மதத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 3: பொ.ச.மு. 1942–1513 எகிப்து தெய்வங்களின் போர்க்களம்
“எகிப்துக்கு மேலும் கீழுமாக எல்லாமே மதம்தான்.”—உவில் டூரண்ட், 20-வது நூற்றாண்டு எழுத்தாசிரியரும் சரித்திராசிரியரும்.
எகிப்தில் முதல் குடியேறியவர்கள் நோவாவின் மகன் காமின் சந்ததியினராயிருந்திருக்க வேண்டும், அநேகமாய் காமின் மகனும் நிம்ரோதின் சித்தப்பாவுமாகிய மிஸ்ராயீம் வழியில் இவர்கள் வந்திருக்க வேண்டும். (ஆதியாகமம் 10:6–8) பாபேலில் மொழிகள் தாறுமாறாக்கப்பட்ட பின்பு, கோபுரத்தைக் கட்டுவதில் வெற்றி காணாத அந்த ஆட்கள் ஒரு புதிய ஆரம்பத்தைக் கொண்டிருப்பதற்காகச் சிதறிச் சென்றனர். அப்பொழுது தங்களுடைய பாபிலோனிய மதத்தையும் தங்களோடுகூட எடுத்துச்சென்றனர். சலிப்புற்ற அந்தக் கட்டிடப் பணியாளர்களில் சிலர் எகிப்து என்று பின்னால் அறியப்பட்ட அந்தப் பகுதியில் குடியேறினர்.
நாகரிகக் கதை என்ற நூலில் உவில் டூரண்ட் “சுமேரியா மற்றும் பாபிலோனியாவிலிருந்து வந்த எகிப்திய கலாச்சாரத்தின் சில குறிப்பிட்ட அடிப்படைக் கூறுகளைக்” குறித்து பேசுகிறார். இப்படியாக, பாபிலோனிய மதம் எகிப்தில் ஆழ்ந்ததோர் குறியை ஏற்படுத்தியது. மதம் எகிப்திய வாழ்க்கையில் ஒரு பிரதான அம்சத்தைக் கொண்டிருக்கலாயிற்று. தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா சொல்லுகிறது: “எகிப்திய மதத்தைப் புரிந்துகொள்ளாமல் எகிப்திய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளுதல் கூடாதளவுக்குக் கலாச்சார மற்றும் சமுதாய வாழ்க்கை மத கருத்துக்களால் ஊடுருவியதாயிருக்கிறது.”
பொருத்தமற்றது, முரண்பாடானது
எகிப்தின் மதம் பல தெய்வ வணக்கத்தைக் கொண்டது. 500-க்கும் அதிகமான தெய்வங்களால் குறிக்கப்படுகிறது. “பொதுவாக எகிப்து முழுவதும் ஒரு பட்டணத்தின் அல்லது நகரின் தெய்வக்கூட்டு மூன்றாக இருந்தது,” என்று எகிப்திய பழமை ஆய்வாளர் E.A. வாலிஸ் பட்ஜ் கூறுகிறார். காலப்போக்கில் அடிப்படையாக ஒரு திரித்துவம் உருவானது, ஆஸிரிஸ், தந்தை; இஸிஸ், தாய்; ஹோரஸ், பிள்ளை உள்ளடங்கிய ஒரு புனித குடும்பம்.
பல தெய்வங்கள் ‘அந்த ஒரே கடவுள்’ என்ற உரிமைப்பாராட்டலுக்கு பல தெய்வ வணக்கம் வழிவகுத்தது. ஆனால் ஆசாரியர்களும், இறைமையியலரும் ஒரு கடவுள், அதே சமயத்தில் அந்தக் கடவுள் பல உருவில் இருப்பதாக நம்புவதைக் கடினமாகக் காணவில்லை. “எகிப்திய மதத்திற்குரிய தன்மையில் ஒன்றாகிய அந்தப் பொருந்தா தன்மைக்கு இது இன்னொரு உதாரணமே,” என்று ஆசிரியர் B. மெர்ட்ஸ் கூறுகிறார்.
