உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w90 11/1 பக். 18-22
  • தேவனுடைய வசனமே சத்தியம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவனுடைய வசனமே சத்தியம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நடத்தையினால் சாட்சிக்கொடுத்தல்
  • பைபிளின் மேன்மையான ஞானம்
  • பைபிளின் புத்திமதி—ஈடிணையில்லா ஞானமுள்ளது
  • நம்முடைய நீண்ட-கால நன்மைக்கு
  • வாழ்க்கையில் கடினமான பிரச்னைகள்
  • ‘உலக ஞானத்தை’ நம்பி முட்டாளாகிவிடாதீர்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • உண்மையான ஞானம் சத்தமாக அழைக்கிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • உயிர் காக்கும் கல்வி
    விழித்தெழு!—2001
  • ‘ஞானமுள்ளவர்கள் சொல்கிற வார்த்தைகளைக் கேள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
w90 11/1 பக். 18-22

தேவனுடைய வசனமே சத்தியம்

“உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.”—யோவான் 17:17.

1. எபிரெய சங்கீதக்காரன் பைபிளை எவ்விதமாகக் கருதினான்? ஆனால் இன்று அநேகர் அதை எவ்விதமாகக் கருதுகிறார்கள்.?

“உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” (சங்கீதம் 119:105) இவ்விதமாக ஓர் எபிரெய சங்கீதக்காரன் சொன்னான். இன்று ஒரு சிறுபான்மையினரே கடவுளுடைய வார்த்தைக்கு இதுபோன்ற மதிப்பைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த 20-ம் நூற்றாண்டில், கடவுளுடைய வசனம் பரிசுத்த வேதாகமமாக எழுத்துருவில் இருக்கிறது. சரித்திரத்தில் வேறு எந்தப் புத்தகத்தைக் காட்டிலும் இது அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெகு விரிவாக விநியோகிக்கப்பட்டு வந்திருக்கிறது. என்றபோதிலும் பெரும்பாலானோர் அதைத் தங்கள் கால்களுக்குத் தீபமாக ஏற்க மறுக்கின்றனர். கிறிஸ்தவர்களென உரிமைப்பாராட்டுகிறவர்களும்கூட, பெரும்பாலும், பைபிள் தங்கள் பாதைக்கு வெளிச்சமாயிருக்க அனுமதிப்பதைவிட தங்கள் சொந்த கருத்துக்களைப் பின்பற்றவே விரும்புகிறார்கள்.—2 தீமோத்தேயு 3:5.

2, 3. யெகோவாவின் சாட்சிகள் பைபிளை எவ்விதமாகக் கருதுகிறார்கள்? இது அவர்களுக்கு என்ன நன்மைகளைக் கொண்டுவந்திருக்கிறது?

2 இதற்கு நேரெதிர்மாறாக, யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் சங்கீதக்காரன் சொல்வதை ஒப்புக்கொள்கிறோம். நமக்கு பைபிள் கடவுள் கொடுத்த வழிகாட்டியாக இருக்கிறது. “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது,” என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (2 தீமோத்தேயு 3:16, 17) இன்றுள்ள அநேகரைப் போலில்லாமல், ஒழுக்கம் மற்றும் நடத்தை விஷயங்களில் நாம் பரிசோதனைகளைச் செய்துபார்க்க விரும்புவதில்லை. பைபிள் நமக்குச் சொல்கின்ற காரணத்தால் எது சரி என்பது தெரியும்.

3 இது நமக்கு அநேக நன்மைகளைக் கொண்டுவந்திருக்கிறது. நாம் யெகோவாவை அறியவந்திருக்கிறோம், பூமிக்கும் மனிதவர்க்கத்துக்கும் அவருடைய மகத்தான நோக்கங்களைப் பற்றி கற்றுக்கொண்டிருக்கிறோம், ஆகவே நமக்கும் நம்முடைய குடும்பங்களுக்கும் பிரகாசமான ஓர் எதிர்காலம் சாத்தியமாயிருப்பது குறித்து நாம் நம்பிக்கையாயிருக்கிறோம். பின்வருமாறு சொன்ன சங்கீதக்காரனோடு நாம் இருதயப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறோம்: “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம். நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.”—சங்கீதம் 119:97, 98.

