நற்செய்தியால் வரும் நன்மைகள்
“சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், . . . துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும் . . . அவர் என்னை அனுப்பினார்.”—ஏசாயா 61:1-3.
1, 2. (அ) இயேசு தம்மை யார் என அடையாளம் காட்டினார், எவ்வாறு? (ஆ) இயேசு அறிவித்த நற்செய்தி என்ன நன்மைகளை அளித்தது?
இயேசு தம் ஊழிய காலத்தின் ஆரம்பத்தில் ஒரு ஓய்வுநாளில் நாசரேத்திலிருந்த ஜெப ஆலயத்தில் இருந்தார். பதிவின்படி, “ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது: கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார்; . . . சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார் . . . என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்”டார். அத்தீர்க்கதரிசன பகுதியை இயேசு தொடர்ந்து வாசித்தார். அமர்ந்த பிறகு, “உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத் தினம் நிறைவேறிற்று” என்று கூறினார்.—லூக்கா 4:16-21.
2 இவ்வாறு இயேசு தம்மை, முன்னறிவிக்கப்பட்ட சுவிசேஷகராக, அதாவது நற்செய்தியை அறிவிப்பவராகவும் ஆறுதலை அளிப்பவராகவும் அடையாளம் காட்டினார். (மத்தேயு 4:23) இயேசு கூறவிருந்தது என்னே அருமையான நற்செய்தி! தமக்கு செவிகொடுத்தவர்களிடம் இவ்வாறு கூறினார்: “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்.” (யோவான் 8:12) அவர் மேலுமாக, “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்றார். (யோவான் 8:31, 32) ஆம், இயேசுவிடம் “நித்திய ஜீவ வசனங்கள்” இருந்தன. (யோவான் 6:68, 69) ஒளி, ஜீவன், விடுதலை ஆகியவை பொக்கிஷங்களாக கருதப்பட வேண்டிய ஆசீர்வாதங்கள் அல்லவா?
3. இயேசுவின் சீஷர்கள் என்ன நற்செய்தியை பிரசங்கித்தார்கள்?
3 பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளுக்கு பிறகு, இயேசு செய்துவந்த பிரசங்க வேலையை அவருடைய சீஷர்கள் தொடர்ந்து செய்தார்கள். அவர்கள் ‘ராஜ்யத்தின் சுவிசேஷத்தை’ இஸ்ரவேலருக்கும் மற்ற தேசத்தாருக்கும் பிரசங்கித்தார்கள். (மத்தேயு 24:14; அப்போஸ்தலர் 15:7; ரோமர் 1:16) அவர்கள் பிரசங்கித்ததை ஏற்றவர்கள் யெகோவா தேவனை அறிந்துகொண்டார்கள். அவர்கள் ஆவிக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய ஆவிக்குரிய தேசத்தின் அதாவது ‘தேவனுடைய இஸ்ரவேலின்’ பாகமானார்கள். அதன் அங்கத்தினர்கள் தங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு பரலோகத்தில் நித்திய காலத்திற்கு ஆட்சி செய்யும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். (கலாத்தியர் 5:1; 6:16; எபேசியர் 3:3, 6, 7; கொலோசெயர் 1:3, 4; வெளிப்படுத்துதல் 22:5) அவை எவ்வளவு மதிப்புமிக்க ஆசீர்வாதங்கள்!
இன்று நற்செய்தியை அறிவித்தல்
4. நற்செய்தியை பிரசங்கிக்கும் நியமிப்பு இன்று எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது?
4 ஆரம்பத்தில் இயேசு பெற்ற தீர்க்கதரிசன நியமிப்பை இன்று அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள்; ‘வேறே ஆடுகளின்’ பாகமான அதிகரித்து வரும் ‘திரள் கூட்டத்தினர்’ அவர்களை ஆதரிக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:16) இதன் விளைவாக, முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டு வருகிறது. யெகோவாவின் சாட்சிகள் 235 நாடுகளிலும் பிராந்தியங்களிலும், ‘சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிப்பதிலும் . . . இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறுவதிலும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறுவதிலும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்”வதிலும் ஈடுபட்டுள்ளார்கள். (ஏசாயா 61:1, 2) ஆகவே, கிறிஸ்தவ பிரசங்க வேலை இன்று வரை அநேகருக்கு ஆசீர்வாதங்களையும் “எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு” உண்மையான ஆறுதலையும் அளிக்கிறது.—2 கொரிந்தியர் 1:3, 4.
