உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w09 1/15 பக். 3-7
  • ‘என்னைப் பின்பற்றி வாருங்கள்’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘என்னைப் பின்பற்றி வாருங்கள்’
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏன் இயேசுவைப் பின்பற்ற வேண்டும்?
  • இயேசுவைப்போல் ஞானமாக நடந்துகொள்ளுங்கள்
  • இயேசுவைப்போல் மனத்தாழ்மையைக் காட்டுங்கள்
  • இயேசுவைப்போல் பக்திவைராக்கியம் காட்டுங்கள்
  • இயேசுவைப்போல் பிறரை நேசியுங்கள்
  • “என்னைப் பின்பற்றி வா”​—⁠என்ன அர்த்தத்தில்?
    என்னைப் பின்பற்றி வா
  • ஏன் ‘கிறிஸ்துவை’ பின்பற்ற வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • இயேசுவின் அன்புக்கு நீங்கள் பிரதிபலிப்பீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • இயேசு —மனத்தாழ்மைக்கு மாதிரி!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
w09 1/15 பக். 3-7

‘என்னைப் பின்பற்றி வாருங்கள்’

“எவராவது என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவர் தன்னையே அர்ப்பணம் செய்து, தன் கழுமரத்தைச் சுமந்துகொண்டு . . . என் பின்னால் வரவேண்டும்.”​—⁠லூக். 9:​23, NW.

1, 2. (அ) இயேசு என்ன அன்பான அழைப்பை விடுத்தார்? (ஆ) இயேசுவின் அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா?

இயேசு தம்முடைய ஊழியக் காலத்தின் முடிவில் பெரேயா பட்டணத்தில் சாட்சி கொடுத்துக்கொண்டிருந்தார்; அது யூதேயாவுக்கு வடகிழக்கே யோர்தானுக்கு அப்பால் இருந்த பட்டணமாகும். அச்சமயத்தில் ஓர் இளம் மனிதர் இயேசுவைச் சந்தித்து, நித்திய வாழ்வைப் பெறுவதற்குத் தான் என்ன செய்ய வேண்டுமென கேட்டார். அவர் நியாயப்பிரமாணத்தை உண்மையோடு கடைப்பிடித்து வந்ததை அறிந்துகொண்ட இயேசு, அவருக்கு ஓர் அரிய அழைப்பை விடுத்தார். “நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு . . . என்னைப் பின்பற்றிவா” என்றார். (மாற். 10:21) கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், அது உன்னதக் கடவுளின் ஒரேபேறான மகனாகிய இயேசுவைப் பின்பற்றுவதற்கான அழைப்பு!

2 அந்த இளம் மனிதர் இயேசுவின் அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால், மற்றவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். இதற்கு முன்னர் பிலிப்புவிடம், ‘எனக்குப் பின்னே வா’ என சொல்லி இயேசு அவரை அழைத்திருந்தார். (யோவா. 1:43) அந்த அழைப்பை அவர் ஏற்று, பிற்பாடு இயேசுவின் அப்போஸ்தலரானார். மத்தேயுவுக்கும் இயேசு இதே அழைப்பைக் கொடுத்தார், அவரும் அதை ஏற்றுக்கொண்டார். (மத். 9:9; 10:2–4) சொல்லப்போனால், நீதியை நேசிக்கிற அனைவருக்கும் இயேசு இந்த அழைப்பைக் கொடுத்திருக்கிறார்: “எவராவது என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவர் தன்னையே அர்ப்பணம் செய்து, தன் கழுமரத்தைச் சுமந்துகொண்டு நாள்தோறும் என் பின்னால் வரவேண்டும்.” (லூக். 9:​23, NW) ஆகவே, உண்மையில் இயேசுவைப் பின்பற்ற விரும்புகிற எவரும் அவ்வாறு செய்ய முடியும். உங்களுக்கும் அந்த விருப்பம் இருக்கிறதா? நம்மில் பலர் இயேசுவின் இந்த அன்பான அழைப்பை ஏற்கெனவே ஏற்றுக்கொண்டிருக்கிறோம்; வெளி ஊழியத்திற்குச் செல்கையில் மற்றவர்களுக்கும் இந்த அழைப்பை விடுக்கிறோம்.

