இளைஞரே—போலியான இரு வாழ்க்கை நடத்துவதற்கு எதிராக எச்சரிக்கையாயிருங்கள்
“வாலிபனே, உன் இளமையிலே சந்தோஷப்படு . . . ஆனாலும் இவை எல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.”—பிரசங்கி 11:9.
“குழந்தைப் பிராயத்திலிருந்து நான் ஒரு கிறிஸ்தவ சூழ்நிலையில், யெகோவாவின் சாட்சிகளின் மத்தியில் வளர்க்கப்பட்டேன்,” என்று ஓர் இளைஞன் எழுதினான். “அப்படியிருந்தும், நான் வீட்டிலிருக்கும்போது வாழ்ந்த வாழ்க்கையுங்கூட என்னுடைய பெற்றோரின் எண்ணத்துக்கும் தராதரத்துக்கும் முற்றிலும் வித்தியாசமாயிருந்தது. என்னுடைய வாழ்க்கை பெரும்பாலும் ஒழுக்க நெறி தளர்ந்த, கட்டுப்பாடற்ற உலக வாழ்க்கையாக இருந்தது.”
2 அந்த இளைஞன் தொடர்ந்து விளக்கினான்: “பத்து வயதாவதற்கு முன்பே, என்னாலான மட்டும் இரு உலகிலும் வாழ ஆரம்பித்தேன்—பள்ளியில் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுடைய நண்பனாயிருக்கவும், அதே சமயத்தில் என்னுடைய பெற்றோரால் ஏற்றுக்கொள்ளப்படவும் வாழ்ந்தேன். பெரும்பாலும் பள்ளியில் நான் உடையிலும் நடத்தையிலும் அவர்களுடைய பாணியையே பின்பற்றினேன் . . . ஆனால் வீட்டிலோ முற்றிலும் வித்தியாசப்பட்டவனாயிருந்தேன். என்னுடைய பெற்றோரின் எதிர்பார்ப்புக்கிசைய நல்நடத்தையுடைய பையனாக இருந்தேன்.”
3 இந்த இளைஞனின் நடத்தை சபையிலுள்ள உங்கள் அநேகருடைய நடத்தையைப் பிரதிநிதித்துவம் செய்வதில்லை என்பதை நாங்கள் அறிவோம். உங்களில் பெரும்பான்மையினர் உங்கள் பெற்றோருக்கும் சபைக்கும் நேர்மையாக நடந்துகொள்கிறீர்கள் என்பதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது, இது எங்களுடைய இருதயத்தை மகிழ்விக்கிறது. அதே சமயத்தில், சிலர் நேர்மையாக இருப்பதாய்ப் பாவனை செய்கின்றனர், கூடுமானவரை தங்களுடைய தவறான நடத்தைப் போக்கைப் பெரியவர்களிடமிருந்து மறைக்கின்றனர். எனவே கேள்வி என்னவென்றால்: “நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நாங்கள் நினைக்கிறோமோ அப்படிப்பட்ட ஆட்களாயிருக்கிறீர்களா, அல்லது போலியான இரண்டு வாழ்க்கை வாழ்கிறீர்களா? இந்தக் கேள்வியை நாங்கள் குற்றங்கண்டுபிடிக்கும் ஆவியில் கேட்கவில்லை, மாறாக, உங்களை உண்மையிலேயே நேசிப்பதாலும், யெகோவாவுக்குப் பிரியமான வழியில் உங்கள் வாழ்க்கையை வாழ்வதன் மூலம் உங்கள் இளமையை அனுபவித்துக்களிக்க உங்களுக்கு உதவ விரும்புவதாலுமே இக் கேள்வியைக் கேட்கிறோம்.—பிரசங்கி 11:9, 10; 12:14; 2 கொரிந்தியர் 5:10.
4 என்றபோதிலும், ‘குறிப்பாக இளைஞர்களாகிய எங்களை ஏன் சுட்டிக்காட்டுகிறீர்கள்? பெரியவர்களைப் பற்றியதென்ன?’ என்று நீங்கள் கேட்கலாம். அவர்களுங்கூட போலியான இரண்டு வாழ்க்கையை வாழாதபடி எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. எலிசாவின் வேலைக்காரனாகிய கேயாசி வஞ்சனையோடு செயல்பட்டான், நாகமானிடமிருந்து தான் வெகுமதிகள் பெற்றுக்கொண்டதை அவன் மறைக்கப் பார்த்தான். (2 இராஜாக்கள் 5:20–26) பெரியவர்களாயிருந்த அனனியாவும் சப்பீராளும், தாங்கள் விற்ற காணியாட்சியின் முழு தொகையையும் அப்போஸ்தலர்களிடம் கொடுத்துவிட்டதாகச் சொல்லி பொய் பேசினார்கள்—தங்களை நல்லவர்களாகக் காண்பிக்க முயன்றார்கள்—உண்மையில் அந்தப் பணத்தில் கொஞ்சத்தைத் தங்களுக்காக வைத்துக்கொண்டார்கள். (அப்போஸ்தலர்கள் 5:1–4) என்றபோதிலும், இளைஞர்களாகிய உங்களிடமாகக் கவனம் செலுத்துவதற்குக் காரணம், இப்பிரச்னை சார்ந்த சம்பவங்கள் உங்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது என்பது தெளிவாயிருக்கிறது.
