மறுபடியும் பிறக்கிறவர்கள் யார்?
எல்லா நல்ல ஆட்களும் பரலோகத்துக்குச் செல்கிறார்களா? அநேகர் அவ்வாறு நினைக்கின்றனர், ஆனால் இயேசு கிறிஸ்து ஒத்துக்கொள்ளவில்லை. இரவில் அவரிடம் இரகசியமாக வந்த யூத அதிகாரியாகிய நிக்கொதேமுவிடம் பேசும்போது, இயேசு சொன்னார்: “பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.”—யோவான் 3:13.
இருப்பினும், பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு சில மக்களுக்குக் கிடைக்கக்கூடிய காலம் வருமென்று இயேசு நிக்கொதேமுவிடம் குறிப்பிட்டார். இவர்களைப்பற்றி இயேசு சொன்னார்: “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான். . . . மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்பட வேண்டாம்.” ஆனால் ஒருவர் எப்படி மறுபடியும் பிறக்கக்கூடும் என்பதாக நிக்கொதேமு ஆச்சரியப்பட்டான்.—யோவான் 3:1-9.
ஒருவேளை நீங்களும்கூட இயேசு எதை அர்த்தப்படுத்தினார் என ஆச்சரியப்படலாம். கடவுளுடைய பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு திடீர்மாற்ற அனுபவங்களைக் கொண்டிருப்பதாக உரிமைபாராட்டுபவர்களுக்கு அவருடைய வார்த்தைகள் பொருந்தக்கூடுமா?
உணர்ச்சிகளும் மனதும்
ஓர் ஆள் மறுபடியும் பிறந்திருக்கிறாரா என்பதைத் தீர்மானிப்பதில், ஆவியின் வல்லமையை உணருவதே முக்கியமானது என்று சிலர் கூறுகின்றனர். ஆயினும், குறிப்பாக பலமான உணர்ச்சியால் செல்வாக்குச் செலுத்தப்பட்டால் நம்முடைய இருதயமும் மனதும் நம்மைத் தவறாக வழிநடத்தக்கூடும்.—எரேமியா 17:9.
மனதின்மேல் உணர்ச்சி ஏற்படுத்தும் பாதிப்புகளைக்குறித்த ஆராய்ச்சியாளர் உவில்லியம் ஸார்ஜன்ட், “நம்முடைய மூளைகள் நம்மை ஏமாற்றிவிடக்கூடிய உணர்ச்சி தூண்டப்பட்ட நிலைகளில் ஏற்றுக்கொள்ளும் நம்பிக்கைகளுக்கு எதிராக நம்மைக் காத்துக்கொள்வதன்” அவசியத்தைச் சுட்டிக் காண்பிக்கிறார். எழுச்சி பிரசங்கங்களின் பாதிப்பு மற்றும் எரிநரக தண்டனை பற்றிய அச்சுறுத்தல்கள், ஸார்ஜன்ட் காண்பிக்கும் உதாரணங்களில் ஒன்றாகும். நித்திய வாதனைதான் ஒரே மாற்றீடாக இருக்குமானால் எவராவது மறுபடியும் பிறந்து பரலோகத்திற்குச் செல்ல விரும்பாமல் இருப்பார்களா? அத்தகைய உணர்ச்சிப்பூர்வ அழுத்தத்தின்கீழ், “பகுத்தறிவு ஒதுக்கி வைக்கப்படுகிறது, வழக்கமான மூளையாகிய கணிப்பொறி தற்காலிகமாக செயலிழக்கும்படி செய்யப்படுகிறது, புதிய கருத்துகளும் நம்பிக்கைகளும் கேள்விக்கிடமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது,” என்பதாக ஸார்ஜன்ட் கூறுகிறார்.—தி மைன்ட் பொஸெஸ்ட்.
அப்படியானால், மறுபடியும் பிறத்தல் என்ற காரியத்தைக் குறித்த ஒரு நம்பிக்கை “கேள்விக்கிடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதா” என்று எவ்வாறு ஒருவர் சொல்ல முடியும்? கடவுளுடைய பரிசுத்த ஆவி, பைபிள் எழுத்தாளர்களை பதிவுசெய்யவைத்த எல்லாவற்றாலும் வழிநடத்தப்படுவதே உண்மையான ஞானமான போக்காகும். கிறிஸ்தவர்கள் ‘தங்களுடைய பகுத்தறிவுடன்’ கடவுளை வணங்கும்படி உற்சாகப்படுத்தப்படுகின்றனர்; மேலும் அவர்கள் நம்புவது சத்தியம் என நிச்சயப்படுத்திக்கொள்வது அவசியம்.—ரோமர் 12:1, 2; 1 தெசலோனிக்கேயர் 5:21.
மறுபடியும் பிறத்தல், எக்காலத்திலும் மனிதருக்கு வழங்கப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த சிலாக்கியங்களில் ஒன்றிற்கு வழியைத் திறந்து வைக்கிறது. கடவுளுடைய நோக்கத்தை நிறைவு செய்வதில், உண்மையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் இது தொடர்புடையதாய் இருக்கிறது. இவையனைத்தும் உண்மையாக இருப்பினும், இவைபோன்ற கேள்விகள் எழும்புகின்றன: மறுபடியும் பிறக்கிறவர்கள் யார்? இது எவ்விதமாக நடைபெறுகிறது? அத்தகைய தனிநபர்களுக்கு முன்பாக என்ன எதிர்பார்ப்புகள் வைக்கப்படுகின்றன? மேலும் அவர்கள் மட்டுமே இரட்சிக்கப்படுவார்களா?
[பக்கம் 3-ன் படம்]
ஒருவர் எப்படி மறுபடியும் பிறக்கக்கூடும் என்பதாக நிக்கொதேமு ஆச்சரியப்பட்டான்