நம்முடைய மகத்தான சிருஷ்டிகரில் களிகூருதல்
“இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள்.”—சங்கீதம் 149:2.
1. “கடைசியாக சுயாதீனம்” என்ற ஆர்ப்பரிப்பின் மத்தியிலும் மனிதவர்க்கத்தின் உண்மை நிலை என்ன?
இன்றைய உலகம் “துயர்மிகுந்த வேதனை”களால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. “இந்தக் காரிய ஒழுங்கு முறையின் முடிவு,” 1914-ல் முதல் உலகப் போரோடு ஆரம்பமான பேரழிவுக்குரிய சகாப்தம் பற்றிய தம்முடைய தீர்க்கதரிசனத்தில் இயேசு அந்தச் சொற்றொடரையே பயன்படுத்தினார். (மத்தேயு 24:3-8, NW) அநேக அரசியல்வாதிகள் இருண்ட எதிர்காலத்தைத் தவிர வேறெதையும் காண்பதில்லை. கிழக்கு ஐரோப்பாவில், “கடைசியாக சுயாதீனம்,” என்ற ஆர்ப்பரிப்பின் மத்தியிலும், அப்பகுதியில் ஒரு சமயம் ஜனாதிபதியாக இருந்தவர் பின்வருமாறு சொன்னபோது நிலைமையைச் சுருக்கமாக தொகுத்துவிட்டார்: “மக்கள்தொகை வெடிப்பும், கண்ணாடி வீடு விளைவும், ஓசோனில் துளைகளும், எய்ட்ஸ்-ம், அணுஆயுத பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலும், வட கோளத்திலுள்ள பணக்கார நாடுகளுக்கும் தென் கோளத்திலுள்ள ஏழை நாடுகளுக்குமிடையே குறிப்பிடத்தக்க வகையில் விரிவாகிவரும் இடைவெளியும், பஞ்சத்தின் அபாயமும், உயிர்வகைகளைக்கொண்ட பூமி மற்றும் வளிமண்டலப்பகுதியின் ஆற்றல் குறைவுபடுவதும், பூமி கோளத்தில் தாது வளஆதாரங்கள் வெறுமையாக்கப்படுவதும், வர்த்தக தொலைக்காட்சி கலாச்சாரத்தின் விஸ்தரிப்பும், வளர்ந்துவரும் பிராந்திய போர் அச்சுறுத்தலும்—இவை அனைத்தும் ஆயிரக்கணக்கான மற்ற காரணக்கூறுகளும் சேர்ந்து மனிதவர்க்கத்துக்குப் பொதுவில் அச்சுறுத்தலைக் குறிக்கிறது.” இறுதியான இந்தப் பேராபத்தின் அச்சுறுத்தலை நீக்க எந்த மனித வல்லமையும் இல்லை.—எரேமியா 10:23.
2. மனிதவர்க்கத்தின் பிரச்னைகளுக்கு நிரந்தரமான பரிகாரத்தை யார் கொண்டிருக்கிறார், அவர் ஏற்கெனவே என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்?
2 இருப்பினும் நம்முடைய மகத்தான சிருஷ்டிகர் நிரந்தரமான பரிகாரத்தைக் கொண்டிருப்பதற்காக நாம் களிகூரலாம். இயேசுவின் தீர்க்கதரிசனத்தில் “காரிய ஒழுங்கின் முடிவு” அவருடைய காணக்கூடாத “பிரசன்ன”த்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது. (மத்தேயு 24:3, 37-39, NW) யெகோவா “புதிய வானங்களைச்” சிருஷ்டிப்பதற்காக, இயேசுவை அவருடைய சிங்காசனத்தில் மேசியானிய ராஜாவாக அமர்த்தியிருக்கிறார். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சம்பவம் பரலோகத்தில் 1914-ம் ஆண்டு நிகழ்ந்தது என்பதை தீர்க்கதரிசன அத்தாட்சி காண்பிக்கிறது.a (2 பேதுரு 3:13) கர்த்தராகிய ஆண்டவர் யெகோவாவோடு இணை அரசராக, இயேசு, தேசங்களை நியாயந்தீர்க்கவும் பூமியிலுள்ள சாந்தகுணமுள்ள, செம்மறியாடு போன்ற மக்களைப் பிடிவாதமுள்ள வெள்ளாடு போன்றவர்களிடமிருந்து பிரிக்கவும் இப்பொழுது அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறார். தெய்வபயமற்ற “வெள்ளாடுகள்,” “நித்திய ஆக்கினை”க்கும் “செம்மறியாடுகள்” ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியில் நித்திய ஜீவனுக்காகவும் குறியிடப்பட்டுவருகிறார்கள்.
3. உண்மை கிறிஸ்தவர்களுக்கு களிகூருவதற்கு என்ன காரணமிருக்கிறது?
