வாழ்க்கையில் ஒரு துணைக்காக நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்களா?
“ஒரு நல்ல விவாகத்தைக் காட்டிலும் அதிக அழகானதும், நேசமானதும், கவர்ச்சியானதுமான உறவோ தோழமையோ அல்லது கூட்டுறவோ இல்லை” என்பதாகச் சொல்லப்படுகிறது. ஆகவே விவாகமாகாத இலட்சக் கணக்கான ஆட்கள் வாழ்க்கையில் ஒரு துணையை விரும்புவதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.
விவாக பொருத்தத்தைக் கண்டுபிடிக்க சிலர் கம்ப்யூட்டர்களையும் மற்றவர்கள் நட்சத்திரங்களையும் நம்பியிருக்கிறார்கள். ஆனால் விவாகத்தை ஆரம்பித்து வைத்தவரான நம்முடைய சிருஷ்டிகரை நம்பியிருப்பது எத்தனை மேலானதாக இருக்கும்! (ஆதியாகமம் 2:18-24) ஒரு விவாகத் துணைவரில் நாம் எதைப் பார்க்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள நமக்கு கடவுளின் புத்திமதிகளும் நியமங்களும் உதவி செய்கின்றன. கடவுளின் அன்புள்ள அக்கறையும் ஞானமும் இவைகளை நாம் நம்புவதற்கு உறுதியான ஆதாரத்தைத் தருகிறது. (சங்கீதம் 19:7) அவருடைய வார்த்தை நமக்குப் பின்வருமாறு கட்டளையிடுகிறது:
‘கர்த்தருக்குள் மாத்திரமே விவாகம் செய்யவும்’
ஏன்? இது ஏனென்றால் யெகோவா தேவன் நம்முடைய நித்திய நலனில் அக்கறையுள்ளவராக இருக்கிறார். ‘கர்த்தருக்குள் மாத்திரமே விவாகம் செய்ய வேண்டும்’ என்ற அப்போஸ்தலனாகிய பவுலின் புத்திமதி யெகோவாவின் பூர்வ காலத்து ஊழியர்களின் பழக்கத்துக்கு இசைவாக இருக்கிறது. இந்த ஊழியர்கள் தங்களைப் போலவே மெய் வணக்கத்தாராய் இருந்தவர்களையே விவாகத் துணையாக தெரிந்து கொண்டார்கள். (1 கொரிந்தியர் 7:39; உபாகமம் 7:3, 4) அவ்விதமாகச் செய்வதில் இருக்கும் நன்மைகள் மிகப் பலவாகும். இது மனதில் வைக்கப்பட வேண்டும்.
உதாரணமாக தேவபக்தியுள்ள விவாகத் துணை, நம்முடைய அன்புள்ள பரலோகத் தகப்பனிடமாக பற்றுமாறா உறுதிபாட்டை தொடர்ந்து காத்துக்கொள்ள உதவியாக இருக்க முடியும். (பிரசங்கி 4:9-12 ஒப்பிடவும்) கிறிஸ்தவ துணைவர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி ஒன்றாகச் சேர்ந்து பல்வேறுபட்ட சோதனைகளையும் வெற்றிகரமாக சந்திக்கலாம். இவர்கள் ஒன்று சேர்ந்து விவாக பிணைப்புகளைப் பலவீனப்படுத்திவிடக்கூடிய அழுத்தங்களை எதிர்த்து நிற்கலாம். இருவருமே யெகோவாவை நம்பியிருந்து அவருடைய மகத்தான புத்திமதிகளைப் பின்பற்றுவதன் காரணமாக அவர்கள் வித்தியாசங்களைச் சரிசெய்து கொண்டு போட்டி போடுகிறவர்களாக இருப்பதற்குப் பதிலாக ஒத்திசைவோடு ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்யலாம். யெகோவாவைச் சேவிக்கவும் அவருடைய வழிகளுக்கு இசைவாக தங்கள் வாழ்க்கையை உருவமைத்துக்கொள்ளவும் அவர்கள் உண்மையாக முயற்சி செய்கையில், அது நமது சிருஷ்டிகருக்குக் கனத்தைக் கொண்டுவரும் வெற்றிகரமான விவாகமாக அமைந்து