உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w91 8/1 பக். 4-6
  • சமாதானம்—வாய்ப்புகள் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சமாதானம்—வாய்ப்புகள் என்ன?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மதம் மற்றும் சட்டத்தின் மூலம் சமாதானம்
  • சமாதானத்துக்காகக் கூடுதலான முயற்சிகள்
  • சமாதானத்தைத் தடைசெய்யும் மறைவான ஒரு சக்தி
  • உண்மையான சமாதானம்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • யார் மனிதவர்க்கத்தைச் சமாதானத்துக்கு வழிநடத்துவார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • “சமாதானத்திற்கான காலம்” சமீபம்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • சமாதானம் அதை எப்படி அடையலாம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
w91 8/1 பக். 4-6

சமாதானம்—வாய்ப்புகள் என்ன?

செய்தித் தாள்களின் தலைப்புச் செய்திகளுக்கு எதிர்மாறாக, நம்மில் அநேகர் உணருவது போல, மனிதவர்க்கம் உண்மையான சமாதானத்திலிருந்து இன்னும் வெகு தூரத்தில் இருக்கிறது என்பதே உண்மையாகும். ஆப்கானிஸ்தானிலிருந்து அயல்நாட்டுப் படைகளின் விலகல், அந்தத் தேசத்துக்கு சமாதானத்தைக் கொண்டுவரவில்லை. ஒரு சிலவற்றைக் குறிப்பிட வேண்டுமானால், பிலிப்பைன்ஸ், சூடான், இஸ்ரேல், வட ஐயர்லாந்து, லெபனன் மற்றும் இலங்கையில் ஏதோ ஒருவகையான சண்டை இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது.

நல்லறிவுள்ள பெரும்பாலான மக்கள் யுத்தத்துக்குப் பதிலாக சமாதானத்தையே விரும்புவதன் காரணமாக, சமாதானம் ஏன் இப்படி கிட்டாமல் இருக்கிறது? அரசியல்வாதிகள் சமாதானத்தைக் கொண்டுவர பல நூற்றாண்டுகளாக பல வழிகளிலும் முயன்று வந்திருக்கின்றனர், ஆனால் அவர்களுடைய முயற்சிகள் எப்பொழுதும் தோல்வியையே கண்டிருக்கின்றன. ஏன்? ஒரு சில உதாரணங்களை கவனித்துப் பார்க்கலாம்.

மதம் மற்றும் சட்டத்தின் மூலம் சமாதானம்

சிலர் ரோமானிய பேரரசை, சமாதானம் உண்டுபண்ணுவதில் வெற்றியடைந்திருப்பதாக கருதுகிறார்கள். அதன் கீழ், ஸ்தாபிக்கப்பட்ட சட்டம், வளைந்துகொடுக்கும் நிர்வாகம், வெல்லமுடியாத படை வலிமை, நன்கு வடிவமைக்கப்பட்ட சாலைகள் ஆகியவை சேர்ந்து, மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும் பகுதிகளின் மீது பாக்ஸ் ரோமானா (ரோம சமாதானம்) என்றழைக்கப்பட்ட சர்வதேசீய ஸ்திரத்தன்மையை சில நூற்றாண்டுகள் காத்து வந்தன. ஆனால் இறுதியாக ரோம பேரரசு உள்நாட்டு ஊழலுக்கும் வெளியிலிருந்து வந்த படையெடுப்புகளுக்கும் ஆட்பட்டுவிட, ரோம சமாதானம் அழிந்துபோனது.

இது மனித முயற்சிகளைப் பற்றிய துயரமான ஓர் உண்மையை விளக்குகிறது. ஆரம்பத்தில் நம்பிக்கையூட்டும் ஒரு தொடக்கத்துக்குப் பின்பு, அவை பொதுவாக படிப்படியாக மோசமாகிவிடுகின்றன. கடவுள்தாமே இவ்விதமாகச் சொன்னார்: “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது,” இந்தப் பொல்லாத மனச்சாய்வு பொதுவாக முடிவில் வெற்றிபெற்றுவிடுகிறது. (ஆதியாகமம் 8:21) மேலுமாக, எரேமியா தீர்க்கதரிசி சொன்னான்: “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” (எரேமியா 17:9) மனிதர்கள் முன்னறிந்து கூறப்பட முடியாதவர்கள். ஒரு நபரின் நல்ல எண்ணங்கள் மற்றவர்களின் பொறாமை அல்லது சுயநலமான பேராசையினால் அழிந்துவிடக்கூடும். அல்லது உயர்ந்த இலட்சியங்கள் கொண்ட ஓர் ஆட்சியாளன், தானே இலஞ்ச ஊழலுக்கு வசப்பட்டுவிடக்கூடும். இதை முன்னிட்டுப் பார்க்கையில், மனிதர்கள் எவ்விதமாக சமாதானத்தை எப்போதாவது கொண்டுவர முடியும்?