3. நாம் இயேசுவைப் பின்பற்றுவதை விட்டுவிலகாதபடி எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்?

3 வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், பைபிளிலுள்ள சத்தியத்தில் ஆர்வம் காட்டிய சிலர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆர்வத்தை இழந்திருக்கிறார்கள்; நாளடைவில் இயேசுவைப் பின்பற்றுவதையே ‘விட்டுவிலகியிருக்கிறார்கள்.’ (எபி. 2:1) நாம் அவ்வாறு விட்டுவிலகாதிருக்க என்ன செய்யலாம்? நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘முதலாவதாக, இயேசுவைப் பின்பற்ற நான் ஏன் தீர்மானித்தேன்? அவரைப் பின்பற்றுவது என்றால் என்ன?’ இந்த இரண்டு கேள்விகளுக்கான பதில்களை நினைவில் வைப்பது, நாம் தேர்ந்தெடுத்த வழியிலேயே நிலைத்திருப்பதற்கான நம் தீர்மானத்தை உறுதிப்படுத்த நமக்கு உதவும். இயேசுவைப் பின்பற்றும்படி மற்றவர்களை ஊக்குவிப்பதற்கும் நமக்கு உதவும்.

ஏன் இயேசுவைப் பின்பற்ற வேண்டும்?

4, 5. நம் தலைவராய் இருப்பதற்கு இயேசு ஏன் தகுதிபெற்றிருக்கிறார்?

4 “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்” என எரேமியா தீர்க்கதரிசி குறிப்பிட்டார். (எரே. 10:23) அவர் சொன்னது உண்மையென சரித்திரம் நிரூபித்திருக்கிறது. அபூரண மனிதரால் தங்களையே வெற்றிகரமாக ஆள முடியாது என்பது மேன்மேலும் வெட்டவெளிச்சமாகி வருகிறது. இயேசுவைப் பின்பற்றுவதற்கான அழைப்பை நாம் ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், அவர் நம் தலைவராய் இருக்கத் தகுதிபெற்றிருக்கிறார் என்பதையும் எந்த மனிதனும் அவருக்கு ஈடாக முடியாது என்பதையும் நாம் அறிந்திருப்பதே. இயேசுவின் தகுதிகள் சிலவற்றை நாம் இப்போது சிந்திக்கலாம்.

5 முதலாவதாக, இயேசுவை நம் தலைவரான மேசியாவாக யெகோவாவே தேர்ந்தெடுத்திருக்கிறார். நமக்குத் தலைவராக யாரை நியமிப்பதென நம் படைப்பாளரைவிட நன்கு தெரிந்தவர் யாரேனும் இருக்க முடியுமா? இரண்டாவதாக, இயேசுவிடம் மெச்சத்தக்க, பின்பற்றத்தக்க நல்ல குணங்கள் இருக்கின்றன. (ஏசாயா 11:​2, 3-⁠ஐ வாசியுங்கள்.) நாம் பின்பற்றுவதற்கு அவர் தலைசிறந்த முன்மாதிரியாய் இருக்கிறார். (1 பே. 2:21) மூன்றாவதாக, அவர் தம்மைப் பின்பற்றுவோர்மீது மிகுந்த அக்கறையுள்ளவராய் இருக்கிறார்; அவர்களுக்காக உயிரையே கொடுத்ததன் மூலம் அதைக் காட்டியிருக்கிறார். (யோவான் 10:​14, 15-⁠ஐ வாசியுங்கள்.) மேலும், அவர் அக்கறையுள்ள ஒரு மேய்ப்பனைப்போல் இருக்கிறார்; இக்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் எதிர்காலத்தில் அற்புதமான நித்திய வாழ்வைப் பெறுவதற்கும் நம்மை வழிநடத்துகிறார். (யோவா. 10:​10, 11; வெளி. 7:​16, 17) இந்தக் காரணங்களுக்காகவும் பிற காரணங்களுக்காகவுமே அவரைப் பின்பற்ற வேண்டுமென்ற ஞானமான தீர்மானத்தை நாம் எடுத்தோம். ஆனால், இயேசுவைப் பின்பற்றுவதில் என்னென்ன விஷயங்கள் உட்பட்டுள்ளன?

