“நான் உங்களுக்குச் செய்தபடியே நீங்களும் செய்ய வேண்டும் என்பதற்காக உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.” —யோவா. 13:15.
1, 2. கடைசி இரவன்று இயேசு தமது அப்போஸ்தலர்களுக்கு என்ன பாடம் கற்பித்தார்?
பூமியில் இயேசுவின் கடைசி இரவு. எருசலேமிலுள்ள ஒரு வீட்டு மாடி அறையில் அவர் தமது அப்போஸ்தலர்களுடன் இருக்கிறார். இரவு விருந்து நடக்கிறது. அப்போது அவர் எழுந்து தம் மேலங்கியைக் கழற்றி வைக்கிறார். ஒரு துண்டை எடுத்து தம் இடுப்பில் கட்டிக்கொள்கிறார். பின்பு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, தமது சீடர்களின் பாதங்களைக் கழுவி, அந்தத் துண்டினால் துடைக்க ஆரம்பிக்கிறார். அதன்பின், தமது மேலங்கியைப் போட்டுக்கொள்கிறார். இயேசு ஏன் இந்தத் தாழ்மையான வேலையைச் செய்கிறார்?—யோவா. 13:3-5.
2 இயேசுவே விளக்கமளிக்கிறார்: “நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று புரிந்துகொண்டீர்களா? . . . எஜமானாகவும் போதகராகவும் இருக்கிற நானே உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய பாதங்களை ஒருவர் கழுவ வேண்டும். நான் உங்களுக்குச் செய்தபடியே நீங்களும் செய்ய வேண்டும் என்பதற்காக உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.” (யோவா. 13:12-15) இப்படியொரு தாழ்மையான வேலையைச் செய்ய முன்வந்ததன் மூலம் தம்மைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு அவர் உதவினார். அந்தப் பாடம் அவர்களுடைய மனதில் நீங்கா இடம்பெற்றது; வரவிருந்த நாட்களில் மனத்தாழ்மையுடன் நடந்துகொள்ள அவர்களுக்கு ஊக்கமளித்தது.
3. (அ) மனத்தாழ்மை காட்டுவதன் முக்கியத்துவத்தை இயேசு இரண்டு சந்தர்ப்பங்களில் எப்படி வலியுறுத்தினார்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிச் சிந்திப்போம்?
3 மனத்தாழ்மையின் முக்கியத்துவத்தை இயேசு தமது அப்போஸ்தலர்களுக்கு வலியுறுத்திக் காட்டியது அது முதல் தடவை அல்ல. அதற்குமுன் ஒரு சந்தர்ப்பத்தில், சில அப்போஸ்தலர்களிடையே போட்டி மனப்பான்மை தலைதூக்கியபோது, இயேசு ஒரு சிறுபிள்ளையைத் தம் பக்கத்தில் நிறுத்தி, “இந்தச் சிறுபிள்ளையை என் பெயரை முன்னிட்டு ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை அனுப்பியவரை ஏற்றுக்கொள்கிறான். உங்கள் எல்லாருக்குள்ளும் யார் தன்னைச் சிறியவனாக நடத்திக்கொள்கிறானோ அவனே உயர்ந்தவனாக இருப்பான்” என்று அவர்களிடம் சொன்னார். (லூக். 9:46-48) பரிசேயர்கள் முதன்மையான இடத்தைப் பெறவே துடிக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்திருந்ததால், “தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்று மற்றொரு சந்தர்ப்பத்தில் சொன்னார். (லூக். 14:11) தம்முடைய சீடர்கள் ஆணவமும் அகங்காரமும் இல்லாமல் மனத்தாழ்மையுடன் இருக்க வேண்டுமென்று இயேசு விரும்பினார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. அவரை நாம் பின்பற்ற வேண்டும் என்பதால், மனத்தாழ்மைக்கு மாதிரியாகத் திகழ்ந்த அவருடைய உதாரணத்தை இப்போது கவனமாய்ச் சிந்திப்போம். ஒருவர் மனத்தாழ்மை காட்டுவது அவருக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் எப்படி நன்மை அளிக்கிறது என்பதையும் சிந்திப்போம்.
“நான் பின்வாங்கவில்லை”
4. கடவுளுடைய ஒரே மகன் பூமிக்கு வரும் முன்னரே எப்படி மனத்தாழ்மை காட்டினார்?