பொ.ச.மு. மூன்றாவது நூற்றாண்டில், குறிப்பிடத்தக்க ஒரு சமாதான முயற்சி இந்திய துணைக்கண்டத்திலிருந்து அறிவிக்கப்பட்டது. அங்கே அசோகர் என்ற பெயர் கொண்ட செல்வாக்குள்ள ஒரு மாமன்னன், போரினாலும் இரத்தஞ் சிந்துதலினாலும் பெரியதோர் சாம்ராஜ்யத்தை உருவாக்கினான். பின்னர் பதிவின் பிரகாரம், அவன் புத்தமத இலட்சியங்களுக்கு மதம் மாறினான். போரைத் துறந்து, தன்னுடைய குடிமக்கள் மேம்பட்ட வாழ்வு வாழ உதவிசெய்யும் பழமொழிகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை தன்னுடைய ஆட்சி எல்லையின் எல்லாப் பக்கங்களிலும் எழுப்பினான். அவனுடைய பேரரசு சமாதானமாகவும் செழிப்பாகவும் இருப்பதாக தெரிந்தது.

அசோகரின் வழி, சமாதானத்துக்குரிய வழியா? விசனகரமாக அது இல்லை. மாமன்னன் மரித்த போது, அவனுடைய சமாதானம் அவனோடு அழிந்தது, அவனுடைய பேரரசு நொறுங்கியது. நல்ல நோக்கமுள்ள, திறமையான ஓர் அரசனின் முயற்சிகளும்கூட, அவன் மரிக்க வேண்டியிருப்பதால், கடைசியில் தடைப்பட்டுவிடுகின்றன என்பதை இது விளக்குகிறது. பிரசங்கியின் எழுத்தாளன் பின்வருமாறு எழுதியபோது இந்தப் பிரச்னையைக் குறிப்பிட்டான்: “நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப் போகிறவனுக்கு அதை நாம் வைத்துப் போக வேண்டியதாகுமே. அவன் புத்திமானாயிருப்பானோ, மூடனாயிருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக் கீழே நான் பிரயாசப்பட்டு ஞானமாய்ச் சம்பாதித்த சகல வஸ்துக்களின் பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே.”—பிரசங்கி 2:18, 19.

ஆம், மனிதனின் இறக்கும் இயல்பு, அவன் நிலையான சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு சமாளிக்க முடியாத ஒரு தடையாக இருக்கிறது. இதன் சம்பந்தமாக சங்கீதக்காரனின் புத்திமதி நிச்சயமாகவே ஞானமானதாக இருக்கிறது: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.”—சங்கீதம் 146:3, 4.

சமாதானத்துக்காகக் கூடுதலான முயற்சிகள்

சமாதானத்தைக் கொண்டுவரும் முயற்சியில் மனிதன் ஏன் தோல்வியடைகிறான் என்பதை அதேவிதமாகவே மற்ற மனித முயற்சிகளும் விளக்குகின்றன. உதாரணமாக, பத்தாம் நூற்றாண்டில் கடவுளின் சமாதானம் என்றழைக்கப்பட்ட ஓர் இயக்கம் ஐரோப்பாவில் துவக்கி வைக்கப்பட்டது. சர்ச் உடைமைகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இது, 12-ம் நூற்றாண்டுக்குள் ஐரோப்பாவின் பெரும் பகுதிக்கும் பரவி விட்டிருந்த வலுத்தாக்குதல்களை தடைசெய்யும் ஒருவகையான உடன்படிக்கையாக வளர்ந்தது.

மற்றொரு கருத்து, “வலிமையின் சமநிலை” என்றழைக்கப்படுகிறது. இந்தக் கொள்கையை பின்பற்றும் வகையில் ஐரோப்பா போன்ற தேசங்களின் ஒரு குழு தேசங்களின் மத்தியில் ஏறக்குறைய சமநிலையான வலிமை பங்கீட்டை காத்துவருவதன் மூலம் போரைத் தடை செய்கின்றன. வலிமையான ஒரு தேசம் வலிமையற்ற ஒன்றை அச்சுறுத்துமேயானால், வலிய வந்து தாக்குதல் செய்யும் தேசத்தை தடைசெய்வதற்காக மற்றொரு வலிமையான தேசம் வலிமையற்ற தேசத்தோடு தற்காலிகமாக சேர்ந்துகொள்கிறது. நெப்போலியனின் போர்களின் முடிவு முதற்கொண்டு 1914-ல் முதல் உலகப் போர் துவங்கினது வரையாக இந்தக் கொள்கை ஐரோப்பிய உறவுகளை வழிநடத்தியது.

அந்தப் போருக்குப் பின்பு, தேசங்கள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை முன்னிட்டுப் போர் செய்வதற்குப் பதிலாக, பேச்சு வார்த்தைகளின் மூலம் அவைகளை தீர்த்துக் கொள்வதற்குரிய ஒரு நீதிமன்றமாக சர்வ தேச சங்கம் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போர் ஆரம்பமான போது சர்வ தேச சங்கம் செயல்பட முடியாமல் போனது. ஆனால் போருக்குப் பின், அதன் ஆவி ஐக்கிய நாடுகள் அவையில் புதுப்பிக்கப்பட்டது, அது இன்றும் இருக்கிறது.

