‘உறுதியாக நின்று யெகோவா அளிக்கும் இரட்சிப்பைப் பாருங்கள்’
“கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?” —சங்கீதம் 118:6.
1. என்ன முக்கிய சம்பவங்களை மனிதர்கள் விரைவில் காணப்போகிறார்கள்?
மு ன்னொருபோதும் நிகழ்ந்திராத கடுந்துயர சம்பவங்களை மனிதர் விரைவில் காணப்போகிறார்கள். நம்முடைய காலத்தில் நடைபெறவிருக்கும் காரியங்களை இயேசு முன்னறிவித்தபோது, “உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்” என்று தம் சீஷர்களை எச்சரித்தார்.—மத்தேயு 24:21, 22.
2. மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாவதை எது தடுத்து நிறுத்துகிறது?
2 மனிதரால் தேவதூதர்களைப் பார்க்க முடியாது; இருப்பினும், அவர்கள்தான் மிகுந்த உபத்திரவத்தை இப்போது தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இதற்கான காரணம் அப்போஸ்தலன் யோவானுக்கு இயேசு அளித்த வெளிப்படுத்துதலின்மூலம் தெரிவிக்கப்பட்டது. வயதான அந்த அப்போஸ்தலன் அதை இவ்வாறு விவரித்தார்: “பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, . . . பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவரக்கண்டேன்; அவன், . . . அந்த நான்கு தூதரையும் நோக்கி: நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான்.”—வெளிப்படுத்துதல் 7:1-3.
3. மிகுந்த உபத்திரவத்தின்போது எது முதலாவது நடக்கும்?
3 அபிஷேகம் செய்யப்பட்ட ‘தேவனுடைய ஊழியக்காரர்’ மீது முடிவான முத்திரை போடுவது நிறைவுபெறும் தறுவாயில் இருக்கிறது. அழிவை ஏற்படுத்தும் அந்தக் காற்றுகளை விட்டுவிட நான்கு தூதர்களும் தயாராய் இருக்கிறார்கள். அப்படி அவர்கள் விட்டுவிடும்போது முதலாவது என்ன நடக்கும்? இந்தக் கேள்விக்கு, “பாபிலோன் மகா நகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒரு போதும் காணப்படாமற்போகும்” என்று ஒரு தூதன் பதில் அளிக்கிறார். (வெளிப்படுத்துதல் 18:21) இப்படிப் பொய்மத உலகப் பேரரசு அழிக்கப்படும்போது, பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்.—வெளிப்படுத்துதல் 19:1, 2.
4. இன்னும் என்னென்ன சம்பவங்கள் நடக்கவிருக்கின்றன?
4 யெகோவாவின் ஜனங்களுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் கைகோர்க்கும். உண்மையுள்ள அந்தக் கிறிஸ்தவர்களைத் துடைத்தழிப்பதில் அவை வெற்றி பெறுமா? வெற்றி பெற முடியும் எனத் தோன்றலாம். ஆனால் கவனியுங்கள்! கிறிஸ்து இயேசுவின் தலைமையில் அணிவகுத்துச் செல்கிற பரலோக சேனை, இந்த மனித படைகளை நிச்சயம் அழிக்கும். (வெளிப்படுத்துதல் 19:19-21) இறுதியில், பிசாசும் அவனைச் சேர்ந்த பேய்களும் செயல்பட முடியாதபடி அபிஸுக்குள் தள்ளப்படுவார்கள். ஆயிரம் வருடங்களுக்கு அவர்கள் கட்டிப்போடப்படுவார்கள், அதனால் இனிமேலும் மனிதரைத் தவறாக வழிநடத்த அவர்களால் முடியாது. தப்பிப்பிழைக்கிற பெரும் திரளானோருக்கு அது எப்பேர்ப்பட்ட நிம்மதியைத் தரும்!—வெளிப்படுத்துதல் 7:9, 10, 14; 20:1-3.
5. யெகோவாவுக்கு எப்போதும் உண்மையுள்ளவர்களாய் இருப்போர் என்ன ஆனந்தத்தை அனுபவிப்பார்கள்?
