நித்தியமான ஓர் எதிர்காலத்துக்காக கட்டுதல்
“எந்த வீடும் ஒருவனால் கட்டப்படும். எல்லாவற்றையும் கட்டினவர் தேவன்.”—எபிரெயர் 3:4, வேமெளத்
1, 2. (எ) பேழையின் அமைப்பு திட்டத்தை கொடுத்தது யார்? கொடுக்கப்பட்ட கட்டளைகள் எவ்வளவு நுணுக்கமான விவரங்களை கொண்டதாக இருந்தன? (பி) நோவாவைப் போலவே, நாம் கீழ்ப்படிந்திருப்பது ஏன் இன்றியமையாததாக இருக்கிறது?
சுமார் 4,400 வருடங்களுக்கு முன்பாக, யெகோவா உயிர்களை பாதுகாப்பதற்காக ஒரு பேழையைக் கட்டும்படியாக நோவாவுக்கு கட்டளையிட்டார். ஆனால் மிதக்கக்கூடிய ஏதோ ஒரு விதமான அமைப்பை கட்டும்படியாக அதை நோவாவிடமே கடவுள் விட்டுவிடவில்லை. மாறாக, அதன் மூலப் பொருட்கள், அமைப்புத் திட்டம், நீளம், அகலம், உயரம், காற்றோட்டம் உட்புற மற்றும் வெளிப்புற பூச்சு வேலை ஆகியவற்றின் சம்பந்தமாக திட்டவட்டமான கட்டளைகளை அவர் கொடுத்தார். “நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.” —ஆதியாகமம் 6:13-16, 22.
2 நவீன நாளைய யெகோவாவின் சாட்சிகளுக்கு என்னே ஒரு சிறந்த முன்மாதிரி! நோவாவைப் போலவே ஜீவனைக் காக்கும் ஒரு வேலை நம்மிடமாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த முறையோ, இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கானோர் ஒருபோதும் மரிக்காமலே இரட்சிப்பை அடையப் போவதை நாம் எதிபார்த்திருக்கிறோம். நோவா கீழ்ப்படிந்தது போலவே நாமும் கீழ்ப்படிந்திருப்பது எவ்வளவு முக்கியமாக இருக்கிறது! நீதியின் பிரசங்கிகளாக, சேவிக்கையில் நோவாவைவிட பெரியவராகிய இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியை நாம் பின்பற்றுவது எவ்வளவு அவசரமானதாக இருக்கிறது!—2 பேதுரு 2:5.
ஒரு ஆவிக்குரிய கட்டிட வேலை
3. (எ) இயேசுவின் வார்த்தைகளின்படி கட்டும் போது அதன் விளைவு என்னவாக இருக்கும்? (பி) இயேசு பிரசங்கித்தது ஏன் விசுவாசத்தை கட்டியெழுப்புவதாக இருந்தது?
3 மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது,” என்ற தம்முடைய அறிவிப்பினால் கலிலேய சுற்றுப்புறங்களை இயேசு வியப்புக்குள்ளாக்கி, இப்பொழுது 1,956 வருடங்களாகின்றன. அவர் சொல்லிய வார்த்தைகளின்படி செய்து, அவற்றின் மீது கட்டுகிற ஒவ்வொருவனையும் கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு அவர் ஒப்பிட்டார். அந்த மனிதனின் விசுவாசம், நிலையானதாக, அசைக்கமுடியாததாக, உறுதியானதாக இருக்கிறது. அது அழுத்தத்தின் கீழ் சரிந்து விழாது. இயேசு பிரசங்கித்தது, விசுவாசத்தைக் கட்டியெழுப்பியது. யூத மதத்தலைவர்களின் மாய்மாலமான போதனைகளிலிருந்து அவ்வளவு வித்தியாசமாக இருந்ததால் அது ஜனங்களுடைய இருதயங்களைச் சென்றெட்டியது. இயேசு போதித்த விதத்தைக் குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவரை கைது செய்து கொண்டு வரும்படியாக அனுப்பப்பட்ட சேவகர்களும்கூட வெறுங்கையோடு திரும்பி வந்து: “அந்த மனுஷன் பேசுகிறது போல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை,” என்பதாகச் சொன்னார்கள்.—மத்தேயு 4:17; 7:24, 25, 28; யோவான் 7:46.
4. (எ) இயேசு எவ்விதமாக எதிர்காலத்துக்காக கட்டினார்? (பி) பொ.ச.33-ன் பெந்தெகோஸ்தேவின் போது கட்டும் வேலை எவ்விதமாக வளர்ச்சியடைந்தது?
