யெகோவா, இளம்பருவத்திலிருந்து என் நம்பிக்கை
பேஸில் ட்சாடாஸ் சொன்னபடி
அந்த ஆண்டு 1920; அந்த இடம், கிரீஸிலுள்ள அழகிய பெலப்பனீசஸில் ஆர்கேடீய குன்றுகள். உலகத்தினரை வாரிக்கொண்டிருந்த பயங்கரமான ஸ்பானிய விஷ ஜுரத்துடன் மோசமாக நோய்வாய்ப்பட்டு, நான் படுக்கையில் இருந்தேன்.
ஒவ்வொரு சமயமும் ஆலயமணி ஒலித்தது, அது மற்றொரு பலியாளின் மரணத்தை அறிவித்தது என்று நான் உணர்ந்தேன். அடுத்த ஆள் நானாக இருப்பேனா? சந்தர்ப்பவசமாக, நான் குணமடைந்தேன், ஆனால் லட்சக்கணக்கானோர் குணமடையவில்லை. அப்போது எனக்கு எட்டு வயதே ஆகியிருந்தபோதிலும், இந்தத் திகிலூட்டும் அனுபவம் இன்னமும் என்னுடைய நினைவைவிட்டு நீங்காமல் இருக்கிறது.
ஆரம்பகால ஆவிக்குரிய அக்கறைகள்
குறுகிய காலத்திற்குப் பின்பு, தாத்தா இறந்துபோனார். சவ அடக்க ஆராதனைக்குப் பிறகு, அம்மா எங்களுடைய வீட்டின் மாடி முகப்பின்மேல், என்னுடைய தங்கையையும் என்னையும் சேர்ந்துகொண்டது எனக்கு ஞாபகமிருக்கிறது. எங்களுடைய விசனத்தைத் தணிப்பதற்கு முயற்சிசெய்துகொண்டிருந்தாள் என்பதில் சந்தேகமில்லை, அவள் அமைதியாக இவ்வாறு சொன்னாள்: “சரி, பிள்ளைகளே, நாம் எல்லாருமே வயதானவர்களாகி இறக்கவேண்டும்.”
அவள் அதை அவ்வளவு கனிவான முறையில் சொற்களாக வெளிப்படுத்தியபோதிலும், அவளுடைய வார்த்தைகள் என்னை அல்லற்படுத்தியது. ‘எவ்வளவு துயரம்! எவ்வளவு அநியாயம்!’ என்று நான் நினைத்தேன். ஆனால் அம்மா தொடர்ந்து இவ்வாறு சொன்னபோது, நாங்கள் இருவரும் ஆனந்தமடைந்தோம்: “ஆனாலும், கர்த்தர் மீண்டும் வரும்போது, அவர் மரித்தோரை உயிர்த்தெழுப்புவார், நாம் இனிமேலும் மரிக்கமாட்டோம்!” ஆ, அது ஆறுதலளிப்பதாய் இருந்தது!
அந்த மகிழ்ச்சியான சமயம் சரியாக எப்பொழுது வரும் என்பதைக் கண்டறிவதில் அது முதற்கொண்டு நான் கூர்ந்த அக்கறைகொண்டேன். அநேகரை நான் கேட்டேன், ஆனால் ஒருவராலும் எனக்குச் சொல்லமுடியவில்லை; இதைப் பொருத்தமட்டில், அந்தக் காரியத்தைச் சம்பாஷிக்கவுங்கூட ஒருவரும் அக்கறையுடையவர்களாகத் தோன்றவில்லை.
நான் ஏறக்குறைய 12 வயதாயிருக்கையில், ஒரு நாள் என்னுடைய அப்பா ஐக்கிய மாகாணங்களில் வாழ்ந்துவந்த அவருடைய அண்ணனிடமிருந்து ஒரு புத்தகத்தைப் பெற்றார். அது தி ஹார்ப் ஆஃப் காட் என்று தலைப்பிடப்பட்டு, உவாட்ச் டவர் பைபிள் அன்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்டிருந்தது. நான் அந்தப் பொருளடக்க அட்டவணையைப் பார்த்தேன், “நம்முடைய கர்த்தரின் வருகை” என்ற அதிகாரத்தை நான் பார்த்தபோது, நான் சந்தோஷத்தினால் புன்னகைசெய்தேன். நான் அதை மிகுந்த ஆர்வத்தோடு வாசித்தேன், ஆனால் வருகைக்கான எந்த ஓர் ஆண்டும் கொடுக்கப்படவில்லை என்பதனால் நான் ஏமாற்றமடைந்தேன். என்றபோதிலும், அதிக காலம் இல்லை என்பதை அந்தப் புத்தகம் சுட்டிக்காட்டியது.