6. இயேசுவைப் பின்பற்றுவதில் என்ன உட்பட்டுள்ளது?

6 நாம் கிறிஸ்தவர்கள் என்று வெறுமனே சொல்லிக்கொள்வதால் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக ஆகிவிட முடியாது. இன்று, சுமார் 200 கோடி பேர் தங்களைக் கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக்கொள்கிறார்கள்; ஆனால், அவர்கள் ‘அக்கிரமச் செய்கைக்காரர்’ என்பதை அவர்களுடைய செயல்கள் காட்டுகின்றன. (மத்தேயு 7:21–23-⁠ஐ வாசியுங்கள்.) உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு நாளும் இயேசுவின் போதனைகளின்படியும் முன்மாதிரியின்படியும் வாழ்வார்கள் என்பதை இயேசுவின் அழைப்பை ஏற்று அவரைப் பின்பற்ற விரும்புவோரிடம் நாம் விளக்குகிறோம். இதன் கருத்தைப் புரிந்துகொள்வதற்கு, இயேசுவைப் பற்றி நாம் அறிந்துள்ள சில விஷயங்களைக் கவனிக்கலாம்.

இயேசுவைப்போல் ஞானமாக நடந்துகொள்ளுங்கள்

7, 8. (அ) ஞானம் என்றால் என்ன, இயேசு ஏன் அளவிலா ஞானத்தைப் பெற்றிருந்தார்? (ஆ) இயேசு எவ்வாறு ஞானமாய் நடந்தார், நாம் அவரை எப்படிப் பின்பற்றலாம்?

7 இயேசு அநேக நல்ல குணங்களை வெளிக்காட்டியிருக்கிறார். அவற்றில் நான்கு குணங்களான ஞானம், மனத்தாழ்மை, பக்திவைராக்கியம், அன்பு ஆகியவற்றிற்கு நாம் கவனம் செலுத்தலாம். முதலாவது, அவருடைய ஞானத்தைப் பற்றி, அதாவது அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் நடைமுறையில் பயன்படுத்தும் குணத்தைப் பற்றிச் சிந்திக்கலாம். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.” (கொலோ. 2:3) இயேசுவுக்கு எங்கிருந்து அந்த ஞானம் கிடைத்தது? அவரே இவ்வாறு கூறினார்: “என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன்.” (யோவா. 8:28) ஆம், யெகோவாவிடமிருந்து அவருக்கு அந்த ஞானம் கிடைத்தது; ஆகவே, அவர் சரியான தீர்மானங்களை எடுத்ததில் நமக்கு ஆச்சரியமில்லை, அல்லவா?