4 இயேசு எதிர்காலத்துக்காக கட்டிக் கொண்டிருந்தார். “ஒரு கல்” என்ற பொருளுடைய கேபா என்று அழைக்கப்பட்ட பேதுரு போன்ற உடன் வேலையாட்களை அவர் கூட்டிச் சேர்த்தார். இந்த சீஷனிடம் இயேசு, “நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்“ என்று சொன்னார். காலப் போக்கில், சபையின் “மூலக்கல்லாகிய” இயேசுவின் மீது கட்டப்பட்ட அநேக “ஜீவனுள்ள கற்களில்” பேதுருவும் ஒருவனாக ஆனான். அந்த சபை பொ.ச.33-ல் பெந்தெகொஸ்தே நாளின்போது, பரலோகத்தில் கடவுளுடைய வலது பாரிசத்துக்கு உயிர்த்தெழுந்த இயேசு, காத்துக் கொண்டிருந்த சீஷர்கள் மீது பரிசுத்த ஆவியை ஊற்றிய போது ஸ்தாபிக்கப்பட்டது.—மத்தேயு 16:18; 1 பேதுரு 2:4-6, அப்போஸ்தலர் 2:2-4, 32, 33.
5. நவீன நாளைய என்ன சம்பவங்கள், கிறிஸ்தவ சபையை அதிக சுறுசுறுப்பாக இருக்கச் செய்கிறது?
5 இன்று, கிறிஸ்தவ சபை யெகோவாவின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. “சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகள் பூமியிலுள்ள கடவுளுடைய “ஊழியக்காரருக்கு” காண்பிக்கப்பட்டு வரும் “வெளிப்பாடு” அல்லது “தெரிவிக்கப்படும்” ஒரு காலமாக இது இருக்கிறது. (வெளிப்படுத்தின விசேஷம் 1:1-3, Ref. Bi., கீழ்க்குறிப்பு) அவர் சாத்தானின் பொல்லாத ஒழுங்கின் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு முன்பாக, இந்த ஊழியக்காரர்கள் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பூமியனைத்திலும் சாட்சியாக பிரசங்கிக்க வேண்டிய காலமாக இது இருக்கிறது. பரலோகங்களில் இப்பொழுது சிங்காசனத்திலேற்றப்பட்டிருக்கும் ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவுக்கு மனத்தாழ்மையுள்ள செம்மறியாடுகளைப் போன்ற ஆட்களை, இந்த ராஜ்யத்தை விரும்பாத மூர்க்கமான வெள்ளாடுகளைப் போன்ற ஆட்களிலிருந்து பிரிப்பதற்குரிய காலமாக இருக்கிறது. “மிகுந்த உபத்திரவம்” வருவதற்கு முன்பாக இந்த செம்மறியாடுகளை அவருடைய ஆவிக்குரிய “சகோதரர்களாலான” சபையினிடமாக கூட்டிச் சேர்ப்பதற்குரிய காலமாக இது இருக்கிறது.—மத்தேயு 24:14-21; 25:31-40.
6. இன்று “பேழை” எது? நாம் எவ்விதமாக தப்பிப் பிழைக்கலாம்?
6 தப்பிப் பிழைத்தலுக்கு நவீன நாளைய போழையாக இருப்பது எது? 1919 முதற்கொண்டு யெகோவாவின் சாட்சிகள் அனுபவித்து வரும் ஆவிக்குரிய நிலைமையாக, பரதீஸாக இது இருக்கிறது. நோவாவின் குடும்ப அங்கத்தினர்களைப் போல, அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் மீதியானோரும், அவர்களுடைய தோழர்களும் யெகோவா நோக்கங் கொண்டிருக்கும் பிரமாண்டமான ஆவிக்குரிய ஏற்பாட்டை முழுமையாக்குவதில் அதனுடைய எல்லைக்குள் இருந்து, கீழ்ப்படிதலோடும் முழு இருதயத்தோடும் வேலை செய்ய வேண்டும். “பரலோகத்திலிருக்கிறவைகளும் [பரலோகத்துக்குப் போகும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், பொ.ச.33 முதற்கொண்டு] பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய [பூமியின் மீது நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும் நம்பிக்கையுள்ள சர்வதேசீய “திரள்கூட்டமான ஜனங்கள், முக்கியமாக 1935 முதற்கொண்டு] சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படுவதே” இந்த ஏற்பாடாக இருக்கிறது.—எபேசியர் 1:10; வெளிப்படுத்தின விசேஷம் 7:9, 14.
‘கட்டவும் நாட்டவும்’
7. என்ன இரண்டு வேலைகள் இன்று நடந்தேறி வருகிறது? நோவாவையும் எரேமியாவையும் போல நாம் எவ்விதமாக மகிழ்ச்சியில் பங்குகொள்ளலாம்?