விடும்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக, க்ளோரியா என்ற பெயருள்ள ஒரு பெண், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வந்துகொண்டும் காவற்கோபுர படிப்பில் குறிப்புகளையும் கூடச் சொன்ன ஒரு இளம் மனிதனோடு நெருக்கமாக பழகி வந்தாள். முழுக்காட்டப்படாத இந்த நபரோடு தொடர்ந்து அத்தனை நெருக்கமாக பழகுவது கூடாது என்று அவளுக்குக் புத்திமதி கொடுக்கப்பட்டது. ஆனால் அவள் அவனை அவ்வளவாக ‘காதலித்ததால்’ அந்தப் புத்திமதிக்குச் செவி கொடுக்கவில்லை. என்றபோதிலும் அது நல்ல ஒரு புத்திமதி என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆகவே ஒரு நாள் இந்த விஷயத்தில் யெகோவாவின் உதவிக்காக மன்றாடி அவள் ஊக்கமாக ஜெபித்தாள். அதற்குப் பின் விரைவிலேயே அந்த மனிதன் ஒழுக்கமில்லாத ஒரு ஆள் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆகவே க்ளோரியா உடனடியாக அந்த நட்பை துண்டித்துவிட்டாள். கடைசியில் அவள் சிறந்த கிறிஸ்தவ மனிதனை விவாகம் செய்து கொண்டாள். இன்று அவர் நியமிக்கப்பட்ட ஒரு மூப்பராக இருக்கிறார். அவர்களுடைய இரண்டு பிள்ளைகளும் சத்தியத்தில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். பின்னோக்கிப் பார்க்கையில் அவள் சொல்கிறாள்: “நான் அநேக பிரச்னைகளைத் தவிர்த்திருப்பதற்கு யெகோவாவுக்கு நன்றி சொல்ல வேண்டும், அவருடைய வழிநடத்துதலினால் நான் மிகச் சிறந்த புத்திமதியைப் பெற்றுக்கொண்டேன். அன்புள்ள ஒரு கணவனோடு கூட மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையைக் கொண்டிருக்க அவர் அனுமதித்திருக்கிறார்”
வேறிடத்தில் ஏன் பார்க்க வேண்டும்?
அப்படியென்றால் யெகோவாவுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்திருக்கும் ஒரு நபர் விவாகத் துணைக்காக ஏன் வேறிடத்தில் பார்க்க வேண்டும்? நமக்கு எது நல்லது என்பதை யெகோவா அறிவார் என்பதையும் அதையே அவர் விரும்புகிறார் என்பதையும் அந்தக் கிறிஸ்தவன் உறுதியாக நம்பவில்லையா? (நீதிமொழிகள் 3:1-7; சங்கீதம் 145: 16) உங்களைப் பற்றி என்ன? யெகோவா “சத்தியபரர்” என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சங்கீதம் 31:5) அப்படியென்றால், அவர் எப்பொழுதும் சரியானதும் பிரயோஜனமானதுமான நம்பத்தக்க புத்திமதியையே கொடுக்கிறார் என்பதை நீங்கள் நிச்சயமாகவே ஒப்புக் கொள்வீர்கள். (ஏசாயா 48:17, 18) ஆம், நம்முடைய நித்திய நலனை மனதில் கொண்டே நம்முடைய அன்புள்ள பரலோகத் தகப்பன் நமக்குப் புத்திமதியைக் கொடுக்கிறார். ஆனால் நாமோ முன்னறியும் திறனில்லாமல் நம்முடைய திட்டங்களை அருகாமையிலுள்ள எதிர்காலத்துக்காக மட்டுமே போடக்கூடும். ஆனால் வாழ்க்கையில் ஒரு துணைக்காக தேடுகையில், அருகாமையிலுள்ள எதிர்காலத்தைக் காட்டிலும் அதிகத்துக்காக நாம் திட்டமிட வேண்டுமா?—சங்கீதம் 37:11, 29.