தெய்வங்களின் தன்மைகளையும் தெய்வங்களையும்கூட பிரதிநிதித்துவம் செய்ய பெரும்பாலும் விலங்கினங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இந்த விலங்குகள் வெறும் அடையாளங்களாக இருப்பதைவிட அதிகத்தைக் குறித்தன, பக்திக்குத் தகுதியானவையாகக் கருதப்பட்டன, “ஏனென்றால் அவை நல்ல மற்றும் தீய தெய்வீக சக்திகளின் மையப்புள்ளியாக இருந்தன” என்று குறிப்பிடுகிறார் ஃபிரெஞ்சு ஆசிரியர் ஃபெர்னான்ட் ஹாசன். இப்படியாக, ஒரு ரோம குடிமகன் ஒரு பூனையைக் கொன்றதற்காக தண்டிக்கப்பட்டதைப் பற்றிய அறிக்கையும், எகிப்திய கல்லறைகளில் பதனீடுசெய்யப்பட்ட நாய்கள், பூனைகள், முதலைகள், பெருங்கழுகுகள், மற்றும் எருதுகள் ஆகியவை காணப்பட்டதும் ஆச்சரியத்துக்குரியதன்று.
மத சடங்காச்சாரங்கள், புரியாச் சமயக் கோட்பாடுகள், மாய மந்திர பழக்கங்கள் ஆகியவை எகிப்திய மதத்தில் பதிந்துவிட்டிருந்தன. அதுபோன்றுதானே, ஜீவ சின்னம், கைப்பிடி கொண்ட சிலுவை போன்ற மத விக்கிரகங்களின் உபயோகமும் இருந்தன. இவற்றிற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்றால், தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது: “தனிப்பட்ட நபரின் விசுவாசம் (அதாவது தனிப்பட்டவரின் பக்தி) அடிப்படை முக்கியத்துவமுடையதாக இருந்ததே இல்லை.” மேலும் அது சொல்வதாவது, விக்கிரகங்களில் “இஸிஸ் குழந்தை ஹோரஸை மடியில் வைத்திருக்கும் விக்கிரகம், ஒருவேளை குழந்தையோடிருக்கும் கன்னி மரியாளுக்கு ஒத்த விக்கிரகம் அதிகக் குறிப்பிடத்தக்கதாயிருந்தது.”
எகிப்தியர்கள் மரணத்துக்குப் பின்னால் உயிர்வாழ்வு குறித்து நம்பினார்கள். அவர்கள் மரித்தவர்களைப் பதனம்பண்ணினர், மரித்த பார்வோன்களின் சரீரங்களை பிரமாண்டமான கூர்ங்கோபுரங்களில் பாதுகாத்தனர். பூர்வீகக் கல்லறைகள் “அழகு சாதனங்கள், மணிகள், மற்றும் ஒரு சமயத்தில் உணவும் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்த மண் கலங்கள் போன்ற வருத்தத்துக்குரிய ஆனால் குறிப்பிடத்தக்க மாயைகளை” அளித்திருக்கின்றன.
அழிவுக்கு வழிநடத்திய பத்து வாதைகள்
பொ.ச.மு. 1728-ல் எகிப்துக்கும் அதன் மதத்துக்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்று சம்பவித்தது. எகிப்தை ஆபிரகாம் என்ற பெயர் கொண்ட ஒரு மனிதன் விஜயம் செய்து சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்பு, ஒரு கடுமையான பஞ்சத்தின் விளைவுகளைத் தப்பித்துக்கொள்ள அவனுடைய சந்ததியார் அப்பிரதேசத்தில் குடியேறினர். (ஆதியாகமம் 12:10; 46:6,7) இஸ்ரவேலர் என்று அறியப்பட்டிருந்த அவர்கள் அங்கு 215 ஆண்டுகள் வாழ்ந்துவந்தனர். இது தெய்வங்களின் ஒரு போருக்கு மேடையை அமைத்தது. ஒரு பக்கத்தில் திரளான எகிப்திய கடவுட்கள், மறு பக்கத்தில் இஸ்ரவேலரின் ஒரே கடவுள் யெகோவா. யெகோவாவை வணங்குவதற்காக இஸ்ரவேலர் எகிப்தைவிட்டுச் செல்ல அனுமதி கேட்டபோது, காரியங்கள் வேகமாக முன்னிலைக்கு வந்தன.
“மகா வீடு” என்பதற்கான வார்த்தையிலிருந்து தோன்றிய ஒரு பட்டமாகிய பார்வோன்,a எகிப்திய அரசன், அவர்களுடைய விண்ணப்பத்தை மறுத்தான். அந்தச் சமயத்தில் யெகோவா தேவன் தம்முடைய மக்களின் சார்பாகத் தம்முடைய வல்லமையை வெளிக்காட்டும் நோக்கத்தை வெளிப்படுத்தினார். (யாத்திராகமம் 7:1–6; 9:13–16) எகிப்தின் மீது தொடர்ந்து பத்து வாதைகளை வருவிப்பதன் மூலம் அவர் அதன் தெய்வங்களை நேருக்கு நேர் சவாலுக்கு அழைப்பவராயிருந்தார்.—யாத்திராகமம் 12:12.