5 இந்த அற்புதமான, பிரமிக்க வைக்கிற சம்பவங்களை விரைவில் காணவிருக்கிறோம். இவை அனைத்தும் யெகோவாவின் உன்னத அரசதிகாரமே சரியானதென நிரூபிப்பதோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்: யெகோவாவுக்கு நாம் எப்போதும் உண்மையுள்ளவர்களாய் இருந்து, அவருடைய உன்னத அரசதிகாரத்தை உறுதியாக ஆதரித்து வந்தால், அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதிலும் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதிலும் பங்குகொள்ளும் வாய்ப்பைப் பெறுவோம். அது அளவற்ற ஆனந்தத்தை அளிக்கும், அல்லவா?
6. விரைவில் நிகழவிருக்கிற சம்பவங்களை மனதில் வைத்து, எதை நாம் சிந்திக்கப் போகிறோம்?
6 முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சம்பவங்களை எதிர்கொள்ள நாம் தயாராய் இருக்கிறோமா? யெகோவாவின் காக்கும் வல்லமைமீது நாம் விசுவாசம் வைத்திருக்கிறோமா? சரியான நேரத்தில், மிகச் சிறந்த விதத்தில் அவர் நமக்கு உதவிக்கரம் நீட்டுவாரென நாம் உறுதியாய் நம்புகிறோமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது, “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது” என்று ரோமிலிருந்த சக கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் சொன்னதை நாம் மனதில் வைப்போமாக. (ரோமர் 15:4) நமக்குப் போதனையாகவும் ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிப்பதற்காகவும் பல விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன; அவற்றுள், இஸ்ரவேலரை அடக்கி ஒடுக்கிய எகிப்தியரின் இரும்புப் பிடியிலிருந்து அவர்களை யெகோவா விடுவித்த விதத்தைப் பற்றிய பதிவும் அடங்கும். இஸ்ரவேலரைக் காப்பாற்றுவதற்கு ஏற்றவாறு காரியங்களை யெகோவா நடப்பித்தார். மிகுந்த உபத்திரவம் விரைவில் வருமென்று நாம் எதிர்நோக்கி இருப்பதால், அத்தகைய மெய்சிலிர்க்கும் சம்பவங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்ப்பது நமக்குப் பெருமளவு உற்சாகத்தை அளிக்கும்.
தம் மக்களை யெகோவா காப்பாற்றுகிறார்
7. பொ.ச.மு. 1513-ல் எகிப்தில் என்ன பதட்டமான நிலை உருவானது?
7 அது பொ.ச.மு. 1513-ஆம் வருடம். ஒன்பது வாதைகள்மூலம் யெகோவா ஏற்கெனவே எகிப்தியருக்கு பலத்த அடியைக் கொடுத்திருந்தார். ஒன்பதாவது வாதைக்குப் பிறகு மோசேயிடம் பார்வோன், “என்னைவிட்டு அப்பாலே போ; நீ இனி என் முகத்தைக் காணாதபடி எச்சரிக்கையாயிரு; நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய்” என்று சொல்லி உடனடியாக அவரை அங்கிருந்து வெளியேற்றினான். அப்போது மோசே, “நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைக் காண்பதில்லை” என்று பதில் அளித்தார்.—யாத்திராகமம் 10:28, 29.
8. தப்பிப்பிழைக்க இஸ்ரவேலருக்கு என்னென்ன கட்டளைகள் கொடுக்கப்பட்டன, அதன் பிறகு என்ன நடந்தது?
8 இந்தச் சமயத்தில், பார்வோனுக்கும் எகிப்தியர் அனைவருக்கும் கடைசியாக மற்றுமொரு பலத்த அடியை தாம் கொடுக்கப்போவதாக மோசேயிடம் யெகோவா தெரிவித்தார். ஆபிப் (நிசான்) மாதம் 14-ஆம் தேதி, எகிப்தியரின் தலைப்பிள்ளைகள் அனைத்தும், மிருகங்களின் தலையீற்றுகள் அனைத்தும் இறக்கவிருந்தன. இஸ்ரவேலரோ மோசேயிடம் கடவுள் கொடுத்த கட்டளைகளைக் கவனமாய்ப் பின்பற்றுவதன்மூலம் தங்கள் குடும்பத்தாரைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். ஆண் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து வீட்டு நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்துவிட்டு, வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி சொல்லப்பட்டார்கள். அன்றிரவு என்ன நடந்தது? அதை மோசே சொல்லக் கேட்போம்: “நடுராத்திரியிலே . . . எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் . . . கர்த்தர் அழித்தார்.” பார்வோன் உடனடியாகச் செயல்பட்டான். மோசேயையும் ஆரோனையும் அழைத்து, “எழுந்து, என் ஜனங்களைவிட்டுப் புறப்பட்டுப் போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்” என்று சொன்னான். முப்பது லட்சத்திற்கும் அதிகமான இஸ்ரவேலரோடுகூட, இஸ்ரவேலரல்லாத “பல ஜாதியான ஜனங்கள்” பலரும் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுப் போனார்கள்.—யாத்திராகமம் 12:1-7, 29, 31, 37, 38.
