உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • jy அதி. 51 பக். 126-பக். 127 பாரா. 9
  • பிறந்தநாள் விருந்தில் ஒரு கொலை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிறந்தநாள் விருந்தில் ஒரு கொலை
  • இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • இதே தகவல்
  • ஒரு பிறந்த நாள் விருந்தில் கொலை
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • ஒரு பிறந்த நாள் விருந்தில் கொலை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 14
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • ஏரோது
    சொல் பட்டியல்
மேலும் பார்க்க
இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
jy அதி. 51 பக். 126-பக். 127 பாரா. 9
1. ஏரோதுவின் பிறந்தநாள் விருந்தில் சலோமே நடனம் ஆடுகிறாள். 2. யோவான் ஸ்நானகரின் தலையை ஏரோதியாளிடம் சலோமே கொண்டுவருகிறாள்

அதிகாரம் 51

பிறந்தநாள் விருந்தில் ஒரு கொலை

மத்தேயு 14:1-12 மாற்கு 6:14-29 லூக்கா 9:7-9

  • யோவான் ஸ்நானகரின் தலையை வெட்டும்படி ஏரோது கட்டளையிடுகிறான்

இயேசுவின் அப்போஸ்தலர்கள் கலிலேயாவில் பிரசங்கித்துக்கொண்டிருக்கிறார்கள். கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி என்று இயேசுவை அறிமுகப்படுத்திய யோவான் ஸ்நானகரால் அவர்களைப் போலப் பிரசங்கிக்க முடிவதில்லை. ஏனென்றால், அவர் கிட்டத்தட்ட இரண்டு வருஷங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார்.

ஏரோது அந்திப்பா ராஜா தன்னுடைய சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தன்னுடைய மனைவியாக வைத்துக்கொண்டான். அவளைக் கல்யாணம் செய்துகொள்வதற்காக ஏரோது தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்திருந்தான். மோசேயின் திருச்சட்டத்தைப் பின்பற்றுவதாக ஏரோது சொல்லிக்கொள்கிறான். ஆனால் அந்தத் திருச்சட்டத்தின்படி, அவன் ஏரோதியாளைக் கல்யாணம் செய்தது சட்டவிரோதமானது, ஒழுக்கக்கேடானது. ஏரோது செய்தது தவறு என்று யோவான் ஸ்நானகர் கண்டித்திருந்தார். அதனால், ஏரோது அவரைச் சிறையில் தள்ளினான். ஒருவேளை, ஏரோதியாள் அவனைத் தூண்டிவிட்டிருக்கலாம்.

யோவான் ஒரு “தீர்க்கதரிசி” என்று மக்கள் நினைக்கிறார்கள். (மத்தேயு 14:5) அதனால், சிறையில் இருக்கிற யோவானை என்ன செய்வது என்று தெரியாமல் ஏரோது குழம்புகிறான். ஆனால், ஏரோதியாளுக்கு அப்படி எந்தக் குழப்பமும் இல்லை. அவள் ‘யோவான்மேல் வன்மம் வைத்திருக்கிறாள்.’ சொல்லப்போனால், அவரைத் தீர்த்துக்கட்ட வழிதேடிக்கொண்டிருக்கிறாள். (மாற்கு 6:19) கடைசியில், அவளுக்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கிறது.

கி.பி. 32, பஸ்கா பண்டிகைக்குக் கொஞ்சம் முன்பு, ஏரோது தன்னுடைய பிறந்தநாளைத் தடபுடலாகக் கொண்டாடுகிறான். ஏரோதுவின் உயர் அதிகாரிகளும் படைத் தளபதிகளும், கலிலேயாவில் இருக்கிற முக்கியப் பிரமுகர்களும் அவனுடைய பிறந்தநாள் விருந்துக்கு வருகிறார்கள். அப்போது, ஏரோதியாளின் மகளாகிய இளம் சலோமே அந்த விருந்தாளிகள் முன்னால் நடனம் ஆடுகிறாள். இவள் ஏரோதியாளுக்கும் அவளுடைய முன்னாள் கணவரான பிலிப்புவுக்கும் பிறந்தவள். சலோமேயின் நடனத்தைப் பார்த்து விருந்தாளிகள் அசந்துபோகிறார்கள்.

