யெகோவாவின் நாள் சமீபித்திருக்கிறது
1 கிறிஸ்தவர்கள் யெகோவாவின் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள்; ஏனென்றால் அந்நாளில் அவர் தற்போதைய பொல்லாத உலகை அழித்துவிட்டு, நீதி குடியிருக்கும் புதிய உலகிற்கு அவர்களை வழிநடத்துவார். (2 பே. 3:12, 13) அந்த நாள் எப்போது வருமென திட்டவட்டமாக அறியாதிருப்பதால் நாம் எப்போதும் விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும், மற்றவர்களும் விழிப்புள்ளவர்களாக இருக்க உதவ வேண்டும். (எசே. 33:7-9; மத். 24:42-44) ‘யெகோவாவுடைய பெரிய நாள் சமீபித்திருக்கிறது’ என்பதில் நம் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்த, கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தையை நாம் தியானிக்க வேண்டும்.—செப். 1:14.
2 உலக வல்லரசுகளின் எழுச்சி: ‘ஏழு ராஜாக்களைப்’ பற்றி வெளிப்படுத்துதல் 17:9-11-ல் அப்போஸ்தலன் யோவான் குறிப்பிடுகிறார்; இவர்கள் அடுத்தடுத்து வரும் ஏழு உலக வல்லரசுகளைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். ‘எட்டாவது’ ராஜாவைப் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார்; அது இன்றுள்ள ஐக்கிய நாட்டு சங்கத்தைக் குறிக்கிறது. இதற்குப் பிறகு இன்னும் உலக வல்லரசுகள் வருமென நாம் எதிர்பார்க்க வேண்டுமா? வேண்டியதில்லை, ஏனெனில் அந்த எட்டாவது ராஜா ‘நாசமடையப் போகிறான்’ என்று அந்தத் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது. அதேசமயத்தில் அதற்குப் பிறகு பூமியிலிருந்து வேறு ராஜாக்கள் எழும்பப் போவதாக அது குறிப்பிடவில்லை. கால ஓட்டத்தில் நாம் எங்கிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள இந்தத் தீர்க்கதரிசனம் நமக்கு உதவுகிறது, அல்லவா?
3 யெகோவாவின் நாள் வருவதைப் பற்றிப் புரிந்துகொள்ள தானியேல் 2:31-45 நமக்கு உதவுகிறது. அந்தத் தீர்க்கதரிசனத்தின்படி, நேபுகாத்நேச்சார் கனவில் கண்ட மாபெரும் சிலை அடுத்தடுத்து வரும் உலக வல்லரசுகளைக் குறிக்கிறது. இந்த வல்லரசுகள் அனைத்தும் ஏற்கெனவே வந்து போய்விட்டன. அப்படியானால் சரித்திரத்தில் இன்று எந்த வல்லரசின் ஆட்சிக் காலத்தில் நாம் வாழ்கிறோம்? அந்தச் சிலையின் பாதத்தை அடையாளம் காட்டும் வல்லரசின் ஆட்சிக் காலத்தில் வாழ்கிறோம். அடுத்து என்ன சம்பவிக்கும் என்பதை அந்தத் தீர்க்கதரிசனம் தெள்ளத் தெளிவாக விவரிக்கிறது. மனித ஆட்சி முற்றிலும் அழிக்கப்பட்டு, ‘என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யம்’ ஸ்தாபிக்கப்படும். யெகோவாவின் நாள் சமீபித்திருப்பதை இது காட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா?
4 கூடுதல் அத்தாட்சி: யெகோவாவின் நாள் சமீபித்திருப்பதற்கான கூடுதல் அத்தாட்சியை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். “கடைசி நாட்களில்” வாழும் ஜனங்களின் சுபாவத்தைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் முன்னறிவித்தவை நிறைவேறுவதைப் பார்க்கிறோம். (2 தீ. 3:1-5) முடிவு வருவதற்கு முன் நடந்தேற வேண்டிய உலகளாவிய சாட்சி கொடுக்கும் வேலையில் நாம் பங்குகொள்கிறோம். (மத். 24:14) ஆக, “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது” என அறிவிக்கிற தேவதூதனின் அவசரவுணர்வையே அந்த வேலையில் எப்போதும் வெளிக்காட்டுவோமாக.—வெளி. 14:6, 7.