கடவுளிடமாக அன்பு நல்லொழுக்கத்தை ஊக்குவிக்கும் சக்தி
நல்லறிவுள்ள ஆட்கள், ஒழுக்கமற்ற வாழ்க்கை தடை செய்யப்பட வேண்டும் என்பதை உடனடியாக ஒப்புக்கொள்வர். கானடாவிலுள்ள யுனைட்டட் சர்ச்சின் ஊழியர் ஒருவர் சொன்னதாவது: “தனி நபர்களும் சமுதாயமும் ஒழுக்க சட்டத்தை மீறும்போது ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை: போர்கள், பணவீக்கம், வாட்டர்கேட் மற்றும் ஒழுங்கின்மை.” முந்தைய கட்டுரையில் காண்பிக்கப்பட்டபடி, உலகின் முக்கிய மதங்கள் நல்லொழுக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு பலமான சக்தியாக நிரூபிக்கவில்லை. ஆகவே தனிப்பட்ட விதமாக நாம் ஒழுக்கமாக வாழ விரும்பினால், இப்படிப்பட்ட ஒரு சக்தியை அளித்திட வேறொரு அதிகாரத்திடமாக நோக்கியிருந்து பின்னர் அந்த அதிகாரத்தின்படி நடக்க மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு உன்னத அதிகாரத்தின் செல்வாக்கு, எகிப்திலிருந்த ஒரு பிரதானியினுடைய எபிரெய உத்தியோகஸ்தனின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தில் தெளிவாக இருந்தது. தன்னோடு உடலுறவுக் கொள்ளும்படி பிரதானியின் மனைவி அவனை கவர்ச்சியூட்டி இழுத்த போது யோசேப்பு “இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி?” என்று சொல்லி அதற்கு இணங்க மறுத்தான். (ஆதியாகமம் 39:7-9) கடவுளுடைய அதிகாரத்தை ஒப்புக்கொண்டதும் அவரைப் பிரியப்படுத்த விரும்பியதும் யோசேப்புக்கு அவளுடைய தவறான ஆசைகளுக்கு இணங்க மறுப்பதற்கு வேண்டிய மனோபலத்தைக் கொடுத்தது.
இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர், யோசேப்பின் தகப்பனாகிய யாக்கோபின் சந்ததியாயிருந்த இஸ்ரவேல் ஜனம் மோசேயின் மூலமாகக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தின் ஒரு பாகமாக இருந்த பத்து கற்பனைகளைப் பெற்றுக்கொண்டது. இதற்கு கீழ்ப்படியாதபோது அது கடவுளுடைய சினத்தைக் கொண்டுவந்தது. இந்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தபோது அது தெய்வீக ஆசீர்வாதங்களைக் கொண்டுவந்தது. ஆகவே இந்தக் கற்பனைகள் தேசத்துக்கு ஒழுக்க விஷயங்களில் வழிகாட்டியாக சேவித்தது.
பத்து கற்பனைகள் —நல்லொழுக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு சக்தி
பத்து கற்பனைகள் எத்தனை பலமுள்ள சக்தியாக இருந்தது? அவைகளின் செல்வாக்கை இந்த 20-ம் நூற்றாண்டிலும் கூட உணர முடிகிறது. 1962-ல் நியுஸிலாந்தின் ஆளுநர்-முதல்வர் சொன்னதாவது: “பத்து கற்பனைகள் வழக்கற்று போய்விட்டதாக சில ஆட்கள் நினைப்பது போல தெரிகிறது. அனால் நாம் அனைவரும் அவைகளை இன்று உண்மையுடன் கடைபிடிப்போமேயானால், தேசத்தின் பொதுமுறை சட்டங்கள் அவசியமற்றதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்”.