7 எரேமியா தீர்க்கதரிசிக்கு சொன்னது போலவே, யெகோவா பூமியிலுள்ள அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரை “பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும், ஜாதிகளின் மேலும் ராஜ்யங்களின் மேலும்” ஏற்படுத்தியிருக்கிறார். ஆகவே இன்று இரண்டு வேலைகள் நடந்தேறி வருகின்றன. (1) சாத்தானின் பொல்லாத உலக ஒழுங்குக்கு எதிராக யெகோவாவின் நியாயத்தீர்ப்பை அறிவித்தல். (2) பாதுகாக்கப்படுவதற்காக, கடவுளுடைய சொந்த ஜனங்களின் ஒரு சமுதாயத்தைக் கட்டுவதும் நிலைநாட்டுவதும். (எரெமியா 1:10; 24:6, 7; ஏசாயா 26:20, 21) அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரும் அதிகரித்துக் கொண்டே வரும் அவர்களுடைய தோழர்களின் திரள் கூட்டமும் இன்று இந்த வேலையில் பங்குகொள்ளும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! இது, கடினமாக உழைத்த நோவாவும் அவனுடைய குடும்பமும் அவர்களுடைய நாளில் அனுபவித்ததுபோன்ற ஒரு மகிழ்ச்சியாக இருக்கிறது.
8. கடந்த 22 வருடங்களில், பிரஸ்தாபிகளில் என்ன அதிகரிப்பு இருந்திருக்கிறது.
8 லட்சக்கணக்கானோர் யெகோவாவின் நாளின் கோபத்தை தப்பிப் பிழைப்பார்களா? யெகோவாவின் சாட்சிகளுடைய 1985 ஊழிய ஆண்டின் அறிக்கை காட்டுகிறபடி, அதற்கு சிறந்த ஒரு எதிர்கால வாய்ப்பு இருக்கிறது. வெளி ஊழியத்தைச் செய்யும் பிரஸ்தாபிகளின் உச்சநிலை எண்ணிக்கையில் தனிப்பட குறிப்பிடத்தக்க அதிகரிப்பை கவனிப்பது அதிக கிளர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. இப்பொழுது மொத்தமாக 30,24,131 ராஜ்ய பிரசங்கிகள் இருக்கிறார்கள். 10,00,000 குறி 1963-ல் முதலில் அடையப்பட்டது. 1974-ல் 20,00,000. இப்பொழுது 1985-ல் 30,00,000 எட்டிவிட்டது. இந்த 22 வருடங்களில் 200 சதவீகித அதிகரிப்பு இருந்திருக்கிறது. தம்முடைய ஆவியினால் காரியங்களை வளரச் செய்யும் யெகோவாவுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!—சகரியா 4:6; 1 கொரிந்தியர் 3:6.
9 (எ) பயனியர்களின் அதிகரிப்பு ஏன் அதிக குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது? (பி) அதற்கு இடமளிக்கக்கூடிய அனைவருக்கும் சிபாரிசு செய்யப்படுவது என்ன? ஏன்?
9 முழு நேர ராஜ்ய அறிவிப்பாளர்களின் அதிகரிப்பு அந்த வருடங்களின்போது அதிக குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கிறது. மோசமாகிக்கொண்டு வரும் பொருளாதார நிலைமைகளின் மத்தியிலும் இந்த “பயனியர்” தொகுதியின் எண்ணிக்கை 1963-ல் மாதாந்தர சராசரியாகிய 38,573-லிருந்து 1985-ல் 3,22,821 ஆக உயர்ந்திருக்கிறது. இது 737 சதவீகித அதிகரிப்பாகும். இது எதைச் சுட்டிக் காட்டுகிறது? லூக்கா 9:23-லுள்ள இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைவாக, கடவுளுடைய ஜனங்களின் மத்தியில் குறிப்பிடத்தக்க சுய தியாக ஆவி இருப்பதை இது காட்டுகிறது. பொதுவாக, பயனியர் சேவையில் வெற்றிகரமாக இருப்பதற்கு, கவனமாக திட்டமிடுவதும் சுய விருப்பங்களை தியாகம் செய்வதும் அவசியமாக இருக்கின்றன. ஆனால் கிடைக்கும் வெகுமதிகள் அதிகமாக இருக்கின்றன.—ரோமர் 12:1, 2; மல்கியா 3:10.
10. (எ) சபை பிரஸ்தாபிகள் எதற்காக பாராட்டப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள்? (பி) ஊழியத்தில் இங்கு என்ன மூன்று புதிய உச்சநிலைகள் காணப்படுகின்றன? அவை என்னத்தைச் சுட்டிக்காட்டுகின்றன?
