விதவையாக, நான் மெய்யான ஆறுதலைக் கண்டடைந்தேன்
லில்லி ஆர்தர் சொன்னபடி
இளம் ஊழியர் ஒருவர், யெகோவாவின் சாட்சிகளைச் சேர்ந்தவர், இந்தியாவில், ஊட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு பகுதியில், வீட்டுக்கு வீடு விஜயம் செய்தார். வழக்கமுறைப்படி, பெண்கள், இவரைப் போன்று தங்களுக்குத் தெரியாத ஆட்களுக்கு கதவை திறக்கமாட்டார்கள். சில மணிநேரங்களுக்குப் பின்னர், களைப்படைந்தவராகவும், ஓரளவு உற்சாகமிழந்தவராகவும் இவர் வீட்டுக்குப் போகத் திரும்பிச் சென்றார். ஆனால் அடுத்த வீட்டைச் சென்று சந்திப்பதற்கு ஏதோ ஒருவாறு உந்துவிக்கப்பட்டவராக, அந்த வீட்டுக்குச் சென்றார். அப்போது என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள இவருக்குத் கதவைத் திறந்தப் பெண் விவரிப்பதை கவனியுங்கள்.
என்னுடைய இரண்டு மாதப் பெண் குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு, என் பக்கத்தில் 22 மாத மகனை உடையவளாக, நான் போய் கதவை உடனடியாக திறந்து யாரோ ஒருவர் நிற்பதைப் பார்த்தேன். இதற்கு முந்தின இரவுதானே நான் மிகவும் மனவருத்தப்பட்டு இருந்தேன். ஆறுதல் பெற விரும்பி, நான் ஜெபித்ததாவது: “பரலோகத் தகப்பனே, நீர் உம்முடைய வார்த்தையின் மூலமாக தயவுசெய்து எனக்கு ஆறுதல் தருவீராக.” ஆச்சரியப்படத்தக்க விதத்தில், இந்த நபர் இப்போது தன்னுடைய நோக்கத்தை இவ்வாறு விளக்கினார்: “நான் கடவுளுடைய வார்த்தையிலிருந்து உங்களுக்கு ஓர் ஆறுதலான, நம்பிக்கையளிக்கும் செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.” இவர் கடவுள் அனுப்பிய ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் உதவிக்காக ஜெபம் செய்ய எந்தச் சூழ்நிலை என்னைத் தூண்டியது?
பைபிள் சத்தியங்களைக் கற்றறிவது
நான் 1922-ம் வருடத்தில், தென்னிந்தியாவில் உள்ள அழகிய நீலகிரி மலையில் கூடலூர் என்கிற கிராமத்தில் பிறந்தேன். நான் மூன்று வயதாயிருக்கையில், என் அம்மா இறந்துவிட்டார். பின்னர், புராட்டஸ்டன்ட் பிரிவில் குருமாராக இருந்த என் அப்பா மறுவிவாகம் செய்தார். நாங்கள் பேசும் அளவுக்கு வந்தவுடன், எனக்கும், தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும், அப்பா ஜெபம் செய்யக் கற்றுக்கொடுத்தார். அப்பா, தினமும் பைபிள் வாசிக்க தன் மேசையில் உட்கார்ந்திருக்கையில், நான்கு வயதுள்ளவளாகிய நான், தரையில் உட்கார்ந்து என்னுடைய சொந்த பைபிளை வாசிப்பதுண்டு.
நான் வளர்ந்து ஓர் ஆசிரியையாக ஆனேன். பின்பு எனக்கு 21 வயதானபோது அப்பா என்னை விவாகம் செய்து கொடுத்தார். நானும், என் கணவனும், சுந்தர் என்னும் மகனைப் பெறவும் பின்னர் ரத்னா என்னும் மகளைப் பெறவும் ஆசீர்வதிக்கப்பட்டோம். என்றபோதிலும், ரத்னா பிறக்க இருந்த சமயத்தில் என் கணவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு, சீக்கிரத்தில் இறந்துவிட்டார். 24 வயதுள்ளவளாயிருக்கையில் திடீரென்று நான் இரண்டு பிள்ளைகளுடைய பொறுப்புள்ளவளாய், ஒரு விதவையானேன்.
