இந்தியாவை எங்கள் வீடாக்கிக் கொண்டோம்
என் சகோதரி லியோனாவும் நானும் எங்களால் முடிந்தளவுக்கு மிகவும் பண்புடன் தரையில் வசதியாக உட்கார முயன்றோம். எங்கள் முன் பளபளவென இரண்டு வாழை இலைகள் வைக்கப்பட்டு, அதில் சுடசுடச் சோறும் பல்வகைக் கூட்டுகளும், சட்னிகளும், இனிப்புகளும் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. இந்தியா வந்து ஒரு வாரத்திற்கும் குறைவாக இருந்தபோதிலும், இரு பெண்களாகிய நாங்கள் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தோம்.
அந்தப் பந்தியில் கலந்து கொண்ட மக்களைப் பார்த்து, அவர்கள் செய்வது போலவே, எங்களுடைய வலது கையால் உணவை எடுத்து, எங்கள் விரல்களால் அதைப் புசிக்க ஆரம்பித்தோம். அது ஒரு உஷ்ணமான நாள், நாங்கள் அந்த வரவேற்புப் பந்தலில் உட்கார்ந்து, நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்டக் காரமான கூட்டுகளைச் சாப்பிடும்போது, எங்கள் முகங்களில் வியர்வை ஊற்ற ஆரம்பித்துவிட்டது. மிளகாய்த் தூள் எங்கள் மூக்குகளில் நீர் வடியச் செய்தது. நாங்கள் மற்றவர்கள் பார்ப்பதற்கு உண்மையிலேயே ஓர் அக்கறைக்குரிய காட்சிப் பொருட்களாக இருந்திருப்போம்! ஆனால் நாங்கள் இந்த ஒரு சம்பவத்தை மறக்கவே முடியாது, இது 38 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் இந்தியாவுக்கு அறிமுகமான ஆரம்பப் பகுதியாக இருந்தது.
அந்தச் சமயம் முதல் நாங்கள் இந்தியாவையும் அதன் மக்களையும் நன்கு அறியவந்ததோடு, இந்தத் தேசத்தை எங்கள் வீடாக ஆக்குவதற்கு முயன்றோம். ஏன்? தீரச் சாதனைகளின் ஓர் ஆவியால் மட்டும் அல்ல; மாறாக நாங்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை உடையவர்களாய் இருந்தோம். என்றபோதிலும், நாங்கள் இந்தியாவுக்கு எப்படி வந்தோம், எங்களை மாற்றியமைத்துக்கொள்ள உதவியது என்ன என்பதை நாங்கள் முதலாவது விளக்குகிறோம்.
கானடா தேசத்தில் எங்கள் ஆரம்ப வாழ்க்கை
நாங்கள் கானடா தேசத்தில் சிறிய ஹம்போல்ட் விவசாய குடியில் பிறந்தோம். 1930-களில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவின் காரணத்தால், நாங்கள் பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், வேலைக்குப் போக வேண்டும் என்றும் எங்கள் தந்தை சொன்னார். நாங்கள் உண்மையிலேயே அழுதோம். உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு, ஆனால் அடிப்படை பொருளாதார தேவைகள் முதல் இடத்தைப் பெற்றது.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது, என் சகோதரி லியோனா கானடா தேசத்து விமானப் படையில் சேர்ந்தாள், நானோ வீட்டில் இருந்து வேலை செய்தேன். நான் ஒழுங்காகக் கத்தோலிக்க சர்ச்சுக்குச் சென்று பாடகர் குழுவிலும் பாடினேன். ஆனால் பெந்தெகொஸ்தே ஆட்கள் வந்தபோது, அவர்கள் எனக்கு ஒரு பைபிள் தந்தார்கள், அதை நான் பாட்டு நிகழ்ச்சிகளுக்குக் எடுத்துச்செல்ல ஆரம்பித்தேன். நாங்கள் பாட்டுப் பாடாத சமயங்களில் பைபிளை வாசிப்பேன். என்னுடைய சமய குருவிடம் இது சொல்லப்பட்டது, அவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். நான் மற்றவர்களில் நல்ல செல்வாக்கு செலுத்துகிறவளாக இல்லை, எனவே நான் பாட்டு நிகழ்ச்சிகளுக்கு வரக்கூடாது என்று சொல்லப்பட்டேன். உண்மையில் நான் சர்ச்சிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டேன். அதற்குப் பின்னர் நான் சர்ச்சுக்குச் செல்லவில்லை.
