பூர்வீக எகிப்து மகா உலக வல்லரசுகளில் முதலாவதானது
எகிப்து—பூர்வீக பார்வோன்களின் தேசம் மற்றும் நைல் நதியின் தேசம்—உலகின் மிகச்சிறந்த நாகரீகங்களில் ஒன்று. அதன் கலை அரும்பெரும் அருங்காட்சியகங்களை அலங்கரிக்கின்றன. அதன் சரித்திரம் பள்ளிப் பாட புத்தகங்களில் விவரிக்கப்படுகின்றன. அதன் பிரமாண்டமான நினைவுச்சின்னங்கள் சுற்றுலா பயணிகளை பிரமிக்கவைக்கின்றன. மேலும், அநேக பைபிள் சம்பவங்கள் இந்தத் தேசத்தில் சம்பவித்த அல்லது உட்படுத்திய சம்பவங்களாயிருந்தன. எகிப்தும் அதன் மக்களும் பைபிளில் 700 முறைகள் குறிப்பிடப்படுகிறார்கள்.
என்றபோதிலும், பூர்வீக எகிப்தைக் குறித்து உங்களுக்கு உண்மையில் என்ன தெரியும்? அதைக் குறித்து அதிகமாகக் கற்றுக்கொள்வது பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் அநேக காரியங்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவியாயிருக்கும்.
பைபிள் பதிவுகளுக்கு இசைவாக இருக்கும் அநேக காரியங்களைத் தொல்பொருளாராய்ச்சியாளர்கள் எகிப்தில் கண்டுபிடித்திருக்கின்றனர். உதாரணமாக, யோசேப்பைப் பற்றிய விவரப்பதிவைக் கவனியுங்கள். பெயர்கள், பட்டங்கள், வீட்டு மேலாளனாக யோசேப்பு வகித்த பதவி, தேசத்தில் பார்வோனுக்கு அடுத்த அதிகாரியாகவும் உணவு நிர்வாகியாகவும் அவன் வகித்த பதவி, எகிப்திய சவ அடக்க முறைகள், அப்பம் தயாரிப்பவர்கள் அப்பங்களைக் கூடையில் வைத்து தலையில் சுமந்து செல்லும் பழக்கம்—இந்த எல்லா காரியங்களும் அக்காலத்து எகிப்திய பழக்கவழக்கங்களுக்கு ஒத்திருப்பது கவனிக்கப்பட்டிருக்கிறது.—ஆதியாகமம், அதிகாரங்கள் 39–47; 50:1–3.
அந்தத் தேசமும் அதன் மக்களும்
எகிப்து நைல் நதியைச் சார்ந்திருக்கிறது. ஆஸ்வான் முதல் கெய்ரோ வரை சராசரியாக 12 மைல்கள் மட்டுமே அகன்றிருக்கும் இந்த நதியின் செழிப்பான பள்ளத்தாக்குகள் வடக்கு நோக்கி ஆப்பிரிக்க பாலைவனத்தின் குறுக்கே ஒரு குறுகிய பச்சை நாடா போன்று அமைந்திருக்கிறது. கடந்த காலங்களில், ஆண்டுதோறும் ஏற்படும் அதன் வெள்ளப்பெருக்குகள் மண்ணுக்கு வளமூட்டும் வண்டல்மண்ணை சேர்த்தளித்ததுதானே எகிப்தை உணவு தானியம் ஏற்றுமதி செய்யும் நாடாகவும், பஞ்சத்தின் காலத்தில் அடைக்கலம் கொடுக்கும் நாடாகவும் ஆக்கியது. (ஆதியாகமம் 12:10) நதியோரமாக வளர்ந்த பாப்பிரஸ் என்னும் நாணற்புல் ஆரம்பகால தாள்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டன.
நைல் தண்ணீர் நீலவண்ண மத்தியதரைக் கடலில் கலக்கும் அந்தக் கழிமுகப் பகுதி கீழ் எகிப்து என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் இஸ்ரவேலர் எகிப்தில் இடைத்தங்கிய “கோசேன் நாடு” இருந்தது.—ஆதியாகமம் 47:27.