5. நற்செய்தி பிரசங்கிப்பதை பொருத்தவரை யெகோவாவின் சாட்சிகளுக்கும் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளுக்கும் இடையே என்ன வித்தியாசம் உள்ளது?
5 கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் பல வழிகளில் பிரசங்கிப்பை ஆதரிப்பது உண்மையே. அநேக சர்ச்சுகள், மற்ற தேசங்களில் இருப்பவர்களை மதம் மாற்றுவதற்காக மிஷனரிகளை அனுப்புகின்றன. உதாரணமாக, மடகாஸ்கர், தென்னக ஆப்பிரிக்கா, டான்ஜானியா, ஜிம்பாப்வே போன்ற இடங்களிலுள்ள ஆர்த்தடாக்ஸ் மிஷனரிகளின் வேலையை பற்றி ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ ஊழிய நிறுவன பத்திரிகை (ஆங்கிலம்) அறிவிக்கிறது. என்றாலும், கிறிஸ்தவமண்டலத்தின் மற்ற சர்ச்சுகளைப் போலவே ஆர்த்தடாக்ஸ் சர்ச்சிலுள்ள பெரும்பாலானோர் அப்படிப்பட்ட வேலையில் பங்குகொள்வது கிடையாது. இதற்கு மாறாக, யெகோவாவின் சாட்சிகளாக ஒப்புக்கொடுத்த அனைவரும் பிரசங்கிப்பதில் பங்குகொள்ள முயலுகின்றனர். நற்செய்தியை அறிவிப்பதே தங்கள் விசுவாசம் உண்மையானது என்பதற்கு அத்தாட்சி என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்” என பவுல் கூறினார். செயல்படும்படி ஒருவரை தூண்டாத விசுவாசம் உண்மையில் செத்ததே.—ரோமர் 10:10; யாக்கோபு 2:17.
நித்திய ஆசீர்வாதங்களை தரும் நற்செய்தி
6. இன்று என்ன நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது?
6 இருப்பதிலேயே மிகச் சிறந்த செய்தியை யெகோவாவின் சாட்சிகள் அறிவிக்கிறார்கள். செவிசாய்ப்பவர்களிடம், மனிதர்கள் கடவுளை அணுகுவதற்கான வழியை திறக்கவும், பாவங்களை மன்னிக்கவும், நித்திய ஜீவ நம்பிக்கையை அளிக்கவும் இயேசு தம் உயிரை பலியாக கொடுத்தார் என்பதை எல்லாம் பைபிளிலிருந்தே எடுத்து காட்டுகிறார்கள். (யோவான் 3:16; 2 கொரிந்தியர் 5:18, 19) கடவுளுடைய ராஜ்யம், அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவான இயேசு கிறிஸ்துவின் தலைமையில் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது என்றும் சீக்கிரத்தில் பூமியிலுள்ள துன்மார்க்கத்தை நீக்கிவிட்டு பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படுவதை மேற்பார்வை செய்யப் போகிறது என்றும் அறிவிக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 11:15; 21:3, 4) நற்செய்தியை கேட்டு அதற்கேற்ப நடக்க மனிதவர்க்கத்திற்கு இன்னும் வாய்ப்பு இருப்பதால் ‘கர்த்தருடைய அநுக்கிரக வருஷம்’ இதுவே என ஏசாயா தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக தங்கள் அயலாரிடம் அறிவிக்கிறார்கள். ‘நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாள்’ சீக்கிரமாக வருகிறது, அப்போது மனந்திரும்பாத பாவிகளை யெகோவா அழிப்பார் என்றும் எச்சரிக்கிறார்கள்.—சங்கீதம் 37:9-11.
7. என்ன சம்பவம் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒற்றுமையை சுட்டிக்காட்டுகிறது, அத்தகைய ஒற்றுமைக்கு காரணம் என்ன?
