வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
“பட்டயம் பட்சித்த ஜனங்களைப் பார்க்கிலும், காடு பட்சித்த ஜனம் அதிகம்” என்பதாகச் சொல்லும் 2 சாமுவேல் 18:8-ன் பொருள் என்ன?
தாவீது ராஜாவின் சவுந்தரியமுள்ள குமாரனாகிய அப்சலோம் ஆட்சியை தகாத வழியில் கைப்பற்றி, அவனுடைய தகப்பன் எருசலேமுக்கு ஓடிப்போகும்படியான நிலையை ஏற்படுத்தினான். அதற்குப் பின்பு, (ஒருவேளை யோர்தான் நதிக்கு கிழக்கே) எப்பிராயீம் காட்டில் அப்சலோமின் படைக்கும், யெகோவாவால் அபிஷேகம் பண்ணப்பட்ட தாவீது ராஜாவுக்கும் உண்மையுள்ளவர்களாய் இருந்தவர்களுக்கும் இடையே யுத்தம் நடந்தது. பயங்கரமான அந்த யுத்தத்தில் தாவீதின் மனிதர்கள் 20,000 கலகக்காரர்களை கொன்றார்கள் என்பதாக 2 சாமுவேல் 18:6, 7-லிலுள்ள பதிவு தெரிவிக்கிறது. அடுத்த வசனத்தில் ஒரு பகுதி மேலுமாக பின்வருமாறு சொல்கிறது: “அன்றையத் தினம் பட்டயம் பட்சித்த ஜனங்களைப் பார்க்கிலும் காடு பட்சித்த ஜனம் அதிகம்.”
கலகக்கார சேவகர்களைக் காட்டுப் பகுதிகளில் வாசஞ்செய்த மூர்க்க மிருகங்கள் கொன்றழித்ததை இது அர்த்தப்படுத்துகிறது என்பதாக சிலர் சொல்லியிருக்கிறார்கள். (1 சாமுவேல் 17:36; 2 இராஜாக்கள் 2:24) ஆனால் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை “பட்டயம்” பட்சித்தது என்பது சொல்லர்த்தமாக இல்லாதது போலவே இப்படியாக மிருகங்களால் பட்சிக்கப்பட்டது சொல்லர்த்தமாக இருக்க வேண்டியதில்லை. உண்மையில் “யுத்தம் அந்தத் தேசம் எங்கும் பரந்தது.” ஆகவே கரடு முரடான காட்டுப்பகுதியினூடே திகிலடைந்து சிதறி ஓடிக் கொண்டிருந்த அப்சலோமின் கலகக்கார மனிதர்களால் ஒருவேளை குழிகளுக்குள்ளும் மறைவான இடுக்கு வழிகளுக்குள்ளும் விழுந்து அடர்த்தியான புதர்களுக்குள் சிக்கிக்கொண்டிருக்க வேண்டும் என்பதே இதற்கு அதிக பொருத்தமான விளக்கமாக இருக்கிறது. அப்சலோம் தானே காட்டுக்குப் பலியானதை பதிவு தொடர்ந்து சொல்வது அக்கறையூட்டுவதாக உள்ளது. அவனுக்குத் தலையில் ஏராளமாக மயிர் இருந்ததன் காரணமாக, ஒரு பெரிய மரத்தில் அவன் தலை சிக்கிக் கொண்டது. அவன் உதவியற்ற நிலையில் தொங்கிக் கொண்டிருக்க, யோவாபும் அவனுடைய மனிதர்களும் அவனை கொன்று போட்டார்கள். அப்சலோமின் பிரேதத்தைக் ‘காட்டிலுள்ள ஒரு பெரிய குழியில் போட்டு, அவன் மேல் மகா பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்.’—2 சாமுவேல் 18:9-17.