வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
◼ ஏசாயா 43:10-ல் யெகோவா “எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப் பின் இருப்பதும் இல்லை” என்பதாகச் சொல்லும்போது இயேசு எவ்விதமாக யெகோவாவால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு “தேவனாக” இருக்கமுடியும்?
இயேசு கடவுளின் சிருஷ்டிக்கப்பட்ட குமாரனென்றும் அவர் தம்முடைய பிதாவுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார் என்றும் யெகோவாவின் சாட்சிகள் பைபிளிலிருந்து போதிப்பது யாவரும் அறிந்ததே. (யோவான் 14:28; 1 கொரிந்தியர் 11:3) எப்போதுமே கடவுளின் சார்பாக பேசுபவராக அல்லது வார்த்தையாக சேவிக்கும் வல்லமை வாய்ந்த ஒருவராக இருப்பதால், அவரை “ஒரு தேவன்” என்பதாக குறிப்பிடுவதில் தவறேதும் இல்லை. அநேக பைபிள் மொழி பெயர்ப்புகள் யோவான் 1:1-ல் அந்த வார்த்தை “ஒரு தேவனாயிருந்தது” என்பதாக மொழிபெயர்க்கிறது. உதாரணமாக ஜுர்கன் பெக்கரின் Das Evangelium nach Johannes (1979) பின்வருமாறு வாசிக்கிறது: “ . . . und der Logos war bei dem Gott, und ein Gott war der Logos.” (ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்: “ . . . வார்த்தை தேவனோடிருந்தது, வார்த்தை தேவனாயிருந்தது.”)a
கேள்வி குறிப்பிடும் விதமாகவே, “நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப் பின் இருப்பதும் இல்லை. நான், நானே யெகோவா; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை,” என்பதாகச் சொல்லும் ஏசாயா 43:10, 11-க்கு இது முரணாக இருப்பதாகத் தோன்றக்கூடும்.
உண்மை மனதுள்ள ஒரு பைபிள் மாணாக்கர் அந்த வார்த்தைகளின் சந்தர்ப்ப சூழ்நிலைகளை உன்னிப்பாகக் கவனிப்பதன் மூலம் உதவப்படுகிறார். சர்வ வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா இஸ்ரவேலைச் சுற்றியிருந்த தேசங்களிலிருந்த மனிதனால் உண்டுபண்ணப்பட்ட விக்கிரகங்களிலிருந்து தம்மை வேறுபடுத்திக் காண்பித்துக் கொண்டிருந்தார். யெகோவா கேட்கிறார்: “இப்படியிருக்க தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?” நிச்சயமாகவே கன்னான் செய்யும் ஒரு சுரூபத்துக்கோ அல்லது மரத்திலிருந்து செதுக்கப்பட்ட ஒன்றுக்கோ ஒப்பிட முடியாது. (ஏசாயா 40:18-20; 41:7) யெகோவா செய்ததுபோல இப்படிப்பட்ட “தேவர்களால்” ‘வானங்களை மெல்லிய திரையாக பரப்ப’ முடியாது. (ஏசாயா 40:21-26) மேலுமாக யெகோவாவால் எதிர்காலத்தை முன்னறிவிக்க முடிகிறது; நிச்சயமாகவே ஜாதிகளின் விக்கிரகங்களால், ‘அவைகள் தேவர்கள் என்று அறிந்துகொள்ளும் பொருட்டு பின்வரும் காரியங்களைத் தெரிவிக்க’ முடியாது. (ஏசாயா 41:23) இந்தக் கருத்தே ஏசாயா 43:9-ல் மீண்டும் சொல்லப்படுகிறது. இங்கு யெகோவா இவ்விதமாகச் சொல்கிறார்: “சகல ஜாதிகளும் ஏகமாய்ச் சேர்ந்து கொண்டு, சகல ஜனங்களும் கூடிவரட்டும்; இதை அறிவித்து, முந்தி சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார்? கேட்டு மெய்யென்று சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்து யதார்த்தவான்களாய் விளங்கட்டும்.” பொருத்தமாகவே சர்வ வல்லவர் பின்வருமாறு சொல்கிறார்: “நான் யெகோவா, இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும் என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.”—ஏசாயா 42:8.