7 பேரழிவுகளும் துயரங்களும் நிறைந்த ஓர் உலகில் நித்திய நன்மைகள் தரும் நற்செய்தி இது மட்டுமே. இதை ஏற்றுக்கொள்பவர்கள் ஓர் ஐக்கியப்பட்ட, உலகளாவிய கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் பாகமாகிறார்கள். தேசிய, இன, அல்லது பொருளாதார பாகுபாடுகள் தங்கள் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்த இவர்கள் இடங்கொடுப்பதில்லை. இவர்கள் “பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்” கொண்டிருக்கிறார்கள். (கொலோசெயர் 3:14; யோவான் 15:12) கடந்த வருடம் ஓர் ஆப்பிரிக்க தேசத்தில் நடந்த சம்பவம் இதை நிரூபிக்கிறது. ஒரு நாள் காலை அதன் தலைநகரம் துப்பாக்கிகளின் முழக்கம் கேட்டு விழித்தெழுந்தது. ஆட்சியை கைப்பற்ற புரட்சி நடந்துகொண்டிருந்தது. சீக்கிரத்தில் அந்நிகழ்ச்சிகளுக்கு இனப் பகையின் வர்ணம் பூசப்பட்டது. அப்போது மற்றொரு இனத்தை சேர்ந்த சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக சொல்லி சாட்சிகளின் ஒரு குடும்பம் மீது குற்றம் சாட்டப்பட்டது. “எங்கள் வீட்டில் யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே இருக்கிறார்கள்” என அந்த குடும்பத்தினர் பதிலளித்தனர். அவர்களை பொறுத்தவரை இன வேறுபாடுகள் முக்கியமற்றவை; கிறிஸ்தவ அன்பே, அதாவது தேவையில் இருப்போருக்கு ஆறுதல் அளிப்பதே முக்கியமாகும். சாட்சியாக இல்லாத அவர்களுடைய உறவினர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “அனைத்து மதத்தாரும் தங்கள் மதத்தை சேர்ந்தவர்களை காட்டிக்கொடுத்தனர். யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே அவ்வாறு காட்டிக்கொடுக்கவில்லை.” யெகோவாவின் சாட்சிகள் உண்மையிலேயே ‘முழு சகோதர கூட்டுறவிலும் அன்புகூருகிறார்கள்’ என்பதை உள்நாட்டு கலவரங்களால் அல்லல்படும் நாடுகளிலிருந்து அறிக்கை செய்யப்படும் இதைப் போன்ற அநேக சம்பவங்கள் நிரூபிக்கின்றன.—1 பேதுரு 2:17, NW.
நற்செய்தி மக்களை மாற்றுகிறது
8, 9. (அ) நற்செய்தியை ஏற்றுக்கொள்பவர்கள் என்ன மாற்றங்களை செய்கிறார்கள்? (ஆ) என்ன அனுபவங்கள் நற்செய்தியின் வல்லமையை சுட்டிக்காட்டுகின்றன?
8 நற்செய்தியானது ‘இந்த ஜீவனும் இதற்கு பின்வரும் ஜீவனும்’ என பவுல் அழைத்தவற்றோடு சம்பந்தப்பட்டது. (1 தீமோத்தேயு 4:8) அது எதிர்காலத்திற்கு ஓர் அருமையான, நிச்சய நம்பிக்கையை அளிப்பதோடு ‘இந்த ஜீவனிலும்’ நன்மைகளை தருகிறது. யெகோவாவின் சாட்சிகள் ஒவ்வொருவரும் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக வாழும்படி அவருடைய வார்த்தையாகிய பைபிளால் வழிநடத்தப்படுகிறார்கள். (சங்கீதம் 119:101) நீதி, உத்தமம் போன்ற குணங்களை வளர்க்கையில் அவர்களுடைய ஆளுமையே புதியதாக மாறிவிடுகிறது.—எபேசியர் 4:24.