3 பூமியிலுள்ள ஆவிக்குரிய இஸ்ரவேலரில் மீதியானோருக்கும், இப்பொழுது இவர்களைச் சேர்ந்துகொண்டிருக்கும் கீழ்ப்படிதலுள்ள இந்தச் செம்மறியாடுகளின் திரள் கூட்டத்தாருக்கும் யெகோவா தம்முடைய குமாரனுடைய ராஜ்யத்தின் மூலமாக தம்முடைய மகத்தான நோக்கங்களை உச்சக்கட்டத்துக்கு கொண்டுவருகையில் நித்தியத்தின் ராஜாவாகிய யெகோவாவில் களிகூர எல்லா காரணமுமிருக்கிறது. அவர்கள் இவ்வாறு சொல்லக்கூடும்: “கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; . . . அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி(யிருக்கிறார்.) . . . பூமி தன் பூண்டுகளை விளைவிப்பது போலவும், தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைவிப்பதுபோலவும், கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்.” (ஏசாயா 61:10, 11) இந்த “முளைக்கப்பண்ணு”தல் இப்பொழுது எல்லா தேசங்களிலிருந்தும் யெகோவாவுக்குத் துதிப்பாடுவதற்காக கூட்டிச்சேர்க்கப்பட்டுவரும் லட்சக்கணக்கானோரில் காணமுடிகிறது.
‘தீவிரமாக்குதல்’
4, 5. (எ) கடவுளுடைய மக்கள் கூட்டிச்சேர்க்கப்படுதல் எவ்வாறு முன்னறிவிக்கப்பட்டது? (பி) குறிப்பிடத்தக்க என்ன அதிகரிப்பு 1992 ஊழிய ஆண்டின்போது காணப்பட்டது?
4 சாத்தானுடைய ஒழுங்கின் முடிவு நெருங்கிவருகையில், கூட்டிச்சேர்த்தலின் வேகம் கூடுகிறது. நம்முடைய மகத்தான சிருஷ்டிகர் அறிவிக்கிறார்: “உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், . . . நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள். சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.” (ஏசாயா 60:21, 22) தீவிரமாய் நடப்பிக்கப்படும் இந்தக் காரியம், இந்தப் பத்திரிகையில் பக்கங்கள் 12 முதல் 15 வரையாக பிரசுரிக்கப்பட்டிருக்கும் உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளின் 1992 ஊழிய ஆண்டின் அறிக்கையில் மிக நேர்த்தியாக பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது.
5 இந்த அறிக்கையில் குறிப்பிடத்தக்கதாக இருப்பது 44,72,787 ராஜ்ய அறிவிப்பாளர்களின் புதிய உச்ச எண்ணிக்கையாகும், இது கடந்த ஆண்டைவிட 1,93,967—4.5 சதவீதம் அதிகமாகும். 1992-ன் போது முழுக்காட்டப்பட்டவர்களின் உச்ச எண்ணிக்கையான 3,01,002-ம் திரளான மக்கள் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டுவரும் உண்மையைப் பிரதிபலிக்கிறது. இந்த “இருளும் அந்தகாரமுமான நா”ளில், வெட்டுக்கிளிகளின் ஒரு கூட்டத்தைப் போல, ராஜ்ய சாட்சியை “பூமியின் கடைசிபரியந்தமும்,” விரிவுபடுத்திவரும் “ஏராளமான பலத்த ஒரு ஜாதி,” இருப்பதைக் குறித்து நாம் எவ்வளவு களிகூருகிறோம்! (யோவேல் 2:2, 25; அப்போஸ்தலர் 1:8) பனிமூடிய அலாஸ்காவிலிருந்து—பயணஞ்செய்ய முடியாதபடி பனிச்சேற்றினால் தடைப்பட்ட பிராந்தியங்களை 50-க்கும் மேற்பட்ட தடவைகள் காவற்கோபுர சங்கத்தின் விமானம், விஜயம் செய்திருக்கிறது—வாட்டும் வெப்பமுள்ள பாலைவனங்களாகிய மாலி மற்றும் பர்க்கினா ஃபாஸோ வரையாகவும், சிதறியுள்ள மைக்ரோனீஸியா தீவுகளிலும் யெகோவாவின் ஊழியர்கள், “பூமியின் கடைசிபரியந்தமும் [அவருடைய] இரட்சிப்பாயிருக்கும்படி, . . . ஜாதிகளுக்கு ஒளியாக” பிரகாசித்துக்கொண்டிருக்கிறார்கள்.—ஏசாயா 49:6.
6, 7. அண்மை ஆண்டுகளில் எதிர்பாராத என்ன சம்பவங்கள் காணப்பட்டிருக்கின்றன, யெகோவாவின் ஊழியர்கள் அதற்கு எவ்விதமாக பிரதிபலித்திருக்கிறார்கள்?