நடத்தையினால் சாட்சிக்கொடுத்தல்

4. பைபிளைக் கடவுளுடைய வார்த்தை என்று ஒப்புக்கொள்வது நம்மீது என்ன உத்தரவாதத்தை வைக்கிறது?

4 ஆகவே இயேசு தம்முடைய தகப்பனிடம் சொன்ன வார்த்தைகளை நாம் ஒப்புக்கொள்வதற்கு நமக்கு எல்லாக் காரணமுமிருக்கிறது: “உம்முடைய வசனமே சத்தியம்.” (யோவான் 17:17) ஆனால் இந்த உண்மையை ஒப்புக்கொள்வது நம்மீது ஓர் உத்தரவாதத்தை வைக்கிறது. கடவுளுடைய வசனமே சத்தியம் என்பதைத் தெளிவாக உணருவதற்கு மற்றவர்களுக்கு நாம் உதவிசெய்ய வேண்டும். இவ்வகையில் அவர்களும்கூட நாம் அனுபவித்துவரும் ஆசீர்வாதங்களை அனுபவிக்கக் கூடியவர்களாக இருப்பர். அந்த விதத்தில் நாம் அவர்களுக்கு எவ்விதமாக உதவலாம்? ஒரு காரியமானது, பைபிள் நியமங்களை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பொருத்துவதற்கு எல்லா முயற்சியையும் எடுக்க வேண்டும். அந்தவிதத்தில், நேர்மையான-இருதயமுள்ளவர்கள் பைபிளின் வழியே உண்மையில் மிகச்சிறந்தது என்பதைக் காண்பார்கள்.

5. நடத்தையினால் சாட்சிக்கொடுத்தலைப் பற்றி பேதுரு என்ன அறிவுரையைக் கொடுத்தான்?

5 இதுவே, அவிசுவாசிகளாக இருந்த கணவன்மார்களைக் கொண்டிருந்த கிறிஸ்தவப் பெண்களுக்கு பேதுரு அப்போஸ்தலன் கொடுத்த அறிவுரையின் சுருக்கமாகும். அவன் அவர்களிடம் சொன்னான்: “மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், . . . போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.” (1 பேதுரு 3:1, 2) அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும்—ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகள்—அவன் கொடுத்த புத்திமதிக்குப் பின்னாலும்கூட இதுவே நியமமாக இருந்தது. அவன் சொன்னதாவது: “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்.”—1 பேதுரு 2:12; 3:16.

பைபிளின் மேன்மையான ஞானம்

6. மற்றவர்கள் பைபிளைப் போற்றுவதற்கு நாம் துணை செய்ய வேண்டும் என்பதைக் காண்பதற்கு பேதுரு நமக்கு எவ்விதமாக உதவிசெய்கிறான்?

6 மேலுமாக, கிறிஸ்தவர்கள் பேதுருவின் பின்வரும் புத்திமதியின்படி செய்வார்களேயானால் மற்றவர்கள் பைபிளைப் போற்றுவதற்கு உதவிசெய்யலாம்: “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.” (1 பேதுரு 3:15) கிறிஸ்தவ ஊழியர்கள் பைபிளை ஆதரிக்கவும் அது கடவுளுடைய வார்த்தையே என்பதை மற்றவர்களுக்கு விளக்கவும் கூடியவர்களாக இருக்க வேண்டும். அதை அவர்கள் எவ்விதமாகச் செய்யக்கூடும்?

7. பைபிளைப் பற்றிய என்ன உண்மை, அது கடவுளுடைய வார்த்தையாகவே இருக்கவேண்டும் என்பதைக் காண்பிக்கிறது?

7 நியாயங்களை மெய்யென காட்டி நம்பவைக்கும் ஒரு வழி நீதிமொழிகள் புத்தகத்தில் காணப்படுகிறது. அங்கே நாம் இவ்விதமாக வாசிக்கிறோம்: “என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, . . . நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்துவாயானால் . . . தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். கர்த்தர் (யெகோவா NW) ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.” (நீதிமொழிகள் 2:1–6) கடவுளுடைய சொந்த ஞானம் பைபிளின் பக்கங்களில் காணப்படுகிறது. உண்மை மனதுள்ள ஒரு நபர் அந்த ஆழமான ஞானத்தைக் காண்பாரேயானால், பைபிள் வெறுமென மனிதனின் வார்த்தையைவிட அதிகமானது என்பதை உணராமல் இருக்க முடியாது.