ராஜ்யம் சமீபித்து விட்டது என்பதையும் பூமியை சுத்தம் செய்ய அது விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்பதையும் நீங்கள் உண்மையாக நம்புகிறீர்களா? முனனறிவிக்கப்பட்டுள்ள உலகளாவிய பரதீஸில் நீங்கள் உங்களை வைத்துப் பார்க்கிறீர்களா? அல்லது தற்போதைய ஒழுங்குமுறையை முழுமையாக அனுபவிக்க நீங்கள் விரும்புகிறீர்களா? உயர்ந்த ஒரு வாழ்க்கை முறையை உங்களுக்கு அளிக்கக்கூடிய திறமையுள்ள ஒருவரை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது மெய் வணக்கத்துக்கு முதலிடத்தைக் கொடுக்கும் ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? (மத்தேயு 6:33) உண்மையில் உங்கள் வாழ்க்கையில் முக்கியமானது எது? நம்முடைய அந்தரங்கமான எண்ணங்களையும் உள்நோக்கங்களையும் ஆராய்வது ஞானமுள்ள காரியமாக இருக்கும். பின்பு அவசியமானால் நாம் மாற்றங்களைச் செய்து இவ்விதமாக யெகோவாவுக்கு வெறுப்புண்டாக்கும் ஒரு நடத்தைப் போக்கை தவிர்த்துவிடலாம்.—சங்கீதம் 78:40, 41 ஒப்பிடவும்.
நமது திருக்குள்ள இருதயம்
எரேமியா 17:9 “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளது” என்பதாக எச்சரிக்கிறது. ஆகவே நாம் அதைக் கட்டுப்படுத்துவது அவசியமாயிருக்கிறது. ஆவியால் ஏவப்பட்ட பைபிளின் புத்திமதியையும் சபை மூப்பர்களாலும் மற்றவர்களாலும் கொடுக்கப்படும் அன்பான நினைப்பூட்டுதல்களையும் அசட்டை செய்பவர்கள், அநேகமாக கண்ணீர் விடுகிறவர்களாகவும் மனவேதனையை அனுபவிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைப்பது நல்லது.
‘ஆனால் அவ்விதமாக நீங்கள் எப்படிச் சொல்லமுடியும்?’ என்பதாக எவராவது கேட்கலாம். ‘உடன் வணக்கத்தாரை விவாகம் செய்துகொள்ளாத ஒரு சகோதரரை எனக்குத் தெரியும். ஆனால் இப்பொழுது அவர்கள் இருவரும் யெகோவாவை சேவித்து வருகிறார்கள்.’ உண்மைதான். ஒரு சிலருடைய விஷயத்தில் காரியங்கள் இவ்விதமாக இருந்திருக்கின்றன. இப்பொழுது இருவரும் “சத்தியத்திலே நடப்பது” நமக்கு சந்தோஷத்தைத் தருகிறது. (3 யோவான் 4) என்றபோதிலும் முழுக்காட்டப்படாத ஒரு நபரை விவாகம் செய்து கொண்ட சகோதரர் கீழ்ப்படியாதவராக இருந்திருக்கிறார். சுதந்தரமான அந்த ஆவி மறுபடியுமாக மேலெழுந்து வருமா? கடவுளைவிட தனக்கு அதிகம் தெரியும் என்பதாக நினைக்கவும் அதன் காரணமாக பைபிளின் புத்திமதியை தள்ளிவிட்டு இன்னும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் தன்னுடைய சொந்த ஞானத்தை நம்பியிருக்கு அவர் தூண்டப்படக்கூடுமா? நாம் ‘நம்முடைய முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கையாயிருக்’கும்படியாக உற்சாகப்படுத்தப்படுகிறோம். (நீதிமொழிகள் 3:5) எல்லா காரியங்களிலும் தெய்வீக சித்தத்துக்குக் கீழ்ப்படிதலுடன் உடன்படுவதை அது குறிக்கிறது ஆகவே நாம் கீழ்படிதலுள்ள ஒரு இருதயத்தை, சிறிய காரியங்களிலுங்கூட கீழ்படிதலின் சோதனையை எதிர்படும் ஒரு இருதயத்தை நாம் வளர்த்துக்கொள்கிறோம்? ‘கர்த்தருக்குள் விவாகம் செய்துகொள்ளாத சகோதரர் தன்னுடைய சொந்த வழியில் காரியங்களைச் செய்வதிலுள்ள தவற்றை இப்பொழுது உணர்ந்து ஒருவேளை யெகோவாவின் மன்னிப்பை நாடியிருக்கக்கூடும். ஆனால் உங்களுடைய விவாதத்தை அந்த விதமாக ஆரம்பிக்க நீங்கள் விரும்புகிறீர்களா?