6 யெகோவா தம்முடைய மக்களைப் பாதுகாப்பதிலும் தாங்குவதிலும் அடைக்கலமும் பலத்த துருகமுமாக இருந்திருக்கிறார். பூமியின் பல பாகங்களில், யெகோவாவின் சாட்சிகள் பல பத்தாண்டுகளாக கொடூரமான ஒடுக்குதலையும் துன்புறுத்தலையும் சகித்திருக்க வேண்டியதாக இருந்திருக்கிறது. (சங்கீதம் 37:39, 40; 61:3, 4) ஆனால் அண்மையில், ஏதோ ஓர் அற்புதம் நிகழ்ந்தது போல, 21 தேசங்களில் கட்டுப்பாடுகளும் தடைகளும் நீக்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுது கடவுளுடைய மக்கள் கிறிஸ்துவை நம்முடைய மகத்தான சிருஷ்டிகர் பூமியின் மீது ராஜாவாக ஏற்படுத்தியிருக்கிறார் என்பதைத் தாராளமாக அறிவிக்க முடியும்.—சங்கீதம் 2:6-12.
7 புதிதாக பெறப்பட்ட சுயாதீனத்தை யெகோவாவின் மக்கள் நல்லவிதமாக பயன்படுத்தி வருகிறார்களா? கிழக்கு ஐரோப்பாவில் பல்கேரியா, ருமேனியா மற்றும் முன்னாள் சோவியத் யூனியனிலும் ஆப்பிரிக்காவில் அங்கோலா, பெனின் மற்றும் மொஸாம்பிக்கிலும் அதிகரிப்புகளை விளக்க அட்டவணையில் கவனியுங்கள். சேய்ரிலும்கூட விஸ்தரிப்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. தங்கள் இருதயங்களில் சந்தோஷத்தோடே, சுயாதீனம் பெற்ற நம்முடைய சகோதரர்கள் பின்வரும் அழைப்புக்குச் செவிசாய்க்கிறார்கள்: “கர்த்தருக்கு நன்றிசெலுத்துங்கள், அவர் நல்லவர், . . . ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவருக்கு நன்றிசெலுத்துங்கள், அவருடைய அன்பான இரக்கம் என்றென்றுமுள்ளது.” (சங்கீதம் 136:1, 4, NW) இன்னும் மற்ற செம்மறியாடுகளைப் போன்ற மக்களை ராஜ்யத்தின் பக்கமாக கூட்டிச் சேர்ப்பதில் வைராக்கியமுள்ள ஊழியத்தின் மூலமாக இந்த நன்றிகள் வெளிக்காட்டப்படுகின்றன.
8 கடந்த ஐரோப்பிய கோடையின்போது, முன்னாள் கம்யூனிஸ்ட் தேசங்களில் நடத்தப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடுகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஆஜர் எண்ணிக்கையை கொண்டிருக்கின்றன. இணைந்துவரும் விளக்க அட்டவணை காண்பிக்கிறபடி, இன்னும் அதிக வியப்பூட்டுவதாய் இருப்பது முழுக்காட்டப்பட்டவர்களின் எண்ணிக்கையாகும். அதேவிதமாகவே, ஆப்பிரிக்காவிலுள்ள டோகோவில், தடையுத்தரவு டிசம்பர் 10, 1991-ல் நீக்கப்பட்டது. அதற்கடுத்த மாதம் ஒரு தேசீய மாநாடு நடத்தப்பட்டது. வெளிஊழியத்தில் மாதாந்தர சராசரியான 6,443 பிரஸ்தாபிகளோடு ஒப்பிடுகையில், மாநாடுகளின் ஆஜர் எண்ணிக்கை 25,467 என்று உயர்ந்தது, 556 பேர் முழுக்காட்டப்பட்டனர்—இது பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் 8.6 சதவீதமாகும். ஏசாயா 60:8 வருணிக்கிறபடி யெகோவாவை புதிதாக துதிப்பவர்கள் யெகோவாவின் மக்களுடைய சபைகளுக்கு “மேகத்தைப் போலவும், தங்கள் பலகணித்துவாரங்களுக்குத் தீவிரிக்கிற புறாக்களைப் போலவும் பறந்துவருகிறா”ர்கள்.
9. அண்மையில் சுயாதீனம் பெற்ற தேசங்களிலுள்ள கிறிஸ்தவர்கள் ‘சாப்பிட்டு திருப்தியடையும்’ பொருட்டு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன?
