“மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது”
‘யெகோவா எனக்கு இரட்சிப்புமானவர்’
யெகோவாவின் மக்கள் ஒரு தெரிவு செய்ய வேண்டியிருந்தது. பூர்வ எகிப்தின் பொல்லாத ராஜாவுக்குக் கீழ்ப்படிவதா? அல்லது யெகோவா தேவனுக்குக் கீழ்ப்படிந்து அடிமைகளாயிருந்த அந்த இடத்தைவிட்டு வெளியேறி வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் குடிபுகுவதா?
எகிப்தின் திமிர்பிடித்த ராஜாவான பார்வோன் யெகோவாவின் மக்களை விடுவிக்க மறுத்ததால், அந்தத் தேசத்தின் மீது கடவுள் பத்து வாதைகளை வரவழைத்தார். அவருடைய வல்லமையை அது எவ்வளவாய் வெளிக்காட்டியது! எகிப்திய தெய்வங்களால் அந்தப் பேரிடிகளைத் தடுக்கவே முடியவில்லை.
கடவுளுடைய மக்களைப் போக விடும்படி பார்வோனிடம் சொல்லப்பட்டபோது, அவன் ஏளனமாய் இப்படிச் சொன்னான்: “யெகோவா யார்? நான் ஏன் அவர் சொல்லுக்குச் செவிகொடுத்து இஸ்ரவேலைப் போகவிடவேண்டும்? நான் அந்த யெகோவாவை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போக விடுவதில்லை.” (யாத்திராகமம் 5:2, திருத்திய மொழிபெயர்ப்பு) இதன் விளைவாக, எகிப்து தேசம் பின்வரும் பேரிடிகளை அனுபவித்தது: (1) தண்ணீர் இரத்தமாக மாறியது, (2) தவளைகள், (3) கொசுக்களைப் போன்ற ஒருவித பூச்சிகள், (4) பெரிய ஈக்கள், (5) ஆடுமாடுகளுக்குக் கொள்ளைநோய், (6) மனிதர்கள் மீதும் மிருகங்கள் மீதும் கொப்புளங்கள், (7) கல்மழை, (8) வெட்டுக்கிளிகள், (9) காரிருள், (10) பார்வோனின் மகன் உட்பட, எகிப்திய தலைப்பிள்ளைகளின் மரணம். கடைசியில், எபிரெயர்களை பார்வோன் போக அனுமதித்தான். சீக்கிரமாய் அங்கிருந்து போகும்படியும் அவர்களை அவசரப்படுத்தினான்!—யாத்திராகமம் 12:31, 32; NW.
இஸ்ரவேலரான ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், பல ஜாதியான ஜனங்கள் எனக் கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டார்கள். (யாத்திராகமம் 12:37, 38) ஆனால், சீக்கிரத்திலேயே, பார்வோன் தன்னுடைய பலத்த படையோடு அவர்களைத் துரத்திக்கொண்டுபோக ஆரம்பித்தான். செங்கடலுக்கும் கொடிய பாலைவனத்துக்கும் பார்வோனின் பலத்த படைகளுக்கும் இடையே இஸ்ரவேலர் சிக்கிக்கொண்டதுபோல் தெரிந்தது. என்றபோதிலும், மோசே ஜனங்களைப் பார்த்து, “பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்” என்று கூறினார்.—யாத்திராகமம் 14:8-14.
இஸ்ரவேலரைத் தப்புவிப்பதற்காக, யெகோவா அற்புதகரமாய் செங்கடலின் தண்ணீரைப் பிளந்தார். ஆனால், எகிப்தியர் பின்தொடர்ந்தபோது, அந்தத் தண்ணீரை மீண்டும் ஒன்றுசேரும்படி செய்தார். ஆம், “பார்வோனின் இரதங்களையும் அவன் சேனைகளையும் [யெகோவா] சமுத்திரத்திலே தள்ளிவிட்டார்.” (யாத்திராகமம் 14:26-28; 15:4) யெகோவாவைக் கனப்படுத்த மறுத்ததன் காரணமாக, அகங்காரம்பிடித்த பார்வோன் விபரீத முடிவைச் சந்தித்தான்.