இதற்கிடையில், யெகோவாவின் சாட்சிகள் எங்கள் வீட்டுக்கு வருவார்கள், எங்கள் குடும்பம் வாசிப்பதற்குப் பல பைபிள் சார்ந்த பிரசுரங்கள் விட்டுச்செல்வார்கள். நான் சாட்சிகளோடு படிக்க ஆரம்பித்தேன். லியோனா விடுமுறைக்கு வந்தபோது, நான் கற்றுக்கொண்டிருந்த காரியங்களை அவளிடம் சொன்னேன். எனக்கு படிப்பு எடுக்கப்படும்போது அவளும் உட்கார்ந்து, தான் கற்றுக்கொண்டிருந்ததில் விருப்பம் காண்பித்தாள். ஒட்டாவாவில், 1945-ல் இராணுவத்திலிருந்து விடுப்பு பெரும் வரையாக அவள் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தாள். என் சகோதரியும் நானும் 1946 யெகோவாவின் சாட்சிகளின் களிகூரும் ஜாதிகள் தேவராஜ்ய மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்ற 2,602 பேரில் சேர்ந்திருந்தோம்.
வாழ்க்கையில் எங்கள் நோக்கத்தைத் தீர்மானித்தல்
1949-ல் லியோனாவும் நானும் அல்பர்டாவில் கல்காரிக்கு இடமாறிச் சென்றபோது, அங்கு நாங்கள் பயனியர்கள் என்று அழைக்கப்பட்ட அநேக முழுநேர ஊழியர்களைச் சந்தித்தோம், இவர்கள் எங்களைப் பயனியர் ஊழியத்தை எடுக்கும்படிக்கு உற்சாகப்படுத்தினர். முதலில் நாங்கள் தயங்கினோம். எங்கள் வங்கி கணக்கைச் சற்று பெருக்கிக்கொள்ள வேண்டும் என்று உணர்ந்தோம். ஆனால் அந்தப் பிராந்தியத்திலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய பயணக் கண்காணி எங்களை ஊக்குவித்ததனால் நாங்கள் ஒரு வங்கி கணக்கு இல்லாமலேயே பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தோம். கியூபெக் மாகாணத்தில் பயனியர் சேவை செய்வதற்கான அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டோம், அவ்விடத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கைகள் தடையின் கீழ் இருந்தது.
ரயில் பயணச்சீட்டு வாங்குவதற்கு எங்களிடம் பணம் இல்லை, எனவே லியோனாவும் நானும் மற்ற இரண்டு பெண்பிள்ளைகளுடன் சேர்ந்து கனடாவினூடே கியூபெக்கிலிருந்த மான்ட்ரியலுக்குப் போகும் வாகனங்களில் இலவச பயணம் வேண்டி சென்றடைந்தோம். அதற்குப் பின்னர் ஐக்கிய மாகாணங்களில் அமைந்திருந்த கிலியட் காவற்கோபுர பைபிள் பள்ளியின் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அயல்நாடுகளில் மிஷனரி ஊழியத்தை ஏற்றுக்கொண்ட அநேக இளம் ஆண்களையும் பெண்களையும் பார்த்தோம். உடனடியாகவே நாங்களும் அந்தப் பள்ளியில் சேர்ந்துகொள்வதற்கான எங்கள் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்தோம்.