விரைவில் நான் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்து, என்னுடைய படிப்புகளில் ஆழ்ந்துவிட்டேன். இருப்பினும், அமெரிக்காவிலுள்ள என்னுடைய பெரியப்பா அவ்வப்பொழுது தி உவாட்ச்டவர் பிரதிகளை அனுப்பிவந்தார், அதை நான் வாசிப்பதை மகிழ்ந்து அனுபவித்தேன். மேலும், நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சன்டே ஸ்கூலில் கலந்துகொண்டேன், அங்கு பேராயர் அடிக்கடி வந்து எங்களிடம் பேசுவார்.
ஒரு குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமையன்று, பேராயர் மிகவும் கலவரமடைந்து சொன்னார்: “பார்வையாளர்கள் நம்முடைய நகரத்தை முரண்சமயக் கோட்பாட்டுப் பிரசுரங்களினால் நிரப்பிக்கொண்டிருக்கின்றனர்.” பிறகு அவர் தி உவாட்ச்டவர் பிரதியை உயர்த்திப் பிடித்துக்கொண்டு இவ்வாறு கத்தினார்: “உங்களில் யாராவது இதுபோன்ற பிரசுரத்தை வீட்டில் காண்பீர்களாகில், அவற்றைச் சர்ச்சுக்குக் கொண்டுவாருங்கள், நான் அவற்றை எரித்துப்போடுவேன்.”
அவருடைய குரலின் தொனி என்னைக் கலக்கமடையச்செய்தது, ஆனால் அதைவிட அவருடைய பழிவாங்கும் மனநிலை, என்னை அதிகமாகக் கலக்கமடையச்செய்தது. ஆகவே நான் அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கவில்லை. என்றபோதிலும், நான் என்னுடைய பெரியப்பாவுக்கு எழுதி, இனிமேலும் உவாட்ச்டவர் பிரசுரங்களை அனுப்பவேண்டாம் என்று அவரைக் கேட்டுக்கொண்டேன். ஆயினும், நான் கிறிஸ்துவின் வருகையைப்பற்றிய விஷயத்தைத் தொடர்ந்து சிந்தித்துவந்தேன்.
ஆவிக்குரியப் பசி வளர்கிறது
கோடைக்கால விடுமுறை வந்தபோது, நான் என்னுடைய ஆடைகளைப் பெட்டியில் வைப்பதற்குத் திறந்தேன். அங்கு அடிப்பகுதியில் உவாட்ச் டவர் சொஸையிட்டியால் அச்சிடப்பட்ட மூன்று சிறுபுத்தகங்கள் இருந்தன. எப்படியோ நான் அவற்றை முன்பு கவனிக்கவில்லை. ஒன்று மரித்தோர் எங்கே இருக்கின்றனர்? (Where Are the Dead?) என்றழைக்கப்பட்டது.
‘அது அக்கறைக்குரியதாய்த் தோன்றுகிறது,’ என்று நான் நினைத்தேன். பேராயரின் எச்சரிப்பு ஞாபகத்திலிருந்தபோதிலும், அவற்றில் அடங்கியுள்ளதாக நான் நினைத்தத் தவறுகளைக் கண்டுபிடிப்பதற்கு அந்தச் சிறுபுத்தகங்களை நான் கவனமாகப் படிக்கத் தீர்மானித்தேன். நான் ஒரு பென்சிலை எடுத்துக்கொண்டு, கவனமாக ஆராயத் தொடங்கினேன். ஆச்சரியகரமாக, அந்தச் சிறுபுத்தகங்களிலுள்ள எல்லாமே நியாயமானதாகத் தோன்றியது; அதை வாசிப்பவர் பைபிளோடு ஒத்துப்பார்க்கும்படி, ஒவ்வொரு வாக்கியமும் மேற்கோளிடப்பட்ட வேதவசனங்களைக் கொண்டிருந்தது.