8 உதாரணமாக, தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் விஷயத்தில் இயேசு சரியான தீர்மானம் எடுத்தார். தம்முடைய வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்ளத் தீர்மானித்தார்; ஒரே காரியத்தில், அதாவது கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில், அவர் முழு கவனம் செலுத்தினார். கடவுளுடைய ராஜ்யத்தை முதலில் தேடுவதற்குத் தம்முடைய நேரத்தையும் சக்தியையும் ஞானமாகச் செலவிட்டார். இயேசுவின் மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்? நம்முடைய சக்தியையும் கவனத்தையும் அளவுக்கு மீறி எடுத்துக்கொள்கிற அநாவசியமான காரியங்களால் நம்மைப் பாரப்படுத்தாமல், நம் ‘கண்களைத் தெளிவாக’ வைத்துக்கொள்ள முயற்சி செய்வதன் மூலம் நாம் அவரைப் பின்பற்றலாம். (மத். 6:22) கிறிஸ்தவர்கள் பலர் ஊழியத்தில் அதிக நேரம் ஈடுபடுவதற்காகத் தங்களுடைய வாழ்க்கையை எளிமையாக்குவதற்கு முயற்சி எடுத்திருக்கிறார்கள். இதன் மூலம், சிலரால் பயனியர் சேவையில் ஈடுபட முடிந்திருக்கிறது. நீங்களும் இவர்களில் ஒருவரென்றால், உங்களுக்கு சபாஷ்! ‘முதலாவது ராஜ்யத்தைத் தேடுவது’ நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கிறது.​—⁠மத். 6:⁠33.

இயேசுவைப்போல் மனத்தாழ்மையைக் காட்டுங்கள்

9, 10. இயேசு எவ்வாறு மனத்தாழ்மையைக் காட்டினார்?

9 அடுத்ததாக, இயேசுவின் மனத்தாழ்மையைப் பற்றிச் சிந்திக்கலாம். பொதுவாக, அபூரண மனிதருக்கு அதிகாரம் கிடைத்துவிட்டால் தலையில் கிரீடம் வைத்ததுபோல் நடந்துகொள்வார்கள். இந்த விஷயத்தில் இயேசுவுக்கும் அபூரண மனிதருக்கும் எவ்வளவு வித்தியாசம்! யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் இயேசுவுக்கு முக்கிய ஸ்தானம் இருந்தபோதிலும், அவரிடம் கடுகளவுகூட கர்வம் தலைகாட்டவில்லை. அவருடைய மனத்தாழ்மையைப் பின்பற்றும்படி நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.” (பிலி. 2:5–7) இதில் என்ன உட்பட்டிருந்தது?

10 இயேசு பரலோகத்தில் தம் பிதாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்; ஆனாலும், மனமுவந்து ‘தம்மையே வெறுமையாக்கினார்.’ அவருடைய உயிர் ஒரு யூத பெண்ணின் கருப்பைக்கு மாற்றப்பட்டது; ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, ஓர் எளிய தச்சருடைய குடும்பத்தில் சாதாரண குழந்தையாகப் பிறந்தார். யோசேப்புவின் வீட்டில் அவர் குழந்தையாக, சிறுவனாக, இளைஞனாக படிப்படியாய் வளர்ந்து வந்தார். அவர் பாவமற்றவராய் இருந்தார். ஆனாலும், அபூரணரும் பாவிகளுமாய் இருந்த தம் பெற்றோருக்குப் பிள்ளைப் பருவ காலமெல்லாம் கட்டுப்பட்டு நடந்தார். (லூக். 2:​51, 52) எப்பேர்ப்பட்ட மனத்தாழ்மை!

11. இயேசு காட்டிய மனத்தாழ்மையை நாம் எவ்விதங்களில் பின்பற்றலாம்?

