வாழ்க்கை சரிதை
எது சரி என்பதைத் தெரிந்தபின் அதையே செய்தல்
ஹேடன் ஸான்டர்ஸன் சொன்னபடி
“நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்” என்று இயேசு ஒருசமயம் தம் சீஷர்களிடம் சொன்னார். (யோவான் 13:17) ஆம், சில சமயங்களில் எது சரி என்று நமக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால், அதைச் செய்ய வேண்டுமே! அதுதான் கடினமானது. 80 வயதைத் தாண்டிவிட்ட நான், 40 வருடங்களாக மிஷனரியாக சேவை செய்திருக்கிறேன்; இத்தனை காலமும், இயேசுவின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். கடவுள் சொல்பவற்றைச் செய்வது உண்மையிலேயே சந்தோஷத்தைத் தருகிறது. எப்படி என்பதை விளக்குகிறேன், கேளுங்கள்.
நான் மூன்று வயது சிறுவனாக இருந்தபோது என் பெற்றோர் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பைபிள் பேச்சைக் கேட்டார்கள். அது 1925-வது வருடம். ஆஸ்திரேலியாவில், எங்களுடைய சொந்த ஊரான நியூகேஸ்ட்ல்லில்தான் அந்தப் பேச்சு கொடுக்கப்பட்டது. பேச்சின் தலைப்பு, “இப்பொழுது வாழும் லட்சக்கணக்கானோர் மரிக்கவே மாட்டார்கள்.” அந்த பைபிள் பேச்சைக் கேட்ட பிறகு என் அம்மா இதுதான் சத்தியம் என்று உறுதியாக நம்பத் தொடங்கினார், அதுமட்டுமல்லாமல் கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் தவறாமல் போக ஆரம்பித்தார். என் அப்பாவிற்கோ சீக்கிரத்தில் ஆர்வம் தணிந்துவிட்டது. அம்மாவின் புதிய நம்பிக்கையை அவர் எதிர்த்தார். அம்மா தன் விசுவாசத்தை விட்டுக்கொடுக்காவிட்டால் தான் பிரிந்துபோவதாகப் பயமுறுத்தினார். என் அம்மா, அப்பாவை நேசித்ததோடு, குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றும் விரும்பினார். அதேசமயம் கடவுளுக்குக் கீழ்ப்படிவதே மிக முக்கியம் என்பதையும் உணர்ந்தார்; ஆகவே கடவுளுடைய கண்களில் சரியானது எதுவோ அதையே செய்யத் தீர்மானமாக இருந்தார். (மத்தேயு 10:34-39) என் அப்பா, சொன்ன மாதிரியே எங்களைவிட்டுப் பிரிந்துபோனார், அதன் பிறகு அவரை நான் அபூர்வமாகவே பார்த்தேன்.
என் அம்மாவை நினைத்து எப்போதும் பெருமைப்படுகிறேன், அவர் யெகோவாவுக்கு எவ்வளவு உண்மையாக இருந்தார்! அவர் எடுத்த தீர்மானம், எனக்கும் என் அக்கா பியூலாவுக்கும் ஆன்மீக ஆசீர்வாதங்களைத் தேடித்தந்தது, அதேசமயத்தில், எது சரி என்பது நமக்குத் தெரிந்தபின் அதையே செய்ய முயல வேண்டும் என்ற முக்கியமான பாடத்தையும் கற்பித்தது.
விசுவாச பரிட்சைகள்
பைபிள் மாணாக்கர்கள், அதாவது யெகோவாவின் சாட்சிகள், முடிந்தளவு எங்களுக்கு உதவி செய்தார்கள். என் பாட்டி எங்களோடு வசிக்க ஆரம்பித்த பிறகு அவரும் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார். அம்மாவும் பாட்டியும் ஊழியத்தில் இணைபிரியாத ‘பார்ட்னர்களாக’ ஆனார்கள். அவர்கள் பார்க்க கண்ணியமாக இருந்தார்கள், அன்பாக பழகினார்கள்; ஆகவே மக்கள் அவர்களிடம் மதிப்பு மரியாதையோடு நடந்துகொண்டார்கள்.