சிலர் ஏன் இரு வாழ்க்கை வாழ்கிறார்கள்
5 ஏன் இது? இதற்கு முக்கியமான காரணத்தை ஓர் இளைஞன் குறிப்பாக விளக்கினான்: “நான் வித்தியாசமாயிருந்து என் நண்பர்களை இழக்க எனக்கு விருப்பமில்லை.” ஆரோக்கியமான வழியில் வித்தியாசமாயிருப்பது ஒருவரைப் பரியாசத்தின் முன்னிலையில் அமர்த்துகிறது என்பது உண்மைதான். (1 பேதுரு 3:16; 4:4-ஐ ஒப்பிடவும்) இதைத் தவிர்த்திட, தங்களுடைய சகாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட, சில இளைஞர் குடித்து வெறிக்கவும் பாலுறவு கொள்ளவும் தயங்க மாட்டார்கள். வகுப்பில் முதல் நிலையிலிருந்தவளும் வகுப்பு கலந்தாலோசிப்புகளில் எல்லா சமயங்களிலும் பங்கு பெற்றவளுமாகிய சாட்சியாக இல்லாத 13 வயது இளம் பெண் ஒருத்தி இப்படியாக புலம்புகிறாள்: “அந்தப் பிள்ளைகள் என்னைப் போன்ற நல்ல மாணவர்களில் அக்கறை காண்பிக்கவே மாட்டார்கள். . . . என்னுடைய மதிப்பெண்களைக் குறைத்துக்கொள்வது குறித்து அல்லது என்னுடைய பெயர் பிரஸ்தாபத்துக்காக ஏதாவது செய்வது குறித்து நினைத்துக்கொண்டிருக்கிறேன்.”
6 குறிப்பிடத்தக்க ஒரு காரியம், அப்போஸ்தலனாகிய பேதுரு தானே ஒரு முறை தான் அறிந்த சரியான காரியத்தை செய்வதற்கு மாறாக, தன்னைக்குறித்து அல்லது தன்னுடைய பெயர் பிரஸ்தாபத்தைக் குறித்து அதிகமாக சிந்தித்தான். யூத கிறிஸ்தவர்கள் எருசலேமிலிருந்து அந்தியோகியாவுக்கு வந்தபோது, பேதுரு புறஜாதிகளுடன் பழகுவது பற்றி யூதர்கள் குறைகாணக்கூடும் என்று பயந்து புறஜாதியாரின் கூட்டுறவிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டான். (கலாத்தியர் 2:11–14) முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களும் சகாக்களைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்திற்கு இடங்கொடுத்துவிட்டிருக்க, அனுபவக்குறைவுள்ள இளைஞர்கள் அப்படிச் செய்யக்கூடும் என்பதில் ஆச்சரியம் உண்டோ?—நீதிமொழிகள் 22:15.
7 இளைஞரில் சிலர் ஏன் போலியான இரண்டு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதற்கு இத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு காரணம், தாங்கள் இன்பமான வாழ்க்கையை இழந்துவிடுவதாக நினைப்பது. பள்ளி இளைஞர்கள் தங்களுடைய நடவடிக்கைகள் குறித்து பேசுவதை இவர்கள் கேட்கிறார்கள்—அந்த விருந்து எவ்வளவு பிரமாதமாயிருந்தது, சப்தமான அந்த இசை, தாராளமான மதுபானம், போதை மருந்துகள், என்னே போதை! அல்லது அவனோ அவளோ எப்படி முத்தமிட்டுக் காதலிக்கலாம் என்று பேசப்படுவது அவர்களுடைய செவிகளில் விழுகிறது. எனவே இந்தக் காரியங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை தூண்டப்படுகிறது. “அநித்தியமான பாவசந்தோஷங்கள்” என்று பைபிள் கூறுவதை அனுபவித்துப்பார்க்கும்படியான செல்வாக்குக்குள் இளைஞர் வந்துவிடுகிறார்கள்.—எபிரெயர் 11:24, 25; 1 கொரிந்தியர் 10:6–8.