என்றபோதிலும் பத்து கற்பனைகளைக் கைக்கொள்வதைக் காட்டிலும் அதிகம் தேவைப்படுவதை இயேசு கிறிஸ்து இளம் யூத அதிபதியோடு கொண்டிருந்த சம்பாஷணையில் காண்பித்தார். அந்த வாலிபன் “நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அவன் “கற்பனைகளை தொடர்ந்து கைக்கொள்ள” வேண்டும் என்பதாக இயேசு சொன்னபோது, பத்து கற்பனைகளில் சிலவற்றை எடுத்து சொல்லி, அதிபதி, “இவைகளையெல்லாம் என் சிறு வயது முதல் கைக் கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “நீ போய் உனக்கு உண்டானவைகளை விற்று தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றி வா,” என்றார். “அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது துக்கமடைந்தவனாய்ப் போய் விட்டான்,” என்று பதிவு தொடர்ந்து சொல்கிறது.—மத்தேயு 19:16-22.
இந்தப் பதிவை லூக்கா 10:25-28-லுள்ள இதைப்போன்ற ஒரு பதிவோடு ஒப்பிடுவது, இளம் அதிபதியின் பிரச்னையைப் பகுத்துணருவதற்கு நமக்கு உதவி செய்கிறது. நாம் இவ்விதமாக வாசிக்கிறோம்: “நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து அவரை [இயேசுவை] சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.” இந்த விஷயத்தில் நியாயங்களைக் காண இயேசு அவனுக்கு உதவி செய்தார். இதன் விளைவாக அந்த மனிதன் தன்னுடைய கேள்விக்கு தானே பதிலைக் காணக்கூடியவனாயிருந்து பின்வருமாறு சொன்னான்: ‘யெகோவா தேவனிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும், உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து உன்னிடத்தில் அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.’ பின்பு இயேசு முடிவாக, “அப்படியே செய்துகொண்டிரு, அப்பொழுது ஜீவனைப் பெறுவாய்,” (NW) என்றார்.
இதற்கு முன்னால் குறிப்பிடப்பட்டிருந்த இளம் அதிபதியின் பிரச்னையை இப்பொழுது உங்களால் காணமுடிகிறதா? பொருளுடைமைகளிடமாக அவனுக்கிருந்த அன்பு கடவுளிடமாகவும் அயலானிடமாகவும் அவனுக்கிருந்த அன்பைக் காட்டிலும் அதிகமாயிருந்தது எத்தனை வருந்தத்தக்கது! பத்து கற்பனைகளைக் கைக்கொள்ள அவன் முயற்சி செய்திருந்தும்கூட, அவன் நித்திய ஜீவனை இழக்கும் அபாயத்திலிருந்தான்.
கடவுளிடம் அன்பு எதை அர்த்தப்படுத்துகிறது?
கடவுளிடமாகவும் அயலானிடமாகவும் இருக்க வேண்டிய அன்புக்கு பதிலாக, தன்னையும், பொருளுடைமைகளையும் பாலுறவுகளையும் நேசிக்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். ஏன், பலருடைய மனங்களில் சிருஷ்டிகராக கடவுளின் மீதிருந்த நம்பிக்கையும்கூட மறைந்து, நிரூபிக்கப்படாத பரிணாமக் கோட்பாட்டில் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டிருக்கிறது. இவை அனைத்துக்கும் காரணம் என்ன?
பல நூற்றாண்டுகளாக, மக்களின் ஒழுக்கங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் கிறிஸ்தவமண்டல மதகுருமார் பயங்கரமான நரக அக்கினி என்ற பைபிள் ஆதாரமற்ற கோட்பாட்டைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். என்ஸைக்ளோபிபீடியா இன்டர்நேஷனல் சொல்வதாவது: “இடைநிலைக்காலம் முழுவதிலுமாக நரகத்தைப் பற்றிய பயமே சாதாரண மனிதர்களுக்கு நல்லொழுக்கத்தை ஊக்குவிக்கும் பலமான சக்தியாக இருந்து, ராஜாக்களையும் பேரரசர்களையும் கூட சர்ச்சுக்குப் பணியச் செய்து அவர்களுடைய கட்டுப்பாடில்லாத காம உணர்ச்சிகளுக்கு ஒரே தடையாக ஒரு வேளை இருந்தது.” இந்த நரக அக்கினி கோட்பாடு, கடவுள் அன்பற்ற, இரக்கமற்ற மற்றும் பழிக்கு பழி வாங்கும் ஒருவர் என்ற கருத்தை உருவாக்கியது. இந்தக் கோட்பாடு சில ஆட்களுக்கு ஒரு தடையாக செயல்பட்டிருந்தாலும் கூட, அநேகரை இது கடவுளிடமிருந்து விலகிச் செல்ல செய்தது. இவர்கள் வேத ஆதாரமற்ற போதகங்களுக்கும் பரிணாமம் போன்ற தத்துவங்களுக்கும் எளிதில் பலியாகிவிடும் நிலைக்குச் சென்றார்கள்.