‘ஆனால் என்னுடைய காதலன் பைபிளைப் படிக்க ஆரம்பித்து விட்டார், கிறிஸ்தவ ஊட்டங்களுக்கு வந்துகொண்டிருக்கிறார்’ என்பதாக வேறு எவராவது ஒருவர் சொல்லக்கூடும். ஆம், ஆனால் அவர் ஏன் படித்துக் கொண்டிருக்கிறார்? ஒரு விவாகத் துணையை அடையவா அல்லது யெகோவா தேவனைப் பற்றி கற்றறிந்து அவரைச் சேவிக்கவா? காதல் கொள்ளும் காலம் முழுவதிலும் அந்த மனிதனின் உள்ளெண்ணங்கள் சந்தேகத்திலிருக்கலாம். விவாக நாளுக்குப் பின்பு நீங்கள் என்ன காண்பீர்கள்? ஆம் உங்கள் காதலன் முழுக்காட்டுதல் பெரும் வரையாக காத்திருந்து, அதன் பின்பு விவாகத் தேதியை நீங்கள் குறிக்கலாம். அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குள் விவாகம் செய்துகொள்ளுகிறீர்கள். ஆனால் அந்தப் புத்திமதியின் ஆவிக்கு இசைவாக நீங்கள் நடந்து கொள்கிறீர்களா?
ஒரு சகோதரர் குறிப்பிடப்பட்ட ஊழிய சிலாக்கியங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகையில் நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அவர் முழுக்காட்டுதல் பெற்றவரா இருந்தால் போதுமா? இல்லை, மாறாக, இப்படிப்பட்ட ஒரு சகோதரர் “முன்னதாக சோதிக்கப்”பட்டவராக இருக்கவேண்டும். (1 தீமோத்தேயு 3:10) இதிலிருந்து நாம் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ளக்கூடுமா? ஆம். நில், பார், கேள். சற்று நின்று விவாகத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். காதலில் மங்கிவிட்ட கண்களின் மூலமாக அல்ல, ஆனால், உணர்ச்சிகளுக்கு இடந்தராமல் அந்தத் தனிப்பட்ட நபரைப் பாருங்கள். செவி கொடுத்தும் கேளுங்கள். அவனோ அல்லது அவளோ தேவனுக்குத் துதியை அன்புள்ள சொற்களால் இருதயத்திலிருந்து பேசுகிறாளா? நியாயமான ஒரு காலப் பகுதியில், அவனிடம் கிறிஸ்தவ வளர்ச்சியின் அத்தாட்சி இருக்கிறதா? தன்னுடைய உண்மைத் தன்மையையும் ஆவிக்குரிய தகுதிகளையும் அவர் காண்பித்தப் பிறகு, வாழ்க்கையில் அவனை (அல்லது அவளை) சாத்தியமான துணையாகக் கொள்வதைப் பற்றி சிந்தித்துப் பார்க்கலாம், ஒரு ஹாஸ்ய கவியை மேற்கோள் காண்பிக்க:
“கண்ணிகையே நான் சொல்லும் கதையில் இருக்கும் பாடத்தைக் கேள்
பொருத்தமான துணையைத் தெரிந்து
கொள்வது மட்டுமல்லாமல்
விவாகம் செய்ய பொருத்தமான நேரத்தையும் தெரிந்துகொள்.”
ஆனால் நம்முடைய இருதயம் நல்ல புத்திமதியையும் உண்மையான நியாயங்களையும் தள்ளிவிடச் செய்தால் என்ன நடக்கக்கூடும்? விளைவுகள் மோசமானதாக இருக்கக்கூடும். பைபிள் இவ்விதமாக புத்திமதி கூறுவது நினைவிருக்கட்டும்:
நீங்கள் எதை விதைத்தீர்களோ அதையே அறுப்பீர்கள்
ஜாக்குலினுக்கு என்ன சம்பவித்தது என்பதை சிந்தித்துப் பாருங்கள். கிறிஸ்தவ சபைக்கு வெளியே ஒரு வாலிபனோடு அவள் வளர்த்துக்கொண்டஒரு நட்பைக்குறித்து ஒரு மூப்பர் அவளுக்குப் புத்திமதி கொடுத்தார். சகோதரர்கள் அதிக கண்டிப்பாக இருப்பதாக அவள் கருதியதால், பைபிள் ஆதாரத்தில் தரப்பட்ட புத்திமதிகளை அவள் கேட்கவில்லை. தன்னுடைய சொந்த மனநிலையை பின்னோக்கிப் பார்த்து அவள் இவ்விதமாக ஒப்புக்கொண்டாள்: ‘ஒருவர் எதைப் பார்க்க விரும்புகிறாரோ அதையே அவர் பார்க்கிறார். யெகோவா எதைப் பார்க்கிறார் அல்லது சொல்லுகிறார் என்பதை அல்ல.” அந்த வாலிபன் பைபிளைப் படிக்க ஆரம்பித்து கடைசியில் முழுக்காட்டப்பட்டான் மூன்றே மாதங்களுக்குள் அவர்கள் விவாகம்செய்து கொண்டார்கள்.