9. எகிப்திலிருந்து இஸ்ரவேலரை கடவுள் எந்த வழியாக அழைத்துச் சென்றார், ஏன்?
9 இஸ்ரவேலர், மத்தியதரைக்கடல் வழியாகவும் பெலிஸ்தருடைய தேசத்தின் வழியாகவும் பயணித்தால் சீக்கிரமாகச் சென்றுவிடலாம். ஆனால், அது எதிரியின் பிராந்தியம். எனவே, சிவந்த சமுத்திரத்தின் வனாந்தரம் வழியாக அவர்களை யெகோவா அழைத்துச் சென்றார். தம்முடைய மக்கள் யுத்தத்தை எதிர்ப்படாமல் இருப்பதற்காக இந்த வழியை ஒருவேளை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம். லட்சக்கணக்கானோர் பயணித்தாலும் அவர்கள் கும்பலாகச் செல்லவில்லை. மாறாக, “இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய் புறப்பட்டுப்போனார்கள்” என்று பைபிள் சொல்கிறது.—யாத்திராகமம் 13:17, 18.
‘யெகோவா அளிக்கும் இரட்சிப்பைப் பாருங்கள்’
10. இஸ்ரவேலரை பாகால்செபோனுக்கு முன்பாக பாளயமிறங்கும்படி கடவுள் ஏன் சொன்னார்?
10 அடுத்து, வியப்பூட்டும் சம்பவங்கள் நடந்தேற ஆரம்பித்தன. “நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்க வேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு” என்று மோசேயிடம் யெகோவா சொன்னார். இதன்படி செய்தபோது, மலைத்தொடர்களுக்கும் சிவந்த சமுத்திரத்தின் கடற்கழிக்கும் இடையே தாங்கள் சிக்கிக்கொண்டதை இந்தப் பெரும் கூட்டத்தார் உணர்ந்தார்கள். தப்பிச் செல்ல வழியே இல்லாததுபோல் தெரிந்தது. ஆனால், தாம் செய்வதை யெகோவா அறிந்திருந்தார். “பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன்” என்று மோசேயிடம் அவர் சொன்னார்.—யாத்திராகமம் 14:1-4.
11. (அ) பார்வோன் என்ன செய்தான், இதைக் கண்டு இஸ்ரவேலர் எப்படி நடந்துகொண்டார்கள்? (ஆ) இஸ்ரவேலரின் குற்றச்சாட்டுக்கு மோசே எப்படிப் பதில் அளித்தார்?
11 இஸ்ரவேலரை எகிப்திலிருந்து போகவிட்டது தவறென பார்வோன் நினைத்தான். விசேஷமான 600 போர் ரதங்களுடன் அவர்களை வேகமாகத் துரத்திச் சென்றான். எகிப்தியரின் ராணுவம் கண்ணில் பட்டதும் இஸ்ரவேலர் திகிலடைந்தார்கள், “எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்?” என்று மோசேயிடம் சத்தம் போட்டார்கள். யெகோவா இரட்சிக்க வல்லவரென்பதில் மோசேக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததால், “பயப்படாதிருங்கள்; உறுதியாக நின்றுகொண்டு உங்களுக்காக இன்று யெகோவா அளிக்கும் இரட்சிப்பைப் பாருங்கள். . . . கர்த்தர் [யெகோவா] உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்று பதில் அளித்தார்.—யாத்திராகமம் 14:5-14; NW.
12. தம்முடைய மக்களை யெகோவா எப்படிக் காப்பாற்றினார்?