எங்களிடம் ஒரு பைபிள் இல்லாததால், எழுத்தாளர்களின் நோக்கத்தைப் பொருத்தமாய் அமைவிப்பதற்கு மேற்கோளிடப்பட்ட வேதவசனங்கள் தவறாகப் பொருத்தப்பட்டிருந்தனவா என்று நான் சிந்தித்தேன். ஆகவே நான் என்னுடைய பெரியப்பாவுக்கு எழுதி, எனக்கு ஒரு முழு பைபிள் பிரதியை அனுப்பிவைக்கச் சொன்னேன். அவர் உடனடியாக அனுப்பிவைத்தார். நான் இரண்டுமுறை முழுவதும் வாசித்தேன்; நான் புரிந்துகொள்ளமுடியாத விஷயங்கள் அதில் அதிகம் இருந்தபோதிலும், தானியேல் மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகங்கள் என்னுடைய ஆவலைத்தூண்டின. அவை முன்னறிவித்த விஷயங்களை நான் புரிந்துகொள்ள விரும்பினேன், ஆனால் உதவக்கூடியவர் ஒருவரும் எனக்குக் கிடைக்கவில்லை.
நான் 1929-ல் பள்ளியை விட்டுவந்தேன், அதற்குப் பிறகு உடனடியாக அமெரிக்காவிலுள்ள என் பெரியப்பா மீண்டும் எனக்கு தி உவாட்ச்டவர் பிரதிகளை அனுப்பினார். நான் அவற்றை அதிகமதிகமாக மகிழ்ந்து அனுபவிக்க ஆரம்பித்தேன், மேலும் அவற்றை எனக்கு ஒழுங்காக அனுப்பும்படி அவரைக் கேட்டுக்கொண்டேன். நான் அந்தப் பத்திரிகைகளிலிருந்து கற்றுக்கொண்டிருந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையைப்பற்றி மற்றவர்களிடம் பேசவுங்கூட ஆரம்பித்தேன். ஆனால் பிறகு என்னுடைய வாழ்க்கை எதிர்பாராத விதமாக திடீரென மாறியது.
பர்மாவில் ஆவிக்குரிய முன்னேற்றம்
என்னுடைய அம்மாவின் தம்பிகள் பர்மாவிற்கு (இப்பொழுது மயன்மார்) குடிபெயர்ந்திருந்தார்கள்; நான் அவர்களோடு சேர்ந்துகொண்டால், அது என்னுடைய அனுபவத்தை அதிகரிக்கும், ஒருவேளை எனக்கு வியாபார வாய்ப்புகளைத் திறக்கும் என்று குடும்பத்தினர் தீர்மானித்தனர். கிழக்கத்திய நாடுகள் எப்பொழுதும் என்னைக் கவர்ந்தன, ஆகவே நான் அங்குச் செல்லுகிற எதிர்பார்ப்பில் கிளர்ச்சியடைந்தேன். பர்மாவில், என்னுடைய பெரியப்பாவிடமிருந்து தொடர்ந்து நான் தி உவாட்ச்டவர் பெற்றுவந்தேன்; ஆனால் நான் தனிப்பட்ட விதமாக ஒருபோதும் பைபிள் மாணாக்கர் என்று அப்போது அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகள் யாரையும் சந்தித்ததில்லை.
ஒரு நாள், தி உவாட்ச்டவர்-ல் பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதலை விளக்கிக்காட்டும் இரண்டு தொகுதிகளாகிய வெளிச்சம் (Light) புத்தகங்களுக்கான ஓர் அறிவிப்பைக் கண்டு நான் கிளர்ச்சியடைந்தேன். அதோடுகூட, பர்மாவிலுள்ள பைபிள் மாணாக்கர்களின் நடவடிக்கைகள், பம்பாயில் அமைக்கப்பட்டுள்ள உவாட்ச் டவர் சொஸையிட்டியின் இந்தியக் கிளைக் காரியாலயத்தினால் கவனிக்கப்படுவதை நான் தெரிந்துகொண்டேன். நான் உடனடியாக வெளிச்சம் புத்தகங்களைக் கேட்டு எழுதினேன், மேலும் பர்மாவில் பிரசங்கிப்பதற்கு இந்தியாவிலுள்ள பைபிள் மாணாக்கர்களை அனுப்பவும் கேட்டுக்கொண்டேன்.