8 என்றபோதிலும், சில இளைஞர் போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வதற்கு அடிப்படைக் காரணம், யெகோவாவும் வரப்போகும் புதிய உலகமும் அவர்களுக்கு உண்மையானவையாக இல்லை. அவர்கள் யெகோவாவின் வாக்குத்தத்தங்களை அல்லது யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமையின் விளைவுகள் குறித்து அவருடைய வார்த்தையின் மூலமும் காணக்கூடிய அமைப்பின் மூலமும் கொடுக்கப்படும் எச்சரிப்புகளை உண்மையிலேயே நம்புவதில்லை. (கலாத்தியர் 6:7, 8) அவர்கள் மோசேயைப் போலில்லை. மோசேயைக் குறித்து பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “[கடவுள் அருளும்] இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, . . . அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்தான்.” யெகோவாவும் அவருடைய வாக்குத்தத்தங்களும் மோசேக்கு உண்மையாக இருந்தன. ஆனால் போலியான இரண்டு வாழ்க்கை வாழ்கிறவர்கள் அந்த விசுவாசத்தில் குறைவுபடுகின்றனர். அவர்கள் எதைப் பார்க்கவேண்டுமென்று சாத்தான் விரும்புகிறானோ, அதைத்தானே அவர்கள் பார்க்கிறார்கள்—அவனுடைய ஒழுங்குமுறையின் பகட்டு. எனவே அவர்கள் பாவத்தின் தற்காலிக இன்பத்தை நாடிச்செல்கிறார்கள், ஆனால் அதே சமயத்தில், பரிசுத்தத்தின் தோற்றத்தைக் கொண்டிருக்க முயலுகிறார்கள்.—எபிரெயர் 11:26, 27.
பெற்றோர்களே, அதற்கு நீங்கள் காரணராயிருக்கக்கூடும்
9 ஆரம்பத்தில் கூறப்பட்ட அந்த இளைஞன் குறிப்பிட்டதாவது: “பள்ளியில் என்னை பிரபலமற்றவனாக்கியது எதுவோ, அது வீட்டில் என்னை ஏற்றவனாக்கியது, அங்கீகரிப்பின் புன்முறுவலை ஏற்படுத்தியது. ஆனால் எனக்கு அதைவிட அதிகம் தேவைப்பட்டது. நான் பிடித்துக்கொள்வதற்கும், பேசுவதற்கும், என் இரகசியங்களைச் சொல்வதற்கும் யாராவது ஒருவர் எனக்கு தேவைப்பட்டார். அந்தத் தேவையை என் பெற்றோர் எனக்குப் பூர்த்தி செய்யவில்லை.” பெற்றோர்களே, உங்களுடைய பிள்ளைகள் போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வதற்கு நீங்கள் காரணமாயிராதபடிக்குக் கவனமாயிருக்கிறீர்களா? அவர்களுக்குத் தேவையான தனிப்பட்ட கவனிப்பையும் வழிநடத்துதலையும் கொடுக்கிறீர்களா? நம்முடைய இளைஞர் பள்ளியில் எதிர்ப்படும் விசுவாசத்தைக் குறைத்திடும் ஏராளமான அழுத்தங்களைப் பெரியவர்கள் மதித்துணர்ந்து, அவர்களுக்கு உற்சாகத்தையும் உதவியையும் அளிக்க தங்களால் செய்யமுடிந்த எல்லாவற்றையும் செய்ய கவனமாயிருக்க வேண்டும்.—சங்கீதம் 73:2, 3; எபிரெயர் 12:3, 12, 13.
10 ஓர் இளைஞனின் கேள்விகள் பெரும்பாலும் எதிர்பாலாருடன் இருக்கும் உறவுகள் சார்ந்தவையாயிருக்கின்றன. ஆனால் இந்தப் பொருளின் பேரில் பேசுவதை அநேக பெற்றோர் தவிர்க்கின்றனர். “அவர்கள் என்னுடன் மனம்விட்டு பேசினதில்லை,” என்கிறாள் ஓர் அழகிய 15 வயது மாணவி. “பாலினம் சம்பந்தப்பட்ட காரியங்களனைத்தையும் நானே தெரிந்துகொள்ளவேண்டியதாயிருந்தது. . . . நான் அநேக காரியங்களை அறிந்துகொள்ள விரும்பினபோதிலும் அதைப் பற்றிப் பேச எனக்கு அதிக வெட்கமாயிருந்தது.” விளைவு என்ன? அவள் சொல்லுகிறாள்: “என்னுடைய பெற்றோருக்கும் எனக்கும் இடையிலிருந்த கண் காணா சுவர் பருத்துக்கொண்டே போனது, நான் காரியங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற மனப்போக்குடைய, முட்டாள்தனமான, எளிதில் சிக்கிக்கொள்ளக்கூடிய ஒருத்தியாக ஆனேன்.” ஆம், பாலுறவு கொள்ள நாடிய ஓர் இளம் மனிதனுக்கு இரையானாள், ஆனால் இதில் யாருடைய பொறுப்பு அடங்கியிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?—நீதிமொழிகள் 22:3; 27:12.
