அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்
மிகப் பெரிய மனிதர் தாழ்வான சேவை செய்கிறார்
இயேசு, தம் சீஷர்களுடன் இருந்த கடைசி மணிநேரங்கள் பொன்னானவை என்பதை அறிந்திருந்தார். ஏனென்றால், அவர் சீக்கிரத்தில் கைது செய்யப்படவிருந்தார்; என்றுமில்லாத விதத்தில் அவருடைய விசுவாசம் சோதிக்கப்படவிருந்தது. அதுமட்டுமல்ல, பேரளவான ஆசீர்வாதங்கள் அவர் முன் இருந்ததையும் இயேசு அறிந்திருந்தார். சீக்கிரத்தில் அவர் கடவுளுடைய வலது பக்கத்திற்கு உயர்த்தப்பட்டு, “இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படி . . . எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை”யும் பெறுவார்.—பிலிப்பியர் 2:10, 11.
இருந்தாலும், சீக்கிரத்தில் நிகழவிருக்கும் தம்முடைய மரணத்தைப் பற்றிய கவலையோ தாம் பெறவிருக்கும் பரிசைப் பற்றிய ஆவலோ தம் சீஷர்களின் தேவைகளுக்கு கவனம் செலுத்துவதிலிருந்து இயேசுவை திசை திருப்பவில்லை. அவர், “முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்” என யோவான் தன் சுவிசேஷத்தில் பின்னர் எழுதினார். (யோவான் 13:1) இயேசு ஒரு பரிபூரண மனிதனாக வாழ்ந்த கடைசி மணிநேரத்தில்கூட தம் சீஷர்களுக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக்கொடுத்தார்.
மனத்தாழ்மையில் ஒரு பாடம்
பஸ்கா பண்டிகையை ஆசரிப்பதற்காக இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமில் ஒரு மேல் அறையில் கூடியிருந்தனர். தங்களில் யார் பெரியவன் என்பதைப் பற்றிய வாக்குவாதம் அவர்கள் மத்தியில் முன்னர் எழுந்ததை இயேசு அறிந்திருந்தார். (மத்தேயு 18:1; மாற்கு 9:33, 34) இந்த விஷயத்தைப் பற்றி அவர் ஏற்கெனவே பேசி அவர்களுடைய நோக்குநிலையை சரிசெய்ய முயற்சித்திருந்தார். (லூக்கா 9:46) இப்போதோ இயேசு, அதே பாடங்களை வித்தியாசமான ஒரு முறையில் கற்பிக்க முயன்றார். மனத்தாழ்மையைப் பற்றி புத்திமதி கொடுப்பதற்கு பதிலாக அதை செய்து காண்பிக்க விரும்பினார்.
யோவான் இவ்வாறு எழுதுகிறார்: இயேசு, “போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.”—யோவான் 13:4, 5.
பூர்வகால மத்திய கிழக்கின் சீதோஷ்ண நிலை வெப்பமாகவே இருக்கும். புழுதிபடிந்த சாலைகளில் நடந்து செல்கையில், கால்களை முழுவதுமாக மூடாத காலணிகளையே மக்கள் பொதுவாக அணிந்திருந்தனர். ஆகவே, எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், தன் வீட்டிற்கு விருந்தாளியாக வருபவரை வரவேற்றபின் அவர் தன் கால்களைக் கழுவிக்கொள்வதற்கு தண்ணீரும் பாத்திரமும் கொடுப்பது வழக்கம். பணக்கார வீடுகளிலோ கால்களைக் கழுவி விடும் இந்த வேலை ஓர் அடிமையால் செய்யப்படும்.—நியாயாதிபதிகள் 19:21; 1 சாமுவேல் 25:40-42.
மேல் அறையில் இருந்த இயேசுவும் அவருடைய சீஷர்களும் விருந்தாளிகளாக அங்கு வரவில்லை. தண்ணீரையும் பாத்திரத்தையும் கொடுப்பதற்கு விருந்தளிப்பவரும் இல்லை, கால்களைக் கழுவி விட அடிமைகளும் அங்கில்லை. இயேசு அவர்களுடைய கால்களைக் கழுவ ஆரம்பித்தபோது சீஷர்கள் சங்கடத்தால் புழுபோல் நெளிந்தார்கள். அவர்களுக்கோ அவர் மிகப் பெரிய மனிதர், அவர் செய்ததோ மிகவும் தாழ்வான ஒரு வேலை!