ஆனால் கடவுள் ஆத்துமாக்களை நரக அக்கினியில் வாதிப்பதாக பைபிள் போதிப்பதில்லை. மாறாக, “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்றும் “நம்முடைய பாவங்களை நமக்கு மன்னிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” என்றும் அப்போஸ்தலனாகிய யோவான் நமக்குச் சொல்கிறான். மோசே பின்வருமாறு எழுதினான்: “யெகோவா இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும் சத்தியமுமுள்ள தேவன்” (1 யோவான் 4:8;1:9; யாத்திராகமம் 34:6) கடவுளுடைய மகத்தான குணாதிசயங்களில் இவை சிலவாக இருக்கின்றன. இவை நம்மை அவரிடமாக நெருங்கி வரச் செய்கின்றன. இந்தக் குணாதிசயங்கள், விசேஷமாக அவருடைய அன்பு, அவரை நேசிக்கும்படியாக நம்மைச் செய்கிறது. “அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு கூருகிறோம்.” (1 யோவான் 4:19) கடவுளிடமாக இந்த அன்பே, நல்லொழுக்கத்தை ஊக்குவிக்கும் மாபெரும் சக்தியாக இருக்கிறது; அது நித்திய ஜீவனுக்கு வழிநடத்தக்கூடும்!
கடவுளிடமாக உண்மையான அன்பு என்பது வெறுமென ஒரு தெளிவில்லாத பண்பாக இல்லை. அது மற்றொரு நபரின் அக்கறையை முன்னிட்டு செயல்படும்படியாக ஒருவரைத் தூண்டுகிறது. இந்த அன்பு அநேக முறைகளில் காண்பிக்கப்படலாம் என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் காண்பித்தான். அவற்றில் ஒரு சிலவற்றை சொல்ல வேண்டுமானால்: “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது”. (1 கொரிந்தியர் 13:4, 5) இந்த அன்பை நாம் காண்பிப்பதானது, நம்முடைய பரலோகத் தகப்பனை பின்பற்றுவதற்கு நாம் செய்யும் முயற்சியாக இருக்கிறது. இயேசு சொன்னார்: “இவ்விரண்டு கற்பனைகளிலும் (கடவுளிடத்தில் அன்புகூருவதும் அயலானிடத்தில் அன்பு கூருவதும்) நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது.” (மத்தேயு 22:40, ஒரு அமெரிக்க மொழிபெயர்ப்பு) வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்த அன்பை நாம் காண்பிப்போமேயானால், நாம் நம்முடைய அயலானிடமிருந்து திருடவோ அல்லது அவனைக் கொலை செய்யவோ அல்லது அவனுடைய மனைவியோடு வேசித்தனம் பண்ணவோ மாட்டோம். அப்போஸ்தலனாகிய யோவான் பின்வருமாறு சொல்லுகையில் இதை ஒப்புக் கொண்டான்: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக் கொள்வதே அவரிடத்தில் அன்பு கூருவதாம்”.—1 யோவான் 5:3.