எகிப்திய மதம்
பார்வோன் ஒரு கடவுள் என்பதாக பூர்வீக எகிப்தியர் நம்பினர். இந்த உண்மை, “அவர் சொல்லுக்கு நான் கீழ்ப்படிய, யெகோவா யார்?” என்று பார்வோன் மோசேயை ஆணவத்துடன் கேட்ட கேள்விக்கு அர்த்தத்தைக் கூட்டுகிறது. (யாத்திராகமம் 5:2, NW) எகிப்தியர் வேறு அநேக தெய்வங்களையுங் கொண்டிருந்தனர். ஏறக்குறைய 740 தெய்வங்களின் பெயர்கள் துட்மோஸ் III அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பட்டியலில் காணப்பட்டது. எகிப்தியர் திரியேக தெய்வங்களை அல்லது திரித்துவங்களை வணங்கிவந்தனர்; இவற்றில் ஆர்ஸிஸ், இஸிஸ், ஹோரஸ் பிரபலமாயிருந்த திரித்துவமாகும்.
எகிப்தின் பிரபல தெய்வங்களில் பல மனித உடல்களும் விலங்குகளின் தலைகளும் கொண்டவையாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஹோரஸ் வல்லூறு பறவையின் தலை கொண்டதும், தாத் தெய்வம் குரங்கு தலை கொண்டதுமாக சித்தரிக்கப்படுகிறது. பூனை, நரி, முதலை, குரங்கு மற்றும் பல வகை பறவைகள் சில தெய்வங்களுடன் சம்பந்தமுடையவையாயிருந்ததால் புனிதமாகக் கருதப்பட்டன. ஏப்பிஸ் காளை ஆர்ஸிஸ் தெய்வத்தின் அவதாரமாகக் கருதப்பட்டதால், மம்ஃபிஸிலுள்ள ஓர் ஆலயத்தில் வைக்கப்பட்டதுமட்டுமின்றி, பெரிய அளவில் சவ அடக்கம் செய்யப்பட்டு, அதன் சடலம் பதனீடு செய்யப்பட்டது. சிறப்பாகக் கருதப்பட்ட எகிப்திய வண்டுகளில் சாண வண்டு படைப்புத் தெய்வத்தின் ஓர் அவதாரமாக நம்பப்பட்டு அவை தாயத்து மணிகளாக அணிந்துகொள்ளப்பட்டன.
எகிப்தில் அதிக காலம் தங்கின போதிலும், அந்தத் தேச மக்களுடன் நெருங்கி பழகின போதிலும், இஸ்ரவேலர் ஒரே ஒரு கடவுளை வணங்கினர். அவர்தான் யெகோவா, அவரை மட்டுமே சேவிக்க வேண்டும். அவர்கள் எந்த ஒரு மத உருவத்தையும்—கடவுளுடைய உருவத்தையோ, அல்லது ஒரு பறவையின், மிருகத்தின், மீனின் அல்லது எந்த ஒன்றின் உருவத்தையும் உண்டாக்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டனர். அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டுவந்து சில காலத்திற்குள் பொற் கன்றுகுட்டியை வணங்கின காரியம் எகிப்திய செல்வாக்கின் விளைவாக இருந்திருக்கக்கூடும்.—யாத்திராகமம் 32:1–28; உபாகமம் 4:15–20.
ஆத்துமா அழியாமையில் நம்பிக்கை
எகிப்தியர் ஆத்துமா அழியாமையில் பலமான நம்பிக்கையுடையவர்கள். எனவே, எகிப்திய அரசர்கள் மாபெரும் கல்லறைகளைக் கட்டினர்; மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை பெறும் நம்பிக்கையில் அந்தக் கல்லறைகளில் வாழ்க்கைக்குத் தேவையான காரியங்களும் உயர்ந்த இன்பவாழ்க்கைக்குரிய வசதிகளும் அந்தக் கல்லறைகளில் வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் கட்டின பிரமிட்கள் அல்லது கூர்கோபுரங்கள் இந்தப் பழக்கத்திற்கு மிகவும் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாக அமைகின்றன.
பொன்னாபரணங்கள், உடை, மேசை நாற்காலி போன்ற தட்டுமுட்டு சாமான்கள், திராட்சரசம், உணவு, மண்கலங்கள், தந்தப் பெட்டிகள் மற்றும் கண்களில் மை இட்டுக்கொள்ள மை அரைக்கும் கற்கள் போன்றவை எகிப்திய கல்லறைகளில் கவனமாக வைக்கப்பட்டன. மரணத்துக்குப் பின்னான ஒரு வாழ்க்கையின்போது இந்தப் பொருட்கள் பயன்படும் என்று நம்பப்பட்டது. ஆரம்ப காலங்களில் அடிமைகளும் கொல்லப்பட்டு, தங்களுடைய எஜமானருடன்கூட அடக்கம் செய்யப்பட்டனர், மரணத்துக்குப் பின்னர் அவர்களுக்குச் சேவை செய்வதற்காக அப்படிச் செய்யப்பட்டது. ஓதுவதற்கான மந்திர வாய்ப்பாடுகள் நிரம்பிய “மரித்தோரின் புத்தகம்” என்ற ஒரு தொகுப்பு நூல் ஆயிரக்கணக்கான எகிப்திய சவப்பெட்டிகளில் காணப்பட்டது. மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையின் பல்வேறு துன்பங்களை மேற்கொள்ள மரித்த நபருக்கு இந்த வாய்ப்பாடுகள் உதவும் என்று நம்பப்பட்டது.