அந்தப் புத்தகங்கள் உடனடியாகத் தபாலில் வந்துசேர்ந்தன; ஒரு வாரம் அல்லது அதற்குப் பிற்பாடு, உள்ளூர் பர்மிய பைபிள் மாணாக்கர்கள் என்னைச் சந்தித்தனர். நான் வசித்துக்கொண்டிருந்த பர்மாவின் தலைநகரமாகிய ரங்கூனில் (இப்பொழுது யாங்கூன்) ஒரு சிறிய தொகுதி இருந்ததை அறிந்து நான் மகிழ்ச்சியடைந்தேன். அவர்கள் தங்களுடைய ஒழுங்கான பைபிள் படிப்பு வகுப்பில் கலந்துகொள்ளும்படியும் அவர்களோடு வீட்டுக்கு வீடு பிரசங்கத்தில் பங்குகொள்ளும்படியும் என்னை அழைத்தனர். முதலில் எனக்கு சற்று தயக்கமாயிருந்தது, ஆனால் சீக்கிரத்தில் பைபிள் அறிவை புத்த மதத்தினர், இந்துக்கள், முஸ்லிம்கள், மேலும் பெயர் கிறிஸ்தவர்கள் ஆகியோரோடு பகிர்ந்துகொள்வதை அனுபவித்துக் களிக்க ஆரம்பித்தேன்.
பிறகு இந்தியக் கிளைக் காரியாலயம் யூயெர்ட் பிரான்ஸிஸ் மற்றும் ரன்டல் ஹோப்லி என்ற இரண்டு (பயனியர்கள் என்றழைக்கப்பட்ட) முழு-நேர ஊழியர்களை ரங்கூனுக்கு அனுப்பியது. அவர்கள் இருவரும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், ஆனால் இந்தியாவில் அநேக ஆண்டுகளாக சேவைசெய்துகொண்டிருந்தனர். அவர்கள் என்னை அதிகமாக உற்சாகப்படுத்தினார்கள், யெகோவாவுக்கு என்னுடைய ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக 1934-ல் நான் முழுக்காட்டப்பட்டேன்.
ஒரு தைரியமான சாட்சி
காலப்போக்கில் இந்தியக் கிளைக் காரியாலயம் பர்மாவிற்கு அதிகமான பயனியர்களை அனுப்பியது. அவர்களில் இருவர் கிளாட் குட்மேன் மற்றும் ரான் டிப்பின், ரயில்வே நிலையத்தில் சந்தித்து நிலைய அதிகாரி சிட்னி குட் என்பவரிடம் பேசினர். அவர் அந்தப் புத்தகங்களை ஏற்றுக்கொண்டு அவற்றைப் படித்தார். மேலும் மாண்டலேயில் உள்ள தன்னுடைய விவாகமான சகோதரி டெய்ஸி டீசூஸாவுக்கு எழுத ஆரம்பித்தார். அவளுங்கூட அந்தப் புத்தகங்கள் அக்கறையூட்டுவதாய் இருப்பதைக் கண்டு, இன்னும் வேண்டுமென்று கேட்டாள்.
கத்தோலிக்க மதத்தை அப்பியாசித்துவந்த டெய்ஸி, அசாதாரணமான தைரியத்துடன்கூடிய ஒரு நபராக இருந்தாள். அவள் தன்னுடைய அயலகத்தாரைச் சந்தித்து, அவள் கற்றுக்கொண்டிருந்தக் காரியங்களை அவர்களுக்குச் சொல்ல ஆரம்பித்தாள். அவளை ஒரு பங்குத்தந்தை சந்தித்தபோது, அவள் சர்ச்சுக்குச் செல்வதை ஏன் நிறுத்திவிட்டாள் என்று விசாரித்தார்; அவர் போதித்துக்கொண்டிருந்த காரியங்களாகிய எரி நரகம் போன்றவற்றை பைபிள் ஆதரிக்கவில்லை என்பதை அவருக்கு அவள் எடுத்துக்காட்டினாள்.
கடைசியாக, அவர் அவளிடம் இவ்வாறு கேட்டார்: “இத்தனை ஆண்டுகளாக அவர்களுக்கு ஓர் எரி நரகத்தைப்பற்றிச் சொல்லிக்கொண்டுவந்த பிறகு, நான் இப்பொழுது அவர்களிடம் அப்படிப்பட்ட இடம் இல்லை என்று எப்படிச் சொல்லமுடியும்? ஒருவரும் சர்ச்சுக்கு வர விரும்பமாட்டார்கள்.”
“நீங்கள் ஒரு நேர்மையான கிறிஸ்தவராக இருந்தால், பின்விளைவுகள் என்னவாக இருந்தாலும் சரி, நீங்கள் அவர்களுக்குச் சத்தியத்தைப் போதிப்பீர்கள்,” என்று டெய்ஸி பதிலளித்தாள். பிறகு அவள் தொடர்ந்து சொன்னாள்: “நீங்கள் செய்யவில்லையென்றால், நான் செய்வேன்!” அவள் அதைச் செய்தாள்.