கடவுளிடமாக அன்பு நல்லொழுக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு சக்தி
இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த டெட்ரூலியனால் காண்பிக்கப்பட்டபடி, கடவுளிடமாக அன்பு, பூர்வ கிறிஸ்தவர்கள் மீது என்ன பாதிப்பைக் கொண்டிருந்தது என்பதைக் கவனியுங்கள்; குற்றவாளிகள் மத்தியில் ஒரு கிறிஸ்தவனைச் சுட்டிக் காண்பிக்கும்படியாக அவன் தன் எதிராளிகளிடம் சவாலிடும் அளவுக்குச் சென்றான். அவர்களால் அது முடியாதபோது, அவன், “அப்படியென்றால் குற்றச் செயலில்லாமல் இருப்பது நாங்கள் மாத்திரமே” என்பதாகச் சொன்னான். பூர்வ ரோம உலகம் என்ற புத்தகம் அவருடைய கருத்தைப் பின்வருமாறு ஆதரிக்கிறது: “அவர்களுடைய குற்றமற்ற வாழ்க்கைக்கு, குறை காணமுடியாத அவர்களுடைய ஒழுக்கங்களுக்கு நம்மிடம் அத்தாட்சி இருக்கிறது.” மேலும் சர்ச் சரித்திராசிரியர் ரோலண்ட் பேயின்டன் பின்வருமாறு சொன்னதாக இன்று கிறிஸ்தவம் சொல்கிறது: “புதிய ஏற்பாடு காலப்பகுதியின் முடிவிலிருந்து 170-180 பத்தாண்டுகள் வரையாக கிறிஸ்தவர்கள் போர் படையில் இருந்ததற்கு எந்தவித அத்தாட்சியும் இல்லை”. கடவுளிடமாக கொண்டிருந்த அன்பு, ஒழுக்கமுள்ள வாழ்க்கையை நடத்துவதன் மூலம் அவருக்கு கீழ்ப்படிருந்திருக்கும்படியாக அவர்களைத் தூண்டியது. ஆனால் ‘நல்லொழுக்கத்தை ஊக்குவிக்கும் பயனுள்ள இந்தச் சக்தி இன்று இருப்பதற்கு அத்தாட்சி இருக்கிறதா?’ என்பதாக நீங்கள் யோசிக்கலாம்.
நிச்சயமாகவே இருக்கிறது! செய்தித்தாளில் ஒரு பத்தியில் தொடர்ந்து எழுதி வரும் மைக் மெக்மானஸ், ஹெரால்ட் அண்டு ரிவ்யு-வில், விவாகத்துக்கு முன்பாக பாலுறவை எதிர்த்து ஒரு பிரசங்கத்தைக் கூட தான் கேட்டது கிடையாது என்பதாக எழுதினார். இதற்கு அவர் பெற்றுக்கொண்ட கடிதங்களில் ஒன்றை 14 வயது நிரம்பிய ஒரு யெகோவாவின் சாட்சியிடமிருந்து அவர் பெற்றுக் கொண்டதாக ஒரு மாதம் கழித்து குறிப்பிட்டிருந்தார். அந்த சாட்சி எழுதியதாவது: “இந்த நோய்கள் வந்துவிடுமோ என்ற எண்ணம்தானே [விவாகத்துக்கு முன் பாலுறவுக் கொள்வதிலிருந்து] விலகியிருப்பதற்கு பெரும்பாலான ஆட்களுக்கு போதுமானதாக இருக்க வேண்டும். ஆனால் வேசித்தனத்துக்கு விலகியோடுங்கள் என்பதாக யெகோவா கட்டளையிட்டிருப்பதே சாட்சிகள் இதற்கு விலகியிருப்பதற்கு காரணமாக இருக்கிறது.” (கொட்டை எழுத்துக்கள் எங்களுடையவை) இந்தக் கடிதத்தைப் பற்றி குறிப்பிடுகையில் மெக்மானஸ், “உங்கள் சபையில் 14 வயது பிள்ளைகள் எத்தனைப் பேரால் புனிதர் பவுல் சொன்னதை இத்தனைத் தெளிவாக எடுத்துச் சொல்ல முடியும்” என்று கேட்டார். (1 கொரிந்தியர் 6:18)