11 அற்பமாகத் தெரியும் வேலைகளைக்கூட மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு செய்யும்போது நாம் இயேசுவைப்போல் மனத்தாழ்மையைக் காட்டுகிறோம். உதாரணமாக, நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையை எடுத்துக்கொள்ளுங்கள். அது அற்பமான வேலையாகத் தோன்றலாம்; முக்கியமாக, ஜனங்கள் நம்மை அலட்சியம் செய்யும்போது, கேலி கிண்டல் செய்யும்போது, அல்லது எதிர்க்கும்போது அவ்வாறு தோன்றலாம். என்றாலும், விடாமல் பிரசங்க வேலையைச் செய்கையில், இயேசு கொடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுகிறோம். இவ்வாறு, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவர்களுக்கு உதவுகிறோம். (2 தீமோத்தேயு 4:1–5-⁠ஐ வாசியுங்கள்.) மற்றொரு வேலை ராஜ்ய மன்றத்தைப் பராமரிப்பதாகும். குப்பைகளை அகற்றுவது, தரையைத் துடைப்பது, கழிவறைகளைச் சுத்தம் செய்வது போன்ற சாதாரண வேலைகள் இதில் அடங்கும். இருந்தாலும், நம் வட்டாரத்தில் தூய வணக்கத்திற்கு மையமாகத் திகழும் ராஜ்ய மன்றத்தைப் பராமரிப்பது நம்முடைய பரிசுத்த சேவையின் பாகம் என்பதை அறிந்திருக்கிறோம். அற்பமாகத் தோன்றும் வேலைகளை மனமுவந்து செய்வதன் மூலம் நாம் மனத்தாழ்மையைக் காட்டுகிறோம்; இவ்வாறு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறோம்.

இயேசுவைப்போல் பக்திவைராக்கியம் காட்டுங்கள்

12, 13. (அ) இயேசு எவ்வாறு பக்திவைராக்கியத்தைக் காட்டினார், அதைக் காட்ட எது அவரைத் தூண்டியது? (ஆ) ஊழியத்தில் பக்திவைராக்கியத்துடன் ஈடுபடுவதற்கு எது நம்மைத் தூண்டும்?

12 ஊழியத்தில் இயேசு பக்திவைராக்கியத்துடன், அதாவது தணியாத ஆர்வத்துடன் ஈடுபட்டதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அவர் பூமியில் இருந்தபோது அநேக காரியங்களைச் செய்தார் என்பது உண்மைதான். உதாரணமாக, சிறு வயதில் தமது வளர்ப்புத் தகப்பனாகிய யோசேப்புக்குத் தச்சு வேலையில் அவர் உதவியிருப்பார்; ஊழியம் செய்த சமயத்தில் சுகவீனரைச் சுகப்படுத்தினார், மரித்தோரை உயிர்த்தெழுப்பினார், இன்னும் பல அற்புதங்களைச் செய்தார். ஆனால், நற்செய்தியைப் பிரசங்கிப்பதும் கேட்க மனமுள்ளோருக்குப் போதிப்பதுமே அவருடைய முக்கிய வேலையாக இருந்தது. (மத். 4:23) அவரைப் பின்பற்றுவோரான நாமும் இதே வேலையைச் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் நாம் எவ்வாறு இயேசுவின் மாதிரியைப் பின்பற்றலாம்? அதற்கு ஒரு வழி, இயேசு என்ன மனநிலையோடு அந்த வேலையைச் செய்தாரோ அதே மனநிலையை நாமும் வளர்த்துக்கொள்வதாகும்.

13 மிக முக்கியமாக, கடவுள் மீதுள்ள அன்பே பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் இயேசுவைத் தூண்டியது. அதே சமயத்தில், அவர் தாம் போதித்த சத்தியங்களை நேசித்தார். அந்தச் சத்தியங்களை விலைமதிப்புள்ள பொக்கிஷங்கள்போல் அவர் கருதினார்; அதனால், அவற்றைப் பற்றி மற்றவர்களிடம் மிகுந்த ஆர்வத்தோடு பேசினார். ‘தேறின வேதபாரகராகிய,’ அதாவது மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பவர்களாகிய நாமும் அவ்வாறே உணருகிறோம். பைபிளிலிருந்து நாம் கற்றுக்கொண்ட அருமையான சத்தியங்கள் சிலவற்றைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்! உன்னத அரசதிகாரம் பற்றிய விவாதத்தையும் அது எப்படிச் சரிசெய்யப்படும் என்பதையும் நாம் புரிந்திருக்கிறோம். இறந்தவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் புதிய உலகில் கடவுள் பொழியப்போகும் ஆசீர்வாதங்களையும் பற்றி நாம் நன்கு அறிந்திருக்கிறோம். இந்தச் சத்தியங்களை எல்லாம் நாம் சமீபத்தில் கற்றிருந்தாலும் சரி பல வருடங்களுக்கு முன் கற்றிருந்தாலும் சரி, இவை அரும்பெரும் பொக்கிஷங்கள்; இவற்றின் மதிப்பு குறைவதே இல்லை. (மத்தேயு 13:​52-⁠ஐ வாசியுங்கள்.) நாம் உள்ளப்பூர்வமான ஆர்வத்தோடு பிரசங்கிப்பதன் மூலம் யெகோவா நமக்குக் கற்றுத் தந்துள்ள சத்தியங்களை நேசிக்கிறோம் என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