முதல் வாதை எகிப்தின் உயிர்நாடியாயிருந்த நைல் நதியை இரத்தமாக மாற்றி, அதன் மீன்களைக் கொன்றது; இது எகிப்தியர்கள் குடிதண்ணீருக்காக நிலத்தடி நீரைத் தோண்டி எடுக்க வற்புறுத்தியது. (யாத்திராகமம் 7:19–24) ஹாப்பி என்ற நைல் தெய்வத்துக்கு என்னே ஓர் அவமானம்!
தவளை கருவளத்தின் சின்னமாயிருந்தது, எகிப்திய தெய்வங்கள் என்ற நூல் சொல்வதாவது, “தவளை தெய்வமும் தவளை தேவதையும் உலகின் படைப்பில் பிரதானமான பங்கைக் கொண்டிருந்தன.” எனவே தவளைகள் வாதை கருவளத் தெய்வங்களாகிய ஆஸிரிஸ், டாஹ், மற்றும் செபக் ஆகியவற்றைத் தலைகுனியச் செய்ததுபோக, எகிப்திய படைப்புத் தெய்வங்களையும் தாழ்மைப்படுத்தியது.—யாத்திராகமம் 8:1–6.
மந்திரவாதிகளான எகிப்திய ஆசாரியர்கள் முதல் இரண்டு வாதைகளைத் தாங்கள் செய்துகாட்டியது போன்று மூன்றாவது வாதையைச் செய்து காட்ட முடியவில்லை. (யாத்திராகமம் 8:16–18) மந்திரத்தின் கர்த்தா தோத் தன்னுடைய மந்திர சக்தியை இழந்துவிட்டான். மற்றும் கெப், பூமியின் தெய்வம், “பூமியின் புழுதி” சாவு விளைவிக்கிற பேன்களாக மாறுவதைத் தடைசெய்ய முடியவில்லை.
நான்காவது வாதை முதல் கீழ் எகிப்தில் வசித்துவந்த இஸ்ரவேலர் சமுதாயத்தின் பிரதேசமாகிய கோசனுக்கும் எகிப்தின் மற்ற பிரதேசத்துக்கும் இடையே ஒரு தெளிவான வித்தியாசத்தைக் குறித்திடும் வகையில் ஒரு கோடு கிழிக்கப்பட்டது. கோசன் வண்டுகளாலான வாதையால் சற்றும் பாதிக்கப்படாதிருக்க, எகிப்தின் மற்ற பகுதிகள் அழிவுக்குள்ளாயின. (யாத்திராகமம் 8:20–24) காவல் தேவதையாகிய புட்டோ மற்றும் ஹோரஸ் தெய்வம் தாங்கள் பொறுப்பாயிருந்த அந்தப் பிரதேசத்தில்—கீழ் எகிப்தில்—நிகழும் காரியங்களை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஹாத்தார் ஒரு பசு முகத் தேவதை. வான தேவதையாகிய நட் கூட ஒரு பசுவாகச் சித்தரிக்கப்பட்டது. ஐந்தாவது வாதையில் “மிருக ஜீவன்கள் எல்லாம் செத்துப்போனது” அந்த இரண்டு தேவதைகளுக்கும் என்னே ஓர் அவமானம்!—யாத்திராகமம் 9:6.
தோத் தெய்வம் “நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கான சகல மந்திரங்களையும்” அறிந்திருந்ததாகச் சொல்லப்பட்டது. மற்றும் அம்மோன்–ரா “தீய சக்திகளை நீக்கி நோய்களைக் குணப்படுத்தும்” ஒரு மருத்துவர் என்று அந்தத் தெய்வத்துக்குச் சூட்டப்பட்ட புகழ் மாலையின் எழுபதாவது பத்தி கூறுகிறது. ஆனால் இந்த இரண்டு வைத்தியர்களுமே “மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பியதைத்” தடை செய்ய முடியவில்லை. இந்த ஆறாவது வாதை “மந்திரவாதிகள்” மேலும் வருவதைத் தடை செய்ய முடியவில்லை.—யாத்திராகமம் 9:10, 11.
