நரகம் பற்றிய உண்மை
தெளிவாகவே, மரணத்துக்குப் பின் தண்டனை என்ற நம்பிக்கைக்குப் பின் அமைந்திருக்கும் கோட்பாடு என்னவென்றால், மனிதனின் மாம்ச உடல் மரிக்கும்போது உண்மையான மனிதன் மரிப்பதில்லை ஆனால் ஏதோ ஒன்று—பொதுவாய் அழைக்கப்படும் ஆத்துமா—உடலின் மரணத்தைத் தப்பிப்பிழைக்கிறது என்பதே. நாம் இதற்கு முந்திய கட்டுரையில் பார்த்தபடி, இந்த நம்பிக்கை மெசபொத்தேமியாவிலிருந்த பூர்வீக பாபிலோனியர் மற்றும் சுமேரியரிடமாகச் செல்கிறது. பின்னர் இது கிரேக்கரால் பின்பற்றப்பட்டது, பிளேட்டோ போன்ற இவர்களுடைய தத்துவ ஞானிகள் அந்தக் கோட்பாட்டிற்கு மெருகூட்டினர். “உடல் மற்றும் ஆத்துமா” என்ற பண்படுத்தப்பட்ட அவர்களுடைய இரட்டை நம்பிக்கை விசுவாச துரோக யூத நம்பிக்கையின் பாகமானது.
பெயர் கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட பின்வாழ்க்கை என்ற நம்பிக்கையை எப்பொழுது ஏற்றுக்கொண்டனர்? நிச்சயமாகவே இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் வாழ்ந்து வந்த காலத்தில் அல்ல. ஃபிரெஞ்சு என்சைக்ளோபீடியா யுனிவெர்சாலிஸ் கூறுவதாவது: “[ஏற்கப்படாத] பேதுருவின் திருவெளிப்பாடு (பொ.ச. 2-வது நூற்றாண்டு) நரகத்தில் பாவிகளின் தண்டனையையும் வாதனையையும் விளக்கும் முதல் கிறிஸ்தவ நூலாகும்.”
உண்மை என்னவெனில், ஆரம்ப சர்ச் தந்தையர் மத்தியில் நரகம் பற்றிய ஏராளமான கருத்துவேறுபாடுகள் இருந்ததாகத் தெரிகிறது. ஜஸ்டின் மார்ட்டர், அலெக்சாந்திரியா கிளெமண்டு, டெர்ட்டூலியன் மற்றும் சைப்ரியன் ஆகியவர்கள் எரிநரகத்துக்குச் சாதகமாக இருந்தனர். ஆரிகன் நரகத்துக்கு ஒரு பரிகாரத் திருப்பத்தைக் கொடுக்க முயன்றார், நரகத்திலுள்ள பாவிகள் கடைசியில் இரட்சிப்படைவர் என்று உரிமைபாராட்டினார். அவரைச் சற்று அதிகமாக அல்லது குறைவாக நாஸியான்ஸஸ் மற்றும் நிசாவின் கிரெகரி பின்பற்றினர். ஆனால் நரகத்தைப் பற்றிய அப்படிப்பட்ட தன்மையான கருத்துகளுக்கு அகஸ்டீன் முடிவுகட்டினார். பூர்வ கிறிஸ்தவ கோட்பாடுகள் என்ற தன்னுடைய புத்தகத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பேராசிரியர் J.N.D. கெல்லி எழுதுகிறார்: “ஐந்தாவது நூற்றாண்டு போல், இந்த வாழ்க்கைக்குப் பின்பு பாவிகளுக்கு இரண்டாவது வாய்ப்பு இராது என்றும் அவர்களை விழுங்கும் அங்கினி ஒருபோதும் அணைக்கப்படாது என்றும் இருந்த வன்மையான கோட்பாடு எவ்விடத்தும் மேலோங்கியிருந்தது.”
உத்தரிக்கும் ஸ்தலத்தைக் குறித்ததில், ஆர்ஃபியஸ்—மதங்களின் ஒரு பொது சரித்திரம் என்ற புத்தகம் பின்வருமாறு சொல்கிறது: “எதிர்கால கனத்திற்கும் கண்டனத்திற்கும் இடையே ஒரு தேர்ந்தாயும் நிலை, அதாவது ஆத்துமாக்கள் நெருப்பினால் சுத்திகரிக்கப்படுதல் இருந்தது என புனிதர் அகஸ்டீன் கருதினார். இதுதான் உத்தரிக்கும் ஸ்தலம் பற்றிய ஆர்ஃபிக் [புறமத கிரேக்கர்] மற்றும் வெர்ஜீலிய [புறமத ரோமர்] கோட்பாடு: இதைப்பற்றி சுவிசேஷங்களில் ஒரு வார்த்தைகூட இல்லை. . . . உத்தரிக்கும் ஸ்தலம் என்ற கோட்பாடு . . . ஆறாவது நூற்றாண்டில் அமைக்கப்பட்டு அதை ஃப்ளாரன்ஸ் ஆலோசனைச் சபை (1439) சர்ச்சின் ஒரு கோட்பாடாக ஆக்கியது.” தி நியு கத்தோலிக் என்ஸைக்ளோப்பீடியா ஒப்புக்கொள்வதாவது: “உத்தரிக்கும் ஸ்தலம் பற்றிய கத்தோலிக்க கோட்பாடு பாரம்பரித்தின் மேல் சார்ந்தது, பரிசுத்த வேதாகமத்தின் பேரில் அல்ல.” லிம்போ குறித்ததில், ரோமின் கார்டினல் ரேட்ஸிங்கர், இது “தற்காலிகமாய்க் கொள்ளப்பட்ட ஓர் இறைமையியல் வாத ஆதாரக்கருத்து மட்டுமே,” என்று ஒப்புக்கொள்கிறார்.