8, 9. செல்வத்தைத் தேடுவது குறித்து சமநிலையான ஒரு நோக்கை வைத்திருப்பதுபற்றிய பைபிளின் புத்திமதி எவ்விதம் சரியானதாக காண்பிக்கப்பட்டிருக்கிறது?

8 ஒருசில உதாரணங்களைக் கவனியுங்கள். இன்று, பொதுவாக வாழ்க்கையில் வெற்றி பொருளாதாரத்தை அளவுகோலாகக் கொண்டு அளக்கப்படுகிறது. ஒரு நபர் அதிகமாக சம்பாதிக்கையில் அதிக வெற்றிகண்டவராகக் கருதப்படுகிறார். ஆனால் பைபிள், பொருளாதாரக் காரியங்களுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதுக் குறித்து எச்சரிக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினான்: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:9, 10; மத்தேயு 6:24 ஒப்பிடவும்.

9 இந்த எச்சரிப்பு எத்தனை பொருத்தமாக இருக்கிறது என்பதை அனுபவம் காண்பித்திருக்கிறது. ஒரு மருத்துவ பயிற்சி பெற்ற மனோதத்துவர் குறிப்பிட்டார்: “முதன்மையானவராவதும் பணக்காரராவதும் உங்களை நிறைவாக, திருப்தியாக, உண்மையாக மதிப்புக்குரியவராக அல்லது நேசிக்கப்படுகிறவராக உணரச்செய்வதில்லை.” ஆம், செல்வத்தை நாடும் முயற்சியில் தங்கள் எல்லாச் சக்திகளையும் செலவழிக்கிறவர்கள், கடைசியாக கசப்பாகவும் ஏமாற்றமடைந்தவராகவும் உணரும் நிலை ஏற்படுகிறது. வேதாகமம் பணத்தின் மதிப்பை ஒப்புக்கொள்கையில், அதைவிட அதிமுக்கியமான ஏதோஒன்றை சுட்டிக்காண்பிக்கிறது: “ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.”—பிரசங்கி 7:12.

10. நம்முடைய கூட்டுறவுகளைக் குறித்து எச்சரிப்பாயிருக்கும்படி பைபிள் கொடுக்கும் புத்திமதிக்கு நாம் ஏன் செவிசாய்க்க வேண்டும்?

10 பைபிள் இதுபோன்ற அநேக நல்லொழுக்கப் போதனைகளைக் கொண்டிருக்கிறது. மற்றொன்று: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” (நீதிமொழிகள் 13:20) இதுவும் கூட அனுபவத்தால் உண்மையாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒத்த வயதினரிடமிருந்து வரும் அழுத்தம், அநேக இளைஞரை குடிவெறி, போதைவஸ்து துர்ப்பிரயோகம் மற்றும் ஒழுக்கங்கெட்ட நடத்தையினுள்ளும் வழிநடத்தியிருக்கிறது. கெட்ட வார்த்தைகளைப் பேசுகிறவர்களோடு கலப்பவர்கள், கடைசியில் தாங்களும் இதுபோன்ற அருவருப்பான பேச்சைப் பேசுவதைக் காண்கிறார்கள். அநேகர் தங்கள் முதலாளிகளிடமிருந்து திருடுகிறார்கள், ஏனென்றால், ‘எல்லாரும் அதைச் செய்கிறார்கள்.’ உண்மையாகவே பைபிள் மேலுமாகச் சொல்லுகிறவிதமாகவே: “கெட்ட கூட்டுறவுகள் பயனுள்ள பழக்கவழக்கங்களைக் கெடுக்கும்.”—1 கொரிந்தியர் 15:33, NW.

11. பொன் விதியைப் பின்பற்றுவதன் ஞானத்தை மனோதத்துவ ஆய்வு ஒன்று எவ்விதமாகக் காண்பித்தது?

