பாகம் 9
தலைவர் மேசியாவிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடம்
மேசியாவை எல்லா மக்களுக்கும் தலைவராய் நியமிக்கப்போவதாக இறைவன் முன்னறிவித்தார். நமக்கு எப்படிப்பட்ட தலைவர் வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்; அதனால்தான் மிகச் சிறந்த தலைவரைத் தேர்ந்தெடுத்தார். மேசியா எப்படிப்பட்ட தலைவராக விளங்கினார்? தன்னிகரற்ற தளபதியாகவா? அகிலம் போற்றும் அரசியல்வாதியாகவா? திறமைவாய்ந்த தத்துவஞானியாகவா? இல்லை, பரிசுத்த வேதம் சொல்கிறபடி, மேசியா ஒரு விசேஷ தீர்க்கதரிசியாக விளங்கினார், அவர்தான் இயேசு கிறிஸ்து.—மத்தேயு 23:10.
இயேசுவை பூரணராக... தூயவராக... இறைவன் பிறக்கச் செய்தார். ஆனால், அவரைக் கெடுக்க சைத்தான் பெரும் முயற்சி செய்தான்; அந்த முயற்சிகள் அனைத்தையும் இயேசு முறியடித்தார். இறைவனின் வல்லமையை தம் சொல்லிலும் செயலிலும் பூரணமாய் வெளிப்படுத்தினார்; அதோடு, இறைவனின் நீதி, ஞானம், அன்பு போன்ற குணங்களையும் கண்ணாடி போல் பிரதிபலித்தார். இயேசுவின் முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? பார்ப்போம்...
இயேசு தாராளமாக மக்களுக்கு உதவினார்
இறைவன் தந்த சக்தியை பிறருடைய நன்மைக்காக அவர் பயன்படுத்தினார். மக்கள்மீது இயேசுவுக்கு உண்மையான அக்கறை இருந்தது, அதனால்தான் அவர்களுக்கு உதவி செய்ய தமது சக்தியைத் தாராளமாகப் பயன்படுத்தினார். ஒருமுறை தம் சொற்பொழிவைக் கேட்க வந்த பெருங்கூட்டத்தைப் பார்த்து, ‘இந்த மக்களைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது; . . . சாப்பிடுவதற்கு இவர்களிடம் ஒன்றுமே இல்லை’ என்று சொன்னார். (மாற்கு 8:2) உடனே அவர்களுக்கு அற்புதமாய் உணவளித்தார்.
இயேசு அநேக இடங்களுக்குச் சென்று போதித்ததோடு, “மக்களுடைய எல்லா விதமான நோய்களையும் உடல் பலவீனங்களையும் போக்கினார்.” (மத்தேயு 4:23) அதனால், திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்; “அவரிடமிருந்து வல்லமை புறப்பட்டு அனைவரையும் குணமாக்கி வந்ததால், மக்கள் எல்லாரும் அவரைத் தொட முயன்றார்கள்.” (லூக்கா 6:19) சொல்லப்போனால், “மற்றவர்களுடைய சேவையைப் பெறுவதற்கு வராமல், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும் அநேகருக்காகத் தம்முடைய உயிரை மீட்புவிலையாய்க் கொடுப்பதற்குமே [இயேசு] வந்தார்.” (மத்தேயு 20:28)a இதுபோன்ற சுயநலமற்ற பண்பை இன்றைக்கு எத்தனை தலைவர்கள் காட்டுகிறார்கள்?
பிள்ளைகளை இயேசு நேசித்தார்
இறை நீதியை அவர் பிரதிபலித்தார். இறைவன் கொடுத்த சட்டத்தை மட்டுமல்ல அதன் உட்பொருளையும் இயேசு புரிந்து நடந்தார். ‘என் இறைவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது [திருச்சட்டம்] என் உள்ளத்திற்குள் இருக்கிறது’ என்று தாவூத் சொன்ன வார்த்தைகளை அவரும் எதிரொலித்தார். (சங்கீதம் 40:8) பணக்காரர் - ஏழை, ஆண் - பெண், சிறியோர் - பெரியோர் என பாரபட்சம் பார்க்காமல் இறைவனைப் போல எல்லாரையும் மதிப்பு மரியாதையோடு நடத்தினார். ஒருமுறை... பெற்றோர் சிலர் தங்கள் குழந்தைகளை இயேசுவிடம் அழைத்து வந்தபோது சீடர்கள் அதட்டினார்கள். ஆனால் இயேசு, ‘சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள், இப்படிப்பட்டவர்களே இறைவனுடைய அரசாங்கத்தில் இருப்பார்கள்’ என்றார்.—மாற்கு 10:14.
இறை ஞானத்தை அவர் வெளிக்காட்டினார். மக்களை இயேசு நன்கு புரிந்திருந்தார். ‘மனிதர்களுடைய உள்ளத்தை அவர் அறிந்திருந்தார்.’ (யோவான் 2:25) இயேசுவைக் கைது செய்துவர அனுப்பப்பட்ட ஆட்களும்கூட அவர் பேசுவதைக் கேட்டு, “அந்த மனிதர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை” என்று சொன்னார்கள். இயேசுவுக்கு எங்கிருந்து இவ்வளவு ஞானம் வந்தது? “என் போதனை என்னுடையதல்ல, என்னை அனுப்பியவருடையது” என்று அவரே சொன்னார்.—யோவான் 7:16, 46.
இயேசு இரக்கப்பட்டு நோயாளிகளைக் குணப்படுத்தினார்
இறை அன்பை அவர் காட்டினார். மக்கள்மீது இயேசுவுக்கு கனிவும் கருணையும் இருந்தது. உடல் முழுவதும் ‘தொழுநோயால்’ பீடிக்கப்பட்ட ஒருவன் அவரை நோக்கி, “எஜமானே, உங்களுக்கு மனமிருந்தால், என்னைச் சுத்தமாக்க முடியும்” என்று மன்றாடினான். இயேசு அவன்மேல் மனதுருகி, “தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு, ‘எனக்கு மனமிருக்கிறது; நீ சுத்தமாகு’ என்று சொன்னார். உடனே தொழுநோய் அவனைவிட்டு மறைந்தது.” (லூக்கா 5:12, 13; மாற்கு 1:41, 42) அந்த ஏழை மனிதனின் துயர் துடைக்க இயேசு மனதார விரும்பினார்.
உங்கள் மீதும் இயேசுவுக்கு அக்கறை இருக்கிறதா? அவரே பதிலளிக்கிறார்: “உழைத்துக் களைத்துப் போனவர்களே, பெருஞ்சுமை சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; அதனால் என் நுகத்தை உங்கள்மீது ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.”—மத்தேயு 11:28, 29.
இயேசுவே தலைசிறந்த தலைவர் என்று சொல்லலாம். எனவேதான், “என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்று அவர் நம்மை உந்துவிக்கிறார். இதயங்கனிந்த இந்த அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? அப்படி ஏற்றுக்கொள்ளும்போது ஆனந்த வாழ்வைப் பெறுவீர்கள்.
a மீட்புவிலை பற்றிய விளக்கத்திற்கு, இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற புத்தகத்தில் பாடம் 27-ஐப் பாருங்கள்.