வயதில் மூத்த கிறிஸ்தவ சகோதரர்கள் என்னை நன்கு கவனித்துக்கொண்டார்கள், எனக்கு சிறந்த பயிற்சியைத் தந்தார்கள். சீக்கிரத்திலேயே, டெஸ்டிமனி கார்டை பயன்படுத்தி வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சுருக்கமாகப் பேசுவதற்குக் கற்றுக்கொண்டேன். சிறு ஒலிப்பதிவு க்ராமாஃபோன்களில் பைபிள் பேச்சுகளை மக்களுக்கு ஒலிபரப்பினேன். அதுமட்டுமல்ல, அறிவிப்பு அட்டையைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகவும் சென்றேன். இதைச் செய்வது எனக்குக் கடினமாக இருந்தது, ஏனென்றால் நான் ஜனங்களைக் கண்டு பயந்தேன். ஆனாலும் எது சரி என்று எனக்குத் தெரிந்திருந்ததால் அதையே செய்யத் தீர்மானமாக இருந்தேன்.
பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ஒரு வங்கியில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த வேலையில், நியூ செளத் வேல்ஸ் முழுவதுமாக வங்கியின் வெவ்வேறு கிளைகளுக்குப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அந்தப் பகுதியில் யெகோவாவின் சாட்சிகள் கொஞ்ச பேர் மட்டுமே இருந்தார்கள், என்றாலும் எனக்குக் கிடைத்த பயிற்சியால் விசுவாசத்தில் உறுதியாக இருக்க முடிந்தது. அம்மா எழுதிய கடிதங்கள் என்னை உற்சாகப்படுத்தி, என் விசுவாசத்தைப் பலப்படுத்தின.
அதுவும் சரியான நேரத்தில்தான் அந்தக் கடிதங்கள் எனக்கு ஊக்கமூட்டின. இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. ராணுவத்தில் சேரும்படி எனக்கு உத்தரவு வந்தது. என் வங்கி மானேஜர் தவறாமல் சர்ச்சுக்குப் போகும் பக்திமான், உள்ளூர் ராணுவ அதிகாரியும் கூட. கிறிஸ்தவனாக என்னுடைய நடுநிலைமையைப் பற்றி அவரிடம் எடுத்துக்கூறியபோது, மதம் அல்லது வேலை, இவற்றில் எது வேண்டுமோ அதைத் தெரிவு செய்துகொள்ளும்படி சொல்லிவிட்டார். ராணுவத்திற்காக ஆளெடுக்கும் மையத்தில் நான் போய் பேசியபோது பிரச்சினை உச்சத்தை எட்டியது. அங்கு என் மானேஜரும் இருந்தார், பதிவு செய்கிறவரை நான் நெருங்கியபோது அவர் என்னையே கவனித்துக்கொண்டிருந்தார். நான் பதிவுகளில் கையெழுத்துப் போட மறுத்தபோது அங்கிருந்த அதிகாரிகள் கொதித்தெழுந்தார்கள். எனக்கு ரொம்ப பயமாகிவிட்டது. ஆனால் சரியானதையே செய்ய நான் தீர்மானமாக இருந்தேன். யெகோவாவின் உதவியோடு அமைதியாகவும் உறுதியுடனும் இருந்தேன். கொஞ்சநாள் சென்ற பிறகு, சில முரடர்கள் என்னை அடித்துப்போட காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு, உடனே பெட்டி படுக்கையையெல்லாம் எடுத்துக்கொண்டு, அடுத்த ரயிலில் கிளம்பிவிட்டேன்.