11 பைபிளில் காணப்படும் மிகப் பிரபலமான புத்திமதிகளில் ஒன்று பொன் விதி என்றழைக்கப்படுகிறது: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (மத்தேயு 7:12) மனிதவர்க்கம் இந்த விதியைப் பின்பற்றினால், உலகம் தெளிவாகவே மேம்பட்ட ஓரிடமாக இருக்கும். ஆனால் பொதுவில் மனிதர்கள் இந்த விதியைப் பின்பற்றாவிட்டாலும் தனிப்பட்டவர்களாக நீங்கள் அவ்விதமாகச் செய்வது உங்களுக்கு மேன்மையானதாகும். ஏன்? ஏனென்றால் நாம் மற்றவர்களை கவனிக்கும்படியும், அவர்களைக் குறித்து அக்கறையுள்ளவர்களாக இருக்கும்படியும் உண்டாக்கப்பட்டிருக்கிறோம். (அப்போஸ்தலர் 20:35) மக்கள் மற்றவர்களுக்கு உதவிசெய்கையில் எவ்விதமாக பிரதிபலித்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க ஐக்கிய மாகாணங்களில் நடத்தப்பட்ட ஒரு மனோதத்துவ ஆய்வு இந்த முடிவுக்கு வந்தது: “அப்படியென்றால் மற்றவர்களில் அக்கறையுள்ளவர்களாயிருப்பது நம்மைக் குறித்தே அக்கறையுள்ளவர்களாயிருப்பது போன்ற மனித இயல்பின் பாகமாயிருப்பதாகத் தோன்றுகிறது.”—மத்தேயு 22:39.

பைபிளின் புத்திமதி—ஈடிணையில்லா ஞானமுள்ளது

12. பைபிளை ஈடிணையற்றதாக்கும் ஒரு காரியம் என்ன?

12 இன்று, நிச்சயமாகவே, பைபிளுக்கு வெளியே ஆலோசனைகளுக்கு அநேக ஊற்றுமூலங்கள் உண்டு. செய்திதாள்கள் அறிவுரை பத்திகளைக் கொண்டிருக்கின்றன, புத்தகக் கடைகள் சுய-உதவி புத்தகங்களால் நிறைந்திருக்கின்றன. மேலுமாக, மனோதத்துவர்களும், ஆலோசனை வழங்குவதை வாழ்க்கைப் பணியாகக் கொண்டவர்களும், பல்வேறு துறைகளிலும் ஆலோசனை வழங்குபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பைபிள் குறைந்தபட்சம் மூன்று அம்சங்களிலாவது ஈடிணையற்றதாக இருக்கிறது. முதலாவது, அதன் புத்திமதி எப்போதும் பிரயோஜனமுள்ளது. அது ஒருபோதும் வெறுமென ஒரு தத்துவமாக இல்லை, நமக்கு ஒருபோதும் தீங்கிழைப்பதும் இல்லை. பைபிளின் புத்திமதியைப் பின்பற்றுகிற எவரும் சங்கீதக்காரன் ஜெபத்தில் கடவுளிடம் சொன்னதை ஒப்புக்கொள்ள வேண்டும்: “உமது நினைப்பூட்டுதல்கள் மிகவும் நம்பத்தக்கவையாக நிரூபித்திருக்கிறது.”—சங்கீதம் 93:5, NW.

13. மனித ஊற்றுமூலங்களிலிருந்து வரும் ஞானத்தைக் காட்டிலும் பைபிள் மிகப் பெரிய அளவில் மேம்பட்டதாக இருப்பதை எது காண்பிக்கிறது?

13 இரண்டாவதாக, பைபிள் காலத்தின் சோதனையை வென்று வந்திருக்கிறது. (1 பேதுரு 1:25; ஏசாயா 40:8) மனித ஊற்றுமூலங்களிலிருந்து வரும் புத்திமதி மாறுவதற்குப் பேர்போனது. ஓர் ஆண்டில் நாகரிகமாக இருப்பது அடுத்த ஆண்டில் அநேகமாக கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. என்றபோதிலும் பைபிள் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுதி முடிக்கப்பட்டபோதிலும், அது இன்னும் கிடைக்கக்கூடிய மிக ஞானமான புத்திமதியைக் கொண்டிருக்கிறது, அதன் வார்த்தைகள் உலகம் முழுவதிலும் பொருந்தக்கூடியவையாக இருக்கின்றன. நாம் ஆப்பிரிக்காவிலோ, ஆசியாவிலோ, தென் அல்லது வட அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ, அல்லது கடலின் சிறு தீவுகளிலோ வாழ்ந்தாலும் அவை ஒரேவிதமான பலனோடு பொருந்துகின்றன.