9 ஃபிராங்கோவின் உதாரணத்தை கவனியுங்கள். அவர் படுகோபக்காரர். ஏதாவது தவறு நடந்துவிட்டால் போதும், அவருக்கு பயங்கர கோபம் வந்து பொருட்களை எல்லாம் போட்டு உடைப்பார். அவருடைய மனைவி யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படித்தாள். தன் குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியத்தை சாட்சிகளின் கிறிஸ்தவ முன்மாதிரி ஃபிராங்கோவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக உணர்த்தியது. அவரும் அவர்களோடு சேர்ந்து பைபிளை படித்தார், கடைசியில் பரிசுத்த ஆவியின் கனிகளான சமாதானம், இச்சையடக்கம் ஆகியவற்றை அவர் வெளிக்காட்ட ஆரம்பித்தார். (கலாத்தியர் 5:22, 23) பெல்ஜியத்தில் 2001-ம் ஊழிய ஆண்டில் முழுக்காட்டுதல் பெற்ற 492 பேரில் அவரும் ஒருவர். ஆலேஹான்ட்ரோவின் உதாரணத்தையும் கவனியுங்கள். அந்த இளைஞன் போதை மருந்துகளுக்கு அடிமை. குப்பைத் தொட்டியில் கிடைப்பவற்றை விற்று தன் போதை பழக்கத்திற்கு பணம் சேர்ப்பதற்காக அதன் அருகிலேயே குடியிருக்கும் அளவிற்கு அவருடைய நிலைமை மோசமாகிவிட்டது. ஆலேஹான்ட்ரோ 22 வயதாக இருந்தபோது பைபிளை தங்களோடு சேர்ந்து படிக்க யெகோவாவின் சாட்சிகள் அவரை அழைத்தனர், அவரும் ஒப்புக்கொண்டார். அவர் தினந்தோறும் பைபிளை வாசித்தார், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு சென்றார். ஆறே மாதங்களுக்குள் பிரசங்க வேலையில் பங்குகொள்ளுமளவிற்கு தன் வாழ்க்கையில் மாற்றங்களை செய்தார். சென்ற வருடம் பனாமாவில் பிரசங்கித்த 10,115 பேரில் அவரும் ஒருவர்.
நற்செய்தி —மனத்தாழ்மை உள்ளோருக்கு ஆசீர்வாதம்
10. யார் நற்செய்தியை கேட்கிறார்கள், அவர்களுடைய மனநிலை எவ்வாறு மாறுகிறது?
10 சிறுமைப்பட்டவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படும் என ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார். இந்த சிறுமைப்பட்டவர்கள் யார்? இவர்களை, “நித்திய ஜீவனுக்கான சரியான மனச்சாய்வு உடையவர்கள்” என அப்போஸ்தலர் புத்தகம் விவரிக்கிறது. (அப்போஸ்தலர் 13:48, NW) சமுதாயத்தின் அனைத்து வர்க்கத்திலும் உள்ள இந்த மனத்தாழ்மை உள்ளவர்கள் சத்தியத்தின் செய்தியை கேட்க மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். கடவுளுடைய சித்தத்தை செய்தால் இந்த உலகம் தரும் எதையும்விட மகத்தான ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பதை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (1 யோவான் 2:15-17) என்றாலும், யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிக்கையில் எவ்வாறு மக்களின் இருதயங்களை எட்டுகிறார்கள்?
11. பவுல் கூறியபடி நற்செய்தியை எவ்வாறு பிரசங்கிக்க வேண்டும்?
11 கொரிந்தியர்களுக்கு பின்வருமாறு எழுதிய அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியை கவனியுங்கள்: “சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப் பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.” (1 கொரிந்தியர் 2:1, 2) தன் பேச்சுகளை கேட்டவர்களை தன் அறிவாற்றலால் கவர பவுல் முயலவில்லை. கடவுள் அங்கீகரித்த உண்மைகளை மட்டுமே அவர் போதித்தார், அவை இன்று பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உடன் பிரசங்கியான தீமோத்தேயுவிற்கு பவுல் கொடுத்த உற்சாகத்தையும் கவனியுங்கள்: “அவசர உணர்வோடு வார்த்தையை பிரசங்கி.” (2 தீமோத்தேயு 4:2, NW) கடவுளுடைய செய்தியான “வார்த்தையை”த்தான் தீமோத்தேயு பிரசங்கிக்க வேண்டும். “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு” என்றும் பவுல் தீமோத்தேயுவிற்கு எழுதினார்.—2 தீமோத்தேயு 2:15.