யெகோவா தாம் “யுத்தத்தில் வல்லவர்” என்பதை செங்கடலில் நிரூபித்தார். (யாத்திராகமம் 15:3) ‘கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்’ என ஆவியால் ஏவப்பட்ட அப்பதிவு சொல்கிறது. ‘அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரிடத்தில் . . . விசுவாசம் வைத்தார்கள்.’ (யாத்திராகமம் 14:31; சங்கீதம் 136:10-15) தங்கள் இருதயப்பூர்வ நன்றியைத் தெரிவிக்க இஸ்ரவேல் ஆண்கள் மோசேயோடு சேர்ந்து ஒரு வெற்றிப் பாடலைப் பாடினார்கள், பெண்களோ மோசேயின் சகோதரியான மிரியாமோடு சேர்ந்து நடனமாடினார்கள்.a
யெகோவா இன்றும் மீட்பராக இருக்கிறார்
நிகரற்ற அந்தத் தெய்வீக மீட்பிலிருந்து யெகோவாவின் நவீன நாளைய ஊழியர்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தும் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். ஒரு பாடம்: யெகோவாவுக்கு அளவிலா வல்லமை இருக்கிறது, எனவே, தம்முடைய மக்களுக்கு அவரால் முழுமையாக உதவ முடியும். மோசேயும் இஸ்ரவேலரும் வெற்றிக்களிப்போடு பாடிய வெற்றிப் பாடலில், “கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது” என்று பாடினார்கள்.—யாத்திராகமம் 15:6.
மற்றொரு பாடம்: சர்வவல்லவர் தம்முடைய ஜனங்களைப் பாதுகாக்க மிகவும் விருப்பமுள்ளவராய் இருக்கிறார். இஸ்ரவேலர் இவ்வாறு பாடினார்கள்: ‘யெகோவா என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்.’ கற்றுக்கொள்ளக்கூடிய மூன்றாவது பாடம்: யெகோவா தேவனுடைய சித்தத்தை எதிர்த்து எவராலுமே வெற்றிபெற முடியாது. தங்களது வெற்றிப் பாடலில், கடவுளுடைய மீட்கப்பட்ட ஜனங்கள் இவ்வாறு பாடினார்கள்: ‘யெகோவாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?’—யாத்திராகமம் 15:2, 11.
பூர்வ எகிப்தின் பார்வோனைப் போல, இன்றைய உலக ஆட்சியாளர்களும் யெகோவாவின் ஜனங்களைத் துன்புறுத்துகிறார்கள். அகங்காரமிக்க தலைவர்கள் இன்று ‘உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை [தொடர்ந்து] ஒடுக்கிவரலாம்.’ (தானியேல் 7:25; 11:36) என்றாலும், யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு இவ்வாறு உறுதி அளிக்கிறார்: ‘உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரம்.’—ஏசாயா 54:17.
தேவனை எதிர்க்கிறவர்கள் கட்டாயம் தோல்வி அடைவார்கள், பார்வோனையும் அவனுடைய படைவீரர்களையும் போல. எகிப்திலிருந்து இஸ்ரவேலரை வெளியேறச் செய்தது போன்ற யெகோவாவுடைய மீட்பின் செயல்கள், ஒரு முக்கிய நியமத்தை, அதாவது “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என இயேசுவின் அப்போஸ்தலர்கள் சொன்ன நியமத்தைப் பின்பற்றுவது சரியே என்பதற்குச் சான்றளிக்கின்றன.—அப்போஸ்தலர் 5:29.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர் 2006-ல், ஜனவரி/பிப்ரவரி பக்கத்தைக் காண்க.
[பக்கம் 9-ன் பெட்டி/படம்]
உங்களுக்குத் தெரியுமா?
• இஸ்ரவேலர் செங்கடலினூடே காய்ந்த தரை வழியாகக் கடந்துசெல்வதற்கு யெகோவா இராமுழுதும் பலத்த காற்றை வீசச் செய்தார்.—யாத்திராகமம் 14:21, 22.
• லட்சக்கணக்கான இஸ்ரவேலர் செங்கடலை அத்தனை குறுகிய நேரத்தில் கடந்துசெல்ல குறைந்தது 1.5 கிலோமீட்டர் அகலமான ஒரு வழி தேவைப்பட்டிருக்கும்.
[பக்கம் 9-ன் படங்கள்]
யெகோவா வரவழைத்த பத்து வாதைகளை எகிப்திய பொய்த் தெய்வங்களால் தடுத்துநிறுத்த முடியவில்லை
[படத்திற்கான நன்றி]
மூன்று உருவச்சிலைகளும்: Photograph taken by courtesy of the British Museum