10 லட்சக்கணக்கான சபை பிரஸ்தாபிகளும்கூட, சாத்தானாலும் இந்த உலகத்தினாலும் கொண்டுவரப்படும் அழுத்தங்களுக்கு எதிராக போராட வேண்டியதாக இருக்கிறது. ஆனால் அவர்களும்கூட தேவனுக்கு “ஸ்தோத்திர பலியை” செலுத்திக்கொண்டு வருகிறார்கள். (எபிரெயர் 13:15; ரோமர் 10:9, 10) அதிகமானதோ குறைவானதோ, ஒவ்வொரு மாதமும் உண்மையுள்ள பிரஸ்தாபிகளாகிய நீங்கள் அறிக்கை செய்த அந்த மணிநேரங்கள், 1985-ம் ஆண்டின் வெளி ஊழிய மணி நேரங்களின் புதிய உச்சநிலையான 59,05,40,205 மணி நேரங்களில் சேர்ந்திருக்கின்றன. இது 1984-ஜ காட்டிலும் 16.8 சதவிகித அதிகரிப்பாகும். புதிய உச்சநிலைகளாகிய 22,47,25,918 மறு சந்திப்புகளும் அக்கறையை காட்டியவர்களோடு நடத்தப்பட்ட 23,79,146 வீட்டு பைபிள் படிப்புகளும் எல்லா இடங்களிலுமுள்ள ராஜ்ய அறிவிப்பாளர்கள் நல்ல போதகர்களாகவும் வைராக்கியமான பிரசங்கிகளாகவும் இருக்க முயற்சித்து வருகிறார்கள் என்பதைக் காட்டுகின்றன.—மத்தேயு 28:19, 20.
உண்மையான சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் கட்டுதல்
11. சமாதானத்துக்கும் பாதுகாப்புக்குமுரிய மெய்யான நம்பிக்கை எவ்விதமாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது? எந்த அளவுக்கு?
11 1985-ம் ஆண்டின் பிற்பகுதியில் ஜக்கிய நாட்டு சங்கம் 1986-ம் வருடத்தை சர்வதேசீய சமாதான ஆண்டாக அறிவித்தது. சமீப காலங்களில் ஜ.நா. சமாதானத்தையும் பாதுகாப்பையும் பற்றி அதிகத்தை சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் யெகோவாவின் சாட்சிகள் வெளி ஊழியத்தில் 3,88,05,561 பைபிள்களையும் புத்தகங்களையும் சிறு புத்தகங்களையும் மற்றும் 30,05,45,609 பத்திரிக்கைகளையும் அளித்து, காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிக்கைகளுக்கு 17,19,30 சந்தாக்களைப் பெற்றுக் கொண்டபோது சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும், வேத ஆதாரமுள்ள நம்பிக்கையைப் பற்றிய முக்கியமான அறிவிப்பு அதிவேகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அச்சடிக்கப்பட்ட தாளின் மூலமாகவும், வாய்வார்த்தையின் மூலமாகவும், மெய்யான “சமாதான பிரபு”வின் ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்துக்கு, இன்று வரையாக, மகத்தான சாட்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. உண்மையாகவே, “அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும் அதின் சமாதானத்துக்கம் முடிவில்லை.—ஏசாயா 9:6, 7.
12. விரிவு செய்யப்படுவதற்கு காரணமாக, என்ன தேவை இருந்திருக்கிறது? அந்த தேவையை பூர்த்தி செய்வதில் எவ்விதமாக யெகோவாவின் ஜனங்கள் ஜக்கியப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள்?
12 வெளி ஊழியத்தில் பிரமாண்டமான வளர்ச்சி, அதற்கு ஆதரவளித்துவரும் அமைப்பில் வளர்ச்சியை தேவைப்படுத்தியிருக்கிறது. 1985-ன் போது உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளின் எண்ணிக்கை 47,869-லிருந்து 49,716 ஆக வளர்ந்திருக்கிறது. இதன் காரணமாக, கூடுவதற்கு புதிய இடங்கள் நூற்றுக்கணக்கில் தேவையாக இருக்கின்றன. அநேக தேசங்களில் சாட்சிகள் ராஜ்ய மன்றங்களை கட்டுவதற்கு பொருளுதவி அளிப்பதில் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பது எத்தனை சிறப்பாக இருக்கிறது! தேவை இருக்கும் இடங்களில், தனி நபர்களும் சபைகளும், ஒருவர் மற்றவரின் கட்டிட வேலைக்கு தன்னலமில்லாமல் ஆதரவை கொடுத்திருக்கிறார்கள். இவ்விதமாக உலகளாவிய சகோதர கூட்டத்தின் மத்தியில், “சமநிலை பிரமாணம்” இருந்து வந்திருக்கிறது.—2 கொரிந்தியர் 8:14, 15.
13. ராஜ்ய மன்ற கட்டிட வேலைக்கு தனிப்பட்டவர்கள் எவ்விதமாக நன்கொடை அளிக்கக்கூடும்?
13 சூழ்நிலைமைகள் சாதகமாக இருக்கும் தேசங்களில் காவற்கோபுரம் சங்கத்தின் கிளைக்காரியாலயங்களும்கூட ராஜ்ய மன்றங்களின் கட்டிட வேலைக்கு உதவி செய்திருக்கின்றன. ஜக்கிய மாகாணங்களிலும் கனாடாவிலும், விசேஷித்த ராஜ்ய மன்ற நிதிக்காக அநேகர் நன்கொடைகளை கொடுத்து வருகிறார்கள். இது ராஜ்ய மன்றங்களை கட்டுவதற்கு கடனுதவி அளிப்பதை கூடிய காரியமாக்கியிருக்கிறது. மற்றவர்கள் தங்களுடைய சக்திகளையும் திறமைகளையும் கொடுத்து உதவியதால் இரண்டே நாட்களிலும்கூட ராஜ்ய மன்றங்கள் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன. இது போன்ற திட்டங்களில் “யெகோவாவுக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்வதன்” மூலம் உலகப் பிரகாரமான ஆட்கள் கூடாத காரியம் என்பதாக கருதுகிறவற்றை சாட்சிகளால் சாதித்துவிட முடிகிறது.—கொலோசெயர் 3:23.
