யெகோவாவின் காலங்களும் நேரங்களும் நம்முடைய நாளுக்கு எதை அர்த்தப்படுத்துகின்றன?
“நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்”—மத்தேயு 7:19.
1. கடந்த காலங்களில் சில அரசர்களை யெகோவா கையாண்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளக்கூடும்?
யெகோவா “காலங்களையும் நேரங்களையும் மாற்றுகிறவர் . . . ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்” என்ற உண்மையை சரித்திர பதிவு உறுதி செய்கிறது. (தானியேல் 2:21) முந்தைய நூற்றாண்டுகளில், அவருடைய நோக்கத்துக்கு பொருத்தமாக இருந்த சமயத்தில், பார்வோன் நேபுகாத்நேச்சார், பெல்ஷாத்சார், ஏரோது அகிரிப்பா I இன்னும் மற்றவர்களையும் அவர் நீக்கியிருக்கிறார். ‘ஆனால் அந்த சம்பவங்கள் அனைத்தும் பூர்வ கால சரித்திரமாக இருக்கிறது. நமக்கும் அவைகளுக்கும் என்ன சம்பந்தம்’ என்பதாகச் சிலர் சொல்லக்கூடும். நமக்கும் அவைகளுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. ஏனென்றால் அவைகளில் சக்தி வாய்ந்த பாடங்கள் இருக்கின்றன. அந்த சம்பவங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால், அவைகளுக்கு யெகோவாவின் சமயம் வரும்போது, உலகத் தலைவர்களின் ஆட்சியை அவர் முடிவுக்கு கொண்டுவருகிறார் என்பதே ஆகும். அவ்விதமாகச் செய்வதை அவர் தெரிந்து கொண்ட சமயத்தில், அவர் விரும்புகிற அரசனை பதவியில் வைத்திருக்கிறார்.
2. நம்முடைய நாளில் எதற்கு யெகோவாவின் காலம் வந்துவிட்டது?
2 நம்முடைய நாளில் “ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துவதற்கு” மறுபடியுமாக யெகோவாவின் சமயம் வந்திருக்கிறது. தம்முடைய விருப்பத்தின்படியான ராஜாவை இப்பொழுது அவர் ஏற்படுத்திவிட்டிருக்கிறபடியால் கடவுள் சீக்கிரத்தில் இந்த உலகின் எல்லா அரசர்களையும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் காரிய ஒழுங்கு முழுவதையும் நீக்கிவிடுவார். ஏன்? ஏனென்றால் பூர்வ பாபிலோனின் பெல்ஷாத்சாரைப் போல அவர்கள் “தராசிலே நிறுக்கப்பட்டு குறையக் காணப்பட்டி”ருக்கிறார்கள். இன்றுள்ள நிலைமை கடவுளுடைய ஊழியனாகிய தானியேல் பெல்ஷாத்சாரிடம் சொன்னபோது இருந்த விதமாகவே இருக்கிறது: “தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு அதற்கு முடிவுண்டாக்கினார்.” (தானியேல் 5:26, 27) ஆகவே நம்முடைய காலத்தில் யெகோவா, “தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார், அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்ப்பார்.”—சங்கீதம் 110:5, 6.
“குறையக் காணப்பட்டிருத்தல்”
3, 4. சமாதானத்தின் சம்பந்தமாக, இந்த நூற்றாண்டில் உலக ஆட்சியாளர்கள் எவ்விதமாக “குறையக் காணப்பட்டிருக்கிறார்கள்”?
3 உலக சம்பவங்களின் சம்பந்தமாக, பூமிக்குரிய ஆட்சியாளர்கள் எவ்விதமாக “குறையக் காணப்பட்டிருக்”கிறார்கள்? வேறு எந்த சகாப்தத்தையும்விட ஆபத்துக்கள் நிறைந்த காலமாகிய நம்முடைய காலத்தில் மனித குடும்பத்துக்கு சம்பவித்திருக்கும் காரியங்களுக்கான குற்றப் பொறுப்பில் பெரும்பகுதியை அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக 1914 முதற்கொண்டு, கோடிக்கணக்கானோர், பல்வேறு யுத்தங்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்று அணு ஆயுதங்கள் பூமியின் மீது உயிரினங்கள் வாழ்வதையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நிமிடத்திலும்கூட, வெடிக்க வைக்க தயாராக இருக்கும் ஆட்களோடு ஆயிரக்கணக்கான அணு ஆயுத ஏவுகணைகள் முக்கிய குடியிருப்பு பகுதிகளின் திசையை நோக்கிய வண்ணமிருக்கின்றன.
