நற்செய்தியை பூகோள முழுவதும் பிரஸ்தாபித்தல்
கடவுளுடைய ராஜ்யம் அரசாளுகிறது! செய்திகளில் மிகச் சிறந்த செய்தி இதுவே. அதன் காரணமாக இயேசுவினால் முன்னறிவிக்கப்பட்ட, யோவானின் தரிசனத்தில் தூதனால் அறிவிக்கப்பட்ட “நற்செய்தியை” உலகமுழுவதிலுமுள்ள 37,00,000-க்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகள் உற்சாகத்துடன் 1989-ல் அறிவித்தனர். (மத்தேயு 24:14; வெளிப்படுத்துதல் 14:6) அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னபடி: .“அவர்களின் சத்தம் பூமியெங்கும் அவர்களின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசி வரைக்கும் செல்லுகிறதே.” (ரோமர் 10:18) உண்மையில் ஒவ்வொரு தேசத்திலும், கோத்திரத்திலும், பாஷையிலும், ஜனத்திலும் உள்ள நபர்கள் “தேவனுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்” என்ற அவர்கள் அழைப்பிற்கு சந்தோஷமாக பிரதிபலித்தார்கள்.—வெளிப்படுத்துதல் 14:7.
இனிமேலும் ஆயுள் காப்பீடு இல்லை
வாழ்க்கையின் அநிச்சயமான தன்மையை கொண்டு தன் வாழ்க்கையை நடத்திய ஓர் ஆள் இங்கிலாந்தில் இருந்தார். கென் ஓர் ஆயுள் காப்பீடு விற்பனையாளர். யெகோவாவின் சாட்சிகளின் வீடு ஒன்றை அவர் சந்தித்தபோது, அவர்கள் அவரைக் கேட்டனர்: “ஆயுள் காப்பீடு தேவையில்லாத ஓர் உலகில் வாழ உங்களுக்கு விருப்பமா?” அவர்கள் அர்த்தப்படுத்தியது என்ன? பைபிளின் பிரகாரம் இன்று வாழ்க்கையை அநிச்சயமாக ஆக்கும் அநேக காரியங்கள்—வியாதி, மரணம் உட்பட—கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் இனிமேலும் இருக்காது.
அப்பேர்ப்பட்ட காரியம் சாத்தியமா? ஆம், கடவுள் தாமே அதை வாக்களித்திருக்கிறார். உதாரணமாக, பைபிள் சொல்கிறது: “அவர்களிடத்திலே (மனிதவர்க்கம்) அவர் வாசமாயிருப்பார், அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.” (வெளிப்படுத்துதல் 21:3, 4) எது அப்போர்ப்பட்ட மாற்றத்தைக் கொண்டு வரும்? கடவுளுடைய ராஜ்யம். கடவுளுடைய வார்த்தையின்படி, இது சீக்கிரத்தில் “அந்த ராஜ்யங்களையெல்லாம் (நவீன கால அரசியல்) நொறுக்கி நிர்மூலமாக்கி தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.
இதைப் போன்ற வசனங்கள் ஆயிரக்கணக்கான ஆட்களின் கவனத்திற்கு யெகோவாவின் சாட்சிகளால் அவர்களுடைய பூகோள பிரசங்கிப்பு வேலையின்போது கொண்டுவரப்பட்டது. கென்-ஐப் போன்று அநேகர் இது வெறுமென நப்பாசை அல்ல என்பதை உணர்ந்திருக்கின்றனர். இதற்கான ஆதாரம் திடமாய் இருக்கிறது. இந்தத் தெய்வீக வாக்குகள் நம்பத்தகுந்தவை மேலும் அவை சீக்கிரத்தில் நிறைவேற்றப்படும்.
மதிப்பவைகளில் மாற்றம்
தூதனின் சந்தோஷமான அறிவிப்பை யெகோவாவின் சாட்சிகள் தொனிக்கச் செய்வதை கேட்பவர்கள், கடவுளுக்குப் பயந்து அவருக்கு மகிமையைக் கொடுப்பது பைபிள் வாக்குகளின் பேரில் வெறுமென நம்பிக்கை வைப்பதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது என்று உணருகிறார்கள். அவர்களுடைய முழு நோக்கு நிலையையும் இது மாற்றுகிறது, மேலும் வாழ்க்கையின் அநேக சலிப்புகளிலிருந்தும் விடுவிக்கிறது.