12. இன்று யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு பவுலின் வார்த்தைகளையும் முன்மாதிரியையும் பின்பற்றுகிறார்கள்?
12 யெகோவாவின் சாட்சிகள் பவுலின் முன்மாதிரியையும் தீமோத்தேயுவிற்கு அவர் கூறியதையும் பின்பற்றுகிறார்கள். அவர்கள் கடவுளுடைய வார்த்தையின் வல்லமையை உணருகிறார்கள், நம்பிக்கையும் ஆறுதலும் தரும் பொருத்தமான வார்த்தைகளை தங்கள் அயலாருக்கு காண்பிக்க முயலுகையில் அதை தாராளமாக உபயோகிக்கிறார்கள். (சங்கீதம் 119:52; 2 தீமோத்தேயு 3:16, 17; எபிரெயர் 4:12) அக்கறை காண்பிப்போர் தங்கள் ஓய்வு நேரத்தில் பைபிள் அறிவை அதிகமாய் பெறுவதற்காக அவர்கள் பைபிள் பிரசுரங்களை விநியோகிப்பது உண்மையே. ஆனால் எப்போதும் நேரடியாக பைபிளிலிருந்து காண்பிக்கவே விரும்புகிறார்கள். கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தை மனத்தாழ்மை உள்ளவர்களின் இருதயங்களை தொடும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். பைபிளை இவ்வாறு உபயோகிப்பதால் அவர்களுடைய விசுவாசமும் பலமடைகிறது.
‘துயரப்படும் அனைவருக்கும் ஆறுதல் அளியுங்கள்’
13. துயரப்படுவோருக்கு ஆறுதலளிக்க வேண்டிய பெரும் தேவையை 2001-ம் ஆண்டில் நிகழ்ந்த என்ன சம்பவங்கள் ஏற்படுத்தின?
13 அநேக பேரழிவுகள் 2001-ம் வருடத்திலும் நிகழ்ந்தன, அதன் விளைவாக அநேகருக்கு ஆறுதல் தேவைப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய மாகாணங்கள், நியூ யார்க்கிலுள்ள உலக வர்த்தக மையத்தின்மீதும் வாஷிங்டன், டி.சி.-க்கு அருகிலுள்ள பென்டகனின்மீதும் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்கள் இதற்கு தலைசிறந்த உதாரணமாகும். அந்த தாக்குதல்களால் முழு தேசமே ஆடிப்போனது! இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளின் மத்தியில் ‘துயரப்படும் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும்’ தங்கள் நியமிப்பை நிறைவேற்ற யெகோவாவின் சாட்சிகள் முயலுகின்றனர். இதை எவ்வாறு செய்கின்றனர் என்பதை சில அனுபவங்கள் வாயிலாக அறியலாம்.
14, 15. இரண்டு வித்தியாசமான சந்தர்ப்பங்களில் துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதலளிக்க சாட்சிகள் எவ்வாறு வேதவசனங்களை திறம்பட உபயோகித்தார்கள்?
14 முழுநேர பிரசங்கியான சாட்சி ஒருவர் நடைபாதையில் ஒரு பெண்மணியை அணுகி சமீபத்திய தீவிரவாத தாக்குதல்கள் பற்றி அவருடைய கருத்தை கேட்டார். அந்த பெண்மணி அழ ஆரம்பித்துவிட்டார். பிறகு, தான் மிகவும் வருத்தப்படுவதாகவும் எந்த விதத்திலாவது உதவ விரும்புவதாகவும் அவர் கூறினார். கடவுள் நம் அனைவர் மீதும் அதிக அக்கறை வைத்திருக்கிறார் என்று கூறிய அந்த சாட்சி ஏசாயா 61:1, 2-ஐ வாசித்தார். அனைவருமே துயரப்படுவதாக கூறிய அந்த பெண்மணிக்கு தெய்வீக ஏவுதலால் எழுதப்பட்ட இந்த வார்த்தைகள் நியாயமாய் தொனித்தன. அவர் ஒரு துண்டுப்பிரதியை ஏற்றுக்கொண்டு, தன்னை வீட்டில் வந்து சந்திக்கும்படி அந்த சாட்சியிடம் கூறினார்.