14. கடவுளுடைய வார்த்தையின் புத்திமதி எவ்வகையில் சிறப்புற்றிருக்கிறது?

14 கடைசியாக, பைபிள் புத்திமதியின் விரிவான செயல் எல்லை ஒப்பற்றதாகும். பைபிள் நீதிமொழி ஒன்று சொல்கிறது: “கர்த்தர் (யெகோவா, NW) ஞானத்தைத் தருகிறார்.” நாம் எதிர்ப்படும் பிரச்னை அல்லது தீர்மானம் எதுவாக இருப்பினும், அதைத் தீர்ப்பதற்கு நமக்கு உதவிசெய்யும் ஞானம் பைபிளில் இருக்கிறது. (நீதிமொழிகள் 2:6) பிள்ளைகள், பருவ வயதினர், பெற்றோர், வயதானவர்கள், தொழிலாளிகள், முதலாளிகள், அதிகாரத்தில் இருக்கும் ஆட்கள், அனைவருமே பைபிளிலுள்ள ஞானம் தங்களுக்குப் பொருந்துவதைக் காண்கிறார்கள். (நீதிமொழிகள் 4:11) இயேசுவின் காலத்திலும் அவருடைய அப்போஸ்தலர்களின் காலத்திலும் அறியப்படாத நிலைமைகளை நாம் எதிர்ப்படும் போதும்கூட பைபிள் பயனுள்ளதாக இருக்கும் புத்திமதியை நமக்குக் கொடுக்கின்றது. உதாரணமாக, முதல் நூற்றாண்டில், புகையிலைப் புகைப்பது மத்திய கிழக்கில் அறியப்படாத ஒன்றாக இருந்தது. இன்று இது மிகப்பரவலாக உள்ளது. என்றபோதிலும், “ஒன்றுக்கும் அடிமைப்படு”வதைத் [கட்டுப்படுத்தப்படுவதை] தவிர்க்கும்படியாகவும் “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க” சுத்தமாயிருக்கும்படியாகவும் பைபிள் கொடுக்கும் புத்திமதியைக் கவனிப்பவர்கள், அடிமைப்படுத்துவதாக இருந்து அதே சமயத்தில் உடல் ஆரோக்கியத்தை அழிப்பதாயுமிருக்கும் இந்தப் பழக்கத்தை தவிர்ப்பார்கள்.—1 கொரிந்தியர் 6:12; 2 கொரிந்தியர் 7:1.

நம்முடைய நீண்ட-கால நன்மைக்கு

15. பைபிள் வழக்கற்றுப் போய்விட்டதாக அநேகர் உரிமைப்பாராட்டக் காரணம் என்ன?

15 உண்மைதான், பைபிள் வழக்கற்றுப் போய்விட்டதென்றும் இந்த 20-ம் நூற்றாண்டில் பொருத்தமற்றது என்றும் அநேகர் சொல்லுகிறார்கள். என்றபோதிலும் அவர்கள் கேட்க விரும்புவதை பைபிள் சொல்லாமலிருப்பதே இதற்குக் காரணமாயிருக்கலாம். வேதாகம புத்திமதியைப் பின்பற்றுவது நம்முடைய நீண்ட-கால நன்மைக்காக வழியை உண்டுபண்ணுகிறது. ஆனால் அநேகமாக அது பொறுமையையும், சிட்சையையும், தன்னல மறுப்பையும் கேட்கிறது—உடனடி கைமாற்றை நாடும்படியாக நம்மை ஊக்குவிக்கும் உலகில் விரும்பப்படாத குணங்கள்.—நீதிமொழிகள் 1:1–3.

16, 17. பாலின ஒழுக்கத்தில் பைபிள் என்ன உயர்ந்த தராதரத்தை வைக்கிறது? நவீன காலங்களில் அவை எவ்விதமாக அசட்டை செய்யப்பட்டிருக்கின்றன?