நியூகேஸ்ட்ல்லுக்குத் திரும்பின பிறகு, ராணுவத்தில் சேர மறுத்ததற்காக விசாரணைக் கூண்டில் நிறுத்தப்பட்டேன். என்னோடுகூட ஏழு சகோதரர்கள் அதே காரணத்திற்காக அங்கு நிறுத்தப்பட்டார்கள். நீதிபதி எங்களுக்கு மூன்றுமாத சிறைத்தண்டனை விதித்தார். எங்களிடம் கடுமையாக வேலை வாங்கும்படி உத்தரவிட்டார். சிறையில் நான் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல, ஆனாலும் சரியானதையே செய்ததால் நல்ல பலன்கள் கிடைத்தன. நாங்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு சிறையில் என்னுடன் இருந்த ஹில்டன் வில்கின்ஸன் என்ற சகோதரர் தன்னுடைய ஃபோட்டோ ஸ்டூடியோவில் வேலை செய்வதற்காக என்னை அழைத்தார். அங்கு என்னுடைய வருங்கால மனைவியாகவிருந்த மெலடியைச் சந்தித்தேன். அங்கு அவர் ஒரு ரிசப்ஷனிஸ்ட்டாக வேலை செய்தார். விடுதலை செய்யப்பட்டு கொஞ்ச காலத்திற்குள் யெகோவாவிற்கு என்னை ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டுதல் பெற்றேன்.
முழுநேர ஊழியனாவதற்குத் தீர்மானித்தேன்
நானும் மெலடியும் திருமணம் செய்துகொண்ட பிறகு சொந்தமாக ஒரு ஃபோட்டோ ஸ்டூடியோவைத் திறந்தோம். கொஞ்ச நாட்களுக்குள் வேலைப் பளுவால் உடல்நலம் பாதிக்கப்பட்டது, யெகோவாவிடம் இருந்த உறவும் பாதிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் டெட் ஜாரஸ் என்ற சகோதரரை நாங்கள் சந்திக்க நேர்ந்தது; அப்போது அவர் ஆஸ்திரேலிய கிளை அலுவலக அங்கத்தினராக இருந்தார், இப்போதோ ஆளும் குழு அங்கத்தினராக இருக்கிறார். அவர், ஆன்மீக இலக்குகளை வைக்கும்படி எங்களுக்கு ஊக்கமூட்டினார். அதற்குப் பிறகு எங்களுடைய ஸ்டூடியோவை விற்றுவிட்டு வாழ்க்கையை எளிமையாக்கத் தீர்மானித்தோம். 1954-வது வருடம் ஒரு சிறிய ட்ரெய்லரை வாங்கினோம், விக்டோரியா மாநிலத்தின் பல்லாரட் நகரத்திற்குக் குடிபெயர்ந்தோம், அங்கு முழு நேர ஊழியர்களாக, அதாவது பயனியர்களாக சேவை செய்யத் தொடங்கினோம்.
பல்லாரட்டிலிருந்த சிறிய சபையுடன் சேர்ந்து நாங்கள் ஊழியம் செய்தோம், யெகோவா எங்கள் முயற்சிகளை ஆசீர்வதித்தார். 18 மாதங்களுக்குள் கூட்டங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை 17-லிருந்து 70-க்கு ஏறியது. பிறகு தென் ஆஸ்திரேலியாவில் வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்வதற்கு அழைப்பு கிடைத்தது. அடுத்த மூன்று வருடங்களுக்கு நாங்கள் அடிலெய்ட் நகரத்திற்கும், முர்ரே ஆற்றின் கரை நெடுக ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழத்தோட்டங்கள் இருந்த பகுதிகளுக்கும் சென்று எல்லா சபைகளையும் சந்தித்து மகிழ்ந்தோம். எங்கள் வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட ஒரு மாற்றம்! பாசமிகுந்த சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து சேவை செய்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. எது சரி என்று தெரிந்து அதையே செய்ததற்காக எங்களுக்கு எப்பேர்ப்பட்ட பரிசு!