அதற்குப் பிறகு, அவருடைய வார்த்தையிலிருந்து எனக்கு ஆறுதல் தரும்படி கடவுளிடம் நான் மன்றாடினேன், இதற்கு அடுத்த நாளிலேயே யெகோவாவின் சாட்சிகளைச் சேர்ந்த ஓர் ஊழியர் வீட்டிற்கு வந்தார். நான் அவரை வீட்டுக்குள்ளே வரவழைத்து, அவரிடமிருந்து தேவனே சத்தியபரர் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை பெற்றுக்கொண்டேன். அன்றைய இராத்திரி, நான் அந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது யெகோவா என்ற பெயரை அந்தப் புத்தகத்தில் அநேக இடங்களில் பார்த்தேன், அந்தப் பெயர் எனக்கு ஒரு விநோதமான பெயராக இருந்தது. பின்னர் அந்த ஊழியர் திரும்பவும் என்னை வந்து சந்தித்து, இது கடவுளுடைய பெயர் என்று எனக்கு பைபிளிலிருந்து காட்டினார்.
திரித்துவம், நரக அக்கினி போன்ற போதனைகள் பைபிள் சார்ந்த போதனைகள் அல்ல என்பதையும் நான் விரைவில் கற்றுக்கொண்டேன். கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் பூமி பரதீஸாக மாற்றியமைக்கப்படும் என்றும், உயிர்த்தெழுதலில் மரித்த அன்பார்ந்தவர்கள் திரும்பவும் உயிருடன் வருவார்கள் என்றும் நான் தெரிந்து கொண்டபோது ஆறுதலும் நம்பிக்கையும் பெற்றேன். மிக முக்கியமாக, என்னுடைய ஜெபத்தைக் கேட்டு எனக்கு உதவியளித்த யெகோவாவை நான் அறிந்து கொள்ளவும் அன்புகூரவும் தொடங்கினேன்.
புதிதாக கண்டடைந்த அறிவை பகிர்ந்து கொள்ளுதல்
கடவுளுடைய பெயர் காணப்படும் வசனங்களை நான் எப்படி படிக்கவில்லை என்றும், பரதீஸிய பூமியில் நித்திய ஜீவன் என்ற தெளிவான நம்பிக்கையைப் பற்றி என்னுடைய சொந்த பைபிள் வாசிப்பில் நான் ஏன் பார்க்கவில்லை என்றும் நான் யோசிக்கத் தொடங்கினேன். நான் புராட்டஸ்டன்ட் மிஷனரிகள் நடத்தும் ஒரு பள்ளியில் பாடம் கற்பித்து வந்தேன், ஆகவே இந்தப் பள்ளி நிர்வாகியிடம் அந்தப் பைபிள் வசனங்களைக் காட்டினேன். (யாத்திராகமம் 6:3; சங்கீதம் 37:29; 83:17; ஏசாயா 11:6-9; வெளிப்படுத்துதல் 21:3, 4) நாம் எப்படியோ இந்தப் பைபிள் வசனங்களைக் காணத் தவறியிருக்கிறோம் என்று நான் அவர்களிடம் குறிப்பிட்டேன். இந்தப் பள்ளி நிர்வாகி நான் சொன்னதன் பேரில் விருப்பம் தெரிவிக்காதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
பிறகு இந்தப் பைபிள் வசனங்களை மேற்கோள் கொடுத்து, அடுத்த ஊரில் இருந்த பள்ளித் தலைவிக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அவர்களோடு பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் தரும்படி அவர்களிடம் கேட்டு எழுதினேன். இங்கிலாந்திலிருந்து வந்திருந்த பிரசித்திப் பெற்ற குருமாராக இருக்கும் தன்னுடைய தகப்பன் என்னோடு இந்த விஷயத்தைக் குறித்து சம்பாஷிப்பார் என்று அவர்கள் பதில் எழுதினார்கள். இந்தப் பள்ளித் தலைவியினுடைய சகோதரர், பெயர் பெற்ற பாதிரியாராக இருந்தார்.