11 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உண்மையிலேயே நேசிக்கிறார்கள் என்பதை அவர்களுடன் நேரம் செலவழிப்பதன் மூலமும், அந்தரங்கமான பேச்சுகளில் கலந்துகொள்வதன் மூலமும், அவர்களுக்கு வேண்டிய வழிநடத்துதலைக் கொடுப்பதன் மூலமும் காண்பிக்க வேண்டும். (நீதிமொழிகள் 15:22; 20:18) “அவர்கள் உண்மையிலேயே என்னில் அக்கறையுடையவர்களாயிருந்தால் சில விதிமுறைகளை ஏற்படுத்தியிருப்பார்கள் என்பது என் கருத்து,” என்றான் இன்னொரு இளைஞன். உங்களுடைய விதிமுறைகளை இளைஞர் இப்பொழுது வெறுத்தாலும், பின்னால் அவற்றைப் போற்றுதலுடன் திரும்பிப் பார்ப்பார்கள். இளைஞன் ஒருவன் தன் தாய்க்கு பின்வருமாறு எழுதினான்: “கடுமையான வீட்டு விதிமுறைகளின் எல்லைக்கோடுகளை அவ்வப்போது சோதித்துப்பார்க்கும் ஒருவனாக, அவற்றின் பலவீனமான பகுதிகளைத் தேடி தப்பித்துக்கொள்ளும் வழிகளை நாடிடும் ஒருவனாக இருக்கும் என்னைக் கடிவாளமிட்டு அதை நீங்கள் இழுத்துப்பிடித்தவர்களாயிருந்ததற்காக நான் என்றும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.” பிள்ளைகள் உங்களுடைய வழிநடத்துதலுக்கு இசைந்து செல்லவேண்டியது அவசியம் என்பதைக் காண்பிப்பதன் மூலம் நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்பதைத் தெரியப்படுத்துங்கள். உங்களுடைய பேச்சுத்தொடர்பைத் திறந்துவைக்கத் தவறுவதாலோ, அல்லது உங்களுடைய உதவி அவர்களுக்குத் தேவைப்படும்போது அந்தச் சமயத்தில் நீங்கள் அங்கு இருக்கத் தவறுவதாலோ அவர்களை போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வதற்கு நீங்கள் துணைபுரிகிறவர்களாகிவிட வேண்டாம்!
12 தங்களுடைய பிள்ளைகள் போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வதற்குப் பெற்றோர் மற்றொரு வழியிலும் காரணமாயிருக்கக்கூடும். நியு ஜெர்சி மாநிலத்தின் மேல் மன்ற நீதிபதியின் குறிப்புகள் இதை எடுத்துக் காட்டுகின்றன. “ஆசிரியர்களே,” என்றார் அந்த நீதிபதி, “பள்ளியில் பிள்ளைகள் தவறுகள் செய்தால் அவர்களைச் சிட்சிக்கப் பாருங்கள், பின்பு பெற்றோரால் கண்டிக்கப்படுவதற்குப் பதிலாக அவர்கள் ஆதரிக்கப்படுகிறார்கள்.” தங்களுடைய இளைஞர் தவறுகள் செய்ய மாட்டார்கள் என்று அநேக பெற்றோர் தவறாக நினைப்பதாகத் தெரிகிறது. கிறிஸ்தவ சபையிலுள்ள மூப்பர்களோ அல்லது பொறுப்புள்ள மற்றவர்களோ பிள்ளைகளின் தவறான செயல்களைப் பெற்றோரின் கவனத்துக்குக் கொண்டுவரும்போது, அவர்கள் அதற்குச் செவிகொடுப்பதில்லை. அப்படிச் செய்வதன் மூலம், தங்களுடைய இளைஞரின் வஞ்சக வாழ்க்கைக்குக் காரணமாயிருக்கின்றனர்.
உண்மையில் போலியான இரு வாழ்க்கை என்பது என்ன
13 இது முக்கிமாய்க் கவனிக்கப்பட வேண்டும்: போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வது உண்மையில் வஞ்சிப்பதாயிருக்கிறது—போலி வேஷத்தானாக, மாய்மாலக்காரனாக இருப்பதைக் குறிக்கிறது. (சங்கீதம் 12:2; 2 தீமோத்தேயு 3:13) அது “ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்ளும்” சாத்தானைப் போலிருப்பதைக் குறிக்கிறது. (2 கொரிந்தியர் 11:14, 15) மேலும் இயேசு குறிப்பிட்ட மதத் தலைவர்களைப் போலிருப்பதையும் குறிக்கிறது. அவர்களைக் குறித்து இயேசு பின்வருமாறு சொன்னார்: “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.” (மத்தேயு 23:27, 28) தெளிவாகவே, போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வது கடவுளுக்கு எதிரான வினைமையான குற்றமாகும்.