4 அணுயுத்தத்தைப்பற்றி, விஞ்ஞானம் என்ற ஆங்கில பத்திரிக்கை, சோர்வடையச் செய்யும் இந்த ஆராய்ச்சியின் அறிக்கையை கொடுத்திருந்தது: “எந்த ஒரு பெரிய அளவு அணு ஆயுத பரிமாற்றத்திலும் பூமியின்மீது தாவர மற்றும் மிருக ஜீவனின் பெரும்பகுதி மறைந்துவிடுவது சாத்தியமாகும். மனிதவர்க்கத்தின் மறைவு தவிர்க்க முடியாததாகும்.” ஐரோப்பாவில் அரசாங்க அதிகாரி ஒருவர் இவ்விதமாகச் சொன்னார்: “இழப்பு பட்டணங்களின் வகையில் கணக்கிடப்படாமல், அவை முழு கண்டங்களின் வகையில் கணக்கிடப்படும்.” தற்காப்புக்காகும் செலவைக் குறித்து லத்தீன் அமெரிக்க தேசத்தின் ஜனாதிபதி இவ்விதமாக குறிப்பிட்டார்: “எளிதில் அமிழ்ந்துவிடக்கூடிய ஒரு வலுவற்ற கப்பலில் மனிதவர்க்கம் பயணம் செய்து கொண்டிருக்கிறது. . . . அது அமிழ்ந்துவிடுமானால், அதனோடு அனைவரும் மாண்டுவிடுவார்கள்.” ஜப்பானிய செய்தித்தாள் ஒன்று இவ்விதமாக குறிப்பிட்டிருந்தது: “சரித்திரத்தில் எந்த சமயத்திலும் இருந்ததைவிட உலகம் [சமாதானத்திலிருந்து] வெகு தூரம் விலகி போய் கொண்டிருப்பது போலத் தெரிகிறது.”
5, 6. அநேக தேசங்கள் மற்றும் ஜனங்களின் பொருளாதார நிலை என்ன?
5 என்றபோதிலும் தேசங்கள் யுத்த கருவிகளுக்காக அதிகதிகமாக பணத்தை செலவழித்துக் கொண்டிருக்கின்றன. அதற்காகும் செலவு இப்பொழுது வருடத்துக்கு ஏறக்குறைய பத்து லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டிருக்கிறது! உலகமானது, ஒவ்வொரு பள்ளி வயது பிள்ளையின் மீது செலவழிக்கும் பணத்தைவிட சுமார் 50 மடங்கு அதிகமாக ஒவ்வொரு போர் வீரன் மீதும் செலவழிக்கிறது என்பதை ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது. உலகம் முழுவதிலும் குறைந்தபட்சம் 4500 லட்சம் ஆட்கள் பசியாக இருக்கிறார்கள் என்பதையும் அவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதையும் காண்பிக்கும் ஐக்கிய நாடுகளின் ஒரு செய்தி குறிப்பையும்கூட கவனியுங்கள். வளர்ச்சியடையாத தேசங்களில் “ஒவ்வொரு வருடமும் 3-4 கோடி ஆட்கள் வறுமையில் சாகிறார்கள்” என்பதாக மற்றொரு செய்தி குறிப்பு சொல்லுகிறது. மரித்துப் போகிறவர்களில் சுமார் பாதி பேர் ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளாக இருக்கிறார்கள் என்பதையும்கூட அது சொல்லுகிறது.
