உலக சமாதானம்—அது உண்மையிலேயே எதை அர்த்தப்படுத்தும்?
கடவுள் மனதில் வைத்திருக்கும் உலக சமாதானம், உலகளாவிய போர் நிறுத்தம் அல்லது அணுஆயுத இக்கட்டு நிலையைக் காட்டிலும் மேலானதை உட்படுத்தும். “சமாதானம்” என்ற வார்த்தையை பைபிள் உபயோகிக்கும் விதத்திலிருந்து இது தெளிவாய் இருக்கிறது.
உதாரணமாக, எபிரெய வேதாகமத்தில் (“பழைய ஏற்பாட்டில்”) சமாதானம் என்ற வார்த்தைக்கு எபிரெய வார்த்தை ஷாலோம். இந்த வார்த்தையின் வினைவடிவம் ஆதியாகமம் 37:14-ல் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் முற்பிதாவாகிய யாக்கோபு தன் மகன் யோசேப்பிடம் இவ்வாறு சொல்கிறார்: “நீ போய், உன் சகோதரருடைய ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து எனக்கு மறுசெய்தி கொண்டு வா.”a ஆதியாகமம் 41:16-ல் ஷாலோம் மறுபடியுமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது, அந்த இடத்தில் “இன்னலம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
ஆகையால், பைபிள் கருத்தில் மெய்யான சமாதானம் பகைப்பதை நிறுத்திக்கொள்வது மட்டுமல்லாமல், ஆரோக்கியம், பாதுகாப்பு, நலன் ஆகியவற்றையும் உட்படுத்துகிறது. சமாதானத்தை எவ்வாறு கொண்டுவருவது என்ற புதிரை மனிதர்களால் தீர்க்க முடியவில்லை என்று எங்களுடைய ஆகஸ்ட் 1, 1991 இதழ் காண்பித்தது. “சமாதான பிரபு”வாகிய இயேசுகிறிஸ்து மட்டுமே துண்டுகளை ஒட்டியிணைத்து பூமிக்கு மெய்யான சமாதானத்தை கொண்டு வருவார். (ஏசாயா 9:6, 7) உதாரணமாக, சங்கீதம் 72:7, 8-ல் பைபிள் தீர்க்கதரிசனங்கள் அவருடைய ஆட்சியைப் பற்றி என்ன சொல்கின்றன என்பதை சிந்தித்துப் பாருங்கள்: “அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம் வரைக்கும், நதி தொடங்கிப் பூமியின் எல்லைகள் வரைக்கும் அவர் அரசாளுவார்.” கற்பனை செய்து பாருங்கள்—ஆரோக்கியம், பாதுகாப்பு, இன்னலம் ஆகியவை உலகளாவிய அளவில்! எந்த அரசியல் ஒப்பந்தமும் அதை ஒருபோதும் சாதிக்க முடியாது. கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே அதை செய்ய முடியும். அது இன்னும் அநேக காரியங்களை சாதிக்கும். இந்த எதிர்கால உலக சமாதானத்தைப் பற்றி அநேக கிளர்ச்சியூட்டும் தீர்க்கதரிசன கண்ணோட்டங்களை பைபிள் நமக்கு கொடுக்கிறது. அவைகளில் சிலவற்றை நாம் இப்போது சிந்திப்போம்.
பூகோள போராயுத நீக்கம்—கடவுளுடைய வழியில்!
சங்கீதம் 46:8, 9 இவ்வாறு சொல்கிறது: “பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள். அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.” “வில்,” “ஈட்டி,” “இரதம்” என்ற வார்த்தைகள் எவ்வகையான யுத்த கருவிக்கும் அல்லது யுத்த இயந்திரங்களுக்கும் அடையாளமாக இருக்கிறது. ஆயுதங்களைக் குறைப்பது அல்லது மொத்தமாக போராயுதங்களை நீக்குவதற்கும் மேலாக யெகோவா செல்கிறார். அணுஆயுதங்கள், பீரங்கிகள், பீரங்கிப் படை வண்டிகள், ஏவுகணை எறியும் சாதனங்கள், எறிகுண்டுகள், பிளாஸ்டிக் வெடி மருந்துகள், சுழல் துப்பாக்கிகள், கைத் துப்பாக்கிகள் ஆகியவற்றை—பூகோள சமாதானத்தை பயமுறுத்தும் எதையும்—அவர் முழுவதுமாக நீக்குவார்!
