லாதிருத்தல் (யோவான் 17:14); கெட்ட கூட்டுறவுகளைத் தவிர்த்தல் (1 கொரிந்தியர் 15:33, NW); உடையிலும் தோற்றத்திலும் அடக்கம் (1 தீமோத்தேயு 2:9, 10); பிறருக்கு இடறல் உண்டாக்காதிருத்தல் (பிலிப்பியர் 1:11). எனவே, பொருத்தமான பைபிள் நியமத்தைக் கண்டுபிடிப்பது நம்முடைய மனசாட்சியைப் பலப்படுத்தி சரியான தீர்மானம் எடுக்க உதவும்.
உங்கள் மனசாட்சிக்குச் செவிகொடுங்கள்
நம்முடைய மனசாட்சி நமக்கு உதவ வேண்டுமென்றால், நாம் அதற்கு செவிசாய்க்க வேண்டும். பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட நம் மனசாட்சியின் உறுத்தல்களுக்கு உடனடியாக கீழ்ப்படியும்போது மாத்திரமே நாம் அதிலிருந்து பயனடைவோம். பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியை ஆட்டோமொபைலில் உள்ள எச்சரிப்பு மீட்டர்களுக்கு நாம் ஒப்பிடலாம். ஆயில் பிரஷர் குறைவாக இருப்பதாக நமக்கு எச்சரிப்பு மீட்டர் காட்டுவதாக வைத்துக்கொள்வோம். இதற்கு நாம் உடனடியாக கவனம் செலுத்தாமல் தொடர்ந்து வாகனத்தை ஓட்டினால் என்ன ஏற்படும்? மோட்டாருக்கு பெரும் சேதம் உண்டாகலாம். அதேபோல், நம்முடைய போக்கில் ஏதேனும் தவறு இருக்கிறதென நம் மனசாட்சி அல்லது உள்மனம் நமக்கு எச்சரிப்பூட்டலாம். நம்முடைய வேதப்பூர்வ தராதரங்களையும் மதிப்பீடுகளையும் நம்முடைய செயலுடன் அல்லது சிந்தையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஆட்டோமொபைலில் உள்ள எச்சரிப்பு மீட்டரைப் போல் நம்முடைய மனசாட்சி நமக்கு எச்சரிப்பூட்டும். அந்த எச்சரிப்புக்குச் செவிசாய்ப்பது தவறான செயலால் வரும் கெட்ட விளைவுகளைத் தவிர்ப்பதற்கு மட்டுமல்லாமல், நம்முடைய மனசாட்சி தொடர்ந்து தகுந்த முறையில் செயல்படுவதற்கும் உதவுகிறது.
எச்சரிப்பை நாம் அசட்டை செய்தால் என்ன ஏற்படும்? காலப்போக்கில், நம்முடைய மனசாட்சி மழுங்கிப்போகும். மனசாட்சியை தொடர்ந்து அசட்டை செய்வதை அல்லது கல்லாக்குவதை, பழுக்க காய்ச்சிய இரும்புக் கம்பியால் உடம்பில் சூடுபோடுவதற்கு ஒப்பிடலாம். தழும்பு ஏற்பட்ட பகுதியில் நரம்பு முனைகள் இல்லாததால், அந்த இடம் எந்தவித உணர்ச்சியுமின்றி மரத்துப்போகிறது. (1 தீமோத்தேயு 4:1) இத்தகைய மனசாட்சி நாம் பாவம் செய்யும்போது நம்மை நியாயம் தீர்ப்பதில்லை, அந்தப் பாவத்தைத் திரும்பத் திரும்ப செய்யாமல் தடுப்பதற்கும் எச்சரிப்பு கொடுப்பதில்லை. தழும்புபோல் மரத்துப்போன மனசாட்சி எது சரி எது தவறு என்பதைப் பற்றிய பைபிள் தராதரங்களைப் புறக்கணித்துவிடுகிறது, இவ்வாறு கெட்ட மனசாட்சியாக ஆகிவிடுகிறது. அப்படிப்பட்டவர் ‘எல்லா ஒழுக்கநெறிகளையும் மீறியவராக’ மாறி, கடவுளிடமிருந்து விலகிவிட்டவராக இருக்கிறார். (எபேசியர் 4:17-19, NW; தீத்து 1:15) எவ்வளவு வருந்தத்தக்க விளைவு!
‘நல்மனசாட்சி உடையவர்களாயிருங்கள்’
நல்மனசாட்சியைக் காத்துக்கொள்வதற்குத் தொடர்ந்து முயற்சி தேவை. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனசாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.” (அப்போஸ்தலர் 24:16) ஒரு கிறிஸ்தவராக, கடவுளுக்கு எதிராக எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பவுல் தொடர்ந்து தனது செயலை ஆராய்ந்து பார்த்து திருத்திக் கொண்டார். நாம் செய்யும் செயல் சரியா தவறா என்பதை கடைசியில் தீர்மானிப்பவர் கடவுளே என்பதை பவுல் அறிந்திருந்தார். (ரோமர் 14:10-12; 1 கொரிந்தியர் 4:4) “சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்” என பவுல் கூறினார்.—எபிரெயர் 4:13.