14. மாநாடு மன்றங்களின் தேவைகள் எவ்விதமாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன?
14 அநேக தேசங்களில், யெகோவாவின் சாட்சிகள் வருடத்துக்கு இருமுறை நடத்தும் மாநாடுகளுக்கு அவர்களுக்கு போதிய கட்டிட வசதி இல்லாதிருப்பது முக்கிய பிரச்னையாக இருந்திருக்கிறது. மறுபடியுமாக, சாட்சிகள், பூர்வ காலங்களில் கடவுளுடைய ஊழியர்கள் காட்டியிருக்கும் அதே ஆவியில் கட்டிடங்களுக்காக திட்டமிடுவதன் மூலமாக சவாலை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக வாசஸ்தலத்தை கட்டுவதற்கு பொருட்கள் தேவையாக இருந்தபோது, இஸ்ரவேல் ஜனங்கள் ஜக்கியமாக கடவுளுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்தார்கள்: “உங்களுக்கு உண்டானதிலே யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொண்டு வந்து செலுத்துங்கள். மனமுள்ளவன் எவனோ அவன் அதைக் கொண்டு வரட்டும்.” போதும் என்ற நிலைக்கும் அதிகமாய் பொருட்களை அவர்கள் கொண்டு வந்தார்கள். வேலை சீக்கிரமாக செய்து முடிக்கப்பட்டது.—யாத்திராகமம் 35:5-19; 36:7.
15. (எ) காவற்கோபுரம் சங்கத்தின் கிளைக்காரியாலயங்களில் என்ன வேலை நடந்து வருகிறது? (பி) வேலை எவ்விதமாக செய்து முடிக்கப்படுகிறது?
15 பைபிள்களுக்கும் பைபிள் ஆதார பிரசுரங்களுக்கும் தேவை அதிகரித்தபோது, உலகம் முழுவதிலுமுள்ள 94 காவற்கோபுரம் சங்கத்தின் கிளைக்காரியாலங்களில் பெரும்பாலானவை அவற்றின் கட்டிட வசதிகளை விரிவாக்க வேண்டியதாக இருந்தது. ப்ரூக்ளின் மற்றும் காவற்போபுரம் பண்ணைகளின் அச்சு வேலைப்பாடே இன்னும் மிகப் பெரியதாக இருக்கிறது. ஆனால் சங்கத்தின் 36 கிளைக் காரியாலயங்கள், இப்பொழுது தங்களுடைய சொந்த பத்திரிக்கை அச்சு வேலைகளை கவனித்துக் கொள்ளுகின்றன. 6 கிளைக் காரியாலயங்களில் புத்தகங்களை அச்சு செய்யவும் பைண்ட் செய்யவும்கூட வசதிகள் இருக்கின்றன. இவைகளில், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பைபிள்களை உற்பத்தி செய்கின்றன. ஜெர்மனியில், செல்டர்ஸிலுள்ள புதிய தொழிற்சாலையில் முழு அளவில் வேலை நடந்து வருகிறது. ஜப்பானிலுள்ள எபினாவில், கூடுதலாக ஆறு மாடி தொழிற்சாலை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இன்னும் 280 வேலையாட்களுக்கு இடமளிக்க பெத்தேல் வீட்டு கட்டிடத்திற்கு புதிய இணைப்பாக எட்டு அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. யெகோவாவின் ஜனங்கள், சாலொமோனின் ஆலய வேலைக்கு “முழு இருதயத்தோடு” கொடுத்தது போலவே, இன்று பல்வேறு தேசங்களிலுள்ள கடவுளுடைய ஜனங்கள் “யெகோவாவுக்கு மனப்பூர்வமாய்க் கொடு”க்கிறார்கள். யெகோவா தம்முடைய ஆசீர்வாதத்தை கூட்டுகிறார். வேலை நிறைவு பெறுகிறது.—1 நாளாகமம் 22:14, 15; 29:7, 9, Ref. Bi., கீழ்க்குறிப்பு.
16. கூடுதலான இந்த கட்டிடங்களும் ஒழுங்குபடுத்தி அமைத்தலும் ஏன் அவசியமாக இருந்திருக்கிறது?