இஸ்ரவேலரின் கருத்து எவ்வளவு வித்தியாசமாய் இருந்தது! பைபிள் பின்னால் குறிப்பிடுவதுபோல, “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஒரு மனிதன் மரிக்கும் போது, “அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.”a எதிர்காலத்துக்கான அவர்களுடைய நம்பிக்கை உயிர்த்தெழுதலாக இருந்தது.—பிரசங்கி 9:5, 10; சங்கீதம் 146:4; யோபு 14:13–15.
யார் எப்பொழுது வாழ்ந்தது?
எகிப்திய பழமை ஆய்வுநூல், எகிப்திய அரசர்களில் 31 “அரசர்குலத்தை” அடையாளங்காட்டுவதோடு, பழைய இராஜ்யம் (3–6 அரசர்குலங்கள்), இடை இராஜ்யம் (11, 12 அரசர்குலங்கள்), புதிய இராஜ்யம் (18–20 அரசர்குலங்கள்) குறித்துப் பேசுகிறது. ஆனால் இந்த முறையில் அடையாளங் காண்பது திருத்தமாயிராது. அது கேள்விக்குரியதும் அரைகுறையான எழுத்துக்களையும் உட்படுத்துகிறது, மற்றும் ஒருவர் பின்னால் ஒருவர் ஆளுவதற்கு மாறாக ஒரே சமயத்தில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அரசர்கள் ஆண்டுவந்திருக்கக்கூடும்.b
மோசே பைபிளின் முதல் புத்தகங்களை எழுத ஆரம்பித்த போது, எகிப்தியருடைய வழக்கத்தின்படி அவர்களுடைய அரசனைக் குறிப்பிடும் போது அவனுடைய சொந்த பெயர் சொல்லிக் குறிப்பிடாமல் “பார்வோன்” என்று குறிப்பிடும் முறையைப் பின்பற்றினான். எனவே, ஆபிரகாமும் யோசேப்பும் அறிந்திருந்த அல்லது இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறிய சமயத்தில் ஆட்சி செய்த பார்வோன்களின் பெயர்களை நாம் அறியோம். என்றபோதிலும், “பார்வோன்” என்ற இந்தப் பட்டம் அரசனின் சொந்தப் பெயருடன் இணைக்கப்பட்டது. இது பைபிள் சம்பவங்களை எகிப்திய அரசனின் பட்டியலுடன் இணைத்துப் பார்ப்பதைக் கூடிய காரியமாக்கிற்று. இதோ, பைபிள் மாணாக்கனுக்குக் குறிப்பாக அக்கறைக்குரிய சில பார்வோன்கள் இருந்தார்கள்:
அக்ஹநேட்டன் (18-வது அரசகுலத்தைச் சேர்ந்தவன்) ஏட்டன் என்ற சூரியவட்டத்தை பயபக்தியுடன் வணங்கியவன். 1887-ல் கெய்ரோவுக்குத் தெற்கே சுமார் 200 மைல் தூரத்திலிருந்த டெல் எல்-அமர்னாவில் 377 களிமண் ஏடுகள் கண்டெடுக்கப்பட்டன. அக்கறைக்குரிய இந்தக் களிமண் ஏடுகள், அக்ஹநேட்டானும் அவனுடைய தகப்பனாகிய அமென்ஹாடெப் III-ம் பெற்றுக்கொண்ட அரசு கடிதங்களாகும். அவற்றில் எருசலேம், மெகிதோ, ஆத்சோர், சீகேம், லாகீஸ், எபிரோன், காசா ஆகிய பட்டணங்களிலிருந்தும், பலஸ்தீனாவின் மற்ற பட்டணங்களிலிருந்தும் வந்த கடிதங்கள் உட்பட்டிருந்தன. ஒருவேளை இஸ்ரவேல் கானான் தேசத்துக்குள் பிரவேசிப்பதற்கு சற்று முன்பு எழுதப்பட்டவையாக இருக்கக்கூடிய இக்கடிதங்கள் ஓயாச் சண்டைகளையும் கிளர்ச்சிகளையும் வெளிப்படுத்துகின்றன. யோசுவா என்ற பைபிள் புத்தகம் காண்பிப்பது போல் ஒவ்வொரு தேசமும் தன்னுடைய சொந்த அரசனைக் கொண்டிருந்தது என்றும் அவை காண்பிக்கின்றன.