மனிதருக்கு எதிராக எந்தக் குற்றமும் செய்யக்கூடாது என்பதைக் குறித்தும் பவுல் குறிப்பிட்டார். இதற்கு ஓர் உதாரணம், “விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்” பற்றி கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அவர் அறிவுரை கொடுத்ததாகும். கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் பார்க்கையில், ஒரு காரியம் ஆட்சேபணைக்குரியதாக இல்லாவிட்டாலும்கூட, பிறருடைய மனசாட்சிக்கு கவனம் செலுத்துவதும் முக்கியம் என்பதே அவருடைய குறிப்பு. அப்படி செய்யத் தவறினால், அது ‘நம் சகோதரர்களுக்கு ஆன்மீக ரீதியில் கெடுதல் உண்டாக்கும், ஏனென்றால் கிறிஸ்து அவர்களுக்காகவும் மரித்திருக்கிறாரே.’ கடவுளோடு நம்முடைய உறவையும் நாம் கெடுத்துவிடக்கூடும்.—1 கொரிந்தியர் 8:4, 11-13; 10:23, 24.
ஆகவே, உங்களுடைய மனசாட்சியைத் தொடர்ந்து பயிற்றுவியுங்கள், தொடர்ந்து நல்மனசாட்சியைக் காத்துக்கொள்ளுங்கள். தீர்மானங்கள் எடுக்கும்போது, கடவுளுடைய வழிநடத்துதலை நாடுங்கள். (யாக்கோபு 1:5) கடவுளுடைய வார்த்தையைப் படியுங்கள், இவ்வாறு அதிலுள்ள நியமங்கள் உங்களுடைய மனதையும் இருதயத்தையும் உருப்படுத்த அனுமதியுங்கள். (நீதிமொழிகள் 2:3-5) முக்கியமான விவாதங்கள் எழும்பும்போது, சம்பந்தப்பட்ட பைபிள் நியமங்களைச் சரியாக புரிந்திருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்களுடன் கலந்து பேசுங்கள். (நீதிமொழிகள் 12:15; ரோமர் 14:1; கலாத்தியர் 6:5) நீங்கள் எடுக்கும் தீர்மானம் எப்படி உங்களுடைய மனசாட்சியைப் பாதிக்கும், மற்றவர்களை எப்படி பாதிக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவுடன் உங்களுடைய உறவை எப்படி பாதிக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.—1 தீமோத்தேயு 1:5, 18, 19.
நம்முடைய அன்பான பரலோகப் பிதாவாகிய யெகோவா தேவனிடமிருந்து வந்திருக்கும் அற்புத வரமே நம் மனசாட்சி. அதைத் தந்தவருடைய சித்தத்திற்கு இசைவாக அதைப் பயன்படுத்துவதன் மூலம் படைப்பாளருடன் நாம் நெருங்கி வருவோம். நாம் செய்யும் எல்லா காரியங்களிலும் ‘நல்மனசாட்சி உடையவர்களாய் இருப்பதற்கு’ முயற்சி செய்யும்போது, நாம் கடவுளுடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மிகத் தெளிவாக காட்டுகிறோம்.—1 பேதுரு 3:16; கொலோசெயர் 3:10.
[அடிக்குறிப்பு]
a மனசாட்சி என்பதற்கு இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் அர்த்தம், “தார்மீக ரீதியில் நியாயந்தீர்க்கும் உள்ளார்ந்த புலமை” (ஹெரல்டு கே. மோல்டன் என்பவரால் எழுதப்பட்ட அனலிட்டிக்கல் கிரீக் லெக்ஸிகன் ரிவைஸ்டு); “தார்மீக ரீதியில் எது சரி எது தவறு என்பதைப் பகுத்துணருதல்.”—ஜே. எச். தேயர் என்பவரால் எழுதப்பட்ட கிரீக்-இங்லிஷ் லெக்ஸிகன்.
[பக்கம் 13-ன் படங்கள்]
உங்களுடைய மனசாட்சி உங்களை வெறுமனே நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக உங்களை வழிநடத்துவதற்குப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறதா?
[பக்கம் 14-ன் படம்]
பைபிள் நியமங்களை நாம் கற்றுக்கொண்டு அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பெறுவதே நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி
[பக்கம் 15-ன் படங்கள்]
உங்களுடைய மனசாட்சி கொடுக்கும் எச்சரிப்புகளை அசட்டை செய்துவிடாதீர்கள்