ரஃபேலும் அவருடைய மனைவியும் இது உண்மை என்பதைக் கண்டார்கள். அவர்கள் ஆர்ஜன்டீனாவில் வசிக்கிறார்கள். 40 வருடங்களுக்கும் முன்பாக அவர்கள் திருமணம் செய்து கொண்டபோது, கடினமாக உழைத்து பாதுகாப்பான எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்பதை அவர்கள் வாழ்க்கையின் முக்கிய இலக்காக வைத்திருந்தார்கள். என்றபோதிலும், 21 வருடங்களுக்குப் பிறகு அவர்களுடைய கடின உழைப்பின் பலனாக அடிக்கடி பழுதுபார்க்கப்பட வேண்டிய ஒரு சிறிய வீட்டை தான் அவர்கள் சம்பாதிக்க முடிந்தது. முதலில் திருமணம் செய்தபோது இருந்ததைவிட பாதுகாப்பாக இருப்பதாக அவர்களால் உணரமுடியவில்லை.
யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து நற்செய்தியை அவர்கள் கேட்டபொழுது, மேலான செல்வத்தையும் மேலான பாதுகாப்பையும் பற்றி கற்றறிந்தார்கள். இயேசு, தன்னுடைய மலைப் பிரசங்கத்தில் இதைப் பற்றி பேசும்பொழுது சொன்னார்: “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்; பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கு திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.”—மத்தேயு 6:19, 20.
பொருள் செல்வத்தைப் பொருத்தவரை நடைமுறையற்றவர்களாக இருக்கும்படி பைபிள் நமக்கு கற்பிப்பதில்லை, என்றாலும் அப்பேர்ப்பட்ட காரியங்களில் நம் நம்பிக்கையை வைக்க வேண்டாம் என்று அது உந்துவிக்கிறது. (பிரசங்கி 7:12) மாறாக, பைபிளை படிப்பதன் மூலமும், கடவுளுடைய சித்தத்தை கற்பதன் மூலமும், அந்தச் சித்தத்தை செய்வதே நம் வாழ்க்கையின் முதன்மையான காரியமாக ஆக்குவதன் மூலமும் ஆவிக்குரிய செல்வங்களை பெற நாம் உழைக்க வேண்டும். (மத்தேயு 6:33) ரஃபேலும் அவருடைய மனைவியும் இந்த ஆவிக்குரிய செல்வத்தை குவிக்க ஆரம்பித்தனர், அவர்கள் இப்பொழுது உண்மையிலேயே செல்வந்தராக உணருகின்றனர், பண நிலையின் காரணமாக அல்ல, ஆனால் அவர்கள் கடவுளுடன் கொண்டிருக்கும் உறவின் காரணமாக. (வெளிப்படுத்துதல் 3:17, 18) கடவுளுடைய ராஜ்யத்தின் செய்தி அவர்களுக்கு மிகுந்த நற்செய்தியாக இருந்தது.
சரிசெய்யப்பட்ட ஒரு விவாகம்
நன்மையானதை சாதிக்க நற்செய்திக்கு உண்மையான வல்லமை இருக்கிறது. உதாரணமாக, இங்கிலாந்தில் வாழும் ஜானுக்கு பைபிளில் அக்கறை இல்லை, ஆனால் அவருடைய மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அக்கறை இருந்தது, ஆகையால் அவர்கள் யெகோவாவின் சாட்சிகளின் கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தனர். அச்சமயம் ஜான் தன் நண்பர்களுடன் குடிப்பதற்கு செல்வார். அதன் காரணமாக அதிகமாக குடிப்பது, புகைப்பது, இறுதியில் ஒழுக்கயீனம் ஆகியவற்றில் உட்பட்டார். கடைசியாக தன் மனைவியை விட்டு மற்றொரு பெண்ணோடு வாழ ஆரம்பித்தார்.