மரணத்துக்குப் பின் தண்டனை இல்லை
பைபிளைப் பற்றியது என்ன? மரணத்தைத் தொடர்ந்து ஆத்துமா உடலைப் பிரிந்து வாழ்கிறது, எனவே ஓர் எரி நரகத்தில் அல்லது உத்தரிக்கும் ஸ்தலத்தில் அது தண்டிக்கப்படக்கூடும் என்று அது கூறுகிறதா? நியு கத்தோலிக் என்சைக்ளோபீடியா கூறுகிறது: “ஆத்துமா மரணத்துக்குப் பின் உயிர்வாழ்கிறது என்ற கருத்து பைபிளில் தெளிவாகக் காணப்படுவதில்லை. . . . ப[ழைய] ஏ[ற்பாட்டின்] ஆத்துமா என்பது மனிதனின் ஒரு பாகத்தைக் குறிக்கவில்லை, ஆனால் முழு மனிதனையும் குறிக்கிறது—உயிருள்ளவனாக மனிதனைக் குறிக்கிறது. அதுபோல, பு[திய] ஏ[ற்பாட்டில்] அது மனித உயிரைக் குறிக்கிறது: ஒரு தனி நபரின் உயிரைக் குறிக்கிறது.”
எனவே மரணத்துக்குப் பின் தண்டனை என்ற அந்த வாதம் மடிந்துவிடுகிறது. பைபிள் கூறுகிறது: “பாவஞ் செய்கிற ஆத்துமா சாகும்.” (எசேக்கியேல் 18:4) அது மேலும் கூறுகிறது: “பாவத்தின் சம்பளம் மரணம்.” (ரோமர் 6:23) எனவே, கல்நெஞ்ச துன்மார்க்கர் “கெஹன்னா”வில், “நித்திய அக்கினி”யில் அல்லது “அக்கினிக் கடலில்” முடிவைக் காண்பார்கள் என்று பைபிள் சொல்லும்போது, அவர்கள் நித்திய மரணத்தை, “இரண்டாம் மரணத்தை” அடைவதைக் குறிப்பிட வெறுமென ஓர் அடையாள அர்த்த மொழியைத்தானே பயன்படுத்துகிறது.—மத்தேயு 23:33; 25:41, 46; வெளிப்படுத்துதல் 20:14; 21:8;a 2 தெசலோனிக்கேயர் 1:7–9-ஐ ஒப்பிடவும்.
உயிர்த்தெழுதலால் நரகம் வெறுமையாக்கப்படுகிறது
அப்படியென்றால் நரகம் வெப்பமுள்ளதா? பைபிள் பிரகாரமாய் அப்படி இல்லை. உண்மைதான், “நரகம்” என்று சில பைபிள்களில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெயு மற்றும் கிரேக்கு சொற்கள் வெறுமென மனிதவர்க்கத்தின் பொதுப் பிரேதக்குழியைக் குறிக்கிறது. இது சித்திரவதையின் ஒரு வெப்பமான இடம் அல்ல. மாறாக இது ஓர் ஓய்வு இடம், இதிலிருந்து மரித்தோர் உயிர்த்தெழுதல் மூலம் வருவார்கள். (பிரசங்கி 9:10; அப்போஸ்தலர் 24:15) சுவிட்சர்லாந்தில் பேசல் பல்கலைக்கழகத்தின் இறைமையியல் பிரிவு மற்றும் பாரீஸ் சார்போனின் பேராசிரியர் ஆஸ்கர் கல்மான் “மரித்தோரின் உயிர்த்தெழுதல் குறித்த கிறிஸ்தவ எதிர்பார்ப்புக்கும் ஆத்துமா அழியாமை என்ற கிரேக்கரின் நம்பிக்கைக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசம்” குறித்து பேசுகிறார். “பின்வந்த கிறிஸ்தவம் இரண்டு நம்பிக்கைகளுக்கும் ஓர் இணைப்பை ஏற்படுத்தியது . . . உண்மையில் ஓர் இணைப்பு அல்ல, ஆனால் ஒன்றை [உயிர்த்தெழுதல் பற்றிய பைபிள் கோட்பாட்டை] துறந்து, மற்றொன்றை [மனித ஆத்துமா அழியாமை என்ற புற மத நம்பிக்கையை] ஏற்பதாக இருக்கிறது.—தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.
யெகோவாவின் சாட்சிகள் ஆத்துமா அழியாமை என்ற கருத்துக்குச் சாதகமாக உயிர்த்தெழுதலில் தங்களுடைய நம்பிக்கையைத் துறந்திடவில்லை. தங்களுடைய மகிழ்ச்சியான நம்பிக்கையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவும், நரகம் வெப்பமுள்ள இடமல்ல என்ற உண்மையை பைபிளில் இருந்து உங்களுக்கு நிரூபிக்கவும் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். (w89 10/1)
[அடிக்குறிப்புகள்]
a இவற்றின் பேரில் கூடுதல் தகவல்களுக்கும், ஓர் எரி நரகக் கோட்பாட்டை ஆதரிக்கும் முயற்சியில் சிலர் பயன்படுத்தும் மற்ற பைபிள் வசனங்களுக்கும் உவாட்ச் டவர் பைபிள் சொஸையிட்டி பிரசுரித்துள்ள இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? என்ற புத்தகத்தைப் பாருங்கள்.