14 மிகக் கவனமாக சிந்திக்கவேண்டிய மற்றொரு உண்மை: மாய்மால வாழ்க்கையை நிரந்திரமாக மறைத்திட முடியாது. “பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்,” என்று பைபிள் சொல்லுகிறது. (நீதிமொழிகள் 20:11; லூக்கா 12:1–3) ஆம், உங்களுடைய செயல்கள், நல்லதாயிருந்தாலும் கெட்டதாயிருந்தாலும், கடைசியில் வெளிப்பட்டுவிடும். மாய்மாலக்காரரைக் கடவுள் கடுமையாகத் தண்டிப்பார் என்று பைபிள் காண்பிக்கிறது. (மத்தேயு 24:51) நிச்சயமாகவே நீங்கள் போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வதைத் தவிர்க்க விரும்புவீர்கள்!
அதை எவ்விதம் தவிர்ப்பது
15 போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வதைத் தவிர்ப்பதற்கு ஒரு வழி, அது உண்மையில் எதில் விளைவடைகிறது என்பதைக் கவனித்து, பின்வரும் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுதலாகும்: “ஒரு மாய்மாலக்காரனாக, சாத்தானையும் பரிசேயரையும் பின்பற்றுகிறவனாக நினைவுகூரப்படுவதைத்தான் நான் விரும்புகிறேனா? நிச்சயமாக இல்லை! அப்படிப்பட்ட வாழ்க்கை உங்களுக்குத் தனிப்பட்டவிதத்தில் ஏற்படுத்தும் மனவேதனையையும் அப்படிப்பட்ட வாழ்க்கையின் பரிதாபமான முடிவையும் எண்ணிப்பார்ப்பது போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வதைத் தவிர்க்க உங்களுக்கு உதவும் மற்றொரு காரியமாகும். பொய் சொல்லி வாழ நினைத்த கேயாசிக்கு என்ன நடந்தது என்பதை நினைத்துப்பாருங்கள். நாகமானின் குஷ்டம் அவனைப் பற்றியது, தன்னுடைய வாழ்க்கையின் எஞ்சிய பகுதியை ஒரு குஷ்டரோகியாகவே கழித்தான். அனனியாவும் சப்பீராளும் தங்களைத் தாராளகுணமுள்ளவர்களாகக் காண்பிக்க முயன்றதற்குக் கடவுள் அவர்களை மரணத்துக்குட்படுத்தினார்.—2 இராஜாக்கள் 5:27; அப்போஸ்தலர் 5:5, 9, 10.
16 நவீன மாதிரிகளும் இருக்கின்றன. ஐக்கிய மாகாணங்களில் ஓர் இளைஞன் சத்தியத்தைப் படிக்கவும் கூட்டங்களுக்கு வரவும் ஆரம்பித்தான். பின்பு அவன் உலக கூட்டாளிகளுடன் சேர ஆரம்பித்து சாட்சிகளுடன் தான் கொண்டிருந்த கூட்டுறவை நிறுத்திவிட்டான். வருடங்கள் கடந்தன, அவன் இப்படியாக எழுதினான்: “இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் கடவுளிடம் ஒரு சாட்சியை அனுப்பும்படியாக ஜெபித்தேன், காரணம், மறுபடியும் படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள்ளிருந்தது. நான் படிக்க ஆரம்பித்த போது ஒரு குண்டு வெடித்தது. சிகிச்சை இல்லாத ஏய்ட்ஸ் நோயுடன் சம்பந்தப்பட்ட கப்போஸீயின் சார்க்கோமா என்றழைக்கப்படும் நோய் எனக்கு இருப்பதாக ஒரு மாதத்துக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.” அவன் இப்படியாக முடித்தான்: “நான் மட்டும் அந்தச் சமயத்திலேயே வேதப்பூர்வமான எச்சரிப்புகளைப் பின்பற்றி அவற்றிற்கு செவிகொடுத்திருப்பேனானால், இன்று இந்நிலைமைக்கு வந்திருக்க மாட்டேன்.” அப்படிப்பட்ட கவலைக்கிடமான விளைவுகளைத் தவிர்க்க நீங்கள் நிச்சயமாகவே விரும்புவீர்கள்! இந்த உலகம் உங்களுக்கு அளிப்பதற்கு உண்மையில் மதிப்புள்ள எதையும் கொண்டில்லை.—1 யோவான் 2:15–17.
17 போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வது யெகோவாவின் நாமத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்பைக் கவனிப்பதுங்கூட அதைத் தவிர்க்க உதவக்கூடும். முன்னுரையில் குறிப்பிடப்பட்ட அந்த இளைஞன் ஒருவர் கொடுத்த சிகரெட்டை வாங்கிய சமயத்தில் அதைப் பார்த்த ஒருவர், “யெகோவாவின் சாட்சிகள் புகைபிடிக்க முடியும் என்பது எனக்குத் தெரியாது. நீங்கள் ஒரு சாட்சி இல்லையா?” என்று கேட்டதாகக் குறிப்பிட்டான். அந்தக் கேள்வி தன்னை மிகவும் பாதித்தது, ஏனென்றால் தான் செய்தது யெகோவாவுக்கு அவதூறை ஏற்படுத்தியது என்று அவன் பின்னால் கூறினான். அதை நீங்கள் விரும்புகிறீர்களா? பூர்வ விசுவாசமற்ற இஸ்ரவேலரைப் போன்று கடவுளுடைய பெயருக்கு அபகீர்த்தி கொண்டுவருகிற அளவுக்குக் கடவுளை நீங்கள் அவ்வளவு அலட்சியமாகக் கருதுகிறீர்களா?—சங்கீதம் 78:36, 37, 41; எசேக்கியேல் 36:22.
