மத்தேயு
ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 14
மாகாண அதிபதி: நே.மொ., “கால்பங்கு தேசத்து அதிபதி” (இதன் அர்த்தம், ஒரு மாகாணத்தின் “கால்பங்கு பகுதியை ஆட்சி செய்கிறவர்.”) இது, ரோம அதிகாரிகளுக்குக் கீழ்ப்பட்டு ஒரு பகுதியை ஆட்சி செய்த சிற்றரசரைக் குறித்தது. ஏரோது அந்திப்பா கலிலேயாவையும் பெரேயாவையும் ஆட்சி செய்தான்.—மாற் 6:14-க்கான ஆராய்ச்சிக் குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.
ஏரோது: அதாவது, “மகா ஏரோதுவின் மகனாகிய ஏரோது அந்திப்பா.”—சொல் பட்டியலைப் பாருங்கள்.
யோவான் ஸ்நானகர்தான்: மத் 3:1-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
ஏரோது: அதாவது, “ஏரோது அந்திப்பா.”—சொல் பட்டியலைப் பாருங்கள்.
தன்னுடைய சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளை: ஏரோது அந்திப்பா தன்னுடைய மாற்றாந்தாயின் மகனாகிய ஏரோது பிலிப்புவின் மனைவியிடம், அதாவது ஏரோதியாளிடம், மயங்கினான். அதனால், அந்திப்பா தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தான், ஏரோதியாளும் பிலிப்புவை விவாகரத்து செய்தாள். பிறகு, அவளும் அந்திப்பாவும் கல்யாணம் செய்துகொண்டார்கள். யூதச் சட்டத்துக்கு முரணாக இருந்த இந்த ஒழுக்கங்கெட்ட உறவை யோவான் ஸ்நானகர் கண்டித்தார்; அதனால், கைது செய்யப்பட்டார்.
யோவானைப் பிடித்து . . . சிறையில் அடைத்திருந்தான்: இது எங்கே நடந்ததென்று பைபிள் சொல்வதில்லை. சவக் கடலுக்குக் கிழக்கே இருந்த மாக்கேரஸ் கோட்டையில் அவர் அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஜொசிஃபஸ் சொல்கிறார். (ஜூயிஷ் ஆண்ட்டிக்விட்டீஸ், புத்தகம் 18, அதி. 5, பாரா 2 [லோயெப் 18.119]) யோவான் கொஞ்சக் காலத்துக்கு அந்தச் சிறையில் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. (மத் 4:12) ஆனால், அவர் கொலை செய்யப்பட்ட சமயத்தில், கலிலேயா கடலின் மேற்குக் கரையோரத்தில் அமைந்திருந்த திபேரியா நகரத்தின் சிறையில்தான் இருந்திருக்க வேண்டும். பின்வரும் காரணங்களால் நாம் இந்த முடிவுக்கு வரலாம்: (1) யோவான் சிறையில் இருந்தபோது, இயேசு செய்ததையெல்லாம் கேள்விப்பட்டார். அதோடு, இயேசுவிடம் பேசுவதற்குத் தன் சீஷர்களை அனுப்பினார். (மத் 11:1-3) அதனால், அவர் இருந்த சிறை, கலிலேயாவில் இயேசு ஊழியம் செய்துகொண்டிருந்த பகுதிக்குப் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும். (2) ஏரோதுவின் பிறந்தநாள் விருந்துக்கு ‘கலிலேயாவிலிருந்த முக்கியப் பிரமுகர்கள்’ வந்திருந்ததாக மாற்கு சொல்லியிருக்கிறார். திபேரியாவில் இருந்த ஏரோதுவின் மாளிகையில் அந்த விருந்து நடந்ததாக அவர் சுட்டிக்காட்டுகிறார். அந்த விருந்து நடந்த இடத்துக்குப் பக்கத்தில்தான் யோவான் அநேகமாக அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.—மாற் 6:21-29; மத் 14:6-11.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில்: அநேகமாக, திபேரியாவில் இருந்த ஏரோது அந்திப்பாவின் மாளிகையில் இது நடந்திருக்கும். (மத் 14:3; மாற் 6:21-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.) பைபிள் இரண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் பற்றித்தான் சொல்கிறது. ஒன்று, இந்தப் பதிவில் வரும் பிறந்தநாள் கொண்டாட்டம் (அப்போது, யோவானின் தலை வெட்டப்பட்டது); இன்னொன்று, எகிப்திய ராஜாவான பார்வோனின் பிறந்தநாள் கொண்டாட்டம் (அப்போது, ரொட்டி சுடுபவர்களின் தலைவன் கொல்லப்பட்டான்). (ஆதி 40:18-22) இந்த இரண்டு பதிவுகளுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டு சந்தர்ப்பங்களிலுமே பெரிய விருந்து வைக்கப்பட்டது, அதோடு ஒரு கொலையும் நடந்தது.
ராஜா: ஏரோது அந்திப்பாவின் அதிகாரப்பூர்வ ரோமப் பட்டப்பெயர், “கால்பங்கு தேசத்து அதிபதி.” இதைத்தான் மத் 14:1-க்கான ஆராய்ச்சிக் குறிப்பில் பார்த்தோம். ஆனாலும், பெரும்பாலான மக்கள் அவரை “ராஜா” என்றுதான் அழைத்தார்கள்.