9 கிழக்கு ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் ஆவிக்குரிய உணவுக்காக இருந்துவரும் பசி தீர்க்கப்பட்டு வருகிறது. ஜெர்மனி, இத்தாலி மற்றும் தென் ஆப்பிரிக்காவிலுள்ள காவற்கோபுர சங்கத்தின் தொழிற்சாலைகள், ஆவிக்குரிய விதமாக பசியிலிருக்கும் தேசங்களுக்கு இலக்கியங்களை அநேக மொழிகளில் பார வண்டிகளில் ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு முன்னால் அநேக சாட்சிகள் நன்றாக பயன்படுத்தி சேதமடைந்த பத்திரிகைகளை பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது அவர்கள் ஆவிக்குரிய உணவை அபரிமிதமாக பெற்றுவருகிறார்கள். இந்தத் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தில் பங்குகொள்வதில் களிகூருகிறார்கள்: “நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்.”—யோவேல் 2:26.
கூடுதலான விஸ்தரிப்பை கவனித்துக்கொள்ளுதல்
10. நினைவு ஆசரிப்பின் உயர்வான ஆஜர் எண்ணிக்கையை முன்னிட்டுப் பார்க்கையில், அக்கறையுள்ள ஆட்கள் அனைவருக்கும் என்ன அழைப்பு விடுக்கப்படுகிறது?
10 இயேசுவின் மரண நினைவுநாள் ஆசரிப்புக்கு உலகம் முழுவதிலும் வந்திருந்தவர்களின் ஆஜர் எண்ணிக்கையான 1,14,31,171 நிச்சயமாகவே ஆச்சரியம் தருவதாக உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 7,81,013 அல்லது 7.3 சதவீத அதிகரிப்பாகும். புதிதாக வந்த உங்கள் அனைவருக்கும் நல்வரவு! இப்படிப்பட்ட புதிதாக அக்கறைகாட்டும் ஆட்கள் அனைவரும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரோடு ஒரு வீட்டு வேதப்படிப்பின் நன்மைகளை அனுபவித்து மகிழ்ந்தால் அது எத்தனை நேர்த்தியாக இருக்கும்! (ஏசாயா 48:17 பார்க்கவும்.) ஒவ்வொரு மாதமும் இப்படிப்பட்ட 42,78,127 படிப்புகள் நடத்தப்படுவதை ஊழிய ஆண்டு அறிக்கை காண்பிக்கிறது, இது நேர்த்தியான 8.4 சதவீத அதிகரிப்பு. என்றபோதிலும் இன்னும் அநேகர் இந்தச் சேவையை தங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். அக்கறையுள்ள ஆட்களிடம் இலவசமான பைபிள் படிப்பை வீட்டில் நடத்துவதற்காக அவர்களை ஒழுங்காகச் சென்று சந்திப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறார்கள். இவ்விதமாக நித்திய ஜீவனுக்குப் போகும் பாதையில் தங்கள் பாதங்களை உறுதியாக நிறுத்திக்கொள்ள அவர்கள் உதவிசெய்கிறார்கள். (யோவான் 3:16, 36) இப்படிப்பட்ட ஒரு படிப்புக்காக ஏன் கேட்கக்கூடாது? ராஜ்ய மன்றத்தில் உங்களுக்கு அனலான வரவேற்பு காத்திருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள்!—சங்கீதம் 122:1; ரோமர் 15:7.
11, 12. (எ) ஒருசில தேசங்களில் என்ன பிரச்னைகள் எதிர்ப்படப்பட்டிருக்கிறது? (பி) பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்குமிடையே என்ன வகையில் “சமநிலை” ஏற்படுகிறது?
11 நேர்த்தியான ராஜ்ய மன்றங்களையுடைய சபைகள் வெகுவாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றன. தடையின் கீழ் அநேக வருடங்கள் சகித்துவந்திருக்கும் உண்மையுள்ள சாட்சிகள் இரகசியமாக சிறு தொகுதிகளில் கூடிவரவேண்டியதாக இருந்த தேசங்களில் நிலைமை வித்தியாசமாக உள்ளது. இப்படிப்பட்ட அநேக இடங்களில் இப்பொழுது அவர்கள் சுயாதீனமுள்ளவர்களாக இருக்கிறார்கள், ஆனால் வெகு சில ராஜ்ய மன்றங்களையே உடையவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக, ஓர் ஆப்பிரிக்க தேசத்தில் 93 சபைகளுக்கு வெறும் மூன்று ராஜ்ய மன்றங்கள் மாத்திரமே இருக்கின்றன. ஆகவே கூட்டங்கள் பொதுவாக பெரிய காலி மனைகளில் நடத்தப்படுகின்றன. 150 பேர் கொண்ட ஒரு சபை, 450 பேர் வரையாக கூட்டங்களுக்கு ஒழுங்காக வருகிறவர்களைக் கொண்டிருக்கலாம்.