டிக், டெய்ஸி மற்றும் அவர்களுடைய இரண்டு மூத்த மகள்களும் நான் முழுக்காட்டுதல் பெற்ற அதே சமயத்தில் ரங்கூனில் முழுக்காட்டப்பட்டார்கள். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1937-ல், நான் அவர்களுடைய இரண்டாவது மகள் ஃபைலஸைத் திருமணம் செய்துகொண்டேன்.
இந்தியாவுக்குத் தப்பிச்செல்லுங்கள்
இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பானியப் படைகள் பர்மாமீது படையெடுத்தன, மார்ச் 8, 1942-ல் ரங்கூன் வீழ்ந்தது. இராணுவத்தைச் சேராத அயல்நாட்டினர் இந்தியாவுக்கு விரைவாக வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானோர் காடுகளின் வழியாகத் தப்பிச்செல்வதற்கு முயன்றனர், ஆனால் வழியில் பலர் மரித்துவிட்டனர். காலிசெய்யும் பொறுப்பிலுள்ள அதிகாரியை நான் தனிப்பட்டவிதமாக அறிய நேரிட்டது, ஆகவே ரங்கூனைவிட்டு கல்கத்தாவிற்குச் செல்லும் ஒரு கடைசி சரக்குக் கப்பலில் நான் பயணச்சீட்டைப் பெறமுடிந்தது. எங்களுடைய வீட்டையும் அநேக உடைமைகளையும் இத்தகைய அவசரத்தில் விட்டுவருவது, எல்லாருக்குமே ஒரு துயரமான சமயமாய் இருந்தது. ஜப்பானியர்களால் 1942 முதல் 1945 வரையாக பர்மா கைப்பற்றப்பட்டிருந்தது.
நாங்கள் இந்தியாவைச் சென்றடைந்தபோது எங்களுடைய நிதிகள் குறைவாக இருந்தன, மேலும் வேலையைக் கண்டுபிடிப்பது சுலபமானதாய் இல்லை. இது ஒரு விசுவாசப் பரீட்சையில் விளைவடைந்தது. நான் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியைச் சந்தித்தேன்; அவர் எனக்கு மிகுந்த வருவாயளிக்கும் படைத்துறையைச் சாராத ஒரு வேலையை அளித்தார், ஆனால் இராணுவ ஸ்தாபனத்தின் பாகமாகச் சேவிப்பதை அது உட்படுத்தியது. யெகோவாவின் உதவியுடன், நான் அந்த அளிப்பை மறுக்கமுடிந்தது; இதன்மூலம் ஒரு சுத்தமான கிறிஸ்தவ மனச்சாட்சியைக் காத்துக்கொண்டேன். (ஏசாயா 2:2-4) மற்ற வழிகளிலுங்கூட, நாங்கள் யெகோவாவின் அன்பான உதவிக் கரங்களை உணர்ந்தோம்.
நாங்கள் இந்தியாவின் தலைநகரமாகிய புது டில்லியில் குடியேறினோம், அங்குக் குடியிருக்குமிடங்களைப் பெறுவது ஏறக்குறைய சாத்தியமற்றதாய் இருந்தது. என்றபோதிலும், நாங்கள் நகரத்தின் மத்தியிலேயே போதிய இடவசதியுள்ள ஒரு மாடிவீட்டைக் கண்டுபிடித்தோம். அது தனியான நுழைவாயிலோடுகூடிய ஒரு பெரிய ஓய்வறையைக் கொண்டிருந்தது, இந்த அறை யெகோவாவின் சாட்சிகளுடைய டில்லி சபைக்கு அடுத்தச் சில ஆண்டுகளுக்கு ராஜ்ய மன்றமாகவும் சேவித்தது. இருப்பினும், 1941-ல் இந்தியாவில் உவாட்ச் டவர் சொஸையிட்டி பிரசுரங்களின்மீது போடப்பட்ட தடையின் காரணமாக, நாங்கள் பைபிள் புத்தகங்களைப் பெறமுடியாமல் இருந்தோம்.