16 பாலின ஒழுக்க விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். வேதாகம தராதரங்கள் மிகவும் கண்டிப்பானவை. பாலின உறவுக்கு ஒரே இடம் விவாகத்தினுள்ளாகும். விவாகத்துக்கு வெளியே இப்படிப்பட்ட எல்லா உறவுகளும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. நாம் வாசிக்கிறோம்: “வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் . . . தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” (1 கொரிந்தியர் 6:9, 10) மேலுமாக கிறிஸ்தவர்களுக்கு பைபிள் ஒரு கணவனுக்கு ஒரு மனைவி என்ற ஒருதுணை வாழ்க்கையை, கட்டளையிடுகிறது. (1 தீமோத்தேயு 3:2) விவாகரத்தை அல்லது பிரிந்திருத்தலை அனுமதிக்கக்கூடிய வழக்கத்துக்கு மாறான சந்தர்ப்பங்கள் இருந்தபோதிலும், பொதுவாக விவாக பந்தம் வாழ்நாள் முழுவதிலும் இருப்பதாக பைபிள் சொல்லுகிறது. இயேசுதாமே இவ்விதமாகச் சொன்னார்: “ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும் இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் . . . இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.”—மத்தேயு 19:4–6, 9; 1 கொரிந்தியர் 7:12–16.

17 இன்று, இந்தத் தராதரங்கள் எல்லா இடங்களிலும் அசட்டை செய்யப்படுகின்றன. ஒழுக்கக்கேடான பாலினப் பழக்கங்கள் பொறுத்துக்கொள்ளப்படுகின்றன. எதிர்பாலாரிடம் பழகும் பருவ வயதினருக்கிடையில் பாலுறவுகள் இயல்பானவையாகக் கருதப்படுகின்றன. விவாகத்தின் அனுகூலமின்றி ஒன்றாகச் சேர்ந்து வாழ்வது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. விவாகமான தம்பதிகள் மத்தியில், துணைவர்களில் எவரேனும் ஒருவர் முறைகேடான பாலுறவு விவகாரங்களைக் கொண்டிருத்தல் வழக்கத்துக்கு மாறானதாக இல்லை. விவாகரத்து இந்த நவீன உலகில் பெரும் பரவலாக உள்ளது. ஆனால் தளர்த்தப்பட்ட இந்தத் தராதரங்கள் மகிழ்ச்சியைக் கொண்டுவரவில்லை. இந்த மோசமான விளைவுகள், பைபிள் கண்டிப்பான ஒழுக்கத் தராதரங்களை வற்புறுத்துவதில் அது உண்மையில் சரியாகவே இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது.

18, 19. ஒழுக்கத்தில் யெகோவாவின் தராதரங்களை மிகப்பரவலாக அசட்டை செய்திருப்பதால் என்ன விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன?

18 பெண்கள் குடும்ப பத்திரிகை (Ladies’ Home Journal) சொன்னதாவது: “அறுபதுகளின் மற்றும் எழுபதுகளின் தனித்தன்மையாக அமைந்த பாலுறவுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் எல்லையில்லா மனித மகிழ்ச்சியை அல்ல, ஆனால் சில கவலைக்குரிய மனித துயரங்களைத்தான் கொண்டுவந்திருக்கின்றன.” இங்கே குறிப்பிடப்படும் “கவலைக்குரிய மனித துயரங்களில்” தங்கள் பெற்றோரின் விவாகரத்தினால் பிள்ளைகள் அதிர்ச்சிக்குள்ளாவதும், பெரியவர்கள் ஆழமான உணர்ச்சி சம்பந்தப்பட்ட வருத்தத்தை அனுபவிப்பதும் அடங்கும். ஒற்றைப் பெற்றோருடைய குடும்பங்களின் அதிகரிப்பும், தாங்கள் தாமே இன்னும் குழந்தைப் பருவத்தைவிட்டு வெளியேறுவதற்கு முன்னே குழந்தைகளைக் கொண்டிருக்கும் இளம் விவாகமில்லாதப் பெண்கள் பெருவாரியாக இருப்பதும்கூட இதில் அடங்கும். மேலுமாக, பிறப்புறுப்பில் தேமல், மேகவெட்டை நோய், மேகநோய், திண் தோல் சிதைவு மற்றும் எய்ட்ஸ் போன்ற பெருவாரியாக பாலுறவினால் கடத்தப்படும் நோய்களும் இதில் அடக்கமாயிருக்கும்.