என்றபோதிலும் இந்த அனைத்து முயற்சிகளும் உண்மையான அல்லது நிலையான சமாதானத்தைக் கொண்டுவர தவறிவிட்டிருக்கிறது. கடவுளின் சமாதானம் இயக்கம் ஐரோப்பாவில் இருந்த அதே சமயத்தில்தானே ஐரோப்பியர்கள் கொலைவெறி கொண்ட அறப்போர்களில் முகமதியர்களுக்கு எதிராகப் போர் செய்தனர். அரசியல்வாதிகள் வலிமையின் சமநிலைக் கொள்கையின் மூலமாக ஐரோப்பாவில் சமாதானத்தைப் பாதுகாக்க முயற்சி செய்து கொண்டிருக்கையில், ஐரோப்பாவுக்கு வெளியே அவர்கள் போர் செய்துகொண்டு பேரரசுகளை படிப்படியாக உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். சர்வ தேச சங்கம் இரண்டாம் உலகப் போரைத் தடைசெய்ய திறமையற்றதாக இருந்தது. ஐக்கிய நாடுகள் அவை, கம்ப்பூச்சியாவின் கொடிய படுகொலைகளையோ அல்லது கொரியா, நைஜீரியா, வியட்நாம் மற்றும் சேயீர் போன்ற இடங்களில் சண்டைகளையோ தடைசெய்யவில்லை.

ஆம், இப்பொழுது வரையாக, அரசியல்வாதிகளின் மிகச் சிறந்த சமாதான முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டிருக்கின்றன. இறக்கும் தன்மையுடையவர்களாய் இருப்பதாலும், தங்களுடைய மற்றும் பிறருடைய மனித குறைபாடுகளினாலும் தடைசெய்யப்பட்டவர்களாய், நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவது எவ்வாறு என்பதை ஆட்சியாளர்கள் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். என்றபோதிலும் அது அவ்வாறு இல்லாவிட்டாலும்கூட, அரசியல்வாதிகளால் இன்னும் சமாதானத்தைக் கொண்டுவர முடியாது. ஏன் முடியாது? ஏனென்றால் உண்மையாக அதிக பயங்கரமான மற்றொரு இடையூறினால்.

சமாதானத்தைத் தடைசெய்யும் மறைவான ஒரு சக்தி

பைபிள் பின்வருமாறு சொல்லுகையில், இந்த இடையூறைக் குறித்துப் பேசுகிறது: “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.” (1 யோவான் 5:19) பொல்லாங்கன், நம்மைவிட அதிக வல்லமைவாய்ந்த மீமானிட ஆவி சிருஷ்டியாகிய பிசாசாகிய சாத்தானாகும். ஆரம்பத்திலிருந்தே சாத்தான் கலகத்திலும், பொய்யிலும், கொலையிலும் ஈடுபட்டவனாக இருந்திருக்கிறான். (ஆதியாகமம் 3:1–6; யோவான் 8:44) உலக விவகாரங்களின் மீது மறைவான ஆனாலும் அவனுடைய சக்திவாய்ந்த செல்வாக்கு, ஆவியால் ஏவப்பட்ட மற்ற கருத்துரையாளர்களினால் உறுதிசெய்யப்படுகிறது. பவுல் அவனை “இந்தக் காரிய ஒழுங்கின் கடவுள்,” என்றும் “ஆகாயத்து அதிகாரப் பிரபு” என்றும் அழைத்தான். (2 கொரிந்தியர் 4:4, NW; எபேசியர் 2:2) இயேசு, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள், அவனை, “இந்த உலகத்தின் அதிபதி” என்றழைத்தார்.—யோவான் 12:31; 14:30; 16:11.

உலகம் சாத்தானுக்குள் கிடப்பதன் காரணமாக, மனித அரசியல்வாதிகள் நிலையான சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு எந்தச் சாத்தியமும் இல்லை. அப்படியென்றால், சமாதானம் ஒருபோதும் வராது என்பதை அது அர்த்தப்படுத்துமா? மனிதவர்க்கத்தை எவராவது சமாதானத்துக்கு வழிநடத்திச் செல்வாரா? (w90 4/1)

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

ஆட்சியாளர் ஒருவர் எத்தனை ஞானமுள்ளவராகவும் உயர்ந்த இலட்சியங்களை உடையவராகவும் இருந்தபோதிலும், கடைசியில் அவர் மரித்துப்போகிறார், அநேகமாக அவரைவிட குறைந்த திறமையுள்ள அல்லது குறைந்த இலட்சியங்களுள்ள மற்றவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்கின்றனர்

[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

சமாதானத்துக்கு மிகப்பெரிய தனியொரு இடையூறு பிசாசாகிய சாத்தான்

[பக்கம் 5-ன் படத்திற்கான நன்றி]

U.S. National Archives photo

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்