என்றபோதிலும், போராயுதங்கள் மட்டுமே யுத்தத்தை ஏற்படுத்துவதில்லை. அபூரண மானிடர்களின் போரின் வேர் பகை, பேராசை அல்லது வன்முறையான சுபாவங்களில் இருக்கிறது. (யாக்கோபு 4:1–3-ஐ ஒப்பிடுக.) ஆகையால் ஜனங்களின் ஆள்தன்மையில் இருக்கும் இப்படிப்பட்ட வெறுக்கத்தக்க பண்புகளை நீக்குவதன் மூலம் கடவுளுடைய ராஜ்யம் போரின் இந்த மூல காரணத்தை தாக்கும். எவ்வாறு? ஒரு பூகோள கல்வித் திட்டத்தின் மூலம். “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல், பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”—ஏசாயா 11:9.
இவ்வாறு “யெகோவாவால் கற்பிக்கப்படும்” போது, சண்டை, பகை அல்லது வெறுப்பு ஆகிய இன வேறுபாடுகளுக்கு அடிப்படையாக இனவேறுபாடுகளை மனிதவர்க்கம் இனிமேலும் காணாது. (யோவான் 6:45) “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல,” பூமியின் குடிமக்கள் அவருடைய பட்சபாதமற்ற தன்மையை பிரதிபலிப்பர். (அப்போஸ்தலர் 10:34) தேசிய எல்லைகளை நீக்குவதன் மூலம் தேசிய சண்டைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளையும் கடவுளுடைய ராஜ்யம் நீக்கிவிடும். ‘ஒரு சமுத்திரந் தொடங்கி மறுசமுத்திரம் வரைக்கும், பூமியின் எல்லைகள் வரைக்கும்’ அனைவரும் கிறிஸ்துவின் ஆட்சிக்கு தங்கள் மனமுவந்த, நன்றியுள்ள பற்றுறுதியை தவறாமல் கொடுப்பர்.—சங்கீதம் 72:8.
அப்படிப்பட்ட சமாதானம் நிலைத்திருப்பதற்கு, மனித சரித்திரத்தில் இருக்கும் பிரிக்கும் சக்தியான பொய் மதத்தைகூட ராஜ்யம் நீக்கிவிடும். (செப்பனியா 2:11) ஒரே மெய்க்கடவுளின் வணக்கத்தில் மனிதவர்க்கம் ஐக்கியப்பட்டிருக்கும். (ஏசாயா 2:2, 3) உலகளாவிய சகோதரத்துவம் மேலோங்கியிருக்கும்!
வீட்டில் சமாதானம்
அவமதிப்பு, புண்படுத்தும் வார்த்தைகள், பயமுறுத்தல்கள் ஆகியவை தொடர்ந்து செய்யப்படும் ஓர் இடமாக தனிப்பட்ட வீடுகள் இருந்தால், உலக சமாதானத்துக்கு என்ன மதிப்பு இருக்கும். இன்று அநேக குடும்பங்களில் நிலைமை இப்படிதான் இருக்கிறது. மற்ற குடும்பங்கள் பேசாமலிருப்பதன் மூலம் ஆழமான விரோதங்களை மறைக்கின்றனர்.