நான், எல்லா குறிப்புகளையும் பைபிள் வசனங்களையும் தயாரித்துக் கொண்டு தேவனே சத்தியபரர் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு என் பிள்ளைகளுடன் அவர் இருந்த இடத்துக்கு, அடுத்துள்ள ஊருக்குச் சென்றேன். யெகோவா யார் என்பதையும் திரித்துவம் இல்லை என்பதையும் மேலும் நான் கற்றுக்கொண்ட மற்ற விஷயங்களையும் ஆர்வத்துடன் அவர்களுக்கு விளக்கிக் காட்டினேன். சிறிது நேரம் அவர்கள் கவனித்துக் கேட்டார்கள், ஆனால் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. பின்பு இங்கிலாந்திலிருந்து வந்த பாதிரியார் இப்படியாகச் சொன்னார்: “நான் உனக்காக ஜெபிக்கிறேன்.” அப்படியே அவர் எனக்காக ஜெபித்து என்னை அனுப்பினார்.
தெரு ஊழியம்
ஒருநாள், யெகோவாவின் சாட்சிகளைச் சேர்ந்த ஊழியர் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளோடு தெருவில் சாட்சிக் கொடுக்க என்னை அழைத்தார். இதை நான் ஒருக்காலும் செய்ய முடியாது என்று நான் அவரிடம் கூறினேன். மேலும், இந்தியாவில் ஒரு பெண் தெருவில் நிற்பதையும், வீட்டுக்கு வீடு செல்வதையும் ஜனங்கள் கேவலமாக நினைப்பார்கள். இது அந்தப் பெண்ணுடைய நற்பெயருக்கும் அவளுடைய குடும்பத்தின் நற்பெயருக்குங்கூட அவதூறு கொண்டு வரும். நான் என் அப்பாவை ஆழமாக நேசித்து, மதிப்பு கொடுத்ததால் அவருக்குக் கெட்ட பெயரைக் கொண்டு வர நான் விரும்பவில்லை.
ஆனால் இந்த ஊழியர் ஒரு பைபிள் வசனத்தை எனக்குக் காட்டினார். அது இப்படியாகச் சொல்லுகிறது: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” (நீதிமொழிகள் 27:11) இவர் சொன்னதாவது: “நீங்கள் யெகோவாவின் சார்பாகவும் அவருடைய ராஜ்யத்தின் சார்பாகவும் இருப்பதை வெளிப்படையாக காட்டுவதன் மூலம் அவருடைய இருதயத்தை சந்தோஷப்படுத்துங்கள்.” வேறு எதையும் பிரியப்படுத்த விரும்பாமல், யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்த விரும்பி, பத்திரிகைகள் கொண்ட என்னுடைய பையை எடுத்துக்கொண்டு அவரோடு நான் தெரு ஊழியம் செய்தேன். நான் இதை எப்படி செய்தேன் என்று இப்போதுங்கூட என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இது, 1946-ல் என்னை அவர் அணுகி, சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு நடந்தது.
பயத்தை மேற்கொள்ள உற்சாகப்படுத்தப்பட்டேன்
நான் 1947-ல் இந்தியாவின் கிழக்குக் கரையோரத்தில், சென்னை மாநகர எல்லைப்புறப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கற்பிக்கும் வேலையை ஏற்றுக்கொண்டு, என்னுடைய பிள்ளைகளோடு அவ்விடத்திற்கு சென்றேன். இந்த ஊரில் சுமார் எட்டு யெகோவாவின் சாட்சிகள் அடங்கிய ஒரு சிறிய தொகுதி ஒழுங்காக ஒன்றுகூடினர். இந்தக் கூட்டங்களுக்கு ஆஜராக, 25 கிலோமீட்டர்கள் நாங்கள் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. இந்தியாவில் அப்போது பெண்கள் சாதாரணமாக தனியாக பயணம் செய்வதில்லை. தங்களை வெளியே கொண்டு செல்ல ஆண்களை நம்பியிருந்தனர். எனக்கு, பஸ்சில் ஏறுவது, ஒரு டிக்கெட் கேட்டு வாங்குவது, பஸ்சிலிருந்து இறங்குவது போன்ற காரியங்கள் தெரியாது. நான் யெகோவாவை கட்டாயம் சேவிக்க வேண்டும் என்று உணர்ந்தேன், ஆனால் எவ்வாறு? ஆகையால் நான் இவ்வாறு ஜெபம் செய்தேன்: “யெகோவா தேவனே, உம்மை சேவிக்காமல் என்னால் வாழ முடியாது. என்றாலும் ஓர் இந்திய பெண்ணாக வீட்டுக்கு வீடு செல்வதென்பது என்னால் முடியவே முடியாது.”