ஷு, ரெஷ்பு மற்றும் டெஃப்நட் தெய்வங்கள் சீதோஷணத்தைக் கட்டுப்படுத்த உதவினர். ஆனால் இன்றைய வானிலை அறிக்கை செய்பவர்களைப் போலவே மனிதரையும் விலங்குகளையும் தாவரங்களையும் “வெளியின் மரங்களையும் முறித்துப்போட்ட” ஏழாவது வாதையாகிய இடியையும் கல்மழையையும் தடை செய்ய முடியவில்லை. (யாத்திராகமம் 9:25) கல்மழை அழிக்கத்தவறியவற்றை எட்டாவது வாதையாகிய வெட்டுக்கிளிகள் நாசப்படுத்தின. (யாத்திராகமம் 10:12–15) இடியையும் மின்னலையும் கட்டுப்படுத்துவதாகச் சொல்லப்படும் தன்னுடைய வலது கையில் இடியைத் தாங்கியிருக்கும் மின் என்னும் அறுவடையின் தெய்வத்துக்கு என்னே ஒரு வீழ்ச்சி! இந்த இரண்டு வாதைகளின்போதும் இரண்டுமே அவனுடைய பிடியிலிருந்து நழுவி விட்டன.
ஒன்பதாவது வாதையாக “எகிப்து தேசமெங்கும் மூன்றுநாள்மட்டும் காரிருள் உண்டாயிற்று.” (யாத்திராகமம் 10:21, 22) சூரிய தெய்வமாகிய ரா, சூரிய தட்டை அணிந்திருந்த ஷெக்மெட் தேவதை, மற்றும் சந்திர தெய்வமாகிய தோத் ஆகியவர்களின் ஒளி சொல்லர்த்தமாகவே அணைக்கப்பட்டது.
எகிப்திய தலைப்பிள்ளைகள் மரணத்துக்கு உட்படுத்தப்பட்டபோது என்னே கூக்குரல்! பார்வோனின் “மகா வீடு” உட்பட “சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை!” (யாத்திராகமம் 12:29, 30) பார்வோன் சூரிய தெய்வமாகிய ராவின் பிறப்பாகக் கருதப்பட்டதால், அவனுடைய தலைப்பிள்ளையின் எதிர்பாராத மரணம் ஒரு தெய்வத்தின் மரணத்துக்கு சமமாக இருந்தது. அரச குடும்பத்தைப் பாதுகாக்கும் பெஸ் தெய்வத்துக்கும் அரசனைத் தற்காக்கும் புட்டோ தெய்வத்துக்கும் என்னே ஒரு தோல்வி!
ஒருமுறை அல்ல, பத்து முறை அவமானப்படுத்தப்பட்டவர்களாய் தாழ்த்தப்பட்டவர்களாய் பழிவாங்க எண்ணி, பார்வோனும் அவனுடைய சேனையும் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்த இஸ்ரவேலரைப் பித்தர்களாய்ப் பின்தொடர்ந்தனர். (யாத்திராகமம் 12:37, 41, 51; 14:8) அவ்வளவாய் அறியப்பட்டிராத நி-மாட்-ரே என்ற பார்வோனைப் புகழும் வண்ணம் அமைந்த ஒரு பூர்வீக கவிதை பெருமையாகப் பேசியது: “அவருடைய நாமத்தில் போர் செய்யுங்கள் . . . கனம்பொருந்தியவரை எதிர்ப்பவனுக்குக் கல்லறை இல்லை, அவனுடைய செத்த உடல் நீரில் எறியப்படும்.” ஆனால் தெய்வீகக் கரங்களில் அழிவை அனுபவித்த பார்வோனைக் குறித்ததில், அவனுடைய செத்த உடல்தானே நீரில் இடம்கண்டது. “பூமியில் ஹோரஸ் தெய்வத்தின் அவதாரமும், சூரிய தெய்வமாகிய ரெ [ரா] தெய்வத்தின் மகன் ஏட்டம் அரசனின் சுதந்தரவாளியுமாகிய பார்வோன்,” என்று ஒரு விளக்க நூல் குறிப்பிடுகிற அவன், இஸ்ரவேலரின் உன்னதருக்கு எதிராகக் கலகஞ்செய்த அவன், அவருடைய கரங்களினாலே சிவந்த சமுத்திரத்தில் அழிவைக் கண்டான்.—யாத்திராகமம் 14:19–28; சங்கீதம் 136:15.
இது உண்மையிலேயே சம்பவித்ததா?
குறிப்பிடத்தக்க காரியம், தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா யாத்திராகமம் பதிவு “பழங்கதைக் கூறுகளைக்” கொண்டிருக்கின்றன என்று உரிமைப்பாராட்டினாலும், “அந்தப் பழங்கதைகளுக்குப் பின்னால் ஒரு பலமான உண்மைக்கரு இருக்கிறது என்று இன்றைய அறிஞர்கள் நம்புகிறவர்களாயிருக்கின்றனர்” என்பதை ஒப்புக்கொள்ளுகிறது. அரசர்களின் பட்டியலிலிருந்து எகிப்திய அரசர்குலத்தைக் கணக்கிடுவது கடினமாயிருக்கிறது என்பதைக் குறிப்பிடும் பிரிட்டானிக்கா பின்வருமாறு கூறுகிறது: “சரித்திர பதிவுகளாக இந்தப் பட்டியல்களின் பலவீனம் யாதெனில், கனத்துக்குரிய அரசர்களின் பெயர்களை மட்டுமே இவை கொண்டிருக்கின்றன; அநேக அடக்கமான மற்றும் அவ்வளவாய்ப் புகழ்பெறாத அரசர்கள் முற்றிலும் அசட்டைசெய்யப்பட்டிருக்கின்றனர்—பதிவிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றனர்.”