மிஷனரி சேவை
1958-ம் வருடத்தின் இறுதியில் நியூ யார்க் நகரில் நடைபெறவிருந்த “தெய்வீக சித்தம்” என்ற சர்வதேச மாநாட்டிற்குப் போக நாங்கள் திட்டமிட்டிருப்பதாக ஆஸ்திரேலிய கிளை அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தினோம். உடனே, அமெரிக்காவில் நடைபெறும் கிலியட் மிஷனரி பள்ளிக்கான விண்ணப்ப தாள்களை கிளை அலுவலகம் எங்களுக்கு அனுப்பிவைத்தது. எங்களுக்கு அப்போது கிட்டத்தட்ட 35 வயது ஆகிவிட்டிருந்ததால் கிலியட் பள்ளிக்குப் போகும் வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்தோம். இருந்தாலும் எங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்தோம், 32-வது கிலியட் பள்ளியில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டோம். பள்ளி முடிவடைவதற்குள் நாங்கள் எந்த நாட்டிற்கு நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்று சொல்லப்பட்டது. இந்தியா என்று கேள்விப்பட்டவுடன் பயந்தோம், ஆனால் எது சரியோ அதையே செய்யத் தீர்மானித்ததால் எங்கள் நியமிப்பை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டோம்.
1959-ம் ஆண்டு ஒருநாள் அதிகாலையில் பாம்பேக்கு (இப்போது மும்பை) கப்பலில் வந்து சேர்ந்தோம். துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான கூலியாட்கள் அங்குமிங்குமாக உறங்கிக்கொண்டிருந்தார்கள். ஏதேதோ வாசனைகள் வீசின. சூரியன் உதித்தபோதே எங்களுக்குத் தெரிந்துவிட்டது, வெயில் கொளுத்தப்போகிறது என்று! அனலான அனல். அதுபோன்ற அனலில் நாங்கள் ஒருபோதும் இருந்ததில்லை! பல்லாரட் நகரில் எங்களோடு பயனியர்களாகச் சேவை செய்த மிஷனரி தம்பதியரான லின்டன் டௌவரும் ஜென்னீ டௌவரும் எங்களை வரவேற்றார்கள். அவர்கள் இந்திய கிளை அலுவலகத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். மும்பை நகரின் மத்தியிலிருந்த பெத்தேல் வீடு இடுக்கமான ஒரு மாடியில் இருந்தது. ஆறு சகோதரர்கள் அங்கு பெத்தேலில் வாலன்டியர்களாக சேவை செய்து வந்தார்கள். ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன்பு, பயணம் செய்வதற்கு வசதியான ஹோல்டால் அல்லது கான்வாஸ் பைகள் இரண்டை வாங்கும்படி சகோதரர் எட்வின் ஸ்கின்னர் எங்களுக்கு ஆலோசனை தந்தார். அவர் 1926 முதல் இந்தியாவில் மிஷனரியாக இருந்தவர். அவர் வாங்கச் சொன்ன அந்தப் பைகள் பிற்பாடு நாங்கள் பயணம் செய்தபோது மிகவும் பிரயோஜனமாக இருந்தன. இந்திய ரயில்களில் எங்கு திரும்பினாலும் இந்தப் பைகள்தான் கண்ணில்பட்டன.
நாங்கள் ஊழியம் செய்ய வேண்டிய இடமான திருச்சிராப்பள்ளிக்குச் செல்ல இரண்டு நாட்கள் ரயிலில் பிரயாணம் செய்தோம். இந்த நகரம் தெற்கு மாநிலமாகிய மெட்ராஸில் (இப்போது தமிழ்நாடு) இருக்கிறது. அங்கு மூன்று இந்திய விசேஷ பயனியர்கள்தான் இருந்தார்கள், ஆனால் 2,50,000 மக்கள் வசித்து வந்தார்கள். அந்தப் பயனியர்களுடன் நாங்களும் சேர்ந்துகொண்டோம். அங்கு வசதிகள் குறைவாகவே இருந்தன. ஒரு சமயம் எங்களிடம் நான்கு அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாகவே இருந்தது, பிறகு அதுவும் தீர்ந்துவிட்டது, ஆனால் யெகோவா எங்களைக் கைவிடவில்லை. அப்போது சாட்சிகளுடன் பைபிளைப் படித்துக்கொண்டிருந்த ஒரு நபர் கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்ற ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதற்காக எங்களுக்குக் கொஞ்ச பணத்தைக் கடனாகக் கொடுத்தார். ஒரு சமயம் சாப்பிட எதுவும் இல்லாமல் இருந்தபோது எங்கள் வீட்டிற்குப் பக்கத்திலிருந்த ஒருவர் அன்புடன் எங்களுக்கு குழம்பை எடுத்து வந்தார். எனக்கு அது ரொம்ப பிடித்திருந்தது. ஆனால் காரம் தாங்க முடியாமல் விக்கல் வந்துவிட்டது!