14. இயேசு போதித்த விதத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்?

14 இயேசு போதித்த விதத்தையும் கவனியுங்கள். அவர் எப்போதும் வேத வசனங்களைப் பயன்படுத்தியே மக்களிடம் பேசினார். முக்கியமான குறிப்பைத் தெரிவித்தபோதெல்லாம் “எழுதியிருக்கிறதே” என்று அடிக்கடி குறிப்பிட்டார். (மத். 4:4; 21:13) எபிரெய வேதாகமத்திலுள்ள பாதிக்கும் அதிகமான புத்தகங்களிலிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர் மேற்கோள்கள் காட்டியதை பைபிளில் வாசிக்கிறோம். இயேசுவைப் போல நாமும் ஊழியத்தில் எப்போதும் பைபிளிலிருந்தே பேசுகிறோம்; அதோடு, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பைபிள் வசனங்களை விளக்கிக்காட்ட முயலுகிறோம். இப்படிச் செய்யும்போது நாம் சொந்த கருத்துக்களைக் கற்றுக்கொடுக்காமல் கடவுளுடைய கருத்துக்களையே கற்றுக்கொடுக்கிறோம் என்பதை நல்மனம் படைத்தவர்கள் புரிந்துகொள்ள உதவுகிறோம். பைபிளிலிருந்து வசனங்களை வாசிப்பதற்கும் அவற்றின் மதிப்பையும் அர்த்தத்தையும் பற்றிக் கலந்துபேசுவதற்கும் ஒருவர் ஒத்துக்கொள்ளும்போது நமக்குள் சந்தோஷம் பொங்குகிறதல்லவா? அப்படிப்பட்டவர்கள் இயேசுவை பின்பற்றுவதற்கான அழைப்பை ஏற்றுக்கொள்ளும்போது நாம் அளவிலா ஆனந்தம் அடைகிறோம்.

இயேசுவைப்போல் பிறரை நேசியுங்கள்

15. இயேசுவின் தலைசிறந்த குணம் என்ன, அதைப் பற்றிச் சிந்திப்பது நம்மை எப்படிப் பாதிக்கிறது?

15 இயேசுவின் குணங்களில் நாம் கடைசியாகச் சிந்திக்கவிருக்கும் குணம் நம் மனதை நெகிழ வைக்கிறது; அதுதான் மனிதர் மீதுள்ள அன்பு. “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது,” அதாவது தூண்டியெழுப்புகிறது என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 கொ. 5:14) மனிதர் எல்லார்மீதும், சொல்லப்போனால் நம் ஒவ்வொருவர்மீதும் அவருக்கு இருக்கிற அன்பைப் பற்றிச் சிந்திக்கையில் நம் உள்ளம் சிலிர்க்கிறது; அதுமட்டுமல்ல, அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற நாம் தூண்டியெழுப்பப்படுகிறோம்.

16, 17. மற்றவர்கள் மீதுள்ள அன்பை இயேசு எவ்வழிகளில் காட்டினார்?