ஆகையால், மெய் சமாதானம் வீட்டுச் சமாதானத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ராஜ்ய கல்வி திட்டத்தின் கீழ், கணவன்மாரும் மனைவிகளும் ஒருவரோடொருவர் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ள கற்பிக்கப்படுவர். (கொலோசெயர் 3:18, 19) ‘பிள்ளைகள் பெற்றோருக்கு எல்லா காரியத்திலேயும் கீழ்ப்படிவதற்கு’ கற்றுக்கொடுக்கப்படுவர். (கொலோசெயர் 3:20) தங்கள் பெற்றோருக்கு சோர்வையும், மனக் கவலையையும் கொடுக்கும் கலகத்தனமான பருவ வயதினர் அப்போது இருக்க மாட்டார்கள். கீழ்ப்படிதல் எடுத்துக்காட்டாகவும் ஒத்துழைப்பு சட்டமாகவும் இருக்கும். பிள்ளைகளைக் காண்பதும் அவர்கள் நம்மோடிருப்பதும் சந்தோஷமாய் இருக்கும்.
இன்று, பெற்றோர்கள் இருவருமே உலகப்பிரகாரமான வேலையின் பாரமான சுமைகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருப்பதால் பொருளாதார அழுத்தங்கள் குடும்ப பிரச்னைகளை அதிகமாக ஆக்குகிறது. ஆனால் கிறிஸ்துவின் ஆட்சியின் கீழ், குடும்பங்கள் பண சுமைகளிலிருந்து—அதிகமாக்கப்பட்ட வாடகைகள், அடமான செலுத்தங்கள், அதிகரித்துக் கொண்டே போகும் வரிகள், வேலையில்லாமை—ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்படுவர். திருப்தியளிக்கும் சாதிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கும். எவரும் வீடு இன்றி இருக்க தேவையிராது. ஏசாயா 65:21–23-ல் இருக்கும் தீர்க்கதரிசனம் இந்த உண்மைகளை எவ்வாறு சிறப்பித்துக் காட்டுகிறது என்பதை கவனியுங்கள்: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள்; . . . அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை . . . நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும் அவர்களோடே கூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.”
சீரழிந்து கொண்டிருக்கும் நகர்ப்புற பகுதிகளின் காட்சிகள், ஒலிகள், நாற்றம் ஆகியவை இல்லாத சூழ்நிலைமையில் வாழ்வதை கற்பனை செய்து பாருங்கள்! பசுமையான நிலத்தில் வாழ்வதை கற்பனை செய்து பாருங்கள்—உங்களுடைய நிலம்—அது பூரணமாக பண்படுத்தப்பட்டு, தோட்டம் அமைக்கப்பட்டு ஒப்பனை செய்யப்பட்டிருக்கிறது. புத்துணர்ச்சி தரும் தூய்மையான காற்றை சுவாசிப்பதை கற்பனை செய்து பாருங்கள்; நவீன கால நாகரீகத்திற்குரிய கடுமையான அருவருப்பான ஓசையைக் கேட்காமல் மென்னயமான இயற்கை ஒலிகளை கேட்பதை கற்பனை செய்து பாருங்கள். இப்படிப்பட்ட காரியங்களில் சிலவற்றை ஏற்கெனவே வாய்ப்புகளை உடைய சில நபர்கள் ஓரளவு அனுபவித்து வருகின்றனர். ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ், சமாதானமான வாழும் நிலைமைகள் எல்லாராலும் அனுபவிக்கப்படும். அப்போது ஏழைகள், பசியாயிருப்பவர்கள், வசதியற்றவர்கள் இருக்கமாட்டார்கள்.—சங்கீதம் 72:13, 14, 16.
“துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டு போவார்கள்” என்று பைபிள் வாக்களிக்கிறது. (நீதிமொழிகள் 2:22) அப்படியென்றால் குற்றச்செயல் ஒழிக்கப்படும். உங்களுடைய சிறு பிள்ளை விளையாடுவதற்கு வெளியே சென்றால் மறைவில் பதுங்கியிருந்து பிள்ளைகளை கடத்திச் செல்பவர்கள் அல்லது தொந்தரவு கொடுப்பவர்களைப் பற்றியோ, குடிபோதையில் இருக்கும் ஓட்டுநர்கள் கார்களை கட்டுப்பாடின்றி ஓட்டிச் செல்வதைப் பற்றியோ அல்லது போதை மருந்துகளை உட்கொண்டு விட்டு சுற்றித்திரியும் வாலிப கூட்டத்தை பற்றியோ நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுடைய பிள்ளைகள் முழுமையான பாதுகாப்பில் விளையாடுவர்.
