ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
பர்மாவில் ‘அறுப்புக்குப் பயிர் முதிர்ந்திருக்கிறது’
◻ எழில் மிகுந்த பர்மா தேசத்தில் ராஜ்ய பிரசங்கிகள் 1,500-க்கும் அதிகமாக இருக்கின்றனர். அண்மையில் நடந்த அவர்களுடைய மாநாடுகள் பர்மா, லூஷாய், மற்றும் ஹாக்கா சின் மொழிகளில் நடத்தப்பட்டன. மொத்தம் 2,273 பேர் வருகைதந்தனர். செம்மறியாடுகள் போன்ற மக்கள் ராஜ்ய செய்தியில் கொண்டிருக்கும் அக்கறையையும், “அறுப்புக்குப் பூமியின் பயிர் முற்றிலும் முதிர்ந்திருக்கிறது,” என்ற யோவான் கண்ட தரிசனத்தையும் பின்வரும் அனுபவம் அறிவுறுத்துகிறது.—வெளிப்படுத்துதல் 14:15.
இது தினாமில் நடந்தது
◻ மத்தூப்பியில் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, ஒரு விசேஷ பயனியர் குறிப்பாக நரகத்தைப் பற்றி அறிவதில் ஆர்வமாயிருந்த ஒரு மாணவனை சந்தித்தார். பைபிள் நரகம் மனிதவர்க்கத்தின் பொதுப் பிரேதக் குழி என்று அவனுக்கு விளக்கிக்காட்டப்பட்டபோது, அவனுக்கு ஒரே ஆச்சரியம். அவன் அதைத் தனக்குள்ளேயே வைத்துக்கொள்ள முடியாதவனாய், தினாம் என்ற தன்னுடைய கிராமத்திலுள்ள உறவினர்களிடம் அதைப் பற்றிச் சொல்ல விரும்பினான். பள்ளி விடுமுறைகளின்போது, அவன் தன்னுடைய கிராமத்துக்குச் சென்று, நரகத்தைப் பற்றிய உண்மையைப் பரப்பினான். அவனுடைய மைத்துனன் அதைக் குறித்து அதிகமாய் அறிந்து கொள்ள ஆர்வமுடையவனாயிருந்ததால், அந்தப் பயனியரிடமே நேரடியாகப் பேச வேண்டுமென்று அவன் அந்த மாணவனுடன் சேர்ந்து மத்தூப்பிக்கு வந்தான். பல வாரங்கள் மாத்தூப்பியில் அவன் தங்கி பயனியரிடமிருந்து கற்றான். பின்பு, இரண்டாம் முறையாக அவன் மத்தூப்பிக்கு வந்தபோது, அந்த விசேஷ பயனியர் தன்னுடைய கிராமத்துக்கு வரவேண்டும், ஏனென்றால் அங்கு அநேகர் அக்கறையாக இருக்கின்றனர் என்று சொன்னான். அங்கிருந்த மூன்று பயனியர்களும் அந்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றனர். தினாமை வந்தடைய அவர்களுக்கு 12 மணி நேரம் எடுத்தது.
பயனியர்கள் தினாமுக்கு வந்த அந்த நாளிலே சவ அடக்க நிகழ்ச்சி ஒன்று இருந்தது. பைபிள் குறிப்பிடும் நரகத்தைக் குறித்து அதிகமாகத் தெரிந்துகொள்வதற்காகப் பக்கத்துக் கிராமங்களிலிருந்தெல்லாம் ஆட்கள் அங்கே வந்திருந்தனர். புதிதாய் வந்திருந்தவர்களைக் காண ஆட்கள் விரைந்தனர். ஒரு பைபிள் கலந்தாலோசிப்பு மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரைத் தொடர்ந்தது. அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் யோசனையுடன் அந்தக் கலந்தாலோசிப்பை இரவு 11 மணிக்கு நிறுத்தி, மறு நாள் புத்துணர்வுடன் எழுந்திருப்பதற்காக அந்தப் பயனியர்களை சற்று ஓய்வெடுக்க அனுமதித்தார். மறுநாள் காலை ஏழு மணியளவில் தொடங்கிய இவர்களுடைய கலந்துரையாடல் இரவு 10 மணி வரை தொடர்ந்தது. குறைந்த உணவு இடைவேளைகள் மட்டும்தான் இருந்தன. பயனியர்கள் அந்தக் கிராமத்தை விட்டுச் செல்லும்போது அந்த மக்கள் இவர்களைத் திரும்ப வரும்படியும், இன்னும் அதிக நேரத்தைச் செலவழிக்கும்படியும் கேட்டுக்கொண்டனர். போதனைக்குச் செவிகொடுக்கும் அப்படிப்பட்ட ஆட்களுக்கு விலைமதிக்கமுடியாத ராஜ்யத்தின் நற்செய்தியைக் கொண்டு உதவி செய்திடுவது எப்பேர்ப்பட்ட ஒரு சிலாக்கியம். ஆம், பர்மாவில் அறுப்புக்குப் பயிர் உண்மையிலேயே ‘முதிர்ந்திருக்கிறது’!
நிராகரிக்கப்பட்ட ஒரு புத்தகத்திலிருந்து சத்தியத்தைப் பெறுதல்
◻ பர்மாவில் ஒருவர் பழைய புத்தகங்களையும் தினசரிகளையும் விற்கும் தன்னுடைய நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றார். அந்தப் பழைய பேப்பர்களுக்கிடையில் மேல் அட்டை இல்லாத ஒரு பழைய புத்தகத்தைப் பார்த்தார். அதை அவர் எடுத்து வாசிக்க ஆரம்பித்துவிட்டார். சற்று நேரத்துக்குள் தன் வாசிப்பில் ஆழ்ந்து விட்டார். அது காவற்கோபுர சங்கத்தின் பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல் என்ற புத்தகமாயிருந்தது. கூடுதல் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள சங்கத்தின் கிளைக்காரியாலயத்துக்குக் கடிதம் எழுதினார். அவரைச் சந்திப்பதற்காக கிளைக் காரியாலயம் உடனடியாக ஒரு விசேஷ பயனியரை அனுப்பியது. அவருடன் ஒரு படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஒரு சில படிப்புகளுக்குப் பின்னர், சத்தியத்தை அறிந்து, தன்னுடைய கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபடுவதன் மூலம் தன்னுடைய வாழ்க்கையைச் சுத்திகரிக்க ஆரம்பித்தார். பின்பு, தன்னுடைய இந்து மத விக்கிரகங்களை நீக்கிவிட்டார். சீக்கிரத்திலேயே அவரும் அவருடைய மூத்த மகளும் யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றனர். இப்பொழுது அவர் ஓர் ஒழுங்கான பயனியராக இருக்கிறார்.
உண்மையிலேயே, பலன் மிகுந்த பர்மாவின் ஊழிய வயலில், “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்.”—மத்தேயு 9:37, 38. (w89 2/1)