இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
நிக்கொதேமுவுக்குக் கற்பித்தல்
பொ.சா. 30-ம் ஆண்டின் பஸ்கா பண்டிகையில் கலந்துகொள்ளும்போது, இயேசு குறிப்பிடத்தக்க அடையாளங்களை அல்லது அற்புதங்களைச் செய்தார். இதன் விளைவாக அநேக மக்கள் அவரில் விசுவாசம் வைத்தார்கள். யூத உயர்நீதி மன்றத்தின் உறுப்பினனாகிய நிக்கொதேமுவின் மனதில் இது ஆழமாக பதிந்ததால் அவன் அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறான். அவன் காணப்பட்டால் மற்ற யூத தலைவர்களுடன் உள்ள தன்னுடைய நற்பெயருக்குப் பாதிப்பு நேரிடலாம் என பயந்து, அவன் இயேசுவை இரவிலே போய் பார்க்கிறான்.
“ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறேன், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்” என்று சொல்லுகிறான். அதற்கு இயேசு நிக்கொதேமுவிடம் ஒருவன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கு “மறுபடியும் பிறக்கவேண்டும்” என்று சொல்லுகிறார்.
ஆகிலும் எப்படி ஒருவன் மறுபடியும் பிறக்கமுடியும்? “அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ?” என்று நிக்கொதேமு கேட்கிறான்.
இல்லை. அது மறுபடியும் பிறத்தலை அர்த்தப்படுத்தாது. ஒருவன் ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசு முழுக்காட்டுதல் பெற்றபோது பரிசுத்த ஆவி அவர் மீது இறங்கினது, அவர் இவ்வாறாக ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்தார். “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் நான் பிரியமாயிருக்கிறேன்,” என்ற பரலோகத்திலிருந்து வந்த அறிவிப்பின் மூலமாக கடவுள், பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் எதிர்பார்ப்புள்ள ஒரு ஆவிக்குரிய குமாரனை தாம் பிறப்பித்திருக்கிறார் என்பதைத் தெரிவித்தார். பின்பு, பொ.சா. 33-ல் பெந்தெகொஸ்தே நாளன்று, முழுக்காட்டப்பட்ட மற்றவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று, இப்படியாக அவர்களும் கடவுளின் ஆவிக்குரிய குமாரர்களாக மறுபடியும் பிறந்தார்கள்.
ஆனால் கடவுளின் விசேஷ மனுஷ குமாரன் வகிக்கும் பாகம் இன்றியமையாதது. “சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷ குமாரனும் தன்னை விசுவாசிக்கிறவன் நித்தியஜீவனை அடையும்படிக்கு உயர்த்தப்பட வேண்டும்,” என்று நிக்கொதேமுவிடம் இயேசு சொல்லுகிறார். ஆம், விஷப் பாம்புகளால் கடிபட்ட அந்த இஸ்ரவேலர்கள் காக்கப்படுவதற்கு வெண்கல சர்ப்பத்தைப் பார்க்க வேண்டியவர்களாய் இருந்ததுபோல, எல்லா மனிதரும் தங்களுடைய சாவுக்கேதுவான நிலையிலிருந்து காப்பாற்றப்படுவதற்கு, கடவுளுடைய குமாரனில் விசுவாசம் வைப்பது தேவையாயிருக்கிறது.
இதில் யெகோவாவின் அன்பான பாகத்தை அறிவுறுத்துபவராய், இயேசு அடுத்ததாக நிக்கொதேமுவிடம் “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” என்று சொல்லுகிறார். இப்படியாக, எருசலேமில் தமது ஊழியத்தைத் தொடங்கி சரியாக ஆறுமாதத்திற்குப் பிறகுதானே, இயேசு அவரே மனிதகுலத்தைக் காப்பாற்றுவதற்கு யெகோவா தேவனின் உபாயம் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். யாவான் 2:23-3:21; மத்தேயு 3:16, 17; அப்போஸ்தலர் 2:1-4; எண்ணாகமம் 21:9. (w85 12/1)
◆ இயேசுவைப் போய் சந்திக்கும்படி நிக்கொதேமுவைத் தூண்டியது எது? ஏன் அவன் இரவில் வருகிறான்?
◆ மறுபடியும் பிறத்தல் என்றால் என்ன?
◆ நம்முடைய இரட்சிப்பில் அவர் வகிக்கும் பாகத்தை இயேசு எப்படி உதாரணங்கொண்டு விளக்கினார்?