அழகு மேற்பூச்சானதாகவே இருக்கக்கூடும்
முதலாவதும் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரே பெண்ணுமாகிய ஏவாள், உலகில் வாழ்ந்த பெண்களிலேயே மிகவும் அழகான பெண்ணாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவளும் அவளுடைய கணவனாகிய ஆதாமும், யெகோவுக்கு எதிராக கலகம்செய்தார்கள். ஆகவே கடவுளுடன் அவள் கொண்டிருந்த நெருங்கிய உறவை ஏவாள் இழந்து, மனிதவர்க்கத்தின் மீது கடுந்துயரை கொண்டுவருவதில் பங்கேற்றாள். அதன்பின்னர், சந்தேகமின்றி அவள் தொடர்ந்து அழகாக இருந்தாள்; என்றாலும் அவள் அழகு ஆழமற்றதாக இருந்தது.
அழகானது கடவுளின் கொடையாக இருக்கிறது; சிலர் அதை மற்றவரைக் காட்டிலும் அதிகம் பெற்றிருக்கிறார்கள். சிலர் தாங்கள் இருப்பதைக் காட்டிலும் அதிக அழகானவர்களாக, நேர்த்தியான உருவமைந்தவர்களாக இருந்திருக்க விரும்புகிறார்கள்; அநேகர் அதிக நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து தங்களுக்குள்ள அழகை முழுவதும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் ஏவாளின் உதாரணம் காண்பிக்கும் விதமாக, மற்ற தன்மைகளுடன் சேர்ந்துவராவிடில் அழகு மாத்திரமென்பது இறுதியில் பயனற்றதாகிறது. மற்ற என்ன தன்மைகள்? சாலொமோன் ராஜாவின் நாட்களில் ஏற்பட்ட ஓர் அனுபவம் அதற்கு பதிலளிக்க நமக்கு உதவுகிறது.
அழகைக் காட்டிலும் அதிகமான ஒன்று
பைபிள் புத்தகமாகிய சாலொமோனின் உன்னதப்பாட்டு உள்ளூரைச் சேர்ந்த ஆடுமேய்க்கும் பையன் ஒருவனுடன் அன்புகொண்டிருந்த ஓர் இளம் அழகிய கிராமத்துப் பெண்ணான, சூலமத்திய பெண் ஒருத்தியைப் பற்றிச் சொல்லுகிறது. அவள் அழகு ராஜாவின் கவனத்தைக் கவரவே, அவன் அவளை தன் மனைவியாக ஆக்கிக்கொள்ளும் நம்பிக்கையில், அவளை எருசலேமுக்குக் கொண்டு வரப்பண்ணினான். ஓர் இளம்பெண்ணிற்கு எப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு! அங்கு அவள் தன் அழகிய தோற்றத்தைப் பயன்படுத்தி செல்வம், அதிகாரம் மற்றும் செல்வாக்குடைய நிலையை அந்த ராஜ்யத்தில் அடைந்திருக்கலாம். ஆனால் அந்த இளம்பெண் தீர்மானமாக ராஜாவின் இச்சகம் பேசி நாடி நணுகுதலை வெறுத்து ஒதுக்கினாள். எருசலேமின் பளபளப்பிற்கும் செல்வத்திற்கும் தன் புறங்காட்டி, அவளது ஆடுமேய்க்கும் பையனுக்கு உண்மையுள்ளவளாகத் தொடர்ந்து இருந்தாள். அவளுடைய விஷயத்தில் அழகானது மேற்போக்கான ஒன்றைக் காட்டிலும் மிகவும் ஆழமான ஒன்றாக இருந்தது. அவள் ஆழமற்றவளாய், சந்தர்ப்பவாதியாய், அல்லது பேராசைக்காரியாய் இல்லை. மாறாக, தன் முன்னோளாகிய ஏவாளிடம் இல்லாத ஓர் உள்ளான அழகை அவள் கொண்டிருந்தாள்.—சாலொமோனின் உன்னதப்பாட்டு 1:15; 4:1; 8:4, 6, 10.
சரீரப்பிரகாரமான அழகின் கண்ணிகள்
சரீரப்பிரகாரமான அழகு, விரும்பத்தக்கதாக இருக்கையில், அகத்தின் அழகு என்றுமே உண்டுபண்ணாத பிரச்னைகளுக்கு வழிநடத்தலாம். கிட்டதட்ட 4,000 ஆண்டுகளுக்கு முன்பு, உதாரணமாக, கோத்திரத் தகப்பனாகிய யாக்கோபுக்கு தீனாள் என்ற மகள் இருந்தாள். இவள் சந்தேகமின்றி மிகவும் அழகாக இருந்தாள். ஞானமற்ற வகையில் அவள் “தேசத்துப் பெண்களுடன்” கூட்டுறவுகொண்டு காலம் கழிந்தபோது, சீகேம் என்ற வாலிபன் அவளால் மிகவும் கவரப்பட்டதால் அவன் அவளை கற்பழித்தான்.—ஆதியாகமம் 34:1, 2.