அந்த இளம் பெண் குறிப்பிட்டிருந்த விதமாக யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்திருக்கும் அதே நியமமே, மற்ற பகுதிகளிலுள்ள சாட்சிகளால் பின்பற்றப்படுகிறது. வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கடவுளுடைய கட்டளைகள் சிலவற்றின் சாராம்சம் பின்வருமாறு: ‘எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடந்து கொள்ளுங்கள்’, ‘விக்கிரகங்களுக்கு விலகியிருங்கள்’, ‘இரத்தத்துக்கும் வேசித்தனத்துக்கும் விலகியிருங்கள்’, ‘உண்மைப் பேசுங்கள்’, ‘கடவுளுடைய வழிகளில் உங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவியுங்கள்’. (எபிரெயர் 13:18; 1 யோவான் 5:21; அப்போஸ்தலர் 15:29; எபேசியர் 4:25; 6:4) நீங்கள் வாழும் இடத்தில் அல்லது வேலை செய்யுமிடத்தில் யெகோவாவின் சாட்சிகள் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருக்க முயலுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஏன் அவர்கள் அவ்விதமாகச் செய்கிறார்கள், ஏன் அவர்கள் போருக்குப் போக மறுக்கிறார்கள், ஏன் அவர்கள் உங்களுடைய வீடுகளுக்கு வந்து உங்களைச் சந்திக்கிறார்கள், சுருக்கமாகச் சொன்னால் ஏன் அவர்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதாக நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? கடவுளிடம் அவர்கள் அன்பு கூருவதே விடையாக இருக்கிறது.
அன்பு ஒருக்காலும் ஒழியாது
கடவுளைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்களாய், யெகோவாவின் சாட்சிகள் பின்வரும் இந்தப் புத்திமதியை இருதயத்திற்குள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்: “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்”. (ரோமர் 12:2) அவர்களுக்கு “தேவனுடைய சித்தம்” என்ன என்பதை அவர்கள் கற்றறியும் போது, அதைச் செய்ய அவர்கள் விரும்புகிறார்கள். கடவுளிடமாக அவர்களுடைய அன்பே, இந்த விருப்பத்துக்கு பின்னாலிருக்கும் சக்தியாக இருக்கிறது. இது நம்ப முடியாதது, நம்முடைய காலத்தில் நடைமுறைக்கு ஒத்து வராது என்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? பின்வரும் உண்மை சம்பவங்களைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1963-ல், பிரேஸிலிலுள்ள சாவோ பவுலோவில் ஜோஸ் என்பவர் ஏற்கெனவே விவாகமானவளாயிருந்த யூஜீனாவோடு சேர்ந்து வாழ்ந்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு அவர்கள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள். இந்தப் படிப்பிலிருந்து “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாய் இருக்க” வேண்டும் என்பதை இந்தத் தம்பதி கற்றுக்கொண்டனர். (எபிரெயர் 13:4) அவர்கள் விவாகம் செய்துகொள்ள வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். ஆனால் யூஜீனா ஜோஸை விவாகம் செய்துகொள்ள அவளை விடுவிக்கக்கூடிய விவாகரத்து சட்டம் பிரேஸிலில் இருக்கவில்லை. ஆனால் 1977-ல், விவாகரத்துச் சட்டம் ஒன்று அமுலுக்குக் கொண்டுவரப்பட்டபோது, அவள் விவாகரத்துக்கு விண்ணப்பித்தாள். 1980-ல் கடவுள் தேவைப்படுத்துகிறதை நிறைவேற்றுகிறவர்களாய் அவர்கள் விவாகம் செய்துகொள்ளக்கூடியவர்களாயிருந்தார்கள். கடவுளிடமாக அவர்களுடைய அன்பு அதன் பலனையுடையதாக இருந்தது.