வெகு சீக்கிரத்தில் பிரச்னைகள் உருவாக ஆரம்பித்தன. உண்மையில் தேன்நிலவிலேயே அவை ஆரம்பமாயின! ஜாக்குலின் கவனிக்கத் தவறிய அல்லது தன்னுடைய வசதிக்காக கவனிக்க தவறிவிட்ட அவனிலுள்ள விரும்பத்தகாத குணங்கள் தெளிவாக இப்பொழுது தெரிய வரலாயின, அவள் மகிழ்ச்சியான, ஐக்கியமான ஒரு விவாகத்தைக் கற்பனை செய்து கொண்டிருந்தாள். ஆனால் அது எதிர்மாறாக இருந்தது அவளுடைய கணவன் சபை நீக்கம் செய்யப்பட்டான். அவன் அவளையும் அவளுடைய இரண்டு குழந்தைகளையும் கைவிட்டு, பிரிந்துபோய் விட்டான். இப்பொழுது அவள் மோசமாகிவரும் இந்த ஒழுங்கின் பொருளாதார அழுத்தங்களை மட்டுமல்லாமல் இரண்டு குழந்தைகளை வளர்க்கும் சவாலையும் எதிர்பட வேண்டு. அவர்களுடைய சரீர மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். இந்தக் கசப்பான அனுபவத்திலிருந்து ஜாக்குலின் கற்றுக்கொண்டிருப்பது என்ன? “கீழ்படிதல்” என்று அவள் சொல்லுகிறாள். “புத்திமதி கடுமையாகவோ அல்லது அது உங்களுக்குச் சிறந்ததாகவோ தோன்றாவிட்டாலும் யெகோவாவிடமிருந்து வருவதுபோல அதைக் கருதி முழுமையாக அதற்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்”—கலாத்தியர் 6:7; சங்கீதம் 86:11.
மற்றொரு உதாரணத்தைச் சிந்தித்துப் பாருங்கள். மாரிட்ஸா தன் வருங்கால கணவனை வேலைசெய்யுமிடத்தில் சந்தித்தாள். இந்த உலகில் அவளுக்குத் தெரிந்திராததும் அவளுக்கு அவ்வளவு மோசமானதாக தோன்றாததுமான காரியங்களை அவளுக்குக் காண்பித்தான். அவன் படித்தவனாக பண்புள்ளவனாக, பல்வேறு விஷயங்களின் பேரில் அறிவுப் பூர்வமாக பேசக்கூடியவனாக இருந்தான். அநேக வேதப் பூர்வமான எச்சரிப்புகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டபோதிலும் அவை அவளுக்கு ஏறவில்லை. அவள் அவனை அதிகமாக காதலித்தாள்.
அவளிடம் எப்பொழுதும் அன்பு பாராட்டிக்கொண்டிருந்த அவளுடைய துணைவரோடு அனுபவித்த கிளர்ச்சியூட்டிய மாலைப் பொழுதுகளைப் போலில்லாததால், கிறிஸ்தவ கூட்டங்கள் அவளுக்குச் சலிப்பாகி விட்டது. அவர்களுடைய விவாதத்துக்கு முன்னால் கிறிஸ்தவ கூட்டங்களில் தலையிடமாட்டேன் என்பதா அவன் தலையிடவுமில்லை. என்றபோதிலும் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற காரியங்களில் அவள் அதிகமாக ஈடுபட ஆரம்பித்து, ஆவிக்குரிய நடவடிக்கைகளை இரண்டாவது இடத்துக்குத் தள்ளிவிட்டாள். அவள் பின்பு செயலற்றவலாகிவிட்டாள்.