எவ்வாறு அந்தத் தடை நீக்கப்பட்டது
ஒரு ஞாயிற்றுக்கிழமை 1943-ல், டில்லியின் சர்ச்சுகளில் உள்ள ஆராதனைகளில் கலந்துகொண்டிருந்தவர்கள், வித்தியாசமான சர்ச்சுகளின் 13 பாதிரிமார்களினால் கையொப்பமிடப்பட்ட ஒரு துண்டுப் பிரசுரத்தைப் பெற்றிருந்தனர். அது இவ்வாறு எச்சரித்தது: “யெகோவாவின் சாட்சிகளைக்குறித்து டில்லியின் குடிமக்கள் ஜாக்கிரதையாயிருங்கள்.” அரசியல் காரணங்களுக்காக இந்தியாவில் நாங்கள் தடைசெய்யப்பட்டிருந்தோம் என்பது குற்றச்சாட்டாகும்.
பம்பாயிலுள்ள கிளை அலுவலகத்தின் அங்கீகாரத்துடன், நாங்கள் உடனடியாகப் பாதிரியாரை அம்பலப்படுத்திக்காட்டிய ஒரு துண்டுப் பிரசுரத்தை அச்சடித்து விநியோகித்தோம். நான் நடத்தும் கண்காணியாக இருந்த காரணத்தால், வன்மையான வார்த்தைகளால் ஆன அந்தத் துண்டுப் பிரசுரத்தின் அடியில் என்னுடைய பெயரும் விலாசமும் அச்சடிக்கப்பட்டிருந்தன. பிறகு விரைவிலேயே, மார்கிரிட் ஹாஃப்மேனும் நானும் அந்தத் துண்டுப் பிரசுரத்தின் பிரதிகளை விநியோகித்துக்கொண்டிருந்ததை போலீஸ் கண்டுபிடித்தபோது, நாங்கள் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டோம். என்றபோதிலும், நாங்கள் சீக்கிரத்தில் ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டோம்.
பின்பு, அவளுடைய ஊழியத்தின்போது, இந்திய அரசப்பிரதிநிதி அவையில் பிரபலமான ஒரு மந்திரியாகிய சர் ஸ்ரீவஸ்தவா என்பவர் வீட்டை மார்கிரிட் சந்தித்தாள். அவளை சர் ஸ்ரீவஸ்தவா உபசரிப்போடு வரவேற்றார், இந்தியாவில் எங்களுடைய புத்தகங்கள் நியாயமற்ற விதமாகத் தடைசெய்யப்பட்டிருக்கிறது என்பதை சம்பாஷணையின்போது அவள் அவரிடம் சொன்னாள். சென்னை மாநகரத்திலிருந்து வந்திருந்த ஒரு சட்டப்பேரவை உறுப்பினரையும் அந்த நாளில் மார்கிரிட் சந்திக்க நேர்ந்தது. அவர் சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு நகரத்தில் இருந்தார். நம்முடைய புத்தகங்களின்மீது போடப்பட்டிருந்த தடையின் நேர்மையற்ற தன்மையை அவள் அவரிடம் குறிப்பிட்டாள், இந்தக் கேள்வியை வரவிருக்கிற கூட்டத்தில் எழுப்புவதாக அவர் உறுதியளித்தார்.
அந்தச் சமயத்தில், நான் உள்ளூர் மருத்துவமனையில் ஓர் உடற்பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தேன். சர் ஸ்ரீவஸ்தவாவுக்கு ஒரு காயம் ஏற்பட்டது, உடற்பயிற்சி மருத்துவம் அவருக்கு உதவியளிக்கக்கூடுமா என்பதைப் பார்ப்பதற்கு அந்த மருத்துவமனை என்னை அனுப்பியது. சர் ஸ்ரீவஸ்தவா சிநேகபான்மையான ஒரு நபராக இருப்பதை நான் கண்டேன், நாங்கள் அளவளாவி உரையாடுகையில், செல்வி ஹாஃப்மேனும் நானும் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டதைத் தற்செயலாகக் குறிப்பிட்டேன். பாதிரியாரின் அழுத்தத்தின் காரணமாக எங்களுடைய பைபிள் புத்தகங்கள் அரசியல் காரணங்காட்டி தடைசெய்யப்பட்டிருந்தன, ஆனால் நாங்கள் முற்றிலும் அரசியல் சார்பற்றவர்கள் என்பதை விளக்கினேன். எங்களுடைய கிளைக் காரியாலயப் பிரதிநிதியாகிய எட்வின் ஸ்கின்னர், எங்களுடைய நிலைநிற்கையை விவரிக்க ஒரு பேட்டிக்காக வேண்டுகோள் விடுத்திருந்தார், ஆனால் அவர் நிராகரிக்கப்பட்டார் என்று தொடர்ந்து சொன்னேன்.