ஊழியத்தில்
திருச்சிராப்பள்ளியில் சிலர் மட்டுமே ஆங்கிலம் பேசினார்கள், அநேகர் தமிழ்தான் பேசினார்கள். ஆகவே வெளி ஊழியத்தில் சுருக்கமாகத் தமிழில் பேசுவதற்காகக் கடினமாக முயற்சி செய்து கற்றுக்கொண்டோம். அதனால் மக்களிடம் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
வீட்டுக்கு வீடு ஊழியம் எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது. பொதுவாகவே இந்தியர்கள் உபசரிக்கும் குணம்படைத்தவர்கள், அதனால் அநேகர் எங்களை வீட்டுக்குள்ளே அழைப்பார்கள்; குடிப்பதற்கு அல்லது சாப்பிடுவதற்கு ஏதாவது தருவார்கள். பெரும்பாலும் அந்த ஊரின் வெப்பநிலை எப்போதுமே சுமார் 40 டிகிரி செல்ஷியஸாக இருக்கும் என்பதால் அவர்களுடைய அழைப்பை நாங்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டோம். நாங்கள் நற்செய்தியைச் சொல்வதற்கு முன்பு சொந்த விஷயங்களைப் பேசுவது நல்ல பண்பாக கருதப்பட்டது. வழக்கமாக வீட்டுக்காரர்கள் என்னிடமும் என் மனைவியிடமும் இப்படியெல்லாம் கேட்பார்கள்: “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா?” நாங்கள் “இல்லை” என்று சொல்லும்போது, “ஏன் இல்லை? நல்ல டாக்டரைப் போய் பாருங்களேன்!” என்று சொல்லுவார்கள். இப்படியாக அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வது எங்களை அறிமுகப்படுத்துவதற்கும் எங்கள் ஊழியத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்கும் வாய்ப்பை அளித்தது.
நாங்கள் ஊழியத்தில் சந்தித்த அநேகர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இந்து மதத்தின் நம்பிக்கைகள் கிறிஸ்தவ மதத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமானவை. அவர்களிடம் நாங்கள் இந்து மத கோட்பாடுகளைப் பற்றி விவாதிக்காமல் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசினோம். அதன் விளைவாக நல்ல பலன்களைப் பெற்றோம். ஆறே ஆறு மாதங்களுக்குள் எங்கள் மிஷனரி இல்லத்தில் நடைபெற்ற கூட்டங்களுக்கு கிட்டத்தட்ட 20 பேர் வரத் தொடங்கினார்கள், அதில் ஒருவர் சிவில் என்ஜினியர், அவர் பெயர் நல்லதம்பி. அவரும் அவருடைய மகன் விஜயாலயனும், கிட்டத்தட்ட 50 பேர் யெகோவாவின் ஊழியராவதற்கு உதவியிருக்கிறார்கள். விஜயாலயன், கொஞ்ச காலத்திற்கு இந்திய கிளை அலுவலகத்திலும் சேவை செய்தார்.