மகிழ்ச்சியூட்டிய அந்தச் சம்பாஷணைகளுக்கு என்ன நடந்தது? அவை படிப்படியாக மறைந்தன. கடைசியாக அவளுடைய கணவன் அவளை விவாகரத்து செய்துவிட்டு நான்கிலிருந்து ஒன்பது வயதுகளிலுள்ள அவளுடைய நான்கு பிள்ளைகளையும் கைவிட்டு விட்டு போய்விட்டான். இந்த அதிர்ச்சியினால் மாரிட்ஸா உணர்ச்சியற்று போனாள். மூன்று ஆண்டுகளுக்குப் பின்புதானே அவள் என்ன நடந்துவிட்டது என்பதையும் அலசிப்பார்க்க போதிய அளவு தன்னிலைக்கு வந்தாள். “வாழ்வு என்றாள் வேதனை”தான் என்று தனக்குத்தானே அவள் சொல்லிக் கொண்டே இருந்தால். ஆனால் இது அவளுக்குத் திருப்தியாக இல்லை. ஏனென்றால் அவள் மகிழ்ச்சியாக இருந்த ஆண்டுகளை, ராஜ்யத்தின் நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வெளி ஊழியத்துக்குப் போகையில், அவள் முகத்துக்கு எதிராக வந்து வீசிய அந்தக் குளிர் காற்றையும் கூட அனுபவித்த அந்த ஆண்டுகளை அவளால் இன்னும் நினைவுப்படுத்திப் பார்க்க முடிந்தது.
“நான் மட்டும் அப்பொழுது சொல்வதைக் கேட்டிருந்தால், இத்தனை வேதனையும் தொந்தரவையும் தவிர்த்திருக்கலாம்,” என்று மாரிட்ஸா சொன்னாள். அவளுடைய பிள்ளைகளின் சகபள்ளிமாணவர்களின் மூலமாக, மறுபடியுமாக யெகோவாவின் சாட்சிகளுடன் அவள் தொடர்பு கொண்டாள். சத்தியத்தில் அவளுடைய அக்கறையும் யெகோவிடமாக அவளுடைய அன்பும் மீண்டும் தூண்டப்பட்டது. இப்பொழுது அவளும் அவளுடைய பிள்ளைகளும் ஊழியத்தில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். மாரிட்ஸா இப்பொழுது முழு இருதயத்தோடு பின்வருமாறு சிபாரிசு செய்கிறாள்: “.யெகோவாவின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்திருக்க கற்றுக்கொள்ளுங்கள். அவர் தம்முடைய சித்தத்தைத் தெரியப்படுத்த நீங்கள் சிறிதும் நினைக்காத நபர்களைப் பயன்படுத்துகிறார் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.” இயேசு கிறிஸ்து சொன்ன விதமாகவே: “நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்துக் கவனியுங்கள்.” (லூக்கா 8:18) ஆம் நில்லுங்கள், பாருங்கள், கேளுங்கள்.
அடுத்த கூட்டத்துக்குப் போகையில், ராஜ்ய மன்றத்தைச் சுற்றிப் பார்வையிடுங்கள். அங்கே விவாகமான அநேக மகிழ்ச்சியான கிறிஸ்தவ தம்பதிகளையும் அவர்கள் தங்கள் நேரத்தையும் அனுபவங்களையும் ஒன்றாகச் சேர்ந்து பகிர்ந்து கொள்வதில் களிகூறுவதையும் நீங்கள் பார்ப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. மறுபட்சத்தில் அவிசுவாசிகளான துணைவர்களை உடையவர்களாக இருப்பதால் தனியாக இருக்கும் சிலரையும் நீங்கள் காணக்கூடும். அவர்களுடைய கணவன்மார்கள் அல்லது மனைவிமார்கள் தங்களோடு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அநேகமாக கூட்டம் முடிந்த உடனே அவர்கள் வீட்டுக்கு அவசரமாக போக வேண்டும் இதனால் உடன் விசுவாசிகளோடு கட்டியெழுப்பும் சம்பாஷணையையும் கூட்டுறவையும் அவர்கள் இழந்துவிட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ‘கர்த்தருக்குள் விவாகம் செய்து கொள்ளும்படியான புத்திமதியை அசட்டை செய்வதன் காரணமாக அனாவசியமாக அதே சூழ்நிலையில் உங்களைக் காணும் நிலையை நீங்கள் ஏற்படுத்த விருப்புகிறீர்களா? மாறாக. யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து இதனால் விசனகரமான விளைவுகளைத் தவிர்ப்பது எத்தனை ஞானமுள்ள காரியமாக இருக்கும்!—சங்கீதம் 119:9; நீதிமொழிகள் 28:26.