19 இவை அனைத்தையும் உள்ளிட்டுப் பார்க்கையில், ஒரு மனித சமுதாய ஆய்வுத்துறைப் பேராசிரியர் குறிப்பிட்டதாவது: “ஒருவேளை நம்முடைய குடிமக்களின் தேவைகளுக்கும் அவர்களுடைய விடுதலை உரிமைக்கும் விடையாக இருக்கின்ற, விவாகத்துக்கு முன்பாக பாலுறவிலிருந்து விலகியிருத்தலை ஒரு கொள்கையாக ஆதரித்து ஊக்கமளிப்பது நம் அனைவருக்குமே மேன்மையாக இருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதற்கு நாம் போதிய அளவு வளர்ந்துவிட்டிருக்கிறோம்: நோயிலிருந்து விடுதலை, தேவையில்லாத கர்ப்பத்திலிருந்து விடுதலை.” பைபிள் சரியாகச் சொல்வது: “அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே (யெகோவாவையே NW) தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.” (சங்கீதம் 40:4) பைபிளின் ஞானத்தை நம்புகிறவர்கள், தளர்த்தப்பட்ட ஒழுக்கச் சட்டத்தொகுப்பு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்பதாகச் சொல்லி பைபிளை பகிரங்கமாக எதிர்க்கும் ஆட்களின் பொய்களினால் ஏமாற்றப்படுவதில்லை. பைபிளின் ஞானமான, கண்டிப்பான, தராதரங்கள் மிகச்சிறந்த நலனுக்காகவே.

வாழ்க்கையில் கடினமான பிரச்னைகள்

20. தங்கள் வாழ்க்கையில் மிகமோசமான வறுமையை எதிர்ப்பட வேண்டியிருப்பவர்களுக்கு என்ன பைபிள் நியமங்கள் பயனுள்ளவையாக நிரூபித்திருக்கின்றன?

20 பைபிளின் ஞானம், நாம் வாழ்க்கையில் எதிர்ப்படும் கடினமானப் பிரச்னைகளை கையாளுவதற்கும்கூட உதவி செய்கிறது. உதாரணமாக, அநேக தேசங்களில், மிகமோசமான, ஆழ்ந்த வறுமையில் வாழும் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். என்றபோதிலும் அவர்கள் தங்களுடைய வறுமையைச் சமாளித்து, அதே சமயத்தில் மகிழ்ச்சியையும் காண்கிறார்கள். எவ்விதமாக? கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையைப் பின்பற்றுவதன் மூலமாக. சங்கீதம் 55:22-லுள்ள ஆறுதலான வார்த்தைகளை அவர்கள் கருத்தாழமுடையதாக எடுத்துக்கொள்கிறார்கள்: “கர்த்தர் (யெகோவா, NW) மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்.” அவர்கள் சகித்துக்கொள்வதற்கு பெலத்திற்காக யெகோவா மீது சார்ந்திருக்கிறார்கள். பின்னர் அவர்கள் பைபிள் நியமங்களைப் பொருத்தி புகைத்தல், குடி போன்ற தீங்கிழைக்கும் ஊதாரித்தனமான பழக்கவழக்கங்களைத் தவிர்க்கிறார்கள். பைபிள் சிபாரிசு செய்யும் வண்ணமாக அவர்கள் கடின உழைப்பாளிகளாக இருந்து இவ்விதமாக, சோம்பேறிகளும், நம்பிக்கையிழப்பவர்களும் தோல்வியடைகையில் தாங்கள் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கமுடிவதைக் காண்கிறார்கள். (நீதிமொழிகள் 6:6–11; 10:26) மேலுமாக அவர்கள் பைபிளின் எச்சரிப்புக்குச் செவிசாய்க்கிறார்கள்: “நியாயக்கேடு செய்கிறவர்கள் மேல் பொறாமைகொள்ளாதே.” (சங்கீதம் 37:1) அவர்கள் சூதாடுவதோ அல்லது போதை வஸ்துக்களை விற்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதோ கிடையாது. இந்தக் காரியங்கள் அவர்களுடைய பிரச்னைகளுக்கு விரைவானப் “பரிகாரத்தை” அளிக்கக்கூடும், ஆனால் நீண்ட-கால பலன் கசப்பாக இருக்கிறது.