6 தென் அமெரிக்காவிலுள்ள ஒரு பெரிய தேசத்தின் அரசாங்க அதிகாரி, “தெழிலாளப் படையில் 40 சதவிகிதத்தினர் முழுமையாக வறுமையில் வாழ்கிறார்கள்” என்பதாகச் சொல்லுகிறார். மற்றொரு சேதத்தில், அதன் தலைநகரில் வேலையில்லா திண்டாட்டம் தொழிலாளப் படையில் 51 சதவிகிதத்தினரை பாதித்துக் கொண்டிருக்கிறது. அறிக்கை இவ்விதமாக முடிகிறது: “2600 லட்சம் மக்களைக் கொண்ட ஒரு கண்டம் அரை நூற்றாண்டில் ஆழமான ஒரு குழிவினுள் அமிழ்ந்துவிட்டிருக்கிறது.” வித்தியாசமான தேசங்களிலிருந்து வந்த மூன்று தலைப்புச் செய்திகளை கவனியுங்கள்: “வறுமை விகிதம் கவலைக்கிடமாக உள்ளது,” “வறுமை விகிதம் உயர்ந்துவிட்டது” “வறுமை வேதனையான அனுபவம்.” இந்த செய்தி குறிப்புகள் வளர்ச்சியடையாத தேசங்களிலிருந்து வந்தவையா? இல்லை. அவை கனாடா, ஐக்கிய மாகாணங்கள் மற்றும் ஜெர்மன் குடியரசின் அரசாங்க அதிகாரிகளிடமிருந்து வந்தவை. ஆம் பணக்கார தேசங்கள் என்றழைக்கப்படுகிறவையும்கூட துன்பங்களுக்குள் ஆழ்ந்திருக்கின்றன.
7. நம்முடைய காலத்தில் கட்டுக்கடங்காததாக இருக்கும் குற்றச் செயலையும் வன்முறையையும் குறித்து என்ன கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன?
7 அநேக தேசங்களில் இந்த பிரச்னைகள், குற்றச் செயல், வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றின் சடுதியான அதிகரிப்பில் பிரதிபலிக்கப்படுகின்றன. உதாரணமாக ஐக்கிய மாகாணங்களில், நோய் கட்டுப்பாட்டுக்கான கூட்டரசு மையம், ஒவ்வொரு வருடமும் 50,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் அல்லது தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதாக குறிப்பிடுகிறது! தி நியு யார்க் டைம்ஸின் தலையங்க கட்டுரை ஒன்று இவ்விதமாக ஆய்ந்து முடிவு செய்தது: “காரியங்கள் கைமீறி சென்றுவிட்டன. மற்றொரு தலையங்க கட்டுரை இவ்விதமாக குறிப்பிட்டது: “அனைத்து நாடுகளிலும் இது ஒழுங்கின்மைக்கான சமயமாக இருக்கிறது.” ஆகவே பல நுற்றாண்டுகளின் உழைப்பும், அனுபவமும், தொழில் நுட்ப முன்னேற்றமும் இருந்தும்கூட, உலகத்தலைவர்களால் அவர்களுடைய ஜனங்களின் அடிப்படைத் தேவைகள் பலவற்றை நிறைவேற்ற இயலவில்லை.
8. சரித்திர பதிவு உறுதி செய்வது என்ன?
8 நிச்சயமாகவே பூர்வ மற்றும் நவீன சரித்திர பதிவுகள், மனிதன் சொந்தமாக இவைகளுக்கு விடைகளை கொண்டில்லை என்பதை உறுதிசெய்கின்றன. நாம் விரும்புவதும் மற்றும் நமக்குத் தேவையாக இருப்பதுமான சமாதானத்தையும், பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும், உடல் ஆரோக்கியத்தையும் ஜீவனையும் இந்த உலகின் அரசியல் பொருளாதார மற்றும் மதத்தலைவர்களால் ஒருபோதும் கொண்டுவர முடியாது. ஆகவே இந்த உலகம் அழிய வேண்டும்! அது அழிந்துவிடும். ஏனென்றால் அதுவே யெகோவாவின் நோக்கமாக இருக்கிறது. பைபிள் சொல்லுகிற விதமாகவே அது இருக்கிறது: “இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.”—லூக்கா 3:9.
நியாயத்தீர்ப்புக்கு மற்றொரு காரணம்
9. யெகோவாவின் நோக்கங்களை உலகத் தலைவர்கள் பொதுவாக எவ்விதமாக கருதுகிறார்கள்?
9 இந்த உலகமும் அதன் தலைவர்களும் பிறப்பித்திருக்கும் கெட்ட கனியானது ஒரு காரணமாக இருக்கிறது. யெகோவா தராசிலே நிறுத்தி அதை அவர் அழிப்பார். ஆனால் மற்றொரு காரணம் இருக்கிறது: உலகத்தலைவர்கள் சிருஷ்டிகரும் அனைத்துலக பேரரசருமாகிய யெகோவாவை மனதில் கொள்ளாமல் அவரை விட்டுவிட்டார்கள். அவர்களுக்கு அவருடைய நோக்கங்கள் அல்லது காலங்கள் மற்றும் சமயங்களில் உண்மையான அக்கறை இல்லை. அதன் காரணமாகவே, ஒன்று கொரிந்தியர் 2:8 அவர்களைக் குறித்து சரியாக இவ்விதமாகச் சொல்லுகிறது: “அதை [தேவ ஞானத்தை] இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை.” ஆகவே சங்கீதம் 146:3 இவ்விதமாக நமக்கு புத்திச் சொல்லுகிறது: “பிரபுக்களையும் இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.”