நாங்கள் அதற்கு அழைக்கப்படுவோம் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை, எனவே 20-வது வகுப்புக்கு அழைக்கப்பட்டது எங்களுக்கு உண்மையிலேயே ஆச்சரியமாயிருந்தது. இந்த வகுப்பு 1952-ன் இலையுதிர் பருவக்காலத்தில் நடந்தது. நாங்கள் இந்தியாவுக்கு ஊழிய நியமிப்பைப் பெறுவோம் என்று சொல்லப்பட்டது, மற்றும் ஓர் இந்திய வகுப்புத்தோழியிடமிருந்து மலையாள மொழியில் சிறப்புப் போதனை அளிக்கப்பட்டது. இந்தியாவில் எங்களுடைய நோக்கம் எவ்வளவுக்கு அதிகமான நல்மனமுள்ள மக்கள் பைபிள் சத்தியத்தை அறிகிற அறிவை அடைய உதவி செய்வதாகும்.
இந்தியாவை எங்கள் வீடாக்கிக் கொள்ளுதல்
1953-ல் கிலியட் பள்ளி பட்டத்திற்குப் பிறகு, நாங்கள் மொத்தத்தில் 13 பேர் இந்தியாவுக்குக் கப்பற் பயணமாகப் புறப்பட்டோம். பம்பாய் சேருவதற்கு ஒரு மாதம் எடுத்தது. மக்கள் கூட்டங்களையும் பிச்சைக்காரர்களையும் பார்ப்பது எங்களுக்கு உண்மையிலேயே ஆச்சரியமாய் இருந்தது, ஆனால் வித்தியாசமான இந்த நிலைமைகளுக்கு நாங்கள் மெதுமெதுவாக பழகிக்கொண்டோம்.
பம்பாயிலிருந்து நாங்கள் கேரளா மாகாணத்திற்கு ரயில் பயணமாய்ப் புறப்பட்டோம். எங்களில் ஏழு பேர் திருச்சூர் நகருக்கு ஊழிய நியமிப்பைப் பெற்றோம். அங்கு அந்தச் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம் ஒன்று இல்லை. நாங்கள் ஒரு மிஷனரி இல்லத்தை வாங்கினோம், ஆனால் அதில் மேசை நாற்காலிகள் இல்லை, எனவே அந்தச் சமயத்திற்கு நாங்கள் தரையில் பாய் விரித்துத் தூங்கினோம். எங்களுடைய தினசரி வேலை, கிணற்றுத் தண்ணீர் பாதுகாப்பான குடிநீராக இருப்பதற்கு அதைக் கொதிக்க வைப்பதும், குளிப்பதற்கு இன்னும் அதிக நீரைச் சூடாக்குவதுமாக இருந்தது. எங்கள் சமையல் உட்பட இந்த அனைத்துக் காரியங்களும் ஒற்றைத் திரி மண்ணெண்ணை அடுப்பில் செய்யப்பட்டது.
வீட்டிற்குச் சற்று தூரத்தில் நாகமும் மற்ற பாம்புகளும் இருக்கும் இடத்தில்தான் கழிவறை அமைந்திருந்தது. பெண் பிள்ளைகளாக இருந்த நாங்கள் எப்படி உணர்ந்தோம் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். மேலும் மரங்களிலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும் மெல்லிய பச்சைப் பாம்புகள் அந்தப் பக்கமாகப் போகும் எவரையும் கொத்தும் என்பதாகவும் எச்சரிக்கப்பட்டோம். இரவு நேரங்களில் நாங்கள் அங்கு செல்ல தைரியமற்றவர்களாய் இருந்தோம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அப்படிச் செல்ல நேரிடும்போது, நாங்கள் தரையில் ஓசை எழுப்பும் வகையில் பலமாக இடித்து பெரும் சப்தம் போட்டதுடன் மரங்களுக்குத் தூரமாகவே இருந்தோம். ஆம், காரியங்கள் முற்றிலும் வித்தியாசமாய் இருந்தது. ஆனால் எங்கள் நோக்கத்தை நாங்கள் மனதில் காத்துக்கொண்டதால், காலப்போக்கில் அதற்கேற்ப எங்களை மாற்றிக் கொண்டோம். நிலைமைகள் மிகவும் கடினமாக இருந்ததாலும், எங்கள் பணியை விட்டுவிடுவது குறித்து சற்றும் நினைத்துப்பார்க்கவில்லை.