4 கடவுளுடைய ஒரே மகன் பூமிக்கு வரும் முன்னரே மனத்தாழ்மை காட்டினார். மனிதராகப் பிறப்பதற்குமுன், தம் பரலோகத் தகப்பனோடு கோடானுகோடி வருடங்கள் வாழ்ந்தார். தகப்பனுக்கும் மகனுக்கும் இடையே நிலவிய நெருங்கிய பந்தத்தைப் பற்றி ஏசாயா புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப் போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச் செய்கிறார். யெகோவாவாகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை நான் பின்வாங்கவுமில்லை.’ (ஏசா. 50:4, 5) யெகோவா கற்றுத்தந்த விஷயங்களுக்கு அவருடைய மகன் கூர்ந்த கவனம் செலுத்தியதன் மூலம் மனத்தாழ்மையை வெளிக்காட்டினார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஆவலுள்ளவராக, மனமுள்ளவராக இருந்தார். பாவப்பட்ட மனிதர்களிடம் யெகோவா எந்தளவுக்கு மனத்தாழ்மையுடன் இரக்கம் காட்டினார் என்பதையும் உன்னிப்பாகக் கவனித்திருப்பார்.
5. தலைமைத் தூதர் மிகாவேலாக, இயேசு எப்படி மனத்தாழ்மைக்கும் தன்னடக்கத்திற்கும் மாதிரியாகத் திகழ்ந்தார்?
5 வருத்தகரமாக, பரலோகத்திலிருந்த எல்லாத் தேவதூதர்களுமே கடவுளுடைய ஒரே மகனின் மனப்பான்மையை வெளிக்காட்டவில்லை. சாத்தானாக மாறிய ஒரு தேவதூதன் கடவுளிடமிருந்து மனத்தாழ்மையைக் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, ஆணவமாகவும் அகங்காரமாகவும் நடந்து, அவருக்கு விரோதமாகக் கலகம் செய்தான். ஆனால் இயேசு, பரலோகத்தில் தமக்கிருந்த ஸ்தானத்தைக் குறித்து அதிருப்தி அடையவும் இல்லை, தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தவும் இல்லை. “மோசேயின் உடலைக் குறித்துத் தலைமைத் தூதராகிய மிகாவேலுக்கும் பிசாசுக்கும் விவாதம் உண்டானபோது,” மிகாவேலான இயேசு அதிகாரத்தைத் தம் கையில் எடுத்துக்கொள்ளாமல் மனத்தாழ்மையையும் தன்னடக்கத்தையும் காட்டினார். சர்வலோக நியாயாதிபதியான யெகோவா தமக்கே உரிய வழியில், தமக்கே உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதற்காகக் காத்திருந்தார்.—யூதா 9-ஐ வாசியுங்கள்.
6. மேசியாவாக வருவதற்கு ஒப்புக்கொண்டதில் இயேசு எப்படி மனத்தாழ்மையை வெளிக்காட்டினார்?
6 பூமிக்கு வரும் முன்னரே ஏராளமான விஷயங்களைத் தெரிந்திருந்த இயேசுவுக்கு, மேசியானிய தீர்க்கதரிசனங்களைப் பற்றிய விவரங்களும் தெரிந்திருந்தன. அப்படியானால், பூமியில் தாம் படப்போகும் பாடுகளைப் பற்றியும் ஒருவேளை அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும், வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக பூமியில் வாழ்ந்து, இறந்துபோவதற்கு அவர் ஒப்புக்கொண்டார். ஏன்? அவருடைய மனத்தாழ்மையே அதற்குக் காரணம்; இதைச் சிறப்பித்துக் காட்டும் விதத்தில் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “அவர் கடவுளுடைய சாயலில் இருந்தபோதிலும், கடவுளுடைய ஸ்தானத்தைப் பறித்துக்கொள்ளவோ அவருக்குச் சமமாயிருக்கவோ நினைக்கவில்லை; மாறாக, தமக்கிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓர் அடிமையைப் போலானார், அவர் ஒரு மனிதரானார்.”—பிலி. 2:6, 7.