டுட்டான்க்ஹமன், அக்ஹநேட்டனின் மருமகன், “டுட் அரசன்” என்று அழைக்கப்பட்டான். அவனுடைய மிகச்சிறந்த பொற் கல்லறையின் திரைகளும் விரிப்புகளும் புதைப்பொருளாராய்ச்சியாளரால் தோண்டியெடுக்கப்பட்டன, இவை பல்வேறு அருங்காட்சிசாலைகளில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பொருட்கள் பார்வோனின் ஐசுவரியத்துக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகின்றன. இதுபோன்ற ஐசுவரியத்தைத்தான் மோசே “பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டான்.”—எபிரெயர் 11:24, 25.
மெர்நெப்டா “19-வது அரசகுலத்தைச்” சேர்ந்தவன். தேபேஸ் இருக்கும் ஓர் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு வெற்றிச் சின்னத்தில் “இஸ்ரவேல் வெறுமையாயிருக்கிறது, தன்னுடைய வித்து அவ்விதம் இல்லை,” என்று இந்தப் பார்வோன் பதிவு செய்திருந்தான். இதுவரை கிடைத்திருக்கும் பூர்வ எகிப்திய பதிவுகளில் ஒரு ஜனமாக இஸ்ரவேலைப் பற்றிய ஒரே நேரடியான குறிப்பு இதுதான். இது வெறும் ஒரு வீம்புரையாக இருக்க, இக்காரியம் கானான் இஸ்ரவேலால் ஏற்கெனவே வெற்றிகொள்ளப்பட்டுவிட்டது என்பதைக் காட்டுவதாயிருக்கிறது. இப்படியாக, பொ.ச.மு.1473-ன் வெற்றி அக்ஹநேட்டன் டெல் எல்-அமர்னாவின் கடிதங்களைப் பெற்றதற்கும் மெர்நெப்டாவின் நாட்களுக்கும் இடையில் கிடைத்திருக்கவேண்டும்.
சீஷாக் (செஷான்க் I, “22-வது அரசகுலம்”) பைபிளில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் முதல் பார்வோன். ரதங்களைக் கொண்ட ஒரு பலமான சேனையைக் கொண்டு அவன் யூதாவை தாக்கினான், எருசலேமை அச்சுறுத்தினான், மற்றும் “யெகோவாவின் ஆலயப்பொக்கிஷங்களையும், ராஜ அரமனைப் பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டான், எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டான்.” (2 நாளாகமம் 12:9) இந்தச் சம்பவம் கர்னாக்கிலுள்ள (பூர்வ தேபேஸ்) ஆமோன் ஆலயத்தின் தெற்கு சுவர்களிலுள்ள படைப்பியல் செதுக்கோவியத்தால் உறுதிசெய்யப்படுகிறது. அது 156 விலங்கிடப்பட்ட கைதிகளைச் சித்தரித்துள்ளது; ஒவ்வொன்றும் மெகிதோ, சூநேம் மற்றும் கிபியோன் உட்பட கைப்பற்றப்பட்ட ஒவ்வொரு பட்டணத்தையும் அல்லது கிராமத்தையும் குறிப்பிடுகின்றன. கைப்பற்றப்பட்ட இடங்களின் பட்டியலில் சீஷாக் “ஆபிராமின் நிலத்தையும்” குறிப்பிடுகிறான்—இது எகிப்திய பதிவுகளில் ஆபிரகாமைக் குறித்த முதல் குறிப்பாக இருக்கிறது.