விவாகரத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் நற்செய்தியை படித்ததன் மூலம் கிறிஸ்தவ நடத்தையை கற்றறிந்த தன் மனைவி தன்னை இன்னும் கரிசனையுடன் நடத்தியதைக் கண்டு ஜான் ஆச்சரியமடைந்தார். ஏன் என்று ஜானால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. விவாகரத்து ஏற்பாடுகள் முடிவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, ஜானுடைய மனைவியின் கிறிஸ்தவ நடத்தை நல்ல விளைவை ஏற்படுத்தியது. அவர் தன் நடத்தைக்கு உண்மையான துக்கத்தைக் காட்டினார். விவாகரத்திற்கான ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டன. ஜான் இப்பொழுது நற்செய்தியை உற்று ஆராய்ந்து யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளை படித்தார். இப்பொழுது அவரும் ஒரு கிறிஸ்தவராக தன் மனைவியுடன் மற்றவர்களுக்கு ராஜ்யத்தின் நற்செய்தியை கூறுகிறார்.
குடும்ப மதிப்புகள் சரிந்துகொண்டிருக்கும் இந்நாட்களில், பைபிளை அடிப்படையாகக் கொண்ட நற்செய்தி அளிக்கும் உதவி அநேகருக்குத் தேவைப்படுகிறது. பெருவில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் ஒரு விமானப் பயணத்தின்போது ஓர் இராணுவ கர்னல் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். அவர்கள் ஒரு சம்பாஷணையில் இறங்கினார்கள், கர்னல் தன் குடும்பப் பிரச்னைகளை கூற ஆரம்பித்தார். தன் மனைவி போதை மருந்து பழக்கத்திற்கு உட்பட்டிருப்பதாகவும் தன்னைவிட்டு ஓர் இளைஞனோடு செல்லப் போவதாகவும் வெளிப்படுத்தினார். பைபிள் குடும்ப விஷயங்களைக் குறித்து நல்ல, திடமான ஆலோசனை கொடுக்கிறது என்றும் தன் சொந்த குடும்ப பிரச்னைகளைத் தீர்க்க அது உதவி செய்தது என்றும் அந்தச் சாட்சி சாதுரியமாக அவருக்கு எடுத்துக் காண்பித்தார்.—எபேசியர் 5:21–6:4.
ஆறுதலைத் தந்த வார்த்தைகளுக்காக அந்தக் கர்னல் சாட்சிக்கு நன்றி சொல்லிவிட்டு, நற்செய்தியை பற்றிய அறிவை அதிகரிக்க காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்குச் சந்தா செய்தார். பிறகு, விமானத்தை விட்டு அந்தச் சாட்சி வெளியே செல்லும்போது ஓர் இளைம் தம்பதி அவரிடம் வேகமாக சென்று பேச ஆரம்பித்தனர். “நாங்கள் உங்களுக்கு முன்னால் உட்கார்ந்து இருந்தோம். அந்த நபரோடு நீங்கள் பேசிய சம்பாஷணையை கேட்டோம். இந்தப் பத்திரிகைகளுக்கு நாங்களும் சந்தா செய்ய விரும்புகிறோம்.” வாழ்க்கையை மேம்படுத்தும் நற்செய்தியை அவர்களும்கூட படிக்க விரும்பினர்.
மாறிய வாழ்க்கை
மேலும், பைபிளை அடிப்படையாகக் கொண்ட நற்செய்தி ஆட்களை மாற்றுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னபடி: “தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ளதாயும் வல்லமையுள்ளதாயும் இருக்கிறது.” (எபிரெயர் 4:12) கிரீஸில் உள்ள மாசிதோனியாவில் இருக்கும் ஓர் இளைஞனின் விஷயத்தில் இது உண்மையாய் இருந்தது. பைபிளின்படி கடவுளின் பெயர் யெகோவா என்பதை அறிந்தபோது ஆச்சரியமடைந்தார். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் யெகோவாவின் சாட்சிகளுடன்தான் தொடர்பு கொள்ளும்படி உதவி செய்ய வேண்டும் என்று ஒரு நண்பனை கேட்டார். இரண்டு கலந்தாலோசிப்புகள் சாட்சிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டது, ஒவ்வொன்றும் ஏறக்குறைய நான்கு மணிநேரங்கள் நீடித்தது. அதன் பிறகு அந்த இளைஞன் பைபிளை ஒழுங்காக படிக்க ஆரம்பித்தார், அதில் முதல் படிப்பு காலை இரண்டு மணிவரை நீடித்தது!