18 மற்றும், உங்களுடைய பெற்றோரின் பெயரையும் உணர்ச்சிகளையும் எண்ணிப்பாருங்கள். “நான் உண்மையிலேயே என்னவாக இருக்கிறேன் என்பதை என் பெற்றோர் அறிந்துகொள்ளும் நாள் வந்தது,” என்று மேல் குறிப்பிடப்பட்ட இளைஞன் எழுதினான். “அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என் வாழ்க்கையிலேயே முதல் முறையாக என் தாயும் தந்தையும் கண்ணீர் சிந்தியதைப் பார்த்தேன். நான் செய்தது கண்டு அவர்கள் அவ்வளவாகப் புண்பட்டார்கள்.” நீங்கள் போலியான இரண்டு வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்பதை உங்கள் பெற்றோர் அறிய வந்தால் அவர்களும் கண்ணீர் சிந்தக்கூடும். நீங்கள் விரும்புவதும் அதுதானா? “நற்பெயர் திரளான செல்வத்தைக் காட்டிலும் அதிக விரும்பத்தக்கது.” (நீதிமொழிகள் 22:1, தி ஜெருசலேம் பைபிள்) போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வதன் மூலம் நீங்கள் உங்கள் சொந்த பெயரைக் கெடுத்துக்கொள்கிறீர்கள். அது மட்டுமல்ல. உங்களுடைய பெற்றோரின் நற்பெயரையும் கெடுத்து, அதைச் சேற்றில் குழைத்து, அவர்களைத் தலைகுனிய செய்து, மனவேதனையில் ஆழ்த்துகிறீர்கள்.—நீதிமொழிகள் 10:1; 17:21.
19 பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரின் நற்பெயரை எப்படி சீரழிக்கக்கூடும் என்பதை யாக்கோபுடைய குமாரரின் செயல் நன்கு எடுத்துக்காட்டுகிறது. யாக்கோபின் மகள் தீனாள் கெடுக்கப்பட்டபோது, அவளுடைய சகோதரர்கள் அந்தப் பட்டணத்தின் ஆண்மக்களைக் கொன்று, பட்டணம் முழுவதையும் சூரையாடினர். இது கண்டு யாக்கோபு பின்வருமாறு புலம்பினான்: “இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெர்சியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப்பண்ணினீர்கள்.” (ஆதியாகமம் 34:30; 35:1) உங்கள் தாய் தகப்பனுடைய பெயரின் வாசனையை Any better word?நீங்களுங்கூட கெடுக்கக்கூடும், தங்களுடைய அயலகத்தாரையும் நண்பர்களையும் ஏறெடுத்துப் பார்ப்பதற்கும் வெட்கப்படும்படியாக்கிவிடும். ஆம், பைபிள் பின்வருமாறு கூறுகிறது: “மூடப்புத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.”—நீதிமொழிகள் 17:25.
20 உங்களுடைய பெற்றோருக்குக் கசப்பையும் சலிப்பையும் ஏற்படுத்த நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்பதில் நாங்கள் உறுதியாயிருக்கிறோம். ஆக உங்களுடைய செயல்கள் அவர்களைப் பாதிக்கும் விதத்தைக் குறித்து எண்ணிப்பாருங்கள். மேலும், கிறிஸ்தவ பெற்றோரைக் கொண்டிருக்கும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறதென்றால், அவர்கள் உங்களுக்குக் கொடுத்திருப்பது என்ன என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்—உயிர் மட்டுமல்ல—அதைவிட அதிக மதிப்புடைய ஒன்றையும் கொடுத்திருக்கிறார்கள். யெகோவாவைக் குறித்து பைபிள் பின்வருமாறு கூறுகிறது: “ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை [அன்புள்ள தயவு, NW] நல்லது.” (சங்கீதம் 63:3) உங்களைச் சத்தியத்தில் வளர்த்துவருவதால், கடவுளுடைய அன்பான தயவு உங்களுக்குக் கிடைக்கும்படிச் செய்திருக்கின்றனர், அவரோடு நல்ல உறவு கொண்டிருக்க உங்களுக்கு உதவியிருக்கின்றனர். இதைக் கொண்டிருப்பது உயிரைக் கொண்டிருப்பதைவிட மேன்மையானது, ஏனென்றால், நீங்கள் மரித்தாலும் கடவுள் உங்களைப் பரதீஸில் நித்திய ஜீவனடைய திரும்ப கொண்டுவருவார்.