மற்ற உலக வல்லரசுகள் எழும்புகின்றன
எகிப்தின் இடத்தில் அசீரியா ஒரு பலமான உலக வல்லரசானது. ஆனால் அவள் ஆற்றல்மிகுந்த ஓர் அரசியல் சக்தியாக நிரூபித்தாள். பத்து கோத்திர இஸ்ரவேல் ராஜ்யத்தின் கடைசி அரசனாகிய ஓசெயா எகிப்தின் அரசனாகிய சோ என்பவனுடன் கூட்டு சேர்ந்து அசீரியாவின் நுகத்தை அப்புறப்படுத்த சதிசெய்தான், ஆனால் வெற்றிபெறவில்லை. (2 இராஜாக்கள் 17:3, 4) பல வருடங்களுக்குப் பின்பு, யூதாவின் அரசனாகிய எசேக்கியாவின் காலத்தில், எத்தியோப்பியாவின் அரசன் தீராக்கா (அநேகமாய் எகிப்தை ஆண்ட எத்தியோப்பிய அரசன், பார்வோன் தாஹார்கா) கானானுக்குள் சென்று, அசீரிய அரசனாகிய சனகெரிபின் தாக்குதலைத் தற்காலிகமாக திருப்பினான். (2 இராஜாக்கள் 19:8–10) அசீரியாவில் காணப்பட்ட சனகெரிபின் சொந்த எழுத்துக்கள்தாமே இப்படியாக இதனைக் குறிப்பிடுகிறது: “எத்தியோப்பியா அரசனின் ரத ஓட்டிகளை உயிரோடு கைதிகளாக்கினேன்.”—சனகெரிப்பின் ஓரியன்டல் இன்ஸ்டிடியுட் பிரிஸிம், சிக்காகோ பல்கலைக்கழகம்.
எகிப்து “கடினமான அதிபதியின் கையில்” ஒப்புக்கொடுக்கப்படும், “கடூரமான” ராஜா எகிப்தியரை ஆளுவான் என்று யெகோவாவின் தீர்க்கதரிசியாகிய ஏசாயா முன்னுரைத்தான். (ஏசாயா 19:4) இந்தத் தீர்க்கதரிசனத்தின் உண்மைத்தன்மை ஓர் அசீரிய ஆவணத்தால் உறுதிபடுத்தப்படுகிறது, இதில் சனகெரிபின் மகன் ஈசார்-ஹாடன் எகிப்தை வெற்றிகொண்டதன் பேரில் பின்வரும் வார்த்தைகளில் பெருமைப்பாராட்டுகிறான்: “அதன் அரசன் தீராக்காவை நான் அம்புமுனையில் ஐந்து முறை புண்படுத்தினேன், அவனுடைய முழு தேசத்தையும் ஆளுகை செய்தேன்.”
பொ.ச.மு. 629-ல் பின்தொடரும் பாபிலோன் சேனைகளைத் தடுப்பதற்காக பார்வோன் நெக்கோ வடக்கு நோக்கிச் சென்றான். எருசலேமை ஆண்டுவந்த யோசியா அரசன் ஞானமற்றவனாக எகிப்திய சேனையை மெகிதோவில் தடுத்து நிறுத்த முயன்றபோது, மேற்கொள்ளப்பட்டு கொலைசெய்யப்பட்டான்.c (2 நாளாகமம் 35:20–24) நான்கு வருடங்களுக்குப் பின்பு, பொ.ச.மு. 625-ல், பார்வோன் நெக்கோ தானே கர்கேமிஸில் பாபிலோனியரால் தோற்கடிக்கப்பட்டான். பைபிளும் பாபிலோனிய சரித்திர பதிவேடுகளும் பாபிலோனுக்கு மேற்கு ஆசியாவின்மேல் ஆதிக்கத்தை வழங்கிய இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறது.
பொ.ச.மு. 525-ல் எகிப்து நான்காவது உலக வல்லரசாகிய மேதிய பெர்சியாவின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின், பொ.ச.மு. 332-ல் மகா அலெக்சாந்தர் களத்தில் தோன்றி எகிப்தை ஐந்தாவது உலக வல்லரசாகிய கிரீஸ் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தான். பொ.ச.மு. 280 போல் அலெக்சாந்தர் எகிப்திய நைல் கழிமுக பகுதியில் அலெக்சாந்திரியா என்ற பட்டணத்தைக் கட்டினான். இங்குதான் பைபிள் முதல் முறையாக எபிரெயுவிலிருந்து கிரேக்கு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட ஆரம்பிக்கப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பு செப்டுவஜின்ட் என்று அழைக்கப்பட்டது. இதைத்தான் இயேசுவின் சீஷர்கள் கிரேக்கு பேசும் உலகில் பயன்படுத்தினர்.
