பாகம் 7
தீர்க்கதரிசிகள் மூலம் இறைவன் தந்த வாக்குறுதி
பூர்வகால தீர்க்கதரிசிகள் இறைவன்மீது நம்பிக்கை வைத்தார்கள். அவர் தந்த வாக்குறுதிகளை நம்பினார்கள், அந்த வாக்குறுதிகளை மையமாகக் கொண்டே அவர்களுடைய வாழ்க்கை சுழன்றது. சரி, அந்த வாக்குறுதிகளில் எதுவும் அடங்கியிருந்தது?
ஆதாமும் ஹவ்வாவும் ஏதேன் தோட்டத்தில் கலகம் செய்த மறுகணமே இறைவன் ஒரு வாக்குறுதி கொடுத்தார்; அதாவது, பாம்பின் தலையை—‘பிசாசு என்றும் சைத்தான் என்றும் அழைக்கப்படுகிற பழைய பாம்பாகிய ராட்சதப் பாம்பின் தலையை’—நசுக்க ஒருவரை நியமிப்பேன்... அவர் அவனை அடியோடு அழித்துவிடுவார்... என்ற வாக்குறுதியைக் கொடுத்தார். (ஆதியாகமம் 3:14, 15; வெளிப்படுத்துதல் 12:9, 12) இறைவனால் ‘நியமிக்கப்பட்ட அந்த ஒருவர்’ யார்?
இந்த முதல் தீர்க்கதரிசனத்தைச் சொல்லி சுமார் 2,000 ஆண்டுகள் உருண்டோடிய பிறகு, இப்ராஹீம் தீர்க்கதரிசியிடம் யெகோவா ஒரு வாக்குறுதி அளித்தார்; அதாவது, ‘நியமிக்கப்பட்ட அந்த ஒருவர்’ இப்ராஹீமின் சந்ததியில் வருவார் என்று சொன்னார். “நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் [அதாவது, வாரிசின் மூலம்] பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்” என்று இப்ராஹீமிடம் இறைவன் கூறினார்.—ஆதியாகமம் 22:18.
கி.மு. 1473-ல், ‘அந்த வாரிசை’ பற்றிய கூடுதலான விவரங்களை மூஸா தீர்க்கதரிசிக்கு இறைவன் கொடுத்தார். மூஸா இஸ்ரவேல் வம்சத்தாரிடம், ‘உன் இறைவனாகிய யெகோவா என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக’ என்று சொன்னார். (உபாகமம் 18:15) அப்படியானால், மூஸாவைப் போன்ற அந்தத் தீர்க்கதரிசி இப்ராஹீமின் வம்சத்திலிருந்து வருவார்.
அந்தத் தீர்க்கதரிசி தாவூத் ராஜாவின் வம்சத்தைச் சேர்ந்தவராகவும் இருப்பார், அவர்தாமே ஒரு மகா ராஜாவாக ஆவார். தாவூத் ராஜாவிடம் இறைவன் ஒரு வாக்குறுதி அளித்தார். “நான் உனக்குப் பின்பு . . . உன் சந்ததியை [வாரிசை] எழும்பப்பண்ணி, . . . அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்” என்றார். (2 சாமுவேல் 7:12, 13) தாவூதின் வம்சத்தில் வரும் இந்த வாரிசு “சமாதானப் பிரபு” என்று அழைக்கப்படுவார் என்பதையும் இறைவன் வெளிப்படுத்தினார்; அதோடு, ‘அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவூதின் அரியணையில் அமர்ந்து தாவூதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலைபெயராது உறுதிப்படுத்துவார்’ என்றும் சொன்னார். (ஏசாயா 9:6, 7, பொ.மொ.) ஆம், நேர்மையான அந்தத் தலைவர் இந்தப் பூமியெங்கும் சமாதானத்தையும் நீதியையும் நிலைநாட்டுவார். ஆனால், அவர் எப்போது வருவார்?
வாக்குப்பண்ணப்பட்ட ‘வாரிசு’ . . .இப்ராஹீமின் சந்ததியில் பிறப்பார், மூஸாவைப் போன்ற தீர்க்கதரிசியாக இருப்பார், தாவூதின் வம்சத்தில் தோன்றுவார், கி.பி. 29-ல் வருவார், பாம்பை, அதாவது சைத்தானை, நசுக்குவார்
பிற்காலத்தில் தானியேல் தீர்க்கதரிசியிடம் ஜிப்ரில் என்ற இறைத்தூதர் இவ்வாறு கூறினார்: ‘நீ அறிந்து உணர்ந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், [தலைவராகிய] மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்.’ (தானியேல் 9:25) சொல்லப்போனால், அவை 69 வார வருடங்கள் (69 x 7 வருடங்கள்), அதாவது, 483 வருடங்கள். அவை கி.மு. 455-ல் ஆரம்பித்து கி.பி. 29-ல் முடிவடைந்தன.a
சரி, கி.பி. 29-ல் மேசியா வந்தாரா... அதாவது மூஸாவைப் போன்ற தீர்க்கதரிசி... வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்ட அந்த ‘வாரிசு’... வந்தாரா? பார்க்கலாம்.
a இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற புத்தகத்தில் பக்கம் 255-ல் இருக்கும் பின்குறிப்பு 2-ஐப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.