ஓரிரண்டு நாட்களுக்குப் பிறகு, சர் ஸ்ரீவஸ்தவா என்னிடம் சொன்னார்: “திரு. ஜென்கென்ஸ் [எங்களுடைய வேலையிடமாக தயவற்றவராயிருந்த அரசாங்க அதிகாரி] சில நாட்களில் ஓய்வுபெற்றவராக இருப்பார், மேலும் அவருடைய இடத்தை சர் ஃபிரான்ஸிஸ் மூடீ என்பவர் எடுத்துக்கொள்வார். திரு. ஸ்கின்னரை வரும்படி கேட்டுக்கொள்ளுங்கள், நான் அவரை சர் ஃபிரான்ஸிஸிக்கு அறிமுகஞ்செய்கிறேன்.”
சர் ஸ்ரீவஸ்தவா தான் உறுதியளித்தபடி அந்தச் சந்திப்பை ஏற்பாடுசெய்தார். அந்தச் சமயத்தில், சர் ஃபிரான்ஸிஸ் மூடீ சகோதரர் ஸ்கின்னரிடம் சொன்னார்: “நான் எதையும் உங்களுக்கு உறுதியளிக்க முடியாது, ஆனால் நான் விஷயத்தைப் பார்த்துக்கொள்வேன்.” சில நாட்களில் சட்டப்பேரவைத் திறக்கவிருந்த காரணத்தால், சகோதரர் ஸ்கின்னர் முடிவைத் தெரிந்துகொள்வதற்கு தங்கியிருந்தார். அவருடைய வார்த்தைக்கு உண்மையாக, சென்னையிலிருந்து வந்த சட்டப்பேரவை உறுப்பினர் எழுந்து நின்று இவ்வாறு கேட்டார்: “உவாட்ச் டவர் பைபிள் அன்ட் டிராக்ட் சொஸையிட்டியின் பிரசுரங்கள் அரசியல் காரணங்களுக்காக தடைசெய்யப்பட்டிருப்பது உண்மையா?”
“இல்லை, அந்தத் தடை முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக போடப்பட்டது,” சர் ஃபிரான்ஸிஸ் மூடீ பதிலளித்தார், “ஆனால் இப்பொழுது அரசாங்கம் தடை உத்தரவை மாற்றுவதற்கு தீர்மானித்திருக்கிறது.”
அந்தச் செய்தியை நாங்கள் கேள்விப்பட்டபோது எங்களுக்கு அது என்னே ஒரு கிளர்ச்சியூட்டும் சமயமாயிருந்தது! ஒரு வாரத்திற்குப் பிறகு, அந்தத் தடையின் முடிவை உறுதிப்படுத்தும் ஒரு கடிதத்தை பம்பாயிலுள்ள கிளை அலுவலகம் பெற்றது.
போரால் பாழ்ப்படுத்தப்பட்ட பர்மாவிற்குத் திரும்புதல்
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு பிரிட்டிஷ் ஆட்சி பர்மாவிற்கு மீண்டும் வந்தது. சாட்சிகளாகிய எங்களில் பத்துபேர் சில மாதங்களுக்குப் பிறகு ரங்கூனுக்குத் திரும்பிச்சென்றோம். நிலைத்திருந்த சில உள்ளூர் சாட்சிகளை நாங்கள் மீண்டும் பார்த்து களிகூர்ந்தோம். அந்த நாடு வருந்தத்தக்க நிலையில் இருந்தது. மின்சாரம் மற்றும் பொதுப் போக்குவரத்து உட்பட, பொதுச் சேவைகள் கிடைக்காமல் இருந்தன. ஆகவே நாங்கள் ஒரு ஜீப்பை இராணுவத்திடமிருந்து வாங்கி, எங்களுடைய வருகைக்குப் பிறகு சீக்கிரத்திலே நாங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கூட்டங்களுக்கு மக்களை எடுத்துச்செல்வதற்கு அதை நன்கு பயன்படுத்தினோம்.