ஒரு மனிதராக, ‘தம்மையே தாழ்த்தினார்’
மனத்தாழ்மைக்கு முன்மாதிரியாய்த் திகழ்ந்த இயேசுவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
7, 8. இயேசு சிறுபிள்ளையாக இருந்த சமயத்திலும், ஊழியம் செய்த காலத்திலும் எப்படியெல்லாம் மனத்தாழ்மை காட்டினார்?
7 இயேசு “மனிதராக வந்தபோது சாகுமளவுக்கு, ஆம், கழுமரத்தில் சாகுமளவுக்கு, தம்மையே தாழ்த்திக் கீழ்ப்படிதலைக் காட்டினார்” என்றும் பவுல் எழுதினார். (பிலி. 2:8) இயேசு சிறுபிள்ளையாக இருந்த சமயத்திலிருந்தே மனத்தாழ்மைக்கு மாதிரியாய்த் திகழ்ந்தார். தம்முடைய பெற்றோரான யோசேப்பும் மரியாளும் அபூரணர்களாக இருந்தபோதிலும் மனத்தாழ்மையோடு அவர்களுக்கு “கட்டுப்பட்டு நடந்தார்.” (லூக். 2:51) சிறுபிள்ளைகளுக்கு எப்பேர்ப்பட்ட அருமையான முன்மாதிரி! பெற்றோர்களுக்கு மனப்பூர்வமாகக் கட்டுப்பட்டு நடக்கும் பிள்ளைகளைக் கடவுள் நிச்சயம் ஆசீர்வதிப்பார்!
8 இயேசு வளர்ந்து ஆளானபோதும்கூட மனத்தாழ்மை காட்டினார்; தம்முடைய சித்தத்திற்குப் பதிலாக யெகோவாவுடைய சித்தத்திற்கே முதலிடம் கொடுத்தார். (யோவா. 4:34) ஊழியம் செய்த காலத்தில், கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினார்; கடவுளுடைய குணங்களையும் மனிதகுலத்திற்கான அவருடைய நோக்கத்தையும் பற்றிய திருத்தமான அறிவைப் பெற நல்மனமுள்ளவர்களுக்கு உதவினார். யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொடுத்த விஷயங்களுக்கு இசைவாக வாழ்ந்தார். உதாரணத்திற்கு, மாதிரி ஜெபத்தில் இயேசு குறிப்பிட்ட முதல் விஷயம், “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்பதே. (மத். 6:9) இவ்வாறு, தம்முடைய சீடர்கள் யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துவதற்கே முதலிடம் தரவேண்டுமென அவர் கற்பித்தார், கற்பித்ததைக் கடைப்பிடித்தார். அதனால்தான், தம் ஊழியக் காலத்தின் இறுதியில் அவரால் இப்படி ஜெபம் செய்ய முடிந்தது: “இவர்களுக்கு [அப்போஸ்தலர்களுக்கு] உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன்.” (யோவா. 17:26) பூமியிலிருந்தபோது தாம் செய்த எல்லாக் காரியங்களுக்கும் அவர் யெகோவாவுக்கே மகிமை சேர்த்தார்.—யோவா. 5:19.
9. மேசியாவைக் குறித்து சகரியா என்ன தீர்க்கதரிசனத்தை எழுதினார், இது எப்படி இயேசுவில் நிறைவேறியது?
9 மேசியாவைக் குறித்து சகரியா ஒரு தீர்க்கதரிசனத்தை எழுதினார்: “சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்: அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.” (சக. 9:9) கி.பி. 33, பஸ்கா பண்டிகைக்குமுன் இயேசு எருசலேமுக்குள் பவனி வந்த சமயத்தில் இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது. அப்போது, வழியில் மக்கள் தங்களுடைய மேலங்கிகளை விரித்தார்கள், பனை ஓலைகளையும் பரப்பினார்கள். முழு நகரமே அவருடைய வருகையால் பரபரப்பானது. ஜனங்கள் அவரை ராஜாவென்று ஆர்ப்பரித்த சமயத்தில்கூட அவர் மனத்தாழ்மையோடு இருந்தார்.—மத். 21:4-11.
10. இயேசு சாகும்வரை கீழ்ப்படிதலைக் காட்டியதன் மூலம் எதையெல்லாம் நிரூபித்தார்?