16 இந்த அனைத்து கட்டிட வேலைகளும் ஒழுங்குப்படுத்தி அமைத்தலும் உண்மையில் அவசியம்தானா? “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” தொடர்ந்து ஆவிக்குரிய “உணவை ஏற்ற வேளையில்” கொடுக்க வேண்டுமானால் இது அவசியமாகவே இருக்கிறது; இத்தகைய உணவு, “தேவனுடைய வீட்டாரின்” வளர்ச்சிக்கும் 200-க்கும் மேற்பட்ட மொழிகளில் உலகம் முழுவதிலும் பிரசங்கிப்பதற்கும் இன்றியமையாததாக இருக்கிறது. (மத்தேயு 24:45; எபேசியர் 2:19; 4:15, 16) யெகோவாவின் ஜனங்களே அவர்களுடைய திறமைகளை பயன்படுத்தி பல்மொழி எலக்ட்ரானிக் ஒளிப்படத் தகட்டச்சு முறையை (MEPS) உருவாக்கியிருக்கிறார்கள். இப்பொழுது இவை 26 காவற்கோபுரம் கிளைக் காரியாலயங்களிலும் இருக்கின்றன. உலகம் முழுவதிலும் ஒருங்கிணைந்து கல்லச்சு முறையில் அச்சு செய்வதை இது கூடியகாரியமாகச் செய்திருக்கிறது. பூமியின் பல பாகங்களிலும் ஒரே சமயத்தில் ராஜ்ய செய்தியை அறிவிப்பதற்கும் இது உதவியிருக்கிறது.—ஏசாயா 52:7-9 ஒப்பிடவும்.
17. புரூக்ளின் தலைமைக் காரியாலயத்தில் என்ன தேவை இருக்கிறது? இது எவ்விதமாக கையாளப்பட்டு வருகிறது?
17 யெகோவாவின் அமைப்பின் நவீன நாளைய வளர்ச்சிக்கு ஒரு முடிவிருப்பதாக தோன்றவில்லை. இப்பொழுதேயும்கூட சங்கத்தின் தலைமைக் காரியாலயமாகிய நியூ யார்க் புரூக்ளினிலுள்ள பெத்தேல் குடும்பம், எல்லா அறைகளையும் நிரப்பும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. யெகோவாவின் சித்தமானால், கூடுதலாக ஆயிரம் பேருக்கு இடமளிக்கும் பல மாடி கட்டிடம் ஒன்று கொலம்பியா ஹைட்ஸில் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டப்படலாம். ஆனால் இது கைக்கூடிவராவிட்டால் இந்த விஷயத்தில் யெகோவாவின் வழிநடத்துதலுக்காக நாம் காத்துக் கொண்டிருப்போம். இந்த எல்லா வளர்ச்சிகளின் சம்பந்தமாகவும் உலகம் முழுவதிலுமுள்ள சகோதரர்களின் ஜேபங்களும் உண்மையான ஆதரவும் நிச்சயமாகவே போற்றப்படுகிறது.—அப்போஸ்தலர் 21:14; 2 தெசலோனிக்கேயர் 3:1-ஜ ஒப்பிடவும்.
18. அர்மெகதோன் அருகாமையில் இருந்தபோதிலும் இன்று ஏன் அநேக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன?
18 ‘ஆனால் ஏன்’ என்பதாக எவராவது கேட்கலாம், ‘நாம் அர்மெகதோனை நேருக்குநேர் எதிர்படுகையில் ஏன் இத்தனை விரிவாக்க திட்டங்கள்?’ அர்மெகதோன் வருகையில் யெகோவாவின் அமைப்பு ‘கடையை மூடிவிடுவதில்லை’ என்பதே இதற்கு பதிலாக இருக்கிறது. அது சாத்தானுடைய அமைப்புக்கு மட்டுமே ‘கடைமூடும் நேரமாக’ இருக்கிறது. யெகோவாவின் அமைப்பு நித்தியமான ஒரு எதிர்காலத்துக்காக கட்டிக் கொண்டிருக்கிறது. மனிதனால் கட்டப்படும் கட்டிடங்களை அர்மெகதோன் புயல் காற்று அழித்தாலும் அழிக்காவிட்டாலும், யெகோவாவின் அமைப்பு அழிக்காமல் பாதுகாக்கப்படும் என்பதையும் யெகோவா அதையும் அதை உண்மையுடன் ஆதரிப்பவர்களையும் உபயோகிப்பார் என்பதையும் நாம் அறிவோம். கடவுள் வாக்குப் பண்ணியுள்ள மகிமையான பூமிக்குரிய பரதீஸில் நித்திய சமாதானத்தையும் பாதுகாப்பையும் அவர் நிலைநாட்டுவார்.—வெளிப்படுத்தின விசேஷம் 7:9, 14-17; 21:1, 4, 5.
ஒரு நோக்கத்தோடு கட்டுதல்
19. 1985 ஞாபகார்த்த அறிக்கையில் என்ன சவால் காணப்படுகிறது?