ஓர் அக்கறையுள்ள நபர் எங்களுக்கு நிலம் கொடுத்தார், மேலும் அந்தப் பகுதியிலுள்ள அன்பான மக்களின் உதவியுடன், நாங்கள் ஒரு பெரிய அளவான ராஜ்ய மன்றத்தைக் கட்டினோம். தடித்த மூங்கில் கம்புகளால் கட்டி, சட்டமிடப்பட்ட மூங்கில் சுவர்களினால் நல்ல விளிம்புக்கரைக்கட்டி, ஒரு கூரைவேய்ந்தோம். இங்கு, ஏப்ரல் 1947-ல், உவாட்ச் டவர் சொஸையிட்டியின் அப்போதைய தலைவராக இருந்த நாதன் H. நார் மற்றும் அவருடைய காரியதரிசியாகிய மில்டன் G. ஹென்ஷல் தங்களுடைய ரங்கூன் விஜயத்தின்போது பேச்சுகள் கொடுத்தனர். அந்தச் சமயத்தில், பர்மாவில் நாங்கள் மொத்தமாக 19 சாட்சிகளைக் கொண்டிருந்தோம். ஆனால் நியூ எக்ஸெல்சியர் அரங்கத்தில் நடத்தப்பட்ட சகோதரர் நாருடைய பொதுப்பேச்சுக்கு 287 பேர் ஆஜராயிருந்தனர்!
நாங்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறினோம்
ஜனவரி 4, 1948-ல், கிரேட் பிரட்டனிடமிருந்து பர்மாவிற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது, பெரும்பாலான ஐரோப்பியர்கள் நாட்டை விட்டுச்செல்வது மிகச்சிறந்தது என்று கருதினார்கள். ஜெபத்தோடுகூடிய சிந்தனைக்குப் பிறகு, ஃபைலஸும் நானும் எங்களுடைய மகளை அழைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவில் குடியேறத் தீர்மானித்தோம். நாங்கள் மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரமாகிய பெர்த்-ல் குடியேறினோம்.
மீண்டும் பர்மாவை விட்டுக் கிளம்பிச்செல்வது, இந்த முறை நிரந்தமாகச் செல்வது, எங்களுக்கு மிகவும் துயரமான சமயமாய் இருந்தது. அவ்வப்பொழுது அங்குள்ள எங்களுடைய அன்பானவர்களைக்குறித்துக் கேள்விப்பட்டோம், மேலும் அந்த நாட்டில் ராஜ்ய வேலையானது சீராக முன்னேறிக்கொண்டுவந்ததைக் கேள்விப்படுவது, எங்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.
ஆண்டு 1978 தொடங்கி, நான்கு ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலிய பெரிய நகரங்களிலுள்ள கிரேக்க மொழி பேசும் அனைத்துச் சபைகளிலும் சேவிக்கும் மகிழ்ச்சியை நாங்கள் அனுபவித்தோம். இது நீண்ட பயணத்தை அர்த்தப்படுத்தியது, ஏனென்றால் இந்தப் பெரிய நாட்டில் மேற்கு கடற்கரையிலிருந்து கிழக்கு கடற்கரை வரைக்கும் 4,200 கிலோ மீட்டருக்கும் மேலாக இருக்கிறது. சிறிது காலத்திற்குப் பின், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குக் கணிசமாக வித்தியாசப்படுகிற சீதோஷண நிலை, எங்களுடைய ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்குக் காரணமானது. ஆகவே நாங்கள் மறுபடியும் பெர்த்-ல் குடியேறினோம்; நான் 44 சபைகளிலுள்ள நகரம் ஒன்றில் ஒரு மூப்பராகத் தொடர்ந்து சேவை செய்துவருகிறேன்.
ஆண்டுகள் கடந்து சென்றபோது, என்னுடைய கண்பார்வை மோசமாக ஆனது, வாசிப்பதும் கடினமாகிவிட்டது. என்றாலும், உடல்நலப் பிரச்னைகள் மத்தியிலும், எங்களுடைய இருதயங்கள் இன்னமும் இளமையாய் இருக்கின்றன. யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் அனைவரும், அவருடைய தயவின் சூரிய பிரகாசம் “உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; [நாம்] வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளரு[வோம்],” என்பதைக் காணும் மகிழ்ச்சியான நாளை நாங்கள் இருவரும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.—மல்கியா 4:2.a
[அடிக்குறிப்புகள்]
a டிசம்பர் 13, 1992, இந்த வாழ்க்கை சரிதை முடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது, சகோதரர் ட்சாடாஸ் மரணத்தில் நித்திரையடைந்தார்.
[பக்கம் 24-ன் படம்]
சகோதரர் ஹென்ஷல் மற்றும் நாருடன் 1947-ல் பர்மாவில் (மயன்மார்) என்னுடைய குடும்பம்
[பக்கம் 25-ன் படம்]
ஆஸ்திரேலியாவில் பேஸில் ட்சாடாஸும் அவருடைய மனைவி ஃபைலஸும்