15 ஊழியத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு சாட்சிகள், தனது ஷெட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரை சந்தித்தனர். சமீபத்தில் உலக வர்த்தக மையத்தில் பேரழிவு நிகழ்ந்ததால் வேதவசனங்களிலிருந்து ஆறுதலான வார்த்தைகளை காண்பிக்க விரும்புவதாக அவரிடம் கூறினர். அவர் ஒப்புக்கொண்டபோது 2 கொரிந்தியர் 1:3-7-ஐ வாசித்தனர், “கிறிஸ்துவினாலே . . . ஆறுதலும் பெருகுகிறது” என்ற வார்த்தைகளும் அதில் அடங்கியுள்ளன. சாட்சிகளான தன் அயலகத்தார் மற்றவர்களோடு ஆறுதலான செய்தியைப் பகிர்ந்துகொள்வதற்காக நன்றி தெரிவித்து, “நீங்கள் செய்யும் அருமையான வேலையை கடவுள் ஆசீர்வதிப்பாராக” என்று அவர் கூறினார்.
16, 17. பேரழிவுகளால் துயருற்ற அல்லது கலக்கமடைந்த நபர்களுக்கு உதவ பைபிளுக்கு இருக்கும் வல்லமையை என்ன இரண்டு அனுபவங்கள் சுட்டிக்காட்டுகின்றன?
16 அக்கறை காண்பித்தவர்களை மறுபடியும் சந்திக்க சென்ற ஒரு சாட்சி, முன்பு அக்கறை காண்பித்த ஒரு பெண்மணியின் மகனை சந்தித்தார். சமீபத்திய பேரழிவிற்கு பிறகு தன் அயலகத்தார் எவ்வாறு உள்ளனர் என்பதை தெரிந்துகொள்ள வந்திருப்பதை அவர் விளக்கினார். மக்களை சந்தித்து அவர்களுடைய நலனை அறிய அந்த சாட்சி தனது நேரத்தை ஒதுக்கியிருப்பதைக் குறித்து அந்த நபர் ஆச்சரியப்பட்டார். அந்த தாக்குதலின்போது தான் உலக வர்த்தக மையத்திற்கு மிக அருகில் வேலை செய்ததாகவும் நடந்த அனைத்தையும் நேரில் கண்டதாகவும் அவர் கூறினார். கடவுள் துன்பத்தை ஏன் அனுமதிக்கிறார் என அவர் கேட்டபோது அந்த சாட்சி பைபிளிலிருந்து வசனங்களை வாசித்தார்; “நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக் காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்” என கூறும் சங்கீதம் 37:39-ஐயும் வாசித்தார். அந்த சாட்சியையும் அவரது குடும்பத்தையும் பற்றி கரிசனையோடு விசாரித்த அந்த நபர், சாட்சிக்கு நன்றி தெரிவித்து மறுபடியும் வரும்படி அவரை அழைத்தார்.
17 தங்கள் அயலகத்தாரை சந்திக்கையில் சாட்சிகள் ஒரு பெண்மணியையும் சந்தித்தனர். தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு, துயரப்படும் ஆயிரக்கணக்கானோரில் யெகோவாவின் சாட்சிகளால் ஆறுதல் அளிக்கப்பட்டவர்களுள் அவரும் ஒருவர். அந்த நிகழ்ச்சி அவரை மிகவும் நிலைகுலைய வைத்திருந்ததால் சாட்சிகள் சங்கீதம் 72:12-14-ஐ வாசிக்கையில் அவர் கூர்ந்து கவனித்தார்: “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.” அந்த வார்த்தைகள் எவ்வளவு அர்த்தம் பொதிந்தவையாக இருந்தன! அந்த வசனங்களை மறுபடியும் வாசிக்கும்படி அந்த பெண்மணி சாட்சிகளிடம் கேட்டார், தொடர்ந்து பேசுவதற்காக அவர்களை வீட்டிற்குள் வரும்படி அழைத்தார். அவர்கள் பேசி முடிப்பதற்குள் ஒரு பைபிள் படிப்பையே ஆரம்பித்துவிட்டனர்!