இப்படிப்பட்ட திருத்தமாயிராத சரித்திரப் பதிவுகளையும் உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதையும் கவனிக்குமிடத்து, எகிப்துக்கும் அவளுடைய பொய்த் தெய்வங்களுக்கும் ஏற்பட்ட இந்தப் பேரழிவுகொண்ட தோல்வியும் “அகற்றப்பட்டிருக்கிறது” என்பது ஆச்சரியமாயிருக்கிறதா? சரித்திரத்தைப் பதிவுசெய்தவர்கள் மத ஆசாரியர்களுடைய பாதுகாப்பின் கீழ் அப்படிச்செய்தனர் என்பதை நாம் மனதிற் கொள்ளும்போது இது தெளிவாகத் தெரிகிறது, ஏனென்றால் அவர்களுடைய பிரதான அக்கறை தங்களுடைய நிலையைக் காத்துக்கொள்வதும், தங்களுடைய தெய்வங்களின் மகிமையை மேன்மைப்படுத்துவதுமாக இருந்தது.
அந்தப் பூர்வீக சம்பவங்களைக் கவனிக்குமிடத்து, எகிப்திய மதத்திற்கு இணையான தற்கால மதப் பகுதிகளை மேன்மைப்படுத்துகிறவர்களுக்கு எதிர்காலம் நன்மையாக அமையப்போவதில்லை. உண்மையான மதத்தைக் கடைப்பிடித்தவர்கள் மட்டுமே—இஸ்ரவேலரும் அவர்களுடைய எகிப்திய தோழர்களில் பலரும்—தெய்வங்களுக்கிடையிலான யுத்தத்தில் தப்பிப்பிழைத்தனர். அவர்களுக்கு, “மற்றவர்களைப் போலில்லாது, பிரித்தெடுக்கப்பட்ட தேசத்துக்கு” மகத்தான காரியங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதைக் குறித்து இந்தத் தொடர் கட்டுரைகளின் நான்காவது பகுதியில் வாசியுங்கள். (g89 2/8)
[அடிக்குறிப்புகள்]
a இந்தச் சமயத்தில் எந்தப் பார்வோன் ஆண்டான் என்பதை உறுதியாகக் குறிப்பிட முடியாது. இவர்களில் துட்மோஸ் III, அமென்ஹாட்டெப் II, அல்லது ராம்ஸீஸ் II ஆகியவர்கள் இருக்கக்கூடும் என்று எகிப்திய பழமை ஆய்வுநூலர் குறிப்பிடுகின்றனர்.
[பக்கம் 13-ன் பெட்டி]
நீங்கள் எவ்விதம் பதிலளிப்பீர்கள்?
இஸ்ரவேலர் எகிப்தில் இருந்த சமயத்தில், அவர்கள் மட்டும்தான் உண்மை மதத்தைக் கடைப்பிடித்துவந்தார்களா?
இல்லை, ஏனென்றால் “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய” ஒருவன் இப்பொழுது அரபு தேசமாயிருக்கும் ஊத்ஸ் என்ற ஊரில் வாழ்ந்துவந்தான். அவனுடைய பெயர்தான் யோபு. பெரும்பாலும் பொ.ச.மு. 1657-ல் யோசேப்பின் மரணத்துக்கும் மோசே வளர்ந்த காலப்பகுதிக்குமிடையே அவன் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியனாக உத்தமத்தின் கடுமையான சோதனைகளைச் சந்தித்தான்.—யோபு 1:8.
[பக்கம் 14-ன் படம்]
பார்வோன்கள் தெய்வங்களின் அவதாரங்களாக மதிக்கப்பட்டனர்
[படத்திற்கான நன்றி]
Courtesy of Superintendence of Museo Egizio
[பக்கம் 15-ன் படம்]
எகிப்திய கூர்ங்கோபுரங்களில் சில பார்வோன்களின் அளவுகடந்த செலவையுட்படுத்திய சவஅடக்க கல்லறைகளாக இருந்தன