19 நோவா ஒரு நோக்கத்தை மனதில் கொண்டு கட்டினான். அதே விதமாகவே நாமும் செய்ய வேண்டும். 1985 ஊழிய ஆண்டு அறிக்கையின் ஒரு அம்சம் நம்முடைய சிந்தனைக்கு உணவாக இருக்கிறது. 1985 ஏப்ரல் 4-ம் தேதி இயேசுவின் மரணத்தை நினைவு கூருவதற்கு 77,92,109 பேர் வந்திருந்தார்கள். இது 1984-ஜவிட 3,75,135 பேர் அதிகமாகும். நிச்சயமாகவே இது மகத்தான ஒரு எண்ணிக்கையாக இருக்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கையில் ஒரு சவால் இருக்கிறது. ராஜ்ய சேவையில் பங்கு கொள்பவர்களின் உச்சநிலை 30,24,131 பிரஸ்தாபிகளாக இருக்கையில், ஓரளவுக்கு நம்மோடு கூட்டுறவுக் கொள்பவர்களின் எண்ணிக்கை 40,00,000-க்கும் அதிகமாக இருக்கிறது. இவர்கள் கிறிஸ்தவ ஊழியத்தில் பங்கு கொள்வதன் மூலம் எதிர்காலத்துக்காக இனிமேல்தான் கட்ட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு எவ்வாறு உதவி செய்யலாம்?
20. சவாலை எதிர்பட, என்ன அவசரமான தேவை இருக்கிறது? நடைமுறையில் நாம் இதை எவ்வாறுச் செய்யலாம்?
20 அக்கறை காட்டும் இவர்களில் அநேகரை நாம் தனிப்பட்டவர்களாக அறிந்திருக்கிறோம். அவர்கள் குடும்ப அங்கத்தினர்களாகவும், நம்முடைய பைபிள் படிப்புகளாகவும் நம்முடைய பத்திரிக்கைகளுக்கு சந்தா செய்பவர்களாகவும் அல்லது மற்றவர்களாகவும் இருக்கலாம். சிலர் கடந்த ஞாபகார்த்த ஆசரிப்பு சமயத்திலிருந்தும் அக்கறை காட்டிய ஆட்களாக இருக்கலாம். “விக்கினங்கள் கடந்து போகுமட்டும்” யெகோவாவின் ஏற்பாட்டில் அடைக்கலம் காணும் பொருட்டு இவர்கள் வளர்வதற்கு உதவி செய்து பைபிள் படிப்பின் மூலமாக கட்டியெழுப்ப இப்பொழுது நாம் விசேஷமாக முயற்சி செய்யக்கூடுமா? (சங்கீதம் 57:1) “மிகுந்த உபத்திரவம்” நோவாவின் கால ஜலப்பிரளயத்தைக் காட்டிலும் அதிக அர்த்தமுள்ளதாயும் முடிவானதாயும், யெகோவாவின் ஒரு வெற்றிச் செயலாகவும் இருக்கும். அக்கறை காட்டும் இவர்களை, ஜீவனைக் கொடுக்கும் சத்தியங்களால் கட்டியெழுப்ப நாம் விரும்புகிறோம். அப்பொழுது அவர்கள் யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொண்டு” அழிந்து போகாமல் இருப்பார்கள். (மத்தேயு 24:21, 22, 39; செப்பனியா 2:3; 3:8, 9) கடவுளுடைய வார்த்தையை “நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்” என்ற பாடபுத்தகத்தை அல்லது விசுவாசத்தை கட்டியெழுப்பும் பைபிள் பிரசுரத்தை உபயோகித்து, அவர்களோடு படிப்போமாக.
21. நாம் எவ்விதமாக நம்மிலும் மற்றவர்களிலும் நோவாவின் விசுவாசத்தைப் போன்ற விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளலாம்?
21 யெகோவா தேவன் கைத்தேர்ந்த கட்டிட கலைஞராகவும் மனிதவர்க்கத்துக்கு தேவையானவற்றை தாராளமாக கொடுப்பவராகவும் இருக்கிறார். (சங்கீதம் 127:1; 145:16; பிரசங்கி 3:10-13) அவர் தாமே பேழையை திட்டமிட்டு, கட்டுவதற்கு நோவாவுக்கு கட்டளைகளைக் கொடுத்தார். பெரிய நோவாவாகிய இயேசு கிறிஸ்துவின் மனமார்ந்த ஒத்துழைப்பின் மூலமாக அவர் கீழ்ப்படிதலுள்ள மனிதர்களை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்டுக்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த குமாரனின் மூலமாகவே அவர் நவீன நாளைய “பேழை”யையும் கட்டி வருகியர். இது செழித்தோங்கிக் கொண்டிருக்கும் ஆவிக்குரிய பரதீஸாக இருக்கிறது. இதில் விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களும் நித்திய ஜீவனின் எதிர்பார்ப்போடு பாதுகாப்பை அனுபவித்து வருகிறார்கள். (மத்தேயு 20:26-28; யோவான் 3:16; 17:3) விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள மற்ற அநேகருக்கு உதவி செய்து யெகோவாவோடும் அவருடைய குமாரனோடும் நெருக்கமான ஒரு பிணைப்பை நாம் வளர்த்துக் கொள்வோமாக. நீதியை நேசித்து அக்கிரமத்தை வெறுக்க நாம் அவர்களுக்கு உதவி செய்வோமாக. (எபிரெயர் 1:9) இவ்விதமாக நோவாவினுடையதைப் போன்ற விசுவாசத்தோடு நாம் ஒன்றாகச் சேர்ந்து, தொடர்ந்து நித்திய எதிர்காலத்துக்காக கட்டிக் கொண்டிருக்கலாம்.—1 தீமோத்தேயு 4:15, 16. (w86 1/1)
விமர்சிக்க சில கேள்விகள்—
◻ இயேசு எவ்விதமாக எதிர்காலத்துக்காக கட்டினார்?