ஆறாவது உலக வல்லரசாகிய ரோமின் காலத்தில், இயேசு, பொறாமை கொண்ட ஏரோதின் கைகளிலிருந்து தப்புவிக்கப்படுவதற்காக சிறு பிள்ளையாக எகிப்துக்குக் கொண்டுவரப்பட்டார். (மத்தேயு 2:13–15) பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாளன்று, கிறிஸ்தவ சுவிசேஷ பிரசங்கத்தைக் கேட்பதற்காக எகிப்தியரும் எருசலேமில் கூடியிருந்தனர். சரளமாகப் பேசும் தன்மையுடைய முதல் நூற்றாண்டு அப்பொல்லோ எகிப்திலிருந்து வந்தவன்.—அப்போஸ்தலர் 2:10; 18:24.
ஆம், பைபிள் சரித்திரத்தில் எகிப்தும் எகிப்தியரும் முக்கிய இடம் பெற்றிருக்கின்றனர். இந்தப் பூர்வீக தேசத்தைக் குறித்து பைபிள் குறிப்பிடும் காரியங்களைப் பல தொல்பொருளாராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. ஆம், எகிப்து அவ்வளவு பிரபலமாயிருந்ததால், சில தீர்க்கதரிசனப் பகுதிகளில் அது சாத்தானின் ஆதிக்கத்திலிருக்கும் முழு உலகத்தையும் அடையாளப்படுத்துகிறது. (எசேக்கியேல் 31:2; வெளிப்படுத்துதல் 11:8) ஆனால் பூர்வீக எகிப்து, ஓர் உலக வல்லரசாக பலம் பெற்றிருந்தபோதிலும், யெகோவாவின் நோக்கங்கள் நிறைவேறுவதை நிறுத்த முடியவில்லை. இது பைபிள் சரித்திரத்தின் இரண்டாம் உலக வல்லரசாயிருந்த அசீரியாவின் விஷயத்திலும் உண்மையாயிருந்தது என்பதை நாம் பின்னால் வரும் காவற்கோபுரம் பத்திரிகையில் பார்ப்போம். (w88 2⁄1)
[அடிக்குறிப்புகள்]
a யூத என்ஸைக்ளோபீடியா பின்வருமாறு சொல்லுகிறது: “உடல் அழிந்த பின்பு ஆத்துமா தொடர்ந்து உயிருடனிருக்கிறது என்ற நம்பிக்கை . . . பரிசுத்த வேதாகமத்தில் திட்டவட்டமாக எங்கும் கற்பிக்கப்படுவதில்லை.”
b இந்தப் பட்டியல்கள் சம்பந்தமாக இருக்கும் பிரச்னைகள் குறித்த ஓர் அக்கறைத்தூண்டும் ஆய்வுரைக்கு உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்த பைபிளைப் புரிந்துகொள்வதற்கு துணை (Aid to Bible Understanding) என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கங்கள் 324-5-ஐப் பார்க்கவும்.
c மெகிதோவில் நடந்த தீர்வான யுத்தங்களில் இது ஒன்றாயிருந்ததால், கலகத்தனமான மனித தேசங்களுக்கு எதிராக ஹார்-மகெதோனில் அல்லது அர்மகெதோனில் நடக்கப்போகிற கடவுளுடைய தீர்வான கடைசி யுத்தத்திற்கு அடையாளமாக இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 16:16.
[பக்கம் 28-ன் வரைப்படம்]
(For fully formatted text, see publication)
கர்கேமிஸ்
ஐபிராத்து
மத்தியதரைக்கடல்
மெகிதோ
எருசலேம்
அலெக்சாந்திரியா
கோசேன்
மேம்ஃபிஸ்
கீழ் எகிப்து
நைல்
தேபேஸ்
[படத்திற்கான நன்றி]
Based on a map copyrighted by Pictorial Archive (Near Eastern History) Est. and Survey of Israel
[பக்கம் 29-ன் படம்]
மனித உடலும் வல்லூறு பறவையின் தலையும் கொண்டு சித்தரிக்கப்பட்டிருக்கும் எகிப்திய தெய்வம்
[பக்கம் 30-ன் படம்]
ஓர் எகிப்திய சவப்பெட்டியில் காணப்படும் “மரித்தோரின் புத்தகத்”தின் ஒரு பகுதி
[பக்கம் 31-ன் படம்]
எகிப்தியரின் சவப்பெட்டியும் உடல் பதனம் செய்யப்பட அதற்குரிய மூடியும்
[பக்கம் 32-ன் படம்]
அமர்ந்திருக்கும் ஆமோன் தெய்வத்தின் பக்கத்தில் அரசன் டுட்டான்க்ஹமன்