அதைத் தவிர்த்திட மற்றவர்களுக்கு உதவுங்கள்
21 ஒருவர் போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வது உங்களுக்குத் தெரிந்திருந்தால் அப்பொழுது என்ன? முதலாவதாக, அந்த நபர் மூப்பர்களை அணுகும்படியாக உற்சாகப்படுத்துங்கள். அவரோ அல்லது அவளோ அதைச் செய்ய மறுத்தால், அப்பொழுது என்ன? அதைச் சபைக்கு அறிவிக்க வேண்டிய வேதப்பூர்வமான உத்திரவாதம் உங்களுடையது. (லேவியராகமம் 5:1) இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதை நாங்கள் உணருகிறோம், ஆனால், அதுதான் செய்யப்படவேண்டிய சரியான காரியம். “சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்,” என்று பைபிள் சொல்லுகிறது. (நீதிமொழிகள் 27:6) ஒரு 13 வயது இளம் பெண் பிள்ளை, தன்னுடைய வேதப்பூர்வமான உத்தரவாதத்தை விளக்கிய ஒரு பேச்சைக் கேட்ட பின்பு, தவறான நடத்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தன்னுடைய சிநேகிதியிடம் சென்று அவள் தன் குற்றத்தை மூப்பர்களிடம் அறிக்கையிட வேண்டும் என்று சொன்னாள். “அவள் எந்த ஒரு மூப்பரிடமாவது சென்று அதைக் குறித்துப் பேசினாளா என்பதை நான் பார்க்கச் சென்றேன்,” என்று அவள் எழுதுகிறாள். “அவள் அதைச் செய்யவில்லை, எனவே நான் அவர்களில் ஒருவரிடம் சென்று பேசினேன்.” அந்த இளம் பெண் இப்படியாகக் கேட்டாள்: “ஒரு சமயத்தில் என்னுடைய ‘சிறந்த சிநேகிதியாயிருந்தவளை’ உங்களிடம் ஒப்படைப்பதில் நான் சரியானதைச் செய்தேனா?” ஆம், சரியானதையே செய்தாள்! இதைச் செய்வதன் உடனடியான விளைவுகள் துன்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், அதன் பின்விளைவு அந்தத் தவறிழைத்தவருக்கு அதிக மகிழ்ச்சி தருவதாய், ஜீவனை இரட்சிக்கக்கூடியதாயும் இருக்கக்கூடும்.—எபிரெயர் 12:11.
22 என்றபோதிலும், முதலிடத்தில் நீங்கள் போலியான இரண்டு வாழ்க்கை வாழாதவர்களாயிருந்தால் இந்த எல்லா காரியங்களையுமே நீங்கள் தவிர்க்கலாம். எனவே, ஞானமாய் நடந்துகொள்ளுங்கள். ஒரு நெருங்கிய நண்பரிடம் கொண்டிருக்கும் உறவு போன்று கடவுளுடன் ஒரு நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ளுங்கள். அவரிடம் தவறாமல் ஜெபிப்பதன் மூலமும், அவருடைய உதவிக்குக் கேட்பதன் மூலமும், அவருடைய வார்த்தையாகிய பைபிளை ஊக்கமாக வாசிப்பதன் மூலமும் இதைச் செய்யுங்கள். இப்படியாக அவருடைய குணாதிசயங்களை நீங்கள் உண்மையிலேயே மதித்துணர்வீர்கள். அப்பொழுது, இளைஞரே, நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவதுடன், உங்கள் பெற்றோரின் இருதயத்தை மகிழ்விப்பீர்கள். ஆனால் அதைவிட அதிக முக்கியமானது, நீங்கள் யெகோவாவின் இருதயத்தை மகிழ்விப்பவர்களாயிருப்பீர்கள்.—நீதிமொழிகள் 27:11. (w88 8⁄1)
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
◻ இளைஞரில் சிலர் ஏன் இரண்டு வாழ்க்கை வாழ்கிறார்கள்?
◻ தங்களுடைய பிள்ளைகள் போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வதற்கு சில பெற்றோர்கள் எவ்விதத்தில் காரணமாகிறார்கள்?
◻ போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வது உண்மையில் எதைக் குறிக்கிறது?
◻ இளைஞர் போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வதை எப்படித் தவிர்க்கலாம்?
◻ மற்ற இளைஞரின் வினைமையான குற்றத்தை அறிந்திருக்கும் இளைஞருக்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?
[கேள்விகள்]
1, 2. ஓர் இளைஞன் போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வது குறித்த என்ன உதாரணம் கொடுக்கப்பட்டிருக்கிறது?