ஈனைர், நியு யார்க்கில், எல்லா விதமான போதை பொருட்களையும் உபயோகித்து பார்த்து விட்டிருந்தான். அவன் அவனுடைய காதலி ஆன் என்பளோடு வாழ்ந்து வந்தான். பணம் தேவைப்பட்டதால் அவளுடைய படங்களை ஒரு பிரபல ஆண்கள் பத்திரிக்கைக்கு அவளை அனுப்பி வைக்கச் செய்தான். போட்டோவுக்கு நிர்வாணமாக தோற்றமளிப்பதற்கு பெரும் தொகை கொடுப்பதாக அவளுக்குச் சொல்லப்பட்டது. இதற்கிடையில் ஈனைர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தான். பின்னால் ஆனும் இதில் கலந்துக்கொண்டாள். ஈனைர் போதைப் பொருட்களை உபயோகிப்பதை நிறுத்திவிட்டான். மூன்று வாரங்களுக்குப் பின்பு அவர்கள் சொந்த விருப்பத்தின்படி விவாகம் செய்துகொள்ள தீர்மானித்தார்கள். பின்னர், ஒரு கிறிஸ்தவன் அடக்கமாக உடுத்திக்கொள்ள வேண்டும் என்பதை பைபிளிலிருந்து கற்றபோது, எவ்வளவு பெருந்தொகையான பணம் கொடுக்கப்பட்டாலும் கூட தன் மனச்சாட்சி உறுத்தலின்றி தன்னை இப்படியாக போட்டோக்களை எடுப்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்பதாக ஆன் தீர்மானித்தாள். (1 தீமோத்தேயு 2:9) இப்படிப்பட்ட மாற்றங்களை எது தூண்டியிருக்கக் கூடும் என்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக இருப்பது என்பது வெறும் ஒரு மதத்தில் சேர்ந்துகொள்ளும் ஒரு காரியமாக இல்லை என்பதையும் ஆனால் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை நடத்துவதை உட்படுத்துகிறது என்பதையும் அவள் உணர்ந்து கொண்ட போது, ஆன் தான் மாற்றங்களை வேகமாகச் செய்ய வேண்டும் என்பதை அறிந்துக் கொண்டாள். உண்மையாகவே, கடவுளிடமாக அன்பு நல்லொழுக்கத்தை ஊக்குவிக்கும் பலமான சக்தியாக இருக்கிறது.
‘இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடை பெறும் சம்பவங்கள்’ என்பதாக எவராவது நினைக்கக்கூடும். ஆனால் அவை அப்படி இல்லை. யெகோவாவின் சாட்சிகள் சுறுசுறுப்பாக இருக்கும் இடங்களில் இது போன்ற மாற்றங்கள் அநேக தடவைகள் நடந்திருக்கின்றன. இதை மேலுமாக ஏன் ஆராய்ந்து பார்க்கக் கூடாது? மெய் வணக்கத்தில் வெளிப்படுத்தப்படுகின்றபடி, கடவுளிடமாக அன்பு இன்னும் நல்லொழுக்கத்தை ஊக்குவிக்கும் ஒரே சக்தியாக இருப்பதை நீங்களே உறுதி செய்துகொள்ளுங்கள். (w87 10⁄15)
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
பூர்வ கிறிஸ்தவர்களைக் குறித்து “பூர்வ ரோம உலகம்” என்ற புத்தகம் சொல்வதாவது: “அவர்களுடைய குற்றமற்ற வாழ்க்கைக்கு குறை காண முடியாத அவர்களுடைய ஒழுக்கங்களுக்கு நம்மிடம் அத்தாட்சி இருக்கிறது.” அவர்களுடைய “குறை காண முடியாத ஒழுக்கங்களுக்குப்” பின்னாலிருந்த சக்தி என்ன?
[பக்கம் 7-ன் படம்]
தவறிழைப்பதற்கு சோதிக்கப்படுகையில் அதை எதிர்ப்பதற்கு கடவுளிடமாக அன்பு உங்களுக்கு உதவக்கூடும்.