12 கிழக்கு ஐரோப்பாவில் நிலத்தை வாங்குவது அல்லது கட்டுவது அநேகமாக கடினமாக இருக்கிறது, ஆனால் ஓரளவு முன்னேற்றம் செய்யப்பட்டு வருகிறது. நேர்த்தியான புதிய ஒரு கிளைக்காரியாலயக் கட்டிடத்தின் பிரதிஷ்டை நவம்பர் 28, 1992 போலந்தில் திட்டமிடப்பட்டிருந்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலைக்கு பெற்றுக்கொள்ளப்படும் தாராளமான நன்கொடைகள், மன்றங்களையும் மற்ற வசதிகளையும் கட்டுவதற்கு உதவிசெய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்விதமாக தங்கள் பொருளாதார “மிகுதி”யிலிருந்து நன்கொடையளிக்கும் சகோதரர்களின் தாராள குணம், வசதியற்ற தேசங்களிலுள்ள சபைகளின் ஆவிக்குரிய தேவைகளை நிறைவுசெய்வதற்கு உதவிசெய்வதன் காரணமாக, அங்கு “சமநிலை” ஏற்படுகிறது.—2 கொரிந்தியர் 8:13, 14.
1,00,00,00,000 மணிநேரங்கள்!
13. எத்தனை மணிநேரங்கள் 1992-ல் பிரசங்கிப்பதிலும் போதிப்பதிலும் செலவிடப்பட்டன, இந்த எண்ணிக்கையில் யாருடைய முயற்சிகள் பிரதிபலிக்கின்றன?
13 நீங்கள் 1,00,00,00,000 மணிநேரங்களை வைத்து என்ன செய்வீர்கள்? நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்கிறவர்கள் அத்தனை மணிநேரங்களை, இன்னும் அதிகத்தையும்கூட, பலன்தரும், மனநிறைவளிக்கும் யெகோவாவின் சேவையில் செலவிடக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் அத்தனை மணிநேரங்களையும் ஒரே ஒரு வருடத்திற்குள் திணிப்பதைக் கற்பனைச் செய்துபாருங்கள்! இதைத்தானே யெகோவாவின் மக்கள் 1992 போது நிறைவேற்றி முடித்திருக்கிறார்கள். எல்லா ராஜ்ய பிரஸ்தாபிகளின் தனிப்பட்ட அறிக்கைகளையும் ஒன்று சேர்த்து கூட்டினால், 1,02,49,10,434 மணிநேரங்கள் என்ற புதிய உச்சநிலையை நாம் காண்கிறோம். இத்தனை மணிநேரங்கள், மணிநேரங்களை செலவிடுவதற்கிருக்கும் மிகச் சிறந்த முறையில்—“வீடுகள் தோறும் பிரசங்கிப்பதில்,” நம்முடைய மகத்தான சிருஷ்டிகரைத் துதிப்பதில் செலவிடப்பட்டிருக்கிறது. (அப்போஸ்தலர் 20:20) சராசரியாக 42,89,737 சாட்சிகள் ஒவ்வொரு மாதமும் அறிக்கை செய்திருக்கிறார்கள். அவர்கள் சமுதாயத்தின் எல்லா நிலைகளிலுமிருந்து வருகிறவர்கள். சிலர் ராஜ்ய வேலைக்கு அளிக்கக்கூடிய நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் தங்கள் வீட்டாருக்கு தேவையானவற்றை அளிக்க வேண்டியவர்களாக இருக்கும் குடும்பத்தலைவர்கள்; வயதானவர்கள்; உடல்நல பிரச்னைகளுள்ள அநேகர்; மற்றும் இன்னும் பள்ளியிலிருக்கும் பிள்ளைகளும் அடங்குவர். என்றபோதிலும், ஒவ்வொருவரும் செய்யும் அறிக்கையும் யெகோவாவின் மீதிருக்கும் அன்புக்கு உயர்வாக மதிக்கப்படும் பிரதிபலிப்பாக இருக்கிறது.—லூக்கா 21:2-4 ஒப்பிடவும்.
14. இளைஞர் எவ்விதமாக ‘தங்கள் சிருஷ்டிகரை நினைக்கின்றனர்’?