21, 22. (எ) ஒரு கிறிஸ்தவ பெண் எவ்விதமாக பைபிளிலிருந்து உதவியையும் ஆறுதலையும் பெற்றுக் கொண்டாள்? (பி) பைபிளைப் பற்றிய மேலுமான என்ன உண்மை அது கடவுளுடைய வார்த்தை என்பதை ஒப்புக்கொள்ள நமக்கு உதவிசெய்கிறது?

21 பைபிளைப் பின்பற்றுவது உண்மையில் மிகமோசமான வறுமையில் இருக்கும் ஆட்களுக்கும்கூட உதவி செய்கிறதா? ஆம், அநேகமநேகமான அனுபவங்கள் இதையே காண்பிக்கின்றன. ஆசியாவில் வாழும் ஒரு கிறிஸ்தவ விதவை இவ்விதமாக எழுதுகிறாள்: “நான் வறுமைக்கோட்டின் அருகே வாழ்ந்து வந்தாலும், நான் வெறுப்படைவதோ மனக்கசப்படைவதோ கிடையாது. பைபிள் சத்தியம் நம்பிக்கையான மனநிலையால் என்னை நிரப்புகிறது.” இயேசு கொடுத்த குறிப்பிடத்தக்க ஒரு வாக்குறுதி தன்னுடைய விஷயத்தில் நிறைவேறியிருப்பதாக அவள் குறிப்பிடுகிறாள். இயேசு சொன்னார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:33) கடவுளுக்குரிய தன்னுடைய சேவையை வாழ்க்கையில் முதலாவது வைப்பதன் மூலம் ஏதாவது ஒரு வழியில் வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சம்பந்தமானக் காரியங்களைத் தான் எப்போதும் பெற்றுக்கொள்வதாக அவள் சாட்சி சொல்கிறாள். மேலும் அவளுடைய கிறிஸ்தவ ஊழியம், அவளுக்கு கண்ணியத்தையும் வறுமையை சகித்துக்கொள்ளக்கூடும்படிச் செய்வதற்கு வாழ்க்கையில் ஓர் இலக்கையும் கொடுக்கிறது.

22 நிச்சயமாகவே, அதன் ஞானத்தின் ஆழம், பைபிள் உண்மையில் கடவுளுடைய வார்த்தை என்பதைக் காண்பிக்கிறது. மனிதனால் மாத்திரமே எழுதப்படும் எந்த ஒரு புத்தகமும் வாழ்க்கையின் இத்தனை அநேக வித்தியாசமான அம்சங்களைப் பற்றி பேசவும் இத்தனை ஆழமாக பகுத்துணரவும் மாறாமல் எப்போதும் சரியாகவும் ஒருபோதும் இருக்கமுடியாது. ஆனால் பைபிள் தெய்வீக ஆரம்பத்தைக் கொண்டது என்பதைக் காண்பிக்கும் மற்றொரு உண்மை அதற்கு உண்டு. அதற்கு மக்களை மேம்பட்டவர்களாக மாற்றும் வல்லமை இருக்கிறது. அடுத்தக் கட்டுரையில் இதை நாம் சிந்திப்போம். (w90 4/1)

உங்களால் விளக்கமுடியுமா?

◻ யெகோவாவின் சாட்சிகள் பைபிளைக் கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டிருப்பதால் அவர்கள் என்ன விதத்தில் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்?

◻ கடவுளுடைய வார்த்தையை விசுவாசிப்பவர்களாக, நமக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? இந்த உத்தரவாதத்தை நிறைவேற்ற நம்முடைய நடத்தை நமக்கு எவ்விதமாக உதவக்கூடும்?

◻ பைபிளின் ஞானமான புத்திமதியை வெறும் மனிதனின் ஆலோசனையைக் காட்டிலும் சிறந்ததாக்குவது எது?

◻ பைபிளினுடைய ஞானத்தின் ஆழத்தைக் காண்பிக்கும் ஒருசில உதாரணங்கள் யாவை?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்