3. (எ) எங்களுக்கு உங்களைக் குறித்து என்ன உறுதியான நம்பிக்கை இருக்கிறது? என்றபோதிலும் நாங்கள் எதை உணர்ந்தவர்களாயிருக்கிறோம்? (பி) இளைஞரிடமாகக் கவனம் செலுத்த எங்களை எது தூண்டுகிறது?
4. சில பெரியவர்களுங்கூட எவ்விதம் போலியான இரண்டு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள்? அண்மையில் இளைஞர் மத்தியில் என்ன காரியம் கவனிக்கப்பட்டிருக்கிறது?
5. (எ) இளைஞரில் சிலர் ஏன் போலியான இரண்டு வாழ்க்கை வாழ்கிறார்கள்? (பி) போற்றத்தகுந்த வாழ்க்கை வாழும் இளைஞர் பெரும்பாலும் எப்படி நடத்தப்படுகின்றனர்? எனவே சிலர் என்ன செய்கின்றனர்?
6. பேதுருவைத் தவறாக நடந்துகொள்ளச் செய்தது எது? எனவே இது இளைஞரைப்பற்றிய நம்முடைய நிதானிப்பை எவ்விதம் பாதிக்க வேண்டும்?
7. போலியான இரண்டு வாழ்க்கை வாழும்படியாக சில இளைஞரை எது தூண்டக்கூடும்?
8. இளைஞர் போலியான இரண்டு வாழ்க்கை வாழ அடிப்படைக் காரணமாக இருப்பது என்ன?
9. (எ) தங்களுடைய பிள்ளைகள் போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வதற்குப் பெற்றோர் எவ்விதம் காரணமாயிருக்கக்கூடும்? (பி) பெரியவர்கள் எதை மதித்துணர வேண்டும்? என்ன செய்ய கவனமாயிருக்க வேண்டும்?
10. (எ) காரியங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்று பிள்ளைகளுக்கு இருக்கும் எந்த ஆர்வத்தைப் பற்றி பேசும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது? (பி) பெற்றோர் வழிநடத்துதலைக் கொடுக்க தவறும் போது அநேகமாய் விளைவு என்னவாக இருக்கிறது?
11. (எ) தங்களுடைய பிள்ளைகளை நேசிக்கிறார்கள் என்பதைப் பெற்றோர் எவ்விதம் காண்பிக்கலாம்? (பி) அப்படிப்பட்ட அன்புக்கு இளைஞர் எப்படி பிரதிபலிக்கக்கூடும்?
12. பெற்றோரின் ஞானமற்ற எந்த மனப்பான்மை பிள்ளைகள் போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வதற்கு காரணமாகிவிடுகிறது?
13. போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வது உண்மையில் எதைக் குறிக்கிறது?
14. ஒரு நபர் போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வதை ஏன் தவிர்க்க விரும்ப வேண்டும்?
15. இளைஞர் போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வதைத் தவிர்க்க எது உதவும்?
16. உலகப்பிரகாரமான வாழ்க்கைப் பாணியில் உட்பட்டிருந்த ஓர் இளைஞனுக்கு என்ன நடந்தது?
17. வேறு என்ன காரியத்தைச் சிந்திப்பதுங்கூட இளைஞர் போலியான இரண்டு வாழ்க்கை வாழ்வதைத் தவிர்க்க உதவும்?
18. (எ) தங்களுடைய பிள்ளை போலியான இரண்டு வாழ்க்கை வாழ்கிறது என்பதை அறியவந்தால் பெற்றோர் அநேகமாய் எவ்விதம் பிரதிபலிப்பார்கள்? (பி) இது ஏன் கிறிஸ்தவ இளைஞரை போலியான இரண்டு வாழ்க்கையை வெறுத்தொதுக்கும்படிச் செய்யும்?
19. யாக்கோபுடைய குமாரரின் தவறான நடத்தை எவ்விதம் அவன் மீது பிரதிபலிப்பதாயிருந்தது? இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
20. கிறிஸ்தவ பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கிடைக்கச்செய்திருக்கும் அந்த மகத்தான வெகுமதி என்ன?
21. (எ) மற்றவர்களுடைய தவறான செயல்களை அறிந்திருக்கும் இளைஞருக்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? (பி) ஒரு 13 வயது இளம் பெண் பிள்ளை வைத்த அருமையான மாதிரி என்ன?
22. இளைஞர் எந்த ஞானமான வாழ்க்கை வழியைத் தெரிந்துகொள்ளும்படி உற்சாகப்படுத்தப்படுகின்றனர்? அதன் பலன் என்னவாக இருக்கும்?
[பக்கம் 18-ன் படம்]
இரகசியமாகப் பேசுவது பெற்றோரின் அன்பை வெளிக்காட்டுகிறது
[பக்கம் 20-ன் படம்]
மற்றொரு நபர் வினைமையான குற்றத்தைச் செய்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரிந்தால், அதை அறிக்கையிடும்படி அந்த நபரை உற்சாகப்படுத்துங்கள்