14 ஓர் இளையத் தலைமுறை யெகோவாவின் சேவையில் வளர்ந்துகொண்டிருக்கிறது, இவர்களில் பெரும்பாலானோர் பிரசங்கி 12:1-லுள்ள சாலொமோனுடைய வார்த்தைகளை பொருத்திவருவது மகிழ்ச்சியளிப்பதாய் உள்ளது: “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை.” இவர்கள் தங்கள் பள்ளி வேலைகளில் ஊக்கமாகத் தங்களை ஈடுபடுத்திவருகிறார்கள், அதே சமயத்தில் பக்தியுள்ள பெற்றோரால் ஆவிக்குரிய விஷயங்களில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறார்கள். சமீப மாநாடுகளில் முழுக்காட்டுதலுக்காக தங்களை அளித்த பெரும் எண்ணிக்கையான பருவ வயது இளைஞர்கள் எழுந்து நிற்பதைக் காண்பது மகிழ்ச்சியளிப்பதாய் இருந்திருக்கிறது. அநேகர் ஒரு தொழில் அல்லது கைத்தொழிலை கற்றுக்கொள்வதன் மூலம் பள்ளியிலிருந்து பட்டம் பெறுகையில் பயனியர் செய்வதற்காக நடைமுறையான ஆயத்தங்களைச் செய்துவருவதை அறிந்துகொள்வதும்கூட மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்விதமாக, அப்போஸ்தலனாகிய பவுல் அவ்வப்போது கூடாரம் செய்து தன்னை ஆதரித்துக்கொண்டது போலவே இவர்களும் தங்களை ஆதரித்துக்கொள்ளக்கூடியவர்களாக இருப்பார்கள்.—அப்போஸ்தலர் 18:1-4.
15, 16. ராஜ்ய வேலையின் முன்னேற்றத்துக்கு பயனியர்களும் மற்ற முழுநேர ஊழியர்களும் எவ்விதமாக தங்கள் பங்கை அளித்திருக்கின்றனர், அவர்களில் சிலர் என்ன ஆசீர்வாதத்தை அனுபவித்திருக்கின்றனர்?
15 ராஜ்ய வேலையின் முன்னேற்றத்தில் பயனியர்களும் மற்ற முழுநேர ஊழியர்களும் என்னே மிகப்பெரிய பங்கை கொண்டிருக்கிறார்கள்! பயனியர்களின் அணி இந்தக் கடந்த ஆண்டில் 9,31,521 என்ற உச்சநிலைக்கு அதிகரித்தது. இவர்கள் நாள்தோறும் வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கித்து மக்களின் வீடுகளில் பைபிள் படிப்புகளை நடத்துகையில், வேதாகமத்தின் பேரில் கருத்தை வெளிப்படுத்துவதில் மிகவும் திறம்பட்டவர்களாக ஆகிறார்கள். மேலுமாக, அநேகர் இரண்டு-வார பயனியர் ஊழியப்பள்ளிக்கு ஆஜராக தகுதிபெறுகிறார்கள். இது கடவுளுடைய வேலையைச் செய்வதில் அதிகமான திறமையையும் சந்தோஷத்தையும் வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவிசெய்கிறது.
16 இந்த உண்மையுள்ள பயனியர்களில் ஒவ்வொருவரும் ஏசாயா 50:4-லுள்ள வார்த்தைகளை ஒப்புக்கொள்ளமுடியும்: “இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்.” இன்று தங்களைச் சுற்றியுள்ள சீர்கெட்ட உலகைக் குறித்து இளைப்படைந்தவர்களாய், ஆனால் நம்முடைய உண்மையுள்ள பயனியர்கள் பேசும் வார்த்தையின் மூலமாக புத்துணர்ச்சியை கண்டடையும் மிகப் பல தனிநபர்கள் இருக்கின்றனர்.—நீதிமொழிகள் 15:23 ஒப்பிடவும்; எசேக்கியேல் 9:4.
பிரமாண்டமான ஒரு கட்டுமான திட்டம்
17. ஆவிக்குரிய கட்டுமானப் பணியோடுகூட என்ன சொல்லர்த்தமான கட்டுமானப் பணியை அண்மை ஆண்டுகளில் காணமுடிந்திருக்கிறது?
17 யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய ஆவிக்குரிய செழுமை, பொருள்சார்ந்த வளர்ச்சியையும்கூட தேவைப்படுத்துகிறது. அச்சு வசதிகள், அலுவலகங்கள் மற்றும் பெத்தேல் குடும்பங்கள் விஸ்தரிக்கப்படுவதும் ராஜ்ய மன்றங்களும் அசெம்பிளி மன்றங்களும் கட்டப்படுவதும் அவசியமாகிறது. ஆகவே யெகோவாவின் சாட்சிகள் சொல்லர்த்தமான முறையில் கட்டுகிறவர்களாக ஆக வேண்டியிருக்கிறது. அதேவிதமான கட்டிடப் பணி சாலொமோன் ராஜாவின் நாளில் நடந்தது. சாலொமோன் யெகோவாவின் வணக்கத்துக்காக “ஆவியினால் தனக்குக் கட்டளையிடப்பட்ட,” ‘கட்டிடக்கலை அமைப்பு திட்டத்தின்’படி ஆலயத்தைக் கட்டினார். யெகோவா இதை அவருடைய தகப்பனாகிய தாவீது ராஜாவுக்கு கொடுத்திருந்தார். (1 நாளாகமம் 28:11, 12) இவ்விதமாக சாலொமோன் தனக்கு செவிசாய்த்தவர்களைப் பெரும் மதிப்புவாய்ந்த ஞானமுள்ள வார்த்தைகளால் கட்டியெழுப்பியதோடு மட்டுமல்லாமல், இவ்வுலகத்தினால் ஒருபோதும் முயன்று பெறமுடியாத நேர்த்தியோடு சொல்லர்த்தமான கட்டிடப்பணியையும்கூட வழிநடத்தினார்.—1 இராஜாக்கள் 6:1; 9:15, 17-19.