16 இயேசு எப்படி மற்றவர்களிடம் அன்பு காட்டினார்? மனிதருக்காகத் தம்முடைய உயிரையே கொடுக்க முன்வந்தது அவருடைய அன்புக்கு மாபெரும் அத்தாட்சியை அளிக்கிறது. (யோவா. 15:13) என்றாலும், அவர் ஊழியம் செய்த சமயத்தில் பிற வழிகளிலும் மனிதரிடம் அன்பு காட்டினார். எடுத்துக்காட்டாக, கஷ்டப்படுகிறவர்களைப் பார்த்து அவர் இரக்கப்பட்டார். லாசரு இறந்துபோன சமயத்தில் மரியாளும் அவளோடு இருந்தவர்களும் தேம்பித் தேம்பி அழுத காட்சி அவருடைய நெஞ்சைப் பிழிந்தது. லாசருவை அவர் உயிர்த்தெழுப்பவிருந்தது உண்மைதான்; என்றாலும், துக்கம் தாளாமல் ‘கண்ணீர் விட்டு’ அழுதார்.​—⁠யோவா. 11:32–35.

17 இயேசு ஊழியம் செய்ய ஆரம்பித்த சமயத்தில், ஒரு குஷ்டரோகி அவரிடம் வந்து, “உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்” என்று சொன்னான். இயேசு எப்படி உணர்ந்தார்? ‘அவர் மனதுருகினார்’ என பைபிள் சொல்கிறது. அதன் பிறகு யாருமே செய்யாத ஒரு காரியத்தை செய்தார். அவர் “கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான்.” நியாயப்பிரமாண சட்டத்தின்படி குஷ்டரோகிகள் அசுத்தமானவர்கள்; ஆகவே, இயேசுவால் அந்த மனிதனைத் தொடாமலேயே குணப்படுத்தியிருக்க முடியும். இருந்தாலும், அவனைத் தொட்டு குணப்படுத்தியபோது, மனித ஸ்பரிசத்தை, அதாவது தொடு உணர்ச்சியை, உணர்ந்துகொள்ள அவனுக்கு வாய்ப்பு கொடுத்தார்; பல வருடங்களுக்குப் பின் முதன்முறையாக அவனுக்குக் கிடைத்த வாய்ப்பாக அது இருந்திருக்கலாம். இயேசு எவ்வளவு கனிவோடும் பரிவோடும் நடந்துகொண்டார்!​—⁠மாற். 1:40–42.

18. நாம் எப்படி ‘இரக்கம்’ காட்ட முடியும்?

18 கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாகிய நாம் ‘இரக்கத்தோடு’ நடந்துகொள்வதன் மூலம் நம் அன்பை வெளிக்காட்ட வேண்டுமென்ற கட்டளையைப் பெற்றிருக்கிறோம். (1 பே. 3:8) தீராத வியாதியால் அல்லது மிகுந்த மனச்சோர்வால் அவதிப்படுகிற ஒரு கிறிஸ்தவரின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது நமக்குக் கடினமாய் இருக்கலாம்; முக்கியமாக, அப்படிப்பட்ட கஷ்டங்களை நாம் அனுபவித்ததே இல்லையென்றால் அவரைப் புரிந்துகொள்வது கடினமாய் இருக்கலாம். ஆனால், இயேசுவுக்கு வியாதியே வந்ததில்லையென்றாலும் வியாதிப்பட்டவர்களைப் பார்த்து இரக்கப்பட்டார். அவரைப்போல் நாமும் எப்படி இரக்கம் காட்டலாம்? கஷ்டப்படுகிறவர்கள் தங்களுடைய கவலைகளை நம்மிடம் மனந்திறந்து சொல்லும்போது பொறுமையாய் கேட்பதன் மூலம் இரக்கம் காட்டலாம். ‘நான் அவர்களுடைய சூழ்நிலையில் இருந்தால் எப்படி உணருவேன்?’ என்றும் நம்மையே கேட்டுக்கொள்ளலாம். மற்றவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக்கொண்டால், ‘சோகமாயிருப்பவர்களிடம் ஆறுதலாகப் பேச’ நம்மால் முடியும். (1 தெ. 5:​14, NW) இப்படிச் செய்வதன் மூலம் நாம் இயேசுவைப் பின்பற்றுவோம்.