10, 11. (எ) யெகோவாவை அறிந்துகெள்ள விரும்புகிறவர்கள் செய்ய வேண்டியது என்ன? (பி) மற்றவர்கள் அறிந்துகொண்டிராததை எவ்விதமாக கடவுளுடைய ஊழியர்களால் அறிந்துக்கொள்ள முடிகிறது?
10 மாறாக, நீதிமொழிகள் 3:5, 6 இவ்விதமாக துரிதப்படுத்துகிறது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல் உன் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கையாயிருந்து உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள், அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” இதைச் செய்யும் ஜனங்கள் இந்த உலகின் அறியாமையான நம்பிக்கையில்லா நிலையில் தொடர்ந்து இருப்பதில்லை. யெகோவா அவர்களை அவருடைய ஆவியைக் கொண்டு ஆசீர்வதிப்பார். அவர்கள் அவருடைய நோக்கங்களையும் அவர்களுக்கு அவருடைய காலங்களையும் நேரங்களையும் அறிந்து கொள்வார்கள். அப்போஸ்தலர் 5:32 சொல்லுகிறபடியே, யெகோவா “தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தம்முடைய பரிசுத்த ஆவியைத் தந்தருளுகிறார்.”
11 ஆகவே இந்த உலகின் ஆட்சியாளர்கள் உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, அறிந்திராததை கடவுளுடைய ஊழியர்கள் அறிந்திருக்கிறார்கள்! அவர்கள் யெகோவாவின் நோக்கங்களையும் அவருடைய சமயங்களையும் அறிந்திருக்கிறார்கள். ஒன்று பேதுரு 1:11 கடந்த காலங்களில் கடவுளின் ஊழியர்கள், “தங்களிலுள்ள ஆவி முன்னறிவித்தபோது இன்ன காலத்தைக் குறித்தாரென்பதையும் அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்” என்பதாகச் சொல்லுகிறது. கடவுளுடைய ஆவி இதை முன்னறிவித்ததன் காரணமாக அப்போஸ்தலனாகிய பவுலால் உண்மையான உடன் வணக்கத்ததாரிடம் இவ்விதமாகச் சொல்ல முடிந்தது: “நீங்கள் காலத்தை அறிந்தவர்களாயிருக்கிறீர்கள்.” (ரோமர் 13:11) இன்று யெகோவாவின் ஊழியர்கள் அரசராக அவருக்கு கீழ்ப்படிந்திருக்கிறபடியினால், அவருடைய நோக்குநிலையில் இது என்ன சமயமாக இருக்கிறது என்பதையும்கூட கடவுளுடைய பரிசுத்த ஆவி அவர்களுக்கு வெளிப்படுத்துகிறது. ஆமோஸ் 3:7 சொல்லுகிறது: “யெகோவாவாகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.”
இன்னும் ஒரு காரணம்
12, 13. இந்த உலகத்தையும் அதன் தலைவர்களையும் யெகோவா குறைவுள்ளவர்களாக காண்பதற்கு மற்றொரு பலமான காரணம் என்ன?
12 யெகோவா இந்த உலகத்தையும் அதன் தலைவர்களையும் ஏன் குறையுள்ளவர்களாகக் கண்டு அவர்களை அழித்துப் போடுவார் என்பதற்கு இன்னும் ஒரு காரணத்திடமாக இது நம்மை கொண்டு வருகிறது. பார்வோன், பெல்ஷாத்சார், ஏரோது இன்னும் மற்ற அரசர்கள் கடந்த காலங்களில் யெகோவாவின் ஊழியர்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். அவர்களை அவர்கள் எதிர்த்து, துன்புறுத்தி, கொலையும் செய்தார்கள். கடவுள் அந்த அரசர்களை பதில் சொல்ல கடமைப்பட்டவர்களென கருதினார்.
