பைபிள்—நம்முடைய நாளுக்கு நடைமுறையானதா?
இந்த உலகம் கடந்த நூற்றாண்டுக்குள் வியப்புத்தரும் வகையில் மாறிவிட்டிருக்கிறது. ஒற்றைக் குதிரை வண்டி ஓட்டிய காலம் நவீன விண்வெளி சகாப்தமாக அத்தனை சீக்கிரமாக மாறிவிட்டிருப்பதால் தொழில்துறை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் அவை அச்சடிக்கப்பட்ட பின், உடனடியாகவே வழக்கற்றுப் போய்விடுகின்றன. விஞ்ஞானத்திலும் தொழில் துறையிலும் மாபெரும் வளர்ச்சி காணப்படுகிறது. எண்ணின் வரிவடிவக் கூறுகள் முதல் முதலாக சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாகவே பயன்படுத்தப்பட்ட போதிலும் சமீப வருடங்களில்தானே கம்ப்யூட்டர்கள் உலகில் எல்லா இடங்களிலும் உபயோகத்துக்கு வந்திருக்கின்றன. துணைக் கோள்களையும் விண்வெளி ஊர்திகளையும் அனுப்புவதிலிருந்து வீட்டு வரவு செலவு திட்டத்தைச் சமநிலைப்படுத்துவதுவரை அனைத்தையும் அவை கட்டுப்படுத்துகின்றன. இது நிச்சயமாகவே வியப்புக்கேதுவாக இருக்கிறது! ஒருவர் அண்மைக் கால முன்னேற்றங்கள் அனைத்தையும் படித்துத் தெரிந்து வைத்துக்கொள்வது முடியாத காரியமாக இருக்கிறது!
அநேக மாற்றங்கள் பயனுள்ளதாக இருந்திருக்கின்றன. செய்தித் தொடர்பு, போக்குவரத்து, உழைப்பை மிச்சப்படுத்தும் கருவிகள் மற்றும் மருத்துவத் துறைகளில் செய்யப்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் இதில் இடம் பெறுகின்றன, உதாரணமாக ஒரு சமயம் கை அல்லது விரல் துண்டிக்கப்படுமேயானால், நம்பிக்கைக்கே இடமில்லாமல் இருந்தது. ஆனால் மின்காந்த அறுவை சிகிச்சையின் மூலமாக இப்பொழுது மறுபடியுமாக அதைப் பயன்படுத்துவது கூடிய காரியமாக இருக்கிறது. நம்முடைய கோளத்தின் மறுபக்கத்துக்கு ஒரு நாளிற்குள்ளேயே பறந்துசென்று மாத கணக்கில் செய்யப்பட்ட பிரயாணத்தை நாம் மிச்சப்படுத்த முடிகிறது. மோட்டார் வண்டிகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், குளிர்பதனப் பெட்டிகள், துவைக்கும் கருவிகள், விட்டமின்கள், கிருமி கொல்லிகள், நோய்த் தடுப்பு சத்து நீர்கள் இன்னும் இன்று சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்ட நூற்றுக்கணக்கான மற்ற உருப்படிகளும் இல்லாத நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த அந்தக் காலத்தோடு ஒப்பிடுகையில், நாம் உண்மையிலேயே புதிய ஒரு சகாப்தத்தில் வாழ்ந்து வருகிறோம்.
ஆனால் அனைத்துமே நம்முடைய மிகச் சிறந்த அக்கறைகளைச் சேவிப்பதாக இல்லை. உதாரணமாக அணுசக்தியைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது, யுத்தத்தின் மூலமாக அல்லது வெப்ப அலை பரவுவதன் மூலமாக, மனித சமுதாயத்துக்குக் கவலைக்கிடமான அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. நம்முடைய தொழில் நுட்பத் துறையின் விளை பொருளான இரசாயன தூய்மைக்கேடு எங்கும் பரவியிருப்பது அச்சுறுத்தலை அதிகமாக்குகிறது. கள்ளத்தனமாகத் தயாரிக்கப்படும் போதைப் பொருட்களும் தற்கால போதை கலாச்சாரமும் அநேகருடைய வாழ்க்கையை நாசப்படுத்திவிட்டிருக்கிறது.
மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றமே மிகவும் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. தொழில் மயமும், கிராமப் புறத்திலிருந்து நகர் புறத்துக்கு குடிபெயர்ந்திருப்பதும் குடும்பத்தைப் பிரித்துவிட்டிருக்கிறது. முன்னொருபோதும் இராத அளவு மக்கள்—விசேஷமாக பெண்களும் பிள்ளைகளும்—விடுதலை பெற்றவர்களாயும் சுதந்திரமாகவும் உணருகிறார்கள். முற்காலத்திய நடத்தை முறைகளின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை புதிய வாழ்க்கை முறைகளிலும் மாறிவிட்ட சமுதாய மதிப்பீடுகளிலும் விளைவடைந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகம் அறிந்திருந்தவைகளிலிருந்து இவை வெகுவாக வித்தியாசமாக இருக்கின்றன.
பைபிள் மாறவில்லை
அப்படியென்றால் வழிநடத்துதலுக்காக ஒருவர் எங்கே செல்வது? என்ன புத்திமதி இன்று பொருத்தமாக இருக்கிறது? மாறிவரும் நம்முடைய உலகத்துக்கு ஈடுகொடுக்க, நவீன கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய முறைகளையும் பாட புத்தகங்களையும் எப்பொழுதும் திருத்தி அமைத்துக்கொண்டே இருக்கின்றனர். பாதிரிமார்களும் மற்ற நிபுணர்களும் எது பிரபலமாகவும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் இருக்கிறதோ, அதன் அடிப்படையில் தங்களின் ஆலோசனைகளை மாற்றி அமைத்துக்கொள்கிறார்கள்.
மறுபட்சத்தில் பைபிள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாறாமலே இருந்திருக்கிறது. ஆம், அதில் எழுதப்பட்ட வசனங்களோடு எதையாவது கூட்டவோ அல்லது அதிலிருந்து எதையாவது எடுத்துப் போடவோ கூடாது என்ற கண்டிப்பான எச்சரிப்பை அது கொண்டிருக்கிறது. (நீதிமொழிகள் 30:5, 6; வெளிப்படுத்தின விசேஷம் 22:18, 19) தற்காலத்துக்குப் பைபிள் ஒரு நடைமுறையான வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளப்பட முடியுமா?
சிலர் முடியாது என்று சொல்கிறார்கள். “1924 பதிப்பு வேதியல் பாடபுத்தகத்தை, நவீன வேதியல் வகுப்பில் பயன்படுத்துவதை எவருமே சிபாரிசு செய்யமாட்டார்கள். அந்தச் சமயம் முதற்கொண்டு, வேதியலில் அதிகம் கற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது” என்பதாக மதம் உங்களுடைய உடல்நலத்துக்கு ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்ற புத்தகத்தில் டாக்டர் எலி. S. சேஸன் எழுதுகிறார்: “அதே விதமாகவே கடந்த ஆயிர வருடங்களில் மனித சமுதாயத்தையும் தத்துவத்தையும். மனோ தத்துவத்தையும் பற்றி அதிகம் கற்றறியப்பட்டிருக்கிறது; என்றபோதிலும் (இந்தத் தலைப்புகளின் பேரில் எல்லாம் அதிகத்தைச் சொல்லும்) பைபிள் தானே அதிகாரப்பூர்வமான மேற்கோள் காட்டப்பட்டு அபூர்வமாகவே மறு ஆய்வு செய்து மாற்றியமைக்கப்படுகிறது.”
அவர் மேலுமாகச் சொல்கிறார்: “பைபிள் எவ்வளவு கால வரம்பற்றதாக இருக்கிறது என்ற ‘அற்புதத்தையும் அது எழுதப்பட்ட சமயத்திலிருந்தது போலவே எவ்வளவு அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்பதைப் பற்றியும் எவராவது பேசும்போது நான் எப்பொழுதும் பிரமித்து நிற்கிறேன். ஓரளவு அது சோதிடத்தைப் போலவே “துல்லிபமாக” இருப்பதைப் பார்த்து ஒருவர் பிரமிப்பது போல இருக்கிறது. பைபிள் அத்தனை பலமான செல்வாக்கைச் செலுத்துவதால் அதைக் காலத்துக்கு ஏற்ப மாற்றி அமைப்பது பற்றியோ அல்லது அதைத் தள்ளிவிடுவது பற்றியோ எவரும் சிந்திப்பதில்லை.”
என்றபோதிலும் நம்முடைய நவீன உலகில் பைபிள் உண்மையில் வழக்கற்று போனதாக அல்லது பழங்காலப் புத்தகமாக இருக்கிறதா அல்லது அது கொடுக்கும் ஆலோசனை இன்னும் நடைமுறையானதாகவும் நம்முடைய காலத்துக்கு அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறதா? (w86 5/1)