10 இயேசு கிறிஸ்து கழுமரத்தில் சாகும்வரை, ஆம் கடைசிவரை, மனத்தாழ்மையையும் கீழ்ப்படிதலையும் காட்டினார். இவ்வாறு, கடும் சோதனையிலும் மனிதர்கள் யெகோவாவுக்குப் பற்றுள்ளவர்களாக இருக்க முடியும் என்பதைச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்தார். மனிதர்கள் சுயநல காரணங்களுக்காகவே யெகோவாவைச் சேவிக்கிறார்கள் என்ற சாத்தானின் குற்றச்சாட்டு பொய் என்பதையும் நிரூபித்தார். (யோபு 1:9-11; 2:4) யெகோவாவின் சர்வலோகப் பேரரசாட்சியே சரியானது, நீதியானது என்பதையும் நிரூபித்தார். இப்படி, தம் மகன் மனத்தாழ்மைக்கு மாதிரியாகவும் உத்தமத்தில் உறுதியாகவும் இருந்ததைப் பார்த்து யெகோவா நிச்சயம் அகமகிழ்ந்திருப்பார்!—நீதிமொழிகள் 27:11-ஐ வாசியுங்கள்.
11. இயேசுமீது விசுவாசம் வைப்பவர்கள் என்ன நம்பிக்கையைப் பெற அவருடைய மீட்புப் பலி வழிசெய்திருக்கிறது?
11 இயேசு கழுமரத்தில் உயிர்த்தியாகம் செய்ததன் மூலம் மனிதகுலத்திற்கான மீட்புவிலையை அளித்தார். (மத். 20:28) அவருடைய மீட்புப் பலி, கடவுளது நீதிக்கு இசைய அபூரண மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், என்றென்றும் வாழும் வாய்ப்பை அவர்கள் பெறுவதற்கும் வழிசெய்திருக்கிறது. “ஒரே மனிதனுடைய நீதியான செயலினால் பலதரப்பட்ட ஆட்களும் வாழ்வு பெறும்படி நீதிமான்களாக அங்கீகரிக்கப்படுவார்கள்” என்று பவுல் எழுதினார். (ரோ. 5:18) ஆம், சில கிறிஸ்தவர்கள் பரலோகத்தில் சாவாமையுள்ள வாழ்வைப் பெறவும், ‘வேறே ஆடுகளான’ மற்றவர்கள் பூமியில் முடிவில்லா வாழ்வைப் பெறவும் இயேசுவின் மீட்புப் பலி வழிசெய்திருக்கிறது.—யோவா. 10:16; ரோ. 8:16, 17.
‘மனத்தாழ்மையாக இருக்கிறேன்’
12. இயேசு அபூரண மனிதர்களிடம் எப்படிச் சாந்தமாகவும் மனத்தாழ்மையாகவும் நடந்துகொண்டார்?
12 ‘உழைத்துக் களைத்து, பெருஞ்சுமை சுமந்த’ எல்லோரையும் இயேசு தம்மிடம் வரும்படி அன்பாக அழைத்தார். “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; அதனால் என் நுகத்தை உங்கள்மீது ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்” என்று சொன்னார். (மத். 11:28, 29) இயேசு சாந்தமாகவும் மனத்தாழ்மையாகவும் இருந்ததால், அபூரண மனிதர்களிடம் கருணை காட்டினார், பாகுபாடில்லாமல் நடந்துகொண்டார். தம் சீடர்களிடம் அளவுக்கதிகமாக அவர் எதிர்பார்க்கவில்லை. அவர்களைப் பாராட்டினார், ஊக்கப்படுத்தினார். அவர்களை லாயக்கற்றவர்களாகவோ தகுதியற்றவர்களாகவோ உணரும்படி செய்யவில்லை. அவர்களிடம் கடுகடுப்பாக நடந்துகொள்ளவில்லை, அவர்களை அடக்கி ஒடுக்கவும் இல்லை. மாறாக, தம்மிடம் நெருங்கி வந்தால்... தம் போதனைகளைக் கடைப்பிடித்தால்... அவர்கள் புத்துணர்ச்சி அடைவார்கள் என்று உறுதியளித்தார்; காரணம், அவருடைய நுகம் மென்மையாகவும், அவருடைய சுமை லேசாகவும் இருந்தது. அதனால் ஆண்கள், பெண்கள், சிறியோர், பெரியோர் என எல்லோரும் அவரிடம் சகஜமாகப் பழகினார்கள்.—மத். 11:30.