13 நம்முடைய நாளிலும் அதே விதமாகவே இருக்கிறது. பல்வேறு உலகத் தலைவர்கள் யெகோவாவின் சமாதானமுள்ள ஊழியர்களை எதிர்த்து, துன்புறுத்தி கொன்றும் போட்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியாளர்கள் “உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கு”கிறார்கள். (தானியேல் 7:25; 11:36) ஆனால் ஏசாயா 54:17-ல் ஆவியால் ஏவப்பட்ட பதிவு இவ்விதமாகச் சொல்லுகிறது: “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம் . . . இது யெகோவாவுடைய ஊழியக்காரரின் சுதந்தரமாயிருக்கிறது.” ஆகவே கடந்த காலங்களில் மற்றவர்கள் செய்ப்பட்டது போலவே, எதிராளிகள் அனைவருமே தாழ்த்தப்படுவார்கள். மறுபட்சத்தில், தம்முடைய ஜனங்களுக்கு பாதுகாப்பையும் செழுமையையும் யெகோவா வாக்களிக்கிறார்.
முடிவு நேரம் நெருங்குகிறது
14, 15. (எ) என்ன காலப்பகுதியில் நாம் வாழ்கிறோம்? என்ன எச்சரிப்புக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்? (பி) உலகத்தலைவர்கள் எந்த அளவு முயற்சி செய்தாலும் எது விரைவாக வந்து கொண்டிருக்கிறது?
14 ஆகவே கடவுளுடைய நோக்குநிலையில் இது என்ன நேரமாக இருக்கிறது? இந்த உலகத்துக்கு இது முடிவு நேரமாக இருக்கிறது, அதன் சூரியன் மறைந்து கொண்டிருக்கிறது. அதற்கு இரவு நேரம் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு மாரிகாலம் ஏற்கெனவே வந்துவிட்டது. பைபிள் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தின் அனைத்து அத்தாட்சிகளும், யெகோவாவின் கால அட்டவணையும் நாம் காரிய ஒழுங்கின் முடிவிலே “கடைசி நாட்களில்” வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை காண்பிக்கின்றன. (2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 24:3-14) ஆகவே இயேசு கொடுத்த எச்சரிப்பை நாம் உள்ளார்ந்த அக்கறையுடன் எடுத்துக்கொள்வது அவசியமாகும்: “நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்தில் சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.” (மத்தேயு 24:20) இந்த உலகத்துக்கு இரவு நேரம் அல்லது மாரிகாலம் வரும்போது யெகோவாவின் தயவை நாடுவதற்கு அது மிகவும் பிந்தியதாகிவிடும்.
15 .கடவுளை கனவீனப்படுத்தும் இந்த உலகத்துக்கு ஒரு முடிவை கொண்டுவருவதற்கான காலம் விரைவாக வந்துக்கொண்டிருக்கிறது. அது வரும்போது யெகோவா எல்லா உலக ஆட்சியாளர்களையும் பதவியிலிருந்து பலவந்தமாக நீக்கிவிடுவார். அவர்கள் எவ்வளவு உண்மையுள்ளவர்களாக இருப்பினும் அவர்களுடைய பலனற்ற மற்றும் உருப்படாத திட்டங்கள் முடிவுக்கு வந்துவிடும். உண்மைத்தான், ஆட்சியாளர்கள் படைக்கல ஒப்பந்தங்களையும் “பரிசுத்த வருடங்கள்” என்பவற்றோடுகூட சமாதானத்துக்கும் பாதுகாப்புக்குமான பல்வேறு திட்டங்களையும் கொண்டு தங்களுடைய மக்களை சந்தோஷப்படுத்த முயற்சிக்கக்கூடும். ஆனால் அர்மகெதோனின் கடவுளுடைய யுத்தத்தில் முடிவான உச்சநிலையினிடமாக அணிவகுத்துச் செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.—வெளிப்படுத்தின விசேஷம் 16:13-16.
16. யெகோவா யாருக்கு உலகத்தின் கர்த்தத்துவத்தைக் கொடுத்திருக்கிறார்?