முதல் நாளிலேயே நாங்கள் பிரசங்க உழியத்தில் பங்குபெற்றோம். உடனேயே எங்களைச் சுற்றி ஆட்கள் கூடியிருப்பதைப் பார்த்தோம். எங்களைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவர்களுடைய ஆர்வத்தைக் கண்டு நாங்கள் பயந்து பாதுகாப்புக்கு மிஷனரி வீட்டிற்குச் சென்றுவிட்டோம். என்றபோதிலும் சற்று நேரத்துக்குப் பின்னர், மக்கள் மற்றவர்களில் கொண்டிருந்த உண்மையான அக்கறையை நாங்கள் போற்ற ஆரம்பித்தோம்.
பைபிள் பிரசங்கத்தை அளிப்பதற்கு முன்புங்கூட, பின்வரும் கேள்விகள் கேட்கப்பட்டோம்: உங்களுடைய அப்பா, அம்மா யார்? நீங்கள் ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள்? உங்கள் வயது என்ன? உங்களுக்குச் சம்பளம் கொடுப்பது யார்? நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள்? நீங்கள் ஏன் விவாகம் செய்துகொள்ளவில்லை? உங்களுக்குப் பிள்ளைகள் வேண்டாமா? இப்படிப்பட்ட விவரங்களைக் கேட்டப் பின்னரே ஆட்கள் பொதுவாக எங்கள் செய்திக்குச் செவிகொடுக்கின்றனர். இந்த மக்களை இன்னும் அதிகமாக அறிய ஆரம்பிக்க வந்தபோது, எங்கள் புதிய சூழலில் சற்று செளகரியமாக இருக்க ஆரம்பித்தோம்.
கேரளம் ஓர் அழகான இடம், பசுமையான, ஏராளமான தென்னை மரங்கள் கொண்ட இடம். திறந்த வெளிகள் நிறைய இருந்தன, நாங்கள் வீடு திரும்புகையில் நெல் வயல் வரப்புகளில் நடந்து செல்வது எங்களுக்கு அமைதியான ஒன்றாய் இருந்தது. சில சமயங்களில் நாங்கள் கிராமங்களை அடைவதற்காக காயல் வழியே படகில் செல்வோம். சூழல் இளைப்பாறுதலளிப்பதாய் அமைந்திருந்தது. ஆம், ஆட்கள் அதிக சுறுசுறுப்பாக இருந்தனர், ஆனால் செவி கொடுத்துக் கேட்பதற்கு அவர்கள் நேரம் செலவழித்தனர்.
எங்களுடைய பகுதியில் கிறிஸ்தவமண்டல மிஷனரிகளும் இருந்தனர், ஆனால் அந்தப் பிராந்திய மக்கள் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே இருந்த வித்தியாசத்தை அறிந்துகொண்டனர். அவர்கள் வித்தியாசமான சமுதாய பணியில் ஈடுபட்டிருந்தனர், ஆனால் பைபிள் போதனையைக் குறித்ததில் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. அவர்களைப் போன்று நாங்கள் பெரிய மாளிகை வீடுகளில் வாழவில்லை, கோடையில் மலைப்பகுதிகளுக்குச் செல்லவில்லை. உண்மையில், கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் கிறிஸ்தவமண்டலத்துக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தினர்.
நாங்கள் கேரளத்தில் ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் செலவழித்தோம், பின்னர் பம்பாய்க்கு மாற்றலானோம். இங்குதான் இன்றுவரை சேவித்துவருகிறோம். உண்மைதான், பெரிய நெருக்கடியான மாநகருக்கு மாறிச் செல்வது இன்னும் சில மாற்றங்களைத் தேவைப்படுத்தியது. ஆனால் இந்தப் புதிய ஊழிய நியமிப்பு இந்தியாவின் பெருமளவுக்கு வித்தியாசமான மக்களுடன் தொடர்பு கொள்ளச் செய்திருக்கிறது.