இந்த மனப்போராட்டத்திலிருந்து விடுபடுவதற்கு யெகோவா என்னை மரித்துப் போக அனுமதிப்பார் என்று இருந்தேன். இருந்தபோதிலும், ஏதோ சில வசனங்களை பைபிளில் படிக்கலாமென நான் தீர்மானித்தேன். தற்செயலாக நான் பைபிளை எரேமியா புத்தகத்திற்கு திறந்தேன். இப்படியாக அது சொல்கிறது: “நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. நீ [அவர்களுடைய முகத்தின் காரணமாக, NW] பயப்பட வேண்டாம்; உன்னை காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்.”—எரேமியா 1:7, 8.
யெகோவாவே என்னுடன் உண்மையில் பேசுவதாக நான் உணர்ந்தேன். ஆகையால், தைரியங்கொண்டு, உடனடியாகத் தையற்பொறியிடம் சென்று பத்திரிகைகளைக் கொண்டு போக பை ஒன்றைத் தைத்தேன். ஊக்கமாக ஜெபித்த பிறகு தனியாகச் சென்று, வீட்டுக்கு வீடு ஊழியம் செய்து, எடுத்துச் சென்ற எல்லா பிரசுரங்களையும் அளித்துவிட்டு ஒரு பைபிள் படிப்பையும்கூட அன்றைய தினம் ஆரம்பித்தேன். என்னுடைய வாழ்க்கையில் யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்க உறுதிசெய்து கொண்டு, அவர் மீது முழு நம்பிக்கை வைத்தேன். நித்திக்கப்பட்டபோதிலும், வெளியரங்கமாக பிரசங்கிக்கும் வேலை என்னுடைய வாழ்க்கையின் ஓர் ஒழுங்கான பாகமாக ஆனது. எதிர்ப்பின் மத்தியிலும் என்னுடைய சேவை சிலருடைய மனதில் ஆழமாக பதிந்தது.
அநேக வருடங்களுக்குப் பின்னர், நானும் என் மகளும் சென்னையில் வீட்டுக்கு வீடு ஊழியம் சென்றபோது அந்தக் காரியம் எடுத்துக்காட்டப்பட்டது. உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்த இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர், என்னுடைய வயதை தவறாக நினைத்துக் கொண்டு இவ்வாறு சொன்னார்: “நீங்கள் பிறப்பதற்கு முன்பாகவே நான் இந்தப் பத்திரிகைளைப் பார்த்ததுண்டு! ஒரு பெண், முப்பது வருடங்களுக்கு முன், ஒவ்வொரு நாளும் மவுன்ட் ரோடில் நின்றுகொண்டு இந்தப் பத்திரிகைளைக் கொடுப்பார்.” இவர் பத்திரிகைக்கு சந்தா செய்ய விரும்பினார்.
மற்றொரு வீட்டில் ஓர் இந்து பிராமணர், வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர், எங்களை வீட்டுக்குள்ளே வரவழைத்து இப்படியாகச் சொன்னார்: “அநேக வருடங்களுக்கு முன்பு மவுன்ட் ரோடில் ஒரு பெண் காவற்கோபுரம் பத்திரிகைகளை விநியோகிப்பார்கள். அவர்களுடைய மரியாதைக்காக நீங்கள் இப்போது எனக்குக் கொடுப்பதை வாங்கிக் கொள்கிறேன்.” இருவரும் குறிப்பிட்டுச் சொன்னப் பெண் நானாக இருந்ததால், அவர்களிடம் நான் சிரிக்க மட்டும் செய்தேன்.