12 இஸ்ரவேலருக்காக யெகோவாவே யுத்தம் செய்வார் என்று மோசே சொன்னது உண்மையாயிற்று; ஆம், யெகோவாவின் வழிநடத்துதலில் தேவதூதர்கள் செயல்பட்டார்கள். இஸ்ரவேலரை முன்நின்று வழிநடத்திய மேகஸ்தம்பத்தை அற்புதமாய் யெகோவாவின் தூதன் அவர்களுக்குப் பின்னாக நிறுத்தினார். அது எகிப்தியருக்கு இருளாகவும், இஸ்ரவேலருக்கு வெளிச்சமாகவும் இருந்தது. (யாத்திராகமம் 13:21, 22; 14:19, 20) கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, மோசே இப்போது தன் கையை நீட்டினார். “கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்[தார்] . . . இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது” என்று பைபிள் பதிவு தொடர்ந்து சொல்கிறது. எகிப்தியர் இஸ்ரவேலரை மீண்டும் துரத்த ஆரம்பித்தார்கள். ஆனால், யெகோவா தம்முடைய மக்களின் பக்கம் இருந்தார். எகிப்திய ராணுவத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினார்; பிறகு, “ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள்மேலும் அவர்களுடைய குதிரைவீரர்மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு” என்று மோசேயிடம் அவர் சொன்னார். இப்படியாக, ஒருவர்கூட தப்ப முடியாதபடி பார்வோனின் படையினர் முற்றும் முழுமையாய் அழிந்தார்கள்.—யாத்திராகமம் 14:21-28; சங்கீதம் 136:15.
இஸ்ரவேலருடைய இரட்சிப்பிலிருந்து பாடம்
13. உயிர் தப்பிய இஸ்ரவேலர் என்ன செய்தார்கள்?
13 இப்படி அற்புதமாய் காப்பாற்றப்பட்டபோது உயிர் தப்பியவர்கள் என்ன செய்தார்கள்? கணநேரமும் தாமதிக்காமல் மோசேயும் இஸ்ரவேலரும் யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்களே! “கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; . . . கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம் பண்ணுவார்” என்று அவர்கள் பாடினார்கள். (யாத்திராகமம் 15:1, 18) கடவுளைப் போற்றிப் புகழ வேண்டுமென்ற எண்ணம்தான் அவர்கள் மனதில் முதலில் உதித்தது. அந்தச் சமயத்தில் தம்முடைய உன்னத அரசதிகாரத்தை யெகோவா வெளிக்காட்டியிருந்தார்.
14. (அ) இஸ்ரவேலரது அனுபவத்திலிருந்து யெகோவாவைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆ) 2008-ஆம் ஆண்டுக்கான வருடாந்தர வசனம் என்ன?
14 சிலிர்ப்பூட்டும் இந்தச் சம்பவங்களிலிருந்து என்ன போதனையையும் ஆறுதலையும் நம்பிக்கையையும் நாம் பெறுகிறோம்? தம்முடைய மக்கள் எதிர்ப்பட வேண்டிய எந்தத் துன்பத்தையும் யெகோவாவால் துடைக்க முடியும் என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம். அவர்கள் எதிர்ப்படுகிற எந்தக் கடினமான சூழ்நிலையையும் அவரால் சரிப்படுத்த முடியும். சிவந்த சமுத்திரத்தின்மீது பலத்த கீழ்காற்றை யெகோவா வீசச் செய்தபோது அந்தச் சமுத்திரம் இஸ்ரவேலருக்கு ஒரு தடையாகவே இருக்கவில்லை. ஆனால், அதே சிவந்த சமுத்திரத்தில் பார்வோனின் ராணுவம் ஜல சமாதியாகும்படி அவர் பார்த்துக்கொண்டார். இதை எண்ணிப் பார்க்கும்போது, “கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?” என்று சொன்ன சங்கீதக்காரனின் வார்த்தைகளை நாமும் சொல்லலாம். (சங்கீதம் 118:6) “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” என ரோமர் 8:31-ல் உள்ள பவுலுடைய வார்த்தைகளிலிருந்தும் நாம் ஆறுதலைப் பெறலாம். கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட இந்த வார்த்தைகள் நமக்கு எப்பேர்ப்பட்ட உறுதியை அளிக்கின்றன! நம் மனதில் எழுகிற பயங்களையும் சந்தேகங்களையும் அவை போக்கி, அந்த இடத்தை நம்பிக்கையால் நிரப்புகின்றன. அப்படியென்றால், ‘உறுதியாக நின்று யெகோவா அளிக்கும் இரட்சிப்பைப் பாருங்கள்’ என்ற 2008-ஆம் ஆண்டுக்கான நம் வருடாந்தர வசனம் எவ்வளவு பொருத்தமானது!—யாத்திராகமம் 14:13, NW.
15. எகிப்திலிருந்து இஸ்ரவேலர் விடுவிக்கப்படுவதில் கீழ்ப்படிதல் எந்தளவுக்கு முக்கியமானதாய் இருந்தது, இன்று அது எந்தளவுக்கு முக்கியம்?