ஆரம்பமுதல், எங்களுடைய இந்திய சகோதர சகோதரிகளை நன்றாக அறிய வந்திருக்கிறோம். அவர்கள் அதிக உபசரிக்கும் தன்மை கொண்ட மக்கள், எங்களைத் தங்களோடு தங்கும்படி எப்பொழுதுமே அழைப்பு கொடுப்பார்கள். அவர்களுடைய வீடுகள் பொதுவாக மிகச் சிறியவை, நாங்கள் பழக்கப்பட்ட தனிவசதி இருப்பதில்லை. நாங்கள் அவர்களுடைய ஒரே அறையில்தான் தூங்குவோம், அவர்களுடைய தாத்தா அறையின் ஒரு மூலையிலும், பல பிள்ளைகள் எங்களைச் சுற்றியும் தரையில் படுத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் காண்பித்த அன்பு இருக்கும் வசதிக்கு எங்களை அமைத்துக்கொள்ளச் செய்தது.
கடந்த ஆண்டுகளினூடே, நாங்கள் முதலில் இருந்துவந்த இடத்தை “வீடு” என்று குறிப்பிடாமலிருக்கக் கற்றுக்கொண்டோம். மாறாக, நாங்கள் எங்கு ஊழியம் செய்ய நியமிக்கப்படுகிறோமோ, அந்த இடமே எங்கள் வீடு. வித்தியாசங்களை மேன்மைப்படுத்துவதற்கு மாறாக, விருப்பங்களிலும், காரியங்களைச் செய்யும் முறைகளிலும் எங்களைச் சுற்றியுள்ள ஆட்களைப் போல இருக்கக் கற்றுக்கொண்டோம்.
அண்மையில், பம்பாயிலிருந்து நாங்கள் முதலாவது அனுப்பப்பட்ட கேரளாவுக்குச் சென்றோம். காரியங்கள் மாறிவிட்டனவா? சரி, நாங்கள் முதலாவது கேரளாவுக்குச் சென்றபோது, அந்த மாநிலம் முழுவதும் 300-க்கும் குறைவான சாட்சிகளே இருந்தார்கள், ஆனால் நாங்கள் ஆஜராயிருந்த மாவட்ட மாநாட்டில் 4,000-க்கும் அதிகமான ஆட்கள் இருந்தனர். பைபிளை 30 ஆண்டுகளுக்கு முன் எங்களோடு படித்தவர்களில் சிலர் யெகோவாவை இன்னும் உண்மையோடு சேவித்துவருகிறார்கள் என்பதைப் பார்ப்பதில் எங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி!
1953-ல் எங்களுடைய மிஷனரி சேவையை நாங்கள் ஆரம்பித்தபோது, கனடா தேசத்தில் அநேக அன்பானவர்களை விட்டுவந்தோம். ஆனால் இயேசுவின் வார்த்தைகள் உண்மையாக இருக்கும் வகையில், நாங்கள் வேகமாக அநேக அப்பாக்களையும், அம்மாக்களையும், அக்கா தங்கைகளையும், அண்ணன் தம்பிகளையும் கொண்டிருக்கலானோம். (மாற்கு 10:28-30) செம்மறியாடு போன்ற ஆட்கள் கடவுளுடைய வார்த்தையிலிருந்தது சத்தியத்தைக் கற்றுக்கொள்ள உதவி செய்கையில் நாங்கள் ஆவிக்குரிய பிள்ளைகளால் ஆசீர்வதிக்கப்பட்டோம். எங்கள் நோக்கத்தைப் பார்வையிலிருந்து இழக்காதிருந்தது அநேக ஆசீர்வாதங்களைக் கொண்டுவந்தது. இந்தியாவை எங்கள் வீடாக்கிக் கொண்டதில் நாங்கள் எவ்விதத்திலும் வருத்தப்படவில்லை, அதைத் திருப்தியோடு திரும்பிப் பார்க்கிறோம்.—டில்லி லக்மத் கூறினது. (g91 2/22)
[பக்கம் 27-ன் படங்கள்]
கேரளாவில் ஒரு கால்வாய்
ரப்பர் உற்பத்தி