தொடர்ந்து பயணித்தோம்
நாங்கள் இந்தியாவிற்கு வந்து ஆறு மாதங்களே ஆகியிருந்த சமயத்தில் அந்நாட்டின் முதல் நிரந்தர மாவட்டக் கண்காணியாக பொறுப்பை ஏற்பதற்கு எனக்கு அழைப்பு கிடைத்தது. இந்தியாவிலுள்ள எல்லா இடங்களுக்கும் பயணம் செய்து மாநாடுகளை ஒழுங்கமைத்து, ஒன்பது வித்தியாசமான மொழிகளைப் பேசும் தொகுதிகளுடன் சேர்ந்து ஊழியம் செய்ய வேண்டியிருந்தது. அது சிரமமாக இருந்தது. ஆறு மாதங்களுக்குத் தேவையான துணிமணிகளையும் மற்ற சாமான்களையும், மூன்று தகரப் பெட்டிகளிலும் நம்பகமான கான்வாஸ் பைகளிலும் எடுத்துக்கொண்டு மெட்ராஸ் நகரத்திலிருந்து (சென்னை) ரயில் ஏறினோம். எங்களுக்கு நியமிக்கப்பட்ட பிராந்தியம் சுமார் 6,500 கிலோமீட்டர் சுற்றளவில் இருந்ததால் நாங்கள் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஒருசமயம், தெற்கேயுள்ள பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு அசெம்பிளியை முடித்துவிட்டு அடுத்த வாரம் நடக்கவிருந்த இன்னொரு அசெம்பிளிக்காக வடக்கே இமயமலை அடிவாரத்தில் இருக்கிற டார்ஜிலிங்குக்குப் பயணித்தோம். பெங்களூரிலிருந்து சுமார் 2,700 கிலோமீட்டர் தூரத்தில் டார்ஜிலிங் இருக்கிறது. ஆக நாங்கள் அங்கு போய் சேருவதற்கு சுமார் ஐந்து ரயில்களில் பயணிக்க வேண்டியிருந்தது.
எங்களுடைய பயண ஊழியத்தின் ஆரம்ப காலங்களில் புதிய உலக சமுதாயம் செயலில் என்ற படக்காட்சியை மக்களுக்குப் போட்டுக் காட்டி மகிழ்ந்தோம். இந்தப் படக்காட்சியைப் பார்த்த மக்கள், யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பின் வேலைகளையும் அவை எந்தளவுக்குச் செய்யப்படுகின்றன என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தது. இந்தப் படக்காட்சியைப் பார்ப்பதற்கு பெரும்பாலும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்தார்கள். ஒரு சமயம் தெரு ஓரமாகக் கூடியிருந்த மக்களுக்கு இந்தப் படக்காட்சியைப் போட்டுக் காட்டினோம். படம் ஓடிக்கொண்டிருந்த சமயத்தில் வானம் இருட்டிக்கொண்டு வந்தது. மழை கொட்டப்போவதாகத் தெரிந்தது. ஆனால் முன்பு ஒரு முறை படத்தைப் பாதியிலேயே முடித்தபோது மக்கள் ஒரே கலாட்டா செய்யத் தொடங்கிவிட்டார்கள். அதனால் இந்த முறை படத்தை வேகமாக ஓட்டி முடித்தேன். எந்தக் கலாட்டாவுமின்றி படம் வெற்றிகரமாக முடிய, மழை தூற ஆரம்பித்தது.
தொடர்ந்து வந்த வருடங்களில் நானும் மெலடியும் இந்தியாவின் பல இடங்களுக்குப் பயணித்தோம். உணவு, உடை, மொழி, இயற்கைக் காட்சிகள் ஆகிய அனைத்தும் இடத்துக்கு இடம் வேறுபட்டதால் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்வதுபோல் உணர்ந்தோம். யெகோவாவின் படைப்பில் பிரமிப்பூட்டும் எத்தனை விதங்கள்! எத்தனை வகைகள்! இந்தியாவின் வனவிலங்குகளில்கூட இது தெரிந்தது. ஒரு முறை நேபாள காட்டில் நாங்கள் தங்கியிருந்த சமயத்தில் ஒரு பெரிய புலியை கிட்டேயிருந்து பார்க்க முடிந்தது. ஆஹா! அந்த மிருகம் எவ்வளவு கம்பீரமாக இருந்தது! அதைப் பார்த்தபோது பரதீஸில் வாழ வேண்டும் என்ற ஆசை இன்னும் அதிகமானது. பரதீஸில், மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே சமாதானம் நிலவும் அல்லவா!
