இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
சமாரியர்கள் அநேகர் விசுவாசிக்கிறார்கள்
போஜனத்தோடு சீகாரிலிருந்து திரும்பி வந்த சீஷர்கள், இயேசுவை யாக்கோபின் கிணற்றருகே அவரை விட்டுச் சென்ற இடத்தில் காண்கிறார்கள். ஆனால் இப்பொழுது அவர் ஒரு சமாரிய பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கிறார். சீஷர்கள் வந்தபோது அவள் தன் குடத்தை வைத்துவிட்டு ஊருக்குள் போகிறாள்.
இயேசு சொன்ன காரியங்களில் வெகுவாக அக்கறைக் கொண்டவளாய் அவள் ஊருக்குள்ளே இருந்த மனிதர்களிடம்: “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள்,” என்று சொல்கிறாள். பின்பு அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டும் வகையில், “அவர் கிறிஸ்துதானோ” என்று கேட்கிறாள். இந்தக் கேள்வி அதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறது—அந்த மனிதர்கள் அவரை நேரில் காண அவர் இருக்கும் இடத்துக்குப் போகிறார்கள்.
இதற்கிடையில் சீஷர்கள் ஊரிலிருந்து தாங்கள் கொண்டுவந்த போஜனத்தைப் புசிக்கும்படியாக அவரை வேண்டிக்கொள்கிறார்கள். ஆனால் அவரோ “நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு” என்று சொல்கிறார்.
அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து “யாராவது அவருக்குப் போஜனம் கொண்டு வந்திருப்பானோ” என்கிறார்கள். இயேசு அவர்களைப் பார்த்து பின்வருமாறு விளக்குகிறார்: “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலு மாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா?” ஆனால் ஆவிக்குரிய அறுவடையைச் சுட்டிக் காண்பித்து இயேசு, “அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக் கொள்கிறான்” என்கிறார்.
சமாரியப் பெண் சாட்சி கொடுத்ததன் விளைவாக—அவள் அறிவித்ததன் காரணமாக அநேகர் தம்மில் விசுவாசம் வைப்பதை—அதன் மகத்தான பாதிப்பை அவரால் ஏற்கெனவே பார்க்க முடிகிறது. சீகார் ஊரார் கிணற்றருகே அவரிடமாக வந்தபோது தங்களிடம் அதிகம் பேசுவதற்காகத் தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொள்கிறார்கள். இயேசு அழைப்பை ஏற்றுக்கொண்டு இரண்டு நாட்கள் அங்கே தங்கியிருக்கிறார்.
சமாரியர்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்கையில் இன்னும் அநேகர் விசுவாசிக்கிறார்கள். பின்பு அவர்கள் ஸ்திரீயிடம்: “உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலக ரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம்” என்கிறார்கள். கேட்பவர்கள் கூடுதலாக ஆராய்வதற்காக, அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டி எழுப்புவதன் மூலம் நாம் எவ்விதமாக கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சி கொடுக்கலாம் என்பதற்குச் சமாரியப் பெண் நிச்சயமாகவே ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறாள்.
அது பலஸ்தீனாவில் வசந்த காலத்தில் நடைபெறும், அறுவடை காலத்துக்கு, ஒருவேளை வாற்கோதுமை அறுவடைக்கு நான்கு மாதங்களுக்கு முன்பாக இருக்கிறது என்பது நினைவிருக்கட்டும். ஆகவே இப்பொழுது ஒருவேளை நவம்பர் அல்லது டிசம்பர் மாதமாக இருக்கிறது. அப்படியென்றால் பொ.ச. 30-ன் பஸ்காவைத் தொடர்ந்து இயேசுவும் அவருடைய சீஷர்களும் உபதேசித்துக்கொண்டும் தண்ணீர் முழுக்காட்டுதல் கொடுத்துக் கொண்டும் யூதேயாவில் எட்டு மாதங்கள் போல் செலவிட்டிருக்கிறார்கள் என்று அர்த்தமாகிறது. இப்பொழுது அவர்கள் தங்களுடைய சொந்த ஊராகிய கலிலேயாவுக்குப் புறப்படுகிறார்கள். அவர்களுக்கு அங்கு காத்துக்கொண்டிருப்பது என்ன?— யோவான் 4:27-42.
◆ சமாரியப் பெண் என்ன சாட்சி கொடுக்கிறாள்? என்ன விளைவுகளோடு?
◆ இயேசுவின் உணவு எவ்விதமாக அறுவடையோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது?
◆ பொ.ச. 33-ன் பஸ்காவைத் தொடர்ந்து, யூதேயாவில் இயேசுவின் ஊழிய காலத்தை நாம் எவ்விதமாகத் தீர்மானிக்கலாம்? (w86 1/15)