அந்த முதல் படிப்பு முதற்கொண்டு அந்த இளைஞன் பைபிள் தராதரங்களின்படி தன் வாழ்க்கையை வெகு விரைவாக மாற்றிக் கொண்டார். யெகோவாவின் சாட்சிகளுடன் வணக்கத்திற்கான கூட்டங்களுக்கு ஆஜரானார். சிருஷ்டிகரை அதிகமாக நேசிக்க ஆரம்பித்தார். யெகோவா பிரதிபலனாக அவரை ஆசீர்வதித்தார். பைபிள் படிப்பின் முதல் வாரத்தில் தன் நீண்ட முடியை வெட்டினார். இரண்டாவது வாரம் கிளர்ச்சியூட்டும் நண்பர்களை தேடுவதற்காக டிஸ்கோ கேளிக்கை இடங்களுக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டார். மூன்றாவது வாரம் தன்னுடைய கடைசி சிகரெட்டை வீசி எறிந்துவிட்டார். இரண்டு மாதங்கள் படித்த பின்பு, ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களுக்குச் சொல்வதில் சாட்சிகளுடன் சேர்ந்துகொள்ள ஆரம்பித்தார். ஆம், பூமியில் அவர் வாழ்ந்த இடத்திற்கு யெகோவாவின் சாட்சிகள் நற்செய்தியை கொண்டு வந்ததில் அவர் மகிழ்ச்சியடைந்தார்.
சிறைச்சாலையில் நற்செய்தி
சிறைச்சாலை கம்பிகளும்கூட நற்செய்திக்கு தடையாக இல்லை. ஸ்பெய்னில் ஜோஸ் என்னும் பெயர்கொண்ட இளைஞன் ஆயுதம் தாங்கி கொள்ளை அடித்ததற்காகவும் மற்ற குற்றங்களுக்காகவும் நீண்ட கால சிறை தண்டனையில் இருக்கிறார். என்றபோதிலும், யெகோவாவின் சாட்சிகள் அவருக்கு நற்செய்தியை சொல்ல முடிந்தது, பைபிளின் செய்தி அவருடைய நோக்குநிலையை முழுவதுமாக மாற்றியது. யெகோவா அவரை “பலப்படுத்தினார்.”—பிலிப்பியர் 4:13.
இந்த ஒழுங்குமுறையில் தன் வாழ்க்கையின் மீதி பாகத்தை தன் முந்தின நடத்தைக்காக சிறைக்குள் செலவழிக்க வேண்டியிருக்கும் என்று ஜோஸ் சொல்கிறார். ஆனால் அவர் முழுக்காட்டப்பட்டு, இப்பொழுது ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறார். அவர் மனைவி அவருக்கு உறுதியான ஆதரவு தருகிறாள். மேலும் அவள் தன் இளைய மகனுக்குக் கிறிஸ்தவ வளர்ப்பை அளிக்கிறாள். இதற்கிடையில் ஜோஸ், சிறை சுவர்களுக்கு வெளியே வாழும் ஆட்களால் சென்றெட்ட முடியாத சக கைதிகளுடன் நற்செய்தியை பகிர்ந்து கொள்கிறார். இப்பொழுது அவருடைய அறையில் உள்ள சக கைதியும் ஒரு முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவன்.
யெகோவாவின் சாட்சிகளின் பூகோள பிரசங்கிப்பு வேலையின் பலன்களைக் காண்பிக்க இவைகள் வெறும் சில உதாரணங்களே. உண்மையில், காணக்கூடாத தூதனால் அறிவிக்கப்பட்ட நற்செய்தி யெகோவாவின் சாட்சிகளால் “பூமியில் வாசம் பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும் பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் சந்தோஷமான செய்தியாக” எதிரொலிக்கப்படுகிறது.
இது செய்திகளிலேயே மிகச் சிறந்தது, மேலும் இது மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கை. இதற்குச் செவிகொடுக்குமாறு உங்களை உந்துவிக்கிறோம். இங்கிலாந்தில் உள்ள கென் மற்றும் ஜானைப் போலவும், ஆர்ஜன்டீனாவிலுள்ள ரஃபேலும் அவர் மனைவியைப் போலவும், ஸ்பெய்னில் உள்ள ஜோஸைப் போலவும் மற்றும் திரள் கூட்டமான அநேகரைப் போலவும் நாங்கள் அந்தத் தூதனோடு சேர்ந்து எல்லாரையும் “தேவனுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள்” என்று துரிதப்படுத்துகிறோம்.—வெளிப்படுத்துதல் 14:7. (w90 1/1)