பலப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டேன்
யெகோவாவுக்கு என்னுடைய ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலமாக அக்டோபர் 1947-ல் நான் அடையாளப்படுத்திக் காண்பித்தேன். அப்பொழுது, முழு மாநிலத்திலும் நான் மட்டும் தழிழ்–பேசும் பெண் சாட்சியாக இருந்தேன், ஆனால் இன்றைக்கு நூற்றுக்கணக்கான தமிழ்–பேசும் பெண்கள், விசுவாசமுள்ள, சுறுசுறுப்புள்ள யெகோவாவின் சாட்சிகளாக உள்ளனர்.
நான் முழுக்காட்டுதல் எடுத்த பிறகு, எல்லா பக்கங்களிலிருந்தும் எதிர்ப்பு வந்தது. என்னுடைய தம்பி எழுதினான்: “நீங்கள் மரபு முறைமை மற்றும் ஒழுக்கமுறை ஆகிய எல்லாவற்றையும் கடந்து அடியெடுத்து விட்டீர்கள்.” நான் வேலை செய்த பள்ளியிலிருந்தும் சமுதாயத்திலிருந்தும் எதிர்ப்பு வந்தது. ஆனாலும், தொடர்ந்து ஊக்கமாக ஜெபிப்பதன் மூலம் நான் யெகோவாவை மிகவும் இறுக்கமாக பற்றிக்கொண்டேன். நான் நடு இராத்திரியில் எப்பொழுதாவது எழுந்தால் மண்ணெண்ணெய் விளக்கைக் கொளுத்தி உடனடியாக படிக்க ஆரம்பித்துவிடுவேன்.
நான் பலப்படுத்தப்பட்டதன் காரணமாக, மற்றவர்களுக்கு ஆறுதலளிக்கவும், உதவவும் என்னால் முடிந்தது. நான் பைபிள் படிப்பு நடத்திய ஒரு வயதான இந்து அம்மா யெகோவாவின் வணக்கத்தின் சார்பாக உறுதியான நிலைநிற்கை எடுத்தார்கள். இந்த அம்மா இறந்தப் பின் அந்த வீட்டில் இருந்த இன்னொரு பெண் இப்படியாகச் சொன்னார்: “தான் வணங்கத் தெரிந்துகொண்ட கடவுளிடம் முடிவு வரையில் உண்மைத்தவறாமல் இந்த அம்மா இருந்தது தானே எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.”
நான் பைபிள் படிப்பு நடத்திய மற்றொரு பெண் எப்போதுமே சிரிப்பதில்லை. அவளுடைய முகம் எப்போதும் கவலையையும் வருத்தத்தையும் பிரதிபலித்தது. ஆனால் யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொடுத்தப் பிற்பாடு, அவரிடம் ஜெபம் பண்ணும்படியாக இந்தப் பெண்ணை நான் உற்சாகப்படுத்தினேன், ஏனெனில், அவர் நம்முடைய பிரச்னைகளை அறிந்திருக்கிறார், நம்மில் அக்கறையுடையவராகவும் இருக்கிறார் என்றும் சொன்னேன். இதற்கு அடுத்த வாரம் இந்தப் பெண்ணுடைய முகம் பிரகாசித்தது. இந்தப் பெண் சிரிப்பதை நான் இப்பொழுது முதல் முறையாகப் பார்த்தேன். இதற்கான காரணத்தை இந்தப் பெண் இப்படியாகத் தெளிவாக்கினார்: “நான் யெகோவாவிடம் ஜெபித்தேன், இருதயத்திலும் மனதிலும் சமாதானம் பெற்றேன்.” இந்தப் பெண் யெகோவாவுக்கு தன்னுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து அநேக கஷ்டங்கள் மத்தியிலும் அவருக்கு உண்மையுள்ளவளாய் நிலைத்திருக்கிறார்.