◻ 1985 ஆண்டு அறிக்கையில் எது குறிப்பிடத்தக்கதாக இருப்பதை நீங்கள் கவனித்தீர்கள்?
◻ தேவராஜ்ய கட்டிட ஏற்பாடுகள் ஏன் தேவையாக இருக்கின்றன?
◻ நாம் அனைவருமே எவ்விதமாக ஒரு நோக்கத்தோடு கட்டலாம்?
[பக்கம் 27-ன் பெட்டி]
யெகோவாவின் வேலை தடை செய்யப்பட்டிருக்கும் ஒரு ஆப்பிரிக்க தேசத்தில் ஒரு சபையில் 95 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் ஊழியத்தில் பங்குகொள்கிறார்கள். கூட்டங்களுக்கு வருகைத் தருபவர்களின் சராசரி 130. பொது பேச்சுக்கு வருகைத் தருபவர்களின் சராசரி 160. அந்த சபையில் மூன்று ஒழுங்கான பயனியர்களும் சமீபத்தில் எட்டு துணைப் பயனியர்களும் இருக்கிறார்கள். ஆறே மாதங்களில் 21 புதிய பிரஸ்தாபிகள் வெளி ஊழியத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.
[பக்கம் 24, 25-ன் பெட்டி/படங்கள்]
யெகோவாவின் சாட்சிகளின் உலகளாவிய கட்டிட வேலை
உலகமெங்கும் 3,22,821 பயனியர்கள் ஒவ்வொரு மாதமும் அறிக்கை செய்துவந்தார்கள் (24.7 சதவிகிதம் அதிகரிப்பு)
பயனியர்கள் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய புறப்பட்டு போகிறார்கள், புரூக்ளின், நியூ யார்க்
உலகமெங்கும் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 30,24,131 உச்சநிலையை எட்டியது (6.4 சதவிகித அதிகரிப்பு)
கனாடாவிலுள்ள க்யூபெக் மான்டிரியலில் பதினான்கு-மொழி மாநாடு
அக்கறை காட்டுபவர்களின் பேரில் 22,47,25,918 மறுசந்திப்புகள் இந்த வருஷம் செய்யப்பட்டது (14.8 சதவிகிதம் அதிகரிப்பு)
சாட்சிபகருதல், காசில் கோம், உவில்ட்ஷயர், இங்கிலாந்து
ஒவ்வொரு மாதமும் 2,379,146 வேதப்படிப்புகள் நடத்தப்பட்டன (16.2 சதவிகிதம் அதிகரிப்பு) மைக்ரானீஸியாவிலுள்ள யாப் தீவில் ஒரு புத்தகப்படிப்பு
உலகளாவிய ஆவிக்குரிய கட்டியமைக்கும் வேலைக்கு ஆதரவாக உபயோகிக்கப்படும் சில கட்டிடங்கள்
புரூக்ளினில், பைபிள்களும் பைபிள் பிரசுரங்களும் 360 ஃபெர்மன் தெருவிலுள்ள இந்த 10,00,000 சதுர.அடி கட்டிடத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது
இந்த ராஜ்ய மன்றம் (டவுன்பாட்ரிக், வடக்கு ஐயர்லாந்து) 31 மணிநேரத்தில் கட்டப்பட்டது
ரோமிலுள்ள இந்த மாநாடு மன்றம், உலகமெங்கும் உபயோகிக்கப்படும் இதைப்போன்ற பல மன்றங்களில் ஒன்றாகும்
ஜப்பானின் பெத்தேல் வீட்டுடன் இந்த இணைப்புக் கட்டிடம் இப்போது கட்டப்பட்டு வருகிறது
[பக்கம் 28-ன் அட்டவணை]
1985-ல் 1,00,000 மேற்பட்ட பிரஸ்தாபிகளை அறிக்கை செய்த தேசங்கள்
ஜக்கிய மாகாணங்கள் 7,23,220
ப்ரெஸில் 1,77,904
மெக்ஸிக்கோ 1,73,037
இத்தாலி 1,27,526
நைஜீரியா 1,21,729
ஜெர்மனி 1,15,604
பிரிட்டன் 1,03,522
ஜப்பான் 1,03,117