அதிகாரம் 116
கடைசி பஸ்காவின்போது மனத்தாழ்மையைக் கற்பிக்கிறார்
மத்தேயு 26:20 மாற்கு 14:17 லூக்கா 22:14-18 யோவான் 13:1-17
அப்போஸ்தலர்களோடு கடைசி பஸ்காவை இயேசு சாப்பிடுகிறார்
அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவுவதன் மூலம் ஒரு பாடத்தைக் கற்பிக்கிறார்
இயேசு சொன்னபடியே, பஸ்காவுக்கு ஏற்பாடு செய்ய பேதுருவும் யோவானும் ஏற்கெனவே எருசலேமுக்கு வந்துவிட்டார்கள். பிற்பாடு, இயேசுவும் மற்ற அப்போஸ்தலர்களும் எருசலேமுக்குப் புறப்படுகிறார்கள். இப்போது பிற்பகல் நேரம். மேற்கே சூரியன் மெதுமெதுவாக மறைய ஆரம்பிக்கிறது. இயேசுவும் அப்போஸ்தலர்களும் ஒலிவ மலையிலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த மலையிலிருந்து, எருசலேமை பகல் நேரத்தில் அவர் பார்ப்பது இதுதான் கடைசி. இனி, உயிர்த்தெழுந்த பிறகுதான் அதை மறுபடியும் பார்ப்பார்.
சீக்கிரத்தில் இயேசுவும் அவருடைய சீஷர்களும் நகரத்துக்கு வந்து, பஸ்கா உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற வீட்டுக்குப் போகிறார்கள். படியேறி, மாடியில் இருக்கிற ஒரு பெரிய அறைக்குள் நுழைகிறார்கள். அவர்கள் பஸ்கா உணவைச் சாப்பிடுவதற்குத் தேவையான எல்லாமே தயாராக இருக்கிறது. இந்தச் சமயத்துக்காகத்தான் இயேசு ஆசையாகக் காத்திருந்தார். அதனால்தான், “நான் பாடுகள் படுவதற்கு முன்பு உங்களோடு சேர்ந்து இந்த பஸ்கா உணவைச் சாப்பிட மிகவும் ஆசையாக இருந்தேன்” என்று சொல்கிறார்.—லூக்கா 22:15.
பஸ்கா கொண்டாடுகிறவர்கள் திராட்சமது கிண்ணங்களை ஒருவர் கையிலிருந்து வாங்கி மற்றவர் கையில் அடுத்தடுத்து கொடுக்கும் பழக்கம் பல வருஷங்களுக்கு முன்பு ஆரம்பமானது. இயேசு ஒரு கிண்ணத்தைத் தன்னுடைய கையில் வாங்கியதும், கடவுளுக்கு நன்றி சொல்லி, “ஒவ்வொருவராக இதை வாங்கிக் குடியுங்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன், கடவுளுடைய அரசாங்கம் வரும்வரை இனி திராட்சமதுவைக் குடிக்க மாட்டேன்” என்று சொல்கிறார். (லூக்கா 22:17, 18) சீக்கிரத்தில் அவர் இறந்துவிடுவார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
பஸ்கா உணவைச் சாப்பிடுகிற சமயத்தில், யாருமே எதிர்பார்க்காத ஒன்று நடக்கிறது. இயேசு எழுந்து, தன் மேலங்கியைக் கழற்றிவிட்டு, ஒரு துண்டை எடுக்கிறார். பிறகு, பக்கத்தில் இருக்கிற ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றுகிறார். பொதுவாக, விருந்து கொடுக்கிறவர் தன்னுடைய விருந்தாளிகளின் கால்களைக் கழுவுவதற்கு ஏற்பாடு செய்வார். பெரும்பாலும், ஒரு வேலைக்காரரை வைத்து இதைச் செய்வார். (லூக்கா 7:44) இந்தச் சமயத்தில், விருந்து கொடுக்கிறவர் யாரும் அங்கே இல்லை. அதனால், இயேசுவே இதைச் செய்கிறார். அப்போஸ்தலர்களில் ஒருவர் இதைச் செய்திருக்கலாம். ஆனால், யாருமே செய்யவில்லை. ஒருவேளை, அவர்களுக்குள் இன்னும் போட்டி பொறாமை இருக்கிறதா? காரணம் எதுவாக இருந்தாலும், இயேசு தங்களுடைய பாதங்களைக் கழுவும்போது சீஷர்களுக்குத் தர்மசங்கடமாக இருப்பது மட்டும் உண்மை.
பேதுருவிடம் இயேசு வந்தபோது, “நீங்கள் என் பாதங்களைக் கழுவவே கூடாது” என்று அவர் சொல்கிறார். இயேசுவோ, “நான் உன் பாதங்களைக் கழுவவில்லை என்றால் என்னோடு உனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை” என்கிறார். அப்போது பேதுரு, “அப்படியென்றால் எஜமானே, என் பாதங்களை மட்டுமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவுங்கள்” என்கிறார். அதற்கு இயேசு, “குளித்தவன் தன் பாதங்களை மட்டும் கழுவினால் போதும், மற்றபடி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான். நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள், ஆனால் எல்லாருமே அல்ல” என்கிறார். அதைக் கேட்டு பேதுருவுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது.—யோவான் 13:8-10.
யூதாஸ் இஸ்காரியோத்து உட்பட, 12 அப்போஸ்தலர்களின் பாதங்களையும் இயேசு கழுவுகிறார். தன் மேலங்கியைப் போட்டுக்கொண்டு மேஜைமேல் மறுபடியும் சாய்ந்து உட்காருகிறார். பிறகு அவர்களிடம், “நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று புரிந்துகொண்டீர்களா? என்னை ‘போதகர்’ என்றும், ‘எஜமான்’ என்றும் நீங்கள் கூப்பிடுவது சரிதான். ஏனென்றால், நான் போதகர்தான், எஜமான்தான். எஜமானாகவும் போதகராகவும் இருக்கிற நானே உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய பாதங்களை ஒருவர் கழுவ வேண்டும். நான் உங்களுக்குச் செய்தது போலவே நீங்களும் செய்ய வேண்டும் என்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி வைத்தேன். உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அடிமை தன் எஜமானைவிட உயர்ந்தவன் கிடையாது, அனுப்பப்பட்டவரும் தன்னை அனுப்பியவரைவிட உயர்ந்தவர் கிடையாது. இதையெல்லாம் இப்போது தெரிந்துகொண்டீர்கள், ஆனால் இதன்படி நடந்தால் சந்தோஷமானவர்களாக இருப்பீர்கள்” என்கிறார்.—யோவான் 13:12-17.
மனத்தாழ்மையாகச் சேவை செய்வதைப் பற்றி இயேசு எவ்வளவு அழகாகக் கற்பிக்கிறார்! அவரைப் பின்பற்றுகிறவர்கள் தங்களுக்கு முதலிடம் வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. தங்களைப் பெரிய ஆட்களாக நினைத்துக்கொண்டு, மற்றவர்கள் தங்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது. அவர்கள் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். மற்றவர்களுடைய பாதங்களை அவர்கள் சடங்குக்காகக் கழுவ வேண்டியதில்லை. மனத்தாழ்மையோடும் பாரபட்சம் இல்லாமலும் சேவை செய்ய தயாராக இருப்பதன் மூலம் இயேசுவைப் பின்பற்ற வேண்டும்.