பொறுப்புகளை சமாளித்தல்
இரண்டு சிறிய பிள்ளைகளை கவனிக்க வேண்டிய பொறுப்பு இருந்ததன் காரணமாக, யெகோவாவுக்கு முழுநேரமாக, ஒரு பயனியராக, சேவை செய்ய வேண்டும் என்கிற என்னுடைய ஆசையை பூர்த்தி செய்ய முடியாது என்று நான் நினைத்தேன். நான் நினைத்ததற்கு மாறாக, சேவையில் மற்றொரு புதிய அம்சமானது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது, பைபிள் பிரசுரங்களை தமிழில் மொழிபெயர்க்க ஒருவர் தேவைப்பட்டது. யெகோவாவுடைய உதவியுடன் இந்த வேலையைச் செய்துகொண்டும், அதே சமயத்தில் ஓர் ஆசிரியையாக உலகப்பிரகாரமான வேலையைச் செய்வது, பிள்ளைகளை கவனித்துக் கொள்வது, வீட்டு வேலைகளைச் செய்து, எல்லா கூட்டங்களுக்கும் ஆஜராவது மற்றும் வெளி ஊழியத்தில் ஈடுபடுவது போன்ற இந்த எல்லா காரியங்களையும் செய்துகொண்டுமிருந்தேன். முடிவாக, பிள்ளைகள் வளர்ந்த பின், நான் ஒரு விசேஷித்த பயனியராக சேவிக்கத் தொடங்கினேன், கடந்த 33 வருடங்களாக இந்தச் சிலாக்கியத்தை அனுபவித்து வருகிறேன்.
சுந்தரும் ரத்னாவும் சிறு வயதாயிருக்கையிலேயே, யெகோவாவை நேசிக்கவும், தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலேயும் அவருடைய அக்கறைகளுக்கு எப்பொழுதும் முதலிடம் கொடுக்கும்படியான விருப்பத்தையும் மனதில் பதியச் செய்ய என்னால் ஆனதை நான் செய்தேன். படுக்கையிலிருந்து எழுந்தவுடன், அவர்கள் முதலில் யெகோவாவிடம் பேச வேண்டும் என்றும், தூங்குவதற்கு செல்லும் முன் கடைசியாக அவர்கள் யெகோவாவிடம் பேசிவிட்டு படுக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிந்திருந்தனர். மேலும் வீட்டில் செய்வதற்குரிய பள்ளிப்பாட வேலைகள் இருப்பதன் காரணமாக, கிறிஸ்தவக் கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்திற்கும் தயார் செய்வதை அவர்கள் விட்டுவிடக்கூடாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். தங்களுடைய பள்ளிப்பாடப் படிப்பில் மிகச் சிறந்ததைச் செய்ய உற்சாகப்படுத்திய போதிலும், உயர் கல்வி கற்க நான் அவர்களை ஒருபோதும் வற்புறுத்தவில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அதை மிக முக்கியமான காரியமாக கருதிவிடுவார்கள் என்று பயந்து நான் அவ்வாறு செய்தேன்.
இவர்கள் முழுக்காட்டுதல் எடுத்த பிறகு, தங்கள் பள்ளி விடுமுறை நாட்களை பயனியர் ஊழியம் செய்வற்கு பயன்படுத்தினர். நான் இருந்தது போல கூச்சமுள்ள பயந்த சுபாவத்தையுடைய ஒரு பெண்ணாக இல்லாமல் தைரியமுள்ள ஒரு பெண்ணாக இருக்க ரத்னாவை நான் உற்சாகப்படுத்தினேன். இவள் தன்னுடைய உயர்நிலை கல்வியையும் வர்த்தகப் பயிற்சியையும் முடித்தப் பின் பயனியர் ஊழியம் செய்ய தொடங்கினாள், பின்னர் ஒரு விசேஷித்த பயனியராக ஆனாள். காலப்போக்கில், இவள் பயணக் கண்காணியாகிய ரிச்சர்டு காபிரியேல் என்பவரை மணம் செய்தாள். இவர் இந்தியாவிலுள்ள காவற்கோபுர சங்கத்து கிளைக்காரியாலய ஆலோசனைக் குழுவின் ஒத்திசைவாளராக இப்போது சேவிக்கிறார். இவர்களும், இவர்களுடைய மகளாகிய அபிகாயிலும் இந்தியக் கிளைக்காரியாலயத்தில் முழு நேரமாக சேவை செய்கிறார்கள், மேலும் இவர்களுடைய சிறிய மகனாகிய அந்திரேயா, நற்செய்தியை அறிவிக்கும் ஒரு பிரஸ்தாபியாக இருக்கிறான்.