யெகோவாவுக்குக் காத்திரு
‘ஆனால் சபையில் ஒருவரும் இல்லை. என்னுடைய வயதில் வெகு சிலரே இருக்கிறார்கள்’ என்பதாக நீங்கள் சொல்லக்கூடும். அது ஒருவேளை உண்மையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று யெகோவா விரும்புவதை நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள்? “அவர் உங்களை விசாரிக்கிறவராயிருக்கிறார்.” (1 பேதுரு 5:6, 7) “புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு என்ற நீதிமொழி உங்களுக்கு நினைவிருக்கிறதா? (நீதிமொழிகள் 19:14) அப்படியென்றால், விவாக விஷயத்தை ஜெபத்தில் ஏன் எடுத்துச் செல்லக்கூடாது?—பிலிப்பியர் 4:6, 7.
அன்னாலும் அவள் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பியதும் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவள் யெகோவாவிடம் விண்ணப்பித்து தன் இருதயத்தை ஊற்றி, அவரை முழுமையாக நம்பியிருந்தாள். பின்பு அவள் காரியங்களை அவருடைய கைகளில் விட்டுவிட்டாள். குறித்த சமயத்தில் அவள் தன்னுடைய ஜெபத்துக்கு மகத்தான ஒரு பதிலைப் பெற்றுக்கொண்டாள், அவள் ஒரு குமாரனைப் பெற்றெடுத்தாள்.—1 சாமுவேல் 1:9-11, 18-20; சங்கீதம் 62:8.
உங்களுடைய சபையில், உங்கள் வயதில் வெகுசிலரே இருந்தாலும் வட்டார அசெம்பிளிகளையும் மாவட்ட மாநாடுகளையும் பற்றி என்ன? நாம் இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு ஆவிக்குரிய காரணங்களுக்காகப் போகிறோம். ஆனால் இப்படிப்பட்ட சமயங்களில் வாலண்டியர் செய்பவர்கள், மற்றவர்களுக்குச் சேவை புரிவதால் வரும் மனநிறைவை அடைகிறார்கள். யெகோவாவுக்கு முழு ஆத்துமாவோடு சேவை செய்யும் சகோதர சகோதரிகளையும் சந்திக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நீங்கள் உங்கள் வருங்கால வாழ்க்கைத் துணையைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால் இப்பொழுது உங்களால் பொருத்தமான ஒரு கிறிஸ்தவ துணையைக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் கூட, விவாகமில்லாத ஒரு நபராக கற்புள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுமாறு ஜெப சிந்தையோடு யெகோவாவின் மீது சார்ந்திருங்கள். இன்னும் விவாகமில்லாத நிலையி ஒரு நல்ல மனைவியாகவும் தாயாகவும் இருப்பதற்கு உங்களுக்கு உதவக்கூடிய குண நலன்களையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். (கலாத்தியர் 5:22, 23) அநேகர் பயனியர்களாக முழுநேர ஊழியத்தை எடுத்துக் கொள்வதன் மூலம், அதையே செய்வதற்கு உதவப்பட்டிருக்கிறார்கள். உங்களுடைய நேரத்தையும் சக்தியையும் பயன்படுத்த என்ன மேன்மையான ஒரு வழி.
வாழ்க்கையில் ஒரு துணைக்காக நீங்கள் தேடிக்கொண்டிருப்பீர்களேயானால், நீங்கள் எங்கே ஆரப்பிப்பீர்கள்? வாழ்க்கையில் உங்களுக்கிருக்கும் அதே இலக்குளை உடையவர்களும் யெகோவாவை என்றென்றுமாக சேவிக்க வேண்டும் என்ற ஊக்கமான ஆசையுள்ளவர்களுமாகிய யெகோவாவின் சுறுசுறுப்பான உடன் வணக்கத்தாரின் மத்தியிலேயே அது இருக்கட்டும். (2 தீமோத்தேயு 2:22) வாழ்க்கையில் கடவுள் பயமுள்ள ஒரு துணையால் யெகோவா உங்களை ஆசீர்வதிப்பாரேயானால், உங்களுடைய விவாகம் தம்முடைய கடவுளைக் கனப்படுத்தும் ஒன்றாக இருக்கும். (W86 11/15)
[பக்கம் 30-ன் சிறு குறிப்பு]
“நான் மட்டும் அப்பொழுது சொல்வதைக் கேட்டிருந்தால், இத்தனை வேதனையையும் தொந்தரவையும் தவிர்த்திருக்கலாம்,”