16 மேலும் யெகோவா “ராஜாக்களை தள்ளுவது” மட்டுமல்லாமல் அவர் “ராஜாக்களை ஏற்படுத்து”கிறவருமாக இருப்பதை நினைவு கூறுங்கள். (தானியேல் 2:21) அர்மெகதோனில் தம்முடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்ற அவர் உபயோகிக்கப்போகும் பரலோக சேனைகளை வழிநடத்தப் போவது பூமி முழுவதுக்கும் அவர் ‘ஏற்படுத்தியிருக்கும்’ ராஜாவாகவே இருப்பார். அவர் இப்பொழுது பரலோக வல்லமையிலும் மகிமையிலுமிருக்கும் அவருடைய உண்மையுள்ள குமாரனாகிய கிறிஸ்து இயேசுவே. வெளிப்படுத்தின விசேஷம் 19:16 அவரை “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா” என்பதாக அழைக்கிறது. தானியேல் 7:14 சொல்லுகிறது: “சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி அவருக்குக் கார்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.”—தானியேல் 2:44-ஐயும் பார்க்கவும்.
17, 18. (எ) அவரையும் பூமி முழுவதற்கும் அவர் நியமித்திருக்கும் ராஜாவையும் ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு என்ன நேரிடும் என்பதாக கடவுளுடைய வார்த்தைச் சொல்லுகிறது? (பி) இன்னும் அதிக நேரமில்லை என்பதை வேறு யாரும் அறிந்திருக்கிறான்?
17 யெகோவாவையும் பூமி முழுவதற்கும் அவர் நியமித்திருக்கும் ராஜாவையும் ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு என்ன நேரிடும் என்பதை கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தை தெளிவாகச் சொல்லுகிறது. அது சொல்லுகிறது: “பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக் கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து: நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத் தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின் மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர், அடிமைகள், சிறியோர், பெரியோர், அவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகா தேவன் கொடுக்கும் விருந்துக்கு கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.”—வெளிப்படுத்தின விசேஷம் 19:17, 18.
18 எரேமியா 25:33 இவ்விதமாக விவரிக்கிறது: அக்காலத்திலே பூமியின் ஒரு முனை துவக்கிப் பூமியின் மறுமுனை மட்டும் யெகோவாவால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் அடக்கம் பண்ணப்படாமலும் பூமியின் மேல் எருவாவார்கள்.” ஆம் சாத்தானுடைய சீரழிந்த முழு காரிய ஒழுங்குக்கும் இது மூடும் நேரமாக இருக்கிறது. அவனுக்கே இது தெரியும். வெளிப்படுத்தின விசேஷம் 12:12, அவனுக்கு “கொஞ்சக்கால மாத்திரம் உண்டென்று அறிந்திருக்கிறான்” என்று சொல்லுகிறது.
யெகோவாவை இப்பொழுது தேடுங்கள்
19. இந்த ஒழுங்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்பு, என்ன கிளர்ச்சியூட்டும் நாளும் காலமும் ஆரம்பமாகும்?
19 சாத்தானின் ஒழுங்கின் இரவு நேரம் அல்லது மாரிகாலம் முடிவடைந்த பின்னர் என்ன? அப்பொழுது பிரகாசமான ஒரு புதிய நாளை, கிளர்ச்சியூட்டும் புதிய வசந்த காலத்தை கொண்டு வருவதற்கு அது யெகோவாவின் காலமாக இருக்கும். அவருடைய பரலோக ராஜாவாகிய கிறிஸ்து இயேசுவின் ஆட்சியின் கீழ் யெகோவாவின் நீதியுள்ள புதிய ஒழுங்கை ஆரம்பிப்பதற்கு அது காலமாக இருக்கும். அந்த புதிய ஒழுங்கில் வன்முறையும் அநீதிகளும், வேதனைகளும் நோயும் இராது. நித்திய ஜீவனின் நோக்கோடு மனிதர்கள் பரிபூரணத்துக்கு உயர்த்தப்படுவார்கள். என்ன உற்சாகமளிக்கும் ஒரு எதிர்பார்ப்பு!—சங்கீதம் 37:10, 11, 29; வெளிப்படுத்தின விசேஷம் 21:4.
20, 21. சகல தேசங்களிலுமிருந்து வரும் அதிகமான எண்ணிக்கையான ஆட்கள் எவ்விதமாக இப்பொழுது யெகோவாவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்?