தன்னுடைய பிறந்தநாள் விருந்தில், சலோமே ஆடுகிற நடனத்தைப் பார்த்து ஏரோது ரசிக்கிறான்

தன்னுடைய மாற்றான் மகளின் நடனத்தைப் பார்த்து ஏரோது உச்சிகுளிர்ந்து போகிறான். அதனால், “என்ன வேண்டுமானாலும் கேள், நான் உனக்குத் தருகிறேன்” என்று அவளிடம் சொல்கிறான். “நீ என்ன கேட்டாலும் தருகிறேன், என்னுடைய ராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் தருகிறேன்” என்றும்கூட சத்தியம் செய்து கொடுக்கிறான். அவனுக்குப் பதில் சொல்வதற்கு முன்பு சலோமே வெளியே போய்த் தன்னுடைய அம்மாவிடம், “நான் என்ன கேட்கட்டும்?” என்று கேட்கிறாள்.—மாற்கு 6:22-24.

இதற்காகத்தானே ஏரோதியாள் இத்தனை நாளாய் காத்துக்கொண்டிருந்தாள்! அதனால், “யோவான் ஸ்நானகனின் தலையைக் கேள்” என்று சட்டென பதில் சொல்கிறாள். உடனே சலோமே ஏரோதுவிடம் போய், “யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடுங்கள்” என்று சொல்கிறாள்.—மாற்கு 6:24, 25.

அதைக் கேட்டதும் ஏரோதுவுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஆனால், எல்லார் முன்பாகவும் அவன் சலோமேக்கு வாக்குக் கொடுத்துவிட்டானே! அதனால், ஒரு அப்பாவி செத்தாலும் பரவாயில்லை, தன்னுடைய வாக்கைக் காப்பாற்றுவதுதான் முக்கியம் என்று நினைக்கிறான். உடனடியாக ஒரு மெய்க்காவலனை அனுப்பி, அவருடைய தலையைக் கொண்டுவரும்படி கட்டளையிடுகிறான். சீக்கிரத்திலேயே, அந்தக் காவலன் யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து கொண்டுவருகிறான். ஏரோது அதை சலோமேயிடம் கொடுக்கிறான். அவள் அதைத் தன்னுடைய அம்மாவிடம் கொண்டுபோகிறாள்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் யோவானின் சீஷர்கள் வந்து அவருடைய உடலைக் கொண்டுபோய்ப் புதைக்கிறார்கள். பிறகு, இயேசுவுக்கு அதைத் தெரியப்படுத்துகிறார்கள்.

பிற்பாடு, மக்களை இயேசு குணமாக்குவதையும் பேய்களைத் துரத்துவதையும் ஏரோது கேள்விப்பட்டுக் கதிகலங்குகிறான். ஒருவேளை, யோவான் ஸ்நானகர்தான் ‘உயிரோடு எழுந்து’ வந்துவிட்டாரோ... இயேசு என்ற பெயரில் இதையெல்லாம் செய்கிறாரோ... என்றெல்லாம் நினைத்து குழம்புகிறான். (லூக்கா 9:7) அதனால், இயேசுவைப் பார்க்கத் துடிக்கிறான். அவர் பிரசங்கிக்கிற செய்தியைக் கேட்பதற்காக அல்ல; இயேசுவைப் பற்றித் தான் நினைப்பதெல்லாம் உண்மையா, இல்லையா என்று தெரிந்துகொள்வதற்காகத்தான் அவரைப் பார்க்க நினைக்கிறான்.

  • யோவான் ஸ்நானகர் ஏன் சிறையில் இருக்கிறார்?

  • ஏரோதியாள் எப்படி யோவானைத் தீர்த்துக்கட்டுகிறாள்?

  • யோவான் இறந்த பிறகு, ஏரோது அந்திப்பா ஏன் இயேசுவைப் பார்க்க நினைக்கிறான்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்