என்றாலும், சுந்தர் 18 வயதுள்ளவனாக இருக்கையில் யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவுக் கொள்வதை நிறுத்தினபோது என் மனமுடைந்தது. இதற்குப் பின்வந்த ஆண்டுகள் மனவேதனைத் தரும் ஆண்டுகளாக எனக்கு இருந்தன. அவனை வளர்ப்பதில், எந்தவித குற்றங்கள் செய்திருந்தாலும் அவற்றை மன்னித்து, சுந்தர் தன் உணர்வுக்கு வந்து திரும்பி வர நான் யெகோவாவிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டேன். ஆனால், காலப்போக்கில் நான் முற்றிலும் நம்பிக்கை இழந்தேன். இதற்குப் பின், 13 வருடங்களுக்குப் பிற்பாடு ஒரு நாள் அவன் என்னிடம் வந்து இவ்வாறு சொன்னான்: “அம்மா, நீங்கள் கவலைப்படவேண்டாம்; நான் சரியாகிவிடுவேன்.”
இதற்குப் பின்னர் விரைவில் சுந்தர் ஆவிக்குரிய ரீதியில் முன்னேற விசேஷித்த முயற்சிகளை எடுத்தான். யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு சபையில், கண்காணிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படும் அளவுக்கு அவன் முன்னேறினான். பிற்பாடு, ஒரு பயனியராக ஆவதற்கு, நல்ல சம்பளம் கிடைத்த ஒரு வேலையை விட்டுவிட்டான். இப்பொழுது, இருவரும், இவனும் இவனுடைய மனைவியாகிய எஸ்தரும் இந்தியாவின் தெற்குப் பகுதியில், பெங்களூரில், இந்த ஊழியத்தைச் செய்கிறார்கள்.
வாழ்நாள் முழுவதும் ஆறுதல்
கடந்த அநேக வருடங்களாக, துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவிக்க என்னை அனுமதித்ததற்கு நான் எப்பொழுதும் யெகோவாவுக்கு நன்றியறிதலுள்ளவளாக இருக்கிறேன். இவைகளை நான் அனுபவிக்காமல், யெகோவாவின் நற்குணத்தையும், அவருடைய இரக்கத்தையும் மற்றும் அவருடைய கனிவான கவனிப்பு, பாசம் ஆகியவற்றின் வெளிக்காட்டுதல்களையும் இந்த அளவுக்கு ருசிபார்ப்பதன் அருமையான சிலாக்கியத்தை இழந்திருப்பேன். (யாக்கோபு 5:11) யெகோவா “திக்கற்ற பிள்ளை”யையும் “விதவை”யையும் கவனித்துப் பராமரிக்கிறார் என்று பைபிளில் வாசிப்பது இருதயத்தை அனலூட்டச் செய்கிறது. (உபாகமம் 24:19-21) ஆனால் அவருடைய கவனிப்பையும், பராமரிப்பையும் நாம் உண்மையில் அனுபவிக்கையில், இதிலிருந்து நமக்கு கிடைக்கும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் நம்மால் அதனோடு ஒப்பிட முடியாது.
நான் என் சுயபுத்தியின் மேல் சாயாமல், மாறாக, என் வழிகளிலெல்லாம் யெகோவாவை நினைத்துக் கொள்ள அவர் மேல் முழு நம்பிக்கை வைக்க கற்றுக்கொண்டேன். (சங்கீதம் 43:5; நீதிமொழிகள் 3:5, 6) ஓர் இளம் விதவையாக நான் அவருடைய வார்த்தையிலிருந்து ஆறுதலுக்காக ஜெபித்தேன். பைபிளில் உள்ளதை அறிந்து கொள்வதாலும் அதனுடைய புத்திமதிகளை வாழ்க்கையில் அப்பியாசிப்பதன் காரணமாகவும், முடிவில்லாத ஆறுதலைக் கண்டடைந்தேன் என்று இப்போது 69-வது வயதில் என்னால் உண்மையில் சொல்ல முடியும்.
(w91 2/1)
[பக்கம் 26-ன் படத்தில் லில்லி ஆர்தர்]
[பக்கம் 27-ன் படம்]
லில்லி ஆர்தர் தன்னுடைய குடும்ப அங்கத்தினர்களோடு