18, 19. (எ) வேகமாக முன்னேறிவரும் என்ன கட்டுமானத் திட்டங்கள் யெகோவாவின் அமைப்பால் செய்துமுடிக்கப்பட்டு வருகிறது? (பி) சொல்லர்த்தமான மற்றும் ஆவிக்குரிய கட்டுமான வேலையில் யெகோவாவின் ஆவி எவ்விதமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது?
18 இன்று யெகோவாவின் சாட்சிகள் கடவுளால் ஏவப்பட்ட கட்டிடக்கலை திட்டங்களின்படி கட்டிக்கொண்டில்லை, ஆனால் அவர்களிடம் நிச்சயமாகவே கடவுளுடைய ஆவி இருக்கிறது. இஸ்ரவேலின் நாட்களில் இருந்தது போல, இது உலகிலுள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் கட்டுவதற்கு அவர்களை உந்துவிக்கிறது. (சகரியா 4:6) காலம் குறுகினதாயிருக்கிறது. ராஜ்ய மன்றங்களும் மற்ற கட்டிடங்களும் தாமதமின்றி தேவையாக இருக்கின்றன. ஒரு சில தேசங்களில் வேகமாக கட்டப்படும் ராஜ்ய மன்றங்கள் சர்வ சாதாரணமாக உள்ளன. உதாரணமாக, கடந்த 10 ஆண்டுகளில் கானடா 306 மன்றங்களை, ஒவ்வொன்றையும் இரண்டுக்கும் குறைவான நாட்களில் கட்டியதாக அறிவிப்பு செய்கிறது. யெகோவாவின் வேலை உலகம் முழுவதிலும் வேகமாக விஸ்தரித்து வருவதன் காரணமாக, மொத்தமாக 43 புதிய கிளை கட்டிடங்கள் அல்லது கிளை விரிவாக்கங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன அல்லது திட்டமிடப்பட்டிருக்கின்றன. மேலுமாக, பெத்தேலில் முன்வந்து ஊழியம் செய்யும் சுமார் ஆயிரம் பேர்களுக்கு இடவசதி கொண்ட 30 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று புரூக்ளினில் முடியும் தறுவாயில் இருக்கிறது. மேலுமாக நியூ யார்க் மாநிலத்தில், பாட்டர்ஸனில் காவற்கோபுர சங்கம் எக்காலத்திலும் மேற்கொண்டிருப்பதில் மிகப்பெரிய திட்டமான பைபிள் கல்வி மையத்தின் கட்டிட வேலை திட்டமிடப்பட்ட காலத்துக்கு மிகவும் முன்னதாகவே முன்னேறிக்கொண்டிருக்கிறது.
19 இத்திட்டங்கள் உலகிலுள்ள விஷயமறிந்த கட்டுமான பணிசெய்யும் கம்பெனிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திடும் திறமையோடும் தரமான வேலையோடும் முன்னேறிக்கொண்டிருக்கின்றன. ஏன்? யெகோவாவின் ஒப்புக்கொடுத்த சாட்சிகளின் மிகப் பெரிய நன்கொடைகளே காரணமாகும். பொருள் சம்பந்தமான உதவியை மட்டுமல்ல, ஆனால் முழு இருதயத்தோடு தங்கள் நேரத்தையும் சக்தியையும்கூட அளிப்பதற்கு அவருடைய ஆவி அவர்களை உந்துவிக்கிறது. கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களில் நன்கு-பயிற்சிபெற்ற முழு ஈடுபாடு கொண்ட வேலையாட்கள் திரளாக காணப்படுகிறார்கள். தொழிலாளர் வேலைநிறுத்தங்களோ, வேலையில் இருக்கையில் காலத்தை வீணில் கழித்தலோ இல்லை. மோசேயின் காலத்தில் கூடாரத்தை கட்டியவர்களையும், சாலொமோனுடைய நாட்களில் ஆலயத்தைக் கட்டியவர்களையும் உந்துவித்தது போலவே யெகோவாவின் ஆவி தூண்டுதலை அளிக்கிறது. ஆவிக்குரிய தன்மையே இந்த வேலையாட்களிடம் தேவைப்படுத்தப்படும் முக்கியமான பண்பாகும்.—ஒப்பிட்டுப் பாருங்கள்: யாத்திராகமம் 35:30-35; 36:1-3; 39:42, 43; 1 இராஜாக்கள் 6:11-14.