19. இயேசுவின் முன்மாதிரி என்ன செய்ய நம்மைத் தூண்டுகிறது?

19 இயேசு கிறிஸ்துவின் சொல்லிலிருந்தும் செயலிலிருந்தும் நாம் கற்றுக்கொண்ட விஷயங்கள் எத்தனை, எத்தனை! அவரைப் பற்றி நாம் எந்தளவுக்கு அதிகமாகக் கற்றுக்கொள்கிறோமோ அந்தளவுக்கு அதிகமாக அவரைப்போல் நடக்கவும் அவ்வாறு நடக்க மற்றவர்களுக்கு உதவவும் விரும்புவோம். ஆகவே, கடவுளால் நியமிக்கப்பட்ட அரசராகிய இயேசுவைப் பின்பற்றுவதில் இன்றும் என்றும் மகிழ்ச்சி காண்போமாக!

சிந்திப்பதற்கு

• இயேசுவைப்போல் நாம் எவ்வாறு ஞானமாய் நடக்கலாம்?

• மனத்தாழ்மையை நாம் எவ்விதங்களில் காட்டலாம்?

• பக்திவைராக்கியத்தோடு நாம் எவ்வாறு ஊழியம் செய்யலாம்?

• இயேசுவைப் பின்பற்றி எவ்வழிகளில் மற்றவர்கள்மீது அன்பு செலுத்தலாம்?

[பக்கம் 5-ன் பெட்டி/படம்]

கிறிஸ்துவைப் பின்பற்ற நமக்கு உதவும் புத்தகம்

2007 மாவட்ட மாநாட்டில் 192 பக்க புத்தகம் ஒன்று ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அதன் தலைப்பு ‘என்னைப் பின்பற்றி வாருங்கள்’ என்பதாகும். கிறிஸ்தவர்கள் இயேசுவின்மீது, முக்கியமாக அவருடைய குணங்கள் மீதும் செயல்கள் மீதும் தங்களுடைய கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்காக இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் இரண்டு அதிகாரங்களுக்குப் பிறகு கொடுக்கப்பட்டுள்ள ஒன்றாம் பகுதியில், இயேசுவின் தலைசிறந்த குணங்களான மனத்தாழ்மை, தைரியம், ஞானம், கீழ்ப்படிதல், சகிப்புத்தன்மை ஆகியவற்றைப் பற்றிச் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து வரும் பகுதிகளில், ஒரு போதகராகவும் நற்செய்தியைப் பிரசங்கிப்பவராகவும் இயேசு செய்த காரியங்களையும் அவர் அன்பு காட்டிய சில வழிகளையும் பற்றி விளக்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் முழுவதிலும் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்கள் இயேசுவைப் பின்பற்ற கிறிஸ்தவர்களுக்கு உதவுகின்றன.

நாம் எல்லாரும் நம்மையே சோதித்துப் பார்த்து, ‘நான் உண்மையிலேயே இயேசுவைப் பின்பற்றுகிறேனா? நான் அவரை இன்னும் அதிகமாக எப்படிப் பின்பற்ற முடியும்?’ என்று கேட்டுக்கொள்ள இப்புத்தகம் தூண்டும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதோடு, “முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மை உடைய” எல்லாரும் கிறிஸ்துவைப் பின்பற்ற இப்புத்தகம் உதவும்.​—⁠அப். 13:​48, NW.

[பக்கம் 4-ன் படம்]

பூமியில் ஒரு மனிதனாய் பிறப்பதற்கு இயேசு சம்மதித்தார். இதற்கு என்ன குணம் தேவைப்பட்டது?

[பக்கம் 6-ன் படம்]

பக்திவைராக்கியத்துடன் ஊழியம் செய்ய எது நம்மைத் தூண்டும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்