ஆகவே சர்வ வல்லமையுள்ளவர் ஜாதிகளின் தேவர்கள் என்னப்பட்டவர்களுக்கு ஒரு சவாலை விடுகிறார் என்பதை சந்தர்ப்ப சூழ்நிலை உறுதி செய்கிறது. தெய்வீக வல்லமை எதுவுமில்லாத வெறும் விக்கிரகங்களாக, அவை இருப்பதால், நிச்சயமாகவே அவை வணங்கப்பட வேண்டிய தேவர்கள் இல்லை. அவை உண்மையில் சூன்யமாக இருக்கின்றன. யெகோவா தொடர்ந்து சொல்கிறார்: “என்னைத் தவிரத் தேனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன், விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் [உலோகத்திலிருந்து உருவாக்கப்பட்டது அல்லது மரத்திலிருந்து செதுக்கப்பட்டது] ஒன்றுக்கும் உதவாது.” (ஏசாயா 44:8-17) ஆகவே ஏசாயா 43:10-ன் சந்தர்ப்ப சூழ்நிலையானது இயேசுவை இங்கு மனதில் கொண்டு பேசப்படவில்லை என்பதைத் தெளிவாக்குகிறது; இங்கு பேசப்படும் “தேவர்கள்” ஜாதிகளின் செயல்திறமற்ற விக்கிரகங்களே ஆகும்.”
“தேவன்” என்ற வார்த்தை பொதுவாக வணங்குவதற்குரிய ஒரு மீமானிட பொருளின் சம்பந்தமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே அநேக ஆட்களுக்கு “தேவன் என்பது 1. சர்வ வல்லவராகிய உன்னதமானவரை அல்லது 2. விக்கிரகம் போன்ற ஒரு பொய் கடவுளை அர்த்தப்படுத்துகிறது. என்றபோதிலும் வேறு விதமாகவுங்கூட அது பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை நாம் சங்கீதம் 82:1, 2-ல் காணலாம். அங்கே சங்கீதக்காரன் “தேவர்கள்” என்ற சொல்லால் குறிப்பிடும் மனித நியாயாதிபதிகளைக் கடவுளிலிலிருந்து [யெகோவா தேவன்] வித்தியாசப்படுத்திக் காண்பிக்கிறான். இயேசு தாமே பின்னால் இந்தப் பகுதியை மேற்கோள் காட்டி பேசினார். யெகோவா தேவனை தம்முடைய பிதா என்பதாக அவர் குறிப்பிட்டிருந்ததால், சில யூதர்கள் அவர்மீது கல்லெறிய விரும்பினார்கள். ‘தன்னைத் தேவன் என்று அவர் சொல்லிக் கொள்கிறார்’ என்ற குற்றச்சாட்டுக்கு இயேசு பின்வருமாறு பதிலளித்தார்: “தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? [மனித நியாயாதிபதிகளை] தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க . . . பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும் உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவ தூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?”—யோவான் 10:31-36.
அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியவிதமாகவே சந்தேகமின்றி ஒரே ஒரு சர்வ வல்லமையுள்ள தேவனே இருக்கிறார்: “வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தர்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; . . . இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது.” (1 கொரிந்தியர் 8:5, 6) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பொய் தேவனுமல்ல, பேய் தேவனுமல்ல, வெறும் ஒரு விக்கிரகமும் இல்லை. அவர் யெகோவா தேவனுடைய மகிமையின் பிரகாசமாக இருக்கிறார். (எபிரெயர் 1:3) ஆகவே, யோவான் 1:1 இயேசுவை “ஒரு தேவன்” அல்லது “தெய்வீகத்தன்மையுள்ளவர்” (Johannes Schneider) என்பதாகக் குறிப்பிடுவது பொருத்தமாகவே இருக்கிறது. (w86 7/1)
[அடிக்குறிப்புகள்]
a பிதாவை ஒரு தனிப்பட்ட மெய்யான ஆளாக இப்பொழுது குறிப்பிடும் ho theos [தேவன்] என்ற பட்டப்பெயர் புதிய ஏற்பாட்டில் இயேசுவுக்குப் பொருந்துவதில்லை. இயேசு தேவனுடைய குமாரனாக (of ho theos) இருக்கிறார் . . . யோவான் 1:1-ஐ “வார்த்தை தேவனோடிருந்தது [=பிதா] அந்த வார்த்தை தெய்வீகமாயிருந்தது” என்பதாகவே சரியாக மொழியாக்கம் செய்திருக்க வேண்டும்.—பைபிளின் அகராதி (1965), John L. Mckenzie, S.J.