சமாதானமும் உங்களுடைய தனிப்பட்ட நலனும்
இறுதியில், தனிப்பட்ட நலன் என்ற அம்சம் இருக்கிறது. பரதீஸிய நிலைமைகள்கூட புற்றுநோயின் வேதனையையோ அல்லது மூட்டுவாத வலியையோ தணித்துவிடாது. ஆகையால் மெய் சமாதானம் என்பதில் நோய், மரணம் ஆகியவற்றை நீக்குவதும்கூட உட்பட்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட காரியங்கள் சாத்தியமாகுமா? பூமியில் இருக்கையில் இயேசு கிறிஸ்து மனித நோய்களின் மீது தனக்கிருந்த ஆதிக்கத்தை அடிக்கடி வெளிக்காட்டினார். (மத்தேயு 8:14–17) பரலோகத்தில் இருந்து கொண்டு கிறிஸ்து பூமி முழுவதும் அற்புதங்களை செய்வார்! “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டு போம். அப்பொழுது முடவன் மானைப் போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.”—ஏசாயா 33:24; 35:5, 6.
என்றபோதிலும், மானிட அவலநிலைக்கு எதிரான கிறிஸ்துவின் போராட்டம் அதோடு நின்று விடாது. கிறிஸ்துவின் அரசைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு விளக்குகிறார்: “எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப் போடும் வரைக்கும், அவர் ஆளுகை செய்ய வேண்டியது. பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.” (1 கொரிந்தியர் 15:25, 26) ஆரம்பத்திலிருந்து மனிதவர்க்கத்தின் மீது மரணம் கொண்டுவந்திருக்கும் எல்லா பேரழிவையும் நீக்குவது என்பது இதன் அர்த்தம். இயேசு கிறிஸ்து தாமே இவ்வாறு விளக்கினார்: “பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய [கிறிஸ்துவின்] சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்.” (யோவான் 5:28, 29) துயரத்தில் வாழ்ந்து மரித்த எண்ணற்ற ஆயிரக்கணக்கானோருக்கு வரப்போகும் உலக சமாதானத்தில் பங்கு கொள்வதற்கு வாய்ப்பு இருக்கும்.
நீங்கள் அதில் பங்கு கொள்வீர்களா? இதைக் குறித்து பைபிள் என்ன கற்பிக்கிறது என்பதைப் பற்றி நீங்கள் கற்றறிய யெகோவாவின் சாட்சிகள் உங்களை ஊக்குவிக்கின்றனர்.b உலக சமாதானத்தை பற்றிய எதிர்பார்ப்பு கவனியாமல் விடமுடியாதபடி அதிக கிளர்ச்சியூட்டுவதாயும் அதிக மெய்யானதாகவும் இருக்கிறது. கடவுளுடைய வார்த்தையை கற்று, அதை பொருத்துவதற்கு நீங்கள் கடுமுயற்சி செய்வீர்களானால், “சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்”—என்றென்றுமாக!—பிலிப்பியர் 4:9. (w90 4/15)
[அடிக்குறிப்புகள்]
a சொல்லர்த்தமாக, “உன் சகோதரரின் சமாதானத்தையும் மந்தையின் சமாதானத்தையும் பார்த்து வா.”
b இப்பத்திரிகையை பிரசுரிப்போருக்கு எழுதினால் ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்பு ஏற்பாடு செய்யப்படும்.
[பக்கம் 5-ன் படம்]
யெகோவா “பூமியின் கடைமுனைமட்டும்” யுத்தங்களை ஓயப்பண்ணுவார்
[படத்திற்கான நன்றி]
USAF Official Photo
[பக்கம் 6-ன் படம்]
கணவன்மாரும் மனைவிகளும் ஒருவரையொருவர் சமாதானமாக நடத்த கற்பிக்கப்படுவர்