15 எகிப்திலிருந்து இஸ்ரவேலர் புறப்பட்டுச் சென்ற சம்பவத்திலிருந்து வேறெதையும் நாம் கற்றுக்கொள்ளலாம்? யெகோவா என்ன சொன்னாலும் அவற்றிற்கு நாம் கீழ்ப்படிய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறோம். பஸ்கா ஆசரிப்பு சம்பந்தமாகக் கொடுக்கப்பட்ட விரிவான விவரங்களுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிந்தார்கள். கடவுள் சொல்லியிருந்தபடியே, நிசான் 14-ஆம் தேதி இரவு வீட்டுக்குள்ளே இருந்தார்கள். கடைசியில் எகிப்தைவிட்டு புறப்பட்டபோது அவர்கள், “அணியணியாய்” செல்ல வேண்டியிருந்தது. (யாத்திராகமம் 13:18) இன்று, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார்மூலம் வரும் அறிவுரைகளுக்கு நாம் கீழ்ப்படிவது மிக மிக முக்கியம்! (மத்தேயு 24:45, NW) “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என்று நமக்குப் பின்னாலிருந்து கேட்கும் கடவுளுடைய வார்த்தைக்கு அதிக கவனமாய் செவிகொடுக்க வேண்டும். (ஏசாயா 30:21) மிகுந்த உபத்திரவத்தை நாம் நெருங்க நெருங்க, சில விவரமான அறிவுரைகள் நமக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. யெகோவாவை உண்மையோடு வணங்குகிற சக ஊழியர்களோடு நாம் ஒன்றுசேர்ந்து நடந்தால்தான் தொல்லை நிறைந்த இந்தக் காலப்பகுதியில் நம் பயணம் பாதுகாப்பானதாய் இருக்கும்.
16. இஸ்ரவேலரை விடுவிப்பதில் கடவுள் திறம்பட்ட விதத்தில் காரியங்களை வழிநடத்தியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
16 ஒருபுறம் மலைத்தொடர் மறுபுறம் சிவந்த சமுத்திரம். இரண்டிற்கும் நடுவே இஸ்ரவேலர் சிக்கிக்கொண்டதைப்போல் தெரிந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலைக்குள் இஸ்ரவேலரை யெகோவா வழிநடத்தியதைப்பற்றி சற்று எண்ணிப் பாருங்கள். அது சரியான செயலாகத் தெரியவில்லை. ஆனால், காரியங்கள் எல்லாம் யெகோவாவின் கட்டுப்பாட்டில் இருந்தன, அவர் செய்தவை அனைத்தும் வெற்றியடைந்தன; அவர் துதிக்கப்படுவதற்கும் அவருடைய மக்கள் இரட்சிக்கப்படுவதற்கும் அவை வழிவகுத்தன. இன்று, அமைப்பு சம்பந்தப்பட்ட சில காரியங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் கையாளப்படுவதற்கான காரணம் நமக்குத் தெளிவாகப் புரியாதிருக்கலாம்; ஆனால், உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பாரின் வாயிலாக யெகோவா கொடுக்கிற வழிநடத்துதலை நாம் நிச்சயம் நம்பலாம். சில சமயங்களில், நம்முடைய பகைவர்களின் கை ஓங்குவதுபோல் தெரியலாம். ஒரு காரியத்தில் உட்பட்டுள்ள எல்லாமே நமக்குத் தெரியாததால் அவற்றை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. இருப்பினும், அன்று இஸ்ரவேலருக்குச் செய்ததுபோலவே, இன்றும் சரியான நேரத்தில் காரியங்களைத் திறம்பட்ட விதத்தில் வழிநடத்த யெகோவா வல்லவராய் இருக்கிறார்.—நீதிமொழிகள் 3:5.
யெகோவாமீது உறுதியான நம்பிக்கை வையுங்கள்
17. கடவுளுடைய வழிநடத்துதலில் நாம் ஏன் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கலாம்?