18. தன் அயலாருக்காக ஜெபிக்கும்படி அழைக்கப்பட்டபோது ஒரு சாட்சி அவர்களுக்கு எவ்வாறு உதவினார்?
18 ஓரளவு செல்வந்தர்கள் வாழும் பகுதியிலுள்ள ரெஸ்டாரென்டில் ஒரு சாட்சி வேலை செய்கிறார். அந்த பகுதி மக்கள் அதற்கு முன் ராஜ்ய நற்செய்தியில் அதிக அக்கறை காண்பிக்கவில்லை. தீவிரவாத தாக்குதல்களுக்கு பிறகு அந்த சமூகமே ஆடிப்போயிருந்தது. தாக்குதலுக்கு பிறகு வந்த வெள்ளிக்கிழமை மாலை, இறந்தவர்களின் நினைவாக மெழுகுவர்த்திகளை பிடித்து சில நிமிடம் மௌனம் காப்பதற்காக அனைவரையும் வெளியே வரும்படி அந்த ரெஸ்டாரென்டின் மேனேஜர் அழைத்தார். அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக்கொடுப்பவராக அந்த சாட்சியும் வெளியே சென்று நடைபாதையில் பேசாமல் நின்றார். அவர் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியர் என்பதை அந்த மேனேஜர் அறிந்திருந்ததால், மௌனம் காக்கும் நேரம் முடிந்த பிறகு அனைவருக்காகவும் ஜெபம் செய்யும்படி அவரிடம் கேட்டார். அந்த சாட்சியும் ஒப்புக்கொண்டார். எங்கும் நிலவியிருந்த துயரத்தை பற்றி தன் ஜெபத்தில் குறிப்பிட்டாலும் துயரப்படுபவர்கள் நம்பிக்கையிழக்க வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார். இப்படிப்பட்ட பயங்கரமான நிகழ்ச்சிகளே நிகழாத காலம் வரும் என்றும் பைபிளிலிருந்து திருத்தமான அறிவை பெறுவதன் மூலம் ஆறுதலின் தேவனிடம் அனைவரும் நெருங்கி வரலாம் என்றும் அவர் கூறினார். “ஆமென்” கூறிய பிறகு மேனேஜர் அந்த சாட்சிக்கு நன்றி தெரிவித்து, அவரை ஆரத்தழுவி, தான் கேட்டதிலேயே மிகவும் அருமையான ஜெபம் இதுதான் என அவரிடம் கூறினார். ரெஸ்டாரென்டிற்கு வெளியில் இருந்தவர்களில் 60-க்கும் அதிகமானோர்கூட அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
சமுதாயத்திற்கே ஓர் ஆசீர்வாதம்
19. யெகோவாவின் சாட்சிகளுக்கு உயர்ந்த தராதரங்கள் இருப்பதை சிலர் ஒப்புக்கொண்டிருப்பதை என்ன அனுபவம் காட்டுகிறது?
19 முக்கியமாக இன்று, யெகோவாவின் சாட்சிகளுள்ள சமுதாயங்களில் அவர்களால் நன்மைகளே உண்டாகின்றன, அநேகர் இதை ஒப்புக்கொண்டும் உள்ளனர். சமாதானம், நேர்மை, உயர்ந்த ஒழுக்கநெறி ஆகியவற்றை முன்னேற்றுவிப்பவர்கள் நன்மையான செல்வாக்கையே செலுத்துவார்கள் அல்லவா? மத்திய ஆசிய தேசம் ஒன்றில், முன்னாள் தேசிய பாதுகாப்பு நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை சாட்சிகள் சந்தித்தனர். ஒரு சமயம், பல்வேறு மத அமைப்புகளை புலனாய்வு செய்ய அவர் நியமிக்கப்பட்டிருந்ததாக கூறினார். யெகோவாவின் சாட்சிகளை பற்றி புலனாய்வு செய்கையில் அவர்களுடைய நேர்மையும் நல்நடத்தையும் அவரை கவர்ந்தன. அவர்களுடைய உறுதியான விசுவாசத்தையும் அவர்களுடைய போதனைகள் வேதவசனங்களின் அடிப்படையில் இருந்ததையும் அவர் பாராட்டினார். அவர்களோடு சேர்ந்து பைபிளை படிக்க அவர் ஒப்புக்கொண்டார்.