அமைப்பு சார்ந்த முன்னேற்றங்கள்
அந்நாட்களின்போது இந்தியாவிலிருந்த சகோதரர்கள் அமைப்பின் ஏற்பாடுகளுக்கு இசைவாக ஒருங்கிணைந்து செயல்படுவதில் இன்னும் முன்னேற வேண்டியிருந்தது. சில சபை கூட்டங்களில் ஆண்களெல்லாம் ஒருபக்கமாகவும் பெண்களெல்லாம் இன்னொரு பக்கமாகவும் உட்கார்ந்தார்கள். கூட்டங்களைச் சரியான நேரத்தில் ஆரம்பிப்பது மிக அபூர்வம். ஒரு இடத்தில் சத்தமாக மணியடித்த பிறகே சகோதரர்கள் கூட்டங்களுக்கு வந்தார்கள். மற்ற இடங்களில் மக்கள் சூரியனைப் பார்த்து நேரத்தைக் கணித்துதான் கூட்டங்களுக்கு வந்து சேர்ந்தார்கள். என்றாவது ஒரு முறை மாநாடு நடைபெறும். வட்டாரக் கண்காணிகளும் எப்போதாவது வந்து சந்திப்பார்கள். எது சரியோ அதையே செய்வதற்கு சகோதரர்கள் மனமுள்ளவர்களாக இருந்தார்கள் என்றாலும், அவர்களுக்குப் பயிற்சி தேவைப்பட்டது.
1959-ல் யெகோவாவின் அமைப்பு ராஜ்ய ஊழியப் பள்ளியைத் தொடங்கிவைத்தது. இந்த உலகளாவிய பயிற்சி திட்டத்திலிருந்து வட்டாரக் கண்காணிகள், விசேஷ பயனியர்கள், மிஷனரிகள், சபை மூப்பர்கள் ஆகிய அனைவரும் பயனடைந்தார்கள். இவர்கள் தங்களுடைய வேதப்பூர்வ பொறுப்புகளை திறம்பட்ட விதத்தில் ஏற்று நடத்த இந்தப் பள்ளி உதவியது. இந்தியாவில் 1961 டிசம்பரில் இந்தப் பள்ளி தொடங்கப்பட்டபோது நான் அதன் போதனையாளராக இருந்தேன். படிப்படியாக அந்தப் பள்ளியின் மூலமாக நாட்டிலுள்ள எல்லா சபைகளும் பலனடைந்து படுசீக்கிரமாக முன்னேறத் தொடங்கின. சகோதரர்கள், எது சரி என்பதைத் தெரிந்துகொண்டவுடன் அதையே செய்வதற்கு கடவுளுடைய ஆவி அவர்களைத் தூண்டுவித்தது.
மிகப் பெரிய மாநாடுகள் சகோதரர்களுக்கு உற்சாகமூட்டி அவர்களை ஐக்கியப்படுத்தின. அவற்றில் சிறப்பு வாய்ந்தது, 1963-ல் புது டில்லியில் நடைபெற்ற “நித்திய நற்செய்தி” என்ற சர்வதேச மாநாடு. அதற்காக இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் சகோதரர்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்தார்கள். சிலர் தங்களுடைய எல்லா சேமிப்புகளையும் செலவழித்து அவ்வாறு சென்றார்கள். அந்த மாநாட்டிற்கு 27 நாடுகளிலிருந்து 583 சகோதர சகோதரிகள் வந்திருந்தார்கள். அதனால், இந்த மாநாட்டில்தான் முதல் முறையாக இந்திய சகோதரர்கள் மற்ற நாடுகளைச் சேர்ந்த அநேக சகோதரர்களுடன் கூட்டுறவுகொள்ள முடிந்தது.