ஆணையிட்டுக் கொடுத்திருந்ததால்: ‘ஆணை’ என்பதற்கான கிரேக்க வார்த்தை இந்த வசனத்தில் பன்மையில் இருக்கிறது (ஆனால், மத் 14:7-ல் அது ஒருமையில் இருக்கிறது). தான் கொடுத்த வாக்கை வலியுறுத்துவதற்காக அல்லது உறுதிப்படுத்துவதற்காக ஏரோது திரும்பத் திரும்ப ஆணையிட்டுக் கொடுத்திருக்கலாம் என்பதை இது காட்டுகிறது.
மனம் உருகி: வே.வா., “பரிதாபப்பட்டு.”—மத் 9:36-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
நீங்களே இவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்: இயேசு செய்த வெவ்வேறு அற்புதங்களைப் பற்றி நான்கு சுவிசேஷ எழுத்தாளர்களுமே பதிவு செய்திருந்தாலும், அந்த நான்கு பேருமே பதிவு செய்திருக்கிற ஒரே அற்புதம் இதுதான்.—மத் 14:15-21; மாற் 6:35-44; லூ 9:10-17; யோவா 6:1-13.
மீன்களையும்: பைபிள் காலங்களில் வாழ்ந்தவர்கள், மீன்களை நெருப்பில் சுட்டோ, உப்பு தடவி காய வைத்தோ சாப்பிட்டார்கள். பொதுவாக, அவற்றை ரொட்டியோடு வைத்து சாப்பிட்டார்கள். இயேசு பயன்படுத்திய மீன்கள், ஒருவேளை உப்பு தடவி காய வைக்கப்பட்டிருந்த மீன்களாக இருந்திருக்கலாம்.
ரொட்டிகளைப் பிட்டு: நே.மொ., “ரொட்டிகளை உடைத்து.” அன்று ரொட்டிகள் பொதுவாக தட்டையாகவும் மொரமொரப்பாகவும் இருந்தன. அதனால், அவற்றை உடைத்துச் சாப்பிடுவது வழக்கமாக இருந்தது.—மத் 15:36; 26:26; மாற் 6:41; 8:6; லூ 9:16.
கூடைகள்: இவை, சின்னப் பிரம்புக் கூடைகளாக இருந்திருக்கலாம். தூக்கிக்கொண்டு போவதற்கு வசதியாக, அவற்றுக்குக் கயிறுகள் இருந்திருக்கலாம். அவற்றின் கொள்ளளவு சுமார் 7.5 லிட்டராக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.—மத் 16:9, 10-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
பெண்களையும் சின்னப் பிள்ளைகளையும் தவிர: இந்த அற்புதத்தைப் பற்றி விவரிக்கும்போது மத்தேயு மட்டும்தான் பெண்களையும் சின்னப் பிள்ளைகளையும் பற்றிச் சொல்லியிருக்கிறார். இயேசு அற்புதமாக உணவளித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,000-க்கும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ரொம்பத் தூரம்: நே.மொ., “பல ஸ்டேடியா.” ஒரு ஸ்டேடியம் (கிரேக்கில், ஸ்டேடியோன்) என்பது 185 மீ. (606.95 அடி). அதாவது, ஒரு ரோம மைலில் எட்டில் ஒரு பகுதி.
நான்காம் ஜாமத்தில்: அதாவது, “அதிகாலை சுமார் 3 மணியிலிருந்து சுமார் 6 மணிக்கு இடைப்பட்ட சமயத்தில்.” எபிரெயர்கள், கிரேக்கர்களையும் ரோமர்களையும் போலவே இரவு நேரத்தை நான்கு ஜாமங்களாகப் பிரித்தார்கள். இதற்கு முன்பு எபிரெயர்கள் இரவு நேரத்தை மூன்று ஜாமங்களாகப் பிரித்தார்கள். ஒவ்வொரு ஜாமமும் கிட்டத்தட்ட நான்கு மணிநேரமாக இருந்தது (யாத் 14:24; நியா 7:19). ஆனால், இயேசுவின் காலத்தில் அவர்கள் ரோமர்களுடைய கணக்குப்படி ஜாமங்களைப் பிரித்தார்கள்.
அவர் முன்னால் தலைவணங்கி: வே.வா., “அவர் முன்னால் மண்டிபோட்டு; அவருக்கு மரியாதை செலுத்தி.” இயேசு கடவுளுடைய பிரதிநிதி என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அவரை ஒரு தெய்வமாக நினைத்து வணங்காமல், ‘கடவுளுடைய மகனாக’ நினைத்துத் தலைவணங்கினார்கள்.—மத் 2:2; 8:2; 18:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
கெனேசரேத்துக்கு: இது கலிலேயா கடலின் வடமேற்குக் கரையோரமாக இருந்த ஒரு சிறிய சமவெளி. இதன் நீளம் சுமார் 5 கி.மீ. (3 மைல்), அகலம் சுமார் 2.5 கி.மீ. (1.5 மைல்). கலிலேயா கடலை “கெனேசரேத்து ஏரி” என்று லூ 5:1 சொல்கிறது.