மேலும், வெளிப்புற அழகிற்கேற்ற அகத்தின் அழகு இல்லாவிடில், அழகுடையோரின் சுயமதிப்பீட்டை அதிகமாகப் பூரிக்க வைக்கலாம். அப்சலோம் என்ற பெயர் கொண்ட மகன் ஒருவன் தாவீது ராஜாவுக்கு இருந்தான்; அவனைப் பற்றி நாம் வாசிப்பதாவது: “இஸ்ரவேலர் அனைவருக்குள்ளும் அப்சலோமைப்போல் சவுந்தரியமுள்ளவனும் மெச்சிக்கொள்ளப்பட்டவனும் இல்லை,” (2 சாமுவேல் 14:25) ஆனால் அப்சலோமின் சரீரப்பிரகாரமான அழகு ஓர் உள்ளார்ந்த விகாரத்தை மறைத்தது: அவன் வீண்பெருமை கொண்டவனாக, சிறப்படைய பேராசையுடையவனாக, இரக்கமற்றவனாக இருந்தான். அந்த வாலிபன் தன்னுடைய தனிப்பட்ட வசீகரத்தை, இஸ்ரவேலில் தன்னைப் பின்பற்றுபவர்களின் தொகுதி ஒன்றை கட்டுவதற்குத் தந்திரமாக உபயோகித்து, பின்னர் அரசுரிமையுடைய தன் தந்தைக்கு எதிராக சதிசெய்தான். முடிவில் அவன் கொல்லப்பட்டான். ஆனால் இந்த நேர்த்தியான உருவமைந்தவன் தேசத்தை உள்நாட்டுப் போரிற்குள் மூழ்கவைத்தப் பின்பே.
ஆண்மையழகு
அப்சலோமின் காரியம் காட்டுவதுபோல், அழகுடையவர்களாக ஆண்களைப் பற்றியும் பெண்களைப் பற்றியும் வேதாகமம் சொல்லுகிறது. தன் ஆண்மை அழகினால் கண்ணியில் விழாத மனிதனுக்கு, தீனாளின் இளைய ஒன்றுவிட்ட சகோதரனாகிய யோசேப்பு ஓர் உதாரணம். (ஆதியாகமம் 30:20-24) அவன் வாலிபனாக இருந்தபோது, யோசேப்பின் சகோதரர்கள் பொறாமையின் காரணமாக, எகிப்திற்கு அடிமையாக எடுத்துச் செல்லப்படும்படி அவனை விற்றுவிட்டார்கள். அங்கு, போத்திபார் என்ற இராணுவ அதிகாரியால் விலைக்கு வாங்கப்பட்டு, உண்மையுள்ளவனாகவும் வேலையில் அக்கறையுள்ளவனாகவும் இருந்தபடியால், போத்திபாரின் வீட்டுடைமைக்கெல்லாம் கண்காணியானான். இந்தச் சமயத்தில், “யோசேப்பு அழகான ரூபமும் செளந்தரிய முகமும் உள்ளவனாய்” வளர்ந்தான்.—ஆதியாகமம் 39:6.
போத்திபாரின் மனைவி யோசேப்பின் மீது காம இச்சையை வளர்த்துக்கொண்டு, வெட்கமில்லாமல் அவனை தவறான வழியில் இழுக்க முயன்றாள். ஆனால் அந்த இளம் வாலிபனோ, தனக்குச் சரீரப்பிரகாரமான கவர்ச்சியோடுகூட உள்ளான அழகும் உண்டு என்பதைக் காட்டினான். தன்னுடைய எஜமானாகிய போத்திபாருக்கு விரோதமாகப் பாவம் செய்ய மறுத்து, அந்த ஸ்திரீயைவிட்டு ஓடிப்போனான். இதன் விளைவாக, சிறையில் அடைக்கப்பட்டான். ஏன்? ஏமாற்றமடைந்த போத்திபாரின் மனைவி, யோசேப்பு தன்னை கற்பழிக்க முயன்றதாக பொய்யாக அவன் மீது குற்றம் சாட்டினாள்! இருந்தாலும், இந்தக் கசப்பான அனுபவம்கூட யோசேப்பின் மனநிலையை வருத்தி பாதிக்கவில்லை; மிகுதியான கஷ்டத்திலும் அவனுடைய அருமையான உதாரணம், அன்றிலிருந்து, நல்மனமுள்ள ஆட்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்த உதாரணங்கள் காட்டுவதுபோல, உள்ளான அழகு—ஆட்தன்மையின் அழகு, குறிப்பாக கடவுளின் பேரில் விசுவாசத்தை அடிப்படையாக அது கொண்டிருக்கும்போது—சரீரப்பிரகாரமான அழகை காட்டிலும் அதிக அவசியமானதாக இருக்கிறது. விவாகத்தைப் பற்றி யோசிக்கும் இளைஞர்கள் இதைப்பற்றி கவனமாக இருப்பது அவசியம். வேலையில் அமர்த்த வேலையாட்களைத் தேடும் எஜமானர்களும் இதை ஞாபத்தில் வைக்க வேண்டும். நாம் சரீரப்பிரகாரமான அழகுடன் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோமோ இல்லையோ, இந்த மிகவும் முக்கியமான உள்ளான அழகை நாம் வளர்த்துக்கொள்ள முடியும் என்பதை நாம் எல்லாரும் மனதில் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இது எவற்றால் ஆனது? மேலும் நாம் இதை எப்படி வளர்த்துக் கொள்ளலாம்? பின்வரும் கட்டுரையில் இதைப்பற்றி நாம் கலந்தாலோசிக்கலாம். (w89 2/1)