20. (எ) நற்செய்தி எந்தளவுக்கு இன்னும் பிரசங்கிக்கப்படும்? (பி) யெகோவாவின் மக்களுக்கு என்ன ஆசீர்வாதமான எதிர்பார்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது?
20 சாலொமோன் ஆலயத்தை முடித்தப்பிறகு, தன் கட்டுமானத் திட்டங்களைத் தொடர்ந்து செய்துவந்தார். (2 நாளாகமம் 8:1-6) நவீன நாளைய சாட்சிகள் எந்தளவுக்கு இன்னும் விஸ்தரிப்பார்கள்—அதே சமயத்தில் மன்றங்கள், இன்னும் மற்ற வசதிகளைக் கட்டுவதற்கான அவசியத்தோடு—என்பது நமக்குத் தெரியாது. இருப்பினும், யெகோவா கட்டளையிடும் அளவுக்கு ராஜ்யத்தின் இந்த நற்செய்தி பிரசங்கிக்கப்பட்ட பின்பு, முடிவு, ‘மகா உபத்திரவம்’ வரும் என்பது நமக்குத் தெரியும். (மத்தேயு 24:14, 21) பேராசையுள்ள மனிதர்களால் இனிமேலும் பாழாக்கப்படாத ஒரு பூமியில், யெகோவாவின் ஏற்பாடான “புதிய வானங்களும் புதிய பூமியும்,” மனிதவர்க்கத்துக்கு சொல்ல முடியாத ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும். ஆகவே, நம்முடைய மகத்தான சிருஷ்டிகருக்கு எல்லா துதியையும் செலுத்தி, ‘கடவுள் சிருஷ்டிக்கிறதினாலே நாம் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருப்போமாக’!—ஏசாயா 65:17-19, 21, 25. (w93 1/1)
[அடிக்குறிப்புகள்]
a காவற்கோபுரம் மற்றும் பைபிள் துண்டுப்பிரதி சங்கம் வெளியிட்டுள்ள “உம்முடைய ராஜ்யம் வருக” புத்தகத்தில் பக்கங்கள் 105-16, 186-9 பார்க்கவும்.
உங்களால் விளக்கமுடியுமா?
◻ நம்முடைய மகத்தான சிருஷ்டிகரில் களிகூருவதற்கு நமக்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?
◻ என்ன அதிகரிப்புகள் 1992 ஊழிய ஆண்டின் போது அறிக்கை செய்யப்பட்டிருக்கின்றன?
◻ சாட்சிகொடுத்தல் முன்பு தடைசெய்யப்பட்டிருந்த தேசங்களில், என்ன பெரும் ஆசீர்வாதங்கள் அறிக்கை செய்யப்பட்டிருக்கின்றன?
◻ வாலிபரும் பயனியர்களும் எவ்விதமாக யெகோவாவின் அமைப்பில் அதிகரிப்புக்கு உதவியிருக்கின்றனர்?
◻ யெகோவாவின் மக்கள் எவ்விதமாக சொல்லர்த்தமான மற்றும் ஆவிக்குரிய கட்டிட வேலைகளில் சுறுசுறுப்பாயிருந்திருக்கிறார்கள்?
8. யெகோவாவை புதிதாக துதிப்பவர்கள் எவ்விதமாக கிழக்கு ஐரோப்பாவில் ‘மேகத்தைப் போல பறந்துவந்திருக்கிறார்கள்’? ஆப்பிரிக்காவில்?
[பக்கம் 17-ன் பெட்டி]
கடந்த ஆண்டு பிரசங்க மற்றும் போதிக்கும் வேலையில் நூறு கோடிக்கும் அதிகமான மணிநேரங்கள் செலவிடப்பட்டிருக்கின்றன
[பக்கம் 12-15-ன் வரைப்படம்]
உலகலாவிய யெகோவாவின் சாட்சிகளின் 1992 ஊழிய ஆண்டின் அறிக்கை
(For fully formatted text, see publication.)
[பக்கம் 12-15-ன் வரைப்படம்]
லட்சக்கணக்கானோர் கடந்த ஆண்டு முழுக்காட்டுதல் பெற்றது பிரசங்க மற்றும் போதிக்கும் வேலையின் மீது யெகோவாவின் ஆசீர்வாதத்தைக் காண்பிக்கிறது
[பக்கம் 16-ன் படம்]
பெரும் எண்ணிக்கையில், இளைஞர்கள் ‘தங்கள் மகத்தான சிருஷ்டிகரை நினைக்கிறார்கள்’