கரிசனை காட்டியதில் மாணிக்கமாய் திகழ்ந்தார் இயேசு!
13. பாவப்பட்ட மக்களுக்கு இயேசு எப்படிக் கரிசனை காட்டினார்?
13 சாதாரண மக்கள் மத்தியில் வாழ்ந்த இயேசு, அவர்களுடைய பாவப்பட்ட நிலையைக் கண்டு பரிதவித்து அவர்கள்மீது கரிசனை காட்டினார், அவர்களுடைய தேவைகளை அன்பாகப் பூர்த்தி செய்தார். ஒருசமயம், அவர் எரிகோவுக்கு அருகே வந்தபோது பார்வையற்ற இரண்டு பிச்சைக்காரர்கள் பாதையோரம் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவன் பெயர் பர்திமேயு. மற்றொருவன் பெயர் பைபிளில் குறிப்பிடப்படவில்லை. இயேசு தங்களுக்கு இரக்கம் காட்டும்படி அவர்கள் இருவரும் விடாமல் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். அமைதியாக இருக்கும்படி கூட்டத்தார் அவர்களை அதட்டினார்கள். இயேசு அவர்களுடைய கூக்குரலைக் கண்டுகொள்ளாமல் போயிருக்கலாம். ஆனால், அவர் அப்படிப் போகாமல் அவர்களைத் தம்மிடம் அழைத்து வரும்படி சொன்னார்; மனதுருகி அவர்களுக்குப் பார்வை அளித்தார். ஆம், பாவப்பட்ட மக்களிடம் இயேசு தம் தகப்பனைப் போலவே மனத்தாழ்மை காட்டினார், இரக்கம் காட்டினார்.—மத். 20:29-34; மாற். 10:46-52.
“தன்னைத்தானே தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான்”
14. இயேசுவின் மனத்தாழ்மை என்ன நன்மைகளுக்கு வழிவகுத்திருக்கிறது?
14 இயேசுவின் மனத்தாழ்மை சந்தோஷத்திற்கும் ஏராளமான நன்மைகளுக்கும் வழிவகுத்திருக்கிறது. தம் அன்பு மகன் மனத்தாழ்மையோடு தம்முடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்ததைக் கண்டு யெகோவா சந்தோஷப்பட்டார். இயேசு சாந்தமாகவும் மனத்தாழ்மையாகவும் நடந்துகொண்டதால், அப்போஸ்தலர்களும் மற்ற சீடர்களும் புத்துணர்ச்சி அடைந்தார்கள். அவருடைய முன்மாதிரி, போதனை, பாராட்டு எல்லாமே அவர்கள் ஆன்மீக முன்னேற்றம் செய்யத் தூண்டுகோலாய் இருந்தன. இயேசு காட்டிய மனத்தாழ்மையிலிருந்து சாதாரண மக்களும் நன்மை அடைந்தார்கள்; ஆம், அவரிடமிருந்து உதவி பெற்றார்கள், போதனைகளைப் பெற்றார்கள், ஊக்கத்தையும் பெற்றார்கள். அவர்கள் மட்டுமல்ல, விசுவாசமுள்ள அனைவருமே இயேசுவின் மீட்புப் பலியிலிருந்து நீண்டகால நன்மைகளைப் பெறுவார்கள்.
15. இயேசுவின் மனத்தாழ்மை அவருக்கு எப்படி நன்மை அளித்தது?
15 இயேசுவின் மனத்தாழ்மை அவருக்கே நன்மை அளித்ததா? ஆம். “தன்னைத்தானே தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான்” என்று அவரே தம் சீடர்களிடம் சொல்லியிருந்தார். (மத். 23:12) அவருடைய வார்த்தைகள் அவரது விஷயத்திலேயே உண்மையாயின. “கடவுள் அவரை மேலான நிலைக்கு உயர்த்தி, மற்றெல்லாப் பெயர்களுக்கும் மேலான பெயரை அவருக்குத் தந்தருளினார்; பரலோகத்திலும் பூமியிலும் மண்ணுக்குள்ளும் இருக்கிற எல்லாரும் இயேசுவின் பெயரில் முழங்கால்படியிட வேண்டும் என்பதற்காகவும், இயேசு கிறிஸ்துவே எஜமானர் என எல்லா நாவுகளும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அப்படிச் செய்தார்; இவையெல்லாம், பரலோகத் தகப்பனாகிய கடவுளுடைய மகிமைக்கே” என்று பவுல் விளக்கினார். இயேசு பூமியிலிருந்தபோது மனத்தாழ்மையோடும் விசுவாசத்தோடும் நடந்துகொண்டதால், பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள எல்லோர்மீதும் அதிகாரம் செலுத்தும்படி யெகோவா அவரை உயர்த்தினார்.—பிலி. 2:9-11.