17 தங்களை பகலில் மேகஸ்தம்பமும் இரவில் அக்கினிஸ்தம்பமும் வழிநடத்தியதை இஸ்ரவேலர் பிற்பாடு எண்ணிப் பார்த்தபோது அவர்களுடைய நம்பிக்கை எந்தளவு உறுதிப்பட்டிருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவர்களுடைய பயணத்தை ‘[மெய் கடவுளின்] தேவதூதன்’ வழிநடத்தி வந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது. (யாத்திராகமம் 13:21, 22; 14:19) இன்று, தம்முடைய மக்களை யெகோவா வழிநடத்துகிறார், பாதுகாக்கிறார், விடுவிக்கிறார் என நாம் உறுதியாய் நம்புகிறோம். “அவர் [யெகோவா] தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்” என்ற வாக்குறுதியை நாம் மனதில் வைக்கலாம். (சங்கீதம் 37:28) இன்று கடவுளுடைய ஊழியர்களுக்கு உதவுகிற பலம்படைந்த தேவதூத சேனையினரை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அவர்களுடைய துணையோடு நாம், ‘உறுதியாக நின்று யெகோவா அளிக்கும் இரட்சிப்பைப் பார்க்கலாம்.’—யாத்திராகமம் 14:13, NW.
18. நாம் ஏன் ‘தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை முழுமையாய் தரித்துக்கொள்ள’ வேண்டும்?
18 சத்தியத்தில் ‘உறுதியாக நிற்க’ எது நமக்கு உதவும்? எபேசியருக்கு எழுதிய கடிதத்தில் பவுல் விவரித்த சர்வாயுதவர்க்கத்தை அணிந்துகொள்வது உதவும். ‘தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை [முழுமையாய்] தரித்துக்கொள்ளுங்கள்’ என பவுல் அறிவுரை கூறியதைக் கவனியுங்கள். சர்வாயுதவர்க்கத்தின் எல்லா பாகங்களையும் நாம் அணிந்திருக்கிறோமா? வருகிற வருடத்தில், அந்த எல்லா பாகங்களையும் சரியாக அணிந்திருக்கிறோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் பரிசோதித்துப் பார்ப்பது நல்லது. நம் எதிராளியான பிசாசாகிய சாத்தான் நம்முடைய பலவீனங்களை அறிந்திருக்கிறான், எதிர்பாராத சமயத்தில் நம்மை தன் வலையில் சிக்க வைக்க முயற்சி செய்கிறான் அல்லது நம் பலவீனத்தை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, தாக்க முயற்சி செய்கிறான். பொல்லாத ஆவி சேனைகளுடன் நமக்குப் “போராட்டம்” இருக்கிறது. எனினும், யெகோவா தரும் பலத்தால் நாம் உத்தமத்தில் நிலைத்திருக்க முடியும்.—எபேசியர் 6:11-18; நீதிமொழிகள் 27:11.
19. நாம் சகித்திருந்தால், எதைப் பார்க்கும் பாக்கியத்தைப் பெறுவோம்?
19 “உங்கள் பொறுமையினால் [“சகிப்புத்தன்மையினால்,” NW] உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று தம் சீஷர்களிடம் இயேசு சொன்னார். (லூக்கா 21:19) எதிர்ப்படுகிற துன்பங்கள் அனைத்தையும் உண்மையுடன் சகிப்போரில் நாமும் ஒருவராய் இருப்போமாக. அப்போது, கடவுளுடைய அளவற்ற கருணையால், ‘உறுதியாக நின்று யெகோவா அளிக்கும் இரட்சிப்பைப் பார்க்கிற’ பாக்கியத்தை நாமும் பெறுவோம்.
நீங்கள் எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• சிலிர்ப்பூட்டும் என்ன சம்பவங்கள் விரைவில் நிகழவிருக்கின்றன?
• பொ.ச.மு. 1513-ல், தம்முடைய காக்கும் வல்லமையை யெகோவா எப்படி வெளிக்காட்டினார்?
• எதிர்காலத்தில் என்ன செய்ய நீங்கள் தீர்மானமாய் இருக்கிறீர்கள்?
[பக்கம் 20-ன் சிறு குறிப்பு]
2008-ஆம் ஆண்டுக்கான வருடாந்தர வசனம்: ‘உறுதியாக நின்று யெகோவா அளிக்கும் இரட்சிப்பைப் பாருங்கள்.’—யாத்திராகமம் 14:13, NW.
[பக்கம் 17-ன் படம்]
“முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது”
[பக்கம் 18-ன் படம்]
பார்வோனின் பிடிவாதத்தால் எகிப்து பேரழிவை எதிர்ப்பட்டது
[பக்கம் 19-ன் படம்]
யெகோவா கட்டளையிட்ட அனைத்தையும் செய்தபோது இஸ்ரவேலர் தப்பிப்பிழைத்தார்கள்