பைபிள் சரித்திரத்தின் மகா உலக வல்லரசுகள் தங்கள் முடிவை நோக்கி அணிவகுத்துச் செல்லுகின்றன! அணிவகுத்துச் செல்லுகின்றன
சரித்திரம் முன்னதாக எழுதப்படுவதை நீங்கள் கற்பனைசெய்துபார்க்க முடிகிறதா? ‘முடியாதது,’ என்று நீங்கள் சொல்லுகிறீர்களா? என்றபோதிலும், சரித்திரத்தை முன்னதாகவே—காரியங்கள் சம்பவிப்பதற்கு நூற்றுக்கணக்கான, சில சமயங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே முன்கூறிய புத்தகம் ஒன்று இருக்கிறது! அந்தப் புத்தகம் பைபிள்.
பைபிள் பூர்வத்தில் சம்பவித்தவைகளைத் திருத்தமாக அறிக்கை செய்தது மட்டுமல்லாமல், ஆச்சரியமான விதத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் பூர்வ பாபிலோனின் காலம் முதல் நம்முடைய நாள் வரையாகவும் அதற்கு அப்பாலும் கடவுளுடைய மக்களை பாதிக்குமளவில் இருக்கும் உலக சரித்திரத்தின் முக்கிய அம்சங்களை முன்னறிவித்திருக்கிறது.
நம்முடைய பொது சகாப்தத்திற்கு முன் ஆறாவது நூற்றாண்டில் வாழ்ந்த தீர்க்கதரிசியாகிய தானியேலுக்கு, உலக சரித்திரத்தின் எதிர்காலம் குறித்து சிந்தித்த நான்கு வெவ்வேறு வெளிப்படுத்துதல்கள் கொடுக்கப்பட்டன. இந்தத் தகவல்களை அவன் எங்கிருந்து பெற்றான்? “மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவ”னிடமிருந்து, என்றான் தானியேல். (தானியேல் 2:28) பூர்வ உலக வல்லரசுகள் விட்டுச்சென்றிருக்கும் இடிபாடுகளிலிருந்து உண்மைகளைக் கண்டுபிடிக்கும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பைபிளில் காணப்படும் சரித்திரம் மற்றும் தீர்க்கதரிசனத்தின் உண்மைத்தன்மைக்கு வியப்பூட்டும் ஆதாரங்களைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.
பைபிள் சரித்திரத்தின் இரண்டு மகா உலக வல்லரசுகளாகிய எகிப்தும் அசீரியாவும் தானியேல் வாழ்ந்த நாட்களுக்கு வெகு காலத்துக்கு முன்பு இருந்தவை. தானியேலின் நாட்களில் பாபிலோன் ஆட்சி செய்தது. அதைத் தொடர்ந்து வரும் இரண்டு வல்லரசுகளின் பெயர்களும் தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தப்பட்டது. (தானியேல் 2:47, 48; 8:20, 21) இவற்றை வேறு இரண்டு வல்லரசுகள் பின்தொடரும், இவை நம்மை இக்காலத்தில் கொண்டுவந்து நிறுத்துகின்றன.
எத்தனை வல்லரசுகள்?
பைபிள் பிரகாரம் அதுபோன்று எத்தனை உலக வல்லரசுகள் இருக்கும்? இதற்கான விடை வயதுசென்ற அப்போஸ்தலனாகிய யோவானுக்குக் கொடுக்கப்பட்டது. இது காலத்தின் ஓட்டத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை எடுத்துக்காண்பிக்கிறது. தேவதூதரில் ஒருவன் யோவானிடம் பின்வருமாறு சொன்னான்: “அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை.”—வெளிப்படுத்துதல் 17:10.
யோவானின் நாளில் ஏற்கெனவே வந்துபோன அந்த ஐந்து உலக வல்லரசுகள் யாவை? எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய பெர்சியா, கிரீஸ். இன்னும் இருந்தது எது? ரோம். “இன்னும் வரவில்லை,” என்று குறிப்பிடப்பட்டது எது? நம்முடைய நாளிலிருக்கும் ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு. இவைதான் அக்காலத்திலும் இக்காலத்திலும் வாழும் கடவுளுடைய மக்கள் அடிப்படையில் அக்கறையாக இருக்கும் வல்லரசுகள்.
ஒரு முக்கியமான உண்மை யாதெனில்: ஒன்றையொன்று பின்தொடரும் வல்லரசுகள் ஏழு உலக வல்லரசுகளாக மட்டுமே இருக்கும். ஏழாவது வல்லரசின் எஞ்சியவற்றாலான எட்டாவது உலக வல்லரசு, அந்த ஏழாவது வல்லரசு இருக்கும் நாட்களில் ஒரு குறுகிய காலத்துக்கு இருக்கும் என்பது முன்னறிவிக்கப்பட்டது. (வெளிப்படுத்துதல் 17:10, 11) மனிதனால் ஆளப்படும் மகா உலக வல்லரசுகளின் கடைசி வல்லரசு இருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது.
வெகு விரைவில், இந்த உலக வல்லரசுகள் தங்களுடைய நாட்களை முடித்துவிட்டிருக்கும். இந்த மனித ஒழுங்குமுறைகள் நொறுக்கப்பட்டு ‘காற்றால் அடித்துக்கொண்டுபோகப்படும்.’ (தானியேல் 2:35) அவற்றின் இடத்தில் வரப்போவது என்ன? அதிக மேன்மையான ஒன்று! தானியேல் பின்வருமாறு அறிக்கை செய்கிறான்: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார். . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) எனவே இந்த மனித உலக வல்லரசுகளுக்குப் பின்பு கடவுளுடைய ராஜ்யத்திற்குக் குறைவான எதுவும் அவற்றின் இடத்தை எடுக்காது. உலக ஆட்சியில் என்னே ஒரு மகத்தான முன்னேற்றம்!
உலக வல்லரசுகளைக் குறித்து நீங்கள் சற்று அறிந்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவற்றின் பழக்கவழக்கங்கள், மதம் மற்றும் கடவுளுடைய மக்களுடனும் பைபிள் தீர்க்கதரிசனத்துடனும் அவர்களுக்கிருந்த தொடர்பு பற்றிய கூடுதலான அறிவு, வேதவசனங்களின் வெளிச்சத்தில் மனிதனுடைய சரித்திரம் குறித்து அதிகமாக அறிந்துகொள்ள உங்களுக்கு உதவுமா?
ஆம், நிச்சயமாக. உலக வல்லரசுகள் குறித்து சிந்திக்கும் எட்டு தொடர்ச்சியான கட்டுரைகளை இந்த வெளியீடு முதல் பிரசுரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பைபிளில் விவரிக்கப்பட்டிருக்கும் சரித்திரம் நம்பத்தகுந்தது என்பதை இக்கட்டுரைகள் உங்களுக்கு மெய்ப்பித்துக்காட்டும். பைபிள் தீர்க்கதரிசனங்கள் சத்தியமும் உண்மையுமானவை என்ற உண்மையில் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தும்! (w88 2⁄1)