இயேசு ‘மனத்தாழ்மையுள்ளோரைக் காப்பாற்ற போர் புரிவார்’
16. கடவுளுடைய மகனின் செயல்கள் ஒவ்வொன்றிலும் மனத்தாழ்மை எப்படிப் பளிச்சிட்டுக்கொண்டே இருக்கும்?
16 கடவுளுடைய மகனின் செயல்கள் ஒவ்வொன்றிலும் மனத்தாழ்மை பளிச்சிட்டுக்கொண்டே இருக்கும். பரலோகத்தில் ஓர் உயர்ந்த ஸ்தானத்திலிருந்தபடி அவர் தம்முடைய எதிரிகள்மீது எப்படி நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதைச் சங்கீதக்காரன் ஒரு பாடலில் இவ்வாறு முன்னுரைத்தார்: ‘மகிமைமிக்கவரே, எதிரிகளை வீழ்த்தி வெற்றி வாகை சூட குதிரையேறி செல்வீர்; மனத்தாழ்மையுள்ளோரைக் காப்பாற்ற போர் புரிவீர்; சத்தியம், நீதியை நிலைநாட்ட யுத்தம் செய்வீர்.’ (சங். 45:4, NW) அர்மகெதோனில் இயேசு கிறிஸ்து சத்தியம், நீதிக்காக மட்டுமல்ல, மனத்தாழ்மையுள்ள ஆட்களுக்காகவும் போரிடுவார். ஆயிரவருட ஆட்சியின் முடிவில் ‘எல்லா அரசாங்கத்தையும் எல்லா அதிகாரத்தையும் எல்லா வல்லமையையும் ஒழித்துவிட்ட’ பிறகு என்ன செய்வார்? அந்தச் சமயத்திலும் மனத்தாழ்மை காட்டுவாரா? ஆம், காட்டுவார்! ‘கடவுளும் தகப்பனுமானவரிடமே ஆட்சியை ஒப்படைத்துவிடுவார்’ என்று பைபிள் சொல்கிறது.—1 கொரிந்தியர் 15:24-28-ஐ வாசியுங்கள்.
17, 18. (அ) மனத்தாழ்மைக்கு மாதிரியான இயேசுவைப் பின்பற்றுவது ஏன் முக்கியம்? (ஆ) அடுத்த கட்டுரை எந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும்?
17 நம்மைப் பற்றி என்ன சொல்லலாம்? மனத்தாழ்மைக்குத் தலைசிறந்த மாதிரியான இயேசுவை எப்போதும் பின்பற்றுவோமா? ராஜாவான அவர் பொல்லாதவர்களை அர்மகெதோனில் அழிக்க வரும்போது நாம் தப்பிப்பிழைப்போமா? மனத்தாழ்மையோடும் நீதியோடும் நடப்பவர்களை மட்டுமே அந்தப் போரில் அவர் காப்பாற்றுவார் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். எனவே, மனத்தாழ்மையை வளர்த்துக்கொண்டால்தான் நம்மால் தப்பிப்பிழைக்க முடியும். இயேசு கிறிஸ்து காட்டிய மனத்தாழ்மை எப்படி அவருக்கும் மற்றவர்களுக்கும் நன்மைகளை அளித்ததோ, அப்படியே நாம் காட்டுகிற மனத்தாழ்மை நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மைகளை அளிக்கும்.
18 மனத்தாழ்மைக்கு மாதிரியான இயேசுவைப் பின்பற்ற எது நமக்கு உதவும்? சவாலான சந்தர்ப்பங்களிலும் நாம் எவ்வாறு மனத்தாழ்மை காட்டலாம்? அடுத்த கட்டுரை இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும்.