1961-ல் நானும் மெலடியும் பாம்பேயிலிருந்த பெத்தேல் குடும்பத்துடன் சேர்ந்துகொள்ள அழைக்கப்பட்டோம். அங்கு நான் கிளை அலுவலகக் குழு அங்கத்தினராக பிறகு சேவை செய்தேன். மற்ற நியமிப்புகளையும் பெற்றேன். பல வருடங்களுக்கு ஆசியாவிலும் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் மண்டலக் கண்காணியாகச் சேவை செய்தேன். இவற்றில் அநேக நாடுகளில் பிரசங்க வேலை தடை செய்யப்பட்டிருந்ததால் அங்கிருந்த சகோதரர்கள் “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய்” இருக்க வேண்டியிருந்தது.—மத்தேயு 10:16.
விஸ்தரிப்புகளும் மாற்றங்களும்
நாங்கள் முதன்முதலில் இந்தியாவிற்கு 1959-ல் வந்தபோது பிரஸ்தாபிகள் 1,514 பேர் இருந்தார்கள். இன்று அவர்களுடைய எண்ணிக்கை 24,000-ஐயும் தாண்டிவிட்டது. இந்த வளர்ச்சியின் காரணமாக பெத்தேலிலிருந்த நாங்கள் அனைவரும் இரண்டு முறை புதிய வளாகத்திற்கு மாறிச் சென்றோம். அவை பாம்பேயிலும் அதற்குப் பக்கத்திலும் இருந்தன. பிறகு மார்ச் 2002-ல் பெத்தேல் குடும்பத்தினர் புதிதாகக் கட்டப்பட்ட வளாகத்திற்குச் சென்றார்கள். இப்போது இது தென் இந்தியாவில் பெங்களூருக்குப் பக்கத்தில் இருக்கிறது. இந்தப் புதிய பெத்தேலில் தற்போது 240 பேர் இருக்கிறார்கள். 20-க்கும் அதிக மொழிகளில் பைபிள் பிரசுரங்களை அவர்களில் சிலர் மொழிபெயர்க்கிறார்கள்.
நானும் மெலடியும் பெங்களூருக்குப் போக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் மோசமான உடல்நிலை காரணமாக 1999-ல் ஆஸ்திரேலியாவிற்குத் திரும்ப வேண்டியதாயிற்று. இப்போது நாங்கள் சிட்னியிலுள்ள பெத்தேலில் சேவை செய்கிறோம். நாங்கள் ஒருவேளை இந்தியாவில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அங்கிருக்கிற எங்களுடைய நேசத்திற்குரிய நண்பர்கள் மீதும் ஆவிக்குரிய பிள்ளைகள் மீதும் எங்களுக்கிருக்கும் அன்பு மாறவே இல்லை! அவர்களிடமிருந்து கடிதங்களைப் பெறுவதில் நாங்கள் அளவிலா சந்தோஷம் அடைகிறோம்!
நானும் மெலடியும் 50 வருடங்களுக்கு மேலாக முழு நேர ஊழியத்தில் இருந்திருக்கிறோம், அது எங்களுக்கு எத்தனையோ ஆசீர்வாதங்களைத் தேடித் தந்திருக்கிறது. ஒரு காலத்தில் நாங்கள் மக்களுடைய முகங்களை ஃபோட்டோவில் பதிவு செய்தோம். ஆனால் மக்களுடைய வாழ்க்கையை கடவுளுடைய நினைவில் பதிவு செய்ய உழைப்பது அதைவிடச் சிறந்தது. கடவுளுடைய சித்தத்திற்கே எங்கள் வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க தீர்மானித்ததால் எவ்வளவு அருமையான அனுபவங்களைப் பெற்றிருக்கிறோம்! ஆம், கடவுள் சரி என்று எதைச் சொல்கிறாரோ அதையே செய்வது உண்மையில் சந்தோஷத்தைத் தருகிறது!
[பக்கம் 15-ன் தேசப்படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
இந்தியா
புது டில்லி
டார்ஜிலிங்
பாம்பே (மும்பை)
பெங்களூர்
மெட்ராஸ் (சென்னை)
திருச்சிராப்பள்ளி
[பக்கம் 13-ன் படங்கள்]
1942-ல் ஹேடனும் மெலடியும்
[பக்கம் 16-ன் படம்]
1975-ல் இந்திய பெத்தேல் குடும்பத்தினர்