20 என்றபோதிலும் இந்த ஒழுங்கு முடிவடைந்து புதிய ஒழுங்கு ஆரம்பமாவதற்கு முன்பாக பூமியிலுள்ள சாந்த குணமுள்ளவர்களுக்கு இன்றியமையாத ஒன்றைச் செய்வதற்கு இது யெகோவாவின் காலமாக இருக்கிறது. அவரைப் பற்றிக் கற்றுக் கொள்ளவும் அவருடைய சித்தத்துக்கு அடிப்பணியவும் அவர் தெரிந்து கொண்டிருக்கும் ராஜாவை தலைவணங்கவும் விரும்புகிறவர்களை ஒன்றாகக் கூட்டிச் சேர்ப்பதற்கு இது அவருடைய காலமாக இருக்கிறது. இதைச் செய்வதன் மூலம் அவர்கள் யெகோவாவின் பாதுகாப்பின் கீழ் வருகிறார்கள்: “யெகோவாவின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.”—நீதிமொழிகள் 18:10.
21 இன்று அதிகமான எண்ணிக்கையான ஆட்கள் உண்மையில் லட்சக்கணக்கானோர் இதைச் செய்கிறார்கள். அவர்கள் பூமியின் மீதுள்ள சகல தேசங்களிலிருந்தும் வருகிறார்கள். அவர்கள் சகரியா அதிகாரம் 8, வசனங்கள் 20 மற்றும் 21-ல் விவரிக்கப்பட்டிருக்கிறார்கள். “இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். ஒரு பட்டணத்தின் குடிகள் மறு பட்டணத்தின் குடிகளிடம் போய், ‘நாம் யெகோவாவுடைய சமுகத்தில் விண்ணப்பம் பண்ணவும் சேனைகளின் யெகோவாவைத் தேடவும் தீவிரித்துப் போவோம் வாருங்கள்’ என்று சொல்லுவார்கள்.” வசனம் 23 மேலுமாகச் சொல்லுகிறது: “அந்நாட்களில் [ஆம், நம்முடைய காலத்தில்] பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய [யெகோவாவைத் துதிக்கும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்] வஸ்திரத் தொங்கலைப் பிடித்துக்கொண்டு: “‘தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம்’ என்று சொல்லி அவனைப் பற்றிக் கொள்வார்கள்.”
22. யெகோவாவின் கோபத்தின் நாளை நாம் தப்பிப்பிழைக்க விரும்பினால் நாம் எதை மதித்துணர்ந்து என்ன செய்ய வேண்டும்?
22 ஆகவே யெகோவாவை அவருடைய ஜனங்களோடேகூடச் சேர்ந்து தொழுதுகொண்டு பாதுகாப்பான அவருடைய இடத்துக்கு வாருங்கள். பூமியின் மீது இன்று செய்யப்பட்டு வரும் அதிமுக்கியமான வேலையில்—அர்மகெதோனைத் தப்பிப் பிழைத்து பூமியில் ஒரு பரதீஸை பண்படுத்தி அதில் என்றுமாக வாழக்கூடிய மகத்தான எதிர்ப்பார்ப்பையுடையவர்களாய் இருக்கப் போகும் ஆட்களை ஒன்றாகக் கூட்டிச்சேர்த்து அவர்களை பயிற்றுவிக்கும் வேலையில் ஒரு பங்கை கொண்டிருங்கள். இது என்ன காலமாகவும் நேரமாகவும் இருக்கிறது என்பதை மதித்துணர்ந்து ஏசாயா 55:6 துரிதப்படுத்துவதைச் செய்யுங்கள்: “யெகோவாவைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.” ஆம், “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, யெகோவாவுடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைக் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.”—செப்பனியா 2:3. (w86 4/15)
விமர்சனத்துக்கு கேள்விகள்
◻ என்ன விதங்களில், உலகத்தலைவர்கள் கடவுளுடைய பார்வையில் “குறையக் காணப்”பட்டிருக்கிறார்கள்?
◻ உலகத் தலைவர்களுக்கு அது தெரிந்திராதபோது, யெகோவாவின் ஊழியர்கள் ஏன் அவருடைய காலங்களையும் நேரங்களையும் அறிந்தவர்களாக இருக்கிறார்கள்?
◻ உலகத் தலைவர்கள் கடவுளுடைய விரோதமான நியாயத்தீர்ப்புக்கு ஏன் தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்கள்?
◻ யெகோவாவின் நோக்குநிலையில் என்ன காலமும் நேரமும் வந்துவிட்டிருக்கிறது?
◻ இப்பொழுது நாம் யெகோவாவை ஏன் எவ்விதமாக தேட வேண்டும்?
[பக்கம் 24-ன் படம்]
இப்பொழுது விசுவாசத்தை அப்பியாசிக்கும் அநேகர் இந்த உலகத்திற்கான முடிவு நேரத்தை தப்பிப் பிழைப்பார்கள்