20. (அ) யெகோவாவின் சாட்சிகளின் கடந்த வருட ஊழிய அறிக்கை எதை காண்பிக்கிறது? (ஆ) இன்னும் அதிக வேலை இருப்பதை எது சுட்டிக்காட்டுகிறது, பிரசங்கிக்கும் நமது சிலாக்கியத்தை எவ்வாறு கருதுகிறோம்?
20 யெகோவாவின் சாட்சிகள், 2001-ம் ஊழிய ஆண்டில் மும்முரமாக ஊழியத்தில் ஈடுபட்டதை இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்ட சில அனுபவங்கள் தெளிவாக காட்டுகின்றன.a இன்னும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான அனுபவங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அவர்கள் கோடிக்கணக்கானோரிடம் பேசினர், துயரப்பட்ட அநேகருக்கு ஆறுதலளித்தனர், அவர்களுடைய பிரசங்க வேலைக்கு நல்ல பலன்கள் கிடைத்தன. 2,63,431 பேர் முழுக்காட்டுதல் பெறுவதன் மூலம் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதை அடையாளப்படுத்தினர். உலகம் முழுவதிலும் நற்செய்தியை அறிவிப்பவர்களின் எண்ணிக்கை 1.7 சதவிகிதம் அதிகரித்தது. இயேசுவின் வருடாந்தர மரண நினைவு ஆசரிப்புக்கு 1,53,74,986 பேர் வந்திருந்தது, இன்னும் அதிக வேலை இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. (1 கொரிந்தியர் 11:23-26) ஆகவே, நற்செய்தியை செவிகொடுத்து கேட்கும் மனத்தாழ்மை உள்ளவர்களை தொடர்ந்து தேடுவோமாக. யெகோவாவின் அநுக்கிரக வருஷம் தொடரும் வரை, “இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு” தொடர்ந்து ஆறுதலளிப்போமாக. மனநிறைவளிக்கும் எத்தகைய அருமையான சிலாக்கியம் நமக்குள்ளது! “கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது” என்று கூறிய ஏசாயாவின் வார்த்தைகளை நாம் அனைவருமே எதிரொலிக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. (ஏசாயா 61:10) “கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப் பண்ணுவார்” என்ற தீர்க்கதரிசன வார்த்தைகளை நிறைவேற்றுகையில் கடவுள் நம்மை தொடர்ந்து உபயோகிப்பாராக.—ஏசாயா 61:11.
[அடிக்குறிப்பு]
a 2001-ம் ஊழிய ஆண்டில் யெகோவாவின் சாட்சிகள் செய்த ஊழியத்தின் அறிக்கையை பக்கங்கள் 19 முதல் 22-ல் உள்ள அட்டவணையில் காணலாம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• இயேசு பிரசங்கித்த நற்செய்தியால் மனத்தாழ்மை உள்ளவர்கள் எவ்வாறு நன்மையடைந்தனர்?
• முதல் நூற்றாண்டில் இயேசுவின் சீஷர்கள் பிரசங்கித்ததை ஏற்றுக்கொண்டவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைத்தன?
• நற்செய்தியை ஏற்றுக்கொள்பவர்கள் இன்று எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர்?
• நற்செய்தியை பிரசங்கிக்கும் சிலாக்கியத்தை நாம் எவ்வாறு கருதுகிறோம்?
[பக்கம் 19-22-ன் அட்டவணை]
உலகளாவிய யெகோவாவின் சாட்சிகளுடைய 2001 ஊழிய ஆண்டு அறிக்கை
(பவுண்டு வால்யூமைப் பார்க்கவும்)
[பக்கம் 15-ன் படங்கள்]
நற்செய்தியை அறிவிக்கும் பொறுப்பை யெகோவாவின் சாட்சிகள் எப்போதுமே நினைவில் வைக்கின்றனர்
[பக்கம் 17-ன் படங்கள்]
நற்செய்தியை ஏற்றுக்கொள்பவர்கள் ஓர் ஐக்கியப்பட்ட, உலகளாவிய சகோதரத்துவத்தின் பாகமாகிறார்கள்