பேதுரு முதலில், தன் கால்களைக் கழுவ இயேசுவை அனுமதிக்கவில்லை. ஆனால் இயேசு அவரிடம், “நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை” என்று சொன்னார். தம் சீஷர்கள் அனைவருடைய கால்களையும் கழுவி விட்ட பிறகு இயேசு தம் சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: “நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.”—யோவான் 13:6-15.
கால்களைக் கழுவி விடுதல் என்ற ஏதோ ஒரு புதிய சடங்கை இயேசு ஆரம்பித்து வைக்கவில்லை. மாறாக, தம் சீஷர்கள் ஒரு புதிய மனோபாவத்தை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவினார். அதாவது, மனத்தாழ்மையோடும் தங்கள் சகோதரர்கள் நிமித்தம் மிகவும் தாழ்வான வேலையையும் செய்ய தயாராய் இருக்கவும் வேண்டும் என்ற மனநிலை. சீஷர்கள் அதன் உட்கருத்தை தெளிவாய் புரிந்துகொண்டனர். பல வருடங்கள் கழித்து, விருத்தசேதனம் பற்றிய பிரச்சினை எழுந்தபோது என்ன நடந்தது என்பதை சிந்தித்து பாருங்கள். அவர்கள் மத்தியில் “மிகுந்த தர்க்கம்” ஏற்பட்டபோதிலும் கூடிவந்திருந்த அனைவரும் ஒழுங்கைக் காத்தனர்; ஒருவர் மற்றவருடைய கருத்துக்கு மரியாதையோடு செவிகொடுத்தனர். மேலுமாக, அப்போஸ்தலர்களும் அங்கிருந்ததால் அவர்களில் ஒருவர்தான் தலைமை தாங்குவார் என்று நாம் எதிர்பார்க்கலாம், ஆனால் நடந்ததோ வேறு. அந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கியது சீஷனாகிய யாக்கோபு என்றே தோன்றுகிறது. அப்போஸ்தலர் நடபடிகளில் காணப்படும் இந்தச் சம்பவம் எதைச் சுட்டிக்காண்பிக்கிறது? மனத்தாழ்மை காட்டுவதில் அவர்கள் நல்ல முன்னேற்றம் செய்திருந்தனர் என்பதையே அல்லவா?—அப்போஸ்தலர் 15:6-29.
நமக்கு பாடம்
இயேசு, தம் சீஷர்களின் கால்களைக் கழுவி விடுவதன் மூலம் மனத்தாழ்மை பற்றிய மிகச் சிறந்த ஒரு பாடத்தை கற்பித்தார். உண்மையில், தாங்கள் மிகவும் பெரியவர்கள் ஆதலால் மற்றவர்கள் எப்போதுமே தங்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று நினைக்கவோ மதிப்பும் கௌரவமும் உள்ள ஸ்தானங்கள் வேண்டும் என்றோ கிறிஸ்தவர்கள் நாடித்தேடக் கூடாது. அதற்கு மாறாக, “ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்த” இயேசுவின் முன்மாதிரியை அவர்கள் பின்பற்ற வேண்டும். (மத்தேயு 20:28) ஆம், இயேசுவைப் பின்பற்றுவோர் அனைவரும் ஒருவருக்காக ஒருவர் மிகவும் தாழ்வான வேலையைக்கூட செய்ய தயாராய் இருக்கவேண்டும்.
“நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” என்று பேதுரு எழுதியதற்கு நல்ல காரணங்கள் உண்டு. (1 பேதுரு 5:5) “அணிந்துகொள்” என்பதற்கான கிரேக்க வார்த்தை “ஓர் அடிமையின் மேலங்கி” என்று பொருள்படும் வார்த்தையிலிருந்து வருகிறது; அதற்கு கீழ் தொளதொளவென்ற ஓர் ஆடையை இறுக்கமாக அணிந்திருப்பர். இயேசு ஒரு சீலையை தன் அரையிலே சுற்றிக்கொண்டு தம் சீஷர்களின் கால்களைக் கழுவி விட்டதை பேதுரு மனதில் வைத்துத்தான் இதை எழுதினாரோ? அப்படித்தான் என்று திட்டவட்டமாக சொல்ல முடியாது. ஆனாலும், இயேசுவின் தாழ்மையான சேவை பேதுருவின் இதயத்தில் ஆழமாக பதிந்துவிட்டது. கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்புகிற அனைவருடைய இதயத்திலும் அது அவ்வாறே பதிந்திருக்க வேண்டும்.—கொலோசெயர் 3:12-14.